- 20xx- கதைகள்: முன்னுரை
- இருவேறு உலகங்கள்
- 2084: 1984+100
- 2015: சட்டமும் நியாயமும்
- 2010- மீண்டும் மால்தஸ்
- 2019- ஒரேயொரு டாலர்
- 2016 – எண்கள்
- பிரகாசமான எதிர்காலம்
- நிஜமான வேலை
- அவர் வழியே ஒரு தினுசு
- என்ன பொருத்தம்!
- மிகப்பெரிய அதிசயம்
- அன்புள்ள அன்னைக்கு
- வேலைக்கு ஆள் தேவை
- கோழிக் குஞ்சுகள்
- விலைக்குமேல் விலை
- எதிர்வளர்ச்சி
2018
புதிய இடத்துக்கு வந்த சிறுகுழந்தைபோல காப்ரியெல் கண்களை அகலவிரித்து தலையை எல்லா பக்கங்களிலும் திருப்பி பார்வையை ஓடவிட்டான். மேனகா இந்திய செவ்வியல் நடனப்பள்ளியின் ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் இன்னும் தொடங்கவில்லை. ஐநூறு பேருக்கான அரங்கம் நிரம்பிவழிந்தது. அதன் ஒரு பக்கம் வண்ணவண்ண ஆடைகளில் அமைதியாக, தங்கள் முறை வருவதற்குக் காத்திருந்த பதின்பருவப் பெண்கள். இருக்கைகளை இழுத்து அவற்றின் வரிசையை யாரும் கலைக்கவில்லை. இளம் சிறுவர்கள் கட்டுக்கடங்காமல் ஓடித்திரியவில்லை. குழந்தைகள் ஒன்றுமாற்றி இன்னொன்று அழவில்லை. திரைமூடிய மேடைமேல் குறிவைத்த பத்துப்பன்னிரண்டு வர்ண ஒளிவிளக்குகள். பெற்றோர்கள் பார்வையாளர்கள் அடங்கிய குரலில் பேசினார்கள். இத்தனை கும்பல் இருந்தாலும், சற்றுமுன் ஓய்வு அறைக்குப்போன போது அதன் சுத்தம் அவனை வியக்கவைத்தது.
வரவேற்கும் பாணியில் கைகூப்பி நிற்கும் ரசியின் படம் அழகுசெய்த நிகழ்ச்சிநிரல் அட்டை. இரண்டாக மடித்திருந்த அதைப் பிரித்தான். இருபது நாட்டியங்கள், அவனுக்குப் புரியாத தலைப்புகள், அவற்றை ஆடப்போகும் இளைஞர்களின் பெயர்கள். அவையும் அவனுக்குப் பரிச்சயம் இல்லாதவை. முதலாவதிலும் நான்காவதிலும் ரசி ரகுவரனின் பெயர் தட்டுப்பட்டது. அவற்றில் பங்கெடுத்து முடித்ததும் அவள், பலருடன் கைகுலுக்கி, முதன்முறை நடனமாடும் பெண்களுக்கு ஊக்கம்கொடுத்து, உடைமாற்றி அவன் அருகில் இருந்த காலியிடத்தில் உட்கார வருவாள்.
இப்படிப்பட்ட சனிக்கிழமை பிற்பகலை ஒருவாரத்துக்கு முன்னால் காப்ரியெல் எதிர்பார்த்து இருக்கமாட்டான். ரசியைக் கண்டுபிடித்தது, அவள் அவனை சந்திக்க சம்மதித்தது, அவள் பங்குபெறும் நடன நிகழ்ச்சியைப் பார்க்க அவனை அழைத்தது எல்லாமே அவன் அண்மைக்கால வாழ்க்கையில் இல்லாத புதிய, புதுமையான அனுபவங்கள்.
முந்தைய சனிக்கிழமை அவன் மூன்று தங்கைகளில் மூத்தவளான லூசியானாவின் க்வின்ஸநீரா (பதினைந்தாவது பிறந்தநாள்) கொண்டாட்டம். அவன் அம்மா அவள் பதினைந்து வருஷத்தின் வளர்ச்சியைக் காட்டும் படங்களை எங்கெல்லாமோ தேடியெடுத்து ஒரு தொகுப்பு தயாரித்திருந்தாள். விருந்தின் போது அதை ஒவ்வொருவராகப் பார்த்து லூசியானாவைக் கேலி செய்ய, தோள்களைக்காட்டிய நீண்ட ஆடையில் பிரகாசித்த அவள் அதை அனுபவிக்க… காப்ரியெல்லைக் கவர்ந்தது பூங்காவில் எடுத்த ஒரு படம். குழந்தைகள் ஏறிவிளையாடும் அரைக்கோள இரும்புச்சட்டம் சூரியவொளியில் துல்லியமாகத் தெரிந்தது. அதன் அடிக்கம்பைப் பிடித்துக்கொண்டு இரண்டு வயது லூசியானா. ஐந்து வயது காப்ரியெல் உச்சிக்கு ஏறிவிட்டான். இருவருக்கும் இடைப்பட்ட வயதில் ஒரு அழகிய பெண் சட்டத்தின் பாதிவில் நின்று பெருமிதத்துடன் திரும்பிப்பார்க்கிறாள். பட்டில் பாதம்வரை நீண்ட வெளிர்நீல ஆடை, அதே நிறத்தில் சட்டை. இரண்டின் ஓரத்திலும் ஜரிகை வேலைப்பாடு. அவர்களைப்போல கறுப்புக் கூந்தல். நீண்ட பின்னலாக முன்னால் தொங்கியது.
நினைவுகளில் காப்ரியெல் ஆண்டுகளைப் பின்னுக்குத் தள்ளினான். அவனுடைய இரண்டுவயதில் அவன் பெற்றோர்கள் மெக்ஸிகோவில் இருந்து மறைந்து ஒளிந்து யு.எஸ்.ஸில் நுழைந்து யாருடைய தயவிலோ சான்ஃபிரான்சிஸ்கோ வந்து இன்னொருவர் வீட்டின் பின்பகுதியில் தங்கி புதுவாழ்வு தொடங்கியதை அவன் தாய் பலமுறை விவரித்திருந்தாள். அவளுக்குத்தான் முதலில் வேலை கிடைத்தது. ஆப்பிலிலும் கூக்கிலிலும் பொறுப்பான பதவி வகித்தவர்கள் வீட்டில், அவர்களின் இரண்டு மாத பெண்குழந்தையை வாரநாட்களில் பத்துமணி நேரம் பார்த்துக்கொண்டு, துணிதுவைத்தல், தரையை சுத்தம்செய்தல், தேய்த்த பாத்திரங்களை அடுக்குதல் போன்ற வீட்டுக்காரியங்களையும் செய்ய வேண்டும். சாயம்போய் பல இடங்களில் நசுங்கிய காரில் அவள் வேலைக்கு வரும்போது தன் குழந்தையை அழைத்துவருவதற்குத் தடை இல்லை. காப்ரியெல் குடும்பத்தின் எல்லா தேவைகளையும் தாராளமாகப் பூர்த்திசெய்யும் சம்பளம்.
இரண்டாவது தங்கை பிறக்கும்வரை இந்த ஏற்பாடு சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் திருப்தியாக நடந்தது. ஆப்பில் கூக்கில் பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. காப்ரியெல்லின் குடும்பம் கால் ஊன்றியது. செல்வத்தில் பிறந்த குழந்தை தன் தாய்மொழியுடன் ஸ்பானிஷிலும் பலவார்த்தைகள் பேசக்கற்று செழுமையாக வளர்ந்தது. அவள் பள்ளிக்கூடம் போகத்தொடங்கி, காப்ரியெல்லின் தந்தைக்கு நிரந்தர வேலை கிடைத்ததும் அவன் தாய் உணவு விடுதி ஒன்றில் பகுதிநேர வேலைக்கு மாற்றிக்கொண்டாள். அந்தக் குடும்பத்துடன் தொடர்பு அத்துடன் அறுந்தது.
அப்படத்தைப் பார்த்ததும் அவளுடன் சிறுவயதில் விளையாடியது அவனுக்கு ஞாபகம் வந்தது. வீட்டைச்சுற்றி தோட்டத்தில் ஓடினார்கள், காரணம் இல்லாமல் சிரித்தார்கள், கூச்சல்போட்டார்கள், ஒன்றாக மரநிழலில் உட்கார்ந்து காப்ரியெல்லின் தாய் தயாரித்ததை போட்டிபோட்டு சாப்பிட்டார்கள். அவன் அம்மா வேலையாக இருந்தபோது அவளுக்கு வேடிக்கை காட்டினான், தொட்டிலை ஆட்டித் தூங்கச்செய்தான்.
அவளுக்கு இப்போது பதினேழு வயது. எப்படி இருப்பாள்? படத்தை அம்மாவிடம் காட்டினான். ‘மம்மா! இந்தப்பெண்ணின் பெயர்…”
‘ரசி.”
‘குடும்பப்பெயர்…” தலையை ஆட்டினாள். சம்பளத்துக்கு செக் வாங்கியிருந்தால் அவர்களின் முழுப்பெயரை அவள் கவனித்திருப்பாள். அரசாங்கத்தின் கண்ணில்படாமல் இருக்க அப்படிச்செய்தது இல்லை.
‘முகவரி…”
‘அது நன்றாக ஞாபகம் இருக்கிறது. 555 சான் டோமாஸ் அக்வினோ வே. உனக்கு எதற்கு இப்போ?”
‘அவளை சந்திக்கத்தான்.” வளர்ந்துவிட்ட எஜமானர்களின் குழந்தைக்கு வேலைக்காரியின் பையனை சந்திக்க விருப்பம் இருக்குமா?
‘அவர்கள் வீடுமாறாமல் இருக்கவேணுமே” என்று தன் அவநம்பிக்கையை வெளிப்படுத்தினாள்.
”அப்போ தேடலை விட்டுவிடுகிறேன்.”
புதிய தகவலை அறிவிக்கும் க்ரீங்ங். அலைபேசியை காப்ரியெல் எடுத்தான். அவன் பெண்-தோழி அரியானாவிடம் இருந்து. அவளுக்கு சம வயது, ஆனால் ஓராண்டுக்கு முன்பே பள்ளிப்படிப்பை முடித்து ராயல்பர்கரில் அதிகாலை நேரத்து வேலை. அழைப்பு எதற்காக என்று தெரியும். முந்தைய தினம் குறும்புப்புன்னகையுடன் சொல்லியிருந்தாள். வேலை முடிந்ததும் வால்க்ரீன்ஸ் மருந்துக்கடையில் அதை வாங்கி, வீட்டிற்கு ரகசியமாக எடுத்துச்சென்று… தகவல் இரண்டு குறியீடுகள் மட்டுமே.
+ மற்றும் சிரிக்கும் இமோஜி முகம். கூட்டல் குறியைப் பார்த்து அவனுக்கும் சந்தோஷச்சிரிப்பு வரப்பார்த்து பாதியில் நின்று பிறகு மறைந்துவிட்டது. தகவலுக்கு பதிலை யோசித்தான். இது எப்படி? 1 + 1 = 3
‘நமஸ்கார்! மேனகா நாட்டியப்பள்ளியின் சார்பில் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். ஒருவிதத்தில் இன்று அறுவடை நாள்…”
மற்ற குரல்கள் அடங்கி அவள் குரலை உயர்த்திக்காட்டின. தந்தத்தின் நிறத்தில் பின்னலும் செந்நிறப் பட்டுச்சேலையும் வௌ;ளை மோனிகாவை இந்தியப்படுத்தின. தெளிவான ஆங்கில உச்சரிப்பு. பிற மொழி வார்த்தைகளும் தங்கள் தனித்துவத்தை இழக்கவில்லை.
‘முதலில் கலைகளின் கடவுள் சரஸ்வதிக்கு வாழ்த்து.”
திரைவிலக, பிரகாசமான மேடை. கும்பலாகக் கூப்பிய கரங்களுடன் வணங்கும் நிலையில் உடலை இலேசாக வளைத்து பெண்கள் மந்திரம் இசைத்தார்கள். கேட்க இனிமையாக இருந்தது. அடுத்ததாக…
‘இந்தத்தொன்மையான இந்தியக்கலையைத் தோற்றுவித்தவர்கள் ஷிவா மற்றும் பார்வதி என்று சொல்வது வழக்கம். அதனால்…”
அறிமுகம் முடிந்ததும் ஆணும் பெண்ணுமாக இருவரின் நடனம், முதலில் தனித்தனியாக பிறகு இருவரும் கைகோர்த்து… அவன் இடையில் புலித்தோலை ஒத்த துண்டு, தலைமுடியில் ஒரு அட்டை பிறைச்சந்திரன். அவள் ஒவ்வொரு அசைவிலும் பளிச்சிட்ட அணிகலன். பின்னணியில் பனிமலைச் சிகரங்கள்.
நாட்டியத்திற்கு வேண்டிய சிறப்பான ஆடைகள், நகைகள் இந்தியாவில் இருந்து கொண்டுவந்தவையாக இருக்கும். அவற்றின் விலையுடன் இந்தியா போய்வரும் செலவு எவ்வளவு? சாப்பாடு, வீட்டுவாடகை என்ற அடிப்படைத் தேவைகளுக்குமேலாக அங்கிருந்த எல்லா பெற்றோர்களுக்கும் வருமானம். அதன் கணிசமான அளவு மட்டுமல்ல, அது அடுத்த மாதமும் அடுத்த ஆண்டும் இருக்கும் என்ற நிச்சயம், இன்னும் சொல்லப்போனால் அது அதிகரித்தும் இருக்கும்.
பணம் இருந்தால் மட்டும் போதுமா? கலையழகோடு உடலையும் கைகளையும் அசைக்க அந்தப்பையனும் பெண்ணும் எத்தனை ஆண்டுகள் பயிற்சிசெய்து இருக்க வேண்டும். வாரம் இரண்டு மூன்று முறையாவது. அவர்களை மோனிகாவிடம் அழைத்துவரும் கடமை அவர்களைப் பெற்றவர்களுக்கு. அவர்களுக்கும் தினசரி காரியங்களையும் தாண்டி நேரம் இருக்க வேண்டும்.
மேடையில் வெளிச்சம் மங்கி, இருவரும் ஒருவரையொருவர் ஆசையுடன் பார்த்து அசையாமல்நிற்க, பலத்த கைதட்டல். அவனும் சேர்ந்துகொண்டான்.
அவனுடைய வீட்டில் விழித்திருக்கும் நேரமெல்லாம் அலறிய தொலைக்காட்சியால் வீணான நேரம் நினைவுக்கு வந்து அவனைத் தொந்தரவு செய்தது.
தாய் கொடுத்த முகவரியில் வசிப்பவர்களின் பெயரும் தொலைபேசி எண்ணும் காப்ரியெல்லுக்கு வலைத்தளத்தில் கிடைத்தன. எதிர்பார்த்ததுபோல் அந்த எண்ணை அவன் கூப்பிட்டதும் இயந்திரக்குரல் இடைமறித்து தகவல் கேட்டது.
பல ஆண்டுகளுக்குமுன் எலினா பார்த்துக்கொண்ட பெண் குழந்தை ரசியின் வீடு இது என்றால், அந்தப்பெண்ணுடன் சிறுவயதில் விளையாடிய காப்ரியெல் நான். ரசியுடன் தொடர்புகொள்ள ஆசை. என் எண் 408-….
அவன் எதிர்பார்த்த அலைபேசி அழைப்பு மறுநாள் மாலை தான் வந்தது. ரசியே பேசியது அவனுக்குப் பிடித்திருந்தது. அவன் பெயரை மறந்தாலும் அவனுடன் விளையாடியது அவளுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது.
‘பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் நம் பாதைகள் பிரிந்துவிட்டன. அவற்றை மறுபடி சேர்க்க முடியுமா?’
‘இன்டரஸ்டிங்…”
யோசிக்கும் மௌனம்.
‘அடுத்த வாரக்கடைசியில்…” என்று அடியெடுத்துக் கொடுத்தான்.
‘நான் அடுத்த ஞாயிற்றுக்கிழமை இரண்டுமாத விடுமுறையில் இந்தியா போகிறேன். அதற்கு முதல்நாள் ஒரு நாட்டிய நிகழ்ச்சி. என் பங்கு முடிந்ததும் உன்னுடன் பேச சிறிதுநேரம் கிடைக்கும்…”
அப்போது மட்டுமே என்பது வெளிப்படை. அவனைச் சந்திக்கச் சம்மதித்தாளே அதுவரையில் சந்தோஷம்.
‘அந்நேரம் வருகிறேன். எங்கே என்று சொல்!”
ரசி சொன்ன நேரத்துக்குள் போக வேண்டும் என்ற உந்துதலில் பிற்பகல் இரண்டுமணிக்கே வீட்டில் இருந்து கிளம்பினான்.
காரை ஓட்டுவதில் கவனமாக இருந்த அவன் முதலில் கவனிக்கவில்லை. அந்த மாற்றம் எப்போது நிகழ்ந்தது? ஃபாஸ்டர் சிடி தாண்டியபிறகு? திடீரென அவன் பார்வையில் வேகமாக ஓடிய ஊர்திகள், புத்தகக்கடைகள், ஸ்டார்பக்ஸ் காப்பி விடுதிகள், மேல்மட்ட கடைகள், மரங்கள் நிறைந்த கல்லூரி வளாகங்கள், சொகுசான அபார்ட்மென்ட் கட்டடங்கள். அவற்றின் ஒரு படுக்கை-அறை இல்லத்துக்கே மாத வாடகை சில ஆயிரங்கள் இருந்தால் அதிசயம் இல்லை. இதெல்லாம் அவனுக்குப் புதிது என்று சொல்லமுடியாது,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கிட்டத்தட்ட எல்லாமே மேல்மட்டத்தினரின் உலகம்தான். இருந்தாலும் நிஜமாகப் பார்க்கையில் ஒரு மனபாதிப்பு.
அவன் வீட்டுப்பகுதியுடன் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. வார மற்றும் மாதக்கணக்கில் அநியாய வட்டிக்கு கடன்தரும் கொள்ளைக்காரர்கள், திருட்டுப்போனால் பாதகமில்லை என மெல்லிய பிளாஸ்டிக் பாத்திரங்களையே பயன்படுத்தும் மிகமலிவான சீன மற்றும் மெக்ஸிகன் உணவு விடுதிகள், டாலர் கடைகள், சிகரெட் அல்கஹால் மட்டுமே விற்கும் இடங்கள், எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள், விரைவில் மூடப்போவதால் விலைகள் குறைக்கப்பட்ட பல்பொருள் அங்காடிகள். திருடு வழிப்பறி தினப்படி நிகழ்வுகள். உற்சாகமற்ற மனித முகங்கள். நிச்சயமற்ற வேலைநேரங்கள். அடிபட்டு மதிப்பிழந்த ஊர்திகள் மனிதர்கள். அவர்களுக்கு ஏன் கல்வி கலை நிறுவனங்கள்?
மூன்று மணிக்கு பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே காம்பெல் ஆடிடோரியத்தின் முன் காப்ரியெல் தன் பழைய கியா ரியோவை நிறுத்தினான். புதுக்கருக்கு அழியாத எஸ்யுவி ஊர்தி ஒன்று வந்து நின்றது. பளபளக்கும் வண்ண ஆடைகளில், ஏகப்பட்ட அணிகலன்களுடன், விநோத அலங்காரத்தில் பதின்பருவப்பெண்கள் அவனைத் தாண்டிச் சென்றார்கள். அவர்களைத் தொடர்ந்து பெருமிதத்துடன் கைகோர்த்து நடந்த இரண்டு தாய்தந்தை ஜோடிகள். தன் தந்தையையும் தாயையும் அவன் ஒன்றாக சிரித்துப்பார்த்த நேரங்களை கைகால் விரல்களில் எண்ணிவிடலாம். இரண்டு சிலசமயங்களில் மூன்று வேலைகள் செய்த அவன் தந்தைக்கு ஓய்வுநேரம் ஏது?
முடிந்துபோன பள்ளிக்கூட பட்டமளிப்பு விழாவுக்கு வாங்கிய அவன் சம்பிரதாய ஆடை அவர்களின் சாதாரண ஆடைக்குமுன் அற்பமாகப்பட்டது.
முதலில் பார்த்த ஊர்தி போல நிறைய கார்கள் வந்து நின்றன.
ஒரு லெக்சஸில் இருந்து இறங்கிய ரசி. வித்தியாசமான அவனை அடையாளம் காண அவளுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை.
‘ஹாய், காப்ரியெல்!”
மிகையான ஒப்பனையையும் மீறி சிறுவயதுப்படத்தின் சாயல் ரசியின் முகத்தில் தெரிந்தது. என்ன அழகு!
‘ஹாய், ரசி! யு லுக் க்ரேட்!”
‘தாங்க்ஸ், நீ நன்றாக வளர்ந்து இருக்கிறாய்.”
தன் பெற்றோர்களை அறிமுகம் செய்தாள்.
‘உன்னை ஏழுவயதில் பார்த்தது.” அரங்கில் அவள் பெற்றோர்கள் தங்கள் நண்பர்களைத் தேடிப்போக, அவனை நடைவழிக்கு பக்கத்தில் உட்காரவைத்து அவள் மேடைக்குப்பின்னால் மறைய…
“நான்காவது நாட்டியத்தில் பங்குபெறப்போகும் பெண்களுக்கு இன்று நாம் பிரியாவிடை சொல்லப் போகிறோம். பள்ளிக்கூடப் படிப்பை முடித்த அவர்கள் என்னிடம் இருந்தும் பிரியப்போகிறார்கள். அதற்கு வருந்தினாலும் என்னுடன் செலவழித்த காலத்தில் அவர்கள் அடைந்த கலைவளர்ச்சியைக் கண்டு பெருமிதம் அடைகிறேன்.
சென்ற நூற்றாண்டின் இந்திய தேசியக்கவி பாரதியார். அவர் லார்ட் க்ருஷ்ணா மேல் பல பாடல்கள் இயற்றினார். இப்பாடல் கோகுலப்பெண் பாடுவதாக அமைந்துள்ளது. எங்கோ தொலைவில் ஒரு இனிய ஓசை. அது எங்கிருந்து வருகிறது என்று அவள் அதிசயப்படுகிறாள். மலைகளில் இருந்து வருகிறதா இல்லை சோலையில் இருந்தா? யமுனை நதியின் அலையோ அல்லது இலைகளின் அசைவோ? பறவையின் கூவலோ இல்லை வானவர்களின் இன்னிசையோ? கடைசியில் அது லார்ட் க்ருஷ்ணாவின் புல்லாங்குழல் ஓசை என்பதை அறிந்து மயங்குகிறாள்.”
திரை விலகியது. ஐந்து பதின்பருவப்பெண்கள். நடுநாயகமாக ரசி. ஆனந்தமாக நாலைந்து நிமிடங்கள் கைகோர்த்து ஆடுகிறார்கள். திடீரென அரங்கின் ஓரங்களில் இருந்து வெளிப்பட்ட இனிய ஓசை. நாட்டியம் நிற்கிறது. பின்னணியில் பாடல்.
எங்கிருந்து வருகுவதோ? – ஒலி
யாவர் செய்குவதோ?
அது என்னவாக இருக்கும் என்பதை ஒவ்வொருத்தியும் அபிநயத்தில் நாட்டிய உடல் அசைவுகளில் வெளிப்படுத்துகிறாள்.
காப்ரியெல் கலைவெளிப்பாட்டின் நுண்ணிய விவரங்களில் தன்னை இழந்தான். நிகழ்ச்சி முடிந்ததும் அதில் பங்கெடுத்த ஒவ்வொருவரின் பெயரை மோனிகா உச்சரிக்க, அவள் கரம்கூப்பி வணங்கினாள்.
அக்ஷயா பெரியசாமி – ஸ்டான்ஃபோர்ட்
ஷ்ரேயா மஹேஷ் – ஜியார்ஜியா டெக்
சந்தியா சுரேஷ் – ப்ரின்ஸ்டன்
யஸோ மாத்யூ – யூ சிஎல்ஏ
ரசி ரகுவரன் – பெர்க்கிலி
கல்லூரியில் அவர்கள் சிறப்பாகச்செய்ய முழுமனதுடன் வாழ்த்துகிறேன்.
ஆசி வழங்குவதுபோல் பலத்த கைதட்டல். அடுத்துவந்த நிகழ்ச்சிகளை அவன் பார்க்கவில்லை, மோனிகாவின் விளக்கத்தையும் கேட்கவில்லை. மனதில் இன்னும் ஒரு ஒப்பிடல்.
ரசி, யஸோ இவர்களின் இளமைப்பருவமும் கல்விக்காலமும் இன்னும் முற்றுப்பெறவில்லை. அவர்கள் பிறந்தவுடனே பதினெட்டு ஆண்டுகளில் அவர்கள் வருவார்கள் என அவர்களுக்கு கல்லூரியில் இடம் எழுதிவைத்திருந்தால் அதிசயம் இல்லை. அவன் காதலியும் தங்கைகளும் பள்ளிக்கூடம் போகிறேன் என்று பெயர்செய்து, பதினெட்டு வயதைக்குறிக்கும் பட்டத்தை வாங்கிக்கொண்டு, கீழ்மட்ட வேலைகளில் திருப்தியடைந்து, யாரோ ஒருவனுடன் அவசரமாகக் கர்ப்பம் தரித்து, குழந்தைகள் சமையல் ஆடைகள் என்ற குறுகிய எல்லைக்குள் அலைந்து…
சான்ஃபிரான்சிஸ்கோவும் அதைச்சுற்றிய நிலப்பகுதியும் ‘பே ஏரியா’ என்று மொத்தமாக அழைக்கப்பட்டாலும் அதில் இருவேறு உலகங்கள். ரசி காப்ரியெல் இருவரின் வாழ்க்கைப்பாதைகள் போல அவர்கள் உலகங்களும் எவ்வளவு காலம் தனித்து நிற்கும்?
இரண்டில் எது நிஜம்? ரசியின் உலகில் கட்டடங்கள் கட்ட, கட்டிய அமைப்புகளை சுத்தமாக வைக்க, அவற்றில் குடியிருக்கும் மனிதர்களுக்கு காப்பி சிற்றுண்டி தயாரிக்க, அவர்களின் குழந்தைகளை கவனித்துக்கொள்ள, பயணவிடுதிகளில் படுக்கை உறைகளை மாற்ற காப்ரியெல் உலகத்தினர் அவசியம். திருப்பி அவர்களுக்கு ரசி உலகத்தினர் என்ன செய்கிறார்கள்? கையகல அலைபேசியின் திரையில் இருந்து பிருமாண்டமான வெள்ளித்திரை வரை மாய உலகை சிருஷ்டித்து மனமகிழ்வு தருகிறார்கள். அவ்வளவுதான்.
காப்ரியெல்லின் உதவி இல்லாமல் ரசி நடனம் கற்று ஆட முடியாது. ஆனால், அவன் உலகம் ஆப்பில் கூக்கில் இல்லாமல் தனித்து இயங்க முடியும். அலைபேசியை தூக்கியெறிந்துவிட்டு, தங்கள் இல்லங்களையும் சுற்றுப்புரத்தையும் சுத்தமாக வைத்து, தங்களுக்கு வேண்டிய காய்களையும், தானியங்களையும் மட்டுமே விளைவித்து…
பதினைந்து இருபது ஆண்டுகளுக்கான ஒரு சமுதாய புரட்சித்திட்டம் காப்ரியெல் மனதில் உருவானது. அதை அவன் உலகத்தினருக்கு புரியவைத்து புதிய எழுச்சியை உண்டாக்க வேண்டும்.
முதல்பாதி நிகழ்ச்சிகள் முடிய இருந்தபோது, ரசி மேடையை மறைக்காமல் குனிந்துவந்து காப்ரியெல்லுக்கு புன்னகை தந்து அவன் பக்கத்தில் அமர்ந்தாள். நாட்டிய ஆடைக்குபதில் உடலோடு ஒட்டிய இன்னொரு இந்திய ஆடை. அதிலும் கண்களை இழுத்துவைக்கும் அழகு. அணிகலன்கள் அகற்றப்பட்ட கூந்தல் பரந்து தொங்கியது. மற்ற நகைகள் கழற்றப்பட்டு ஒப்பனை இலேசாக அழிக்கப்பட, வயது இருபத்தைந்தில் இருந்து பதினேழாகக் குறைந்தது.
பதினைந்து நிமிட இடைவேளை. இருவரும் எழுந்து நடந்தார்கள். அரங்கிலிருந்து வெளியே வந்தபோது ஒரு கோப்பை காப்பி மற்றும் ஒரு தட்டில் கொஞ்சம் காரமான கலவை, ஒரு இனிப்புக்கட்டி. வரவேற்புப் பகுதியில் நின்று சுவைத்தார்கள். அங்கங்கே சிறுசிறு குழுக்களாக உரையாடிய மனிதர்கள்.
‘உனக்கு காரமாக இல்லையே?”
‘எனக்கு இதெல்லாம் பழக்கம்.”
‘நிகழ்ச்சி எப்படி இருந்தது?”
‘பிரமாதம். மோனிகா கொடுத்த விளக்கத்தால் பின்னணிகளைப் புரிந்துகொள்ள முடிந்தது.”
‘அவளுக்கு இந்தியப் புராணத்திலும் சரித்திரத்திலும் தெரியாததே இல்லை.” ‘உன் நிகழ்ச்சியில் விதவிதமான ஓசைகளை நீ அபிநயத்தில் நன்றாக வெளிப்படுத்தினாய்.”
‘தாங்க்ஸ். அது இக்கலையின் அடிப்படை இலக்கணம்.”
‘பெர்க்கிலி போனபிறகும் உன்னால் நடனப்பயிற்சி செய்ய முடியுமா?”
‘முடியும் என்கிற நம்பிக்கை.”
தரமான காப்பியை அனுபவித்துக் குடித்தான்.
‘நீ வரும் கோடையில் என்ன செய்வதாக…” என்று அக்கறையுடன் ஆரம்பித்த ரசி அவர்களை நோக்கிவந்த இளைஞனைப்பார்த்து முகமலர்ந்தாள். அவன் அருகில் வந்ததும்,
‘இது நிகில். என்னுடன் பெர்க்கிலி வருகிறான். இது காப்ரியெல். என்னுடைய குழந்தைப்பருவத்து நண்பன். பன்னிரண்டு ஆண்டு இடைவெளிக்குப்பிறகு சந்தித்து சகஜமாகப் பேசுகிறோம். ஆச்சரியமாக இல்லை?”
நிகில் முகத்தில் அந்த உணர்ச்சி கொஞ்சமும் வரக்காணோம். காப்ரியெல்லின் எதிர்காலம் பற்றிய பேச்சு அவன் வரவினால் தடைப்பட்டது. ரசிக்கு கேட்க விருப்பம் இருக்கும் என்றாலும் தானாகவே அதைச்சொல்வது காப்ரியெல்லுக்கு சரியாகப்படவில்லை. முதலில், அவனுக்கே அது நிச்சயமாகத் தெரியுமா? ‘தாமதமாக வந்ததால் அரங்கின் பின்னால் நின்று உன் நடனத்தை ரசித்தேன்” என்று நிகில் ஆரம்பிக்க… பெற்றோர்கள் கும்பலில் ஒரு குபீர்ச்சிரிப்பு எழுந்து அடங்க… ரசி உடலின் மெல்லிய நடுப்பகுதி அவன் கண்களை உறுத்த…
‘எக்ஸ்க்யுஸ் மீ!” என்று காப்ரியெல் அலைபேசியை எடுத்தான். ‘நிகழ்ச்சியின் நடுவில் வந்த அழைப்புக்கு நான் பதில் சொல்ல வேண்டும்.”
அவர்களிடம் இருந்து விலகி கட்டடத்துக்கு வெளியே வந்தான். இரைச்சல் அடங்கியது. மனதில் தெளிவு பிறந்தது. ரசியை பார்த்தாகிவிட்டது. அவள் வாழ்க்கைப்பாதை சமதளம் ஆக்கிய நெடுஞ்சாலை. அதில் அவளுக்கு பெட்ரோல் நிரப்பிய புது ஊர்தி. அவனையும் அரியானாவையும் எதிர்நோக்கி இருப்பது குண்டும்குழியுமான தெரு. கால் டாங்குக்குக் குறைவான புராதனக் காரில் அவன் வந்தவழியிலேயே திரும்பிப்போக வேண்டியது தானே.
இல்லை, நிச்சயமாக இல்லை. ரசியின் உலகில் காப்ரியெல் நுழையப்போகிறான். அப்படிச்செய்ய அவனுக்கு சாமர்த்தியம் இருக்கிறதா? அதையும் தான் பார்த்துவிடுகிறது.
அதற்கு முதல்படி. அலைபேசியில் தேடியெடுத்து அழைத்தான். சிலநிமிட அலைச்சலுக்குப்பின் ஒரு நிஜமான பெண்.
‘உடனே கவனிக்க வேண்டுமா?” என்றாள் அவள் நேரடியாக.
‘இல்லை. +ஐ –ஆக மாற்ற வேண்டும்.”
‘அப்படியென்றால்… செவ்வாய் காலை பதினோரு மணிக்கு உன் பெண்-தோழியை அழைத்துக்கொண்டு வா!”
‘கட்டாயம்.”
மீதி நடனங்களை ரசிக்க காப்ரியெல் அரங்கில் நுழைந்து தன் இடம் நோக்கி நடந்தான்.
***