ஒரு எழுத்தாளரின் ஆதர்சங்கள், விவரணைகள் மீது கூர்ந்தநோக்குடன்

ஜான் வில்லியம்ஸ்

ஸீபால்ட் தனக்குப் பிடித்த ஆறு கலைஞர்களைப் பற்றி எழுதிய, ஒன்றுடன் ஒன்று மெல்லிய தொடர்புடைய ஆறு கட்டுரைகளைக் கொண்ட “A place in the country” ஸீபால்டைப் பாரபட்சமின்றித் தேடிச் சேகரிப்போருக்கே ஆர்வமூட்டக்கூடியதாக இருக்கும் என்று சொல்ல தோன்றுகிறது. ஆனால் ஸீபால்டின் வாசகர்களில் தேடிச் சேகரிக்காத ஒருவரை காண்பது அரிது.


இங்கிலிஷ் மொழி பெயர்ப்பு

தனது 57வது வயதில் 2001ம் ஆண்டில் காலமான ஜெர்மானிய எழுத்தாளர் ஸீபால்ட் வகைப்படுத்த இயலாப் புத்தகங்களைப் படைத்துள்ளார். புனைவு, பயணம், மெல்லிய மறைதலுடன் சொல்லப்பட்ட சுயசரிதை மற்றும் புதிரான குறிப்பற்ற புகைப்படங்கள் என்று பலவற்றைக் கலந்து மறைந்து கொண்டே இருக்கும் மனித அனுபவத்தின் சுவடுகளை மீட்டெடுக்கும் தனது படைப்புகளில் பயன்படுத்தினார். இவரது பிரதான மையக்கரு என்பது, 2001ல் வெளிவந்த, இவருடைய பெரும்படைப்பான ஆஸ்டர்லிட்ஸின்(Austerlitz) கதை சொல்லி சொல்வது போல

“மனதுக்குள் எவ்வளவு சிறிய அளவே தேக்கி வைத்துக்கொள்ள முடிகிறது, ஒவ்வொரு உயிரின் அழிவிலும் எப்படி அனைத்தும் அறியாதவைக்குள் சென்று மறைந்து கொண்டே இருக்கிறது, எப்படி உலகம் உள்ளவாறே தன்னுள் பல நினைவுத் திறனில்லா எண்ணற்ற இடங்களின், பொருட்களின் விவரம் அறியப்படாது, விவரிக்கப்படாது, கைமாற்றப்படாமல் ஓய்கிறது”.

இந்தக் கருவை வளர்த்தெடுப்பதின் மூலம், குறிப்பாக இதை இரண்டாம் உலகப் போருக்கும், யூதப் பேரழிவிற்கும் பிரயோகிப்பதன் வழியாக, ஸீபால்டின் படைப்புகளில் முரண்கள் இயல்புடன் அமைகின்றன. அவர் துல்லியமான ஓர் impressionist. அதீத அளவிலான யதார்த்தத் தகவல்கள் நிறைந்ததாக அவரது புத்தகங்கள் இருந்த போதிலும், அவற்றின் வரலாற்று அடுக்குகளின் இடையே நகர்ந்து செல்லும் தன்மையால் அவைகளை ஒரு குறிப்பிட்ட கால இடத்திற்குள் நிறுத்துவது கடினமாகிறது. அவை காலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மேகம் கண்டு கதை சொல்வதைப் போல் தோன்ற செய்கிறது. அவற்றின் யதார்த்தவாதம் கற்பனையின் பூச்சுடையது. அவரின் கதைசொல்லிகள் எப்போதும் கண்களுக்குப் பட்டதை எல்லாம் விவரித்துச் சொல்லலாம், ஆனால் அவர்கள் கட்டுபாடுகளற்ற நிலையில் தெளிவற்றத் தொடர்புகளைக் கண்டடையும் ஒரே பணியைச் செய்பவர்களாக அமைகிறார்கள். நடைத் தடங்கள், ரயில் ஏற்றங்கள், பாழடைந்த நூலகங்கள் போன்றவற்றில் முடிவின்றி வரலாற்று அடிக்குறிப்புகளைத் தேடுபவர்கள். இப்புத்தகங்களின் சாதாரண அன்றாட சஞ்சலங்கள் எப்போதும் ஒரு பெரும் தேடலின் பின்புலத்துக்குள் அடங்கியவையாகவே நிகழ்கின்றன. வெறும் சலவைக்காகத் துணியைக் கொடுத்து வருபவர்கள் என்று எவருமே இல்லை.

அதனால் அவருக்குப் பிடித்தவர்களும் ஒரு வகையில் கதை படைப்பவர்களாக இருப்பதில் ஆச்சரியமில்லை. 1998ல் ஜெர்மனில் முதல் பதிப்பு கண்ட “A place in the country”யில் வரும் கலைஞர்களைப் பெரும்பாலும் அமெரிக்க வாசகர்கள் அறிந்திருக்கமாட்டார்கள், விதிவிலக்காக ஃஜீன் ஃஜாக் ரூசோவும் (Jean-Jacques Rousseau), ஸ்விட்சர்லாந்தின் நாவலாசிரியரும் கதாசிரியருமான, சமீபத்தில் மீள்பதிப்பின் வழியாக ஒரு சிறுவட்டத்தை ஈர்த்த ராபர்ட் வால்சரும் (Robert Walser) இருப்பார்கள். மற்ற நால்வரான யோஹான் பீட்டர் ஹேபல் (Johann Peter Hebel, பிறப்பு 1760) இட்வா மேரிக்கு (Eduard Mörike, 1804) காட்ஃப்ரீட் கெல்லர் (Gottfried Keller, 1819) மற்றும் ஓவியரான யான் பீட்டர் டிரிப் (Jan Peter Tripp, ஸீபால்டின் நண்பரான இவரின் பகுதிகள் புத்தகத்தில் இணைக்கப்பட்ட உணர்வை அளிக்கிறது).

இக்கட்டுரைகள் ஸீபால்டின் கருப்பு வெள்ளை புகைப்படங்களின் வனப்புடன் கூடியவை, மேலும் கவரச்செய்யும் இரு பக்க மடிப்புகள் கொண்ட வண்ணப் படத்துடன் கூடியவை. இவை ஸீபால்டின் பெரும் படைப்புகளில் உபயோகப்படுத்தபட்ட மறைமுக யுக்தியைச் சார்ந்ததாக உள்ளன. ஒரு கட்டுரையின் தொடக்கத்தில் “பனி யுகத்தில் Rhône பனிப்பாலங்கள் பின்வாங்கித் திமிங்கல முதுகின் வடிவில் வடிவமைந்த, அல்லது அவ்வாறு சொல்லப்படும்” செயின்ட் பியரி தீவை முதல் முறை கண்டதிலிருந்து அதைக் கடப்பதற்கு எப்படி 31 ஆண்டுகள் ஆனது என்பதை நினைவு கூர்கிறார். மேலும், Ville de Fribourg என்ற கப்பலில் கடக்கும் பொழுது அங்கு ‘அடிக்கும் வண்ணத்தில் ஆடையணிந்து’ கப்பலில் பாடிக்கொண்டிருந்த ஸ்விஸ் கொயர் ஆண் குழுவைக் கண்டபோது ‘நான் என் பிறப்பிடத்திலிருந்து எவ்வளவு தொலைவு வந்துள்ளேன்’ என்ற எண்ணத்தை அவர் அடைகிறார். அவர் அந்தத் தீவுக்குச் சென்றது ரூசோ தங்கியிருந்த விடுதியில் நேரம் செலவழிக்க என்று கடைசியில் அறிகிறோம்.

ஸீபால்டின் பாணியானது கூர்ந்த அவதானிப்பிலானது. ரூசோவின் கட்டுரையில் சிறிது நேரத்திற்குப் பிறகு தன்னையே பகடி செய்து கொள்ளத் தொடங்குகிறார். ரூசோ வாழ்ந்த அறைக்குள் நுழைந்த இரு சுற்றுலாப் பயணிகள் மீதான தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்.

“அவர்களில் எவருமே குனிந்து அந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ரூசோவின் கையெழுத்தைப் படித்துப் புரிந்துகொள்ள முயலவில்லை” என்று எழுதுகிறார். அவர்கள் “கழுவிவிடப்பட்ட தரைப் பலகைகள், இரண்டடி அகலத்தில், அறையின் மையப் பகுதியில் தேய்ந்து ஒரு சரிவை உண்டாக்கியிருப்பதையும், மரத்தின் பலகையில் முடிச்சுகள் ஓரங்குலம் புடைத்திருக்கும் இடங்களையும், பலகாலப் புழக்கத்தால் இழைந்துவிட்ட இடைக்கூடத்தையும், கல்பட்டைகளையோ அல்லது நெருப்பிடத்தில் சுற்றிவரும் கரும்புகையின் மணத்தையோ எவரும் கவனிக்கவில்லை.” என்று ஷெர்லாக்ஸ் ஹோம்ஸைப் போன்று குற்றம் சாட்டுவது வேடிக்கைதான்.

இந்தப் புத்தகத்தில் வெளிப்படும் குதூகலம், வாசகர்களை மற்ற படைப்புகளை நோக்கிச் செலுத்தும் (நான் ஹேபலின் கதைகளுக்கு வாங்குவதற்கு ஆணை சொல்லிவிட்டேன்), இருப்பினும் இதில் நிலைத்திருக்ககூடிய ஆர்வத்தை கொடுக்கப்போவது ஸீபால்ட் ‘தனது எழுத்துப் பாணியைக் குறித்துக் கருத்துகளை’ கூறும் தருணங்களிலேயே என்று புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளரான ஜோ காஸ்டலிங் அவரது முன்னுரையில் சொல்கிறார். வெவ்வேறு வாசகர்கள் வெவ்வேறு இடங்களில் ஒன்றுதலை அறிவார்கள். அவர் எழுதிய “கெல்லரின் உரைநடை, முழுமையாக உலக வாழ்க்கைக்கெனவே ஒதுக்கப்பட்ட போதிலும், அது வியக்க வைக்கும் உச்ச நிலையை அடைவது காலத்திற்கு அப்பாற்பட்டவைகளைத் தொட முயலும் தருணங்களிலேயே.” இவ்வரிகளில் நான் ஒன்றுதலை அடைந்தேன். அவர் ஹேபல் குறித்து இவ்வாறு அவதானிக்கிறார் “மையப் பாத்திரத்தை எப்போதும் தரிக்காது ஆனால் எப்போதும் தன்னை ஒருவரின் அருகில் நிறுத்திக்கொண்டு பேய்களைப் போல, இவை அவர் கதைகளில் கணிசமாக இடம்பெற்றுள்ளது, விலகலும் புதிர் உணர்வுடனும் அவதானிக்கும் பழக்கம் கொண்டவைகள்.”

ஸீபால்ட் இந்தக் கட்டுரைகளில் மென்மை கொண்டு மனித இயல்புடன் வெளிப்படுகிறார். அந்த மேகத்துக்கு ஒரு மனித முகம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது இருளடைந்துமிருக்கிறது. அவர் “எண்ணத்தின் நோய்க்கூறு அம்சங்களை” பற்றி “எண்ணத்தின் நோய்”, “எண்ணத்தின் எந்திரத்தன்மை” என்று சுருக்கென்று எழுதுகிறார். எழுத்தைப் பற்றி, “தொடர்ந்து தன்னைப் பரப்பிக் கொள்ளும் செயல்பாடு”, “இதில் குதித்துத் தப்பிக்க இயலாதவர்தனை தொற்றிக்கொண்டு கற்பனையில் நிகழும் தீஞ்செயல்” என்கிறார்.

எதிர்பாராவிதமாக, பல கட்டுரைகளில் ஸீபால்ட் பல முக்கியமில்லாத உரைநடைகளின் மீது நாட்டம் காட்டுகிறார். ஹேபலின் “காலண்டர் கதைகள்” பற்றி “அதன் கச்சிதத்தின் அம்சம் அது எளிதாக மறந்து விடக்கூடியதாக இருப்பதிலேயே உள்ளது” என்கிறார். வால்சரின் “படிக்கும்போதே கரைந்து விடக்கூடிய உரைநடை, சில மணி நேரங்களுக்குப் பிறகு சிற்றே காலங்கொண்ட அந்த உருக்களும், நிகழ்வுகளும், பேசியவைகளும் ஞாபகத்தில் இருப்பதில்லை”. மேலும் அவர் வால்டர் பெஞ்சமினின் வரிகளை ஏற்புடன் மேற்கோள் காட்டுகிறார் “வால்டரின் ஒவ்வொரு சொற்றொடரின் நோக்கம் என்னவெனில் முந்தைய சொற்றொடரை மறக்க வைப்பதாகும்.” ஒருவேளை ஸீபால்டுக்கு மீட்டெடுப்பதிலேயோ அல்லது அனைத்தையும் ஞாபகத்தில் கொள்ளச் செய்வதிலேயோ ஆர்வமில்லை போலிருக்கிறது. மறைந்துவிட்ட பொருட்களின் மீது அவர் கொண்ட காதலாக மட்டுமே இருக்கலாம். 

———-
மூலக்கட்டுரை ; https://www.nytimes.com/2014/02/10/books/a-place-in-the-country-essays-by-w-g-sebald.html

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.