ஸீபால்டின் ‘த ரிங்க்ஸ் ஆஃப் சாடர்ன்’ இருண்மையில் துவங்கி முடிகிறது. ஒரு நார்விச் மருத்துவமனையில் தேறி வரும் ஸீபால்டிய கதைசொல்லி கரிய நெட்டிங்குகளால் போர்த்தப்பட்ட சன்னல்கள் கொண்ட அறையில் இருக்கிறான் என்று துவங்கி விக்டோரியா மகாராணியின் ஈமச் சடங்கில் அணியப்படும் கரிய, துக்கப் பட்டாடைகளுடனும் உயிர் துறந்தவர்களின் இல்லங்களில் (வேறு பல துக்கச் சின்னங்களுடன்) கண்ணாடிகளை மறைக்கும் வகையில் போர்த்தப்பட்ட கரிய துக்க ரிப்பன்களுடனும் இந்த நாவல் முடிகிறது. அந்த மருத்துவமனைச் சன்னல்கள் கண்ணாடிகள் கொண்டவை என்று வைத்துக் கொண்டால், ஸீபால்டின் புத்தகப் பக்கங்களின் இரு முகப்புகளும் கண்ணாடி இழைத்தவை என்று சொல்லலாம்.
பட்டுத் துணி வியாபாரியின் மகனும், நார்விச்சில் மருத்துவம் பயின்றவரும் ஒரு பகுதி அகழ்வாராய்ச்சி மறு பகுதி மீபொருண்மை ஆய்வேடான ‘தாழி புதைத்தல்’ எழுதியவருமான பதினேழாம் நூற்றாண்டு எழுத்தாளர் ஸர். தாமஸ் ப்ரௌன் பற்றிய துவக்கத்திலேயே கதைசொல்லி தன் வழக்கம் போல் கிளை பிரியும் கதைகளைச் சொல்ல ஆரம்பித்து விடுகிறார். அது போக உடலை விட்டகலும் ஆன்மா, “தனது பிம்பத்தாலோ மீண்டும் கைப்பற்றப்பட முடியாத வகையில் இழக்கப்படும் மண்ணின் கடைசி காட்சியாலோ தன் இறுதி பயணத்தில் திசை மாற” கூடாதென்று நிலக்காட்சி, மனிதர்கள், என்று பலவும் தீட்டப்பட்ட ஓவியங்கள் மீதும் கண்ணாடிகள் மீதும் போர்த்தப்பட்ட ஹாலந்தின் கரிய துக்க ரிப்பன்கள்… ஸர். தாமஸ் ப்ரௌனின் Pseudoxia Epidemicaவில் உள்ள இத்தகைய அவதானிப்புகளை கதைசொல்லி தனக்குரியதாக்கிக் கொண்டு (இதுவும் அவரது வழக்கம்தான்) அதிலிருந்து சில சொற்களைக் கையாண்டு தன் கதைசொல்லலை முடிவுக்குக் கொணர்கிறார். எனவே, வேறொரு வகையில், ‘ரிங்க்ஸ் ஆஃப் சாடர்னை’ சுற்றி தாமஸ் ப்ரௌனின் வளைகள் சுழல்கின்றன என்று சொல்லலாம், மீளாத்துயிலில் ஆழ்தல், இரங்குதல் என்று பேசும்போது, நாம் இதைப்பற்றியும் ஒரு வார்த்தை சொல்லலாம்- நாவல் துவங்கிய இடத்திலேயே “மீள்சுழற்சியின் பரந்து விரியும் பாதைகளில்” (“commodious vicus of recirculation” என்ற ஜாய்சின் ஃபினிகன்ஸ் வேக் நாவலின் பிரபலமான சொற்றொடர்) முடிவுக்கும் வருகிறது.
ஒரு நாவலின் முதல் வாக்கியத்தில் உள்ள ஒரு சொற்றொடரை கடைசி வாக்கியமாய்க் கொண்ட முந்தைய பத்தியில் ஜாய்சிய கோமாளித்தனத்தை இனம் கண்டிருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இலக்கிய ஒயில்நடை என்பதையும் மீறி, அதன் கிறுக்குத்தனத்திலும் ஒரு வழிமுறை சற்றேனும் இருக்கத்தான் செய்கிறது. வீகுஸ் என்ற லத்தீன மொழிச் சொல்லிற்கு கிராமம், குடியிருப்பு, தெரு மற்றும் இவற்றின் அணிமையால் “கிராமத்தின் பாதைகள் மற்றும் குடியிருப்புத் தெருக்களில் நடந்து செல்லுதல்” போன்ற பல அர்த்தங்கள் உண்டு. பெரும்பாலும் காலாற நடை பயில்தலே ‘ரிங்ஸ் ஆஃப் சாடர்னி’ன் நடையை முன்நடத்திச் செல்கின்றது. சொல்லப் போனால் புத்தகத்தின் முதல் வரியே இப்படிப்பட்ட ஒரு நடை பயிலலில்தான் தொடங்குகிறது. “1992 ஆகஸ்டு மாதம்… நெடுங்காலமாய் ஈடுபட்டிருக்கும் பணியை செய்து முடிக்கும்போது என்னை ஆட்கொள்ளும் வெறுமையிலிருந்து விடுபடுவதற்காக சஃபோக் மாவட்டத்தைச் சுற்றி காலாற நடைபோடும் நோக்கத்துடன் புறப்பட்டேன்.”இதைப் படித்துவிட்டுப் பின் வரப்போவது நம்பிக்கையூட்டும் புத்துயிர்ப்பைப் பற்றிய எடுத்துரைப்பாகத்தான் இருக்கும் என்று கற்பனைக் குதிரைகளை நீங்கள் அவிழ்த்துவிடுவதற்கு முன் இதே தொடக்கம்தான் தற்போது கதைசொல்லி மருத்துவமனையில் கிடக்கிறார் என்ற தகவலையும் நமக்களிக்கிறது என்பதையும் பதிவு செய்துவிடுகிறேன். எதற்காக அவர் மருத்துவமனையில் இருக்கிறார்? பல சமயங்களில், கடந்த காலத்தின் வெகு தொலைவான நாட்கள் வரையிலும் நீடித்துச் செல்லும் அழிவின் சுவடுகளை எதிர்கொள்கையில், தன்னை ஆட்கொண்டு முடக்கும் பீதியால் அவர் “முற்றிலும் அசைவற்றிருக்கும் நிலைக்கு” கொண்டு செல்லப்படுவதைக் குணப்படுத்திக் கொள்வதற்காக… இதையே நாம் ஸீபால்டின் படைப்பிற்கான சுருக்க நினைவியாகயும் எடுத்துக் கொள்ளலாம்: கதையாடலைப் பிணைத்து முன்நகர்த்தும் பசையாகவும் புத்துயிர்ப்புக்கான தேடலாகவும் பயணத்தை உருவகப்படுத்திக் கொள்வது. பெரும்பாலும் நிராகரிப்பில் முடிவுறும் இத்தேடல், மீள்நிகழ்வுகள், நிகழ்காலத்தின் மேற்பரப்பாய் நீடித்து வருங்காலத்துப் பாழ்நிலங்களை முன்னுரைக்கும் சகுனங்களாகிய கடந்தகால அழிவுகளின் கசடுகள், முடக்கம், எழுத்துப்பணியைச் சிகிச்சையாகப் பாவித்தல், சோர்வு, பின் மீண்டும் புத்துயிர்த் தலைப்படுதலென இவையே ஜாய்சிடமிருந்து திருடி, நான் முன்னர் குறிப்பிட்ட “மீள்சுழற்சியின் பரந்து விரியும் பாதைகள்”.

“பயணித்தலே உருவகமாகவும், கதையாடலின் பசையாகவும்” என்று சற்று முன் குறிப்பிட்டேன், கதைசொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பூகோள வெளியில் மட்டும் பயணிப்பதில்லை- பிரதிகளினூடே காலத்திலும் பயணித்து அவர் பயணித்த / தற்போது பயணித்துக் கொண்டிருக்கும் அதே இடங்களுக்கு முன்னாளில் பயணித்திருக்கும் மற்றவர்களின் பயணங்களையும் (நான் வேறொரு கட்டுரையில் விவரித்த ‘வெர்டிகோ’ என்ற புத்தகத்தில் ஸ்தெண்டால், காஃப்கா, கிரில்பார்சர் ஆகியோரின் பயணங்களை) நினைவுகூர்கிறார் என்பதால். அது மட்டுமல்லாது அவர்களின் நினைவுகளை தனதாக்கிக் கொண்டு, கதையாடலை முன்னர் பயணித்திருந்த பிரபலங்களின் (‘வளையங்கள்’ புத்தகத்தில் தாமஸ் பிரவுன், ஜோசஃப் கான்ராட், ஷடூபிரியாண்ட் மற்றும் எட்வர்ட் ஃபிட்ஸ்ஜெரால்ட்) சரிதைத் துண்டங்களுக்குத் திசைதிருப்பி மனதளவில் பயணிக்கிறார். இத்திசைதிருப்பலுடன் பல வரலாற்று மற்றும் இயற்கைப் பேரழிவுகள் பற்றிய தகவல்களைப் பிணைத்துப் பரந்து விரியும் இடம் மற்றும் கால இடைவெளிகளிடையே வியப்பளிக்கும் தொடர்புகளை கண்டெடுக்கிறார். மாபெரும் கிழக்கு இருப்பூர்தி வாரியத்தின் கிளைப் பிரிவுகளில் ஓடும் ரயில் வண்டிகளின் கருப்புச் சாயத்திற்கடியேயுள்ள சீன வல்லரசின் டிராகன் மரபுச் சின்னத்தின் கோட்டோவிய மீதத்திலிருந்து, தாய்ப்பிங் புரட்சி, விதவை பேரரசி சூ-ஷி,அவளது சர்வ வல்லமையளிக்கும் பொடித்த முத்து நிவாரணிகள் மற்றும் அவளுக்குப் பிரியமான பட்டுப்பூச்சிகளுக்குத் தாவும் பகுதிகள் இத்தகைய தொடர்புறுத்தல்களுக்கான நல்ல உதாரணங்கள்.
ஸீபால்டின் பயணமுறை (ஆசிரியரையும் கதைசொல்லியையும் குழப்பிக் கொள்ளும் பெரும்பாவத்தைச் செய்கிறேன் என்று எனக்கு நன்றாகவே தெரிகிறது, ஆனால் ஸீபால்டைப் பொருத்தமட்டில் அது மன்னிக்கக்கூடிய தவறே, தவிர்க்கமுடியாததும்கூட) கணிசமான நடைப்பயிற்சிகளை கோருகிறது. மேலும், இடையறாது நடந்து செல்வதற்கான விழைவினுள் தொலைந்து போவதற்கான ஓர் உபவிழைவும் ஒளிந்திருக்கலாம். அடிமனதில் புதைந்திருக்கும் தொலைதலுக்கான அவாவே பிரதிவிட்டுப் பிரதி தாவும் கவனக்குலைவாக உன்னதமாக்கப்படுகின்றது என்பது வலிந்து பெறப்பட்ட ஓர் அனுமானமாக எனக்குப் படவில்லை. “உன்னதமாதல்” என்ற ஓர் அழகிய ஃபிராய்டிய வார்த்தையைக் காரணத்தோடுதான் இங்கு பயன்படுத்துகிறேன். ஏனெனில், ஸீபால்டின் படைப்புகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் பட்டியலில் (தாமஸ் பெர்ன்ஹார்ட், வால்டர் பென்ஜமின்…) ஃபிராய்டும் கண்டிப்பாக இடம் பெறுவார். மானிடர்களின் “மீளச்செய்யும் கட்டாயம்” ஃபிராய்டின் ஆவலைப் பெரிதும் தூண்டியது. அதை “உயிரற்ற ஆதி ஜட நிலைக்குத் திரும்பிச் செல்வதற்கான அனைத்து உயிர்களின் விழைவு” அல்லது, உளநிலைப் பகுப்பாய்வின் குழுமொழியில் சொல்வதானால், இன்பத்தை நாடித்திரியும் உயிரின் உள்ளுணர்வை மீண்டும் அதன் வழமையான செல்தடத்தில் பயணிக்கச் செய்து மரணத்துக்கு இட்டுச் செல்லும் முயற்சி, என்று அர்த்தப்படுத்தினார். ரிங்ஸ் புத்தகத்தில் இதை உணர்த்தும் அழகான ஒரு காட்சியில், இளமூதாக்கள் அடர்ந்திருக்கும் டன்விச் கரம்பு நிலத்தின் அழகால் உந்தப்பட்டுக் கட்டுகளின்றி மனம் போன போக்கில் திரிவதற்கு ஆயத்தப்படும் கதைசொல்லி சிறிது நேரத்தில் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கிறார். ஒரு வகையான உளவழி உடல் நோயால் பாதிக்கப்பட்டு “அதிக இரத்த இழப்பினால் ஏற்படும் உணர்வின்மையையும்… இதய அடைப்பால் தாக்கப்பட்டதிற்கான அறிகுறிகளையும்” உணரும் அளவிற்கு இந்நிகழ்வு அவரை அதிர்ச்சியுறச் செய்கிறது.
ஸீபால்டின் “பிரதி மேய்தல்கள்” இயல்பாகவே சற்று முரண்பாடானவை. ஒரு வகையில், அவை நிர்ணயிக்கப்பட்ட தொடக்கத்திலிருந்து முன்னதாகவே அறியப்பட்ட முடிவிற்கு நேர்க்கோட்டில் விரையும் வழமையான கதையாடலிலிருந்து மாறுபடுவதற்கான முயற்சிகள். ஆனால் இலக்கிய, வரலாற்று நாயகர்களின் நினைவுகள் மற்றும் கதைகளிலிருந்து காலம்காலமாக வரலாற்றிலும் இயற்கையிலும் “மீண்டும் மீண்டும்” பரவலாக நிகழும் அழிவின் “நிரந்தரத்தையே” இம்மேய்தல்களில் அகழ்ந்தெடுக்கிறார். அந்நிரந்தரமோ அவரது அக/புற உலகு மேய்தல்களை அர்த்தமற்றதாக்கி விடுகிறது. வளையங்களின் பல பக்கங்களில் வாசகனை ஒரு விநோதமான அச்சுறுத்தும் உணர்வு ஆட்கொள்கிறது: நம்பிக்கைக்கு இடமளிக்காத தேக்கத்தையே தரிசனமாகக் கொண்டிருக்கும் தீர்க்கதரிசியான கதைசொல்லி, ஊழிக்குப் பின் எஞ்சியிருக்கும் உலகை, அதன் ஒற்றை வாசியாய், தரிசித்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வு.
ஒரே ஒரு பிரதி மேய்தலை மட்டும் சற்று விரிவாகப் பேச விரும்புகிறேன் (கான்ராடும் அடிமை வணிகமும், ரெம்பிராண்டும் அவர் உடற்கூறியல் பாடமும், ஷ்டூபிராண்டின் வாழ்விலிருந்து சில நெகிழ்வான கணங்கள் என பல சுவையான மேய்தல்கள் வாசகனுக்காக காத்திருக்கின்றன). அவற்றைப் பேசுவதற்கு முன்பாக ‘சனிக்கிரகத்தின் வளையங்கள்’ என்ற புத்தகத்தின் தலைப்பையும் சற்றி அலசிவிடுவோம். ஸீபால்டிற்கு மிகவும் பிடித்த வால்டர் பெஞ்சமினின் “சனிக்கிரகத்தின் வளையம் அல்லது வார்ப்பிரும்புக் கட்டுமானம் பற்றிய குறிப்புகள்” என்ற கட்டுரைக்கு ஏதோவொரு வகையில் தலைப்பு வணக்கம் தெரிவிக்கிறது என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். பிராக்ஹவுஸ் கலைக்களஞ்சியத்தின் ஒரு மேற்கோளுடன் புத்தகம் தொடங்குகிறது. அதில் சனிக்கிரகத்தின் வளையங்கள் “தம் சுற்றுப் பாதையில் கோளின் மிக அருகாமைக்கு வர நேரிட்டு அதன் ஈர்ப்புவிசையின் ஏற்ற இறக்கத்தால் அழிக்கப்பட்ட முந்தைய நிலவின் துண்டங்கள்” என்று வரையறுக்கப்படுகின்றன. இதற்குப்பின் அடைப்புக் குறிகளில் ரோச் வரம்பை அம்மேற்கோள் குறிப்பிடுகிறது. ரோச் வரம்பென்பது கிரகத்தின் மையத்திலிருந்து எவ்வளவு தூரம் வரையிலும், அதன் ஈர்ப்புவிசையால் அழிவுறாது ஒரு துணைகோளால் நெருங்க முடியும் என்பதை நிர்ணயிக்கும் வானியல் கணிப்பு. துண்டங்களாக பிளவுறும் நிலவை எடூவார்ட் ரோச் என்பவரே முதலில் முன்மொழிந்தார். ரோமானியக் கடவுளும் கிரோனோசின் (காலம்) புதல்வியுமான வெரிடாசின் (உண்மை) பெயர் அந்நிலவிற்கு அளிக்கப்பட்டது. இத்தகவலிலிருந்து தொடங்கி மத்யாமிக கோட்பாட்டின் சாமான்ய உண்மை மற்றும் முடிவான உண்மை என்ற வரையறைகளைக் கொண்டு ரோச் வரம்பைப் பற்றி சிந்திப்பது அர்த்தப்படுத்துவதற்கான பல சுவாரசியமான சாத்தியங்களை நமக்கு அளிக்கிறது. ரோச் வரம்பைத் தாண்டி, முடிவான உண்மைக்கு வெகு அருகே சென்றுவிட்டதால் , அதன் காத்திரமான ஒளிர்வை முழுவதும் உள்வாங்கிக் கொள்ள முடியாத, இக்காரஸை ஒத்த கோள்கள் சிதறடிக்கப்படுகின்றன. அவ்வரம்பிற்குப் புறத்தே, முழுமுதல் உண்மையிலிருந்து தொலைதூரம் வந்துவிட்டதால் தங்கள் பாவனைகளின் ஈர்ப்பால் ஒன்றுகூடும் சில சாமான்ய உண்மைகள் அவர்களின் கூட்டணியே முழுமுதல் உண்மை என்று மமதையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ரோச் வரம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும் துகள்களை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது? மானுடத்தன்மையற்ற பூரண உண்மையின் முகத்தில் மோதிச் சிதறுண்டு போகாத அளவு போதுமான ‘புனை’ பொருத்தங்களால் குழுமிச் சுழலும் எளிய மானுட உண்மைகளாய் நாம் இவற்றைக் கருதலாமா, இவை தம் மெய்மையின் எல்லைகளை உணர்ந்து கொள்ளாது தம்மளவில் தாமே பேருண்மைகளாகச் சுழலும் துணைக் கோள்களும் ஆவதில்லை. மானுட உண்மைகள் குறுகிய இத்துகள் வளையங்களுக்கு ஒப்பாகுமா, மானுடர்களாகிய நமக்குக் கிட்டக்கூடிய ஒரே வகை உண்மைகள் இத்திறம் கொண்டவைதானா?
சரி, இப்போது வளையங்களில் வெளிப்படையாகவே காணக்கிடைக்கும் ஒரு பிரதி மேய்தலைப் பற்றி சற்று கதைப்போமா? போர்ஹேயின் பெயர்பெற்ற சிறுகதையான “த்லோன், உக்பார், ஆர்பிஸ் தெர்ஷியஸ்” வளையங்கள் நாவலில் முக்கியமான இருப்பாக நிறுவப்பட்டு அதன் பிற பகுதிகளினடியே ஒத்ததிர்வுகளாலான நிலத்தடி நீரோட்டமாக ஓடுகிறது. நமது மாபெரும் பிரதி யாத்ரீகரான போர்ஹே தன் நண்பர் அடோல்ஃபோ செசாரஸ்சுடன் தான் எழுதிய கதையிலும் பயணிக்கிறார். ஒரு பிரதி தன்னார்வத்தால், ஒரு கலைக்களஞ்சியத்தில் அளிக்கப்பட்டிருக்கும் உக்பார் என்ற பதம் பற்றிய குறிப்பிற்குள் பயணிப்பதே இக்கதையை முன்நகர்த்தும் விசையாக அமைந்துள்ளது. ‘த ஆங்லோ- அமெரிக்கன் சைக்லோபீடியா’ என்ற களஞ்சியத்தின் 1917 பதிப்பான பியோயின் புத்தகமே, வரிக்கு வரி, என்சைக்லொபீடியா பிரிட்டானிகாவின் 1902-ஆம் ஆண்டுப் பதிப்பை நகலிக்கும் மீள்பதிப்பு. உக்பாரின் “அருவக்குறிப்பு” சைக்லோபீடியாவின் வேறெந்தப் பதிப்பிலும் இடம் பெறாதது போர்ஹேயிற்குத் தன் வழக்கமான இலக்கியத் துப்பறிதல்களுக்கான சாக்காக அமைகிறது. இதைத் தொடரும் கவனத்தைத் திசைதிருப்பும் கிளைத்தல்களும் உடன் நிகழ்வுகளும் கதையை அதன் அச்சுறுத்தும் தீர்க்கதரிசன முடிவிற்கு முன்நகர்த்திச் செல்கின்றன. கதையை இன்னமும் படித்திராத வாசகனின் (அவன் எவ்வளவு சபிக்கப்பட்டிருப்பவனாக இருப்பான்!) வாசிப்பு இன்பங்களை கெடுக்க விரும்பாததால் கதையின் அனைத்து நுட்பங்களையும் நான் இங்கு விவரிக்கப் போவதில்லை. ஆனால் அது ஒரு வகையில், ஒருங்கிணைந்து சேகரிக்கப்பட்டு, பல்துறை வல்லுனர்களால் பரவலாகப் பரப்பப்படும் ஹ்ரோனிர் என்றழைக்கப்படும் “தயாரிக்கப்பட்ட தரவுகளைக்” கொண்டு நிஜத்தைப் புனைவாக்கும் உருமாற்றத்தைப் பற்றிய கதை என்பதை மட்டும் கூறிவிடுகிறேன். புனையப்படும் இவ்வுலகின் இறுக்கமான கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கின் மீது கொள்ளும் மிதமிஞ்சிய நம்பிக்கையால் மானுடம் த்லோனின் புனையப்பட்ட கற்பனை ஒழுங்கிற்காகத் தன் நிஜவுலகின் ஒழுங்கற்ற யதார்த்தத்தைத் துறக்கத் தயாராக இருக்கிறது. (“உலகம் ஒரு நாள் த்லோனாகும்” என்று அவனுக்கு நிகழவிருக்கும் அதிர்ச்சியை அப்பாவி வாசகனுக்கு முன்னுரைக்கிறது.)
மணல் தகைவிலான்கள் கடல் மீது அங்குமிங்குமாகப் பறந்து கொண்டிருப்பதைக் குன்றுமுகட்டின் மீதமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கையில்தான் ஸீபால்டின் கதைசொல்லி போர்ஹேவை நோக்கித் தன் எடுத்துரைப்பை திசைதிருப்புகிறான். அவனது பால்ய காலத்து சுயம் அந்தியின் இறுதி வெளிச்சத்தில் வட்டமிடும் குருவிகளைப் பார்த்திருந்ததைத் தகைவிலான்கள் நினைவுறுத்தி, உலகமே அவற்றின் பறத்தல்களால் பிணைக்கப்பட்டிருக்கிறது என்று கற்பனையில் அவனை சஞ்சரிக்கச் செய்கிறது. இந்நினைவு போர்ஹேயின் த்லோன் கதையை நினைக்க வைக்கிறது. அதில் பொருட்கள் தங்களையே நகலித்துக் கொள்வதைப் பற்றிப் பேசுகையில் போர்ஹேயின் கதைசொல்லி அவை மறக்கப்படும்போது எவ்வாறு நுணுக்கமான விவரங்களை இழக்கின்றன என்பதைப் பற்றியும் பேசுகிறான். அதன்பின் “உணர்தலே மெய்மை” என்ற த்லோனிய உலகநோக்கை அதன் தருக்கரீதியான முடிவிற்குக் கொண்டு சென்று, “ஒரு சில பறவைகள், ஒரு குதிரை,” போதும், “சிதிலமடைந்த வட்டரங்கத்தைக் காப்பாற்ற,” என்று துக்கம் இழையோடும் முறுவலிப்புடன் கற்பனை செய்து கொள்கிறான். இச்சிறு பிரதி மேய்தலுக்குப் பிறகு ஸீபால்டின் பிரதி மீண்டும் கதைசொல்லிக்குத் திரும்புகிறது. அவன் தற்போது குன்றின் விளிம்பில் குத்திட்டு கீழே எட்டிப் பார்க்கையில் பள்ளத்தில் ஓர் ஆண் ஒரு பெண் மீது (அருவருப்பான வடிவமுடைய பெரும் சிப்பி இன உயிரைப் போல், இரட்டைத் தலை கோரவுருவத்தைப் போல்) படர்ந்திருப்பதைக் கண்ணுறுகிறான். திகைப்பும் பயமும் கலந்த மனநிலையில் அவ்விடத்தை விட்டுச் செல்கையில், தான் கடந்து வந்த மனித நடமாட்டமற்ற அகல்பரப்பைத் திரும்பிப் பார்க்கிறான். கோவ்ஹைத் குன்றுகளின் அடிவாரத்தில் அவ்வெளிறிய கோரவுருவை “உண்மையிலேயே கண்டேனா” அல்லது அது தன் கற்பனையில் கண்ட “பொய்த்தோற்றமா” என்பதை அவனால் தீர்மானமாக நிர்ணயிக்க முடிவதில்லை. கதைசொல்லி இதை நமக்காக நினைவுகூர்கையில் அது தன்னுள் ஏற்படுத்திய தீர்மானமற்ற மனநிலையால் கலவரமடைந்து அதைப் பற்றி மேலும் பேச விரும்பாது அர்ஜெண்டினியக் கதையான “த்லோன் உக்பார் ஆர்பிஸ் டெர்ஷியஸ்”-சிற்குத் திசைதிரும்புகையில், ஸீபால்டின் பிரதி, மேற்கோள்கள் இல்லாது போர்ஹேயின் கதையிலிருந்து ஒரு கணிசமான பகுதியை வரிக்கு வரி அபகரித்துத் தனதாக்கிக் கொள்கிறது. குடியகத்தில் ஏதேச்சையாக ஹெர்பர்ட் ஆஷின் புத்தகத்தைக் கண்டெடுப்பதால் ஏற்படும் “சிறிது ஆச்சரியம் கலந்த கிறுகிறுப்பால்” சற்று கலவரமடைந்து, அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்ப்பதற்காகக் கதை தன் உணர்வுகளைப் பற்றியது அல்ல என்றும் த்லோன் உக்பார் ஆர்பிஸ் டெர்ஷியத்தைப் பற்றியது என்றும் போர்ஹேயின் கதைசொல்லி கூறுவதை ஸீபால்டின் நுட்பமான வாசகன் நினைவுகூரக்கூடும். த்லோனே உலகமாகும் நிமித்தத்தை அளித்தபின் போர்ஹேயின் கதைசொல்லி அசாத்திய அமைதியோடு, இது எதுவுமே தன்னை பாதிக்காதது போல், அலட்சியமாக, மற்றவரின் நடையில் (கெவேடோ) தான் மேற்கொண்டிருக்கும் “தாழி புதைத்தல்” -இன் “ஐயப்பாடான மொழிபெயர்ப்பை” என்றென்றைக்கும் தொடரப் போவதாகக் கூறி கதையை முடிப்பதை வாசகன் அறிந்திருப்பான். உலகம் த்லோனாக மாறுவது அவனுக்கு “பாபிலானின் லாட்டரி” என்ற போர்ஹேயின் மற்றொரு பிரபலமான கதையில் அது லாட்டரியாக மாறுவதை நினைவுறுத்தக்கூடும். ஸீபால்ட் வரிக்கு வரி போர்ஹேயின் பிரதியைத் தனதாக்கிக் கொள்வதும், அதில் போர்ஹேயின் கதைசொல்லி ஒரு எழுத்தாளரை மற்றொரு எழுத்தாளரின் பாணியில் முடிவுறாது மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதும், பியெர் மெனார்டையும், “மிகேல் செர்வாண்டசை வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை ஒன்றுபடுவதற்கான” அவனது மெச்சத்தக்க விழைவையும் நினைவுபடுத்தும்.

நினைவுகூர்தல், நினைவுபடுத்தல், நினைவாற்றல், நகலித்தல், ஏற்கனவே நிகழ்ந்தது போல் உணர்தல், மீள்நிகழ்தல்… ஸீபால்டை பற்றிப் பேசுகையில் இது போன்ற பிரதிபலிப்புச் சார்ந்த பதங்களைத் தவிர்க்க இயலாது. அவர் நடையை அனிச்சையாக நகலிப்பதற்கான விழைவும் இதற்கொரு காரணமாக இருக்கலாம். ஆனால் ஸீபால்டின் அனைத்துப் புத்தகங்களிலும் விடாப்பிடியாக நிகழும் பிரதிபலிப்பைக் குறித்த விமர்சனத்தையும் இங்கு நாம் குறிப்பிட வேண்டும். புனைவும் நிஜமும் இணையும் கலப்படமாகத் தோன்றும் கதைசொல்லியின் பயணங்களையும் அப்பயணங்கள் அவனுள் ஏற்படுத்தும் மனநிலைகளையும் பிரதிபடுத்தும் அவரது புத்தகங்கள் பிரதிபடுத்தல் என்ற செயல்பாட்டின் மீதே பெருத்த சந்தேகமும் எழுப்புகின்றன. ஸீபால்டின் முந்தைய புத்தகமான ‘வெர்டிகோ’வில் ஸ்தெண்டால் செய்ததைப் போல் ‘வளையங்கள்’ கதைசொல்லியும் நடைப்பயணமாகக் கிழக்கு ஆங்லியக் கடற்கரையில் செல்கையில் முன்னாளில் அதில் நடந்த கப்பல்படைச் சண்டைகளை நினைவில் மீட்டெடுகிறான். ஸ்தெண்டாலைப் போல அவனும், “நிகழ்வின் மெய்யான அனுபவத்தைக் கடத்துவதில்” நினைவுத்திறன், பிரதிகள் மற்றும் கலைப்படைப்புகள் அடைந்திருக்கும் தோல்வியை முன்னிலைப்படுத்தி அவற்றின் ஆற்றலைச் சந்தேகிக்கிறான். எவ்வளவு பிரூஸ்டிய மாடெலின்களை நாம் உட்கொண்டாலும் கடந்தகாலத்தின் மெய்மையை முழுவதும் கைப்பற்றுவதென்பது நமக்கு இயலாத காரியமாகவே இருக்கிறது – இதுவே ஸீபால்டின் படைப்புகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் துயரார்ந்த தொனியாகவும் இருக்கிறது. மிக நுண்ணிய ஆடிகள்கூட உருக்குலைக்கின்றன. அதனால்தானோ என்னவோ உக்பாரின் பாஷாண்டியொருவர் ஆடிகள் கீழ்த்தரமானவை என்று பழிக்கிறார். ஆனால் பிரதிபடுத்தாமல் நாம் எவ்வாறு நிதர்சனத்தின் மெய்ம்மையை தக்கவைத்துக் கொள்வது?
மெய்ம்மையின் ஆழிப்பேரலையில் உட்கொள்ளப்படாமலும் புவியீர்ப்பு விசையின் ஆகர்ஷணத்துக்குட்பட்ட உபகோள் தன்மையில் இரவல் உண்மைகளைப் பிரதிபலிக்கும் சாத்தியத்தின் வசப்படாமலும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஓரப்பார்வைக் காட்சியில் கிட்டும் உண்மையின் ஒட்டுச் சில்களும் அவற்றின் “பரஸ்பர ஈர்ப்பு” கொண்ட புனைவுகளுமே போதுமானதாக இருக்கும் அந்த சனிக்கிரக வளையங்களை நினைத்துக் கொள்கிறேன். வரம்புகளை நன்குணர்ந்து, முழுமுதல் உண்மை என்ற மமதையைத் தவிர்த்து, எமிலி டிக்கின்சனின் சற்றுச் சாய்வாகப் பிரதிபலிக்கும் மானுட உண்மைகள் அவை. இதனால்தான் ஸீபால்டின் கதைசொல்லி ஒரு புள்ளியில் தொடங்கி மற்றொரு புள்ளிக்கு நேர்க்கோட்டில் ஒரு போதும் பயணிப்பதில்லை. மாண்டல்பிரொட் ஃபிராக்டலின் புனைவுச் சமனாகக் கிளைக்கதைகளிலும்/ கிளைப்பயணங்களிலும் அவர் தம்மை ஆழ்த்திக் கொள்கிறார். ஃப்ராக்டலைப் போல் ஒவ்வொரு கிளையும் அதன் பணிவான வழியில், அது எவ்வளவுதான் சாய்மானமாக இருப்பினும், முழுப்பயணத்தைப் பிரதிபலிக்கும் ஒட்டுச் சில்லாக…
ஆம், “உலகம் த்லோனாவும் லாட்டரியாகவும்” ஆவது உறுதியே எனினும் அது அவ்வாறு உருமாறப் போகிறது என்ற உண்மையை முன்னுரைக்கும் புனைவு நம்மிடம் இருந்துகொண்டேதான் இருக்கும். ஒருகால் மாறும் உலகல்ல, மாற்றங்களைக் கட்டியங்கூறி நம்மோடு எப்போதுமிருக்கும் கலைதான் நம்மைக் காப்பாற்றும் போல…

‘சனிக்கிரகத்தின் வளையங்கள்’ தாமஸ் பிரவுனின் தாழி புதைத்தலில் தொடங்கி ஆடிகளில் முடிவுறுகிறது. ‘த்லோன் உக்பார் டெர்ஷியஸ்’ ஆடிகளில் தொடங்கி தாமஸ் பிரவுனின் ‘தாழி புதைத்தலி’ல் முடிவுறுகிறது. எண்ணற்ற பிரதிபலிப்புகளாலான இவ்வட்டம் தன் வளைவிற்குள் வாசிப்பின் உள்ளார்ந்த இன்பங்களையும் பொதித்து வைத்துக் கொண்டிருக்கிறது:: நம்மைப் பற்றிய கனவிலிருக்கும் மற்றமையென நம் முகங்களே பிரதிபலிக்கக் காணும் கண்ணாடிகள்தாம் புத்தகங்கள்.
———————–
மூலம்/ மேலும் படிக்க:
W.G.Sebald, The Rings of Saturn, translated by Michael Hulse, New Directions re-issue, 2016
Jorge Luis Borges, Tlon, Uqbar, Orbis Tertius, Collected Fictions, Penguin Books, 1999