எலியனார் வாக்டெல்: [1]
தி எமிக்ரண்ட்ஸ்புத்தகத்தில் ஸேபால்ட் ஒரு தலைமுறைக்கு நினைவாஞ்சலி ஒன்றைப் படைக்கிறார். இது நினைவு, நாடு கடத்தல், மேலும் சாவைப் பற்றிய ஒரு அசாதாரணமான புத்தகம். இந்த எழுத்து பாடல் நயம் கொண்டது, மனோபாவத்தில் இது ஒரு சரமகவி. இந்தக் கதைகள் இல்லாதவற்றையும், இடம் மாற்றப்படுதலையும், இழப்பையும், தற்கொலையையும், ஜெர்மனியரையும் யூதரையும் பற்றியவை, குறைவாகச் சொல்லப்பட்டிருந்தாலும், நம் உணர்வுகளைக் கிளறும் விதத்திலும், நம்மைப் பீடித்து ஆட்டும் விதத்திலும் எழுதப்பட்டவை. ‘தி எமிக்ரண்ட்ஸ்’, நாவல் என்றும், உரைநடையில் நான்கு வாத்திய இசை போன்றது, அல்லது எளிதில் வகைப்படுத்த முடியாதது என்றும் பலவிதமாக வருணிக்கப்படுகிறது. நீங்கள் அதை எப்படி வர்ணிப்பீர்கள்?

W.G.ஸேபால்ட்:
அது ஒரு வகை உரைநடைப் புனைவு. இந்த வகை எழுத்து யூரோப்பிய கண்டத்தில் அதிகம் காணப்படுகிறது, ஆனால் ஆங்கிலோ-சாக்ஸன் உலகில் அத்தனை புழக்கமில்லாதது, அதாவது, உரையாடலுக்கு இதில் அனேகமாக எந்தப் பங்கும் இல்லை. எல்லாமே பல முனைகளைச் சுற்றி ஒரு பெரிஸ்கோப் வழிக் காட்சி போல உறவு கொண்டிருப்பவை. அந்த விதத்தில் சராசரி புனைவுகள் நிறுவி இருக்கும் எந்த பாணிக்கும் இது ஒத்து வராதது. இதில் எழுத்தாளர் ஒரு கதை சொல்லியாக வருவதில்லை. இந்த மாதிரிப் பல இல்லாமைகள் இந்தப் புத்தகத்தை ஒரு தனி வகைமாதிரியில் ஒதுக்குகின்றன. ஆனால் அதை என்னவென்று அழைப்பது என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை.
எ.வா: நான்கு பேரின் வாழ்க்கைகளைப் பற்றிய நான்கு கதைகளை நீங்கள் இணைத்திருக்கிறீர்கள், அவற்றிடையே தொடர்புகள் உண்டு, அவை ஒத்த அதிர்வுடன் ஒலிக்கின்றன, ஆனால் சொல்லப்படும் விதத்தில் தனித்தனியே நிற்கின்றன. இவற்றை ஒன்றாக்கி, தி எமிக்ரண்ட்ஸ்புத்தகமாகக் கொடுக்க வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?
ஸே: ஏனெனில் அவற்றின் பாணிகள் ஒருப்போல இருந்தன. அவை எல்லாமோ தற்கொலைகளைப் பற்றியவை. அல்லது இன்னும் கறாராக சொல்வதானால், முதிய வயதில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைகள். அது ஒப்பீட்டில் அரியது, ஆனால் தப்பிப் பிழைத்தவர் என நாம் அறியும் நபர்களின் மனநலிவுக்கான அறிகுறியாக நிறையவே நடப்பது.
ழான் அமேரி, ப்ரீமோ லெவி, பௌல் செலான், டடெயுஸ் பொரோவ்ஸ்கி மேலும் பலர் ஷொஆ -வினால் [2] தம் வாழ்வின் மீது கவிந்த இருண்ட நிழல்களிலிருந்து தப்பிக்க முடியாமல், இறுதியில் தம் நினைவுகளின் பாரம் தாங்காமல் இறந்தார்கள் என்ற தகவலின் மூலம் இந்த மனநலிவின் அறிகுறியைப் பற்றி கருத்தளவில் எனக்குத் தெரிந்திருந்தது. இந்த மனிதர்களிடம், வாழ்வின் நடுவயதைத் தாண்டிய பிறகே, அவர்கள் வேலைகளிலிருந்து ஓய்வு பெறும் வயதை எட்டும் போது என்று சொல்லலாம், திடீரென்று ஏதோ விதமான வெற்றிடம் ஏற்படுகிறது, அதன் பிறகே இத்தகைய முடிவு நேர்கிறது. தொழில் முறை வாழ்வுடைய கடமைகள் பின்னணிக்கு நகர்ந்து கரைகின்றன, அப்போது, உங்களுக்குத் தெரியுமே, திடீரென்று யோசனைக்கு நிறைய நேரம் எஞ்சுகிறது. 1989, 1990 வாக்கில் நான் ழான் அமேரியின் வாழ்க்கையைப் பற்றி ஆய்ந்து கொண்டிருந்தேன் – அவர் நான் வளர்ந்த இடங்களுக்கு அருகே ஒரு பகுதியில்தான் பிறந்திருந்தார் என்பது ஒரு காரணம்- அப்போது ஒரு கட்டத்தில், அவரை சேர்க்கக் கூடிய வகைமாதிரியில் அனேகமாகக் கச்சிதமாகப் பொருந்தக் கூடிய நால்வரை எனக்குத் தெரியும் என்று எனக்குத் தோன்றியது. அந்த இடத்தில்தான் நான் இவர்களின் வாழ்க்கைகளைப் பற்றி மிகுந்த ஆர்வம் கொண்டேன், அவற்றைத் துருவி நோக்கத் தொடங்கினேன், பயணம் செய்தேன், என்னால் முடிந்த வரையில் எல்லா தடயங்களையும் சேகரிக்க முயன்றேன், இறுதியில் அவற்றை எழுதி விட நேர்ந்தது.
இந்தப் புத்தகத்தில் வரும் கதைகள் அனேகமாக இந்த நான்கு பேரின் வாழ்க்கைகளின் பாதைகள் அல்லது கோடுகள் நிஜத்தில் எப்படி இருந்தனவோ அவற்றையே பின் தொடர்கின்றன. நான் செய்த மாறுதல்கள், சில திசை மதிப்புகளைக் கூட்டியதும், சிலவற்றை முன் கட்டத்தில் சுருக்கியதும், இங்கும் அங்கும் சிறிது சேர்த்ததும்தான். சிலவற்றை நீக்கினேன், அவை மிகச் சிறிதும், முக்கியமல்லாதவையுமான மாற்றங்கள், பாணியில் செய்த மாற்றங்கள், உள்ளீட்டில் அல்ல. முதல் மூன்று கதைகளில் அனேகமாக ஒவ்வோரிடத்திலும் எனக்குத் தெரிந்திருந்த சிலரின் வாழ்வுக்கும், கதை நாயகர்கள் வாழ்வுக்கும் நேரடிப் பொருத்தமே இருந்தது. நான்காவது கதையைப் பொருத்தமட்டில், நான் இரண்டு மாற்றுருக்களைப் பயன்படுத்தினேன். ஒருவர் இங்கிலாந்தில் இன்னமும் செயல்படும் ஓர் ஓவியர், இன்னொருவர் மான்செஸ்டர் நகரில் நான் முதலில் குடியேறியபோது, தங்கியிருந்த விடுதியின் சொந்தக்காரர். மான்செஸ்டர் நகரில் இருந்த அந்த வீட்டுச் சொந்தக்காரர் இன்னும் உயிரோடு இருப்பதால், இந்த மாதிரி கிட்டத்தட்ட ஆவணப் பதிவு போன்ற ஒரு படைப்பில், அவர் சற்றும் மறைக்கப்படாத உருவில் அப்படியே கொடுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. அதனால் அத்தனை நேரடியாகத் தெரியாமல் இருக்க இன்னொருவரின் வாழ்வை மறைப்பாகப் பயன்படுத்தினேன். ஆனால் எனக்குத் தெரிந்த நபர்கள் கிட்டத்தட்ட இதே மாதிரி வாழ்க்கைக் கட்டங்களைத்தான் கடந்து வந்தனர், அது எனக்கு நன்கு தெரியும்.
எ.வா: ஓரிடத்தில் நீங்கள் சொல்கிறீர்கள், அது “இறந்தவர்கள் திரும்பி வருவது போலிருந்தது, அல்லது நாம் அவர்களோடு சேரும் புள்ளியில் இருப்பதாகத் தோன்றியது.” இந்தக் கருத்து உங்களைப் பீடித்திருப்பதாகத் தோன்றுகிறது.
ஸே: என்னவென்றால், இதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. ஆனால் சாவு என்பது என் வாழ்வில் முதல் கட்டத்திலேயே வந்து விட்டது. நான் ஒரு சிறு கிராமத்தில் வளர்ந்தேன், ஆல்ப்ஸ் மலையில் மிக உயரத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் மூவாயிரம் அடிகள் உயரே இருந்த கிராமம். உலகப் போர் முடிந்து, அடுத்து வந்த வருடங்களில் அங்கே நான் வளர்ந்தேன், பல விதங்களில் அது ஒரு புராதனமான இடம். உதாரணமாக, குளிர் காலத்தில் இறந்தவர்களைப் புதைக்க அங்கு வழி இருக்கவில்லை. ஏனெனில் தரை உறைந்து இறுகிப் போயிருக்கும், அதில் குழி வெட்ட வழி இருக்கவில்லை. அதனால் உடலை மரம் அடுக்கிய கொட்டகையில் பனி நீங்கி தரை இளகும் வரை, ஒரு மாதமோ, இரண்டு மாதமோ வைத்திருக்க வேண்டி வரும். நாம் சாவு நம்மருகிலேயே உள்ளது என்ற தெளிவோடு வளர்வோம். யாராவது இறந்தால், அது வீட்டின் நடுவில்தான் நடக்கும். இறந்த அந்த மனிதர் நாம் வாழும் அறையிலேயே தன் இறுதிக் கட்டத் துன்பங்களை அனுபவிப்பார், நாம் பார்க்க நேரும். புதைக்கும் முன், அவர்கள் நம் குடும்பத்தின் ஒரு பகுதியாக மூன்று, நான்கு நாட்களுக்கு இருப்பார்கள். அதனால் மிக இளம் பிராயத்திலிருந்தே எனக்கு சாவு பழகி இருந்தது, இன்று அனேகருக்குப் பழக்கமாவதை விட கூடுதலாகவே சாவதும், சாவோரும் பழக்கமாகி இருந்தனர். என் மனதின் பின்பகுதியில் இவர்கள் நிஜத்தில் போய் விடவில்லை, நம் வாழ்வின் எல்லைகளில் எங்கோ சுற்றி வருகிறார்கள், அவ்வப்போது சிறிது நேரம் நம்மை வந்து பார்த்துச் செல்கிறார்கள் என்ற எண்ணம் இருந்து கொண்டே வந்திருக்கிறது. ஒளிப்படங்கள் என்னைப் பொறுத்தவரை, இறந்தவர்களின் வெளிப்பாடுகளில் ஒன்று. குறிப்பாக நம்முடன் இல்லாதவர்களின் பழைய ஒளிப்படங்கள் அத்தகையவை. இருந்தபோதிலும், படங்களின் மூலம் அவர்களுக்கு ஆவி போன்ற ஒரு இருப்பு கிடைக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இது மாயாஜால அல்லது குய்யக்[3] கருத்துகளோடு சம்பந்தப்பட்டதல்ல. அவற்றை விடப் பழமையான விதங்களில் இந்த வகை விஷயங்களை அணுகும் முறையில் இன்னும் எஞ்சி இருப்பது இது எனலாம்.
கோர்ஸிகாவைப் போல ஓர் இடத்துக்கு நீங்கள் போனால், உதாரணமாக…. இந்நாளில் அதெல்லாம் முன்போல இல்லை என்பது உண்மைதான், ஆனால் மிகச் சமீப காலம் வரையிலும், இருபது வருடங்கள் முன்பு கூட, கோர்ஸிகர் பண்பாட்டில் இறந்தவர்களுக்கு எந்தக் கேள்வியும் இல்லாது உயிருடன் இருப்பவர்கள் வாழ்வில் ஒரு பங்கு, ஓரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் எப்போதுமே அங்கீகரிக்கப்பட்டு இருந்தனர், முனைத் திருப்பத்தில் அவர்கள் இருப்பதாக ஒரு நினைப்பு எப்போதும் இருந்தது, வீட்டுக்குள் ஒரு மாலையில் அவர்கள் வந்து ஒரு துண்டு ரொட்டியை எடுத்துப் போக வருவார்கள், அல்லது முக்கியத் தெருவில் ஒரு ஊர்வலமாக மேள தாளத்தோடு செல்வார்கள் என்றெல்லாம் நினைப்பது வழக்கமாக இருந்தது. இன்னும் பழமை வழக்கங்களைத் தக்க வைத்திருக்கிற பண்பாடுகளில், இவற்றில் சில, யூரோப்பில் ஒதுங்கிய பகுதிகளில் ஆங்காங்கே இருந்தன, அதாவது 1960கள் வரை இருந்தன என்று நினைக்கிறேன், எப்போதுமே நம்மை நீங்கியவர்களின் இருப்பு தொடர்வதாகவே நினைப்பு இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வருடங்களில் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் இந்த வகைக் கருத்து இருந்தது. இப்போது அதெல்லாம் அழிக்கப்பட்டு விட்டன, அது உண்மைதான். ஆனால் எப்படியோ இந்தக் கருத்து என் மனதில் தங்கி விட்டது, ஒருக்கால் இதிலிருந்துதான் என் முனைப்பு தோன்றி இருக்கிறது என்று சொல்லலாம்.
எ.வா: உங்கள் பிரதியோடு பல ஒளிப்படங்களைச் சேர்த்திருக்கிறீர்கள்- ஜனங்கள், இடங்கள், நகர்வெளிகள் அல்லது நிலவெளிகள் போன்றன, அவை எல்லாமே உணர்வைத் தட்டி எழுப்புவனவாக இருக்கின்றன, நினைவிலிருந்து அகல மறுக்கின்றன. எழுதப்பட்டதில் அவை ஒரு தேடலைத் தூண்டுகின்றன. நாம் ஒரு ஒளிப்படத்தையோ, அவற்றின் தொகுப்பையோ பார்க்கிறோம், அல்லது யாரோ ஒருவர் ஒன்றைச் சுட்டுகிறார், அது நம்மை எங்கோ அழைத்துப் போகிறது.
ஸே: சரி, இந்தப் படங்களுக்கு வெவ்வேறு துவங்கு தலங்கள் உள்ளதோடு, வெவ்வேறு நோக்கங்களும் உள்ளன. ஆனால் பெரும்பாலான ஒளிப்படங்கள் முப்பதுகள், நாற்பதுகளில் மத்திய வகுப்பு மக்கள் நிச்சயமாகத் தங்கள் படத் தொகுப்புகளில் வைத்திருந்த படங்களிலிருந்துதான் எடுக்கப்பட்டன. அவை நம்பத்தக்க இடங்களிலிருந்து வந்தவை. பிரதியில் சேர்க்கப்பட்ட படங்களில் தொண்ணூறு சதவீதம் படங்கள் நம்பகமான இடங்களிலிருந்து வந்தவை என்று சொல்லலாம், அதாவது அவை கதையைச் சொல்லப் பயன்படுத்தப்பட்ட இதர இடங்களிலிருந்து வரவில்லை.
அவை பிரதியில் இரண்டு நோக்கங்களுக்கு உதவுகின்றன. முதலாவதும், தெளிவாகத் தெரிவதுமானது, ருசுப்படுத்துவதற்காக- நாம் எல்லாருமே எழுத்தை நம்புவதை விடப் படங்களை அதிகம் நம்புகிறோம். எதற்காவது ஆதாரம் காட்ட ஒரு படத்தை நாம் கொணர்ந்தால், ஜனங்கள் அது அப்படித்தான் இருந்திருக்கும் என்று ஏற்கத் தயாராகி விடுகிறார்கள். தி எமிக்ரண்ட்ஸ்புத்தகத்தில் உள்ள படங்களில் சாத்தியப்பாடு மிகக் குறைவாக உள்ளவை கூட இந்தக் கருத்துக்கு சான்றாக இருக்கும், அவற்றின் சாத்தியப்பாடு எத்தனைக்குக் குறைவோ அத்தனைக்கு அவை நம்பப்படுவதும் கூடுதலாக இருக்கும். உதாரணமாக, கதை சொல்பவரின் பெரிய மாமன் யெருசலெம் நகரில் 1913 ஆம் வருடம் அரபு உடையில் தோற்றம் தருவது ஒரு நிஜமான ஒளிப்படம். அது கற்பிதம் அல்ல, விபத்துமல்ல, ஏதோ தருணத்தில் தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்டு கதையில் நுழைக்கப்பட்டதல்ல அது. ஆக, ஒளிப்படங்கள் கதை சொல்லி தன் கதையை நம்பகமானதாக்க உதவுகின்றன. எதார்த்தக் கதைகளில் இது எப்போதுமே இப்படித்தான் இருந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இந்தப் புத்தகம் ஒரு வகை எதார்த்தக் கதைதான். பத்தொன்பதாம் நூற்றாண்டில், நிச்சயமாக ஜெர்மன் மரபில், எழுத்தாளர் எப்போதுமே சிரத்தை எடுத்து விளக்குவார், சரி, இங்கிருந்துதான் நான் இதையும் அதையும் பெற்றேன், இந்த ஆவணத்தை இந்த அல்லது அந்த ஊரில், இந்த வீட்டில் அலமாரியின் மேலே கண்டெடுத்தேன் என்பது போலத் தெரிவிப்பார். அது அவரது மொத்த அணுகலையும் நியாயமானது என்றாக்கும் முயற்சி.
இன்னொரு முயற்சியாக நான் பார்ப்பது, கால ஓட்டத்தை நிறுத்த முடியுமா என்று பார்ப்பது. புனைவு என்பது காலத்தினில் பயணம் செய்யும் வடிவம், ஒரு முடிவை நோக்கிச் செல்வது, கீழ்நோக்கிய சரிவில் இயங்குவது, இந்த மாதிரி ஒரு வடிவில் காலப் போக்கைத் தடுத்து நிறுத்துவது என்பது மிக, மிகக் கடினமான செயல். நமக்கு எல்லாம் ஒன்று தெரியும், அதனால்தான் நம் எல்லாருக்கும் காட்சி வடிவக் கலைகளில் சில வகைகள் மிகப் பிடிக்கின்றன- நீங்கள் ஒரு அருங்காட்சியகத்தில் நின்றபடி, பதினாறு அல்லது பதினெட்டாம் நூற்றாண்டில் யாரோ வரைந்த அருமையான படங்களைப் பார்க்கிறீர்கள். நீங்கள் காலத்திலிருந்து வெளியே அகற்றப்பட்டு விடுகிறீர்கள், இப்படி கால ஓட்டத்திலிருந்து உங்களை நீங்களே விடுவிக்க முடிகிறது என்பதால், அது ஒரு வகையில் மிகச் சிறப்பான மீட்சியாகும். ஒளிப்படங்களிலும் நீங்கள் இதையே செய்ய முடியும்- ஓட்டத்தைக் குறைக்கும் தடுப்பணைகளைப் போல அவை செயல்படுகின்றன. படிப்பின் வேகத்தைக் குறைக்கின்றன என்பதால், அவற்றை நான் ஆக்க பூர்வமான பயன்பாடாகப் பார்க்கிறேன் எனலாம்.
எ.வா: ஒரு விமர்சகர் உங்களை ஆவி வேட்டைக்காரர் என்று வருணிக்கிறார். நீங்கள் உங்களை அப்படிப் பார்க்கிறீர்களா?
ஸே: ஆமாம், அப்படித்தான் பார்க்கிறேன். அது கச்சிதமான விவரிப்பு என்று நினைக்கிறேன். இதொன்றும் பேய் பைசாச லயிப்பு இல்லை, பதிலாக, ஒருவேளை இங்கே இல்லாத ஜனங்களின் வாழ்வுகள்- இவர்கள் உறவினர்களாகவோ, எனக்குச் சிறிதே தெரிந்தவர்களாகவோ, முன்னாளில் தெரிந்திருந்த எழுத்தாள சகபாடிகளாகவோ, அல்லது பதினாறாம் நூற்றாண்டில் செயல்பட்ட ஓவியர்களாகவோ இருக்கலாம்- ஏதோ அலாதியான விதமாக இப்போது என் வாழ்வில் இருப்பதாக, எனக்கு ஒரு விசித்திர உணர்வு எழுகிறது. நான் அவர்களைப் பற்றி அறிய ஈடுபாடு கொண்டிருக்கிறேன் என்ற எளிய உண்மையால் இது எழலாம். ஒரு நபர் மீது நாம் ஈடுபாடு கொள்கிறோம் என்றாகும்போது, நாம் நிறைய உணர்ச்சிச் சக்தியை அதில் இடுகிறோம், ஒரு விதத்தில், அந்த நபரின் எல்லைக்குள் வசிக்க முற்படுகிறோம். இன்னொருவரின் வாழ்வோடு நாம் உணர்ச்சி பூர்வமாக ஒன்ற முயல்வதன் மூலம் அதில் நம் இருப்பைப் பதிக்கிறோம். அந்த வாழ்க்கை எத்தனை காலம் பிந்தையது என்பது ஒரு பொருட்டே இல்லை. அது ஏனோ அத்தனை பொருட்படுத்தப்பட வேண்டிய விஷயமாகவே இல்லை. பதினாறாம் நூற்றாண்டின் ஓர் ஓவியர் பற்றி நமக்குக் கிட்டுவன மிகச் சில தகவல் துண்டுகள்தாம் என்றாலும், நமக்குப் போதுமான அளவு ஈடுபாடு எழுந்தால், அது நம்மை அவரின் வாழ்வில் பொருத்திக் கொள்ள அனுமதிக்கிறது, அல்லது அந்த வாழ்வைத் தற்காலத்துக்கு மீட்டுக் கொண்டு வரக் கூட உதவுகிறது என்று கூறலாம்.
நான் முதலில் எழுதியவற்றில் ஒன்று நீண்ட உரைநடைக் கவிதை (ஆஃப்டர் நேச்சர் என்பது), அது பதினாறாம் நூற்றாண்டின் ஓவியர் மத்தியாஸ் க்ரூனவால்ட் என்பவரைப் பற்றியது. அவருடைய ஓவியங்களைத் தவிர, விவரங்களாக இவரைப் பற்றி நாம் மிகக் குறைவாகத்தான் அறிந்திருக்கிறோம். இந்த அறியாமையெனும் இடைவெளியும், நமக்குக் கிட்டி இருக்கிற சில தகவல்களும் எப்படியோ இவருடைய எல்லைக்குள் நுழையவும், அங்கே தேடிப் பார்க்கவும், உணரவும், சில காலம் கழிந்த பின் சொந்தமான இடமாக உணரவும் எனக்குப் போதுமானதாக இருக்கின்றன. இன்றைய காலத்தை விட அந்தக் காலத்தில் எனக்கு ஈடுபாடு கூடுதலாக இருக்கிறது. நான் சொல்வது, ரயோ டி ஜெனரோவுக்கோ, ஸிட்னிக்கோ போவது எனக்கு முற்றிலும் அந்நியமாகப் படுகிறது. என்னை அங்கெல்லாம் என்ன வசியம் செய்தும் உங்களால் இழுக்க முடியாது. நான் இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன் என்ற உண்மையே எனக்கு மிகவும் விசித்திரமாக இருக்கிறது.
எ. வா: தி எமிக்ரண்ட்ஸ் நூலில் உங்களுடைய ஒரு பாத்திரம் ஒரு பள்ளி ஆசிரியர், அவருடைய பெயராக பௌல் பெரெய்டெர் என்றிருக்கிறது. நீங்கள் சொல்கிற மாதிரி, உங்களுடைய சொந்த, இனிமையான நினைவுகளைத் தாண்டிப் போய், உங்களுக்குத் தெரியாதிருந்த ஒரு கதையைக் கண்டு பிடிக்கும்படி உங்களைத் தூண்டியது எது?
ஸே: நான் வளர்ந்த சிற்றூரில்- எனக்கு ஏழோ, எட்டோ வயதிருக்கையில் கிராமத்திலிருந்து அருகிலிருந்த சிற்றூருக்கு நாங்கள் குடி பெயர்ந்தோம் – நான் துவக்கப்பள்ளிப் படிப்பைப் பெற்றேன், அங்கு இந்த குறிப்பிட்ட ஆசிரியர் எனக்குப் போதித்தார். எட்டு வயதிலிருந்து பதினெட்டு வயது வரை, போருக்குப் பிந்தைய எல்லா வருடங்களையும் நான் கழித்த இந்த ஊரில், இந்த மனிதர் பல விதங்களில் துன்புறுத்தப்பட்டிருந்தார், 1935 இல் தன் ஆசிரியர் வேலையை விட்டு நீக்கப்பட்டிருந்தார், 1945க்குப் பிறகு அவர் திரும்பி வந்து, விட்ட இடத்தில் தொடர்ந்தார் என்பதை எல்லாம் யாரும் என்னிடம் சொல்லவில்லை. எல்லாருக்கும் இது பற்றித் தெரிந்திருந்தது. எனக்குச் சரியாகத் தெரியவில்லை, அந்தச் சிற்றூரில் என்ன, சுமார் எட்டாயிரம் பேர், வசித்திருப்பார்களா – அங்கு ஒவ்வொருவருக்கும் மற்ற அனைவரின் தகவல்களும் தெரிந்திருந்தன. அந்த ஆசிரியரும்- இந்த விஷயத்திலேயே மிகவும் புதிரான அம்சம் இதுதான் – அதை எல்லாம் சொன்னதும் இல்லை. ஒரு சிறுவனாக இருந்த நான், இந்த மனிதருக்கு நெருக்கமாக உணர்ந்திருந்தேன் – அவரை நான் மிகவும் பாராட்டி நோக்கியிருந்தேன் – என்பதால் அவரைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பினேன். அந்த அளவில் நீங்கள் அதன் முதல் கட்டத்தில் அதை கிட்டத்தட்ட துப்புத் துலக்கும் செய்தியாளரின் வேலை என்று சொல்லலாம். ஒரு முறை ஒரு இழை நமக்குக் கிட்டி விட்டால், உங்களுக்குத் தெரியுமே, அதை வெளியே இழுத்துப் பார்க்கவும், அதில் என்ன அமைப்பு இருக்கிறது என்று பார்க்கவும் விரும்புவோம். எத்தனை கடினமாக அந்த வேலை ஆகிறதோ- இந்த விஷயத்தில் அப்படி ஆயிற்று, ஏனெனில் அந்த ஊரில் யாரும் அந்த நபரின் வாழ்வைப் பற்றிப் பேச விரும்பவில்லை- அத்தனைக்கு நீங்கள் அதைப் பற்றி அறியத் தூண்டப்படுகிறீர்கள்; அதில் ஏதோ புதைந்திருக்கிறது என்று அறிகிறபோது, அதைக் கைவிடும் எண்ணம் உங்களுக்குக் குறைந்து போகிறது.
எ.வா: அவர்கள் ஏன் உங்களிடம் பேச விரும்பவில்ல? இதெல்லாம் 40, 50 வருடங்களுக்கு அப்புறமாயிற்றே.
ஸே: ஆமாம். அதில், உங்களுக்குத் தெரியாதா, மௌனமாக இருப்பது பற்றிய ரகசிய ஒப்பந்தம் இன்னும் நீடிக்கிறது. மற்ற நாடுகளில் இருக்கும் மக்கள் இதைக் கற்பனை செய்யக் கூட முடியாது. அங்கு நான் வளர்ந்த போது எனக்கு இது புரியாததாக இருந்தது, நான் பகுத்தறிந்து சிந்திக்கத் துவங்கியபோதும் சரி, அதாவது எனக்குப் பதினாறு அல்லது பதினேழு வயதிருக்கும்போதும் அப்படியே இருந்தது, இதெல்லாம் போர் முடிந்து பதினைந்து வருடங்களான பிறகுதான். இன்றிலிருந்து காலத்தில் பின்னோக்கி யோசித்தேனானால், 1997 இலிருந்து பதினாறு அல்லது பதினேழு வருடங்கள் பின்னே, 1980 ஐ நோக்கினால், அது நேற்றைப் போலத்தான் எனக்கு இருக்கிறது. அதனால் என் பெற்றோருக்கும், 1960 வாக்கில் என் ஆசிரியர்களுக்கும், 1941 இலிருந்து ’46, ’47 வரையான பெரும் ஆபத்தாக இருந்த வருடங்கள் நேற்றுத்தான் நடந்தவை போல இருந்திருக்க வேண்டும். அப்படி ஒரு பயங்கரமான காலத்தை வரலாற்றில் கடந்து வந்தவராக நீங்கள் இருந்தால், அதில் மிகக் கொடுமையான வகையில் சம்பந்தப்படுத்தப்பட்டவராகவும் இருந்தால், அதைப் பற்றிப் பேச உந்துதல் இருக்கும் என்று நினைக்கக் கூடும். ஆனால் அந்த மௌனமாக இருப்பது பற்றிய ரகசிய உடன்பாடு … எப்படியோ எழுந்திருக்கிறது, என்றுதான் சொல்ல வேண்டும். அது திருமணமான துணைவர்களிடையே கூட தொடர்ந்திருந்தது என்று நான் நினைக்கிறேன். என் பெற்றோர்கள், இதையெல்லாம் பற்றித் தங்களுக்குள் பேசி இருப்பார்கள் என்று என்னால் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. அது ஒரு தடை செய்யப்பட்ட பகுதி, அங்கு யாரும் நுழைய விரும்பவில்லை. இப்படித் தாமாக எழுப்பிக் கொண்ட தடைகளின் பரப்புகள், இருப்பதில் மிகச் சக்தி வாய்ந்த தடைகள் என்று நான் நினைக்கிறேன்.
எ.வா: பெரெய்டர் கால் பங்கு யூதராக இருந்ததால் அவர் ஆசிரியராக இருக்க அனுமதிக்கப்படவில்லை, நகர மக்கள் அவரை ஒதுக்கினர், அவர் வெளிநாட்டுக்குச் சென்று வாழும்படி ஆகியது. ஆனால் அவர் 1939 இல் ஜெர்மனிக்குத் திரும்பி வந்தார். ஏன்?
ஸே: நிஜ நிலைமையை நாம் கற்பனை செய்து பார்க்க முடிந்தால், அதற்கு நல்ல காரணங்கள் இருந்தன என்று நினைக்கத் தோன்றும். அவருக்கு அப்போது சுமார் இருபத்தி இரண்டு, இருபத்தி மூன்று வயதாகி இருக்கும். ஒரு ஞாயிறின் மாலைப் பொழுதில் இந்தக் குடும்பத்தோடு அவர் இருக்கும் ஒரு ஒளிப்படம் அந்தப் புத்தகத்தில் இருக்கிறது. ஆசிரியர் வேலையிலிருந்து நீக்கப்பட்டபின் அவர் அந்த மத்திய தரக் குடும்பத்தில் தனிப்பட்ட ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்திருந்தார். இந்தப் படத்தில் மிகவும் இளைத்து, ஒல்லியாகத் தெரிகிறார். அந்த மாற்றம் அவருக்கு மிகவும் துன்பம் கொடுக்கும் ஒன்றாக இருந்திருந்தது என்று அதிலிருந்தே நாம் முடிவு கட்டலாம். 1930களின் கடைசி வருடங்களில் ஃப்ரான்ஸ் எப்படி இருந்தது என்று நீங்கள் யோசித்தால், ஒரு இளைஞன் – அப்போது, எப்படிப் பார்த்தாலும் அவர் ஒரு இளைஞன் தான் – ஜெர்மனிய வாலிபன், பகுதி யூதனுமானவன், தன் எசமானர்களோடு தினமும் சாப்பாட்டு மேஜையில் அமர்வது, அதுவும் காலையில் குழந்தைகளுக்குப் பாடம் போதித்து விட்டு, சாப்பாட்டு மேஜையில் நடக்கும் உரையாடல்களைக் கேட்டுக் கொண்டு, அதுவும் ஃப்ரான்ஸில் பொதுவாக சாப்பாட்டின் போது உரையாடல்கள் நீண்ட நேரமும் நடக்கும்…. நண்பகல் உணவு பல மணி நேரம் நீடிக்கும், அப்போது குடும்பத் தலைவரானவருக்கு தன் அரசியல் பார்வையையும், அபிப்பிராயங்களையும் பற்றிப் பேச நிறைய அவகாசமும் இருக்கும். ஃப்ரெஞ்சு மத்திய தரக் குடும்ப வாழ்வில், அந்தக் கட்டத்தில் மதிப்பிடுகள் பெரும்பாலும் வலது சாரியைச் சார்ந்தவையாக இருந்தன என்று நினைக்கிறேன், அதாவது, ஜெர்மனியிலிருந்து வானொலி, செய்தித்தாள்கள் வழியே வந்த செய்திகள் பெரும்பாலும் ஏற்கப்பட்டன: அப்படித்தான் செய்ய வேண்டும், இதைத்தான் நாமும் செய்ய வேண்டும் என்று. எனவே ஃப்ரான்ஸுக்குப் போவதன் மூலம், ஒரு விதத்தில் அவர் அப்படி ஒன்றும் தப்பி விடவில்லை. இதில் அங்கதம் என்னவென்றால், இதெல்லாம் கடந்த சில வாரங்களிலும், மாதங்களிலும் பொதுவெளியில் வெளிப்பட்டிருக்கின்றன. இன்று நியூயார்க் டைம்ஸில் மொரீஸ் பப்போன் மீது ஒரு நீதி விசாரணை போர்டூவில் நடந்ததைப் பற்றி ஒரு அறிக்கை இருக்கிறது. அதெல்லாம், ஏதோ விதமாக, இந்தக் கதையோடு தொடர்புள்ளவையாகவே இருக்கின்றன.
எனவே, அவர் ஃப்ரான்ஸில் மிகவும் உறுத்துகிற நிலை இருப்பதாகத் தீவிரமாக உணர்ந்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். 1939 ஆம் வருடத்து இறுதியில் இனி எல்லாம் படு மோசமாகப் போகிறது என்பதை எவரும் உணர்ந்திருப்பார்கள். எனவே அவர் ஜெர்மனிக்குத் திரும்பி இருக்கிறார், ஏனெனில் அதொன்றுதான் அவருக்கு நன்கு தெரிந்த இடம். மேலும், இதை நான் புத்தகத்தில் ஓரிரண்டு இடங்களில் தெளிவாக்கி இருக்கிறேன் என்று நினைக்கிறேன், அந்த இளம் ஆசிரியர், முழுவதுமே ஜெர்மன் அச்சில் வார்க்கப்பட்டிருந்தவர். வாண்டர்ஃபோகெல் இயக்கத்திலிருந்து வந்தவரைப் போல எனலாம், ஒரு ஜெர்மன் லட்சியவாதியாக இருந்தார், லட்சிய நோக்குகளால் நிரம்பி, கல்வியைப் பரப்பும் ஊக்கத்தோடு, விவசாயிகளின் குழந்தைகளுக்குக் கல்வி போதிக்க அப்பர் ஆஸ்த்ரியாவுக்குப் [4] போன இளம் விட்கென்ஷ்டைனைப் போலவே, ஓரளவு இவரும் இருந்தார். ஆக, அவர் ஜெர்மனிக்குத் திரும்பியது அத்தனை வியப்பு தரவேண்டியதில்லை.
இங்கு என்ன புதிராக உள்ளது என்றால், அப்போது அவர் ஜெர்மன் ராணுவத்தில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டார் என்பதும் – ஒரு ‘முக்கால் பங்கு’ ஆரியர் அப்படிச் சேர அனுமதிக்கப்பட்டார், ராணுவத்தில் பணி புரிதல் சாத்தியமாக இருந்தது- அவர் மொத்தப் போரையும் தாண்டிப் பிழைத்திருந்தார் என்பதும்தான். அதற்குப் பிறகு அவர் முன்பு எந்த ஊரில் ஆசிரியராக இருந்தாரோ அந்த ஊருக்கே திரும்பி வந்தார். அவை, அதாவது 1945க்குப் பிறகு அவர் ஜெர்மனிக்குத் திரும்பினார், அங்கே தங்கி வாழ்ந்தார், முந்தைய காலங்களில் நடந்த பயங்கரங்களை நினைவில் கொள்ளாமல் ஒதுக்கி ஒடுக்கி மௌனம் காத்து வாழ்ந்தார் என்பன, அவைதான் எனக்குப் புரியாதவையாக இருக்கின்றன.
எ.வா: மேலும், அதற்கப்புறம் அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், பௌல் பெரிடி [5] ஸ்விட்சர்லாந்துக்குப் போகிறார். ஆனால் அவர் முன்பிருந்த ஊரில் வசித்த மக்களை அவர் வெறுத்த போதிலும், அங்கு தன் அடுக்ககத்தை அவர் இன்னமும் தன் வசம் வைத்திருந்தார்.
ஸே: ஆமாம், முற்றிலும்.
எ.வா: ஏன் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிந்ததா?
ஸே: என்ன என்றால், அதெல்லாம் இரு தலைக் கொள்ளி நிலை என்பார்களே அது போலத்தான், இல்லையா? உளவியலாளர்கள் இதைப் பற்றி நிறையத் தெரிந்து வைத்திருப்பார்கள். உங்கள் பெற்றோர்களிடமிருந்து விலகிச் செல்ல நீங்கள் விரும்பலாம், ஆனால் அப்படிப் போக உங்களால் முடியாது, ஏனெனில் அவர்களை அப்படித் தனியாக விட்டு விட்டுப் போனதற்காக உங்களை அவர்கள் வெறுக்கக் கூடும் என்பது உங்களுக்கு அச்சம் தருகிறது. நான் சொல்வது, நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் அது தவறாகவே இருக்கும் என்பது. இந்த இருதலைக் கொள்ளி நிலை அனேகமாக எல்லாருடைய வாழ்வையுமே கூடவோ குறைவாகவோ கட்டுப்படுத்தி ஆள்கிறது என்று நினைக்கிறேன். இவர் விஷயத்தில், குறிப்பாக இது மிக நாசகரமான வகையான இரட்டை நிலையாக இருந்திருக்கிறது, உங்களை எந்த நாடு கெடுத்ததோ அந்த நாட்டோடே நீங்கள் தொடர்ந்து வாழ வேண்டிய நிலை. ஆனால் பல யூத-ஜெர்மனியரின் கதைகள் முழுதுமே இதே போன்றவைதான்.
எ.வா: பெரிடியின் ஒரு நண்பர், “நம் விழைவுகளில் இருக்கிற எதிரிடைகள்’ பற்றிப் பேசுகிறாரே.
ஸே: ஆமாம். யூதர்கள் ஜெர்மனியில் ஒன்றியதன் வரலாறு, பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே துவங்கிய ஒன்று, அதில் இத்தகைய இரட்டை மனோ நிலைகள் நிறைய இருக்கிறது. ஷ்சில்லிங், லெஸ்ஸிங் என்ற வித யூதப் பெயர்கள்- யூத மக்கள் இந்தப் பெயர்களை வரித்துக் கொண்டார்கள், அந்த எழுத்தாளர்களை அவர்கள் மதியொளி யுகத்துக்கும், சகிப்புத்தன்மைக்கும் வாதாடியவர்களாகப் பார்த்துப் பாராட்டியதே அதற்குக் காரணம். யூத மக்களுக்கும், யூதரல்லாத (ஜெண்டைல்கள்) மக்களுக்கும் இடையே மிக மிக நெருக்கமான ஒன்றுதல் முன்பு இருந்தது. குறிப்பாக, யூதர்களுக்கும் நாட்டுப் புறத்துக்கும், நாட்டுப்புறத்தின் நில அமைப்புகளுக்குமிடையே அப்படி ஒரு மனமொருமித்தல் இருந்தது, இது யூதர்களின் இரண்டாம் பெயர்களில் தெரியும். அவர்கள் ஃப்ராங்க்ஃபர்ட் என்றோ, ஹாம்பர்கர் என்றோ, வீனர் என்றோ அழைக்கப்பட்டார்கள். அந்த நகர்களோடே அவர்கள் ஒன்றியவர்களாகப் பார்க்கப்பட்டனர் என்று சொல்லலாம். அவர்களுக்கு அத்தகைய ஒன்றுதலைக் கைவிட்டு விட்டு, அதை எல்லாம் மறக்க வேண்டி வந்தமை மிகவும் கடினமான ஒன்றாக இருந்திருக்கும்.
நான் ஈடுபாடு கொண்டிருப்பது முக்கியமாக பண்பாட்டு, சமூக வரலாற்றில்தான், தவிர ஜெர்மனியில் யூதச் சிறுபான்மையினருக்கும் மற்ற பெரும்பான்மை மக்களுக்கும் இடையே இருந்த உறவு என்பது பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை ஏதோ ஒரு வடிவில் ஜெர்மனியின் பண்பாட்டு வரலாற்றின் மிக மையமான, மிக முக்கியமான அத்தியாயங்களாக உள்ளவை. உங்களுக்கு நீங்கள் வளர்க்கப்படும் பண்பாட்டுச் சூழல் பற்றி அதன் குறைகளோடும், மோசமான அம்சங்களோடும் கூடப் புரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால், எனக்கு அப்படி ஓர் ஆர்வம் துவக்கத்திலிருந்தே இருந்தது, இந்தப் பிரச்சினையை எதிர் கொள்ளாமல் தாண்டி வருவது சாத்தியமல்ல. என்னுடைய சொந்த ஊரில் இருந்த கூட்டு ஒப்பந்தமாக நிலவிய மௌனத்தைப் பற்றி முன்னர் பேசினேன். பத்தொன்பது வயதில் நான் பல்கலைக்குப் போன போது, அங்காவது வேறு விதமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே செய்தேன். ஆனால் அப்படி இல்லை, சிறிதும் இல்லை. 1960கள் முழுவதும், ஜெர்மனியின் பல்கலைகளில் இந்தக் கூட்டுச் சதியான மௌனம் நிலவவே செய்தது.
ஆனால் அதே நேரம், அதாவது நான் என் புத்தியைப் பயன்படுத்தத் துவங்கிய காலகட்டத்தில் எனலாம், போர்க்காலக் குற்றங்கள் பற்றிய பெரிய விசாரணைகள், ஃப்ராங்க்ஃபர்ட்டில் நேர்ந்த ஔஸ்விட்ஸ் பற்றிய நீதி விசாரணைகள், அவை பல மாதங்கள் தொடர்ந்தன, ட்ரெப்லிங்கா பற்றிய விசாரணைகள் டஸ்ஸல்டார்ஃபில், மேலும் இது போன்ற பல விசாரணைகள் பல இடங்களில் நடந்தன, அப்போது என் தலைமுறையின் முக்கியமான பிரச்சினை வெளிப்படையாக பொதுவுக்கு வந்தது. அது தினமும் செய்தித்தாள்களில் வெளியாயிற்று, நீதிமன்ற நடப்புகள் பற்றி நீண்ட அறிக்கைகள் வெளியாயின, இத்தியாதி. ஆகவே ஒருவர் இதை எல்லாம் எதிர் கொள்ளத்தான் வேண்டி இருந்தது. என்ன நடந்தது என்பது பற்றி நிரூபணங்கள் கொடுக்கப்பட்டன, திட்டவட்டமான, மறுக்கவியலாத நிரூபணங்கள் அவை. இருந்தாலும் அதே நேரம் எங்கள் பல்கலைகளில் கூட்டமர்வுகளில், உங்களுக்குத் தெரியும், நாங்கள் ஒரு காதல் கதையையோ, ஈ.டி.ஏ. ஹாஃப்மானையோ அல்லது அது போன்ற எதையோ படித்தோம், நிஜ வரலாற்றுப் பின்னணியில் அங்கு நடந்த விசாரணைகளைப் பற்றி எதுவும் இல்லை, அங்கிருந்த சமூக நிலைமைகள், சமூக நிலமைகளால் ஏற்பட்ட உளநிலைச் சிக்கல்கள் போன்றவற்றைப் பற்றி ஏதும் இல்லை. அதாவது, பல்கலையில் நாங்கள் செய்தது கலப்படமில்லாத, சுத்தமான மொழி ஆராய்ச்சி, அது நாங்கள் தெரிந்து கொள்ள விரும்பிய எதற்கு அருகிலும் எங்களை இட்டுச் செல்லவில்லை. குறைந்த பட்சம் என்னைப் பொறுத்தவரை அப்படி இருந்ததாகத்தான் எப்போதும் தெரிந்திருந்தது. எல்லாக் குழந்தைகளுக்கும் ஒன்று தெரியும்- நம்மிடம் கொடுக்கப்படாமல் ஏதாவது ஒதுக்கி வைக்கப்பட்டால், அதைத்தான் இன்னமும் கூடுதலாக நாம் விரும்புவோம். நிச்சயமாக, பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதிலிருந்து, நான் இந்த விஷயங்களைப் பற்றி மேன்மேலும் தெரிந்து கொள்ளவே எப்போதும் முயன்றிருந்திருக்கிறேன் என்றே சொல்லலாம்.
எ.வா: உங்கள் குடும்பத்தில் பலர் அமெரிக்காவுக்குக் குடிபோகத் தீர்மானித்தனர், ஆனால் நீங்கள் இங்கிலாந்தைத் தேர்ந்தெடுத்தீர்கள், ஏன்?
ஸே: அதொரு வரலாற்று விபத்து. சிறுவனாக இருந்தபோது அமெரிக்காவுக்குப் போவதுதான் என் பெருவிருப்பாக இருந்தது, ஏனெனில் அமெரிக்கா அப்போது ஒரு லட்சிய நாடாக இருந்தது. ஆனால் பின்னாளில் நான், அமெரிக்க எதிர்ப்பு உள்ள கட்டத்தில் இருந்தேன், 1960களில் யூரோப்பில் வளர்வதில் அது ஓர் சகஜமான நிகழ்வு, அப்போது எல்லாமே அமெரிக்க எதிர்ப்பாக இருந்தன, அது அமெரிக்கா போவதில் எனக்கிருந்த ஆர்வத்தைத் தணித்திருக்க வேண்டும். எனக்கு இருபத்தியொரு வயதாகையில்- அப்போதுதான் யூரோப்பிய கண்டத்தை விட்டு நீங்கப் பயணப்பட்டேன் – எங்கே போவது என்பது பற்றி எனக்கு ஒரு தெளிவும் இருக்கவில்லை. எனவே, மான்செஸ்டரில் நான் வந்திறங்கியது தற்செயலாக நடந்தது. நான் ஏதாவது வேலை ஒன்றைச் செய்தபடி என் மேற்படிப்பைத் தொடர்வதையே எதிர்நோக்கி இருந்தேன். பிரிட்டிஷ் பல்கலைகளில் மொழி-உதவியாளர் பதவிகள் இருந்தன என்பது எனக்குத் தெரிந்திருந்தது. எனவே நான் அவற்றில் பலவற்றுக்கு விண்ணப்பித்தேன், மான்செஸ்டர் ஆதரவு தெரிவித்துப் பதிலெழுதியது. எனவே நான் என் பெட்டியை நிரப்பிக் கொண்டு அங்கே போனேன், அங்கு ஒரு வருடம் இருப்பதாகவோ, அல்லது இரண்டு, மூன்று வருடங்கள் இருந்து என் முனைவர் பட்டத்தை வாங்கிக் கொண்டு விடலாம் என்றோ யோசித்திருந்தேன். ஆனால் இறுதியில் நான் அந்த நாட்டிலேயே சிக்கிக் கொண்டேன், ஏனெனில் அது எப்படி ஆயிற்றென்றால், அந்த நாடு இன்னமும் கூட, குடியிருந்தால் மகிழ்வூட்டும் நாடாக இருக்கிறதென்பதால்தான்.
எ.வா: இருந்தபோதும் ஒரு கட்டத்தில், மான்செஸ்டரில் படித்த பின்னர், நீங்கள் ஸ்விட்சர்லாந்திலும், ம்யூனிக்கிலும்[6] வாழ முயற்சித்ததாகவும், அது சரிப்பட்டு வரவில்லை என்றும் சொல்லி இருக்கிறீர்கள். ஏன் அப்படி ஆயிற்று?
ஸே: ஸ்விட்சர்லாந்தில், ஜெர்மன் மொழி பேசும் பகுதியில் உள்ள, சன்ட் கால [7] என்ற ஒரு சிற்றூரில் ஒரு தனியார் பள்ளியில் போதித்தேன். அதை நடத்தியவர் ஒரு மாஃபியாக்காரர் தெரியுமா, மாணவர்களிடமிருந்து பிரதி மாதம் அவர் பெற்றது நிறையப் பணம், அல்லது ஒரு மாணவரிடமிருந்து பெற்றதே கூட ஆசிரியருக்கு அவர் கொடுத்ததை விட அதிகமாக இருந்திருக்கும். அந்த மொத்த அமைப்புமே நம்ப முடியாதபடி விசித்திரமாக இருந்தது. அங்கு இருக்கையில் அந்த வேலையை ஒன்பது மாதங்களுக்கு மேல் செய்ய மாட்டேன் என்று முதல் நாளிலேயே எனக்குத் தெரிந்து விட்டது, அப்படித்தான் ஆயிற்று. மேலும் ஸ்விட்சர்லாந்தின் ஜெர்மன் பகுதியில், அது இப்போதும் அழகாக இருக்கிறதென்றாலும்- அங்கு ஏராளமான மக்கள் நாம் செய்வதில் எல்லாம் தலையிடுபவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் ஒரு ஞாயிறு அன்று உங்கள் தோட்டத்தில் குழி தோண்டினீர்களானால், அவர்கள் போலிஸிடம் போய் இவர் ஞாயிறன்று தோட்டத்தில் குழி தோண்டினார் என்று புகார் செய்வார்கள். அந்த மாதிரி நடப்போடு என்னால் சற்றும் வாழ முடியாது.
ம்யூனிக்கிலும் சுற்றுவட்டாரத்திலும் நான் இருந்த வருடத்தில், நான் மிக நன்கு தெரிய வந்த க(ர்)ட்ட இன்ஸ்டிட்யூட் [8] என்ற ஒரு ஜெர்மன் கலாச்சார அமைப்புக்காக வேலை செய்து வந்தேன். பிரிட்டனில் நான் ஒரு முனைவர் பட்டம் வாங்கிய பிறகு, நான் வேலை தேடிக் கொண்டிருந்த கட்டம் இது. அதனால் அந்த வேலையைச் செய்தேன். ஆனால், வெளிநாடுகளில் பொதுவெளியில் பகிரங்கமான விதத்தில் ஜெர்மனியின் முகவராக இருப்பதென்பது, அது எவ்வளவு விலகியதாக, மறைவானதாக இருந்தது என்றாலும், மிகவும் அதிகாரம் சார்ந்த குறுக்கிடலாக இருப்பதாக நான் உணர்ந்தேன். அருகில் நெருங்கிப் பார்த்தபோது, அது எனக்கானதில்லை என்றும், நான் மறுபடி (இங்கிலாந்துக்கு) திரும்பிப் போய் ஒளிந்து வாழ்வதையே விரும்புகிறேன் என்பது போலவும் உணர்ந்தேன்.
எ.வா: ஒளிந்து இருப்பதையா?
ஸே: அதான், நான் இப்ப எங்கே இருக்கிறேனோ அது ஒரு அத்துவானம். கிழக்கு இங்கிலாந்தில், நார்விச்சுக்கு அருகே ஒரு சிறிய கிராமத்தில் இருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மையமான இடத்தில் இருப்பதை விட இப்படி ஒரு இடத்தில் இருப்பது எனக்கு மேலானது என்று நான் உணர்கிறேன். விளிம்புகளில் இருப்பது சாத்தியம் என்றால் அதையே நான் விரும்புகிறேன்.
எ.வா: ஜெர்மனியுடன் எவ்வளவு ஒட்டுதலாக இப்போது உணர்கிறீர்கள்?
ஸே: சரி, எனக்கு அது என் நாடு என்பது தெரியும். இத்தனை வருடம் கழித்தும், அதை விட்டு வெளியே வந்து …அது சுமார் முப்பது வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கும் இப்போது. அங்கு இருந்ததை விட வெளியேதான் அதிக வருடங்கள் இருந்திருக்கிறேன். அங்கேயும் விளிம்புகளில்தான் இருந்தேன், தென் ஜெர்மனியின் விளிம்புகளிலிருந்து என்று சொல்லலாம்- என் தாத்தாவின் வீடு ஆஸ்த்ரியாவின் நேர் எல்லைக்கருகே இருந்தது. அதை விட்டு நீங்கியபோது, நான் வளர்ந்த அந்தப் பகுதியை எனக்கு நன்கு தெரிந்திருந்தது. எனக்கு ஃப்ரைபர்க்கைத் தெரிந்திருந்தது, ம்யூனிக்குக்கு ஓரிரு தடவைகள் போயிருந்தேன். ஆனால் அறுபதுகளின் மத்தியிலோ, துவக்கத்திலோ யாரும் அதிகம் பயணங்கள் மேற்கொண்டதில்லை. எனவே எனக்குத் தெரிந்தது மிகக் கொஞ்சம்தான். ஃப்ராங்ஃபர்ட்டை எனக்குத் தெரியாது. ஹாம்பொர்க் தெரியாது. வடக்கு அல்லது நடு ஜெர்மனி பற்றி ஏதும் தெரிந்திருக்கவில்லை- ஹானோவர், பெர்லின் எல்லாம் முற்றிலும் அன்னியமானவை. எனவே ஒரு நோக்கில் அது என் நாடு இல்லை. ஆனால் அதன் வினோதமான வரலாற்றாலும், இந்த நூற்றாண்டில் [8] அதன் வரலாறு அப்படி ஒரு சரிவைச் சந்தித்தது என்பதாலும், அல்லது இன்னும் கருக்காகச் சொல்வதானால், 1870 இலிருந்தே அப்படி என்பதால், சரி, ஆனால் அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று அதை நாம் கைவிட்டு விட முடியாது என்று உணர்கிறேன். அந்தப் பையை நான் பரம்பரைச் சொத்தாகப் பெற்றிருக்கிறேன், எனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அதை நான் சுமக்க வேண்டும்.
எ.வா: மேலும் நீங்கள் இன்னும் ஜெர்மன் மொழியில்தான் எழுதுகிறீர்கள்.
ஸே: நான் இன்னும் ஜெர்மன் மொழியில்தான் எழுதுகிறேன், ஆமாம். வெகு சில பேர்களே இரு மொழிகளில் எழுதுகிறார்கள், பல மொழிகளில் திறமை படைத்திருந்த நபொகாவ் போன்ற ஒருவர் கூடத்தான். ரஷ்ய மொழியை விட்டு விட்டு இங்கிலிஷுக்கு நகர்ந்த நபொகாவ் இங்கிலிஷோடு தங்கி விட்டார். மொழி பெயர்ப்புகளுக்கு ரஷ்யனைப் பயன்படுத்தினார் என்ற போதும், அந்த மொழி பெயர்ப்பைச் செய்த பிறகு அந்த மொழியில் அவர் எழுதவில்லை, எனக்குத் தெரிந்த வரையில். நபொகாவ் செய்ததைப் போல வேற்று மொழிக்கு நகர்வது மிக, மிக ஆபத்து நிறைந்த வேலை என்று நான் சொல்வேன், மிகத் துன்பமானதும் கூட. இது வரை அந்த முடிவை எடுப்பதை நான் தவிர்க்க முயன்றிருக்கிறேன். குறிப்பிட்ட இந்தப் பிரச்சினையோடு போராட வேண்டிய நிலையில் இருக்கும் எழுத்தாளர்கள் என்று என்னால் அதிகம் பேர்களை நினைக்க முடியவில்லை. அங்கே எலியாஸ் கானெட்டி இருந்தார், ஜுரிக்குக்குத் திரும்புமுன் பல பத்தாண்டுகளுக்கு லண்டனில் வசித்தார், இங்கிலிஷைக் கச்சிதமாகவும் நன்றாகவும் பேசினார், ஆனால் எனக்குத் தெரிந்து அவர் இங்கிலிஷில் ஒரு வரி கூட எழுதியதில்லை. என்னைப் பொறுத்தவரை, ஒரு மொழியில் அவ்வளவு ஆழமான திறமையை அடைவது மிகவும் கடினம். நாம் எவ்வளவுதான் பேச முடிந்தாலும், அதனால் நாம் நன்கு எழுதுவோம் என்று பொருளாகாது. அது முற்றிலும் வேறு விதமான முயற்சி.
எ.வா: நீங்கள் நபகோவைச் சொன்னதால் இதைக் கேட்கிறேன், தி எமிக்ரண்ட்ஸ் புத்தகத்தில் பட்டாம்பூச்சிக்கான வலையோடு திரியும் மனிதர் பற்றி, அது நபொகாவ்தான், குறிப்புகள் உண்டு. அந்தப் புத்தகத்தின் மீது அவர் ஏன் கவிந்து இருக்கிறார்?
ஸே: அந்த ஓவியரைப் பற்றி எழுதலாம் என்ற கருத்து எனக்கு எழுந்த போது அந்த யோசனை எனக்கு வந்தது என்று நினைக்கிறேன். அந்தக் கதையில், உங்களுக்குத் தெரியுமே, மற்ற விஷயங்களோடு, ஒரு இரண்டாம் திரியான கதை சொல்லல் என்பது போல, அந்த ஓவியரின் அம்மாவுடைய பிள்ளைப் பிராய நினைவுகள் வருகின்றன. நிறைய அளவு இவை உள்ளீட்டில் நிஜமானவை, நிஜ வாழ்வுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அந்தப் பெண்மணியின் மகன் இங்கிலாந்துக்கு குடி போன வருடத்திலிருந்து அந்தப் பெண்ணே நாடு கடத்தப்பட்ட வரை இடையிலிருந்த வருடங்களில் அந்தப் பெண்மணி எழுதிய தொடர்பற்ற குறிப்புகள் என்னிடம் இருந்தன; அவருக்கு சுமார் 18 மாதங்கள் இந்தக் குறிப்புகளை எழுதக் கால அவகாசம் கிட்டியிருந்தது. அந்தக் குறிப்பிலிருந்து உங்களுக்குத் தெரிந்திருக்கும், இந்தக் குடும்பம் வட பவேரியாவில், ஃப்ரான்கோனியாவின் மேற்குப் புறம், ஷ்டைனாக் என்று அழைக்கப்பட்ட ஒரு சிறு கிராமத்தில் வாழ்ந்து வந்தது, பிறகு 1900 வாக்கில், அருகிலிருந்த பாட் கிஸ்ஸிங்கென் என்ற சிறு நகரத்துக்குக் குடி போனார்கள். நபொகாவின், ‘ஸ்பீக், மெமரி ’ என்ற அவருடைய சுயசரிதையைப் படித்தீர்களானால், என்னைக் கேட்டால் அது அருமையானதொரு புத்தகம், அதில் ஒரு சம்பவ விவரணையில் தன் குடும்பம் பாட் கிஸ்ஸிங்கெனுக்கு இதே வருடங்களில் பல முறைகள் சென்றதைச் சொல்கிறார். ஆகவே இந்த இரு புலம் பெயர்ந்த அகதிகளையும், ஒருவரொருவர் அறியாமல் சந்திப்பதாக அக்கதையைப் புனைய மிகப் பெரிய தூண்டுதல் இருந்தது. எனக்கு மெற்கொண்டு தெரிந்தது – இது நிஜ நடப்பைச் சார்ந்தது, பிற்பாடு நான் செயற்கையாகப் பொருத்தியதல்ல – என் பெரிய மாமன் ஆம்ப்ரோஸ் அடெல்வார்த் ஒரு புகலிடம் தேடி ஒரு சிகிச்சை நிலையத்தில் அடைந்து கொண்ட இத்தகா நகரில்தான் நபொகாவ் பல வருடங்கள் போதித்து வந்தார். அவருடைய எழுத்திலிருந்து நாம் அறிவோம், அங்கு தனக்குக் கிட்டிய சுதந்திரமான நேரத்தில் எல்லாம் அவர் தன் வண்ணத்துப் பூச்சி வலையோடு வெளியே சுற்றித் திரிந்திருக்கிறார். ஆகவே நான் எழுத வேண்டி இருந்த இரு இடங்களில் நபொகாவும் வந்திருந்திருக்கிறார் என்பது ஒரு மிக, மிக விசித்திரமான உடன் நிகழ்வாகத் தெரிந்தது. கூடவே, ஸ்விட்சர்லாந்தின் ஃப்ரெஞ்சுப் பகுதிகளில் நான் செலவழித்த காலத்திலிருந்து எனக்கு மிக நன்றாகவே தெரிந்திருந்தது, லெ மா ஏரி மற்றும் மாண்ட்ரோ, வூ வே, பாஸெல் ஸ்டாட், லொஸான் ஆகிய பகுதிகளை எனக்கு துப்புரவாகத் தெரிந்திருந்தது. நான் அங்கு மாணவனாக இருந்த போது, நபொகாவ் அங்கே இருந்ததைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்கவில்லை; நான் அவ்வளவு தூரம் சென்றிருக்கவில்லை. அவர் அங்கே வாழ்ந்திருந்ததைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்கவில்லை, தெரிந்திருந்தாலும், அவரைப் போய்ப் பார்க்க நான் துணிந்திருக்க மாட்டேன், உங்களுக்கு அதை யோசிக்க முடியும். ஆனால் எனக்கு அந்த வட்டாரத்தை நன்கு தெரிந்திருந்தது, அவர் சொல்கிற மலைமீது ஏற உதவும் மின் தூக்கிகள் பற்றியும் எனக்குத் தெரிந்திருந்தது. தவிர, அது நான் செய்ய வேண்டிய ஒன்றாக வெளிப்படையாகத் தெரிந்தது, மேலும் இன்னொன்று என்னவென்றால், மனதைப் பிடித்தாட்டக் கூடியதாக, அமானுஷ்ய குணம் கொண்டதான ஒன்றைப் படைக்க, நிஜம் போன்ற நிழலுருக்கள், அவை மறைந்து கொண்டிருக்கின்றன என்றாலும், எளிதில் அடையப்பட முடியாத தீவிரத்தைக் கொண்டனவாகத் தோன்றும் போது அவற்றைப் பயன்படுத்த இது நல்ல வாய்ப்பு என்று தெரிந்தது.
எ.வா: ஒரு விமர்சகர் அதை பெருமகிழ்ச்சிக்கான குறியீடாகப் பார்க்கிறார், இன்னொருவர் அது சாவை முன் கூட்டி அறிவிப்பதாகக் கருதுகிறார்.
ஸே: ஆனால், அது இரண்டும்தானே. பிரதியில் உள்ள மூலக் கூறுகளில் இருக்கும் குறியீடுகள் ஒற்றை அர்த்தமுள்ளனவாக இருப்பதையே பலரும் விரும்புகிறார்கள். ஆனால், குறியீடுகள் அப்படி இயங்குவதில்லை. அவை நல்ல வகையில் இயக்கம் கொள்வதானால் வழக்கமாகப் பல விதமாக அர்த்தம் கொள்வனவாக இருக்கும். அந்த இடத்தில் ஏதோ அர்த்த புஷ்டி உள்ளதாக இருக்கிறது என்ற உணர்வை நமக்குத் தரவே அவை அங்கு கொடுக்கப்படுகின்றன, ஆனால் அது என்ன, அதன் முக்கியத்துவம் என்ன என்பன முற்றிலும் வேறு விஷயங்கள்.
இந்த மாதிரி ஒரு பிரதியில், எழுச்சி பெற்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முறைகளில் அவ்வளவு எளிதாகப் புலப்படாத குறியீடுகளைக் கண்டு பிடிப்பதுதான் இங்கு பிரச்சினையாக எழுந்திருக்கிறது என்று தோன்றுகிறது. ஆனால் உதாரணமாக, நிச்சயமாக இந்த ரயில்வே விஷயத்தில் அப்படித்தான் ஆகி இருக்கும். நாடு கடத்தலில், ரயில் போக்குவரத்து என்பது முக்கியமான, மிக முக்கியமான பங்கு வகித்தது என்பது யாருக்கும் தெரிந்திருக்கும். க்ளோட் லான்ஸ்மானின் ‘ஷோவா’ திரைப்படத்தை நீங்கள் பார்த்தீர்களானால், என் கருத்தில் இந்தத் துன்பமயமான விஷயத்தைப் பற்றிய ஆவணங்களில் மிகவும் பிரமிப்பூட்டும் ஓர் ஆவணம் அந்தப் படம், ஒவ்வொரு சம்பவத் தொகுப்புக்கும் இடையே எந்நேரமும் அதில் ரயில்களே தோற்றமளிக்கும். அவை தண்டவாளங்களில் ஓடும், நீங்கள் பெட்டிகளைப் பார்ப்பீர்கள், கைகாட்டிகளைக் காண்பீர்கள், போலந்திலும், செக் குடியரசிலும், ஆஸ்த்ரியாவிலும், இத்தலியிலும், பெல்ஜியத்திலும் ரயில் பாதைகளைப் பார்ப்பீர்கள். (யூத) நாடுகடத்தலின் மொத்த நடைமுறையும் ரயில்களின் இயக்கத் திட்டத்தை நம்பித்தான் இருந்தது. என் பள்ளி ஆசிரியர் ரயில்களைப் பற்றி உளைச்சல் கொண்டிருந்தார் என்பதைப் பற்றிப் பேசும்போது, இதை நான் ஓரிடத்தில் தொட்டுச் செல்கிறேன். ஆக, இது தெளிவாகவே செய்யப்பட வேண்டிய ஒன்றாகத் தெரிந்தது. நாம் இதை எல்லாம் எப்படிச் செய்கிறோம் என்பதில்தான் இத்தகையவை அமைகின்றன. பிரதியில் குறியீட்டை மிக வெளிப்படையாக ஆக்கினால், ஒரு விதத்தில், அதன் நம்பகத்தன்மை குறைந்து போகிறது, எனவே நாம் அதை மறைவாகச் செய்ய வேண்டி இருக்கிறது. எனவே நாம் முயன்று பிரதியில் சில அதிர்வுகளைப் பொருத்தி வைக்கிறோம், அதனால் முன்னர் இராத ஒரு முக்கியத்துவத்தை மொத்தமும் பெற்று விடுகிறது. இது பிரதியில் உள்ள மற்ற படிமங்களுக்கும் நேரும்: இருப்புப் பாதை, நிச்சயமாக, புகை, மேலும் நிச்சயமாக, புழுதி (ஆகியன).
எ.வா: உங்கள் கதை மாந்தர்களுக்கு கூடுதலாக வயது ஆக ஆக, நினைவு என்பதிலிருந்து தப்புவது கடினமாகிறது போல. மேலும் பலரும், ஒரு நோக்கில், அதற்குப் பலியாகிறார்கள், ஒதுங்கி வாழ்வது மூலமோ, தற்கொலை மூலமோ. நினைவு என்பது ஏன் அத்தனை தப்ப முடியாததாகவும் இத்தனை அழிப்பதாகவும் உள்ளது?
ஸே: அது ஒன்றிற்குக் கொடுக்கப்படும் குறிப்பிட்ட எடையை (முக்கியத்துவம்) பொறுத்தது என்று நினைக்கிறேன். வயது ஆக ஆக, ஒரு பார்வையில், நாம் மறப்பதும் நிறைய ஆகிறது. அது நிச்சயமாக உண்மைதான். உங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதிகள் ஏதோ விதமாக பாழில் மறைகின்றன. எது உங்கள் புத்தியில் எஞ்சுகிறதோ, அது கணிசமான கனத்தைப் பெற்று விடுகிறது, மிக அதிகமான குறிப்பிட்ட எடையைப் பெற்று விடுகிறது. ஆகவே, ஒரு தடவை நீங்கள் இந்த வகை எடைகளைச் சுமந்து பளு தாங்க முடியாதவராக ஆனால், அவை உங்களை மூழ்கடித்து விடும் என்பது நடக்க முடியாததல்ல. இத்தகைய நினைவுகள் உங்களுக்கு உணர்ச்சி ரீதியாக இடையூறாக்கும் தன்மை கொண்டவையே.
எ.வா: நான் உங்கள் மாமன் ஆம்ப்ரோஸைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன், அவர் தன் நினைவுகளால் அத்தனை கடுமையாகத் துன்பப்பட்டதால், அவர் தானாகவே மின் அதிர்ச்சி சிகிச்சைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். எப்படி அவர், ‘யோசிக்கவோ, நினைவு கூரவோ அவருக்கு இருக்கிற திறனை எத்தனை பூரணமாகவும், திரும்பிப் பெறமுடியாத வகையிலும் அழிப்பதை’ விரும்பினார் என்று அவருடைய உளவியலாளர் வருணித்திருக்கிறாரே.
ஸே: அது பல நோக்குகளில் மிக அதீதமான ஒரு கதை. இந்தக் கதையில் என்ன கோடி காட்டப்படுகிறதென்றால், ஆம்ப்ரோஸ் அடில்வார்த்துக்கும், அவருடைய எஜமானரின் மகன், காஸ்மோ சாலமொனுக்கும் இடையே வெறும் தொழில் முறை உறவைத் தாண்டிய வேறு ஒரு உறவு இருந்தது என்பது, அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட சகோதரர்களைப் போல இருந்தனர், ஒருக்கால் காதலர்களாகக் கூட இருந்திருக்கக் கூடும் என்பது. அந்தக் குறிப்பிட்ட கதை, முதல் உலகப் போருக்கு முந்தைய ஆரவாரமான வருடங்களின் போது அது எப்படி வளர்ந்து விரிந்தது என்பது, அன்றைய வரலாற்றுடைய தன்மை, பிளவுகள் ஆகியனவற்றிலிருந்து மாறுபட்டிருந்தது, மேலும் குறைந்த பட்சம் மீட்சி என்பதை ஒத்த ஏதோ ஒன்றை அது தன்னுள் கொண்டிருந்தது. ஒரு வாசகராக நீங்கள் அப்படிக் கற்பனை செய்ய விடப்படுகிறீர்கள்- அந்த உரைநடை எங்கும் அப்படிச் சொல்வதில்லை, எங்கும் வெளிப்படையாகக் காட்டவில்லை- ஆனால் அந்த இரண்டு இளைஞர்களும், இஸ்தான்புல் நகரில் சேர்ந்து இருந்த போதும், இறந்த கடலுக்கு அருகே வசித்த போதும், அவர்களுக்கு மிகக் கொண்டாட்டமான காலகட்டத்தினூடே வாழ்ந்தார்கள் என்பதை ஒரு வாசகராக கற்பனை செய்ய விடப்படுகிறீர்கள். இறுதியில், அதனுடைய பளுதான் அவரைக் கீழிறக்கி விடுகிறது, என்பது என் நினைப்பு. உங்களுக்குத் தெரிந்திருக்குமே, அந்தக் காலத்து தாந்தேயின் கருத்துப்படி நரகம் போன்ற சூழலில் இருக்கையில் நாம் சந்தோஷமாக இருந்த காலத்தைக் கற்பனை செய்வது போன்ற கொடுமையான நிலை வேறெதுவும் இராது என்பது.
எ.வா: உங்களுடைய பாத்திரங்களில் ஏகப்பட்ட பேர்கள் நினைவு கொள்வதற்கு எதிராக கடுமையான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இதற்கு வேறேதாவது மாற்று உண்டா? நினைவுகளோடு வாழ முடியுமா? மாக்ஸ் ஃபெர்பர் என்கிற உங்களின் ஒரு பாத்திரம் சொல்கிறார், உடல் வலிக்கு ஒரு எல்லை உண்டு ஏனெனில் இறுதியில் நாம் மூர்ச்சை இழந்து விடுவோம், ஆனால் மனவலிக்கு முடிவே இல்லை.
ஸே: ஆமாம், அதுதான். உலகத்தில் ஏராளமாக மனத் துன்பம் இருக்கிறது, சிலதை நாம் பார்க்க முடிகிறது, சிலதைப் பற்றி நாம் ஏதாவது செய்ய முயல்கிறோம். ஆனால் அது பெருகி வருகிறது. ஒரு வகையில், உடல் வலியும் சரி, மன வலியும் சரி, பெருகித்தான் வருகின்றன என்று நான் நினைக்கிறேன். நியூயார்க் மாநகரத்தில் மட்டுமே, ஒவ்வொரு வருடத்திலும் உட்கொள்ளப்படுகிற வலி நிவாரணி மாத்திரைகளின் எண்ணிக்கையைக் கற்பனை செய்து பார்த்தோமானால், அவற்றை வைத்துக் கொண்டு ஒரு மலையையே நம்மால் எழுப்பி விட முடியும், அதில் நாம் பனிச் சறுக்கல் போலச் செய்ய முடியும்- அந்த ஆஸ்ப்ரின், மேலும் பொடிகளைச் சொல்கிறேன், தெரிகிறதா. நாம் அவற்றில் சிலவற்றைப் பார்க்கிறோம், ஆனால் பொதுவாக ஜனங்கள் மௌனமாகவோ, தனிமையிலோ அவதிப்படுகிறார்கள். அதுவும் மனத்துன்பம் என்று வந்தால், நிச்சயமாக, அத்தனையும் பகிரப்படுவதில்லை, மிகச் சிறு அளவே வெளிக்காட்டப்படுகிறது. ஏதோ, நமக்கு ஏதும் புரியாதது போல நாம் வாழ்கிறோம்; நம்மில் இவற்றில் சிக்காமல் தப்பித்தவர்கள், எல்லா இடங்களிலும் பெரும் மனநோய் மருத்துவ மனைகள் இருக்கின்றன, மொத்த ஜனத்திரளில் மாறி மாறி, குறிப்பிட்ட அளவு மனிதர்கள் எந்நேரமும் இவற்றினூடே அலைந்து திரிந்தபடி இருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பரிணாம ரீதியாக, நம் இனத்தின் (மனித குலம்) குணாதிசயமே, ஒரு உயிரினமாக நாம் பரிதவிப்பில் இருக்கிறோம், அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. நாம் நமக்கென உருவாக்கி இருக்கிற சூழல், எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை என்பது ஒரு காரணம். எல்லா நேரத்திலும் நாம் நம்மால் சமாளிக்க முடியாத ஆழங்களில் சிக்கி இருக்கிறோம். இயற்கை உலகுக்கும், நம் மூளைத் திசு அணுக்கள் படைக்கும் இன்னோர் உலகுக்கும் இடையே உள்ள மெல்லிய எல்லைக் கோட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த இயற்கையின் உலகிலிருந்து நாம் விரட்டப்படுகிறோம், அல்லது நம்மை நாமே அதிலிருந்து விரட்டிக் கொண்டிருக்கிறோம். எனவே தெளிவாகவே இந்த விரிசல் கோடு நம் உடல் மற்றும் மனக் கட்டமைப்பின் ஊடாகப் போகிறது. அனேகமாக இந்தப் பூமி ஓடுகள் ஒன்றோடொன்று உரசுகிற இடத்தில்தான் வலியின் காரணங்கள் இருக்கின்றன. நினைவு என்பது அப்படி ஒரு காரணி. அதுதான் நம்மை உணர்ச்சியுள்ள ஜீவராசிகள் என்ற தகுதியைத் தருகிறது, உணர்ச்சிப்பிராணிகள் [9] அல்லது அது போன்ற ஏதோ ஒரு சொல்லால் நாம் விவரிக்கலாம். இதிலிருந்து (நினைவிலிருந்து) நாம் தப்பிக்க ஒரு வழியும் இல்லை என்று நான் கருதுகிறேன். அதை அடக்குவதுதான், நீங்கள் செய்யக் கூடியது ஒன்றே ஒன்று, அனேக மக்கள் இதை வெற்றிகரமாகச் செய்து விடுகிறார்கள் என்று தோன்றுகிறது. அதை நீங்கள் ஏதாலோ செய்ய முடியும் என்றால், அது என்ன என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை, பேஸ்பால் விளையாடுவதாலோ, தொலைக்காட்சியில் கால்பந்தாட்டத்தைப் பார்ப்பதாலோ, எதானாலும் அது நல்ல விஷயம் என்று சொல்ல முடியும். எனக்குத் தெரியவில்லை.
எ.வா: நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
ஸே: நான் நாயோடு நடை போகிறேன். ஆனால் அது நிஜமாகவே என்னை விடுவிப்பதில்லை. மேலும், உண்மையில், எனக்கு இந்த நெருக்கடியிலிருந்து விடுபட பெரிய ஆசை ஏதுமில்லை. அது முடியுமென்றால், இவற்றூடே நாம் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
எ.வா: உங்கள் மாமா ஆம்ப்ரோஸ், இளைஞராக இருக்கும்போதே- நீங்கள் அவருடைய நாட்குறிப்பிலிருந்து மேற்கோள் கொடுக்கிறீர்கள்- அவருக்கு நினைவு என்பது “ஒரு விதமான முட்டாள்தனம்” போல இருப்பதாகவும், அது அவருடைய தலையை, “கனமாகவும், சுழல்வது போலவும்,” ஆக்குகிறது என்றும், “பின்னே சுருங்கி மறையும் காலத்துக்குள் திரும்பிப் பார்ப்பது போல இல்லாமல், பூமியை மிக உயரத்திலிருந்து பார்ப்பது போல,” உணரச் செய்வதாகவும் சொல்கிறார். அது எப்படி நடக்கிறது?
ஸே: அந்த உணர்வு, ஆபெராவுக்கான தொலைநோக்கியைத் திருப்பி வைத்துப் பார்த்தால் கிட்டுவது… எல்லாக் குழந்தைகளும், தொலைநோக்கியை முதல் தடவையாகப் பெறும்போது, இந்தச் சோதனையைச் செய்து பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன். சரியான வழியில் முதல் தடவை பார்ப்போம், நம் முன்னால் இருப்பது, நாம் பார்ப்பது ஏதானாலும், உருப் பெருகி இருப்பதைக் காண்போம், பிறகு அந்த நோக்கியைத் திருப்பி வைத்து நோக்குவோம், விசித்திரமாக, அந்த பிம்பம் கூடுதலான தூரம் தள்ளி இருப்பது போலத் தெரிந்தாலும், மிகவும் துல்லியமாகத் தெரிவது போல இருக்கும். அது ஒரு கிணற்றின் உறைகளுக்குள் பார்ப்பது போல இருக்கும். கடந்த காலத்தை எண்ணுவது எனக்கு எப்போதுமே தலை சுற்றும் உணர்வைத் தந்திருக்கிறது. ஏறக்குறைய, அது ஓர் ஆசை, அல்லது கைப்பிடிச் சுவரை எல்லாம் தாண்டி, நாம் அதற்குள் குதித்து விட வேண்டும் போல ஓர் தூண்டுதல். கடந்த காலத்தைப் பொறுத்து ஏதோ மிகவும் வசீகரமானதாக இருக்கிறது. எனக்கு எதிர்காலத்தின் மீது சிறிதும் நாட்டமில்லை. அதில் அத்தனை ஏதும் நல்லதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. குறைந்த பட்சம், கடந்த காலத்தைக் குறித்தாவது நாம் ஏதாவது மயக்கங்களை வைத்திருக்கலாம்.
எ.வா: உங்கள் மயக்கங்கள் என்ன?
ஸே: பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நியு இங்கிலாந்தில் வாழ்ந்த ஜனங்களின் வாழ்க்கை இன்றை விட மேலும் வசதியாக இருந்திருக்கும் என்று நாம் நினைக்கத் தலைப்படுகிறோம். ஆனால், பெண்கள் எட்டுக் குழந்தைகள் பெற்றார்கள் என்பதையோ, சமையலறையில் விறகடுப்பில் நீரைச் சூடேற்றி, அப்பாத்திரத்தில் அவர்களுடைய துணிகளை எல்லாம் துவைக்க வேண்டி இருந்ததையோ நினைத்துப் பார்த்தால் அதெல்லாம் அப்படி ஒன்றும் அற்புத நிலையாகத் தோன்றாது. எனவே கடந்த காலத்தைப் பார்க்கும் போது சுய-ஏமாற்றல் என்பது ஓரளவு அங்கு வேலை செய்கிறது. கடந்ததற்கு நாம் அதொரு சோக நிகழ்வு என்ற உருக் கொடுத்தாலும், சோக நிகழ்ச்சி என்பதும் ஒரு வகை ஒழுங்குதான், அது ஏதோ ஒரு வாழ்க்கைக்கோ, அல்லது சில வாழ்வுகளின் தொடர்ச்சிக்கோ, அர்த்தம் கொடுக்கும் முயற்சிதான். அது இன்னமும், விஷயங்களைச் சாதகமாகப் பார்க்கும் முயற்சிதான் என்பதாகத் தெரிகிறது. மாற்றாக, நிஜத்தில், அதெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நடந்த மோசமான நிகழ்வுகளாக இருக்கலாம், ஒரு பொருளும் இல்லாததாக இருக்கலாம்.
எ.வா: தி எமிக்ரண்ட்ஸ் புத்தகத்தில், மான்செஸ்டர் நகரத்தில் ஓர் ஓவியர், அவரை நீங்கள் மாக்ஸ் ஃபெர்பர் என்று அழைக்கிறீர்கள், அவர் கரி படிந்த புகைக் கூண்டுகளோடு உள்ள மான்செஸ்டர் நகரத்தைப் பார்க்கிற போது அதில் தனக்கு விதிக்கப்பட்ட முடிவு உள்ளதாக எண்ணுகிறார், ‘புகைக் கூண்டுக்கு அடியில்’ பணி புரியவே தான் அங்கு வந்திருப்பதாக உணர்கிறார். அவர் ஏன் புழுதியால் அத்தனை ஈர்க்கப்படுகிறார்? அதில் அவர் என்ன காண்கிறார்?
ஸே: நாம் புழுதியிலிருந்து புழுதிக்கு, சாம்பலிலிருந்து சாம்பலுக்கு எனும் அந்த விவிலிய நூலின் வாக்கியத்தை அறிவோம், அந்த உருவகத்தின் பொருத்தம் இங்கு தெளிவு. இன்னொன்று, ஏதோ விதமாக, புழுதி என்பது மௌனத்தின் ஒரு அடையாளம். புத்தகத்திலுள்ள மற்ற கதைகளில், தூசி தட்டுதலுக்கும், சுத்தத்துக்குமான பல சுட்டிகள் உள்ளன. உங்களுக்குத் தெரிந்திருக்கும், அது ஒரு வகையில் ஜெர்மனியருக்கும் மற்றும் யூதருக்கும் உள்ள உளைச்சல். எல்லாவற்றையும் யூதச் சடங்கு வழியிலும், சுத்தமாக வைத்திருப்பதிலும் (தீவிரம்).
பொதுவாக நிறைய ஒட்டுறவுள்ள இந்த இரண்டு தேசங்களுக்கும் வேறுபல விஷயங்களில் ஒற்றுமை இருப்பது போல இதிலும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது. ஆடில்வார்த்தின் கதையில், கதை சொல்பவர் டூவில் நகர் வழியே போகிறார், ஒரு பெண்ணின் கை, மூடிய ஜன்னல் கதவுகளில் ஒன்றின் வழியே வெளிப்படுகிறது, அவை பொதுவாகத் திறக்கப்படாத கதவுகள், அது முதல் மாடி, அந்தக் கை ஒரு தூசி தட்டும் துணியை உதறுகிறது.
சீராக உள்ள, நல்ல நிலையில் வைக்கப்பட்டு, தொடர்ந்து பராமரிக்கப்படும் வீடுகளில் சங்கடப்படும் நபர்கள் சிலர் உண்டு. நான் அந்த வகை மனிதர்களில் ஒருவன். இப்படிப்பட்ட கறாரான ஒழுங்கு உள்ள வீடுகளில் இருக்க நான் எப்போதுமே கஷ்டப்படுகிற மாதிரி உணர்கிறேன். இப்படி ஒரு குளிர்ச்சியான ஒழுங்கு, மத்திய நிலை மனிதர்களின் உபசரிப்பறைகளின் இயல்பு, அந்த அறைகள் வருடத்துக்கு ஒன்றிரண்டு முறைகளே, கிருஸ்த்மஸ் அல்லது ஏதாவது ஒரு ஆண்டு விழா நாளன்று மட்டுமே திறந்து பயன்படுத்தப்படும். அங்கு பெரும் பியானோ வருடம் பூராவும் கடும் மௌனத்தில் நின்றிருக்கும், இருக்கைகள் தூசி படியாமல் தடுக்கும் துணிகளால் மூடப்பட்டிருக்கும் இத்தியாதி. மாறாக, தூசி படிய அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடு ஒன்றுள் நான் நுழைந்தால், அது எனக்கு ஏதோ விதத்தில் சௌகரியமாகத் தெரிகிறது. நீங்கள் சுட்டுகிற அந்தப் பத்திகளை எழுதிய கால கட்டத்தில், எனக்கு இது நினைவு வருகிறது, நான் லண்டனில் ஒரு பிரசுரகரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் கென்ஸிங்டனில் வசித்திருந்தார். நான் போய்ச் சேர்ந்த போது, அவருக்கு இன்னும் ஏதோ வேலை மீதமிருந்தது, அவருடைய மனைவி, மிக உயரமாகவும், மேல் தளத்தில் மொட்டை மாடியும் இருந்த அந்த வீட்டின் மேல் தளத்திலிருந்த ஒரு நூலக அறைக்கு என்னை அழைத்துப் போனார். அந்த அறை புத்தகங்களால் நிரம்பி இருந்தது, அங்கு ஒரு நாற்காலி இருந்தது. மேலும் அங்கு தூசி எங்கும் படிந்திருந்தது, பல வருடங்களில் அது எல்லாப் புத்தகங்கள் மீதும் பரவி அமர்ந்திருந்தது, தரை விரிப்பில் இருந்தது, ஜன்னலடி இருக்கையிலிருந்தது. வாயிற்கதவிலிருந்து, நாம் அமர்ந்து படிக்கவென இருந்த அந்த நாற்காலி வரை மட்டுமே ஒரு பாதை இருந்தது, பனியூடே இருக்கும் பாதை போல, உங்களுக்குத் தெரியுமே, தேய்ந்த வழியாக, தூசி ஏதும் இல்லாது, ஏனெனில் அவ்வப்போது யாராவது அங்கு நடந்து வந்து அந்த நாற்காலியில் அமர்ந்து ஒரு புத்தகத்தைப் படித்திருப்பார். அந்த நாற்காலியில் அமர்ந்திருந்த கால் மணியைப் போல அமைதியான ஒரு நேரத்தை நான் வேறெங்கும் அனுபவித்ததில்லை. அந்த அனுபவம்தான், எனக்கு தூசி என்பதில், ஏதோ அமைதி நிறைந்திருக்கிறது என்ற உணர்வைக் கொணர்ந்தது.
எ.வா: தூசியை உருவாக்குவதை ஒரு குறிக்கோளாகக் கொண்டிருந்த ஓவியர் மாக்ஸ் ஃபெர்பரின் தொழில் முறைகளில் ஒன்று, அடுக்கடுக்காக வண்ணச் சாயங்களைப் பூசுவது, பிறகு அவற்றைச் சுரண்டி எடுப்பது, பிறகு அழித்து நீக்குவது, மறுபடி வண்ணச் சாயங்களைப் பூசி, அவற்றைச் சுரண்டுவது என்பது. நீங்கள் உங்கள் இந்தப் புத்தகத்தை எழுதுவதை வருணிக்கையில் ஓரிடத்தில், கிட்டத்தட்ட, இந்த உத்தியையே எடுத்தாள்வது போலத் தெரிகிறது, எழுதுவதும், அழிப்பதும், ஏன் மொத்தத்தையுமே,நீங்கள் சொல்வது போல ஏற்கனவே கேள்விக்குரியதாக உள்ள எழுதும் தொழிலையே, கேள்விக்குள்ளாக்குவதுமான நிலையில் உங்களையே காண்கிறீர்கள்.
ஸே: ஆமாம், அது கேள்விக்குரிய தொழில் ஏனென்றால் அது ஊடுருவுகிறது. மற்றவர்களின் வாழ்வினுள் நீங்கள் மூக்கை நுழைக்கிறீர்கள், இந்தக் கதைகளைக் கண்டு பிடிக்க நான் செய்ததுபோல, அதுவும் நீங்கள் நல்லது செய்கிறீர்களா, இல்லை கெடுதலா என்பது உங்களுக்குத் தெரிவதும் இல்லை. அதிர்ச்சியான சம்பவங்களைப் பற்றிப் பேசுவது நல்லது என்பது பொதுவாக ஏற்கப்பட்ட கருத்து, ஆனால் அது எல்லா நேரத்துக்கும் உண்மையாகாது. குறிப்பாக நீங்கள்தான் பிறரை நினைவு கொள்ளும்படி, அவர்களுடைய கடந்த காலங்களைப் பற்றிப் பேசுமாறு எல்லாம் தூண்டுபவர் என்று இருந்தால், பிறருடைய வாழ்வில் நீங்கள் இப்படி ஊடுருவியது அவர்களின் வாழ்வில் ஏதாவது எதிர்பாராத பின்விளைவுச் சேதங்களை உண்டாக்குமா, இப்படி ஊடுருவாமல் இருந்திருந்தால் அந்தச் சேதங்கள் நேராமல் இருக்குமா என்பன குறித்து உங்களுக்கு ஏதும் நிச்சயமாகச் சொல்லத் தெரியவில்லை என்றும் இருந்தால் [பேசுவது நல்லது என்பது உண்மையாகாது.] ஆகவே இங்கு ஒரு அறப் பிரச்சினை இருக்கிறது. அதுதான் இந்த எழுதுதல் என்கிற தொழில் பற்றியது- நீங்கள் ஏதாவது கற்பனையாகச் சேர்க்கிறீர்கள், நீங்கள் எதிர் கொள்ளும் முன்பின் முரண்பாடுகளில் சிலதை அகற்றி பாதையைச் சீர் செய்கிறீர்கள். அந்த மொத்தச் செயலுமே அகம்பாவம் நிரம்பியது, உங்களுக்கே சரியாகப் புலப்படாத உள்நோக்கங்களால் உந்தப்படுவது.
இந்த வகைப் படைப்பு எழுத்து, சொல்லப் போனால், என்னிடம் வெகு நாட்கள் முன்பு இருக்கவில்லை, ஆனால் நான் எப்போதுமே ஏதாவது கிறுக்கித் தள்ளியபடிதான் இருந்திருக்கிறேன். ஆக, இது ஒரு பழக்கமான விஷயம். எனக்குத் தெரிந்தவரை, இது சில மனநிலை சார் நரம்புக் கோளாறுகளோடு தொடர்புள்ளது, அதை நீங்கள் சில காலம் செய்தே ஆக வேண்டி இருக்கும், மற்ற காலங்களில் செய்யாமல் இருப்பீர்கள், பிறகு நீங்கள் மறுபடி செய்தே ஆக வேண்டி இருக்கும், அதொரு உளைச்சலான குணம். ஒரு விதத்தில் அது நடத்தைப் பிரச்சினை. அதே நேரம் அதில் சில நேர்மறை அம்சங்களும் உண்டு, ஆனால் அவை பற்றி நாம் நன்கு அறிவோம். அதிகம் தெரியாதது அதன் இருண்ட பக்கங்களே.
எ.வா: எனக்கு நினைவிருக்கிறபடி, ஓரிடத்தில் யாரோ சொல்கிறார், இன்னொரு நூலைச் சுட்டி, அந்தப் புத்தகம் மனதை உடைப்பதாக இருந்தது, ஆனால் அவசியமான புத்தகம் என்று. அதைத்தான் நீங்கள் இங்கு செய்தீர்கள் என்பது போல, அது இதயத்தை உடைப்பது ஆனால் அவசியமான படைப்பு என்று நான் உணர்ந்தேன்.
ஸே: சரி, இப்படிச் சிலர் நினைக்கிறார்கள் என்பதைக் கேட்க எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அது ஓரளவுக்கு தேற்றுகிறது, ஆனால் எனக்கு அதைப் பற்றி இருக்கிற சந்தேகங்களை எல்லாம் அது நிவர்த்தி செய்யப் போவதில்லை. அதே நேரம், சில காலம் கழித்த பின், எழும் தீவிரமான பிரச்சினை, நம்மைச் சுற்றி இருக்கிற பண்பாட்டு விஷயங்களோடு நாம் போராட வேண்டி வரும், அதோடு ஏதாவது பேரம் பேச வேண்டி வரும். ஏனெனில் நீங்கள் தீவிரமாக எழுத ஆரம்பிக்கும்போது, அது ஒரு தப்பிக்கும் வழி போல – நீங்கள் நான்கு மதில் சுவர்களுக்குள் இருப்பதை அறிவீர்கள், அது உங்கள் தொழில் வாழ்க்கையாகும், வேறு யாருக்கும் தெரியாத ஏதோ ஒன்றைச் செய்யத் தொடங்குவீர்கள். நீங்கள் உங்களுடைய பானை வனையும் குடிலுக்குள் புகுந்து கொள்வீர்கள்… என்னைப் பொறுத்த வரை, நான் என் முதல் நூல்களை எழுதிய போது, எனக்கு அது மிக, மிக அந்தரங்கமான விஷயமாக இருந்தது. அதை நான் யாருக்கும் படித்துக் காட்டவில்லை, எனக்கு எழுத்தாள நண்பர்கள் இல்லை இத்தியாதி. ஆகவே எனக்கு அது கொடுத்த அந்தரங்க உணர்வை நான் பொக்கிஷம் போல மிகவும் பாராட்டி இருந்தேன், ஆனால் இப்போது அப்படி இல்லை. இப்போது பிறர் அதை எல்லாம் மறக்கும் வரை எல்லாவற்றையும் கை விட்டு விடவே என் உள்ளுணர்வு உந்துகிறது, அப்போது என் பானை வனையும் குடிலில், எதுவும் என்னைத் தொல்லை செய்யாமல், என்னால் மறுபடியும் வேலை செய்ய முடியும் என்ற நிலையை ஒருவேளை நான் மறுபடி பெற முடியலாம்.
***
[1] அக்டோபர் 16, 1997 இல் இந்த பேட்டியின் ஒரு வடிவம், கனெடியன் ப்ராட்காஸ்டிங் கார்பொரேஷனின் வானொலி நிகழ்ச்சியான ‘ரைட்டர்ஸ் அண்ட் கம்பெனி’ என்பதில் ஒலிபரப்பானது. அதைத் தயாரித்தவர் சாண்ட்ரா ராபினோவிச்.
[2] ஷோ ஆ என்பது யூத இனப் படுகொலை நிகழ்வுகளைக் குறிக்கும். 1941 லிருந்து 1945 ஆம் ஆண்டுக்குட்பட்ட காலத்தில், நாஜி ஜெர்மனியும், அதன் பிற கூட்டணி நாடுகளுமாகச் சேர்ந்து யூரோப்பின் யூத மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கை, அதாவது 60 லட்சம் யூதர்களை (6 மிலியன் மக்கள்) கொன்றொழித்தன. அந்த வருடங்கள் அந்தக் கூட்டணி யூரோப்பில் கொன்ற இதர மக்கள் தொகையைச் சேர்த்தால் சுமார் 170 லட்சம் மக்கள் அழிக்கப்பட்டனர். ஆனால் முக்கியமாக யூதர்களே குறி வைத்து கட்டாய உழைப்பு முகாம்களில் அடைக்கப்பட்டதில், பட்டினியும் நோயும் தாக்கியும், விஷவாயுவால் தாக்கப்பட்டும் இறந்தனர். இதை இங்கிலிஷில் ஹோலொகாஸ்ட் என்றும் ஹீப்ரு மொழியில் ஷோஆ என்றும் அழைக்கிறார்கள்.
[3] குய்யம் – தமிழ் அகராதிச் சொல்தான். Mystical என்ற இங்கிலிஷ் சொல்லின் நிகர் தமிழ்ச் சொல். இதன் தொடர்புள்ள, குஹ்ய என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு மறைவானது என்ற பொருளும் உண்டு.
[4] இது ஆஸ்திரியா என்னும் நாட்டின் ஒரு மாநிலம். ஆஸ்த்ரியா ஜெர்மன் மொழிக்குழுவைச் சேர்ந்த மக்களின் நாடு என்பது நமக்குத் தெரியும். இந்த மாநிலத்தை, ஊபர் ஊஸ்டர்ரைஹ் என்று ஆஸ்த்ரியர்கள் அழைக்கிறார்கள். இங்கிலிஷில் இது அப்பர் ஆஸ்த்ரியா என்று அழைக்கப்படுகிறது. ஆஸ்த்ரியா என்ற பெயர் ஊஸ்டர்ரைஹ் என்ற ஜெர்மன் பெயரின் லத்தீன் வடிவம் (Österreich).
[5] Paul Bereyter என்று இங்கிலிஷில் எழுதப்பட்ட பெயரின் ஜெர்மன் உச்சரிப்பு பௌல் பெரிடி என்று (உத்தேசமாக) தெரிகிறது. சரியான ஜெர்மன் உச்சரிப்பு தெரிந்தால் எங்களுக்கு எழுதித் தெரிவிக்கலாம்.
[6] ம்யூனிக் (Munich) என்று எழுதப்படும்/ உச்சரிக்கப்படும் பெயர் இங்கிலிஷ் மொழியின் வடிவம். ஜெர்மனியின் பெரு நகரங்களில் ஒன்றான ம்யூனிக், ஜெர்மன் மொழியில் München என்று எழுதப்படும். உச்சரிப்பு முன்ச்சென் என்பதைப் போல இருக்கும். மு என்பதில் ம்யு என்பது அடங்கிய ஒலியாக இருக்கும்.
[7] சன்ட் கால என்பது ஸ்விஸ் ஜெர்மன் உச்சரிப்பு. அதன் ஜெர்மன் பெயர் St.Gallen அல்லது St.Galle என்பதாகும். ஜெர்மன், ஃப்ரெஞ்சு, இத்தாலியன் ஆகிய மூன்று மொழிக் குழு மக்கள் இணைந்த நாடு ஸ்விட்சர்லாந்த். அதில் ஜெர்மன் மொழிக் குழுவினரின் பகுதிச் சிற்றூர் Sankt Gallen என்பது. இதன் சுருக்கம் St.Gallen (அல்லது Galle / Gall). இங்கிலிஷில் இதை Saint Galle என்றும் எழுதுகிறார்கள். ஜெர்மன் மொழியில் இதை சங்க்ட் காலென் என்று உச்சரிக்கிறார்கள். ஸ்விஸ் ஜெர்மன், ஜெர்மன் மொழியே போன்ற இன்னொரு வகை ஜெர்மன் மொழி. ஹிந்தியில் (போஜ்புரி, மைதிலி இத்தியாதி) பல வகைகள் உள்ளதைப் போல என்று வைத்துக் கொள்ளலாம்.
[8] க(ர்)ட்ட என்பதை இங்கிலிஷில் நாம் Goethe என்று எழுதுகிறோம். அது ஜெர்மன் மொழியின் உச்சரிப்பு. அந்த ர் ஒலி இருக்கும்போலவும், இல்லாதது போலவும் தெரியும். கு(ர்)ட்ட என்றும் சில ஜெர்மன் மொழி பேசுபவர்கள் இந்தப் பெயரை உச்சரிக்கிறார்கள். இங்கிலிஷிலும் ஜெர்மன் உச்சரிப்புக்கு இணையாக, க(ர்)ட்ட என்றுதான் உச்சரிக்கப்படுகிறது.
[9] Psychozootica என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார். இதற்கு அகராதியிலோ, இதர இடங்களிலோ பொருள் கிட்டவில்லை. அவரே உருவாக்கிய சொல் என்று கொள்ளலாம். Psycho-tic என்ற சொல்லில் இடையில் zoo என்ற சொல்லை நுழைத்தால் Psycho-zoo-tic என்பது கிட்டும். Otic என்ற பின்னிணைப்பு பொதுவாக கிரேக்க மொழியின் சாரல் இங்கிலிஷில் வீசுவதால் வருவது. Osis என்பதன் பெயரடைச் சொல்லாக Otic ஆகிறது என்று அகராதி சொல்கிறது. இங்கு ஸேபால்ட், உணர்ச்சிமயமான பிராணிகளாக மனிதர்கள் இருப்பதால் இப்படி அழைக்கலாம் என்று கருதுகிறார். மனிதர்களும் இதர பிராணிகள் போன்றவர்கள் என்று கருதுவது அவருடைய ‘இயற்கையியல்’ பார்வை என்றும் நாம் எடுத்துக் கொள்ள இடம் உண்டு.
***
இந்தக் கட்டுரையின் மூல இங்கிலிஷ் வடிவம் ‘த எமெர்ஜென்ஸ் ஆஃப் மெமரி: கான்வெர்ஸேஷன்ஸ் வித் W.G. ஸேபால்ட்’ என்ற புத்தகத்தில் ‘கோஸ்ட் ஹண்டர்’ என்ற கட்டுரையாக வெளியானது. பேட்டியை நடத்தி, பிரதியைத் தயாரித்து எழுதியவர் எலியனார் வாக்டெல். அந்தப் புத்தகத்தின் பதிப்பாசிரியர்/ தொகுப்பாளர்: லின் ஷாரன் ஷ்வார்ட்ஸ். 2007 ஆம் வருடம் வெளியான இந்தப் புத்தகம் நியுயார்க் மாநகரத்திலிருக்கும் செவன் ஸ்டோரீஸ் ப்ரஸ் என்ற பிரசுர நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்டது.
தமிழாக்கம்: பஞ்சநதம்