சிவா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயர் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களின் இணையதளம் மூலம் அறிமுகமானது. அவரது ஒரிரு கதைகளை இணைய இதழ்களில் முன்பே வாசித்ததும் உண்டு.
2019-ம் ஆண்டின் மே மாதத்தில் ஜெயமோகன் அவர்களின் தளத்தில், “லண்டன் தமிழ் இலக்கிய குழுமம்” துவக்கவிழா குறித்த அழைப்பிதழைக் கண்டேன். அதிலே, ராய் மாக்ஸம், அனோஜன், தன்ராஜ் மணி, ரா.கிரிதரன், பிரபு ராம், சிறில் அலெக்ஸ் ஆகியோரின் பெயர்களோடு நண்பர் சிவா’வின் பெயரும், அவரின் சிறுகதை தொகுப்பான “வெளிச்சமும் வெயிலும்” பெயரும் இடம்பெற்றிருந்தன.

அந்த இலக்கிய குழும துவக்கவிழாவிற்கு நானும் சென்று, அவர்களின் குழுமத்தில் இணைந்தேன். அந்த விழாவிலே இந்த சிறுகதை தொகுப்பு குறித்து சிறப்புரை இடம்பெற்றது, மட்டுமல்லாது அங்கே இந்த தொகுப்பு விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தது. இப்படித்தான், இந்த நூல் என்னிடம் வந்தது.
இந்த தொகுப்பில் மொத்தம் பதினொரு கதைகள். சிலவற்றை முன்பே வாசித்திருந்தாலும், எந்த எதிர்பார்ப்பையும் மனதில் இருத்தாமல் முதல் பக்கத்திலிருந்தே வாசிக்கத்தொடங்கினேன், ஒவ்வொரு இரவும் குறைந்தது மூன்று கதைகள் என்று மூன்று இரவுகளில் இந்த தொகுப்பை முடித்தேன். இதையெல்லாம் ஏன் சொல்லவேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். தலைப்பிலே குறிப்பிட்டதுபோல, இது ஒரு வாசிப்பனுபவ கட்டுரை. விமர்சன உரையோ, மதிப்புரையோ அல்ல, ஆகவே இதைச் சொல்லவேண்டுமென தோன்றியது, அவ்வளவே. மற்றபடி, சிவா அண்ணனை லேசாக பகடி செய்ய முயல்வதும், தீவிர நடையில்லாது சற்றே இலகுவான தொனியில் எழுதியிருப்பதும் எனக்கு நானே கொடுத்துக்கொண்ட ஒரு சின்ன லிபர்டி. பிழை பொறுத்தருள்க.
மற்றும், ஜெயமோகன் அவர்களின் முன்னுரையும், குழும துவக்க விழாவில் இடம்பெற்ற சிறப்புரைகளையும் தவிர, இந்த தொகுப்பு குறித்த வேறெந்த உரைகளையும் படிக்கவோ கேட்கவோ இல்லை. இந்த உரையில் இடம்பெரும் கருத்துகள் மற்றவர்கள் சொல்வதொடு ஒத்துப்போனால், நீங்களும் என் தோழரே என்று தோளொடு அணைத்துக்கொள்கிறேன். தொகுப்பை முழுதும் படித்து முடித்ததும், கண்மூடி யோசிக்கையில் எப்படி உணர்ந்தேன் மற்றும் அது என்னவாக திரண்டது என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். .
முதலாவது, கதைகளின் கட்டமைப்பு. நடக்கும் நிகழ்வுகளை ஒரு வீடியோ காமிராவில் அப்படியே பதிந்து எடிட் ஏதும் செய்யாமல், அப்படியே ப்ளே-பேக் (playback) செய்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு உணர்வுதான் முதலில் வந்தது – பெரும்பாலான கதைகள் அதன் போக்கில் அப்படியே எழுதப்பட்டிருக்கின்றன, “நான் என்ன சொல்றன்னா?” என்று ஆசிரியர் தலைநீட்டி பாடம் எதுவும் எடுப்பதில்லை. அது பிடித்திருந்தது. சில சமயங்களில் அந்த தன்னியல்பான போக்கே கதையின் மையத்திலிருந்து கதை விலகிப்போகிறதோ என்ற உணர்வைத்தருகிறது – சில திரைப்படங்களில் அப்படி ஒரு உத்தியை கையாள்வார்கள், சிவா தெரிந்தே அந்த உத்தியை எழுத்தில் முயன்றாரா என்று தெரியவில்லை.
இரண்டாவதாக, பெரும்பாலான கதைகள் நடக்கும் இடமும் மற்றும் காலமும். இடம் – ஐரோப்பா, காலம் – தகவல் தொழிற்நுட்பம் வளர்ந்த காலம். அயல் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள், அவர்களுக்கிடையேயான நிகழ்வுகள், ஒற்றுமைகள், வேற்றுமைகள், கருத்துகள், கருத்து மாறுபாடுகள் மற்றும் அவர்களுக்கும் அந்நாட்டவர்களுக்குமான பண்பாட்டு முரண்கள், அந்த பண்பாட்டு முரண்களால் மாறியவை, மாறாதவை பற்றிய வண்ணத்தீற்றல்தான் இந்த சிறுகதை தொகுப்பு.
மூன்றாவதாக, பெரும்பாலான கதைகளின் மையம். இந்த தொகுப்பின் கதைகளின் மையங்களை மட்டும் தெரிவுசெய்து ஒரு வட்ட வரைபடம் (Pie-Chart) வரைந்தால், அந்த வட்டத்தில் பெரும்பான்மை இடத்தை பிடிக்கும் கரு – ப்ரிஜுடிஸ் (prejudice). எப்படி, எந்த தருணங்களில் மனிதர்களிடமிருந்து இந்த குணம், தெரிந்தோ அல்லது தெரியாமலோ, மனதிலிருந்து வெளிப்பட்டுவிடுகிறது என்பதை பதினொன்றில் நான்கு கதைகள் கோடிட்டு காட்டுகின்றன. சிவா அண்ணன், அதை எப்படிச் சொல்கிறார் என்ற கூறுமுறையும் இதில் கவனிக்கத்தக்கது. ‘ஏன் மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்?’ என்பதாக இல்லாமல், நாம் இப்படித்தான் இருக்கிறோம் என்பதைக் கதைபோகிற போக்கில் சொல்லிச்செல்கிறார், ஆனால் அதை நாம் கவனிக்குமாறும் எழுதிவிடுகிறார். வெளிச்சமும் வெயிலும் கதையில் வரும் அப்பா சொல்லும் “கீழப்பாவூர் பயலுககிட்ட பாத்து நடந்துக்கோ”, அதே கதையில் மார்த்தா சொல்லும் “bloody convicts”, யாவரும் கேளிர் கதையில் டேனி என்கிற தனகோபால், தாராபுரம் பழனிச்சாமியிடம் கேட்கும் அலோசியஸ் பள்ளிக்கு எதிரில் உள்ள தெருவில் உள்ள குடியிருப்பு பற்றிய கேள்வி, வொண்டர்ஃபுல் வேல்டு கதையில் வரும் செல்வேந்திரன் சொல்லும் “அவிங்க இன்னும் மங்கியல்லெ, மாறலல்லே,” குணமும் குற்றமும் குடிமையும் கதையில் வரும் அப்பா சொல்லும் “அழகு மலை பசங்க கூட இன்னி உன்ன பார்த்தேன்” என்பதும் (ஆனால், இந்த கதையில் அதே தந்தையிடம் பின்னால் வரும் மாற்றமும் சொல்லப்பட்டிருக்கிறது) மேற்சொன்ன அனைத்து கதைகளும் அடிக்கோடிட்டுக் காட்டுவது மனிதக் கூட்டுமனத்தின் ஒற்றை வெளிப்பாடு, கடந்தகாலத்தின் எச்சங்களிலிருந்தும், நினைவுகளிலிருந்தும் எதைத் தேக்கி, எதை எப்படி எங்கே வெளிப்படுத்துகிறது என்பதை.
இன்னொன்றை பற்றியும், அடிக்கடி கவலைப்படுகிறார் – ஏன் மனிதர்கள் முழங்கை மூட்டு சொறசொறப்பிற்கு தேங்காய் எண்ணெய் தேய்ப்பதில்லையென – வெகுளாமை கதையில் வரும் பெரியசாமி, பரூலின் முழங்கை முட்டுகளில் இருக்கும் வெள்ளையாய் ஏதோ படரலை பார்த்து, “அங்கேயெல்லாம் எண்ணெய் தேய்க்காதுபோல இந்தப்பெண்…”, என்று சூழலுக்கு சம்பந்தமே இல்லாமல் வருந்துவதும், யாவரும் கேளிர் கதையில் டேனி, சட்டைக்கையை சுருட்டும்பொது முழங்கை மூட்டு பறபறவென வெளிறி இருப்பதுகண்டு “எண்ணெய் தேய்க்காமல் போனோமே…” என்று வருந்துவதும், சிவா’விற்கு, தேங்காய் எண்ணெயின் மீதுள்ள மோகமும் மற்றும் அதன் மகத்துவத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது!
நான்காவதாக, அக அவதானிப்புகள் மற்றும் நகைச்சுவை. அக அவதானிப்புகளை அனாயாசமாக ஆக எழுதிச்செல்கிறார், எல்லாக் கதைகளிலும் இதனை நாம் இயல்பாக காண்கிறோம். இதனை சொல்லாமல் விடுவது நல்லதென நினைத்தேன், ஏனென்றால் இதைச்சொல்லப்போய், அதுவே அவருக்கு பின்னாளில் எதிர்பார்ப்பின் சுமையாக ஆகிவிடக்கூடாது என்பதால். பெரும்பாலான கதைகளில் கதை சொல்லி எனக்கு சிவா’வையே ஞாபகப்படுத்தினார், அவரது நகைச்சுவை உணர்வு தெரிந்ததால் அப்படி இருக்கலாம். அவரை நேரடியாய் தெரியாதவர்களுக்கு இது தெரியவாய்ப்பில்லை. அவரது இயல்பான அந்த நகைச்சுவை பல இடங்களில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது, கதாபாத்திரத்தை தாண்டி ஆசிரியரே வெளியே வந்து ஒன்-லைனர் அடித்துவிட்டு செல்கிறார். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் – ஸ்குரில் மற்றும் யாகாவாராயினும் நாகாக்க கதைகள்.
ஐந்தாவது – கதைகளின் தலைப்புகள். ஐந்து தலைப்புகள் சங்ககால பாடல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. ஆகவே, கதை எதைப்பற்றியது என்பதை நமக்கு முன்னறிவிக்கின்றன, அது கதைக்கு உதவினாலும் வாசிப்பனுவதிற்கு எனக்கொரு தடையாகவே பட்டது.
இறுதியாக, எழுத்து நடை – சுபா, சுஜாதா, அசோகமித்திரன் ஆகியோரை ஒரு தொகுப்பில் படிப்பதுபோலவும், சிலசமயம் ஒரே கதையில் படிப்பதுபோலவும் தோன்றியது. இந்த கதைகள் சில வருட காலத்தில் எழுதப்பட்டன என்பதாலும், ஆசிரியரின் முதல் தொகுப்பு என்பதாலும் ஒருவாறாக மனம் அதற்கு பழகிவிட்டது. ஆனாலும், இந்தக் கதைகளை கால வரிசைப்படி தொகுத்திருந்தால், வாசகனுக்கு ஒரு காலக்கோட்டுச் சித்திரம் கிடைத்திருக்கும், கூடவே ஆசிரியரின் வளர்ச்சி பற்றியும்.
மேற்சொன்ன விடயங்கள்தான், ஒட்டுமொத்தமாக எனக்கு திரண்ட எண்ணங்கள். தொகுப்பைப் படித்துமுடித்த, அந்த வார இறுதியில் நண்பனொருவன் அழைத்திருந்தான். இலக்கிய வாசகன்தான், க்ளாசிக் நாவல்களின் தீவிர வாசகன். ஐடி சேல்ஸ் கன்சல்டண்டாக பணியாற்றிவிட்டு, இப்போது ஆட்டுப்பண்ணை வைத்திருக்கிறான். எழுத்தாளரே வெளியிடும் கவிதை தொகுப்புகள் மற்றும் சிறுகதை தொகுப்புகள் மீது ஆழமான அவநம்பிக்கை அவனுக்குண்டு. அவனது மொழியில் சொன்னால், அது ஒரு பண்டல் டீல் அல்லது உருப்படிகளை தேத்துவது.
பேசிக்கொண்டிருக்கையில், “ எதாவது கத பொஸ்தவம் உண்டா?” என்றான்
“ஆமா சிறுகத தொகுப்பு, மொத்தம் பதினோரு கத… ஈரோட்டுகாரருதா… அதில பாத்தீன்னா… “
“செரி செரி, பூராக் கதயுஞ்சொல்லவேண்டா… ஒரு மூணு உருப்படி சொல்லு. நா படிச்சு பாத்துக்கரென்” என்றான்.
அவனுக்கு சொன்ன மூன்று கதைகளை இங்கே சொல்லி இதை நிறைவுசெய்கிறேன்.
மறவோம் – இந்த தொகுப்பின் மறக்க முடியாத கதை. மிகச்சிறப்பாக அமைந்த கதையும் கூட. இரண்டு உலகப்போர்களை பார்த்த வீரர்களின் குடும்பங்கள் வாழும் ஊர். அதில் வசிக்கும் ஒரு வயதானவர் மற்றும் ஒரு பள்ளி இறுதியாண்டு படிக்கும் மாணவன் அவர்களுக்கிடையேயான ஒரு உரையாடல். போர்க்கள கவிஞர்கள், கவிதைகள், ஒவியங்கள், பல போர்க்கால குறிப்புகள், போர்க்காலத்தில் எழுதப்பட்ட கடிதங்கள், நினைவுஸ்தூபிகள், போன்றவை இந்த கதையின் நம்பகத்தன்மையையும், கட்டுமானத்தையும் பலப்படுத்துகின்றன. இந்த கதையை படித்து முடிக்கும்போது, ஒரு போரின் ஆயத்த காலத்திலிருந்து போருக்கு பின்னான காலகட்டம் வரையிலான ஒரு முழுமையான சித்திரம் நமக்கு கிடைக்கிறது. போரின் பெருமைகளும், அபத்தங்களும், இரண்டுமே நம் கண்முன்னே தோன்றி, தோன்றி மறைகின்றன. War to end all wars! என்னே நகைமுரண்! எல்லா போர்களுக்கும் முன்னான அறைகூவல். அதே அறைகூவல் இன்றும் கேட்டுக்கொண்டே இருக்கிறது, இன்றும் போர்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்த கதையின் நிகழ்வுகள் இன்றும் நடந்துகொண்டிருக்கின்றன என்பதே, இந்த கதையை இன்னும் முக்கியமாக்குகிறது. மற்றும், இந்த நவீன உலகின் அடிப்படை இயங்குவிதிகளின் மேல் மிகப்பெரிய ஐயத்தை எழுப்புகிறது. இதைப்போன்ற கதைகளை எழுதத்தான் நமக்கு சிவா வேண்டும். நாகாக்க, வெகுளாமை, மணியம் செல்வம் போன்ற கதைகளை எழுத நிறைய பேர் இருக்கிறார்கள்.
வாட் எ வொண்டர்ஃபுல் வேல்ட் – இன்னொரு முக்கியமான கதை. முன்பே சொன்ன அந்த prejudice or unjust மிக இயல்பாக வெளிப்படும் கதை. முதல் இரண்டரை பக்கம் இது ஏதொ தந்தைக்கும் மகனுக்குமான தலைமுறை இடைவெளிப்பற்றிய அல்லது பண்பாட்டு மோதல் கதையோ என்றுதான் தோன்றியது. பள்ளி மைதானத்திலிருந்துதான் எனக்குக் கதை தொடங்குகிறது. அது மிகவும் பிரபலமான, பல்லாண்டு பழமையான பள்ளி, இளவேனிற்கால விழா கொண்டாட்ட தினம் அன்று. அதற்காகத்தான் தந்தையும் ஏழாம் வகுப்பு படிக்கும் மகனும் வந்திருக்கிறார்கள். ஆங்கிலேய மாணவர்களோடு, இங்கிலாந்தில் இரண்டாம் மூன்றாம் தலைமுறையாக வாழும் பல இனக்குழுக்களை சேர்ந்தவர்களும் படிக்கும் பள்ளியது. கதையில் நான்கு தந்தையர் மற்றும் அவர்களின் வாரிசுகள் வருகிறார்கள் – இங்கிலாந்துக்காரர், தமிழர், ஈழ தமிழர், ஆப்பிரிக்கர். இங்கிலாந்துக்காரர் ஒரு உரையாடலின் இறுதியாக, நல்ல வெயில்! உங்களுக்கு உகந்த தினம் என கண்ணடித்துவிட்டுப் போகிறார். அதைக் கேட்டுக்கொண்டே கதைக்குள் அறிமுகமாகும் ஈழ தந்தை, பாருங்கள், நாமும் இங்கு வந்து பல்லாண்டு ஆனாலும், இவர்களுக்கு நல்ல வெயில் தினமென்றால், நமக்கான தினமாகத்தான் தெரிகிறது என்று தமிழ் தந்தையிடம் குறைபட்டுக்கொள்கிறார். விழாவின் பகுதியாக, கால்பந்தாட்டம் நடக்கிறது அதிலே ஆப்பிரிக்க இன சிறுவன் தங்களது சிறுவர்களை விட சிறப்பாகவும், சுறுசுறுப்போடும் விளையாடுவது கண்டு வியக்கிறார் தமிழ் தந்தை, “அவங்க இன்னும் மங்கியல்லெ, இன்னும் மாறலல்லே” என்று இயல்பாக சொல்கிறார் ஈழத் தந்தை, அதைக்கேட்டு சத்தமாக சிரிப்பதாக கதையை முடித்திருப்பார். என்னே ஒரு நகை முரண்! ஒரு அபத்த நகைச்சுவை நாடகம் பார்ப்பதுபோல இருந்தது. இந்த கதையில் வரும் உரையாடல்களும் சிறப்பாக கவனமாக எழுதப்பட்டிருக்கின்றன. வெகு இயல்பாக அமைந்த ஒரு கதை.
யாவரும் கேளிர் – முப்பது வருடங்களுக்கு முன் பிரிட்டன் வந்து செட்டிலான டேனி என்கிற தனகோபாலும், மூன்றுமாதகாலப் பயணமாக பெண் வீட்டிற்கு வந்திருக்கும் தாராபுரம் பழனிச்சாமியும் ஒரு ரயில் பயணத்தில் எதேச்சையாகச் சந்தித்து உரையாடும் கதை. உரையாடலின் வழியே, முப்பது வருடத்திற்கு முந்தைய பிரிட்டன், டேனி சந்தித்த இனவாத பிரச்சினைகள், இன்று ப்ரிட்டன் வந்து சேர்ந்திருக்கும் இடம் என்று இந்த கதையின் முதற்பகுதி சிறப்பாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் பகுதி, டேனியும் பழனிச்சாமியும் வரவேண்டிய இடம் சேர்ந்து, அவரவர் வேலையைப்பார்க்க போகிறார்கள். டேனி தன் மகன் ஆனந்தின் காதலியை “காண்பதற்காக”, சந்திப்பதற்காக அல்ல, வந்திருக்கிறார். தான் ஆனந்தின் அப்பா என்று சொல்லாது, மூன்றாம் மனிதராய் பேசி, அவளது பூர்வீக ஊர் என்னவென்று அறிந்துகொள்ள முற்படுகிறார். இத்தனைக்கும் அந்த பெண் இரண்டாம் தலைமுறையாக ப்ரிட்டனில் வசிப்பபவர். அந்த பெண் தனது தந்தைக்கு பூர்வீகம் தாராபுரம் பக்கம் என்றும், தனது பாட்டி, கஸின்ஸ் எல்லாம் அங்கே இருப்பதாகவும், இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை அவர்களை பார்க்க செல்வது வழக்கமென்றும் சொல்கிறார். தாராபுரம் என்ற பெயரைக்கேட்டதும், டேனிக்கு பழனிச்சாமியின் ஞாபகம் வருகிறது. பெண்ணிடம் தாராபுரத்தில் எங்கேயென மேலும் விசாரிக்கிறார், தெரு இருக்கும் இடத்தின் அடையாளத்தை தெரிந்துகொள்கிறார். விவரங்களைச் சொல்லி பழனிச்சாமியிடம் கேட்கிறார், பழனிச்சாமியின் பதிலால் துணுக்குறுகிறார். தன் மகனுக்கு என்ன பதிலை சொல்வதென்று முடிவுசெய்துவிட்டார் என்று ஆசிரியர் கதையை முடிக்கிறார். பேரைக்கேட்டு, ஊரைக்கேட்டு, தெருவைக் கேட்கும் அதே கயமைத்தனம்தான் இங்கேயும் வெளிப்படுகிறது. டேனியின் மனவோட்டமாக வரும் இறுதி வரிகளில், அவர் ப்ரிட்டனின் டேனியல்ல, “தங்களது வளவிற்குள் எல்லாரையும் வரவிடாத” எனும் அதே பழைய தனகோபால் தான் என்பதை ஆசிரியர் சூசகமாகச் சொல்லிச்செல்கிறார். இந்தக் கதையை முடிக்கும்போது பிரபலமான ஒரு வரி எனக்கு ஞாபகம் வந்தது, “நினைவில் காடுள்ள மிருகத்தைப் பழக்க முடியாது”. ஆனால், மனிதர்கள் எளிதில் பழகிவிடுவார்கள், ஆனால் உள்ளுள்ள காட்டை அவர்களாக தீயிட்டு கொளுத்தினாலொழிய, அந்த காட்டை யாராலும் அழிக்கமுடியாது.
முதல் தொகுப்பிலேயே மூன்று கதைகளுக்கு மேல் நிற்கின்றன என்பதே இந்த தொகுப்பின் வெற்றிதான். ஆனாலும், இதன் மறுபதிப்பில் கருணையின்றி சில கதைகளை வெட்டி வீசிவிட்டு, மற்ற கதைகளையும் வெட்டி, ஒட்டி, அச்சுப்பிழைகளை சரிசெய்து, செப்பனிட்டால், இந்த தொகுப்பு இன்னும் சிறந்த வாசிப்பனுபவத்தை கொடுக்கும் திறன்மிக்கதுதான். ***