எட்டு மாடிகள் கொண்ட பொம்மைக் கதை

                                                கீழ்த்தளம்

எட்டு  மாடிகள்  கொண்ட    துணிகளின்  சாம்ராஜ்யத்திற்குள்  புகுவதாக  நினைத்து  இந்தக்  கதைக்குள்  நுழையுங்கள்.  ஒரு  திடீர்  திருமணம்.  இரவுதான்  உங்களுக்கு  அழைப்பு  வந்தது.  கைவசம்  துவைத்த துணி ஒன்றுகூட  இல்லை.  காலை  9  மணிக்குக்  கடை  திறந்ததும்  முதல்  ஆளாக உள்ளே  நுழைகிறீர்கள்.  இன்னும்  பத்து  நிமிடங்களில்  இந்தக்  கடையிலிருந்து  வெளியேறி,  நாற்பது  நிமிடங்கள்  உங்கள்இரு  சக்கர  வாகனத்தை  விரட்டினால்தான்  9.50  மணிக்கு  நடைபெற  உள்ள  அந்தத்  திருமணத்திற்குச்  செல்லமுடியும்.  ஏதோவொரு  புது  ஆடை  எடுத்தால்போதும்  என்ற  முடிவுடனேயே  வந்துள்ளீர்கள்.  வாயிலில்  நின்று  வரவேற்கும்  பொம்மை  ஒன்றின்  ஆடையே  உங்களுக்குப்  பிடித்து  விடுகிறது.  அதுபோன்ற  ஆடையையே உங்கள்  அளவிற்கு விற்பனையாளரை  எடுத்து  வரச்  சொல்லி,  பணத்தையும்கட்டிவிட்டு,  ஆடை  அணிந்து  பார்க்கும்  அறையிலேயே,  அதை    அணிந்து  கொண்டு  திருமணத்திற்குப்  புறப்படுகிறீர்கள்.  இதுபோன்ற  அவசரத்தில்  இருப்பவர்கள்  கதையின்   1, 3, 5, 7  ஆகிய  பகுதிகளை  மட்டும்படித்தால்  உங்களுக்கு  ஒரு  பொம்மையின்  கதை  கிடைக்கும்.  அல்லது  2,4,6,   8  ஆகிய  பகுதிகளை  மட்டும்  படித்தால்  உடைந்த  ஒரு  பொம்மையின்  கதை  கிடைக்கும்.  முற்பகல்,  பிற்பகல்  போல  அமைந்தகதைகள்.  பகல்  என்பது  ஒரு  தொடர்ச்சி  என்பதை  அறிவீர்கள்.  ஒருவேளை,  நீங்கள்  அவசரத்தில்  இல்லை.  திருமணத்திற்கு  இன்னும்  நாட்கள்  இருக்கின்றன என்றால்,  1,2,3,4, 5  என்று  ஒவ்வொரு  மாடியாகஏறி,  கதைக்குள்    வரலாம்.   இந்த  நேரத்தில்  கதைக்கான  உரையே    பெரும்  கதையாக  இருக்கிறது.  அதனால்,  கடையின்  வாயிலிலேயே  திரும்பிவிடுகிறேன்  என்பவர்கள்  படிகளில்  வழுக்கி  விழாமல்மெதுவாக  இறங்கிப்  போகலாம்.  ஆனால்,    எங்கள்  கடையில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் உங்கள் வாகனத்தை விட்டதற்காக ரூ.100  கட்டியிருப்பீர்கள். அந்தப் பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்பு இல்லை.    மறாக, துணிகள் எடுத்துவிட்டு  திரும்புகிறீர்கள்  என்றால்,  வாங்கியதற்கான மொத்தப் பணம் கட்டும்போது,அதில் ரூ.100  கழிக்கப்பட்டுவிடும்.    அதேசமயம், இவ்வளவு  தூரம்  வந்த  பிறகுகதைகளின் படிகளில் ஏறுவதும், ஏறாமல் திரும்புவதும்  உங்களின்  விருப்பமாகவும் இருக்கப் போவதில்லை.  குளிர்சாதனக் காற்றும் மிளிர்விளக்குகளும் நகரும் படிக்கட்டுகளும் உங்கள் கால்களை இதமாக மேலேற வைத்துவிடும்.  

                                                        

   1

ஒரு  பொம்மையாக  அந்தாரா  உருமாறி  வருவதை  அந்தத்  துணிக்கடையில்  பணிபுரிந்த  அத்தனை  பேரும்  உணரத்  தொடங்கிய  பிறகான  நாளொன்றின்  நண்பகலில்,  ஆறு  மாதத்தயக்கத்திற்குப்  பிறகு  அவள்  தனது  காதலை  வெளிப்படுத்தியபோது,  மிஸ்டர்  ஜீன்  எனும்  அந்தக்  காட்சியாக்க  ஆண்  பொம்மை  எப்போதும்போல்  அசையாமல்  காலில்  முட்டுக்  கொடுத்து,முகத்தைக்  கைகளில்  தாங்கி  உட்கார்ந்திருந்தது.  அந்தாராவுக்கு  அதில்  எவ்வித  வருத்தமும்  இல்லை.  அப்படி  உட்கார்ந்தால்தான்  பொம்மை  எனவும்,  கணவனைப்  போல தொல்லை கொடுக்காமல்  இருப்பதாலேயே  மிஸ்டர்  ஜீன்  தம்மை  வயப்படுத்துவதாகவும்  அவள்  நினைத்துக்  கொண்டாள்.  மிஸ்டர் ஜீன் முகத்தில்  சலனத்தைக்  காட்டாவிட்டாலும்,  இன்றைக்கு அவர்  மிகவும்  அழகாக  இருப்பதாகவும்,  அதுவும்  காதலைச்  சொல்லியபோது அவர்  முகம்  இன்னும்  ஒளிபொருந்தி இருந்ததாகவும்  அவளுக்குத்  தோன்றியது.  மேலும்,  காதலைச்சொல்லப்  போவதை  முதல்  நாளே  உணர்ந்ததாலோ  என்னவோ  நேற்றே  மிஸ்டருக்கு  சிகப்புநிற  டிஷர்ட்டையும்  மணல்நிற ஷார்ட்ஸையும்  தேடி  மாட்டி  விட்டிருந்தாள்.  அவையும்மிஸ்டருக்குக்  கூடுதல்  அழகு  சேர்ப்பதாக நினைத்துக் கொண்டு  அவரை  விட்டு    நகரமுடியாதவளாக  நீண்ட  நேரம்  அங்கேயே  நின்றிருந்தாள்.  அப்போது  கடையின்  உரிமையாளர்ஃபெனிட்டா  திடீரென  வரும்  சத்தம்  கேட்டதும்,  தன்னுணர்வு  அடைந்தவளாக,  மிஸ்டரிடம்  யாருக்கும்  தெரியாமல்  ஒரே  ஒரு  முறை  கண்ணடிக்குமாறும்,  அப்படிச்  செய்தால்,  அந்தஇடத்தை  விட்டு  நகர்வதாகவும்  கெஞ்சினாள்.  அதுவரை  அமைதியாக  இருந்த  மிஸ்டர்,  மறுக்காமல்  உடனே  கண்ணடித்தார்.  அந்தக்  காட்சி  மட்டும்  கடையில்  இருந்த  காமிராக்களில்பதிவாகவில்லை.

                                                      2

சரக்கு  அறையில்  பல நாட்கள் தூசி  படிந்து  கிடந்த  மிஸ்டர்  ஜீனை   ஃபெனிட்டாவின்  காலில்  விழாத  குறையாக  கெஞ்சி  வாங்கி  வந்து,  பெரம்பூரில் உள்ள    அவளின்  வீட்டிற்குள்  வைத்தபிறகான அந்த மாலையில்தான்  அந்தாராவிற்குச்  சுவாசமே  திரும்பி  வந்ததுபோல  இருந்தது.  சிறிய  படுக்கை  அறையும்  முன்னறையும்  கொண்ட  அந்த  ஓட்டு  வீட்டின்  முன்னறையில்நடுநாயகமாக  மிஸ்டரை இருகைப்பிடிகளும் உடைந்த மரநாற்காலியில்  உட்கார  வைத்து,  மிஸ்டர்  போட்டிருந்த  அழுக்கு  டீஷர்ட்டையும்  ஷார்ட்ஸையும்  கழற்றிவிட்டு  எங்கங்கேஅவருக்குக்  காயம்பட்டிருக்கிறது  என்று  ஏழாம்  வகுப்பு  படிக்கும்  மகன்  முகிலனோடு  சேர்ந்து  பார்த்தாள்.  உச்சந்தலையிலிருந்து  இடது  காது  வரையும்,    நெற்றியிலிருந்து  இறங்கி  வந்துவயிற்றுப்  பகுதி  வரையும்,    மூக்கு  மேலிருந்து  இரு  கன்னங்களிலும்  நேர்  கோடாகவும்  விரிசல்விட்டு,  பார்க்க  பரிதாபமாக  மிஸ்டர்  தோன்றினார்.  அவர்  மேல்  படிந்திருந்த  தூசியும்,கறைபடிந்த  அழுக்கும் அவரை  இன்னும்  அழகு  குலைவு  செய்வதாக  அவளுக்குத்  தோன்றியது.  உடனே,  மகனோடு  சேர்ந்து  மிஸ்டரை  வீட்டுக்கு  வெளியில்  தூக்கி  வந்து,  சோப்புத்தண்ணீரை  ஊற்றி  நன்றாக  குளிப்பாட்டினாள்.  மிஸ்டர்  முகம்  அப்போதுதான்  கொஞ்சம்    மலர்ச்சியடைந்தது.  அதற்குள்,  பக்கத்து வீடுகளில் இருந்து வந்த  நாலைந்து  சிறுவர்கள்  மிஸ்டரைச் சூழ்ந்துகொண்டு, ‘ஷேம்ஷேம்  பப்பி  ஷேம்’  என்று  கேலி  செய்தார்கள்.  மிஸ்டர்  வெட்கப்படுவதுபோல  தெரிந்தது.  உடனே,  அவர்களை  விரட்டிவிட்டு,    மிஸ்டரை  நன்றாகத்துடைத்து,  வீட்டிற்குள்  தூக்கிச்  சென்று,  காயம்பட்டிருந்த பகுதிகளில்  டால்கம்  பவுடரைக்  கொட்டிப்  பூசிவிட்டாள்.  களிம்பு  தடவியதுபோல  மிஸ்டர்  பூரிக்க,  படுக்கை  அறைக்குப்  போய்,அவள்  கணவனின்  சட்டையையும்  லுங்கியையும்  எடுத்து  வந்து  போட்டுவிட்டாள்.    கணவருக்கு  டிஷர்ட்  போடும்  பழக்கம்  இல்லாததாலும்,    புதிதாக  டிஷர்ட்  எடுத்துப்  போடும்  அளவிற்குக்காசு  இல்லாததாலும், ”கொஞ்சம்  பொறுத்துக்  கொள்”  என்று  மிஸ்டர்  காதில்  கூறினாள்.  அதை  மிஸ்டர்  ஏற்றுக்  கொண்டதுபோல  தெரியவில்லை.  நிர்வாணமாக  இருந்தபோதுகூடஅழகாகக்  காட்சியளித்தவர்,    இப்போது  பரிதாபமாகத்  தெரிகிறார் என  வருந்தினாள்.  அவள்  பையனும்  அதையே  ஆமோதித்தான்.  அந்த  நேரம்    அந்தாராவால்  விரட்டப்பட்ட  சிறுவர்கள்மேலும்  சில  சிறுவர்களை  அழைத்து  வந்து  மிஸ்டரைப்    பார்த்தனர்.  அப்போது  மிஸ்டர்  சிரிப்பதுபோல  இருந்தது.  அதனால்,  அந்தாரா  அவர்களை  விரட்டாமல்  பார்க்க  அனுமதித்தாள்.  ஒருபையன்    மிஸ்டர்  போல  முகத்தைக் கைகளில் தாங்கியவாறு  உட்கார்ந்து    காட்டினான்.  ஒரு  பையன்  அவன்  கையில்  வைத்திருந்த  பிளாஸ்டிக்  குளிர்க்கண்ணாடியை  எடுத்துமிஸ்டருக்குப்  போட்டான்.  அது  அவருக்குப் பொருந்தாமல்  போக,    இழுத்துப்  போட,  கண்ணாடி  இரண்டாக  உடைந்து,  அழத்  தொடங்கினான்.  அதைப்  பார்த்து  அந்தாராவிலிருந்துஅனைவரும்  சிரித்துக்  கொண்டிருந்த கொஞ்ச நேரத்தில்,  அவள்  கணவன்  ரட்சன்  வருவதற்கான  கனைப்புச்  சத்தம்  கேட்டது.  அந்தச்  சத்தம்  கேட்டதும்,  சிறுவர்கள்  எல்லோரும்அமைதியாக  வீட்டிலிருந்து  வெளியேறிச்  சென்றார்கள்.  அந்தாராவுக்கு  என்ன  சொல்லுவாரோ  என  மனம்  பதற  ஆரம்பித்தது.  தள்ளாடியபடியே  உள்ளே  நுழைந்தவன்,  மிஸ்டர்  ஜீனைப்பார்த்ததும்  சந்தோஷத்தில்  துள்ளத்  தொடங்கினான்.  மகன்  எதிரிலேயே  அவளை  இழுத்து  முத்தம்  கொடுத்தான்.  ஏதோ  அரிய  பொக்கிஷத்தை  அவள்  வீட்டிற்குக் கொண்டு  வந்ததுபோலகொண்டாடினான். ”இந்தச்  சட்டையையா  போடுவாங்க.  நல்ல  சட்டையா  போட  வேண்டியதுதானே.  அந்தப்  பெட்டியில  புது  லுங்கி  இருக்குப்  பாரு.  அதை  எடுத்துக்  கட்டிவிடு”  என்றுஆரம்பித்தவன்  மிஸ்டரையே  சுற்றி  வந்து,  ஏதேதோ  அவரிடம்  பேசிக்  கொண்டிருந்தான்.  இரவு  அவள்  காரக்குழம்பு  சாப்பாடு  செய்து  கொடுத்தபோது,  அதை  வாங்கிப்  பிசைந்து  மிஸ்டருக்குஊட்டிவிட்டவன்,  அப்படியே  சரிந்து  கீழே  விழுந்து  எழுந்துகொள்ள  முடியாமல்  உளறியவாறே  தூங்கிப்  போனான்.  காரக்குழம்பு  உதட்டில்  பட்டதும்  மிஸ்டருக்கு  அப்படியொரு  கோபம்வருவதுபோல  இருந்தது.    ஈரத்  துணியால்  மிஸ்டர்  உதட்டை  அந்தாரா துடைத்துவிட்டு, ”வருத்தப்படாதே”  என்று  உருகக்  கேட்டுவிட்டு,  விளக்கை  அணைத்துவிட்டு,  மகனோடு  சேர்ந்துதூங்கிப்  போனாள்.  நள்ளிரவில்  வீட்டிற்குள்  யாரோ  நடப்பதுபோல  சத்தம்  கேட்டுத்  திடுக்கிட்டு  எழுந்தவள்,  எதுவும்  உணர  முடியாமல்  மீண்டும்  தூங்கிப்  போனாள்.  பிறகு  மீண்டும்  சத்தம்கேட்டு  எழுந்தாள்.  இந்த  முறை  அவள்  மேலேயே  ஏறி  ஓடியதுபோல  இருந்தது.  விழித்துப்  பார்த்தாள்.  மிஸ்டர்  உள்பட  எல்லோருமே  தூங்கிக்  கொண்டிருக்க,  வேறு  யாரையுமேகாணவில்லை.  மீண்டும்  தூங்கினாள்.  மீண்டும்  விழித்தாள்.  மீண்டுமீண்டு  தூங்கினாள்.  விழித்தாள்.  காலை  வரை  அந்த  நடை  சத்தம்  ஓயவில்லை.    

                                                      3

நான்கு  மாடிகள்  கொண்ட  புரசைவாக்கம்  ரெயின்போ  துணிக்கடையில்  வேலைக்குச்  சேர்ந்து    ஐந்து  ஆண்டுகள்  ஆகி,  கடந்த    இரண்டு  ஆண்டுகளாகத்தான்    காட்சியாக்கப்  பொம்மைகளைக்கவனிக்கும்  பொறுப்பு  அந்தாராவிற்கு  ஒப்படைக்கப்பட்டது.  குளத்தில்  மீன்பிடிக்க  ஆகாயத்தில்  தூண்டில்  போடுவதுபோன்ற  அந்தப்  பணியில்  அவளுக்கு  ஆசைப்பூர்வமான  ஓர்  ஆர்வம்இருந்தது.  கடையில்  மொத்தம்  இருபத்து  நான்கு  பொம்மைகள்  இருந்தன.  எல்லாம்  செராமிக்கால்    வனையப்பட்டவை.  ஓர்  ஆண்டுக்கு  முன்புவரை  பிளாஸ்டிக்  பொம்மைகளே  அந்தக்  கடையைஅலங்கரித்தன.    அந்தப்  பொம்மைகளின்  ஆயுள்  ஓராண்டு  என்பதாலும்,  குறிப்பிட்ட  சில  மாதங்களுக்குப்  பிறகு,  உப்புத்  தாள்  கொண்டு  தேய்க்கப்பட்டதுபோல  ஆங்காங்கே  சொறிப்பிடித்து,அழுக்கு  அப்பிக்  கொள்கிறது  என்பதாலும்  செராமிக்  பொம்மையை  வாங்கி  வைக்க  அந்தாராதான்  முதலில் ஃபெனிட்டாவுக்கு அழுத்தம் கொடுத்தாள். ஒரு  நல்ல  பொம்மைக்குபத்தாயிரத்தில்  இருந்து  இருபத்தைந்தாயிரம்  வரை  செலவு  செய்ய  வேண்டி  வருமே  என்று  கணக்குப்  போட்டுக் கொண்டிருந்தவளை விடாமல் நச்சரித்து வாங்க வைத்தாள்.  மும்பையில்  இருந்து தருவிக்கப்பட்ட,   அந்த இருபத்து  நான்கு  செராமிக்  பொம்மைகளை முதல்முறையாகப் பார்த்தபோது அவளுக்கு அளவில்லாத மகிழ்ச்சியாக இருந்தது. ஓய்வறையில் அனைத்தும்  நிர்வாண நிலையில்  நின்றவாறும், உட்கார்ந்தவாறும் இருந்தன.  எல்லாப்  பொம்மைகளும்  ஒரே  குடும்பத்தைச்  சேர்ந்த  அங்கத்தினரைப்போல  தெரிந்தன.பொம்மைகள்  எதிலும்  எந்தக்  குறைகீனமும்  இல்லை.  அழகின்  செழுமைகளாக  இருந்தன.  ஐந்து  ஆண்பொம்மைகள்,  ஒன்பது  பெண்  பொம்மைகள்,  ஐந்து  சிறுவர்கள்,     ஐந்து சிறுமிகள்.

கீழ்த்தள  நுழைவாயில்  பகுதியில்  இரண்டு  பெண்  பொம்மைகளை  நிறுத்தினாள்.  அந்தப்  பொம்மைகள்  எப்போதும்  புதுரக  சேலைகளால்  தங்களை  மலர்த்திக்  கொண்டு,  வருவோரைவரவேற்றன.  அதே  தளத்தின்  மையப்பகுதியில்  தேக்கு  மரத்தினாலான  நீண்ட  பொன்னிற சோபாவில்  கணவன்,மனைவி  அவர்களுக்கு  நடுவில்  அவர்களின்  ஆண்,  பெண்  பிள்ளைகளைஉட்கார  வைத்தாள்.  எல்லோரும்  பட்டு ஆடையில்  சிரித்த  முகத்துடன்  அமர்ந்திருப்பதைக்  கண்டு,  சறுக்கி  தடுமாறியபடி  மாடி  ஏறாதவர்களே  இல்லை  எனலாம்.  அதே  தளத்தில்  கடைமூலையின்  பட்டுப்  பிரிவில்  இருபது  அடி  தூர  இடைவெளியிட்டு  இரண்டு  பெண்  பொம்மைகளை  முன்னும்  பின்னுமாக  நிறுத்தினாள்.  பட்டுச்  சேலைகளையே  எப்போதும்  உடுத்தியிருந்தஅந்தப்  பொம்மைகளை  நன்றாக  உற்றுப்  பார்த்தால், ‘எங்களுக்கு  வேறுவகை  புடவையே  கட்டமாட்டீர்களா’  என்பதுபோல  அவற்றின்  முகத்தில்  ஒருவித  புழுக்கம்  தெரியும்.

முதல்  தளம்  மகளிருக்கான    நவீன  ஆடைகள்.  இரண்டாம்  தளம்  சிறுமிகளுக்கும்,  மூன்றாம்  தளம்  சிறுவர்களுக்கும்,  நான்காம்  தளம்  ஆண்களுக்கான  ஆடைகளால்  நிரம்பியிருந்தன.  நான்கு  தளங்களிலும்  நுழைவுப்  பகுதி,  மையப்  பகுதி,    கடைசிமூலையின்  இரு  பக்கங்கள்  என  அந்தந்தப்  பிரிவுகளுக்குரிய  பொம்மைகளை  நிறுத்தினாள்.  காக்ரா  சோளி,  ஃபேன்சி  சுரிதார்,ஜீன்ஸ்  பேன்ட்,  சட்டை,  உள்ளுடுப்புகள்  என  அணிந்து மகளிர்  தளத்துப்  பொம்மைகளை அழகு காட்ட வைத்தாள்

சிறார்களுக்கு  ஆடை போடுவதுதான் அவளுக்கு எப்போதும்  சிரமமாக இருந்தது.    ஓரிடத்தில்  நிற்காத  வால்பிள்ளைகள் போலவே  அவையும் இருந்தன.  ஆகாயத்  தூண்டில்  என்றாலும், சிறார்களுக்கு  என்று  வரும்போது  கொழுகொழு  மண்புழுவாக  எடுத்து  முள்ளில்  சொருகி,  தூண்டிலை  வீச  வேண்டும்.  அப்போதுதான்  கண்கள்  எனும்  மீன்கள்  அந்த  ஆடைகள்  மீது  துள்ளித்துள்ளி  விழுவதை  அதிகளவில்  பார்க்க  முடியும்.  சிறுமிகளுக்கு    இருப்பதுபோல  சிறுவர்களுக்கு  பல வகை  ஆடைகள்  இருப்பது  இல்லை.    ஏதாவதொரு  பளீர்  நிறத்தில்  டீஷர்ட்,  ஜீன்ஸ்பேன்ட்  போட்டு  நிறுத்தினாலே  சிறுவர்கள்  புத்துணர்வுடன்  அங்கும்  இங்குமாக  புகுந்து  விளையாடத்  தொடங்கி  விடுவர்.    ஆனால்,  சிறுமிகளை  எந்த  ஆடைகளால்  அழகுகூட்டினாலும்,ஏதோ    ஒன்று  தேவைப்பட்டது.

ஆண்கள்  தளத்தில்  நுட்பக்  கண்களின்  ஒளிவீச்சுக்குப்  பெரிதாக  அவசியம்  இருப்பது  இல்லை.  நுழைவுப்  பகுதியில்  யானை  நிற  கோட்டு  சூட்டுடன்  ஒரு  பொம்மையை  விறைப்புடன்நிறுத்தினாள்.  கீழ்த்தளத்தில்  பட்டுச்  சேலை  பொம்மைகளின்  முகப்  புழுக்கத்தை  இந்தப்  பொம்மையிலும்  பார்க்கலாம்.    

மையப்  பகுதியில்  அரக்கு  நிறத்  திண்டில்தான்,  மிஸ்டர் ஜீனை உட்கார வைத்திருந்தாள்.    மூன்று  மாதங்களுக்கு  முன்புதான்  மிஸ்டருக்காக,  ஃபெனிட்டாவிடம்  வற்புறுத்தி குளிர்க்கண்ணாடி  வாங்கிக்  கொடுத்தாள்.  அந்தக்  கண்ணாடியை  எப்போதுமே  அவர்  கழற்றுவது  இல்லை.    அதேசமயம்  தினமும்  துடைத்துப்  போடாவிட்டாலும்  அவருக்குக்  கோபம்  வரும். ஷார்ட்ஸும்  குரோக்கடைல்  டீஷர்ட்டும்தான்  அவரின்  பிரத்யேக  ஆடைகள்.  அதைத்  தவிர்த்து  வேறு  எந்த  ஆடைகளும்  அவருக்குப்  பொலிவாகத்  தெரிவது  இல்லை.  அந்தத்  தளத்தின்  கடைமூலையின்  இருபக்கம்  அலுவலக  அதிகாரிகள்போல    இரு ஆண் பொம்மைகளை நிறுத்தியிருந்தாள். கறுப்புக் கோடுபோட்ட  சந்தன நிற முழுக்கைச்  சட்டைபோட்டு,  அதைக் கறுப்பு  நிற  பேன்ட்டில்  செருகி,  மிளிரும்  ஓரடி  பழுப்பு  இடைவார்  அணிந்து அவை காணப்பட்டன.  அவற்றுக்கு  அந்தாரா  மீது  ஏகப்பட்ட  புகார்கள்  இருந்தன.  மிஸ்டரையே அவள்  தூய்மைப்படுத்துகிறாள்.  வாரத்துக்கொரு  முறை  அவர்  ஆடைகளை மட்டும்  மாற்றிவிடுகிறாள்.  விலை  உயர்ந்த  ஆடைகளையே  மிஸ்டருக்கு  அணிவிக்கிறாள்  என அவை எப்போதும் பொருமின.  அதில்,    உண்மை  இல்லாமலும்  இல்லை.

பொம்மைகள்  கடைக்கு  வந்த  முதல்  ஆறுமாதங்கள்  வரை  எல்லாவற்றையும்  அவளே  உலகிற்குத்  தந்ததுபோல  ஒரே  எண்ணத்துடன்தான்  அழகு  தீட்டி  வந்தாள்.  ஆனால்,  மார்கழி  மாதக்குளிர்  இரவில்,  வீடு  தேடி  வந்து,  மிஸ்டர்  ஜீன்  அவள்  கனவில், ”உன்னை  என்  மனம்  தேடுகிறது”  என்று  கூறியதிலிருந்துதான்  அவளின்  காலநிலை  தடுமாறத்  தொடங்கியது.  நாற்பதின்  நரைஅவளைப்  பார்த்துச்  சிரித்தாலும்,  வெவ்வேறு  இரவுகளில்  அமிலம்  தொய்ந்த  வார்த்தைகளால்  மிஸ்டர்  இமைப்பீலிகளை  அம்புகளாக்கி  கூர் தைத்தபோது,    தப்பவே  முடியாமல்,  அவளும்ஒரு  பொம்மையாக  உருமாறத்  தொடங்கினாள். 

முதலில்  சிரிப்பைக்  குப்பைத்தொட்டியில்  எறிந்து  நன்றாக  மூடி  வைத்தாள்.  எல்லோருடனும்  சேர்ந்து  சாப்பிட,  சிறுநீர்  கழிக்கப்  போவதைத்  தவிர்த்தாள்.  தரையில்  சொருகப்பட்ட குத்தீட்டிப்போல  ஒரே  திக்கில்  பார்வையை  எத்தனை  மணி  நேரம்  வேண்டுமென்றாலும்  வீசியிருந்தாள்.  காந்தத்தால்  ஈர்க்கப்பட்டது போல  நான்காம்  தளத்தை  ஊதாரிக்  காரணங்களால்நிரப்பினாள்.  மிஸ்டருடன்  சதா  பேசிக்  கொண்டு,  அவரை அலங்கரித்துக் கொண்டே இருந்தாள்.  கணவனுக்கும்  மகனுக்கும்  சாப்பாடு  எடுத்து  வைத்தும்,  வைக்காமலும்  காலையில் சீக்கிரமே  வந்து,  மிஸ்டரைத்  தேடி  நான்காம்  தளத்துக்கு  ஓடினாள்.  இரவு  வீட்டிற்குச்  செல்லும்  முன்,  நான்காம்  தளத்துக்கு  ஓடித்  திரும்பினாள்.  கடை  மூடப்பட்டிருந்த  இரவு  நேரங்களிலும்,அவள்  கால்கள்  நான்காம்  தளத்திற்காகப்  படிகளில்  ஓடிக்கொண்டே  இருந்தன.

                                                                4

அந்தாராவும்  முகிலனும்  தூங்கிக்  கொண்டிருக்க,  அதிகாலையிலேயே  எழுந்த  ரட்சன்  மெதுவாக  முன்னறையில் அடுப்பங்கரைக்குச் சென்று,  கடுகு  டப்பா,  வெந்தய  டப்பா  என்று ஒவ்வொன்றாகத்  தேடினான்.  எதிலும்  பணம்  தட்டுப்படாத  நிலையில்  படுக்கறைக்குச் சென்று, அலமாரியில் மடித்து  வைத்த  துணிகளை  அலசினான்.  அந்தாராவின்  புடவை அடுக்குகளுக்கு அடியில்  நூறு  ரூபாய்  இருந்தது.  அதை  எடுத்துக்  கொண்டு  சத்தம்  இல்லாமல்  கதவைத்  திறந்து  மிஸ்டரைப்  பார்த்து  கையசைத்துவிட்டு,  டாஸ்மாக்  போகும் எண்ணத்துடன்  வெளியில்  கொஞ்சம்  தூரம்  சென்றான்.  இரவில்  வீட்டிற்குள்  யாரோ  ஒருவரின்  நடமாட்டத்தை  உணர்ந்ததைப்  போலத்  தோன்றியதும்,  உடனே  திரும்பி  வந்து  படுக்கை அறை  வரை  தேடிப்  பார்த்தான்.  அப்போது,  வெளியில்  இருந்து  யாரோ  கதவைத்  தட்டும்  சத்தம்  கேட்டது.    அந்தாராவும்,  முகிலனும்  திடுக்கிட்டு  எழுந்து  வெளியில்  போவதற்குள்  இரண்டுபோலீஸ்காரர்கள்  கதவைத்  தள்ளிக்  கொண்டு  வீட்டிற்குள்ளேயே  வந்தார்கள்.  ரட்சனைப்  பார்த்ததும்,  இருவரையும்  தள்ளிவிட்டு  அவனை  இழுத்துப்  போட்டு,”ரயிலடி  பக்கம்  போறபொம்பளைய  கற்பழிக்கிறியா.  அவ  செத்தே  போய்ட்டா.    தேவடியாப்புள்ள.  உன்  பொண்டாட்டிய  இப்ப  கற்பழிக்கட்டுமா.    சொல்லு.  யாரார்  சேர்ந்து  கற்பழிச்சீங்க.   உன்  பேர  ரஜினிசொன்னான்.  யாரார்  போனீங்க  சொல்லு”  என்று  லத்தியால்  அவனைக்  கிடைத்த  வாகில்  எல்லாம்  விளாசினர்.  முதல்  அடியிலேயே  கீழே  விழுந்தவன்  ஒவ்வோர் அடிக்கும்  வெட்டுப்பட்டபல்லி  வாலாகத்  துடித்தவாறு,  ”சார்,  எனக்கு  எதுவும்  தெரியாது.  நான்  யாரையும்  கற்பழிக்கல.  ரயிலடி  பக்கமே  போகவில்லை,”  என்று  கத்தினான். ”அப்பா, அப்பா”  என்று அலறி, தேம்பி அழுத    மகனை  இழுத்துப்  பிடித்துக்  கொண்டு,  அவன்  நன்றாக  அடிவாங்கட்டும்  என்பதுபோல  அந்தாரா  ஒதுங்கி  நின்றாள். ‘எதுவும்  தெரியாது,  தெரியாது’  என்று  கூற,கூற  அடிக்கும்  வேகம்அதிகரித்தது. ”ரோட்டுல  போற  ஒரு  பொம்பளைய  விடுறீங்களாடா.  உன்னை  இங்க  வைச்சு  கேட்டா  சொல்லமாட்ட,  வா  ஸ்டேஷனுக்கு  அங்க  கொட்டய  நசுக்குறோம்”  என்று  ஆளுக்கொருகாலைப்  பிடித்து,   அவனைத் தரதரவென  வெளியில்  இழுத்தார்கள்.  அப்போது,  மிஸ்டர்  ஜீன்  இடையூறாக  நடுவில்  தடுப்பது  போல  இருந்ததும், ”இந்தப்  பொம்மை  திருடுனதா”  என்றான் ஒரு  போலீஸ்காரன். ”ரெயின்போ  துணிக்கடையிலே  வேலை  செய்கிறேன்.  எங்க  முதலாளியிடம்  கேட்டு  எடுத்துவந்தேன்.  கடையில  உடைஞ்சு  கிடந்த  பொம்மை”  என்று  சத்தமே  வராமல் கூறியவாறு  மிஸ்டரை  ஓரமாக  ஒதுக்கி  வைத்தாள். ”உன்னைத்தான்டி  முதல்ல  அடிக்கணும்.  சும்மாவே  இவன  உட்கார  வைச்சுக்கிட்டு,  நீ  வேலைக்குப்  போய்ட்டு  வந்து,  நல்லா ஒனக்கையா  சாப்பாடு  போட்டு,  குடிக்கவும்  காசு  கொடுக்குற.  இவன்  திமிறு  ஏறிப்  போயி  என்ன  செய்யுறதுனு  தெரியாம,  ஊரில்  உள்ள  பொம்பளைங்கள    கற்பழிச்சிட்டு  வரான்”  என்று  வெளியில்  வந்து,  ஒரு  ஆட்டோவைக்  கைதட்டி  அழைத்தார்கள்.  ஏற  மறுத்தவனை    ஆட்டோவிற்குள்  லத்தியாலேயே  குத்தித்  தள்ளி,  ஒரு  போலீஸ்காரனும்  உடன்  ஏறி  அவனை முதுகுப்புறமாகச்  சட்டையைச்  சுருட்டி, சேர்த்துப்  பிடித்துக்  கொண்டு,  ஆட்டோக்காரனைக்  காவல்நிலையத்திற்குப்  போகச்  சொன்னான்.  மற்றொரு  போலீஸ்காரன்  அவனின்  இரண்டு சக்கர  வாகனத்தில்  பின்தொடர்ந்து  செல்ல,  அந்தாரா  என்ன  செய்வது  எனத்  தெரியாமல்,  சுற்றி  நிற்பவர்கள்  மத்தியில்  அழவும்  பிடிக்காமல்  முகிலனை  இழுத்துக்  கொண்டு  உள்ளே  வந்து கதவைச்  சாத்திக்  கொண்டு,  வயிறு  வெடிக்க  அழ  ஆரம்பித்தாள்.  அவள்  சத்தத்தைவிட  முகிலன்  சத்தம்  அதிகமாகக்  கேட்டபோது,  அழுகையை  நிறுத்திவிட்டு,  அடுப்பைப்  பற்ற  வைத்து,பூஸ்ட்  கலக்கி  வந்து  அவனைக்  குடிக்கச்  சொன்னாள்.    அவன்  குடிக்க  மறுத்தபோது,  அதட்டிக்  குடிக்க  வைத்தாள்.  ஓரமாகத்  தள்ளி  வைத்த  மிஸ்டரை  மீண்டும்  பழைய  இடத்திலேயே நிறுத்தினாள்.  

                                                        5

தலையிலிருந்து பாதம் வரை முழுமையாக துணியால் மூடிக் கொண்டு வந்தாலும்,  ஒருவரின்  அங்க  அசைவுகளை  வைத்தே  அவர்  யார்  என்பதை  நெருங்கியவர்கள் கண்டறிந்துவிடுவதுபோல  அந்தாரா  பொம்மையாக  மாறிவரும்  கதையை  அவளது  நெருங்கிய  தோழியான  ரீத்து  ஒருநாள்  கண்டறிந்து  கடையில்  உள்ள  எல்லோருக்கும்  கூறினாள்.    அதுமுதல், ”உன்  வீட்டுக்காரரை  நன்றாகத்  துடை”  என்று  மிஸ்டர்  ஜீனை  வைத்து  அவளை  எல்லோரும்  கேலி  செய்யத்  தொடங்கினார்கள்.  அதற்காக  அவள்  கோபமோ,  வருத்தமோஅடையவில்லை. ”ஆமாம்.  என்  வீட்டுக்காரர்  எவ்வளவு  இளமையாக  இருக்கிறார்  பார்”  என்று  மிஸ்டருக்குப்  பக்கத்தில்  ஒரு  பொம்மையாக  நின்று  காட்டுவதை  வழக்கமாக வைத்திருந்தாள்.    அப்படிச்  சொன்னாலும்  உள்ளுக்குள்  அவளுக்கு  எப்போதும்  ஒரு  பயம்  ஏற்படும்.  கடையில்  நடப்பதெல்லாம்  கணவருக்குத்  தெரிந்தால்  அடிப்பாரோ  என  உதறல்  ஏற்படும்.ஒருவேளை  யாராவது  கணவரிடம்  போய், ‘கடையிலும்  உன்  மனைவி ஒரு வீட்டுக்காரனை  வைத்திருக்கிறாள்’  என்று  சொன்னாலும்,  கடைசியில், ‘அது  ஒரு  பொம்மை’  என்றுதான்சொல்லப்  போகிறார்கள்.  பொம்மைகளைப்  பராமரிக்கிறேன்  என்பதுதான்  அவருக்குத்  தெரியுமே?  அப்புறம்  எதற்கு  வீணாகப்  பயப்பட  வேண்டும்  என்று  சொல்லிக்கொண்டாலும்,  மிஸ்டருடான உறவை நினைக்கும்போது  பயம்  வந்துவிடும்.  மிஸ்டர்  ஜீனுடன்  கள்ளம்  புரிகிறேனோ?  அது  பொம்மை.  உண்மையில்,  அது  பொம்மையா  சொல்?  இல்லை.பொம்மை  இல்லை.  அது  என்  உயிர்.  ஒருவேளை  மிஸ்டரிடம்  நான்  அடையும்  பரவசம்  எல்லோருக்கும்  தெரிந்தால்,  அசிங்கப்பட  வேண்டியிருக்குமோ?  இது  யாருக்குத்  தெரியப்  போகிறது.மிஸ்டர்  ஜீனைக்  காதலிக்கிறேன்  என்று  நானே  சொன்னாலும், ‘விளையாட  நேரமில்லை.  அந்தப்  பக்கம் போ’  என்றுதான்  சொல்லப்  போகிறார்கள்.  ஆனால்,  இந்த  மனம்  ஏன்  இப்படிக்கிடந்து  பயப்படுகிறது.  மிஸ்டர்  எங்காவது  உளறிக்  கொட்டிவிடும்  என்றா?  அதுதான்  பொம்மை  ஆயிற்றே.  பொம்மையாக  இருந்தால்  நான்  ஏன்  காதலிக்கப்  போகிறேன்.  அது  பொம்மைஇல்லை  என்பதால்தானே  காதலிக்கிறேன்  என்று  அப்படியும்  இப்படியுமாக  ஆறு  மாதக்  குழப்பமான  தயக்கத்திற்குப்  பிறகு    மிஸ்டர்  ஜீனிடம்  இன்று நண்பகலில்தான்,  ”உன்னை  என்  மனம்தேடுகிறது”  என்றாள்.

                                                      6

மிஸ்டர் ஜீன் வீட்டிற்குள் பகலிலேயே சுதந்திரமாக நடமாடத் தொடங்கினார். அவர் இருப்பை வீட்டின் எல்லாம் இடங்களிலும் உணர முடிந்தது. பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிய பிறகு மிஸ்டர் ஜீனோடுதான் முகிலனும் விளையாடினான். அப்பாவைப் போலீஸ் பிடித்துப் போன ஏக்கம் அவனுக்கும் கொஞ்ச நாள் இருந்தது. ஆனால், அந்தாரா அவனைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தேற்றி, மிஸ்டர் ஜீன் பக்கம் அவன் உலகத்தைத் திருப்பி விட்டாள். அந்த உலகத்திற்குள் அவன் சுலபமாகவே நுழைந்து உள்ளே சென்று விட்டான். 
‘வீட்டுக்காரனை விட்டுட்டு பொம்மையைக் கட்டிப் பிடிச்சுட்டுக் கிடக்குறாளே ஒருத்தி’ என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் காதுபட சொல்லும் போதெல்லாம் அவளுக்கும் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. 
வீட்டார் எதிர்ப்பை எல்லாம் மீறி, காதலித்து கல்யாணம் செய்து கொண்டவனை எப்படி வெறுக்க முடியும் என்று பல மாதங்களுக்கு மேலாக அவளுக்குள்ளேயே கேள்வி எழுப்பித்தான் பார்த்தாள். ஆனால், அவள் நம்பிய ரட்சகனாக காதலிப்பதற்கு முன்பிருந்தே அவன் இருந்தது இல்லை என்பதை பத்திரிகைச் செய்திகள் தினமும் அவனின்   கோரமுகத்தை விவரித்துக் காட்டின. அவற்றைப் பார்க்கப் பார்க்க அவன் மீது சகிக்க முடியாத வெறுப்பு ஏற்பட்டு, அவன் தொலைந்து போகட்டும் என்று விட்டுவிட்டு, மிஸ்டர் ஜீனும், முகிலனும் இருந்தால் போதும் என்று அவள் வேலையில் கவனம் செலுத்தினாள். 
ரெயின்போவில் மேலும் பத்து காட்சியாக்கப் பொம்மைகளை வாங்கி அவற்றையும் அந்தாராவின் பொறுப்பில் விட்டு ஃபெனிட்டா பராமரிக்கச் சொன்னாள்.
ஐந்து ஆண், ஐந்து பெண் பொம்மைகளான அவை எதுவுமே மிஸ்டர் ஜீனைப் போல அவளைக் கவரவில்லை என்றாலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அவற்றை அழகுப்படுத்தி மனம் சொன்ன இடங்களில் எல்லாம் அவற்றை நிறுத்தினாள். அதேசமயம், மிஸ்டர் ஜீன் நின்றிருந்த இடத்தில் எந்தப் பொம்மையையும் அவள் நிறுத்த முன்வரவில்லை. அவளைச் சீண்டும் வகையில் அவளோடு வேலை செய்தவர்கள் அந்த இடத்தில் பொம்மையை வைக்கச் சொன்னபோது, ‘அந்த இடம் ராசி இல்லை. பொம்மை உடைந்துவிடும்’ என்று கூறினாள். ஃபெனிட்டாவும் ஒரு முறை ”அந்த இடத்தில் வை. உடைந்தால் பார்த்துக் கொள்ளலாம்” என்றபோதும் கேட்கவில்லை. ”பொம்மை உடைந்துவிட்டால் என்னைத்தான் கேட்பீர்கள். அதனால் அந்த இடத்தில் வேண்டாம்” என்று கூறிவிட்டாள்.
மிஸ்டர் ஜீனின் இடத்தில் வேறு யாரையும் வைத்து பார்க்க முடியாமல் மகிழ்ச்சியில் அவள் திளைத்துக் கொண்டிருந்த நாட்களில்தான், கடையில் வேலைப் பார்த்த போத்தல் பேருந்தில் ஏறி வந்து அவளை வீடு வரை பின் தொடர ஆரம்பித்தான். மறைமுகமாகவும், நேரடியாகவும் அவனை அவள் திட்டிப் பார்த்தாள். அவன் விடுவதாக இல்லை. ”எவ்வளவு நாள்தான் தனியாக இருப்பாய். எனக்குக் கல்யாணமாகி ரெண்டு பிள்ளைகள் இருந்தாலும் உன்னையும் வைத்துக் காப்பாத்துவேன்” என்று விடாமல் தொந்தரவு செய்தான். ஒரு நாள் இரவு பின்னாலேயே வந்தபோது, அவனைச் செருப்பை எடுத்து மையச்சாலையிலேயே விளாசினாள். அதோடு வரமாட்டான் எனவும் நினைத்தாள். அப்போதும் ஒவ்வோர் இரவும் அவன் விடாமல் பின்தொடர்ந்து நச்சரித்துப் பார்த்தான். எந்தவித மாற்றமும் ஏற்படாமல், அவளிடம் எதிர்ப்பு மூர்க்கம் மட்டுமே   அதிகரித்துக் கொண்டு செல்ல, ஒரு நாள் அவனே கோபமடைந்து, ”நீ மனுஷங்க கூட எல்லாம் படுக்க மாட்டியா பொம்மைக் கூடத்தான் படுப்பியா” என்று வெறிக் கத்தல் கத்தினான். ”ஆமான்டா… பொம்மைக்கூடத்தான் படுப்பேன். உன் வேலையைப் பார்த்துட்டு போ” என்று அவனைவிட அவள் வேகமாக கத்திவிட்டுச் சென்றாள். அதிலிருந்து அவளால் அமைதியாக வீடு திரும்ப முடிந்தது.

                                                        7

ஐம்பது  மீட்டர்  மடிப்புத்  துணியில்  பிரிப்பதெல்லாம்  நல்ல  துணியாகவே  வரும்  என்று  எந்தக்  கடைக்காரரும்  உத்தரவாதம்  கொடுக்க  முடியாது.  யாருக்கும்  தெரியாமல்  கிழிசல்கூடஎதேச்சையாக  வரலாம்.  சிறுநீர்  கழிக்கும்  சாக்கில்  ஒரு  மணி  நேரம்  தரைத்  தளத்திலேயே  மோகன்  செலவிட்டான்  என  ஃபெனிட்டாவிடம்  மகாதேவன்  புகார்  கூறியது  தொடர்பாக  அவர்கள் இரண்டு  பேருக்கும்  காலையில்  இருந்தே  விரோதம்  தொடர்ந்து  வந்தது.  என்ன  நடந்தது  என்றே  தெரியாமல்  மாலையில்  திடீரென  இருவரும்  நான்காம்  தளத்தில்  வாடிக்கையாளர்கள்முன்னிலையிலேயே  ஒருவரை  ஒருவர்  தாக்கிக்  கொண்டு  அங்கும்  இங்குமாக  உருண்டார்கள்.  வேறு  சில  விற்பனை  பிரிவினர்கள்  ஓடி  வந்து  தடுத்துப்  பார்த்தும்  இருவருடையமோதலையும்  நிறுத்த  முடியவில்லை.  கொஞ்ச  நேரத்தில்  பிரித்துவிடப்  போனவர்களும்  இரு  அணியாகப்  பிரிந்துகொண்டு  மோதிக்  கொண்டனர்.  ஒருவன்  இரும்பு  அளவையை  எடுத்துமற்றொருவனைத்  தாக்க  முற்பட்டபோது  அது  குறி  தவறி,  மிஸ்டர்  ஜீன்  மேல்  பட,  அவர்  நிலை  தடுமாறி  கீழே  விழுந்தார்.  இன்னொருவன்  அதே  இரும்பு  அளவையைப்  பிடுங்கி  ஓங்கி அடிக்க,  அது  தவறி  கண்ணாடியிலான  துணி  அடுக்குகள்  மீது  பட,  கண்ணாடிகள்  சில்லுசில்லுகளாகச்  சிதறி  பலரின்  கைகளிலும்  கால்களிலும்  ஏறி  ரத்தம்  கொட்டியது.  அப்போதும்  மோதல் முடிவுக்கு  வருவதாகத்  தெரியவில்லை.  அதன்  பின்,  சண்டையின்  சத்தம்  கேட்டு  மூன்றாவது  மாடியிலிருந்து  ஃபெனிட்டா  ஓடி  வந்து  காட்டுக்  கத்தல்  கத்தியதற்குப்  பிறகே  மோதல் கொஞ்சம்  கொஞ்சமாகக்  குறைந்தது.  மேலே  சண்டை  என்றதும்,  அந்தாரா  பதறிப்  போய்,  இரண்டாவது  தளத்தில்  மிஸ்டருக்காகத்  தேடி  எடுத்த  புது  கைக்கடிகாரத்தையும்  அப்படியே விட்டுவிட்டு  நான்காம்  தளத்திற்கு  ஓடி  வந்தாள்.  கண்ணாடிகள்  சிதறி,  துணிகள்  கலைந்து  அந்த  இடமே  கலவரக்  கோலமாகக்  காட்சியளித்தது.  ஆனால்,  அந்தாரா  அது பற்றியெல்லாம்கவலைப்படாமல்  மிஸ்டரைத்  தேடிப்  பார்த்தாள்.  அவர்  கீழே  விழுந்து  கிடப்பது  தெரிந்ததும்,  கண்ணாடி  சில்லுகள்  மேலேறி  ஓடி,  மிஸ்டரை  நிமிர்த்திப்  பார்த்தாள்.  முகம்  முழுவதும் விரிசல்  ஏற்பட்டு  போட்டிருந்த  கண்ணாடியும்  நொறுங்கிப்  போயிருந்தது.  அதைப்  பார்த்ததும்  அந்தாராவுக்கு  அவளே  நொறுங்கியதுபோல  கண்ணீர்  முட்டியது.  அப்போது, ”உங்களை எல்லாம்  வேலையை  விட்டுத்  தூக்கிட்டேன்.  வீட்டுக்குப்  போய்க்கிட்டே  இருக்கலாம்”  என்று  சண்டை போட்டவர்களைப்  பார்த்து  ஃபெனிட்டா  கூறினாள்.  அந்த  நேரத்தில்  மிஸ்டரின் காயங்களைப்  பார்த்து  அந்தாரா  அழுதுகொண்டே,  அதன்  மேல்  கிடந்த  கண்ணாடி  சில்லுகளைத்  தட்டி  விடுவதைப்  பார்த்ததும்  ஃபெனிட்டாவுக்கு  ஏனோ  புரிந்துகொள்ள  முடியாத  ஓர்எரிச்சல்  ஏற்பட்டது.   ”அந்தப்  பொம்மையைத்  தூக்கிக்  கொண்டு  போய்  குடோனில்  போட்டுட்டு,  வேற  வேலையைப்  பார்”  என்று  கத்தினாள்.  அந்தாராவுக்கு  என்ன  செய்வது  எனத்தெரியவில்லை.  மிஸ்டர்  ஜீன்  அருகிலேயே  ஒரு  பொம்மையாக  நின்றுகொண்டிருந்தாள்.

                                                           8

காலையிலிருந்து ஒரு வித நடுக்கத்தால் சூழப்பட்டவளாகவே அந்தாரா இருந்தாள். செய்யும் வேலை அனைத்திலும் சிறு தடுமாற்றமும், தவறிழைப்பும் நேர்ந்துகொண்டே இருந்தன. முகிலனின் பள்ளிக்கூடச் சாப்பாட்டுப் பையில் மதிய உணவை எடுத்து வைத்தபோது, பொரியலை வைக்க மறந்ததில் இருந்து, மூன்றாவது மாடியில் மதியவேளையில் புதிய துணிகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டபோது, அதை அடுக்குகளில் மாற்றிமாற்றி வைத்து திட்டு வாங்கியது வரை அவளால் காரணம் அறியமுடியாத முடியாத நடுக்கம் இருந்து கொண்டே இருந்தது. அப்போது மூன்றாவது மாடிக்கு மூச்சிரைக்க ஓடிவந்த கவிதா, ”உன் வீட்டுக்காரன் ஜெயிலில் இருந்து வந்துட்டான். கடைவாசலில் நின்னு, உன்னை வெளிய வரச் சொல்லி, அசிங்க அசிங்கமாகத் திட்டுறான்” என்றபோது மயக்கம் வந்து தலைசுற்றுவதுபோல இருந்தது. கடையைவிட்டு வெளியே போக அந்தாராவுக்குப் பயமாக இருந்தது. ஒரு பொம்மையைப் போல தான் நொறுங்கப் போகும் காட்சி ஒரு நிமிடம் கண் முன் வந்து போனது. இறங்கிப் போனால் எப்படியும் அடி விழும். கொஞ்சம் நேரம் கத்திவிட்டுப் போகட்டும். வீட்டிற்குப் போய் பார்த்துக் கொள்ளலாம் என நினைப்பதற்குள் அவன் மேலேறி வந்து, ஆவேசத்தோடு அவளைக் கடைக்குள்ளேயே இழுத்துப் போட்டு அடித்தான். ”எவன்கூட கூத்தடிச்சிக்கிட்டு, என்னை வந்து பார்க்கல” என்று அவளை ஏறி மிதித்தான். கடை ஊழியர்கள் திரண்டு வந்து தடுத்தும், அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. வாடிக்கையாளர்கள் பலர் அரண்டுப் போய் மாடியைவிட்டு கீழே போகத் தொடங்கினர். அந்தாராவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பெருத்த அவமானமாக இருந்தது. அப்போது ஆவேசத்துடன் ஓடி வந்த ஃபெனிட்டா, ”முதலில் கடையைவிட்டு வெளியே போ” என்று அந்தாராவை விரட்டினாள். அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் வெளியேறி, பேருந்து பிடித்து வீட்டிற்கு வந்தாள். அவனும் ஏதோ வீரச் செயல் புரிந்ததுபோல உடன் மிரட்டிக் கொண்டே வந்தவன், வீட்டிற்குள் வந்தும் அவளை இழுத்துப் போட்டு அடித்து, ஒரு உருட்டுக் கட்டையை எடுத்து அவன் இல்லாத காலத்தில் வாங்கப்பட்டிருந்த பொருட்களை எல்லாம் அடித்தவன்,  
”எவன்கூடயெல்லாம் படுத்த சொல்லு” என்று மிஸ்டர் ஜீனை நொறுக்கினான். அவள் எழுந்துபோய் தடுத்து நிறுத்துவதற்குள் அதைத் தூள்தூளாக்கிவிட்டு வெளியே போய்விட்டான். பள்ளியிலிருந்து திரும்பிய முகிலனும் மிஸ்டர் ஜீன் உடைந்துபோனதைப் பார்த்து அழுதவாறே பயத்தில் தூங்கிவிட்டான். 
இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் ரட்சன் தள்ளாடியவாறே வந்து தூங்க ஆரம்பித்தபோது, அந்தாரா ஆவேசத்துடன் உருட்டுக் கட்டையை எடுத்து ரத்தமும் சதையுமான ஒரு பொம்மையைச் செய்தாள்.

  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.