கில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்

எங்கள் காலனி விளையாட்டில் இன்றைய ஐபிஎல் போலச் சிக்கலான விதிகள் எதுவும் கிடையாது. ஆனால், தவறாது விளையாடுவோம். கிரிக்கெட் விளையாட எங்களுக்கெல்லாம் இஷ்டம்தான். ஆனால், சில சமயம் பேட் கொண்டு வரும் ரமேஷ் கொஞ்சம் அலட்டிக் கொண்டால், கிரிக்கெட் ரத்து. அல்லது, எல்லா டென்னிஸ் பந்துகளும் எங்கெங்கோ அடித்துத் தொலைந்துவிடும். இன்னும் ஒரு 6 டென்னிஸ் பந்து வாங்க ஏராளமான நிதி சமரசங்கள் மற்றும் உலக வங்கி ரேஞ்சுக்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும். இப்படி ஏதாவது நேர்ந்தால், உடனே கைவசம் கில்லி விளையாட்டு எப்பொழுதும் இருந்தது. கில்லி விளையாட்டிற்கு ஏராளமான வீட்டளவில் எதிர்ப்பு. விளையாட்டு சுவாரசியத்தில், அடிபடும் ஒரு மிகவும் ரிஸ்கான விளையாட்டு, கில்லி. அம்மாக்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. அம்மாக்களின் பார்வைக்கு அப்பால் விளையாட வேண்டிய கட்டாயம் வேறு எங்களுக்கு!


1969 ஜுலை மாதம் ஒரு மாலை, கிரிக்கெட் முடிந்து, அம்மாவின் ஹோம்வொர்க் கூக்குரலைக் கேட்டு, இன்னும் ஒரு 10 நிமிடம் கடன் வாங்கி ஆரம்பித்தது அந்த சின்ன உரையாடல்:

“டேய் அப்போலோ 11 -ன்னு ஒரு ராக்கெட்டை அமெரிக்கா சந்திரனுக்கு 3 மனிதர்களோடு அனுப்பியிருக்காங்களாம்.”

உடனே சதீஷ், “சும்மா, பூ சுத்தாத. நிலாவுக்கு எப்படி போறதாக்கும்?”

“இந்து பேப்பர் படிச்சியா? எவ்வளவு பெரிய ராக்கெட் தெரியுமா? சும்மா, நாம விடற தீபாவளி ராக்கெட் மாதிரி இல்லை.”

சந்துரு, உடனே, ”சிவகாசி ராக்கெட்டுல மனுஷன கட்டி மேல அனுப்ப்டுவாங்களா? அஞ்சு நிமிஷத்துல எரிஞ்சுற மாட்டான்?” “இது வேற மாதிரி ராக்கெட். ராக்கெட்டுக்குள்ள மனுஷங்க இருக்கலாம். இப்ப நேரமாச்சு, நீங்கெல்லாம், ’இந்து’ படிச்சுட்டு வாங்க, நாளைக்கு பேசலாம்.”


‘இந்து’ பத்திரிகையைத் தவிர, 1969 -ல் மிக முக்கியமான ஒரு செய்தி அறிந்து கொள்ளும் முறை, அகில இந்திய ரேடியோவில், காலை 7:15 மணிக்கு, “செய்திகள் வாசிப்பது விஜயம்”  , என்று தொடங்கும் தமிழ் செய்தி நிகழ்ச்சி. முதல் ஐந்து நிமிடங்கள் அரசியல் செய்திகள் என்னைக் கவராது. பிறகு, அப்போலோ 11 ராக்கெட் நிலவரம் என்ன என்பதை சரியாக பாத்திரச் சத்தங்களை மீறிக் கேட்க, என்னுடைய காதை ரேடியோவுடன் ஒட்டிக் கொள்வதை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தேன். என்னுடைய தந்தையுடன் அந்த மாதம் எப்படியாவது ‘இந்து’ -வை முதலில் படிக்கக் கெஞ்சி வெற்றி பெற்றிருந்தேன். அவரும், ”ராக்கெட் செய்தியெல்லாம், தனியாகப் போடக்கூடாதா?” என்று முணுமுணுத்து, என்னிடம் ஒரு 15 நிமிடங்கள் தருவார். மாலை நேரத்தில் எந்தப் போட்டியும் இல்லாமல், பாவமாக அதே பேப்பர் வீட்டில் தூங்குவது வழக்கம். விக்கிபீடியாவும், உல்ஃப்ராம் ஆல்ஃபாவும், கூகிளும் இல்லாத அந்தக் காலத்தில், எனது விஞ்ஞான ஆவலைத் தூண்டியது இந்த ஊடகங்கள்தான். முக்கியமான இன்னொரு விஷயம், என்னுடைய ஆங்கிலப் புலமை. ‘இந்து’ -வில் வரும் செய்தி எனக்குத் தோராயமாகத்தான் புரியும். அதை வைத்து மிகவும் உற்சாகமடைந்து, நண்பர்களையும் எப்படியாவது வியக்க வைக்க வேண்டும் என்பதே என்னுடைய அன்றையக் குறிக்கோள்.


அன்றைய கிரிக்கெட் முடிந்து மீண்டும் என்னுடைய விஞ்ஞானக் கிசுகிசு தொடர்ந்தது.

“நிலாவ அப்போலோ 11 நெருங்கிடுச்சாம். அதைச் சுத்தி வராங்களாம். இன்னிக்கு படிச்சேண்டா”

கிடைத்தது சாக்கு என்று ரமேஷ், ”மேல பாருங்கடா, நிலா பக்கத்துல அப்போலோ தெரியுது பார்”

“டேய், அது ஒரு விமானம்டா. நகருவது தெரியல. நிலா இங்கிருந்து 4 லட்சம் கிலோமீட்டராம். அந்த லூனார் மாட்யூல் இங்கிருந்து தெரியாது”

உடனே ரமேஷ், “அதெல்லாம் சரிதான். எப்படி ராக்கெட் அங்கதான் இருக்குன்னு நிச்சயமா இங்கிருந்தே சொல்றாங்க?”

“அதெல்லாம் எப்படின்னு தெரியாது. இந்துல சும்மா எழுத மாட்டாங்க. ரேடியோலயும் சொல்றாங்களே”

“இங்கிருந்து அங்க  போக எவ்வளவு நேரமாகும்?”

“இந்துல மூணு நாள்னு படிச்சதாக ஞாபகம்.”


அடுத்த நாள் ரமேஷ் டிமிக்கி கொடுத்துவிட்டான். அன்றைக்கு  கில்லி விளையாட்டு. என்னை விட சதீஷ் பிரமாதமாக ஆடினான். விளையாட்டிற்குப் பின் ராக்கெட் விவகாரம் மீண்டும் தொடர்ந்தது.

“நேத்திக்கு ஆம்ஸ்ட்ராங் –னு ஒரு அமெரிக்கர் தைரியமாக நிலாவில் நடந்தார்னு இந்துல படிச்சேன்”

சதீஷ், “அப்படி என்ன தைரியம் வேணும்? அங்க என்ன புலியா இருக்கு”?

“யாருக்குத் தெரியும் என்ன இருக்குமோ. யாருமே போகாத இடம்னா கொஞ்சம் பயமாக இருக்காதா என்ன? இன்னொரு விஷயம், அவரு ஜாலியா அங்க குதிச்சு குதிச்சு நடந்தாராம்”

சதீஷ், “நாம கூடதான் ஜாலியா இங்க குதிக்கிறோம். இதுக்கு எதுக்காக நிலாவுக்குப் போகணும்?”

“நிலாவில் பூமியை விட 6 மடங்கு ஈர்ப்பு சக்தி குறைவு. இன்னிக்கு நான் நிலாவில் விளையாடியிருந்தா என்னாயிருக்கும் தெரியுமா? 2 தெரு தள்ளி இருக்கும் உங்க வீட்டு ஜன்னல் கண்ணாடி உடஞ்சிறுக்கும்”

கோபம் பொங்க சதீஷ், “போடா, நான் இன்னிக்கு அடிச்ச ஷாட், 5 மைல் தாண்டி பஜாரில் உள்ள கடையின் கண்ணாடி உடஞ்சிறுக்கும்”

குறுக்கே வந்த சந்துரு, “விடுங்கடா. ஆம்ஸ்ட்ராங் எப்படிடா பூமிக்கு திரும்பி வருவாரு?”

“அந்த லூனார் மாட்யூல் மேலே கிளம்பி, நிலாவைச் சுற்றி வரும் ராக்கெட்டோட சேர்ந்துரும். அப்புறமா, அங்கிருந்து கிளம்பி, பூமிக்கு வந்துருவாங்க.”


அடுத்த இரண்டு நாட்கள் அதிக ராக்கெட் பேச்சு இல்லை. மூன்றாம் நாள் கிரிக்கெட்டிற்குப் பின் மீண்டும் ராக்கெட் விவகாரம் தொடர்ந்தது.

”ராக்கெட் பூமிக்குள் வரும்பொழுது பயங்கரமாக எரியுமாம்”

சந்துரு, “இதென்ன பெரிய விஷயம்? ராக்கெட் எரிஞ்சுதான மேலே போச்சு?”

“அப்படி இல்லை. பாக்கி இருக்கற ராக்கெட் – அத என்னமோ சாட்டிலைட் –னு சொல்றாங்க. அதுவே எரியுமாம்”

சந்துரு, “உள்ள இருக்கிற அமெரிக்கர்கள் வெந்துற மாட்டாங்க?”

“அதுக்கு பாதுகாப்பாக சில அடுக்குகள் ஏதோ இருக்காம். அப்படியும் ரொம்ப சுடுமாம்”

சந்துரு, “கடைசில, தொப்புனு தரைல ராக்கெட் விழுந்துருமா?” “அப்படி இல்ல. கடல்ல வந்து விழுமாம். தவறி ரஷ்ய கடற்படை கிட்ட சிக்கற வாய்ப்பு இருக்காம். அமெரிக்க கடற்படைஅவங்கள  சுத்தி இருக்குற எல்லா கடலிலும் தயாராக காத்துகிட்டு இருக்காங்களாம்.”

இந்தச் சிறுவர்களின் பேச்சு வேடிக்கையாக இருக்கலாம். இந்தக் கட்டுரையை நீங்கள் படிப்பதற்கே முக்கிய காரணம் இந்த விண்வெளிப் பயணம் உருவாக்கிய தொழில்நுட்பப் புரட்சியின் விதை. ரமேஷ், சதீஷ் மற்றும் சந்துரு, எங்கோ இன்று உலகில் ஒரு திறன்பேசியுடன் தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள், ஏன் பேரன் பேத்திகளுடன் வாட்ஸாப்பலாம். இத்தனை கேள்வி கேட்ட சந்துரு, அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பெளதிகம் இன்னும் சொல்லிக் கொடுக்கிறான். சதீஷ், தன்னுடைய வியாபாரத்தை மகனிடம் விட்டு விட்டதாகக் கேள்வி. ரமேஷ் இந்தியாவின் தலை சிறந்த வண்ணப்படக் கலைஞன். நான் கணினி மென்பொருள் துறையில் பணியாற்றிக் கொண்டு இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறேன். எங்களைப் போன்ற சிறுவர்களை விஞ்ஞானம் பக்கம் ஈர்த்த இந்த முதல் மனித நிலாப் பயணத்திற்கு 50 வயதாகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.