இரா. கவியரசு
வீடு
தனக்குள் அந்நியமாகும் வீடு
அகழாய்வு செய்துகொள்ள விரும்புவதில்லை.
முகிழ்க்கும் தரையிலிருந்து
தடங்கள் சுவர்களில் ஏறிச் செல்வதை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்.
ஓடி
நடந்து
பறந்து
குதித்து
பாதங்களைத் தவிர வீட்டுடன் அதிகமாகப் பேச
வேறு யார் இருக்கிறார்கள்.
வெகுநாளைக்குப் பிறகு
தூசியைத் துடைக்க வருகிறவன்
கதவுகளைத் திறக்கும் போது
பாதங்களை மட்டுமே பார்க்கிறது வீடு.
தூசியைத் துடைக்கும் முன்பு
படியும் தடங்களில் மூழ்கும்
பழைய பாதங்களைத்
திகட்டத் திகட்ட முத்தமிடுகிறது.
குதிக்கும் சத்தத்தைப் பதிவு செய்ய
முகமெல்லாம் காதுகளை வரைகிறது.
ஏதோ ஓர் இடைவெளியில்
காற்று வந்து நிறைந்தும்
தடங்கள் இன்றியே செல்கிறது.
விளக்கொளியில் வீட்டைப் பார்க்கிறவன்
அணைத்தலின் பொருட்டு காத்திருக்கிறான்.
மறுபடியும் வீட்டைப் பூட்டி
அவன் செல்லும் போது
உள்ளே கதவைத் தட்டும் தடங்கள்
பாதங்களாக வளர்ந்து
தானாகவே
நடக்க ஆரம்பிக்கின்றன.
***
கு. அழகர்சாமி
என் முதல் புகைப்படம்
மீசை அரும்பியவுடன் எடுத்த
என் புகைப்படம்-
வேலை கிடைத்த பின்
சிநேகிதனோடு எடுத்த புகைப்படம்-
(என் சிநேகிதனோடான முதல் புகைப்படம்)
திருமணத்தில் மனைவியோடு எடுத்த புகைப்படம்-
(என் மனைவியோடான முதல் புகைப்படம்; கணவனோடான என் மனைவியின் முதல் புகைப்படம் என்றாலென்ன?)
குழந்தையோடு நானும் என் மனைவியும் எடுத்த புகைப்படம்-
(என் குழந்தைக்கு முதல் புகைப்படம்)
அப்பா, அம்மா, சகோதர சகோதரிகளுடன் நாங்களும் சேர்ந்தெடுத்த புகைப்படம்-
(என் முதல் குடும்பப் புகைப்படம்)
சாவகாசமாய் உணர்ந்த ஒரு நாளில் பழைய பெட்டியைத் திறக்க கிடைத்த புகைப்படங்களில்
நான் என் முதல் புகைப்படத்தைத் தேடினேன்-
சின்னக் குழந்தையாய் நானிருந்த போது எடுத்ததாய்
அது இருக்க வேண்டிய அவசியமில்லையென்றறிந்த போதும்-
மீசை அரும்பியவுடன் எடுத்த புகைப்படத்திலிருந்த
‘நான்’
கெஞ்சிக் கேட்டுக் கொண்ட பின் ஒத்துக் கொண்டேன்:-
“அது
என் முதல் புகைப்படம்”. ***