பறக்கும் தட்டுக்கள் – ஸீபால்ட் கவிதைகள்

பறக்கும் தட்டுக்கள்

நேற்று இரவு
நான் தோட்டத்தில் நின்று கொண்டிருந்தபோது
விளக்குகள் பிரகாசிக்கும்
விண்கலம் ஒன்று
கடந்து சென்றது
கூரையின் மீது
மிக மெதுவாக

கடலைப்போன்ற பிரம்மாண்டம்
மற்றொரு சூரிய மண்டலத்திற்கு செல்வதை
மரங்களுக்கு பின்னால்
பார்த்து நிற்பதை தவிர
வேறென்ன செய்ய முடியும் என்னால்

அறுபத்து ஒன்பதாம் ஆண்டு
வேல்ஸின் புஷ்ஷெலி கடற்கரையில்
ஒரு சிறு ஒளிரும் பொருளை
கண்டேன்
முற்றிலும் ஜப்பானிய நிறங்கள்
மிளிரும்
மலையின் மீதிருந்து
மெல்லிய உறுமலுடன்
காற்றில் கீழிறங்கி
அகன்று விரிந்த
கடலின் மீது மறைந்தது

அது விண்கலமா
வேறு என்னதான் அது
நேற்று வானத்தில் வந்தது
என்னால் நம்பவே முடியவில்லை
ஒருவேளை
அது வெல்ஷ் இளவரசனின் ஆவியோ
இட்வால் ஏரியின் அருகில்
தன் சகோதரனால் கொல்லப்பட்ட பிறகு
அந்த ஏரியின் மீது
எந்த பறவையும்
இதுவரை பறக்கவில்லை

என் காதில் ஏதோ

சாய்வு நாற்காலியில்
தூக்கத்திலிருக்கையில்
தூரத்தில் கேட்கிறது
வானொலியில்
தீர்ப்பு சொல்ல தயாராகிவிட்ட
வாத்துக்களின் ஒலி

பூஞ்சைகள் பெருகி
வாதம் பரவுகிறது
தோட்ட த்தில்
அடுத்தடுத்து தொடர்ச்சியான
அதிர்வுகள்
பற்களின்
வேர்களில்
இரத்தத்தை உணர்ந்து

கண் விழிக்கையில்
அலையடித்து வரும்
படுகுழியின்
மறுபக்கத்திலிருந்து
உடனடி மரணம்

நினைவுக்கு வருகிறது

சோவியத் பேரரசு
வீழ்ந்த நாளுக்கு
அடுத்த தினம்
ஹாலந்தின்
ஹோக் ஏரியின் தோணியில்
என்னுடன் உடன் வந்தான்
உல்வர்ஹாம்ப்டனை சேர்ந்த
ஒரு லாரி டிரைவர்

வயதான வாகனத்தில்
அவனுடன்
இன்னும்
இருபது பேர்
சோவியத் ரஷ்யாவுக்கு

எந்த ஊருக்கு செல்கிறோம்
என்று தெரிந்திருக்கவில்லை
கிழத்தலைவர் தான்
வழிநடத்துவது

எப்படி இருந்தாலும்
நல்லதொரு சாகசம்
நல்ல பணமும் கூட
என்றபடி

ஹால்பார்ன் சுருட்டை
புகைத்துக்கொண்டு
மேல் தளத்தில்
உறங்க செல்வார்

இன்னும் கேட்க முடிகிறது
இரவு முழுவதும் கேட்ட
அவரின்
மென்மையான குறட்டை ஒலி

விடியலில்
ஏணியில் இறங்கி வரும்
அவரைப் பார்க்கிறேன்

பெரிய தொப்பை
கருப்பு நிற உள்ளாடை
ஜிப்பு வைத்துமூடும்
முழுக்கை மேல்சட்டையை
அணிந்தபடி

பேஸ்பால் தொப்பியுடன்
ஜீன்ஸ் கால்சராயின்
உள்ளே புகுந்து

தன் எல்லா சாமான்களும் கொண்ட
பிளாஸ்டிக் பையின் வாயை
இழுத்து மூடியபின்

இருகைகளாளும்
தேய்த்து
முள்தாடி முகத்தை
தயார் செய்து கொள்வார்
பயணத்திற்கு

ரஷ்யாவில் போய்
குளித்துக்கொள்வேன் என்றவருக்கு
இங்கிலாந்தின் சார்பில்
வாழ்த்துக்கூற

உங்களை சந்தித்தில்
மகிழ்ச்சி மேக்ஸ்
என்பார்

**