ஆட்டத்தின் ஐந்து விதிகள்- நான்காவது விதி

இதுவரை தொடர்ந்து வாசித்து பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி. இந்த நான்காவது விதி முந்தைய இரு விதிகளுக்கு சற்று மாறுபட்டது. இரண்டாம், மூன்றாம் விதிகள் செய்யக்கூடாதவை பற்றி பேசின. அவ்விரு விதிகளும் வாடிக்கையாளர் முன் ஒரு விற்பனையாளர் தவிர்க்க வேண்டிய செயல்களையே பேசின. இந்த நான்காம் விதி விற்பனையாளர் வாடிக்கையாளரிடம் பேசுகையில் செய்ய வேண்டியதைப் பேசப்போகிறது. ஒரு வகையில் வாடிக்கையாளரை நம்மீது கவனம் குவிக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதையே இவ்விதி பேசுகிறது.

இவ்விதிக்குள் நுழையும் முன்னர், நடந்த உண்மைச் சம்பவங்களின் வழியே இவ்விதியின் அடிப்படையை உங்களுக்கு விளக்க முயல்கிறேன். இப்போது நாம் பேசப்போகும் சம்பவங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அதன் தலைநகரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் எண்பதுகளின் துவக்கங்களில்  நடைபெற்றவை. அக்கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே இருக்கும் ஒரு துவக்கப்பள்ளி. அதில் ஐந்து ஆசிரியர்களும், ஒரு தலைமை ஆசிரியரும். வகுப்பிற்கு 25 மாணவர்கள் இருந்தால் அதிகம். அதில் நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு பையன் ஆசிரியர் பாடங்களை உரக்க வாசிக்கச் சொல்லும்போது சிறப்பாக வாசிப்பான். வார்த்தைகள் வராமல் தடுமாறுவதில்லை என்பதால் அவன்தான் கணக்கு தவிர்த்த அனைத்து பாடங்களையும் வாசிப்பவன். 

ஒரு நாள் அவனை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அழைத்தார். அவனிடம் நான்கு முழு நீளப்பக்கங்கள் கொண்ட கட்டுரை ஒன்றைக் கொடுத்தார். “ஏ, இதை வாசிடே “ என்றார். பையன் எதற்கெனத் தெரியாமல் குழம்பினான். இருந்தாலும் அவர் சொன்னதால் வாசித்தான். 

“ பரவால்லையே, மொதத் தடவையே திக்கல், திணறல் இல்லாம வாசிச்சிட்டானே “ – அவனைத் தாண்டி கண்களை ஓடவிட்டு சொன்னார். அப்போதுதான் அவரைப் பார்த்தபடி நின்றிருந்த அவன் திரும்பினான். பிற ஆசிரியர்கள் அனைவரும் பின்னால் உட்கார்ந்திருந்தார்கள். அவனுக்கு ஏதோ தவறு செய்து மாட்டிக்கொண்ட பயம். மிரள, மிரள விழித்தான். தலைமை ஆசிரியர் அவனிடம் “அருமையா வாசிக்கயேடே .. நீ தெனோமும் பள்ளிக்கூடம் முடிஞ்சதும் வந்து இதை வாசி. என்ன?” 

பையன் மிரட்சியாய் தலை அசைத்தான். அன்றிலிருந்து நான்கு நாட்கள் தினம் மாலை அவர் இருக்கைக்குப் போய் அக்கட்டுரைத் தாட்களை எடுத்து வாசிப்பான். நான்கு நாட்களுக்குப் பிறகு வாசிப்பில் சில மாற்றங்களை சொல்லிக் கொடுத்தார் தலைமை ஆசிரியர். குரலில் ஏற்ற இறக்கங்கள் , கை அசைவுகள், தலையை நிமிர்த்தி வாசித்தல் என இன்னுமொரு நான்கு நாட்கள். பையன் என்னவென்றே தெரியாமல் தினமும் அவருக்குப் பயந்து சொன்னதைச் செய்து வந்தான். இவ்வளவிற்கும் அவர் அடிக்ககூடியவர் அல்லர். ஆனாலும் பையனுக்கு பயம் உண்டு.    

மூன்று நாட்கள் நேரம் கொடுத்து மொத்த கட்டுரையையும் மனப்பாடம் செய்து வரச் சொன்னார். பையன் தடுமாறினால் கோபம் கொள்ளாமல் பொறுமையாய் சொல்லித்தருவார். –“ டே .. மொத்தம் பன்னெண்டு பத்தி… நீ ஒவ்வொரு பத்தியோட மொத வார்த்தைய மட்டும் மனப்பாடம் பண்ணிட்டு வா… “

-“அதை மட்டும் ஒருக்க சொல்லுடே …….வெரல விட்டு எண்ணாதடே…மனசுக்குள்ளயே எண்ணிக்கோ “

“மறந்துருச்சுன்னா அப்டியே நிக்கக்கூடாது. முழியப் போட்டு உருட்டப்படாது, கேட்டியா .. அந்தாக்ல அடுத்த பத்திக்கு போயிரனும். நான் ஒவ்வொரு பத்தியும் தனித்தனியாத்தான் எழுதிருக்கேன். மனசிலாச்சா ?”

பையன் தலையில் இடி விழுந்தது இருவாரத்திற்குப் பின்னர்தான். இவ்வளவு ஏற்பாடும் தாலுகா அளவிலான பள்ளி மாணவர்களிடையே நடைபெறப்போகும் பேச்சுப்போட்டியில் பங்கெடுப்பதற்கான தயாரிப்புகள். பையன் அவரிடம் போராடிப் பார்த்தான். கெஞ்சல், குமுறல், பயம் என எல்லா சாத்தியங்களையும் பயன்படுத்திப் பார்த்தான். அவர் அனைத்தையும் வாழைப்பழத்தின் தோலை உரிக்கும் சுளுவில் கையாண்டார். 

“இப்ப என்னடே…. எல்லார் முன்னாடியும் பேச பயமாருக்கா? அவ்ளோதான “ – அன்று மாலையே பள்ளி முடியும் நேரத்துக்கு இருபது நிமிடங்களுக்கு முன் அனைத்து வகுப்பு மாணவர்களும் மைதானத்தில் ( அதாவது நீண்ட ஓட்டுக் கட்டிடத்தின் முன்புள்ள வெற்றிடத்தில் ) அமரவைக்கப்பட்டு “ இப்ப பேசுடே , இவங்களல்லாம் உனக்குத்தான் தெரியுமே… பேசுடே “

“அதெல்லாம் உங்கப்பாட்ட நான் சொல்லிக்கிடுதேன். பசார்ல பாப்பேம்லா. அவாள் ஒண்ணும் சொல்ல மாட்டா … நீ பேசு “

“என்ன பெரியவங்களா இருப்பாங்க, போவாங்கன்னுட்டு ….உன்னைய கடிச்சா திம்பாங்க…” – அன்று மாலையே ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர், பள்ளி துப்புரவாளர், தலைமை ஆசிரியரின் நண்பர்கள் சூழ “ இப்பம் பேசுடே, இவங்கல்லாம் ஒண்ணும் சொல்லமாட்டாங்க.”

“யாரும் உன்ன கேலி பண்ணமாட்டாங்க… எலேய் , எவனாவது இவன் பேசுனத கேலி பண்ணினீங்க காதுல ஓட்டை போட்ருவேன் …..”

பையன் வேறுவழியின்றி பேச்சுப்போட்டிக்குத் தயார் ஆகிவிட்டான்.  அந்த நாளும் வந்தது. சற்று தள்ளியிருக்கும் ஒரு நடுநிலைப்பள்ளியில்தான் போட்டி. பையன் அப்பள்ளியை அடைந்தபோது வாயிலின் அருகே துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் காத்திருந்தார். “டே, இந்தா , அப்பப்ப வாயில போட்டு மெல்லனும் என்ன … பயப்படாம நல்லா அருமையா பேசிட்டு வா “ –பனங்கற்கண்டும், மிளகும் ஒன்றிரண்டாய் இடிக்கப்பட்ட கலவைப் பொட்டலத்தை  பையனின் கையில் வைத்து, அவன் தலையைத் தட்டிவிட்டு அவர் முழங்கால் வரை மடித்துக்கட்டிய வேட்டியை சரிசெய்தவாறே ரப்பர் செருப்புகள் ஒலிக்க தெருவில் இறங்கி நடந்தார். 

தான் பேசும்போது அவர் இருக்கமாட்டார் என்பதே அப்பையனுக்கு அப்போது மகிழ்ச்சியாக இருந்தது. போட்டிகள் ஆரம்பமாகின. பையனின் முறை வந்தது. பையன் ஒலிபெருக்கி இல்லாமலேயே அரங்கம் முழுதும் கேட்கும் விதத்தில் பேசினான். தனக்கு பரிசு கிடைத்துவிடும் என நம்பினான். மூன்று பரிசுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால்  அவன் பெயர் வாசிக்கப்படவில்லை. பையன் தளர்ந்து விட்டான். பரிசு பெறவில்லை என்பதை விட தலைமை ஆசிரியரை எப்படிப் பார்ப்பது என்ற பயம் அவனை பதறச் செய்துகொண்டே இருந்தது. வெள்ளிக் கிழமை மாலை போட்டி என்பதால் அடுத்த இரண்டு நாட்களும் பள்ளி விடுமுறை. இரு நாட்களும் பையனுக்கு உணவு இறங்கவில்லை. திங்களன்று காய்ச்சல் கண்டவன் போல் பள்ளிக்குச் சென்றான். கூடுமானவரை தலைமை ஆசிரியர் கண்களில் படாமல் மறைந்து திரிந்தான். புதன்கிழமை வரை அப்படியே. ஆனால் அவனை அவர் தேடவுமில்லை. பார்க்க நேர்ந்தபோது எதுவும் கேட்கவுமில்லை. பையன் குழப்பமாகி விட்டான். அன்று மாலை எப்படியோ வரவழைத்துக்கொண்ட துணிச்சலுடன் அவர் இருந்த அறை முன்பு போய் நின்றான். மூன்று ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளரிடம் பேசிக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர் இவனைத் திரும்பிப்பார்த்து உள்ளே வருமாறு தலையசைத்தார்.

ஆமை ஓட்டில் கடையப்பட்டதுபோல் இருக்கும் கண்ணாடியின் விளிம்பிற்கு மேல் அவர் கண்கள் உயர்ந்தன. “சார், பரிசு கிடைக்கல “- இதைச் சொல்வதற்குள்  பையனின் குரல் அடைத்து கண்களில் நீர் கோர்த்திருந்தது. தலைமை ஆசிரியர் கண்ணாடியைக் கழற்றினார். 

“டே, போட்டிக்கு போறதுக்கு முன்னே உன்கிட்ட என்ன சொன்னேன் ?”

பையன் திணறினான் – “பரிசு வாங்கனும்னு….”

“கிறுக்குப்பயலே, பரிசு வாங்கிட்டு வரணும்னா சொன்னேன். நல்லா பேசணும்னுதான சொன்னேன். என்ன?”

பையன் சிறிது மீண்டு வந்து “ஆமாம் சார்” என்றான். 

“நீ நல்லா பேசினியா?” –“இங்கே பேசுன மாதிரியே பேசுனேன் சார்”

“பொறகென்ன … நல்லாத்தான் செஞ்சிருக்க.. பரிசு அடுத்த மட்டம் வாங்கிக்கிடுவோம் என்ன ? போ “

பையனுக்கு அப்பாடா என்றிருந்தது. சத்துணவு அமைப்பாளர் விடவில்லை. “சார், ரெண்டு அடியைப் போட்டு விடுங்க..இப்டி கொஞ்சி அனுப்பினா, அடுத்த மட்டமும் இப்படியேதான் வரப்போறான் “

தலைமை ஆசிரியர் குரல் சட்டென மேலெழுந்தது – “மாரி, அதென்ன வெருவாக் கெட்ட பேச்சு?  அவன் மொதத் தடவ மேடை ஏறி பேசுனான். நாம சொன்னத எல்லாம் கேட்டு முழு பேச்சையும் மனப்பாடமாக்கி, குரலை ஏத்தி எறக்கி , கையை அசைச்சு, திக்கல் திணறல் இல்லாம பதினஞ்சே நாள்ல தயாராகி மேடை ஏறிட்டாண்டே. ஏறி பயமில்லாம பேசிட்டும் வந்துருக்கான்…. அதுக்கே அவனுக்கு தனியா பரிசு தரணும்டே. அடுத்த மட்டம் பாக்கியா , அவன் பரிசு வாங்கிட்டு வர்றத ?”

பையன் கண்கள் விரித்து நின்றான். தலைமை ஆசிரியர் சொன்னதைக் கேட்கையில் தான் எதையோ சாதித்திருக்கிறோம் என்று தோன்றியது. என்னவென்று சொல்லத்தெரியவில்லை அவனுக்கு. ஆனால் கடந்த பதினைந்து நாட்களில் தான் செய்தவை  வேறெவராலும் செய்யப்படவில்லை என உணர்ந்தான். இனி வரவிருக்கும் வாய்ப்புகளுக்கும் சேர்த்தேதான் தயாராகியிருக்கிறோம் என அவனுக்கு உறுதியாகத் தோன்றியது. அதன்பின் அவனது பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை தொடர்ந்து வந்த அடுத்த எட்டாண்டுகளில் அவன் கலந்து கொண்ட ஒவ்வொரு பேச்சுப் போட்டியிலும் அவனுக்கு ஒரு பரிசு உறுதியாகக் காத்திருந்தது. அந்த எட்டு ஆண்டுகளில் அவன் கலந்து கொண்ட போட்டிகளில் ஒன்றில் மட்டுமே பரிசு பெறாமல் திரும்பியிருக்கிறான்.  

துவக்கப்பள்ளியில் துவங்கிய பேச்சுக் கலை இன்றுவரை அப்பையனுக்குத் துணையாக வந்து, அவனை பயிற்றுநராக ஆக்கி அவனது வாழ்நாள் அடையாளமாகவும்  மாறி விட்டிருக்கிறது. இதை இங்கு எழுதும் வாய்ப்பு வரை அவனைக் கொண்டுவந்திருக்கிறது. 

அன்று என் தலைமை ஆசிரியர் நல்லகண்ணு அவர்களுக்கு நான் நன்றி என சொல்லவில்லை. ஆனால் என் பயிற்சியின், பேச்சின் பொருட்டு என்னை எவரேனும் பாராட்டும் ஒவ்வொரு கணத்திலும் அவரை எண்ணி நன்றி சொல்கிறேன். 

என் தனிப்பட்ட உணர்வுகளைத் தாண்டி இச்சம்பவத்திலிருந்து நான் அறிந்து கொண்ட விஷயங்கள் ஆர்வமூட்டக்கூடியவை. ஒருவரைப் பாராட்டும் அவசியம் என்ன, எதைப் பாராட்ட வேண்டும், பாராட்டின் வழியே இருவருக்குமிடையே நிகழும் பரிமாற்றங்கள் யாவை  போன்றவற்றை எனக்கு உணர்த்தியது இச்சம்பவம். 

***           ***            ***                                                                                                  இதிலிருந்துதான் நாம் நான்காவது விதிக்குள் வருகிறோம். முதலில் விதியைப் பார்ப்போம். 

“வாடிக்கையாளரின் நோக்கங்களை நேர்மையாகப் பாராட்டுங்கள்”  – ஆங்கிலத்தில் “ Do honestly appreciate the intentions of the client” என சொல்லப்படும்  இவ்விதி எளிமையாகத் தோன்றினாலும் பின்பற்ற அதிகக் கவனமும், பயிற்சியும் தேவைப்படும் விதிமுறை. அதனாலேயே நாம் நான்காவது விதிக்கு துணை விதிகளையும் பார்க்கவிருக்கிக்கிறோம். 

நாம் பொதுவாகவே ஒருவரைப் பாராட்ட கற்றுக் கொடுக்கப்பட்டதில்லை. நமக்கு ஒருவரை எப்படிப் பாராட்ட வேண்டும் என்பது பயிற்றுவிக்கப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது. வாடிக்கையாளர் பாராட்டைப் பார்க்குமுன்னர் நாம் பொதுவாகப் பார்ப்போம். நம்மைச் சுற்றி இருக்கும் நமது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், அலுவலகத் தோழர்கள் என யாரையாவது பாராட்ட வேண்டுமென்றால் என்ன செய்கிறோம்? 

என் பயிற்சி வகுப்பு ஒன்றின் வழியே நான் இதைக் கண்டடைந்து பின்னர் அதை என் பயிற்சிகளின் செய்முறைகளில் ஒன்றாக ஆக்கிக்கொண்டேன்.  பயிற்சி ஒன்றில் ஒரு செயலை ஒருவர் சிறப்பாகச் செய்து முடித்தார். அவரது அணியினரை வெற்றியும் பெறச் செய்தார். அவரது அணியினரை அவரைப் பாராட்டுமாறு கூறியபோது ஆர்வமூட்டும் ஒரு விஷயம் புலப்பட்டது. பாராட்டுவோர் அனைவருமே ஐந்து அல்லது பத்து வினாடிகளுக்கு மேல் போவதில்லை; பாராட்டுதல்களும் உதிரியான ஒற்றைச் சொற்கள் மட்டுமே. “சூப்பர், அருமை, சிறப்பு, கெத்து கலக்கல், செமை” என்பன போன்ற வார்த்தைகளும், “Great, Superb, fantastic, wow, mind boggling, awesome” என்பன போன்ற வார்த்தைகளும்தான் மீள மீள பயன்படுத்தப்பட்டன. நான் உடனே அனைத்து குழுவிலும் சிறப்பாக செயல்பட்டவரை பாராட்டுமாறு அணியினரைச் சொன்னபோது எம்மாற்றமும் இன்றி அதே போல்தான் நடந்தது. அதாவது வியப்பொலிச் சொற்களை சொல்வதையே பெரும்பாலும் நாம் பாராட்டாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். பாராட்டை ஒரு வாக்கியமாகவேனும் அமைத்துப் பாராட்ட வேண்டும் என்ற குறைந்த பட்சம் கூட நிகழவில்லை. 

இதைக் கவனித்ததிலிருந்து தொடர்பு கொள் திறன் குறித்த ஒரு செய்முறையின் தொடர்ச்சியாக என் பயிற்சியின் செய்முறைகளில் ஒன்றை உருவாக்கினேன்.  அதாவது இப்படி ஒற்றைச்சொல் பாராட்டு மொழிகளால் என்ன குழப்பம் நேரும் என்பதை விளக்கும் செயல்முறை. ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அரங்கிற்கு வெளியே அனுப்பப்படுவார்கள். அரங்கினுள் இருப்போரில் ஒருவரை எழுப்பி அவரை நான் குறிப்பிட்ட காரணத்துக்காக பாராட்டுவேன். இப்போது வெளியில் உள்ள ஐந்தில் ஒருவர் உள்ளே வர வேண்டும். அவரிடம் அரங்கில் இருக்கும் ஒருவர் எழுந்து பாராட்டட்ப்பட்டவரின் மீதான என் பாராட்டை மேடையில் வைத்து ஐந்தில் ஒருவருக்கு சொல்ல வேண்டும். அதன்பின் நால்வரில் ஒருவரை உள்ளே அழைத்து ஐந்தில் ஒருவர் அப்பாராட்டுதல்களைச் சொல்ல வேண்டும். அவர் வெளியில் இருக்கும் மூவரில் ஒருவரை அழைத்து தான் கேட்ட பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறே வெளியில் இருக்கும் ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டு முந்தைய நபர் அவரிடம் சொன்ன பாராட்டுகளைக் கேட்டு அடுத்து வரும் நபருக்கு சொல்ல வேண்டும். 

இப்போது இறுதியாக வரும் நபரிடம் முதலில் பாராட்டப்பட்டவர் எதற்காகப் பாராட்டப்பட்டார் என்று கேட்டால் ஒன்று அவர்களுக்குத் தெரியாது அல்லது புதிய காரணம் ஒன்று வந்திருக்கும். மூன்று பேர் வரைதான் விஷயம் சற்றே தாக்குபிடிக்கும். அதன்பின்னர் வருவோருக்கு எதற்காகப் பாராட்டுகிறோம் என்பதே தெரியாது. நாம் ஒருவரைப் பாராட்டுகையில் எதற்காக எனும் காரணத்தைச் சொல்லி பாராட்டுவதே சரியான அணுகுமுறை.

இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தைக் குறித்தும் பேச வேண்டும். பாராட்டுவது எனும் செயல் குறித்து நாம் பொதுவாகக் கொண்டிருக்கும் மனநிலை. அதாவது பாராட்டுவதைக் குறித்த நமது கருத்தோட்டம் எவ்வாறு இருக்கிறது என்பது. பயிற்சி இடைவேளைகளின்போது கேட்கப்படும் கேள்விகளைக் கொண்டும், உரையாடல்களை  வைத்தும் இதனைப் புரிந்து கொள்ளலாம். அதன் அடிப்படையிலான பொதுவான எண்ணங்களை இப்படித் தொகுக்கலாம்.

 1. பாராட்டுவதால் நான் பாராட்டப்பட்டவரை விட குறைவாக எண்ணப்படுவேன்; மேலும் நான் தாழ்வானவன் என அவரால் எண்ணப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
 2. பாராட்டப்படுபவரிடமிருந்து ஒரு பலனைப் பெறுவதற்காகவே பாராட்டுகள் செய்யப்படுகின்றன. 
 3.  ஒருவரைப் பாராட்டினால் நான் பலவீனனாகக் கருதப்படுவேன்
 4. சில நேரங்களில் பாராட்டுதல்கள் எரிச்சல் ஊட்டுபவையாக இருக்கும்
 5. சில நேரங்களில் பாராட்டு கிடைக்காமை உளச்சோர்வினை அளிக்கும்

இந்தத் தொகுப்பிலுள்ளவை அதற்கான சூழல்களோடும், நிகழ்வுகளோடும் இணைத்தே புரிந்து கொள்ளப்பட வேண்டியவை. எனினும், அனைத்தையும் கருத்தில் கொண்டு அவற்றுக்கிடையேயான பொதுவான தன்மைகளை கணக்கில் எடுத்தே நாம் தொடர்கிறோம். 

பாராட்டு எப்படி இருக்க வேண்டும்? 

ஒருவரைப் பாராட்டும்போது அவருக்குள் என்ன நிகழ்கிறது என்பது பாராட்டுவோருக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். நாம் அனைவருமே பாராட்டை விரும்புபவர்கள்தான். என் தலைமை ஆசிரியர் நல்லகண்ணு அவர்கள் என்னைப் பாராட்டியதை எண்ணிப் பார்க்கிறேன். அவர் நான் சிறப்பாகப் பேசினேன் என்பதை விட அதிகம் முக்கியத்துவம் கொடுத்து பாராட்டிய இடங்களைக் கவனியுங்கள். போட்டிக்கான எனது தயாரிப்புகள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டுச் சொல்லி, போட்டியை நான் சந்தித்த விதம் குறித்து அவர் பாராட்டினார். ஆசிரியர் நல்லகண்ணு அவர்கள் என்னைக் குறித்து சொல்வதைக் கேட்ட கணத்தில் எனக்குள் எழுந்தது ஒரு பெருமிதம். அன்று எங்கள் பள்ளியிலேயே சக்தி வாய்ந்த ஒருவர் என் முயற்சிகளைக் கவனித்திருக்கிறார், அதற்கான என் சிரமங்களை கவனத்தில் கொண்டிருக்கிறார், அவற்றை நான் தாண்டி வந்ததை உணர்ந்திருக்கிறார், அவ்வாறு நான் வந்ததில் அவரும் மகிழ்வடைந்திருக்கிறார் என்பதுதான் அன்று எனக்கு பெரும் ஊக்கத்தை அளித்திருக்கும் என இன்று புரிந்து கொள்ள முடிகிறது. மாறாக, ஒருவேளை நான் பரிசு பெற்று அதை அவர்  பாராட்டி இருந்திருந்தால் நான் அதோடு இவ்விஷயத்தை முடித்துக் கொண்டிருக்கும் வாய்ப்புதான் அன்று அதிகமும் இருந்தது. 

ஏனெனில் பொதுவாக ஒரு செயலின் விளைவுகளே நேரடியான பாராட்டைப் பெறும். பாராட்டிற்கான காரணியாக முன்னெழுந்து நிற்பது செயலின் விளைவே. நீங்கள் ஒரு வீடு வாங்கி விட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். வரும் பாராட்டுதல்களைக் கவனியுங்கள். வீடு குறித்தே பெரும்பாலான பாராட்டுதல்களும் இருக்கும். ஆனால் அதனைச் சாதித்ததில் நம் முயற்சிகள் குறித்த பாராட்டே நம் மனதில் நிற்கும். ஆகவே பாராட்டுதல் என்பது ஒருவர் அடைந்த வெற்றியை மட்டும் சொல்வதாக அல்லாமல் அவ்வெற்றிக்கான அவரது முயற்சிகளையும், உழைப்பையும் குறிப்பிடுவதாக அமைய வேண்டும். நாம் அவ்வாறு குறிப்பிட்டுக் கூறி பாராட்டும்போதுதான் பாராட்டப்படுபவர் தன் முயற்சியும், உழைப்பும் நம்மால் மதிக்கப்படுவதாக உணர்கிறார். கவனியுங்கள்- வெற்றி குறித்த பாராட்டல்ல ஒருவர் மனதில் நிற்பது, அவ்வெற்றிக்கு அவர் அளித்திட்ட உழைப்பை அங்கீகரிக்கும் சொற்களே அவரை ஊக்கம் கொள்ள வைப்பவை. ஆக ஒருவரை அவரது செயலின் விளைவுகளை நோக்கிப் பாராட்டுவதை விட அவரது செயலூக்கத்திற்கான காரணிகளைக் குறித்து , அதைச் சாதித்த அவரது உழைப்பு குறித்த புரிதல்களைக் கொண்டு பாராட்டுதல் சிறப்பு. 

அவ்வாறு குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டுமென்றால் அவ்வெற்றி குறித்து சிறிது ஆழமாக நாம் சிந்தித்திருக்க வேண்டும். அச்செயல் மற்றும் அதற்கான சூழல்களைக் குறித்து நம் அவதானிப்பு நிகழ்ந்திருக்க வேண்டும். இவற்றைச் செய்வதற்கு பயிற்சியும், கவனமும் தேவை. இவ்வகைப் பயிற்சியை நாம் மேற்கொள்ளவில்லை எனில் நம்மால் இயல்பாகத் தேர்ந்தெடுக்கப்படும் பாராட்டு முறையே ஆகிவந்த “ வியப்பொலி” பாராட்டுகள். ஒற்றைச் சொல் பாராட்டுகள். இந்த ஒற்றைச்சொல் வியப்பொலிப் பாராட்டுகள்தான் கேட்பவரை விரைவில் சலிப்பில் ஆழ்த்தி விடும். 

ஒருவரைப் பாராட்டுவதால் நாம் அவரை விடத் தாழ்ந்தவரா ? உண்மை என்னவெனில் நாம் பாராட்டும்போது உயர்கிறோம் என்பதே. ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒன்பது வயது மாணவனை அவனது திறன், முயற்சி குறித்து பாராட்டியதால்  அவர் அவனை விட தாழ்ந்தவராக ஆகி விட்டாரா ? மாறாக, இன்றுவரை அவனது மதிப்பில் உயர்ந்த இடத்தில், அவன் என்றும் நன்றி சொல்லும் இடத்தில் நிற்கிறார். மெய்யாகவே ஒருவரை நமக்கு இணை வைத்து ஒப்புமை செய்துகொண்டே இருக்கும்போதுதான் அவரைப்  பாராட்ட நமக்கு தயக்கம் வரும். நம் பாராட்டின் மூலம் அவரை நாமே நம்மை விடச் சிறந்தவர் என்று ஏற்றுக்கொண்டதாக பிறர் கருதி விடுவார்களோ எனும் பயம். ஒருவரைப் பாராட்ட நமக்கு தயக்கம் தோன்றுகிறதெனில் நாம் பயம், நம் மீது ஐயம் கொண்டிருக்கிறோம் என்பதே மெய்.  ஒப்பிட்டுப்பார்த்து உளம் சுருங்குவதே பாராட்டத் தயக்கம் எனும் உணர்வாக மாறுகிறது. 

இத்தனைக்கும் பிறகு சில சுவாரசியமான அனுபவ அடிப்படை விஷயங்களை துணைவிதிகளாகச்  சொல்ல வேண்டியிருக்கிறது.

அதில் முதலாவது துணை விதி –“செல்லத்தட்டு பாராட்டுகளை தவிர்க்கவும்” 

“Do not do Manager’s Pat – என ஆங்கிலத்தில் சொல்லப்படும் இவ்விதி சுவாரசியமானது. இவ்வகைப் பாராட்டுகள் உளச் சோர்வினை அளிக்கக்கூடியவை.

ஒரு அலுவலகத்தின் விற்பனைப்பிரிவில் நீங்கள் பணிசெய்கிறீர்கள் எனக் கொள்வோம். நீங்கள்  பல நாட்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த ஒரு விற்பனையை முடித்து விட்டீர்கள். விற்பனை ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது. பெரும்தொகைக்கான விற்பனை ஒப்பந்தம் அது. அலுவலகத்துக்கு தகவல் அனுப்பி விட்டீர்கள். ஒப்பந்தத்தை எடுத்துக் கொண்டு நீங்கள் தரையில் கால் படாமல் அலுவலகம் வருகிறீர்கள். உங்கள் மேலாளர் அறைக்குள்ளிருந்து வெளியே வருகிறார். ஒரு புன்சிரிப்புடன் “ அருமை, சிறப்பான செயல்” என்று சொல்லி கைகொடுக்கிறார். “கையோடு ஒப்பந்தத்தை செயல் பிரிவுக்கு அனுப்பி தொடர் நடவடிக்கைகளில் தாமதமின்றி ஈடுபடச் சொல்லுங்கள். அப்படியே அடுத்த வாரத்திலும் இன்னொரு ஒப்பந்தத்தை உறுதி செய்யப்பாருங்கள். ஏனெனில் மாத இலக்கை முடித்து விட்டோம் என இருக்க வேண்டாம். ஆண்டு இலக்கை நோக்கி செயல்படுங்கள்… நல்ல வேலை செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் “ என்று தோளில் ஒரு தட்டு தட்டிவிட்டு தாண்டிச் செல்கிறார்.

உங்களுக்கு இப்போது எப்படி இருக்கும் ?  

Series Navigation<< ஆட்டத்தின் ஐந்து விதிகள் – மூன்றாம் விதிஆட்டத்தின் ஐந்து விதிகள் – நான்காம் விதி >>

One Reply to “ஆட்டத்தின் ஐந்து விதிகள்- நான்காவது விதி”

 1. சொல்வனம் ஆசிரியர் குழுவிற்கு
  வணக்கம். நான் சொல்வனம் இதழின் வாசகன். அன்றாட வாழ்வின் அலைக்கழிப்புகளிலிருந்து அறிதலின் பயன், மற்றும் உணர்தலின் இன்பம் ஆகியவை நோக்கி சொல்வனம் இதழுக்குள் வருவதுண்டு. அத்தகைய சூழல்களில் எனக்கு சில அறிய கட்டுரைகள் ஒரு பெரிய திறப்பாக அமைவது என்பது வழக்கம்.
  இந்த முறை வருகைபுரிந்தபோது எனக்கு திறனாய்வாளறும் திறன் மேம்பாட்டு பயிற்றுனருமாகிய திரு. ஜா. ராஜகோபாலன் அவர்களுடைய கட்டுரைகள் காத்திருந்தன.
  இந்தக்கட்டுரைகளுக்கென்று சில சாதக அம்சங்கள் இருக்கின்றன. 1. கட்டுரையாளருக்கு சில சுயமுன்னேற்ற நூலாசிரியர்களுக்கிருக்கும் மிகை நம்பிக்கை இல்லை. அவரும் வாழ்வெனும் முடிவற்ற கல்வியின் மாணவராக இருக்கிறார். 2. இந்தக் கட்டுரைகள் நூல்களிலிருந்து அல்ல கள அனுபவங்களிலிருந்து எழுகின்றன. 3.எல்லாவற்றிற்கும் மேலாக இவருக்கு அமைந்திருக்கும் தீவிர இலக்கிய வாசிப்பு அனுபவம் வாழ்க்கையின் சிக்கல்களை கூர்ந்து நோக்க இவருக்கு உதவுகிறது. மேலும் தீவிர இலக்கிய வாசிப்புப் பயிற்சி கட்டுரைகளின் வடிவமைப்பில் உதவுகிறது. மேகநடை போன்ற சொல்லாட்சிகள், ஒரு சிறுகதையைப் போலவே திகழும் ஆசிரியர் நல்லகண்ணு அவர்கள் குறித்த விளக்கங்கள் ராஜகோபாலனின் எழுத்துகளை பொதுவான சுய முன்னேற்ற எழுத்துகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.
  ஐந்தாவது விதியை எதிர்கொள்ளும் முன்பு இந்தகட்டுரைகளில் இடம்பெற்றிருக்கும் நான்கு விதிகளை இவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன்.
  1. வார்த்தைகளுக்கு அல்ல அவற்றின் பின்னிருந்து அவற்றை இயக்கும் எண்ணங்களுக்கே மறுவினையாற்றுக.
  2. அன்பு மகனோ, ஆருயிர் நண்பனோ அறிவுறைகளை அவர்கள் கேட்டால்தான் உரைக்கவேண்டும். நாம் செய்யவேண்டியதெல்லாம் வழிப்போக்கர்களுக்காக அன்னத்துடன் காத்திருக்கும் அறவோன் போல அவர்கள் நம்மிடம் அறிவுரை கேட்கும் சூழலை ஏற்படுத்திவிட்டு காத்திருக்கவேண்டியதுதான்.
  3. முடிவுகளை விமரிசிக்கலாம், முடிவெடுத்தவரை சிதைத்துவிடலாகாது.
  4. செயலின் விளைவை விட செயலாற்றியவரின் திறம், செயலாற்றப்பட்ட சூழல் இவற்றைப் பொருட்படுத்தி விரிவாக பாராட்டுக.
  a. நாம் ஒரு புதிய பொருளியல், சமூகச் சூழல்களில் வாழ்கிறோம். கட்டுரையாளரே தம் கட்டுரை ஒன்றில் சொல்வதுபோல நமக்கு சிக்கலே எவற்றைத் தெரிந்தெடுப்பது, எவ்வாறு தெரிந்தெடுப்பது என்பதில் தான் உள்ளது. இத்தகைய சூழலில் நுகர்வோர் திறம், படைப்பாற்றலை தக்கவைத்தல் முதலிய களங்களில் இந்தியச் சூழலை கருத்தில்கொண்ட ஆக்கப் பூர்வமான எழுத்துகளின் தேவை இன்று மிகுதியாகவே இருக்கிறது. சொல்வனம் போன்ற இணைய இதழ்கள் இவற்றிற்கு இப்போது போலவே எப்போதும் களம் அமைக்கலாம்.
  மேலும் ஒரு வேண்டுகோள்.
  சொல்வனம் இதழின் அமைப்பு, அது செயல்புரியும் விதம் முதலியவை பார்வைத்திறன் குறைந்த எங்களைப்போன்ற மாற்றுத் திறனாளர்கள் பயன்பெரும் வண்ணமே உள்ளன. இணைய இதழின் வடிவமைப்பில், எழுத்துருஅளவு முதலிய தொழில் நுட்ப மாற்றங்களை செய்யும் நிலையில் அவை N V D A என்ற திறந்த நிலை திரை வாசிப்பானுக்கும் உகந்தவாறு அமையும் எனில் எங்களைப் போன்ற பார்வை சவால் கொண்ட வாசகர்கள் பெரிதும் பயன்பெருவோம் என்பதை ஆசிரியர் குழுவின் கனிவான பரிசீலனைக்கு வைக்கிறேன்.
  ஆசிரியர் ஜா. ராஜகோபாலன் வாயிலாக புதிய துறையில் புதிய எழுத்துகள் தொடர்ந்து பொலிக!
  அவை சொல்வனம் வாயிலாக தொடர்ந்து பயன் தருக!
  நன்றி,
  என்றென்றும் அன்புடன், கு. பத்மநாபன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.