டபில்யூ.ஜீ. ஸீபால்ட்: ஒரு சிறப்புக் குறிப்பு

ஜேம்ஸ் அட்லஸ்

“அது தப்பிச் செல்லும் பாதை, முழுக்க முழுக்க அந்தரங்கமான ஒன்று,” என்று மெல்லச் சொல்கிறார் மாக்ஸ் ஸீபால்ட். பழைய புகைப்படங்கள் கொண்ட தடிமனான ஃபோல்டர் ஒன்றினுள் துழாவிக் கொண்டிருக்கிறார் அவர். வெண்ணிற கவுனும் கஃப்டானும் அணிந்திருக்கும் சிறுவன்; ஹெட்ஸ்டோன்கள் சாய்மானமாய் பதிக்கப்பட்டிருக்கும் இடுகாடு; இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலகட்டத்து ஸ்பா: பழைய சாமான்  கடையில் தபால் அட்டைகள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் பெட்டியொன்றை நிச்சிந்தையாய் அளைந்து கொண்டிருக்கும்போது உங்கள் கண்ணில் படக்கூடிய புகைப்படங்கள் இவை. கிட்டத்தட்ட அங்குதான் இவற்றை ஸீபால்டும் கண்டெடுத்திருந்தார். தான் எழுதுவதற்கு முன்பே புகைப்படங்களைச் சேகரித்துக் கொண்டிருந்ததை ஸீபால்ட் விளக்குகிறார், 1970ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து புலம்பெயர்த்து வந்த நாள் முதல் தான் வசித்துக் கொண்டிருந்த ஈஸ்ட் ஆங்கிலியாவில் உள்ள கடலோர சிற்றூர் கடைகளில் தன் புத்தகங்களில் சேர்ப்பதற்கான புகைப்படங்களை, அதைவிட, அந்தப் புத்தகங்களுக்கான கிரியா ஊக்கிகளை, அவர் பல ஆண்டுகளாக தேடிக் கொண்டிருந்தார். “நான் இதையெல்லாம் எதற்குச் செய்கிறேன் என்பது என் வீட்டில் இருந்தவர்களுக்கே தெரியவில்லை; வீடு திரும்பியதும் நான் என் ஒர்க்ஷாப்புக்குப் போய் ஏதாவது செய்து கொண்டிருப்பேன். இந்தப் புகைப்படங்கள்தான் கடைசியில் என்னை வெற்றி கொண்டன என்று நினைக்கிறேன்.”

அவை என்னையும் வெற்றி கொண்டிருந்தன. உண்மையில் நான் ஸீபால்டின் வசதியான, சுவர்களை மறைக்கும் புத்தக அலமாரி வரிசைகள் கொண்ட நார்விச் வாசிப்பு அறையில் அவருடன் காப்பி அருந்தி கொண்டு அமர்ந்திருக்க அவை ஒரு முக்கிய காரணம். நான் ஒரு இலக்கிய யாத்திரையாக வந்திருந்தேன். ஆங்கிலத்தில் வெளிவந்த அவரது முதல் நூல், ‘தி எமிக்ரண்ட்ஸ்’, மைக்கேல் ஹூல்ஸ்சின் நளினமான மொழியாக்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் நியூ டைரக்ஷன்ஸ்சால் பதிப்பிக்கப்பட்டிருந்தது. நான் அதுவரை அப்படிப்பட்ட எந்த புத்தகத்தையும் வாசித்ததில்லை. சொற்களுக்கு இடையே- ஹோலோகாஸ்டில் அந்நிய மண்ணுக்கு வெளியேற்றப்பட்ட ஜெர்மானியர்களின் கதைச்சரித வரிசை- தலைப்பற்ற புகைப்படங்கள் இருந்தன, பின்புலம் இல்லாமல் அவை பிடிபடவில்லை. இலைகளற்ற குளிர்கால மரங்களைப் பின்னணியில் கொண்ட பசும்புல் டென்னிஸ் கோர்ட்டின் படம் ஏன்? திராட்சைக் கொடிகள் அபரிதமாய் வளர்ந்து மறைக்கும் யூதக் கல்லறை ஏன் இங்கு? க்ரைஸ்லர் பில்டிங் கோபுரம் மற்றும் ப்ரூக்ளின் பிரிட்ஜின் புகைப்படம் எதற்கு? அப்புறம், இந்தப் புகைப்படங்களில் உள்ளவர்கள் யார், இவர்களைப் பார்த்தால் ஒருவருக்கொருவர் தொடர்பற்றவர்கள் போல் தெரிகிறார்கள்? டின்னர் டேபிளில் ஒரு குடும்பம்; வகுப்பறையில் குழந்தைகள்; கறுப்புக் கண்ணாடிகள் அணிந்த நான்கு பயணியர் ஒரு ரோட்ஸ்டரில் இருக்கிறார்கள்; குடும்ப ஆல்பத்தில் உள்ள புகைப்படங்களுக்கு உரிய பழைய மணம் இவற்றுக்கு இருக்கிறது- இதன் புகைப்படங்களில் வெகு காலமாய் மறக்கப்பட்டுவிட்ட முகங்கள், அனாமதேயமானவை, தெளிவற்றவை, மஞ்சளாய் மங்கிக் கொண்டிருக்கும் பக்கங்களில் இருந்து நம்மை நோக்குகின்றன- மனதில் என்றும் நிழலாடும் ஸீபால்டின் விவரணையைச் சொல்வதானால், “இவ்வாறுதான் இருக்கும் என்று நாம் நினைத்துக் கொள்ளும் மீட்சியற்ற ஆன்மாக்கள்”. 

அவரது புதிய புத்தகம், ‘த ரிங்க்ஸ் ஆஃப் சாடர்ன்’, அவர் மனநல காப்பகத்தில் இருந்த நாட்களில் இலக்கின்றி எழுத துவங்கிய குறிப்புகளின் தொகுப்பு என்று சொல்லப்படுகிறது, இதுவும் இந்த வினோதமான கலவை வடிவின் தொடர்ச்சி. இன்னதென்று பிடிபடாத அதன் கதைசொல்லி, மிகக் கவனமாய் ஈஸ்ட் ஆங்கிலியாவின் சரித்திரத்தைப் பதிவு செய்யும் அமெச்சூர் வரலாற்றாய்வாளர், முதுகில் ஒரு ரக்சாக் சுமந்தவராய், அதன் கிராமப்புறங்களில் அலைந்து திரிகிறார். அப்பகுதியின் மத்திய காலகட்ட வரலாற்றைப் பற்றியும், சிதிலமடைந்திருக்கும் அதன் மேனர் ஹவுஸ்களில் வசித்திருந்து எப்போதோ மறைந்து விட்டவர்களைப் பற்றியும், வினோத அழகு பொருந்திய அதன் கடற்கரை கிராமங்களின் தொல்தகவல்களைப் பற்றியும் தான் திரட்டி வைத்திருக்கும் கதைகளை ஸீபால்டின் முத்திரையாகவே அமைந்து விட்ட திசையற்ற, ஆனால், கவனத்தை வசீகரித்துக் கொள்ளும் உரைநடையில் நினைவுகூர்கிறார். ‘தி எமிக்ரண்ட்ஸ்’ போலவே ‘தி ரிங்க்ஸ் ஆஃப் சாடர்ன்’ அதேயளவு மர்மம் பொதிந்த சொற்களுடன் ஊடாடி வெளிச்சம் பாய்ச்சும் மர்மம் பொதிந்த புகைப்படங்களால் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன் வந்த கதையைப் போலவே இதுவும் தீர்மானிக்க முடியாத அடையாளம் கொண்ட, பெயர் குறிப்பிடப்படாத நானின் குரலில் சொல்லப்படுகிறது. வரலாற்றின் சூறைகள் மீதான அதன் விந்தையான தனியுரை ஸ்வின்பர்ன், ஷடூப்ரியான், போர்ஹெஸ் (“பியோய் கசாரிசிடம் இந்த மறக்க முடியாத கூற்றின் ஆதாரம் கேட்டேன், என்று எழுதுகிறார் ஆசிரியர்…”), மற்றும் இன்னமும் யோசப் கோர்செனியோவ்ஸ்கி என்றே அறியப்பட்ட காலத்தில் நார்த் ஸீ கடலில் மாலுமியாய் பயணித்த ஜோசப் கான்ராட் முதலியோரின் ஆக்கங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகளால் எதிரிசைக்கப்படுகிறது. கான்ரட்டின் துவக்க கால வாழ்வு பற்றிய விரிவான சுருக்கச் சரிதையிலிருந்து பெல்ஜியன் காங்கோவின் இருண்ட ஆழ்பிரதேசங்களில் மேற்கொண்ட வாதைமிகு பயணத்துக்கு நகரும் ஸீபால்ட்- இந்தப் பயணமே அந்த நாவலாசிரியரின் தலைசிறந்த நாவலான ‘ஹார்ட் ஆஃப் டார்க்னஸ்’ஸின் உந்துவிசையாய் அமையும்- திடீரென்று தன் பயணங்கள் குறித்த உரையாடலுக்கு திரும்புகிறார், முன்னோக்கிச் செல்லும் கதையாடலின் முன்னேற்றம் பெல்ஜியம் குறித்த உடன் நினைவுகளால் தடைபடுகிறது.

“எது எப்படியிருந்தாலும், டிசம்பர் 1964ல் நான் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு முதல் முறை சென்றபோது வழக்கமாய் ஓராண்டு முழுவதும் காணக் கிடைப்பதற்கும் அதிகமான எண்ணிக்கையில் கூனர்களையும் கிறுக்கர்களையும் பார்த்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ரோட் செயிண்ட் ஜெனிசில் உள்ள ஒரு பாரில் ஸ்பாஸ்டிக் இழுப்புகளால் உடல் குலைவுற்ற பில்லியர்ட்ஸ் ஆட்டக்காரர் ஒருவர் தன் முறை வந்ததும் ஒரு கணம் தன்னை நிதானித்துக் கொண்டு, மிகக் கடினமான பந்து வரிசைகளையும்கூட பிழைக்கிடமில்லாமல் துல்லியமாய்ச் செலுத்துவதைக் கண்டேன். நான் சில நாட்கள் தங்கியிருந்த ஹோட்டல் போய் தெ லா காம்ப்ரேவை (Bois de la Cambre)  அடுத்திருந்தது…” 

இதைத் தொடர்ந்து, ஹோட்டலின் கனமான மரச்சாமான்கள் பற்றிய விரைவுப் பட்டியலில் துவங்கி வாட்டர்லூ போரை நினைவுகூரும் வகையில் பெல்ஜியர்கள் எழுப்பிய அவலட்சணமான நினைவுச் சின்னம் என்று செல்கிறது. நனவிலியின் அறுபட்ட வரிசைகள் ஸீபால்டைப் பொறுத்தவரை அவரது கலையின் ஆதார வளங்களாய் இருக்கின்றன.

ஸீபால்ட், ஐம்பத்து நான்கு வயதானவர், அழுத்தமான ஜெர்மன் உச்சரிப்பில் பேசுகிறார், ஆனால் அவரது ஆங்கிலம், கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பின், நுண்மைகள் நிறைந்ததாகவும் துல்லியமானதாகவும் இருக்கிறது (அலட்சியமாய் விட்டெறிந்த வாக்கியத்தில் apodictic என்ற சொல்லைப் பயன்படுத்த ஆங்கிலத்தை தாய் மொழியாய்க் கொண்டவர்கள் எத்தனை பேருக்குத் தெரியும்?). பிடரியில் புரளும் வெண்ணிற தலைமயிர் அடர்த்தி குறைந்து வருகிறது, ஃபிரேம் இல்லாத கண்ணாடி அணிந்திருக்கிறார், புதர் போன்ற மீசை- ஸீபால்ட் பிராங்க்பர்ட் கோட்பாட்டாளரான வால்டர் பெஞ்சமினை நினைவுபடுத்துகிறார். பனிக்கால பின்மாலைப் பொழுதில் அவர் சாதாரண கார்டுராயும் கனமான ஸ்வெட்டரும் அணிந்திருக்கிறார்; மீசையும் ஹோல்டரில் செருகி அவர் புகைக்கும் சிகரெட்டும் மட்டுமே இங்கிலாந்து தீவுக்கு அப்பால் உள்ள அவரது ஐரோப்பிய மண்ணை நினைவுபடுத்துகின்றன. அவர் புனைப்பெயரைக் கொண்டு தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் – மாக்ஸ்.

ஸீபால்டின் புத்தகங்கள் எளிதில் வகைமைப்படுத்த முடியாதவை. அவை புனைவுகளா அபுனைவுகளா? வரலாறா அல்லது உண்மைத் தகவலின் மீது இட்டுக்கட்டப்பட்ட போர்ஹெசிய புனைச்சுருட்டா? அவரது பதிப்பாளர் சமயோசிதமாக, இரண்டுக்குமே தயாராக இருப்பது போல், புனைவு-இலக்கியம் என்ற இரட்டை வகைமையை தேர்வு செய்கிறார். “பதிப்பாளர்கள் நிலை கடினம்தான்,” என்று ஏற்றுக் கொள்கிறார் ஸீபால்ட். “இது பயணப் பகுதிக்குப் போய் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.” முடிவில், வரலாற்றாசிரியனும் சரிதையாளனும் விளங்கிக் கொள்ளும் உண்மை அவருக்கு அர்த்தமற்றதாய் இருக்கிறது. “ஒழுங்கான உரைநடை எழுதினால் போதும் என்று நினைக்கிறேன். அது எதுவாக இருந்தாலும் சரி – சரிதை, சுயசரிதை, டோபோகிராபி- அது ஒரு விஷயமில்லை. வழமையான நாவல் வடிவில் எனக்கு ஒவ்வாமை ஏற்பட்டு விட்டது” : “’.. என்று சொல்லி விட்டு  அறையைக் கடந்து சென்றாள்’, இதில் ஏதோ ஒரு தேய்வழக்குத் தன்மை இருக்கிறது. சக்கரங்கள் சுழல்வதை நம்மால் உணர முடிகிறது”.

ஸீபால்டின் புத்தகங்கள் உறுதியாகவே கருப்பொருளற்றிருக்கின்றன. அவற்றின் கதையோட்டம் நனவிலியின் ஏற்ற இறக்கங்களைத் தொடர்கிறது. ஒன்றுடனொன்று தொடர்பற்றது போல் தோன்றும் தகவல்களைக் கொண்டு ஒரு கொலாஜ் உருவாக்குவது அவரது உத்தி – தனி வரலாற்றின் உதிரி தகவல்கள், வரலாற்று நிகழ்வுகள், சுவையான சம்பவங்கள், வேறு புத்தகங்களின் பத்திகள்-, அவர் இவற்றை ஒன்று சேர்த்து ஒரு கதையாய்க் கூட்டுகிறார்; க்லோட் லெவீ ஸ்டிராஸிடமிருந்து  இரவல் பெற்ற பதமொன்றைக் கொண்டு ஸீபால்ட் இதை bricolage என்று அழைக்கிறார். இதன் விளைவு, நேர்க்கோட்டு கதையாடலுக்கு மாறாய் கனவுகளின் வரிசையை வாசிப்பது போல் , ஒருங்கிணைக்கப்பட்ட அனிச்சை தொடர்புறுத்தல் போல், இருக்கிறது. ‘தி எமிக்ரன்ட்ஸ்’ இவ்வாறு துவங்குகிறது: “செப்டம்பர் 1970 இறுதியில், நார்விச்சில் நான் பணி ஏற்றுக் கொள்வதற்கு முன், வசிப்பதற்கான இடம் தேடி கிளாராவுடன் ஹிங்கம் சென்றேன்.” ஆனால் விரைவில் கிளாரா மறக்கப்படுவாள், ஒரு போதும் நிழலுரு கொண்ட பெயர்ச்சொல் அன்றி வேறெதுவாகவும் இருக்கமாட்டாத கதைசொல்லியெனும் – நானோ -, இவ்வாறு துவங்கும் ‘ரிங்க்ஸ் ஆஃப் சாடர்னி’ன் கதைசொல்லியைப் போன்றவன்: “ஆகஸ்டு 1992ல், கோடையின் உச்சி வெயில் நாட்கள் முடிவுக்கு வருகையில், நான் சஃப்போல்க் கவுண்டியில் நடைப் பயணம் செய்யத் துவங்கினேன், நீண்ட பணியொன்றை முடித்தபின் ஒவ்வொரு முறையும் என்னைப் பற்றிக் கொள்ளும் வெறுமையைப் போக்கும் நோக்கத்தில்.”

இந்த ஆசிரிய இருப்பு, மர்ம நான், யார்? ‘தி எமிக்ரன்ட்ஸ்’ நாவலில் இணைக்கப்பட்டிருக்கும் சரிதைக் குறிப்பு பிறவற்றைக் காட்டிலும் முழுமையாய் இருக்கிறது. அது, ஸீபால்ட் ஜெர்மனியில் உள்ள வெர்டாஹ்க் இம் அல்கோய் (Wertach im Allgau ) என்ற இடத்தில் 1944ஆம் ஆண்டு பிறந்ததைச் சொல்கிறது; 1966ஆம் ஆண்டு யுனிவர்சிட்டி ஆஃப் மான்செஸ்டரில் அவர் துணை விரிவுரையாளராய் பணியமர்ந்ததைத் தெரிவிக்கிறது; 1970ஆம் ஆண்டு முதல் அவர் யுனிவர்சிட்டி ஆஃப் ஈஸ்ட் ஆங்கிலியாவில் பயிற்றுவித்திருப்பதை அறிகிறோம்; 1989 முதல் 1994 வரை அவர் பிரிட்டிஷ் செண்டர் ஃபார் லிடரரி டிரான்ஸ்லேஷனில் டைரக்டராய் இருந்தது தெரிகிறது. என்றாலும் ஏராளமான விஷயங்களை இது சொல்லாமல் விடுகிறது: ஆசிரியரின் முழுப்பெயரும்கூட –வின்ஃப்ரீட் கீயோர்க் (Winfried Georg) – சொல்லாமல் விடப்படுகிறது, காப்புரிமைப் பக்கத்தை வாசித்தே அதை அறிந்து கொள்ள முடிகிறது. என்னை வசீகரித்த தகவல் அவரது பிறந்த நாள் தெரிவிக்கும் மறுக்க முடியாத உண்மை: ஸீபால்ட் யூதரல்ல. ஜெர்மனியில் 1944ல் பிறந்த யூதர்கள் எத்தனை பேர் ஹிட்லரின் எரியடுப்புகளிலிருந்து தப்பித்திருப்பார்கள்? அப்படியானால் ‘தி எமிக்ரன்ட்ஸ்’ சாவைப் பிழைத்த ஒருவரின் ஆக்கமல்ல; அதைவிட அபூர்வமான ஒன்று; விருப்பு வெறுப்பற்ற அறச் சாட்சி ஒருவரின் படைப்பு. உண்மையிலேயே அவர் அப்படிப்பட்டவரா? “இப்படிப்பட்ட வாழ்க்கையும் எப்படியோ கடந்த காலத்துக்குரிய வெட்க வரலாற்றின் கறை அல்லது களங்கத்தால் தீண்டப்பட்டு விடுகிறது,” என்று சிந்தியா ஓஸிக் ‘தி எமிக்ரன்ட்ஸ்’ நாவலின் விமரிசனம் ஒன்றில் எழுதினார்; “கறை, அல்லது களங்கம்- வேண்டாம், தன்னுணர்வின் சிறு அனிச்சை கோணுதல் என்றே அழைப்போம்- எப்படியாயினும் இருந்து கொண்டுதான் இருக்கிறது, அது குறித்து வருத்தப்பட்டாலும் சரி, அதை நிராகரித்தாலும் சரி, அதை விசாரணைக்கு உட்படுத்தினாலும், அலட்சியப்படுத்தினாலும், மறுத்தாலும், கண்டுகொள்ள வேண்டாம் என்று கொள்கை அடிப்படையில் முக்கியத்துவம் குறைத்தாலும் சரி.”

ஹோலோகாஸ்ட் இலக்கியம் என்று அழைக்கப்படுவதில் வேறுபட்டு தனித்திருக்கும் ‘தி எமிக்ரன்ட்ஸ்’, அப்பேரழிவு நிகழ்வின் விளிம்புகளில் இருந்து கொண்டே அதன் இதயத்தை அடைந்து விடுகிறது. அஹரோன் அப்பெல்ஃபெல்ட் போல், அவரது நாவல்கள் ஹோலோகாஸ்ட்டுக்கு முற்பட்டவை அல்லது அதைத் தொடரும் பின்விளைவுகளில் தயங்கி நிற்பவை, ஸீபால்ட் அண்மைய ஜெர்மானிய வரலாறு அதன் மறைமுக பலிகள் நால்வர் மீது ஏற்படுத்தும் தொடர்வட்ட விளைவுகளை இதில் ஆவணப்படுத்துகிறார்: கிழக்கு யூரோப்பில் நிகழ்ந்த போக்ரோம்களைத் தப்பி வெளியேறிய ஓய்வு பெற்ற இங்கிலீஷ் டாக்டர் ஒருவர், அவர் என்றும் தான் அடைக்கலம் புகுந்த நிலத்தில் இயல்பாய் இருக்க முடியாமல் இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறார்; 1950களில் வாழ்ந்த ஒரு ஜெர்மன் துவக்கக்கல்வி ஆசிரியை, அவரும் தற்கொலை செய்து கொள்கிறார்; 1920களில் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்த அவரது உறவினர் கூட்டம் ஒன்று; நாஜிக்களுக்கு பெற்றோரை பலி கொடுத்த யூத அகதி, ஓவியர், ஒருவர். ஒவ்வொரு கதையும் ஹோலோகாஸ்ட்டை வெளியிலிருந்து தொட்டுச் செல்கிறது, ஆனால் இந்தக் கதைகளின் நாயகர்கள் ஒவ்வொருவரும் அதனோடு உயிர்ப் பந்தம் கொண்டிருக்கின்றனர், எவ்வளவுதான் மறைமுகமாகவென்றாலும் யூத அழித்தொழிப்பில் சிக்கிக் கொள்கின்றனர். கிஸின்ஜனில் உள்ள கைவிடப்பட்ட யூத இடுகாடு செல்லும் பெயரற்ற கதைசொல்லி, “கல்லறை வனம், பல்லாண்டுகளாய் புறக்கணிக்கப்பட்டவை, சிதைந்து கொண்டிருக்கின்றன, உயர்ந்தெழும் புற்களுக்கும் காட்டு மலர்களுக்கும் இடையே, காற்றின் ஒவ்வொரு அசைவுக்கும் நடுங்கும் மரங்களின் நிழலில், மண்ணுக்குள் புதைந்து கொண்டிருக்கின்றன,” என்பதை எதிர்கொள்கிறார். விரைவில் கல்லறைகளும்கூட காணாமல் போகும்.

ஹோலோகாஸ்ட்டின் கண்ணுக்குத் தெரியாத விளைவுகள்,- இதுவே ‘தி எமிக்ரன்ட்ஸி’ன் மாபெரும் கருப்பொருள்- உயிர் பிழைத்தோரின் வேதனை மட்டுமல்ல, உரிய அளவில் குற்றத்தின் பொறுப்பளிப்பதும், தம் நாஜி கடந்த காலத்தை எதிர்கொள்ள ஜெர்மானியர் போராடுவதும், ஏன், அது மானுட இயல்பு குறித்து வலுக்கட்டாயமாய் புகட்டிய தரிசனங்களும், அதன் அமானுட பின்விளைவுகளும், நம்மை மறக்கத் தூண்டும் யதார்த்தத்தின் மேற்பூச்சும். “ஜெர்மானியர்களின் அடையாளமாய் இருந்த அறிவு வறுமையும் மறதியும், அவர்கள் எல்லாவற்றையும் எவ்வளவு சிறப்பாக சுத்தம் செய்தனர் என்பதும், என் மனதையும் நரம்புகளையும் பாதிக்கின்றன என்று நான் நாளுக்கு நாள் உணரத் துவங்கினேன்,” என்று ஸீபால்ட் கடைசி அத்தியாயத்தில் எழுதுகிறார், Kissingenல் உள்ள இடுகாட்டுக்குச் சென்றதை நினைவுகூர்ந்து: “கற்களில் பொறிக்கப்பட்ட எல்லாவற்றையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் பெயர்களை வாசிக்க முடிந்தது—Hamburger, Kissinger, Wertheimer, Friedlander, Arnsberg, Auerbach, Grunwald, Leuthold, Seeligmann, Frank, Hertz, Goldstaub, Baumblatt and Blumenthal— ஜெர்மானியர்கள் யூதர்களிடம் மிகவும் வெறுத்தது அவர்களது அழகிய பெயர்களாக இருக்கும் என்று நினைக்க வைத்தது, அவர்கள் வாழ்ந்த மண்ணோடும் அதன் மொழியோடும் அவ்வளவு அன்னியோன்னியமாகப் பிணைந்த பெயர்கள்.” ‘ஹிட்லர்’ஸ் வில்லிங் எக்சிக்யூஷனர்ஸ்’ என்ற சர்ச்சைக்குரிய புத்தகத்தை எழுதிய டானியல் கோல்ட்ஹாகன் போல் ஸீபால்டும் ஹோலோகாஸ்ட் ஜெர்மனிக்கு மட்டுமே உரிய தனித்தன்மை கொண்டது என்று நம்புகிறார்; அது அங்குதான் அரங்கேறியது என்பது தற்செயல் நிகழ்வல்ல. நாஜிக்களைச் செழிக்கச் செய்த கூட்டுப் பார்வையின்மைக்கு சரியான விளக்கம் தேடித் துழாவி, “ஜெர்மானியர்களிடம் ஒரு குணம் இருக்கிறது, வேறு சரியான சொல் இல்லாததால் அதை நாம் கோழைத்தனம் என்றுதான் அழைக்க வேண்டும்,” என்கிறார் அவர். “அவர்களுக்கு தவிர்க்கும் பழக்கம் இருக்கிறது. அறிந்து கொள்ளும் விருப்பம் அதன் மக்களுக்கு இல்லை. நடவாதது போல் இருக்கிறார்கள். இங்கிலாந்தில் பதினாறாவது, பதினேழாவது, பதினெட்டாவது, பத்தொன்பதாவது நூற்றாண்டுகள் இன்னும் புலப்படுகின்றன; லண்டனில், வரலாற்றின் அடுக்குகளைப் பருண்ம வெளியில் உணரலாம். ஜெர்மனியில், நகரங்கள் அழிந்ததாலும் ஜெர்மனி தன் கடந்த காலத்தை எதிர்கொள்ளும் தன்மையாலும், அவர்களது சரித்திரம் மிகக் குறைவாகவே வெளிப்படுகிறது. ஒரு வகையில், அது மொண்ணையாக்கப்பட்டு விட்டது. நகரங்கள் எல்லாம் ஒன்றைப் போலொன்று இருக்கின்றன- பாதசாரிகளுக்கான பகுதிகள், கான்கிரீட் பானைகளிலிருந்து வளரும் மரங்கள் கொண்ட சபிக்கப்பட்ட மால்கள், அதே கடைகள்…”

ஆனால் அறச்சீற்றம் எத்தனை இருப்பினும், ஸீபால்ட் பக்கச்சார்பெடுத்து வாதம் செய்பவரல்ல; அவரது நோக்கம் கோல்ட்ஹாகன் போல் ஜெர்மனிக்கு எதிராய் குற்றம் சாட்ட  வேண்டும் என்பதை விட, மானுட வாழ்வின் நிலையாமை குறித்த புதிருக்கு விடை காண்பதுதான். நாஜிக்களின் நோக்கம் எவ்வளவு கொலைகாரத்தன்மை கொண்டதாக இருந்தாலும், அவர்கள் தவிர்க்க முடியாத ஒன்றையே வேகப்படுத்தினார்கள். “ஆரம்ப காலம் முதலே, மானுட நாகரீகம் என்பது ஒவ்வொரு மணி நேரமும் பிரகாசம் கூடி வரும் வினோத ஒளிர்ப்பாய் மட்டுமே இருந்து வந்திருக்கிறது, அது எப்போது அவியத் துவங்கும், எப்போது மறைந்து போகும் என்பதை யாராலும் சொல்ல முடியாது,” என்று அவர் தன் புதிய புத்தகத்தில் எழுதுகிறார். அனைத்தும் கடந்து செல்கின்றன; எதுவும் நிலைத்திருப்பதில்லை. ‘தி ரிங்க்ஸ் ஆஃப் சாடர்ன்’ நமக்கு அவ்வளவு வன்மையாய் உணர்த்தும் படிப்பினை இதுவே. ஹோலோகாஸ்ட் அதன் அதிர்மையத்திலிருந்து எவ்வளவு பரவலாய்  அலைபரப்பியது, அது கட்டவிழ்த்த அழிவு எந்த அளவு திட்டமிட்ட வகையில் வெற்றி பெற்றது என்பதை ‘தி எமிக்ரன்ட்ஸ்’ சித்தரித்தால், ‘தி ரிங்க்ஸ் ஆஃப் சாடர்ன்’ எதுவொன்றும் நிரந்தரம் என்ற மாயையின் பிடியைத் தளர்த்துகிறது. ஒவ்வொரு வரலாற்றுப் பேரழிவாய் அடுத்தடுத்து அவர் வரலாற்றைச் சலிக்கும்போதே, தொடர் சீரழிவால் சூழப்பட்ட புவியின் சித்திரத்தை உருவாக்குகிறார் ஸீபால்ட்: புயல்களால் விழுங்கப்படும் தாழ்நில துறைமுகங்கள்; தீக்கிரையாகி தரையோடு துடைக்கப்பட்ட மழைக்காடுகள்; எங்கோ கண்ணுக்குத் தெரியாத தொலைதூர யுத்தங்களில் படுகொலை செய்யப்படும் முழு சனத்தொகைகள். ஈஸ்ட் ஆங்கிலியாவும்கூட, ஸீபால்டின் பணிவான வினோத அழகு கொண்ட இங்கிலாந்தின் மூலை, அரை நூற்றாண்டுக்கு முன்னர்தான் ஹிட்லருக்கு எதிரான போரின் துவங்குதளமாய் இருந்திருக்கிறது: 

“விரியும் சமவெளிகளின் குறுக்கே நடந்து செல்கையில் ராணுவ முகாம்கள், வாயில்கள், வேலியிடப்பட்ட பகுதிகளை, மீண்டும் மீண்டும் எதிர்கொண்டு கடந்து செல்கிறோம், அங்கு, ஸ்காட்ஸ் பைன் மரங்களின் சன்னமான தோப்புக்களுக்குப் பின் கண்ணுக்குப் புலப்படாத வகையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஹாங்கர்களும் புற்களால் மூடப்பட்ட பங்கர்களும் இருக்கின்றன, இவை ஆயுதங்கள், அவசர நிலையொன்று  தோன்றுமெனில், முழு தேசங்களையும் கண்டங்களையும் கணப்பொழுதில் புகைந்து கொண்டிருக்கும் கற்குவியல்களாகவும் சாம்பலாகவும் உருமாற்ற வல்ல ஆயுதங்கள்.”

வடிவ அமைப்பைச் சொன்னால் ‘சாடர்ன்’ நாவல் ‘தி எமிக்ரன்ட்ஸ்’ போன்ற ஒன்று: உரைநடையில் விவரிக்கப்பட்ட சூழ்நிலங்கள் மற்றும் மனிதர்களின் முத்திரை புகைப்படங்கள்; இலக்கற்ற, கிட்டத்தட்ட நினைத்த திசையில் தொட்டுத் தொடரும் சிந்தனைகள், நிதானமான, சர்ப்ப நளினத்துடன் அவிழ்ந்தோடும் உச்சாடனம் போன்ற நீண்ட வாக்கியங்கள்; அசை போடும், தன்னிலை முன்னிலையில் ஒலிக்கும் குரல். ஆனால், கதைசொல்லியோ தெளிவாய்ப் புலப்படும் உருவம், தாஸ்தாவெஸ்கியின் ‘அண்டர்கிரவுண்ட் மேன்,’ அல்லது காப்காவின் க்ரெகர் சாம்சா வரிசையில் காத்திரமான இலக்கிய ஆளுமை, கதைசொல்லியும் தன்னை சாம்சாவுடன்தான் ஒப்பிட்டுக் கொள்கிறான். அடர்த்தியான, சுட்டுதல்கள் நிறைந்த பக்கங்களூடே வாசித்துக் கொண்டிருக்கும்போது, எனக்கு மலார்மீயின் (Mallaarme) மேற்கோள்தான் நினைவுக்கு வந்தது- உலகில் உள்ள எல்லாமே ஏதோ ஒரு புத்தகத்தில் இடம் பெறுவதற்கென்று படைக்கப்பட்டிருக்கின்றன. டட்ச் எல்ம் நோயின் சாக்காடுகள், பட்டுப்பூச்சியின் ஆயுள், பதினெட்டாம் நூற்றாண்டு பட்டுத்தொழிலால் நிகழ்ந்த சமூக உருமாற்றம், ஹெர்ரிங் மீனின் உடலமைப்பு மற்றும் புலம்பெயர் பழக்கங்கள் பற்றிய ஐந்து பக்க உரையும் கூட, ஸீபால்டின் நெசவுக்குள்ளாகின்றன. ‘ரிங்க்ஸ் ஆஃப் சாடர்னி’ல் கடந்த காலத்தினுள் செல்லும் திசையற்ற எண்ணங்களைப் பிணைக்கும் கருப்பொருளும்கூட ‘தி எமிக்ரன்ட்ஸ்’ நாவலை பிணைக்கும் அதே தன்மை கொண்டதுதான் – அழிவுக் காட்சிகள், வெட்டுடல், மலினப்படுதல், பட்டினி, தீக்கிரை. இதுவொன்றும் அழகிய காட்சியல்ல.
**

ஸீபால்ட் தன்னைத் தானே தேசப் பிரஷ்டம் செய்து கொண்டது அவருக்கு விநோதத்தின் கவர்ச்சியை அளிக்கிறது – “கிழக்கு ஆங்கிலியாவில் எத்தனை ஜெர்மானிய எழுத்தாளர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?” என்று அவர் சுட்டுகிறார் -ஆனால் அதுவே அவரைப் பிரதிநிதிப்படுத்தவும் செய்கிறது. இன்கிலாண்டில் எலியட், பரீயில் ஜாய்ஸ், அமெரிக்காவில் நபகோவ் எனத் தொடங்கி சமகாலத்து மூலநூல் பட்டியல்களை ஆக்கிரமிப்பவர்கள் எல்லோருமே அடிப்படையில் தேசமற்றவர்களாகவும் கலாச்சாரக் குடிநுழைவுப் பத்திரங்கள் தேவைப்படாத ஒரு குடிமையின் பிரஜைகளாகவும் இருக்கிறார்கள். ஜார்ஜ ஸ்டெய்னர் இந்நிலைக்கு “இருப்பிடமற்றமை” என்று பெயரிட்டிருக்கிறார். அல்லது ஸீபால்டே என்னிடம் சில வேளைகளில் கரடுமுரடாக இருப்பினும் எப்போதுமே திருத்தமாகவே இருக்கும் அவரது ஆங்கிலத்தில் கூறியது போல்: “பொதுமைப்படுத்தும் அளவிற்கும் பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் அனேகமாக மொழிசார்ந்த எல்லைக்கோடுகளில்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.” இவ்வனுபவத்திற்கு இவ்வளவு துல்லியமான, இவ்வளவு குறிப்பிட்ட, இவ்வளவு நுணுக்கமான விவரங்கள் நிறைந்திருக்கும்  உரைநடையைக் கொண்டு வருவதால் அது புகைப்படத்தின் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. “அந்த பழைய மரச்சட்ட-செங்கல் கட்டிடத்தின் வெப்பத்தில் நாள் முழுதும் விரிந்து இப்போது பின்னம் பின்னமாக சுருங்கிக் கொண்டிருக்கும் மரவேலைப்பாட்டின் கிரீச்சொலியையும் முனகலையும் என்னால் கேட்க முடிந்தது,” என்று ரிங்ஸ் ஆஃப் சாடர்ன் -இல், நாட்டுப்புற விடுதியில் கழித்த ஓர் இரவை நினைவுகூர்கிறார். மேலும் தொடர்கையில்  

” அறையின் பழக்கமில்லாத இருளில் ஒலிகள் எழுந்த திசையை நோக்கி என் கண்கள் அனிச்சையாகவே திரும்பின. தாழ்ந்திருந்த உட்கூரையின் குறுக்கே ஓடும் விரிசலையும்,  சுவற்றிலிருந்து சுண்ணம் பிரிந்துதிர்ந்து கொண்டிருந்த இடத்தையும்  அடைசுப்பலகைக்குப் பின்னே பொடிந்து கொண்டிருக்கும் காரைப் பூச்சையும் அவை இயல்பாகவே தேடின. கண்களை சற்று மூடிக்கொண்டால் ஆழ்கடலில் பயணித்துக் கொண்டிருக்கும் கப்பலின் சிற்றறையில் இருப்பது போலும், கட்டிடம் முழுதுமே  ஓர் அலையுடன் உயர்ந்து, அதன் முகட்டில் சிறிது நடுநடுங்கி, ஆழங்களில் அமிழ்ந்தது போலுமிருந்தது.” 

தேசமற்ற அவரது மாபெரும் முந்தையர் ‘த நிகர் ஆப் நார்சிசஸ்’ -இன் முன்னுரையில் எழுதியது போல் “அனைத்திற்கும் மேலாக உங்களைக் கண்ணுறச் செய்வதையே” விரும்புகிறார்.  

எனக்கு முன் மற்றவர்களும் ஸீபால்டின் மாயத்தால் கட்டுண்டிருக்கிறார்கள். சூசன் சாண்டாக், ஏ.எஸ். பயாட் போன்றவர்களின் உணர்ச்சிவசமான புகழுரைகள் ‘த எமிக்ரண்ட்ஸ்’ புத்தகத்தின் பேப்பர்பாக் பதிப்பை அலங்கரித்தன. இங்கிலாந்தில், பல எழுத்தாளர்களின் 1997 ஆண்டிற்கான மிகச் சிறந்த புத்தகங்கள் தேர்வுப் பட்டியலில் அப்புத்தகம் இடம் பிடித்தது. ஆனால் அமெரிக்காவிலோ நான் ஆதரவு திரட்ட முயன்ற நபர்களில் பலர் அவர் பெயரை கேள்விப்பட்டிருக்கக்கூட இல்லை; சமீஸ்டாத் வழியில் அப்புத்தகம் கைமாறிக் கொண்டிருந்தது போலிருந்தது (நண்பரொருவர் சொல்லக் கேட்டுதான் நானே அவரை அறிந்து கொண்டேன்). நாஜி ஜெர்மனியில் நிகழும் காதல் கதையைப் பற்றிய பெர்னார்ட் ஷின்கின் மணிக்கல்லைப் போல் ஒளிரும் சிறிய நாவலான ‘த ரீடர்’ – ரையும் அதன் போருக்குப் பிந்தைய தெறிப்பொலிகளையும் போல் ஸீபால்டின் பெரும்படைப்பும், விளம்பரங்களோ பெரும்பாலும் கவிதைகளை மட்டுமே பதிப்பித்த அதன் வணக்கத்துக்குரிய இலக்கியப் பதிப்பகத்தின் பறைசாற்றல்களோ இல்லாது வாசகர்களை பழைய வழிகளிலேயே சென்றடைந்தது. எவருக்குமே ஆசிரியரைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. அவரது லண்டன் முகவர் விக்டோரியா எட்வர்ட்ஸிடம் அவர் எப்படிப்பட்டவர் என்று கேட்டபோது, அவரை நேரில் சந்தித்ததே இல்லை என்று பதிலளித்தார். எப்போதுமே நடந்துகொண்டிருக்கும் அவரது கதைசொல்லியைப் போல் அவருக்கும் அனைத்து பருவநிலைகளிலும் நடக்கப் பிடிக்கும்; இரண்டு முறை, தொலைபேசியில் அழைத்த போது, அவர் நாய்களை அழைத்துக் கொண்டு வெளியே போயிருப்பதாக அவரது மனைவி என்னிடம் தெரிவித்தார். எழுத்தாளர் பற்றிய விவரக்குறிப்புகள் போன்றவை அவரை மலைக்கச் செய்தன. “உங்களுக்கு த எமிக்ரண்ட்ஸ் பிடித்திருந்தது என்பதை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் இவ்வளவு தூரம் பயணித்து என்னிடம் பேச விரும்புகிறீர்கள் என்பதை நினைத்து திகைப்புற்றேன்,” என்று அவரை பேட்டி எடுப்பதற்காக நான் அனுப்பிய விண்ணப்பத்திற்கு பதிலளித்திருந்தார்.  

நான் எதிர்பார்த்திருந்ததை விட  அவர் இணக்கமாகவே பழகினார். அன்று லண்டனிலிருந்து, ரயிலில், நார்விச்சிற்கு காலையில் வந்திறங்கியபோது மாக்ஸ் வெளியே காத்திருந்தார். ‘த எமிக்ரண்ட்ஸ்’ பத்தகத்தின் பின்னட்டையில் இருக்கும் புகைப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்ததால் அவரை என்னால் அடையாளம் காண முடிந்தது. முதலில், நார்விச்சின் சாலைகளினூடே அவரது லொடலொட பியூஜோவில் சென்று கொண்டிருக்கையில் கூச்சமாக இருந்தவர் விரைவிலேயே பதிப்பாளர்கள், முகவர்கள், முன்பணம் குறித்த தனது நடவடிக்கைகள் போன்ற எழுத்தாளர் பணி விவரங்களைப் பற்றி நிரம்பவே பேசத் தொடங்கினார். “ஃபிரான்சிற்கும் இத்தாலிக்கும் அயல் நாட்டுக் காப்புரிமையை விற்று உங்களுக்காக ஐநூறு பவுண்டுகள் பெற்றிருக்கிறோம் என்று என் பதிப்பாளர்கள் என்னிடம் கூறுவார்கள். ஆனால் அதற்குப் பிறகு அதைப் பற்றி மூச்சு பேச்சே இருக்காது,” என்று எலைன்சில் பணிபுரியும் பத்திரிகை நிருபரைப் போல் பிலாக்கணம் வைத்தார். தனக்கே உரிய அமைதியான, கவனத்தை ஈர்க்காத வழியில், திடமான ஈக்கிரும்பு அகங்காரத்துடன், பெரும் சர்ச்சைக்குரிய விடயங்களைக் குறித்த பொது விவாதங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கு அஞ்சாத, லௌகீகவாதியாகவே அவர் எனக்குப் பட்டார். ரெய்ஷிற்கு எதிராக நேசப்படையினர் தொடுத்த வான் போரின் வரலாற்றைப் பற்றி சென்ற வருடம்  சூரிக்கில் அளித்த தொடர் லெக்சர்கள் ஜெர்மனியின் ஊடகங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டன. “புண்பட்ட நரம்பொன்றைத் தொட்டுவிட்டதை உணர்ந்தேன்” என்று எவ்வித வருத்தமுமின்றி கூறினார். 

/var/folders/z6/p2dqfntn76j82yh5dhr51yhh0000gp/T/com.microsoft.Word/WebArchiveCopyPasteTempFiles/back.jpg
  ‘த எமிக்ரண்ட்ஸ்’ பத்தகத்தின் பின்னட்டை

‘த ரெக்டரி’ என்று பெயரிடப்பட்ட ஸீபால்டின் இல்லம் செங்கல்லால் கட்டப்பட்டிருக்கும் விக்டோரியப் பிரபுமனை. நெடும் சாளரங்கள், நன்றாக திருத்தப்பட்டிருக்கும் புல்வெளியுடன் நார்விச்சின் புறநகர் பகுதியின் மொட்டைச் சந்தொன்றில் அமைந்திருந்தது. ஆறு வருடங்களுக்கு மேலாக அதைத் தன் கையாலேயே அவர் புதுப்பித்துக் கொண்டிருந்தார். அவரது இருண்ட துயரார்ந்த ஊழியை நினைவுறுத்தும் நடைக்கு நேரெதிரான முரணுரையைப் போல் அது நேர்த்தியுடன் துப்புரவாக இருந்தது. அவரது வாசிப்பறையில் அமர்ந்து பேச நாங்கள் தயாராகுகையில், ஐம்பது வயதிருக்கலாம் என்று எண்ணவைக்கும், பிளாண்ட் கேசத்துடன் காட்சியளித்த அவர் மனைவி யுடா (அவர்களிருவரும் ஃபிரெய்பர்க் பல்கலையில் மாணவர்களாக சந்தித்துக் கொண்டார்கள்) வெளியே புல்வெட்டியை இயக்கிக் கொண்டிருந்ததை ஜன்னல் வழியே எங்களால் பார்க்க முடிந்தது. அவர்களின் பெரிய கருப்பு நாய் ஒரு மெத்திருக்கை மீது உறங்கிக் கொண்டிருந்தது. அடுக்குகளில் நேர்த்தியாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் ஜெர்மானிய இலக்கியம் சார்ந்த புத்தகங்கள், கண் கூசவைக்கும் வெண்மையுடன் ஒளிர்ந்த வெள்ளைக் கம்பளம்; விலங்குத்தோலால் செய்யப்பட்டிருக்கும் கூடலக நாற்காலியும், மஞ்சமும்; தீயணைப்பு ஊர்தியின் சிகப்பு நிறத்தில் சாயம் பூசப்பட்டிருக்கும் விறகடுப்பு  என்று அவ்வறையின் சீர்மை என்னை ஏதோவொரு காரணத்திற்காக சங்கடத்தில் ஆழ்த்தியது. சுவற்றில் வரிசையாக தொங்கிக் கொண்டிருந்த தொப்பிகள் மட்டுமே அவ்வறையை சற்று விசித்திரப்படுத்தியது. ஒருகாலத்தில் உயிருடன் இருந்த உருவம் தற்போது ஒரு பழைய கோட்டாலோ மென்மயிர்ப் பிசிறாலோ சுட்டப்படும், மனிதர்கள் அகற்றப்பட்டிருக்கும் ஜோசஃப் பூய்ஸின் அருங்காட்சியக கட்டமைப்புகளை அவை எனக்கு நினைவூட்டின. 

/var/folders/z6/p2dqfntn76j82yh5dhr51yhh0000gp/T/com.microsoft.Word/WebArchiveCopyPasteTempFiles/rec.jpg
ரெக்டரி- ஸீபால்டின் இல்லம்

இப்படித்தான் என்றில்லை, அவர் தன் புறநகர் உறைவிடத்தில் ஒரு பூர்ஷ்வா கடைக்காரராகக் கூட இருந்திருக்கலாம். “சாதாரணமாக வாழ்வதற்கே முயற்சிக்கிறேன்” என்று அவரும் என்னிடம் கூறினார். கூட்டிக் கழித்துப் பார்த்தால் அவர் வாழ்வும் அப்படித்தான் இருந்தது. டீயும் குக்கிகளும் எடுத்து வந்த யுடா சகஜமாக நட்புரிமையுடன் பழகினார்; இருபத்தியாறு வயது பள்ளியாசிரியையான அவர்கள் மகள் ஆனா இங்குதான் பக்கத்தில் வசித்துக் கொண்டிருந்தார். “என் படைப்புகளில் கிஞ்சித்து ஆர்வம்கூட அவள் காட்டியதில்லை,” என்று உறுதியாகச் சொன்னார். என் நினைவில் நின்ற ‘த எமிக்ரண்ட்ஸ்’ -இன் வாக்கியத்தைப் பற்றி அவரிடம் கேட்டேன்: “ஜெர்மனியை நினைக்கையில் ஏதோ ஒரு விதமான பித்துநிலை என்னுள் குடிகொள்வது போலிருக்கிறது”;  அவர் இளம் பிராயத்தைக் கழித்த ஐம்பதுகளிலும், அறுபதுகளின் முதற்சில வருடங்களிலும் நாஜி சகாப்தம் ஜெர்மானிய வரலாற்றின், கிட்டத்தட்ட சாமான்ய நிகழ்வாகவே கருதப்பட்டது என்று விளக்கினார். “1939-இல் என் தந்தை தன் வேலையை இழந்துவிட்டிருந்தார். அவர் பார்வையில், ஒரு லட்ச நபர் வெய்மார் படையில்  சேர அனுமதிக்கப்பட்டது அவரது நல்லதிர்ஷ்டமே. அதில் நுழைவு பெற்றதும் வேலை இருந்தது மட்டுமல்லாது வாய்ப்புகளும் அதிகரித்தது.“

அவர் தந்தை போலந்து போரில் சண்டையிட்டு  அதனிறுதியில் சிறிது காலம்  ஒரு பிரெஞ்சு போர்க்கைதி முகாமில் சிறையிடப்பட்டார். ஆனால் அவ்வனுபவங்களைப் பற்றி அவர் மிக அரிதாகவே பேசினார். ஸீபால்டின் பால்யம், அவரே கூறியது போல் மிகச் சாதாரணமாகவே இருந்தது. “அப்போதெல்லாம் நாம் எதைப் பற்றியும் அதிகம் சிந்திக்கவில்லை. 

படிப்பதற்கான மிதமிஞ்சிய அவா (penchant என்ற பதத்தை பிரெஞ்சு தொனியில் உச்சரித்தார்) என்னிடமிருந்தது என்பதைத் தவிர, பனிச்சருக்கல் இத்யாதி என்று மற்றெல்லோரையும் போலத்தான் நானும் இருந்தேன்.” நகர்ப்புற பூஷ்வாக்கள் என வர்ணித்து தன் பெற்றோர்களை ஏளனம் செய்தார். “ஐம்பதுகள் வரையிலும் ஒரு நிறுவனத்தில் குமாஸ்தாவாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர் மீண்டும் ராணுவத்தில் சேர்ந்தார். அத்துறையின் பரவலான வழக்கத்தின்படி  விருப்ப ஓய்வு பெற்று நாற்பது வருடங்களாக செய்தித்தாள்களைப் படித்து அதன் தலைப்புச் செய்திகளை விமர்சனம் செய்வதைத் தவிர வேறெதையுமே செய்திராது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார். இயல்பான விமர்சனத்திறனுடன், சமகால சச்சரவுகளைப் பற்றிய தன் கருத்துக்களை ஆரவாரமாக முன்மொழிகிறார்.” தன் பிள்ளையின் படைப்புகளைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார்? “பொதுவில் கவனம் பெற்ற படைப்புகளில் ஓரளவிற்கு ஆர்வம் காட்டினார்; இதெல்லாமே அவருக்கு உவப்பாகவே இருந்தது என்று நினைக்கிறேன்.” ஃப்ரெய்பர்க் பல்கலையை சேரும் வரையில் போரின் பேசப்படாத பின்விளைவுகளை ஸீபால்ட் அறிந்திருக்கவில்லை. “மாணவர்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது,” என்பதை நினைவுகூர்ந்தார். “அக்காலத்தில் ஜெர்மானிய கல்லூரிகள் சீர்திருத்தப்படாது, வளப்பற்றாக்குறையால் சீரழிந்த நிலையிலிருந்தன. வகுப்புகளை 1,200 சக மாணவர்களுடன் பகிர நிர்பந்திக்கப்பட்டு ஆசிரியர்களுடன் பேசக்கூட முடியாத ஒரு சூழல். பேச்சுக்குக்கூட நூலகங்கள் இருந்ததாகத் தெரியவில்லை.” ஆனால் அளவிற்கு மீறிய நெரிசலைக் காட்டிலும் நாஜி சகாப்தத்தை குறித்த  மௌனம் சாதித்தலெனும் சதியே அவரை கவலைப்படுத்தியது. 

“என் ஆசிரியர்கள் அனைவருமே நாஜிக்களின் பழுப்புச் சட்டை காலத்தில் தங்கள் ஆசிரியப் பணியைத் தொடங்கியவர்கள் என்பதால் அறரீதியில் சந்தேகத்திற்குரியவர்கள்.  அதிகாரத்தில் இருந்தவர்களை மும்முரமாக ஆதரித்தோ, அவர்களுடன் வழிப்பயணிகளாக செயல்பட்டோ அல்லது ஏதுமே பேசாது மௌனம் காத்தோ இருந்திருக்க வேண்டும் அவர்கள். ஆனால் கல்வித்துறை சார்ந்த சொல்லாடல்களுக்கான விதிமுறைகள் நான் சொல்ல விரும்பியதை சொல்லாமற் செய்து நான் கண்கூடாக அறிந்துகொண்ட, என்னை உறுத்திய விடயங்களை நான் மேலும் விசாரிக்காத செயலின்மையில் என்னை ஆழ்த்தியது. வீட்டில்  நிகழ்ந்த அளவிற்கு வகுப்பறையிலும் பூசணிகளை சோற்றில் மறைக்கும் பழக்கம் நிலவியது. என்னால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.”  ஸ்விட்சர்லாண்டிலிருந்த மற்றொரு பல்கலைக்கு இடம்மாறி அங்கிருந்து மான்செஸ்டரில் ஒரு ஆசிரியர் பதவிக்காக விண்ணப்பம் செய்தார்.  “அப்போது மான்செஸ்டரை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆங்கிலத்திலும் அதிக பழக்கமில்லை. அங்கு தங்கும் உத்தேசமும்  இல்லை. ஒரு வருடம் இருந்துவிட்டு திரும்பி விடலாம் என்று எண்ணியிருந்தேன்.” 

க்லோடனிலிருந்து புகைக்கரியார்ந்த தொழிலக மாநகரத்திற்கு இரவில் விமானத்தில் வந்திறங்கியதைப் பற்றி ஸீபால்ட்  ‘த எமிக்ரண்ட்ஸ்’ – இல்  தெளிவாக விவரிக்கிறார். “ஃபிரான்சையும் கீழே இருளிள் ஆழ்ந்திருக்கும் கால்வாயையும் கடந்தபின், லண்டன் புறநகர்ப் பகுதிகளிலிருந்து நடுநிலங்கள் வரையிலும் வலைபோல் விரிந்திருக்கும் ஒளியாலான தொடர்ச்சங்கிலியைக் கண்டு அதிசயித்தேன். கண்ணைக் கூச வைத்த அவற்றின் ஆரஞ்சு நிறத்து சோடிய ஒளிர்வே நான் இனிமேல் முற்றிலும் வேறுபட்ட  ஒரு உலகத்தில் வாழப்போகிறேன் என்பதற்கான முதல் நிமித்தமாக அமைந்தது… கீழே பரந்து விரிந்திருக்கும் மான்செஸ்டர் எங்கள் கண்களுக்கு இப்போது புலப்பட்டிருக்க வேண்டும் .  ஆனால் சாம்பல் மூட்டத்தில் அங்குமிங்குமாக மட்டுமே புலப்படும் தீக்கங்குகள் போல் மினுக்கும் ஒளித்துணுக்குகளைத் தவிர வேறெதையுமே எங்களால் பார்க்க முடியவில்லை. சதுப்பிலிருந்து உயர்ந்து ஐரிஷ் கடல் வரையிலும் கவிந்திருக்கும் பனிமூட்டம்,  ஆயிரத்திற்கும் மேலான சதுரடிகளாக விரிந்து, எண்ணற்ற செங்கல்களைக் கொண்டு கட்டப்பட்ட, கோடிக்கணக்கான உயிர்கள், வாழ்ந்து மரணித்துக் கொண்டிருக்கும் அந்நகரத்தின் மீதும் படிந்திருந்தது.” 

ஸீபால்ட் எழுதத் தொடங்கியபோது அவருக்கு வயது நாற்பத்தி ஐந்து. “என் வேலை கடினமாகவும் என் விழிப்பு நேரம் அனைத்தையும் கோருவதாகவும் அமைந்திருந்ததால் எழுதுவதற்கான நேரம் எனக்கு கிடைக்கவே இல்லை.” ஒரு கருப்பொருளிலிருந்து மற்றொன்றிற்கு  ஒழுங்குமுறையின்றி தாவுவது போல் தோற்றம் தரும் அவர் படைப்புகளின் அனிச்சையான தொடர்புபடுத்தல்கள் மனநலச் சிகிச்சையின் வழிமுறைகளை நினைவுறுத்தியதால் அவர் அம்மாதிரியான சிகிச்சைகளை எப்போதாவது முயற்சித்ததுண்டா என்று கேட்டேன். “அதிலெல்லாம் ஈடுபடுவதற்கான நேரம் அமையவில்லை. மற்றவர்களின் மனநலச் சிகிச்சை வரலாறுகளைப் படிப்பதுதான் எனக்கு சிகிச்சையாக இருந்திருக்கிறது.” ஆனால் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் கோடைக் காலத்தை வியென்னாவிற்கு அருகாமையில் இருந்த ஒரு மனநல க்ளினிக் ஒன்றில்,  ஒரு வித சிகிச்சை விடுமுறையாக அவர் கழித்தார். பயிற்றுவிக்கும் பணியின் கடினமான வேலைப்பளுவிலிருந்து மீள்வதற்கான ஒரு இடைநிறுத்தமாகவும் தன் எழுத்திற்கான ஆராய்ச்சியாகவும் அவர் அதை பயன்படுத்திக் கொண்டார். அவரிடம் சிகிச்சைக்கு வந்திருந்தவர்களை ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், போன்ற செயல்களில் ஈடுபடுமாறு ஊக்குவித்த லியோ நவ்ராடடில், தன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த, ஸீபால்டை மலைக்கச் செய்த, எர்ன்ஸ்ட் ஹார்பெக்கின் கவிதைகளை புத்தகமாக பதிப்பித்திருந்தார். 

“படைப்பாக்கத்தின் சில அடிப்படைகளை புரிந்து கொள்வதற்கு ஏதுவாக அவ்விடமிருக்கும் என்று நம்பினேன்,” என்று தொடர்ந்தார். அப்படி என்றால் அங்கு நோயாளியாக செல்லவில்லையா? “சே, இல்லை, அப்படியேதும் இல்லை.  எழுதுவதே  மனதை பிறழ்விக்கும் தொழில்தான்: கடினமான, வலுக்கட்டாயமான, அனேக நேரங்களில் மகிழ்ச்சியளிக்காத ஒரு தொழில். நாம் எவ்வாறு கட்டமைக்கப் பட்டிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்வதற்கான விழைவு எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது, கண்ணுக்கு புலப்படாத அடுக்குகளை சென்றடைவதற்கான அவா; ஆனால் பகிரங்க வாக்குமூலங்களை எழுதுவது எனக்கு எப்பொதுமே கடினமாகவே இருந்திருக்கிறது, என் வாழ்க்கையின் வீசுகோட்டை  மற்றவர்கள் வாழ்வின் வீசுகோடுகள் எவ்வாறு குறுக்கீடு செய்கின்றன என்பதையே, அதாவது பொதுவில் என்ணை  வெளிக்காட்டிக் கொள்ளாது பதிலிகள் மூலம் அவ்வெளிக்காட்டுதல்களை நிகழ்த்திக் கொள்வதையே நான் விரும்புகிறேன். “

எனக்குத் தெரிந்த கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான மைகல் ஹாம்பர்கரை ‘த ரிங்ஸ் ஆஃப் சாடர்ன்’ – இல் எதிர்கொண்டது எனக்கு அதிர்ச்சி அளித்தது. எழுபதுகளின் முந்தைய வருடங்களில் ஆக்ஸ்ஃபோர்டில் மாணவனாக படித்துக் கொண்டிருந்தபோது அவரை சந்தித்தேன். சில வருடங்களுக்கு முன் லண்டனிலிருந்து ஓய்வு பெற்று ஸீபால்ட் இல்லத்திலிருந்து இருபது மைல் தூரத்தில் அமைந்திருந்த மிடில்டன் குக்கிராமத்தில் நாட்டுப்புற மனையொன்றில் வசித்து வந்தார்; அவரைச் சந்தித்து இருபது வருடங்களிற்கும் மேலாகி விட்டதென்பதால் அவரைப் போய் பார்த்துவிட்டு வரலாம் என்று ஸீபால்டிடம் முன்மொழிந்தேன்.

வழியில் உணவருந்துவதற்காக சவுதோல்ட் கிரவுன் ஹொட்டலில் நிறுத்தம் செய்தோம். வெதுவெதுப்பான அடக்கத்துடன், பருமட்டுவெட்டு மேஜைகளுடன், வெளிப்புறமாக திறக்கும் குறுகிய கண்ணாடிகள் கொண்ட பே சன்னல்களுடனும் ஊரின் பிரதான சாலையில் அமைந்திருந்தது. குளிர்மிக்க இப்பிப்ரவரி  தினத்தன்று பின்னல் கம்பளி கைச்சட்டையணிந்த முதியோர்களால் நிரம்பி வழிந்தது. பிபிசி நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற நிர்வாகிகளுக்கு சவுதோல்ட் பிடித்தமான இடம் என்று  ஸீபால்ட் விளக்கினார். சொகுசான அவ்வுணவறையில் பழக்கப்பட்ட இடத்தின் இதத்தில் ஸீபால்ட் லயித்திருந்தார். கிரவுனிற்கு  அடிக்கடி வருவதாகவும், “அன்றாடத்திலிருந்து விடுபடுவதற்காக” பலமுறை, சில இரவுகள் தங்கியதுமுண்டு என்று தெரிவித்தார். இடையறாத கண்டிப்பால் நிறைந்திருக்கும் அவர் படைப்பு நகைச்சுவையாகவும் இருப்பது விந்தைதான். ஆனால் ஸீபால்டே, ப்ரிமோ லெவியை விவாதித்துக் கொண்டிருக்கையிலோ அல்லது தான் அண்மையில் படித்த நாஜி ஜெர்மனியில் நிகழ்ந்த கருணைக் கொலைகள் பற்றிய புத்தகத்தை விவரித்துக் கொண்டிருக்கையிலோ ஒருவித நக்கல் கலந்த உற்சாகத்துடனே காணப்பட்டார். (“அமெரிக்கர்களின் வருகைக்கு மூன்று வாரங்களுக்குப் பிறகும், காஃப்பியூரென்  காப்புமனையில் பலி கொண்டு மேலே அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.”)

நானறிந்த பல எழுத்தாளர்களைப் போல் இவரும் நில வாங்கல் விற்றல் விவகாரங்களில் ஆர்வம் காட்டினார்; உணவருந்திய பின் ஊரைச் சுற்றிப் பார்க்கும்போது அவ்வட்டாரத்திற்கு முதலில் வந்தபோதே ஊர்ச் சதுக்கத்திலிருந்த பழம்பெரும் மனைகளில் ஒன்றை வாங்காமல் தவற விட்டதை  நொந்து கொண்டார்; இப்போதோ நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அவற்றின் விலை உயர்ந்துவிட்டது. “எழுத்தில் தன்னை ஒரு துயரார்ந்த மனிதராகத்தான் அவர் காட்டிக்கொள்கிறார். ஆனால் உண்மையில் அவர் ஒரு மிக வேடிக்கையான மனிதர்,” என்று மைகல் ஹல்ஸ் என்னிடம் ஒருமுறை கூறினார். உலகைக் குறித்த அவரது இருண்மையான பார்வைக்கும் அன்றாட வாழ்வின் இணக்கத்திற்குமிடையே உள்ள முரண்பாட்டை அவரிடம் சுட்டிக் காட்டிய போது தோளுயர்த்தி, “பிறக்கையில் ஒரு குறிப்பிட்ட உளநல அமைப்புடன்தான் ஒருவன் பிறக்கிறான். அதன்பின் சில அம்சங்களில் நம்பிக்கையற்றதாகத் தோன்றும் வாழ்க்கை வேறு சில அம்சங்களில் அதன் விசித்திரத்தால் உவர்ச்சியையும் அளிக்கிறது என்பதை அவன் கண்டுகொள்கிறான் .”  சுயமிகப்பெண்ணக் குற்றச்சாட்டுகளை விலக்கும் நோக்கத்துடன் தன்னைப் பற்றி படர்க்கையில் பேசிக் கொண்டார். வாழ்க்கையில் பூஷ்வாவாகவும் கலையில் பித்தனாகவும் இருக்கும்படி முன்மொழியும் ஃபிலொபேரின்  அறிவுரையையும் தன் கருத்தை வலியுறுத்துவதற்காக உடனழைத்துக் கொண்டார். “என்க்கு என் வேலையைத் தக்க வைத்துக் கொள்ளும் ஆசை இருக்கிறது. இதைச் செய்வதற்கு நான் ஒன்றும் சபிக்கப்படவில்லை, என் உள்ளுணர்வு மட்டுமே என்னை வழி நடத்த விட்டிருந்தால் நான் ஒரு துறவியாகியிருப்பேன்.”  

ப்ரொமொனேடிலிருக்கும் மாலுமிகளுக்கான வாசிப்பறையை எனக்கு காட்ட விரும்பினார். சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கலப்பயணக் கருவிகள் மற்றும் காற்றழுத்த அளவிகள், நொய்ந்து போயிருந்த விலங்குத் தோலாலான கைவைத்த நாற்காலிகள் மற்றும் கப்பல்களுக்கான முன்மாதிரிகள், இவை அனைத்தையுமே ஸீபால்டின் விவரணையில் ‘ரிங்ஸ் ஆஃப் சாடர்ன்’ – இல் ஏற்கனவே எதிர்கொண்டிருந்ததால் இப்போது அவற்றை உடனடியாகவே என்னால் அடையாளம் காண முடிந்தது. இரண்டு கிழவர்கள் பின்னறையில் பூல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ‘ரிங்ஸ் ஆஃப் சாடர்ன்’ அவ்வளவு தத்ரூபமாக காட்சிப்படுத்திய இடங்களில் உலாவருவது விசித்திரமாக இருந்தது. நானே அப்புத்தகத்தின் பக்கங்களில் இடம் பெற்றிருப்பது போல் ஒரு உணர்வு.  

/var/folders/z6/p2dqfntn76j82yh5dhr51yhh0000gp/T/com.microsoft.Word/WebArchiveCopyPasteTempFiles/sailor1.jpg

  மாலுமிகளுக்கான வாசிப்பறை
/var/folders/z6/p2dqfntn76j82yh5dhr51yhh0000gp/T/com.microsoft.Word/WebArchiveCopyPasteTempFiles/sailor2.jpg

தாயகம் நீத்த வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளரான ஸீபால்ட் நானறிந்த எந்த எழுத்தாளருக்கும் நிகராக இடம் சார்ந்த நுண்ணுணர்வுகளைக் கொண்டவர் என்று எனக்குத் தோன்றியது. கிழக்கு ஆங்லியாவின் சாலைகளிலும் புல்வெளிகளிலும் நடந்து நடந்தே அதன் கதைகளிலும் கலாச்சார பின்புலத்திலும் தன்னை ஆழ்த்திக் கொண்டவர் அவர். “சஃப்போக் இங்கிலாந்தின் மற்ற இடங்களைப் போல் அல்லாது வரலாற்றின் தீண்டலே இல்லாமல் இருப்பதே என்னை அதன்பால் ஈர்க்கிறது,” என்று குறிப்பிட்டு, “பதினேழாம் நூற்றாண்டிலிருந்து ஆங்கிலேய மண்ணில் பெயருக்குக் கூட ஒரு போர் நடக்கவில்லை.”  எப்பொழுதாவது ஜெர்மனியைக் குறித்த வீட்டேக்கம் ஏற்பட்டிருக்கிறதா என்று கேட்டதற்கு “ஆமாம், அங்கு போகும் வரையில்  இருந்திருக்கிறது. நான் இன்னமும் வருடத்திற்கு பலமுறை அங்கு போய் வருகிறேன். ஒரேயடியாக அங்கு திரும்பிச் செல்வதற்கும் பல முறை முயற்சி செய்திருக்கிறேன், ஆனால் இறுதியில் எப்போதுமே இங்கு திரும்பி வந்து விடுகிறேன்,” என்று பதிலளித்தார். ஒரு கட்டத்தில், எண்பதுகளின் இறுதியில் அவர் ஜெர்மானிய கல்வி நிலையமொன்றில் பணியாற்றினார். போன வருடம் அவருக்கு ஹாம்பர்க் பல்கலையின் படைப்பிலக்கியத் துறையில் ஒரு பதவி அளிக்கப்பட்டது. “ஜெர்மானிய கலாச்சார தொழிற்சாலைக்குள் சிக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. ஜெர்மனியில் வசிப்பது எனக்கு சங்கடமாகவே  இருக்கிறது. ஏதோவொரு உறைந்த தேசத்திலிருப்பதை போல் உணர்கிறேன்.”

நாங்கள் அவ்வூரை விட்டு வெளியேறி ஒரு பழம் பண்ணை வீட்டிற்கருகே ஓடிய வண்டிப்பாதையில்  காரை நிறுத்துவதற்குள் இருட்டி விட்டது. நொய்ந்து போன கார்டிராய் ஜாக்கட் அணிந்திருந்த மைகல் கனமான மரக்கதவைத் திறந்தார். நடு-எழுபதுகளில் இருந்தாலும் நான் கடைசியாக பார்த்தது போலவே இப்போதும், சுருக்கங்களுடன் நலிவுற்ற தோற்றத்துடன் காணப்பட்டார்; அவர் கேசம் இன்னமும் கருப்பாகவே இருந்தது. அவரது அழகான மனைவி, கவிஞர் ஆன் பெரெஸ்ஃப்போர்டும்  நளினமாகவே முதுமை எய்திருந்தார்.

அவர் எங்களை இட்டுச் சென்ற அறை கனமான விட்டங்களுடன் தாழ்ந்திருக்கும் உட்கூரை மற்றும் கருகியிருக்கும் கணப்படுப்புடன், ஈரம் கசிந்து மிகுந்த குளிருடன் ‘பிராண்டே’ நாவலில் வரும் அறை போலிருந்தது. கிளாசட்டிலும், தரையிலிருந்து உட்கூரை வரையிலும் நீண்டிருந்த அடுக்கங்களிலும், வாசிப்பறைக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டிற்கருகே இருந்த குவியல்களிலும் – எங்கு பார்த்தாலும் புத்தகங்களே தென்பட்டன. “வீடு அரை-ஸ்டூவன், அரை-டியூடோர் என்று வகைப்படுத்தும் வழியில் இரண்டு பாணிகளிலுமே கட்டப்பட்டிருக்கிறது. எங்களைச் சுற்றி அது சிறிது சிறிதாக இடிந்து கொண்டிருந்தாலும் எங்கள் இறுதிகாலம் வரை நீடிக்கும் என்று நம்புகிறேன்,” என்றார். 
இப்போது நன்றாகவே இருட்டிவிட்டது. காற்று ஜன்னல்களை படபடத்து இரைச்சலிட்டது. திடீரென்று வீட்டைவிட்டு தொலைதூரம் வந்துவிட்ட உணர்வு என்னை ஆட்கொண்டது. அட்லாண்டிக் கடலை வாரயிறுதியில் கடந்து திரும்பிவிடும் வசதியோ, தொலைபேசிகளோ,  மையவெப்பிதமோ எங்கும் பரவலாவதற்கு முன்னதாக இருந்த இங்கிலாந்தில் இருபத்தைந்து வருடங்களுக்கும் முன் நான் வாழ்ந்து கொண்டிருந்தபோது உணர்ந்ததை இப்போது மீண்டும் உணர்ந்தேன். ஆனால் சிறிது நிமிடங்களுக்குப் பிறகு நாங்கள் கிளம்ப வேண்டிய நேரமாகிவிட்டதால், அந்த பிரமிப்பிலிருந்து நான் விடுபட்டேன். காரில், நார்விச் ரயில் நிலையத்திற்குப் போகும் வழியில், அண்மைக் காலத்தில் பல நண்பர்களுக்கு நேரிட்ட குடும்ப இழப்புகளைப் பற்றி ஸீபால்ட் பேசிக் கொண்டிருந்தார். “பலப் பல வருடங்களுக்கு நோயுற்றவர்களைப் பற்றிய பிரக்ஞையே இல்லாதிருந்தேன். இப்போதோ, என்னைச் சுற்றி அவர்களே நிறைந்திருக்கிறார்கள்.”

/var/folders/z6/p2dqfntn76j82yh5dhr51yhh0000gp/T/com.microsoft.Word/WebArchiveCopyPasteTempFiles/ham1.jpg
/var/folders/z6/p2dqfntn76j82yh5dhr51yhh0000gp/T/com.microsoft.Word/WebArchiveCopyPasteTempFiles/ham2.jpg

அன்றிரவு, லண்டனில் என் வீட்டிற்கு திரும்பிய பின், ‘த ரிங்ஸ் ஆஃப் சாடர்ன்’ – இல் மைகல் வரும் பகுதிகளைத் தேடினேன். அப்புத்தகத்தை அதன் முதற்பார்வைப் படிகளில் மட்டுமே படித்திருந்ததால் புகைப்படங்களை இதற்குமுன் நான் பார்த்திருக்கவில்லை. மைகலின் வாசிப்பறையை காட்சிப்படுத்திய இரு படங்கள் – ஒன்று புத்தகங்கள் குவிந்து கிடக்கும்  அவர் எழுதுவதற்காக பயன்படுத்திய மேஜையையும் அதற்குப் பின் குறுங்கண்ணாடியுடன் இருந்த பே ஜன்னலைக் காட்டியது; மற்றொன்றிலோ கதவிற்குப் பின் செங்குத்தாக உயர்ந்திருக்கும் புத்தகக் குவியலொன்று நமக்காக காத்திருந்தது; என் விழிப்புணர்வில் சமீபத்தில் பொறிக்கப்பட்டிருந்த படிமங்கள் புத்தகத்தின் பக்கங்களிலிருந்து என்னைப் பீரிடுவது நெகிழ்வாக இருந்தது. திடீரென்று சிறுவனாக இருந்தபோது படித்த சி.எஸ். லூவிசின் ‘த லயன், த விட்ச் அண்ட் த வார்ட்ரோப்’ புத்தகம் நினைவிற்கு வந்தது – அதில் கிலாஸட் கதவு வழியே செல்லும் சிறுவர் கும்பலொன்று மற்றொரு உலகத்திற்கு கடந்து  செல்கிறது. மாக்சுடன் இருந்ததும் அப்படித்தான் இருந்தது.

ட்டிற்கு திரும்பிய பின், ‘த ரிங்ஸ் ஆஃப் சாடர்ன்’ – இல் மைகல் வரும் பகுதிகளைத் தேடினேன். அப்புத்தகத்தை அதன் முதற்பார்வைப் படிகளில் மட்டுமே படித்திருந்ததால் புகைப்படங்களை இதற்குமுன் நான் பார்த்திருக்கவில்லை. மைகலின் வாசிப்பறையை காட்சிப்படுத்திய இரு படங்கள் – ஒன்று புத்தகங்கள் குவிந்து கிடக்கும்  அவர் எழுதுவதற்காக பயன்படுத்திய மேஜையையும் அதற்குப் பின் குறுங்கண்ணாடியுடன் இருந்த பே ஜன்னலைக் காட்டியது; மற்றொன்றிலோ கதவிற்குப் பின் செங்குத்தாக உயர்ந்திருக்கும் புத்தகக் குவியலொன்று நமக்காக காத்திருந்தது; என் விழிப்புணர்வில் சமீபத்தில் பொறிக்கப்பட்டிருந்த படிமங்கள் புத்தகத்தின் பக்கங்களிலிருந்து என்னைப் பீரிடுவது நெகிழ்வாக இருந்தது. திடீரென்று சிறுவனாக இருந்தபோது படித்த சி.எஸ். லூவிசின் ‘த லயன், த விட்ச் அண்ட் த வார்ட்ரோப்’ புத்தகம் நினைவிற்கு வந்தது – அதில் கிலாஸட் கதவு வழியே செல்லும் சிறுவர் கும்பலொன்று மற்றொரு உலகத்திற்கு கடந்து  செல்கிறது. மாக்சுடன் இருந்ததும் அப்படித்தான் இருந்தது.

——————————————————–
Source: https://www.theparisreview.org/letters-essays/945/wg-sebald-a-profile-james-atlas

மொழியாக்கம்: நம்பி கிருஷ்ணன்
உதவி: அ.சதானந்தன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.