சிறிய, சிறப்பான அம்சங்கள்

ரோஸ்மேரி ஹில்

[லண்டன் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் பத்திரிகையின் 23 மே 2019 தேதி இதழில் வெளியான கட்டுரையைத் தழுவி தமிழில் எழுதப்பட்டது. மூலக் கட்டுரை ஒரு புத்தகத்தின் மதிப்புரை. புத்தக விவரங்கள் கீழே உள்ளன.] ——————————————————

கரஸ்பாண்டென்ஸ் ஆஃப் சார்ல்ஸ் டார்வின்: வால்யூம் 26, 1878 பதிப்பு வேலை: ஃப்ரெடரிக் பர்க்ஹார்ட், ஜேம்ஸ் சீகார்ட் மற்றும் டார்வின் கடிதங்கள் செயல்திட்டத்தின் பதிப்பாசிரியர்கள். பிரசுரகர்த்தர்: கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகம், 814 பக்கங்கள், [அக்டோபர் 2018]

ராணி விக்டோரியா அறுபத்து நான்கு வருடங்கள் ஆட்சி செய்தார். இரண்டரைத் தலைமுறைகள் இதனால் விக்டோரிய காலத்தவராகக் கருதப்பட்டனர். அவர் 1901 இல் இறப்பதற்குப் பதில், 1870 இல் இறந்திருந்தால், இந்தத் தலைமுறைகளிடையே எத்தனை  பொதுவாக இல்லாதவை என்பது வெளிப்படையாகத் தெரிந்திருக்கும். அவர் ஆட்சியின் நடுக் கட்டத்தில், 1864 இல், ஜே.ஏ. ஃப்ரூட் எனும் வரலாற்றாளர், ‘மிஸ் ஆஸ்டனின் இங்கிலாந்திலிருந்து, ரயில்களும், திறந்த சந்தை வியாபாரமும் கொண்ட இங்கிலாந்துக்கு’ வந்தது ‘பிரும்மாண்டமான’ மாற்றம் என்று குறித்திருந்தார். ‘உலகம் மேன்மேலும் வேகமாக இயங்குவதால்…. ஒவ்வொரு புதுத் தலைமுறையின் குணமும் தொடர்ந்து வியப்பூட்டுவதாக உள்ளது.’  1901 வரும்போது இந்த வியப்புகளில் புதிதாகத் தொலைபேசியும் சேர்ந்திருந்தது. அதோடு, இரண்டு போர் யுத்தங்கள் (Boer war-தென்னாஃப்ரிக்காவில் நடந்தது), ஆஸ்கார் ஒய்ல்டின் மீதான வழக்கு விசாரணை ஆகியனவும் நடந்திருந்தன. ’குணம்’ என்பது எளிதில் வரையறுக்கக்கூடிய தன்மையன்று, ஆனால் 1870களின் துவக்கங்களிலிருந்தே, அது மாறத் துவங்கி விட்டது. விக்டோரிய வருடங்களில் கடைசி முப்பதாண்டுகள் வேறுபட்டிருந்தன, முன்பிருந்த விக்டோரிய வருடங்களின் உச்ச கட்டங்களைவிட, இவற்றில் சந்தேக நிலைகளும், பிளவுகளும் தோன்றின. லாண்ட்ஸீயரும், டிக்கென்ஸும் இருந்த உலகிலிருந்து ஹென்ரி ஜேம்ஸும், விஸிலரும் இருந்த உலகுக்கு நகர்கையில், வேறோர் இடத்தில் சார்ல்ஸ் டார்வின் பயன்படுத்திய பதமான, மனதின் ‘தொனி’ என்பது, மாறிவிட்டது.

1878 ஃபிப்ரவரி மாதத்தில் டார்வினுக்கு 69 வயதாகியது. அவர் அப்போது, ‘பெரியதும், கடினமானதுமான விஷயங்கள்’ இனிமேல் என் சக்திக்கு மீறியவை என்றும், ‘என் வயதைக் கணக்கில் கொண்டால்… விவேகமுள்ள வழி ஏதென்று பார்த்தால்… அது, எனக்கு எஞ்சியுள்ள உடல் வலுவை சிறிய, சிறப்பான அம்சங்களை ஆராய்வதில் பயன்படுத்துவதுதான்.’  என்றும் எழுதினார். இவை அனேகமாகத் தாவரங்கள் சம்பந்தப்பட்டவையாக இருந்தன, அவருடைய கடைசிப் பெரிய ஆய்வுக் கட்டுரைகளுக்கும் இவையே கருது பொருட்களாக இருந்தன. ‘புழுக்களின் செயலால் காய்கறிகளில் தோன்றும் பூஞ்சணம் பற்றியும், புழுக்களின் பழக்கங்கள் பற்றியும்’ (த ஃபார்மேஷன் ஆஃப் வெஜிடபிள் மோல்ட் த்ரூ த ஆக்‌ஷன் ஆஃப் ஓர்ம்ஸ், வித் ஆப்ஸர்வேஷன்ஸ் ஆன் தேர் ஹாபிட்ஸ்) [1] என்ற இந்தக் கட்டுரை, அவர் இறப்பதற்குச் சில மாதங்கள் முன்பு, 1881 இல் பிரசுரமாயிற்று. அது டார்வினின் புத்தகங்களில் அதிகம் விற்பனையானவற்றில் ஒன்றாக இருந்தது. ‘சிறிய சிறப்பான அம்சங்கள்’ என்பனவற்றுக்கு என்ன மாதிரி கணிசமான தாக்கம் இருக்கும் என்பதற்கு இந்த நூல் ஒரு எடுத்துக் காட்டு. அவரது வழக்கமான தன்னடக்கத்தோடு முன்னுரையில் இப்படி எழுதினார்,‘இந்த விஷயம் முக்கியமற்றதாகத் தோன்றலாம், ஆனால் இது சுவாரசியமானது என்பதை நாம் காண்போம்; டெ மினிமிஸ் நான் கூராட் லெக்ஸ் [3] (சட்டம் அற்ப விஷயங்களை லட்சியம் செய்வதில்லை) என்ற மூதுரை அறிவியலில் செல்லுபடியாகாது.’ அது வரலாற்றுக்கும் பொருந்தாது. ஒரு வருடத்தில் டார்வினுக்கு வந்தவையும், அவர் அனுப்பியவையுமான கடிதங்களின் இந்தப் பதிப்பில், நிறைவான கல்வித் தேர்ச்சியோடும், மையப் பகுதியின் முக்கியத்துவத்தைக் கெடுக்காதபடி பொருத்தம் குறித்த அருமையான தெளிவோடு கொடுக்கப்பட்ட அடிக்குறிப்புகளோடும், இந்தச் சிறப்பம்சங்கள் ஒரு சித்திரமாகத் தெளிந்த உருப்பெறுகின்றன. அன்றாட வாழ்வின் பல அந்தரங்கக் கோணங்களோடு, டார்வினின் உரு அண்மையில் பார்க்கப்படுகிறது, அதே நேரம் இந்தக் கடிதத் தொடர்பில் மாறி வரும் காலங்களின் குணம் அதிர்ந்து ஒலிக்கிறது. சாதாரண விஷயங்களாகத் தெரிய வருவனவற்றில், தட்டச்சு எந்திரம் இருக்கிறது, அதைப் பழகிக்கொள்ள பாடுபடும் டார்வின் வெளிப்படுத்தும் சலிப்பு இந்தக் காலகட்டத்தின் அடையாள குணமாகிறது. சீக்கிரமே டார்வினும், அவர் மகன் ஃப்ரான்ஸிஸும்  ஏகப்பட்ட திட்டங்கள் போட்டு, இந்த ‘அச்சு எந்திரத்தை’ உயிரியலாளரான கார்ல் காட்ஃபீட் ஸெம்பரிடம் தள்ளி விடுகிறார்கள். அவரோ உச்சி குளிர்ந்து போய், அந்த எந்திரத்தைப் பயன்படுத்தி டார்வினுக்கு முழுதும் முகப்பெழுத்துகளாலே (காபிடல் லெட்டர்ஸ்) ஆன ஒரு கடிதத்தை அனுப்புகிறார். ஆனால் பெரும் கேள்விகள் ஒருபோதும் அப்பால் இருக்கவில்லை. பரிணாமம் என்பதும், பரிணாமக் கோட்பாட்டை வளர்த்தெடுப்பதும், அந்த யுகம் நெடுக கவனிப்பில் பரவி இருந்ததைப் போல இந்தக் கடிதங்களிலும் எங்கும் பரவி இருக்கின்றன.

1878 ஆம் ஆண்டின் பெரும் பகுதியை டார்வின், கெண்டில் இருக்கும் டௌன் ஹௌஸ் மானர் (பண்ணை) எனும் தன் வீட்டில் கழித்திருந்தார்.[2] அங்கு வெங்காயம், சீமை அவரைகளின் முளைவேர்கள், மேலும் செடிகளின் நாற்றுகள் இவற்றைக் கவனித்துக் கொண்டிருந்தார், அவை என் ‘இப்போதைய சந்தோஷங்கள்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார். வெளித் தூண்டுதலுக்கு இவை எப்படி எதிர்வினை செய்கின்றன என்பதைக் கவனிப்பதில் குறிப்பாக ஆர்வம் கொண்டிருந்தார். ஜெர்மன் இயற்கையியலாளரான ஃப்ரிட்ஸ் முல்லருக்கு எழுதிய கடிதத்தின் பின்குறிப்பில் அவர் சொன்னது, ‘வெப்பமான நாளில், மழை பெய்கையில், நுட்பமாக எதிர்வினை செய்யக்கூடிய தொட்டாற் சிணுங்கியை உங்களால் கவனித்துப் பார்க்க முடியுமென்றால், நான் உங்களுக்குக் கடமைப்பட்டவனாய் இருப்பேன்.’ தாவரங்களின் உறக்கம் என்பது அவர் ஃப்ரான்ஸிஸோடு பகிர்ந்து கொண்ட இன்னோர் ஆய்வு வகை. இது பற்றி அவருக்குப் பல கடிதங்கள் எழுதி இருக்கிறார். ‘போர்லியரா என் படிப்பறையில் அழகாக உறங்கிப் போயிற்று, படிப்பறையின் பின்புறம், அதிகம் கவனிக்கப்படாத ஒரு மூலையில் சீக்கிரம் எழுந்து கொண்டது,’ என்று அவரிடம் ஜூலை மாதம் டார்வின் தெரிவிக்கிறார். டிஸம்பரில் த ராயல் இன்ஸ்டிட்யூட் என்ற அமைப்பிலிருந்து அபாயச் சங்கு ஒன்றைத் தருவிக்கிறார், நாற்றுகளின் மீது அதற்கு என்ன பாதிப்பு இருக்கிறது என்று பார்க்க அவருக்கு ஆவல்.  ‘அதன் துருத்தியின் விசிறி மடிப்புகளால் அது பெரும் உருக்கொண்டு இருந்ததால்’ அதை இவரது பண்ணை வீட்டுக்குக் கொண்டு தருவதில் சில சிக்கல்கள் இருந்தன என்று அந்த அமைப்பில் இயற்கைத் தத்துவப் பேராசிரியராக இருந்த ஜான் டிண்டல் விளக்கினார்.

 குடும்பம் சூழ்ந்திருக்க, பல பத்தாண்டுகளாக அவருக்கு உபாதை கொடுத்த இனம் புரியாத வியாதிகளோடு போராடியபடி, அப்போராட்டம் சில வருடங்களில் அதிகமாகவும், சிலவற்றில் குறைவாகவும் இருந்தது, இப்படிப்பட்ட அமைதியான நாட்டங்களோடு வாழ்ந்த டார்வின், ‘டௌன் பண்ணையின் முனிவர்’ என்றோ, அல்லது ’டெயர் எர்லாய்ஷ்டுடு எரெமீட் வான் டௌன்’ (ஞானி) என்று அவருடைய ஜெர்மன் விசிறியான, கார்ல் கௌஸ் அழைக்கும்படியோ ஏற்பட்டு இருந்த பிம்பத்தை உறுதி செய்தவராக இருந்தார்.[4] டார்வின் ஜெர்மன் மொழியோடு போராடினார், அதன் பழமையான எழுத்து வடிவம் நுழைவையே தடுத்தது என்று கண்டார். ஆனால் அவர் அதோடு அடிக்கடி போராட வேண்டி வந்தது, ஏனெனில் கௌஸின் வருணனையான, ‘ ஈஹா ஸ்டில்லென் ஃபெஹ்ஏஹா’ [5]- ‘மௌனமாக உங்களை ரசிப்பவர்கள்’- அப்படி ஒன்றும் மௌனமாக இருக்கவில்லை. உலகெங்குமிருந்தும் டௌன் வீட்டில் கடிதங்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. கௌஸ் சொன்னாரே, ‘இந்த நூற்றாண்டின் மீது ஜொலிப்போடு ஒளி வீசும் பெயர் கொண்ட டார்வினுடைய சக காலத்தவராக வாழ்வது ஒரு சந்தோஷம், பெரு மகிழ்ச்சி’, அதைப் பலவிதமாக வெளிப்படுத்திய கடிதங்கள் அவை. 28 வயதான புவியியலாளரான எஸ்.பி.ஜே. ஸ்கெர்ட்ச்லி தன் 13 வயதுக்குள், ’ஆன் தி ஓரிஜின் ஆஃப் ஸ்பீஷீஸ்’ புத்தகத்தை மனனம் செய்து விட்டிருந்ததாகத் தெரிவித்தார். டார்வின் அவருக்குத் தன் கையெழுத்திட்ட பிரதி ஒன்றை அனுப்பி வைத்தார். இதில், அறிவியலாளர்கள் நடுவில் அவர் அசாதாரணமான ஒருவராக இருந்தார், ராஃபெயெல் மெல்டோலா என்ற வேதியலாளர் அவரிடம் சொன்னது போலத், ‘தன் காலத்திலேயே தன் கருத்துகள் வேரூன்றி, செழித்து வளர்வதைப் பார்த்தவர்,’ என்பதால், டார்வின் அறிவியலாளர்கள் நடுவே அசாதாரணமானவர்.  அதற்கும் மேலாக, அவர் பெரிதும் நேசிக்கப்பட்டார். அறிவியலாளர்கள் நடுவே ஒருக்கால், ஸ்டீஃபன் ஹாக்கிங் மட்டுமே இவரளவு, தன் ரசிகர்களுக்கு அப்படி ஒரு வலுவான உணர்ச்சியை, தம்மை அவர்களுக்கு நெருக்கமாகவே தெரியும் என்ற உணர்வைக் கொடுத்திருக்கக்கூடும். முகம் தெரியாதவர்கள், ஏதேதோ கேள்விகளை எல்லாம் கேட்டுக் கடிதங்கள் எழுதினார்கள், புறாக்கள் ஏன் வட்டமடித்துப் பறக்கின்றன என்பது போன்றவை அவை, தவிர பலதும் மிருகங்களின் நடத்தை பற்றி இருந்தன. மேற்கு ஹார்டல்பூல் என்ற ஊரிலிருந்து, ஆர். எம். மிடில்டன் என்பவர், தன் கிளிக்கு எப்படி வீட்டுக்குள் சரியான முறையில் வசிப்பது என்பதைச் சொல்லிக் கொடுத்தது எப்படி என்று விளக்கிக் கடிதம் எழுதினார். எல்லாக் கடிதங்களுக்கும் பதில் எழுதப்படவில்லை, ஆனால் வியப்பூட்டும் அளவில் கணிசமானவற்றுக்குப் பதில் எழுதப்பட்டிருந்தது. டார்வின் குறிப்பிடத்தக்க விதத்தில் பொறுமையாக இருந்தார். ஒரே ஒரு முறை, ப்ராஹாவில் பிறந்தவரான வானியலாளர் ஆன்டான் ஷோப்ளாஹ், ‘இரு பாலின அடையாளங்கள் உள்ளவர்கள் இருப்பது எப்படி சாத்தியமாகிறது?’ என்று கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பியபோது, டார்வின் அக்கடிதத்தின் மீது நீல க்ரேயானால் ‘முட்டாள்’ என்று எழுதுமளவு மட்டுமே போயிருந்தார்.

Charles Darwin

டார்வினுக்கு வெட்டி வாக்குவாதங்கள் பிடிக்காதவை. தான் ஏற்காத கோட்பாடுகளை நேரடியாக விமர்சிப்பதை அவர் தவிர்த்தார். அவருடைய செயல்பாட்டு முறையை, 1878 இல் பல முறை திரும்பத் திரும்பச் சொல்ல அவருக்குக் காரணங்கள் இருந்தன.   ‘நான் எதை உண்மை என்று நம்புகிறேனோ அதைப் பிறரை மறுக்காமல்’ பிரசுரிப்பதுதான் அது. இருந்தாலும், அவருடைய கடிதங்களினூடே சர்ச்சைகள் தீர்க்கமாக ஒலிக்கின்றன. அவர் காலத்திலேயே வேரூன்றின என்ற போதும், டார்வினின் கருத்துகள் திடீரென்று அரங்கில் வெடித்துத் தோன்றி, விக்டோரியர்கள் மெத்தனமாக ஏற்றுக் கொண்ட உலகப் பார்வையை நொறுக்கி, நாகரீகத்தை நவீனத்துவத்தின் பால் அடித்துத் தள்ளி விடவில்லை. இப்படி நடந்ததாகச் சிலசமயம் அறிவியல் வரலாற்றாளர்கள் சொல்கிறார்கள் என்ற போதும், நடந்தது அதுவன்று. ஸ்கெர்ட்ச்லியும் அவரது தலைமுறையினரும் டார்வினியத்தோடு வளர்ந்திருந்த போதும், டார்வினுக்குச் சமகாலத்தவர்கள் அப்படி வளரவில்லை, அவருடைய பெயர் மேலை உலகெங்கும் தெரிந்திருந்த போதும், ஜெர்மனியில் அவர் பாராட்டப்பட்ட அளவு வேறெங்கும் அவர் பாராட்டுப் பெறவில்லை. ஃப்ரெஞ்சுக்காரர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு போனார்கள், அகடெமீ டெஸ் ஸியான்ஸுக்கு (ஃப்ரெஞ்சு அறிவியல் அகாதமி) டார்வினைத் தேர்ந்தெடுக்க ஃப்ரெஞ்சுக்காரர்கள் பலமுறை மறுத்தார்கள். கடைசியில் ஆகஸ்ட் 1878 இல் தங்கள் எதிர்ப்பைக் கைவிட்டார்கள், ஆனால் அப்போது காலம் கடந்திருந்தது, டார்வினுக்கு அந்தத் தேர்வில் பெருமிதமும் இல்லை, அதில் ஈடுபாடும் இல்லை. லின்னியன் குழுமத்தின் மேனாள் தலைவரான, ஜ்யார்ஜ் பெந்தம் டார்வினுக்கு எழுதியபடி, வாழ்த்தப்பட வேண்டியவர் டார்வின் அல்லர், மாறாக ஃப்ரெஞ்சுக்காரர்கள்தான். அவர்கள்தான், இறுதியாகப் புத்தித் தெளிவு பெற்றதற்காக வாழ்த்தப்பட வேண்டும். பெந்தம் மேலும் சொன்னபடி, அந்த அகாதமியாளர்கள், டார்வினின் வாதங்களை எதிர்ப்பதாக வெறுமனே நடித்திருக்கிறார்கள். இல்லாவிடில், அகாதமியாளரான ஆர்மாண்ட் த கேட்ஃபேகஸ் [6] சொன்னதாக இவர்களால் முன்வைக்கப்பட்டது, ஒரு வாதமேயன்று, ‘நாம் குரங்கிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லும் ஒரு மனிதரை நாம் எப்படித் தேர்ந்தெடுக்க முடியும்?’ என்ற கேள்வி அது.[7] ஓர் உயிரியலாளரான ஆர்மாண்ட் த கேட்ஃபேகஸ் இப்படி ஒரு வாதத்தை முன்வைத்திருப்பார் என்பது நம்பத்தக்கதாகவும் இல்லை.

 இது குறுங்குழு வெறி நோக்கு, ஃப்ரெஞ்சுக்காரர்களுக்குத் தங்கள் நாட்டு [ஆய்வாளர்] லாமார்க் போன்றாரின் ஊக வாதங்கள் எல்லாம் தோற்றுப் போகையில், ஓர் இங்கிலிஷ்காரர் அந்த வாதங்களில் வெல்வதை ஏற்க முடியவில்லை என்று பெந்தம் கருதினார். வேறு விதமாகச் சொன்னால், ஃப்ரான்ஸின் அகாதமி தாம் மூடர்கள் என்று அறியப்படுவது, தாம் ஃப்ரான்ஸின் மீது பற்றில்லாதவர்கள் என்று அறியப்படுவதைவிட மேல் என்று கருதினர்.  கிரீஸ் நாட்டில், பரிணாமக் கோட்பாட்டுக்குக் கடும் எதிர்ப்பு இருந்தது என்பது புரிந்து கொள்ளப்படக் கூடியது, அங்கு நிலவிய மதத்துக்கும் சமூக மரபுகளுக்கும் இந்தக் கோட்பாடு குற்றமாகத் தெரிந்தது. தியோடொர்  ஃபான் ஹெய்ட்ரிஹ்(?) [8] டார்வினுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார். கிரீஸ் நாட்டின் தலைநகரான அதீனாவிலிருந்து  (ஆதென்ஸ்) அவர் அனுப்பிய கடிதத்தோடு, மைண்ட் எனப்பட்டச் சஞ்சிகை ஒன்றில் முந்தைய வருடம் பிரசுரமான ஒரு கட்டுரையின் பிரதி இணைக்கப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரை, டார்வினின் ‘பயக்ராஃபிகல் ஸ்கெச் ஆஃப் ஆன் இன்ஃபண்ட்’ என்ற கட்டுரையின் கிரேக்க மொழி பெயர்ப்பு. அதில் டார்வின் தன்னுடைய முதல் மகனான, விலியம் எராஸ்மஸை, அவன் சிறு குழந்தையாக இருந்தபோது, அவனுடைய வளர்ச்சிப் பாதையைத் தான் கவனித்து எடுத்துக் கொண்டிருந்த குறிப்புகளை வைத்துக் கட்டுரையாக எழுதி இருந்தார். செடிகளின் நாற்றுகளை அவர் எப்படிக் கவனித்துக் குறிப்புகள் எழுதிச் சேர்த்தாரோ, அதே போலத் தன் மகனையும் அவர் சிறு சோதனைகளுக்கு ஆட்படுத்தி இருந்தார். வெளியிலிருந்து செலுத்தப்பட்ட சிறு தூண்டுதல்களுக்கு என்ன மறுவினை இருந்தது, அதில் உடலின் அனிச்சைச் செயலால் வரும் மறுசெயலுக்கும், கற்றுக் கொண்டதில் இருந்து விளையும் செயலுக்கும் வேறுபாடுகளைக் கண்டுபிடிக்க முயன்றிருந்தார். ’ஏழாவது நாளில், அவனுடைய பாதத்தின் அடித்தோலை ஒரு துண்டுக் காகிதத்தால் தொட்டேன், அவன் உதறிக் காலை நகர்த்தினான், தன் பாத விரல்களை அப்போது மடக்கிக் கொண்டான்.’  நேரான விதமாகப் பார்த்தால் அது வாழ்வுச் சரிதைதான், ஒரு ஜீவனின் வாழ்க்கையைப் பார்த்து, கவனித்ததை எழுதுவது. அவருடைய படைப்புகளில் அதுதான் முதல் மொழி பெயர்ப்பு, அதை ஓர் இளம் மருத்துவரும், க்ரீடனுமான (க்ரீடி என்ற தீவைச் சேர்ந்தவர்)மேலியாரகெஸ் செய்திருந்தார். ஆனால் ஹெய்ட்ரிஹ் ,அது எப்படி ஆபத்து நிறைந்த முயற்சி என்று டார்வினுக்கு விளக்கியிருந்தார். இன்னமும் குருட்டுத்தனமான மதக் கொள்கைகளே ஆட்சி செய்திருந்த ஒரு நாட்டில், மனிதர்கள்பால் அறிவியல் அணுகலை மேற்கொள்வதற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு,மேலியாரகெஸ்ஸிற்கு அதிக தைரியம் தேவைப்பட்டிருக்கும்,

சொந்த நாட்டில் எட்வர்ட் ப்யூஸி என்பவர், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலையில் ரீஜஸ் கட்டளையின்கீழ் இருந்த ஹீப்ரூ மொழிப் பேராசிரியர், ஒரு மதப் பிரசங்கம் செய்தார், அதைப் பிரசுரிக்கவும் செய்தார், அதில் பரிணாமக் கோட்பாட்டைத் தாக்கியதோடு அல்லாமல், டார்வின் கிருஸ்தவத்தை எதிர்க்க அறிவியலை ஒரு சாதனமாகப் பயன்படுத்துகிறார் என்று டார்வினின் நோக்கங்கள் மீது குற்றம் கண்டார். 1859 இல் பிரசுரமாகி இருந்த ‘ஆன் தி ஓரிஜின் ஆஃப் ஸ்பீஷீஸ்’ நூல், ‘அறிவியல் குறிக்கோளுடன் எழுதப்படாமல், அரைவாசி மத நோக்கத்தோடும்’, ‘உயிரினங்கள் தனித்தனியே படைக்கப்பட்டன என்ற ஏற்கப்பட்ட கருத்தை ஒழிப்பதற்காகவும்’ எழுதப்பட்டிருக்கிறது என்றும் பழி சாட்டினார். எக்ஸிடர் கல்லூரியில் பணியாற்றிய இளம் தாவரவியலாளரான ஹென்ரி ரிட்லி, டார்வினுக்குக் கவலையோடு கடிதம் எழுதி விளக்கம் கேட்டார்.  ‘ப்யூஸியின் உரை இளநிலை மாணவர்கள் நடுவே மிக்க தாக்கம் கொண்டுள்ளதாகவும், அவர்களுக்கு முற்றிலும் தவறான அபிப்பிராயத்தைக் கொடுத்திருக்க வேண்டும்’ என்றும் இந்த நிலை துரதிர்ஷ்டவசமானது என்றும் விளக்கியிருந்தார். டார்வின் தன் வழக்கப்படி, ஒரு பொது அரங்கச் சர்ச்சையில் இறங்க மறுத்தார்: ‘நான் அறிவியலாளர் அல்லாதாரின் விமர்சனங்களுக்கு ஒரு போதும் பதில் சொன்னதில்லை.’ இந்தப் பிரசங்கம் தன்னுடையது மட்டுமல்லாமல் வேறு எவருடைய கவனத்திற்கும் உகந்ததன்று என்று கருதிய அவர், ரிட்லிக்குத் தனிப்பட்ட முறையில் எழுதிய கடிதத்தில் வெளிப்படை உண்மையான ஒரு கருத்தையே தெரிவித்திருந்தார்: தன் ‘ஆன் தி ஓரிஜின் ஆஃப் ஸ்பீஷீஸ்’ நூல் ’சமயக் கருத்துகளோடு ஒரு தொடர்பும்’ இன்றியே எழுதப்பட்டது என்பது அக்கருத்து. ஆனால் அதில் தொடர்ந்து எழுதப்பட்டதைப் பார்த்தால், ப்யூஸியின் பிரசங்கத்தின் வாதத்தால் இல்லாமல், வேறேதோ ஒன்றால் டார்வின் பாதிக்கப்பட்டிருந்தார் என்று தோன்றுகிறது. ‘இதையும் சேர்க்கிறேன், பல வருடங்கள் முன்பு, தி ஓரிஜினுக்காக உண்மைத் தகவல்களை நான் சேகரித்தபோது, தனிப்பட்ட முறையில் கடவுளை நம்புவது என்பதைப் பொறுத்து எனக்கு இருந்த நம்பிக்கை, டாக்டர். ப்யூஸிக்கு இருக்கும் நம்பிக்கையைப் போன்றே உறுதியானது.’

ப்யூஸி டார்வினைவிட ஒன்பது வருடங்கள் மூத்தவர். விக்டோரியாவின் முடி சூட்டலுக்கு முந்தைய வருடம், டார்வின் தனது ‘பீகிள்’ பயணத்திலிருந்து 1836 இல் திரும்பி இருந்தார், இந்த இருவரின் தலைமுறைதான் விக்டோரிய காலத்தை உருவாக்கியது. ஆனால் அவர்கள் பிறந்ததென்னவோ ஜ்யார்ஜியன் காலத்தில். ஆன் தி ஓரிஜின் ஆஃப் ஸ்பீஷீஸ் புத்தகத்தை முழுதும் மனப்பாடம் செய்த பதின்ம வயது ஸ்கெர்ச்லியின் தீவிர ஈடுபாடு அவர்களுக்கு இருந்திருக்க முடியாது. அவர்கள் என்ன அறிவுத் தேடல் பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர்களின் பாதைகள் துன்பமூட்டும் விதத்தில் பிரிந்துதான் போயிருக்க முடியும். டார்வின் தன் புத்தகத்தைப் பிரசுரிப்பதில் இருபது வருடங்கள் தாமதம் காட்டி இருந்ததற்குக் காரணம், தம் மனைவி எம்மாவுக்கு மனத் துன்பம் கொடுப்பது பற்றிய அச்சம்தான். மரபுவழி ஆங்கிலிகன் கிருஸ்தவரான எம்மா, இறுதித் தீர்ப்பை நம்பினார், மரித்தவர்கள் மீண்டும் உயிர் பெறுவர் என்பதையும், வேறு உலக வாழ்வு கிட்டப் போகிறது என்பதையும் முழுதும் நம்பினார். டார்வினுக்கும் அவர் மனைவிக்கும் இடையே இருந்த வேறுபாடு சில நேரம் ‘மேதையான கணவருக்கு, அசட்டு மனைவி தடையாக இருந்தார்’ என்பதாகப் பிழையாகச் சித்திரிக்கப்படுகிறது. எம்மா திருமணத்துக்கு முன் டார்வினுக்கு எழுதிய கடிதத்தில், டார்வினுக்கு மதத்தின் மீதிருந்த ஐயம் அதிகரிப்பது  ‘நம்மிடையே துன்பமிக்க வெற்றிடத்தை உருவாக்கும்’ என்றும், மரணம் அவர்களைப் பிரித்துவிடும் என்றும் எழுதினார்.  இருப்பினும் நிஜத்தில் அது ஒரு மகிழ்ச்சியான திருமண வாழ்வாகவே இருந்தது. 1878 இல், திருமணம் நிச்சயமான ஒரு நண்பருக்கு எழுதும் கடிதத்தில், கடந்த காலத்தை டார்வின் திரும்பிப் பார்க்கிறார், ‘நல்ல மனைவி ஒருவர் இந்த வாழ்வின் பெரும் பாக்கியம், நான் எதிர்பார்ப்பது…. என்னளவுக்கு இந்த விஷயத்தில் உங்களுக்கும் மகிழ்ச்சி கிட்டும் என்பதுதான்.’  எம்மாவின் அந்தக் கடிதத்தை சேமித்து வைத்திருந்த டார்வின், அதன் ஒரு புறத்தில் எழுதி இருந்தார், ‘நான் இறக்கும் போது, உன் கடிதத்தை நான் பலமுறை முத்தமிட்டிருக்கிறேன், அதன் மீது கண்ணீர் சிந்தி இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்.’

*

பரிணாமம் என்ற கருத்தைப் பற்றிய பொது ஜன ஆர்வம் அலையாக எழுந்திருந்த தருணத்தில், ஆன் தி ஓரிஜின் ஆஃப் ஸ்பீஷீஸ் வெளியிடப்பட்டது. அன்று பரிணாமம் என்பது குறித்த அபிப்பிராயங்கள் பிளவுபட்டனவாக இருந்தாலும், எதிர்ப்பாக இருக்கவில்லை. (இதே கருத்து பற்றி) ராபர்ட் சேம்பர்ஸ், ‘வெஸ்டீஜஸ் ஆஃப் த நேச்சுரல் ஹிஸ்டரி ஆஃப் க்ரியேஷன்’ என்ற தன் பிரசுரத்தை, எழுதியவர் பெயர் இல்லாமல் வெளியிட்டிருந்த போது அது பெரும் பரபரப்பை உண்டாக்கியது என்றாலும், அது பிரசுரமாகிப் பதினைந்து ஆண்டுகள் ஆகியிருந்தன.  இளவரசர் ஆல்பர்ட் அதை அரசி விக்டோரியாவுக்கு உரக்கப் படித்துக் காட்டி இருந்தார். டிஸ்ரேலி தன் நாவலான  ‘டான்க்ரெட்டில்’,  வெஸ்டீஜஸ் புத்தகத்தையும், அது உண்டாக்கிய பரபரப்பையும் கேலி செய்வதற்கு, ‘த ரெவெலேஷன்ஸ் ஆஃப் கேயாஸ்’ என்ற பெயரில் அந்த நூலைச் சித்திரித்திருந்தார். டிஸ்ரேலியின் நாவலில், லேடி கான்ஸ்டன்ஸ் எனும் பாத்திரம், கேயாஸ் நூலின் பல வாசகர்களைப் போலவே, அந்தப் புத்தகம் எல்லாவற்றையும் விளக்குகிறது, ஆனால் எதையும் விளக்கவில்லை என்ற முடிவுக்கு வருகிறார்.

மனிதர் எப்படி வளர்க்கப்பட்டிருக்கிறார் என்பது மிகவும் சுவாரசியமானது. உங்களுக்குத் தெரியும், வளர்ச்சிதான் எல்லாமே. முதலில், அங்கே ஏதும் இல்லை, பிறகு ஏதோ இருந்தது; பிறகு- எனக்கு அடுத்தது என்ன என்று மறந்து விட்டது- கிளிஞ்சல்கள், மீன்கள் இருந்தன என்று நினைக்கிறேன்; பிறகு நாம் வருகிறோம்- இருங்க, பார்க்கிறேன் – நாமா அடுத்து வருகிறோம்? சரி விடுங்க அதை; நாம்தான் கடைசியில் வந்தோம். அடுத்த மாறுதல் நம்மை விட மிகவும் மேலான ஏதோ ஒன்று வரும், ஏதோ இறக்கைகளோடு வரலாம். ஆ, இதோ இருக்கிறது: நாம் மீன்களாக இருந்தோம், இனிமேல் காக்கைகளாகப் போகிறோம். நீங்க இதை நிச்சயம் படிக்க வேண்டும்.

டார்வினோ, சேம்பர்ஸின் மோசமான புவியியலைப் பார்த்து முகம் சுளித்தார், அவருடைய உயிரியல் அதையும் விடப் ’பல மடங்கு மோசம்’ (என்றார்).

ஆன் தி ஓரிஜின் ஆஃப் ஸ்பீஷீஸ் புத்தகத்தில் டார்வின் சமயச் சிந்தனையின் பழமைவாதத்துக்கும், தன் அறிவியல் முடிவுகளுக்கும் இடையில் நுட்பமாக வகுத்த ஒரு பாதையில் நடந்திருந்தார். மனிதர்கள் பற்றி நேரடியான குறிப்பு ஏதும் கொடுக்காமல் தவிர்த்ததால் வாசகர்கள், மனிதர்கள் மிருகக் கூட்டத்தில் உறுப்பினர்கள் இல்லை என்றும், அவர்கள் கடவுளின் உருவிலேயே சாவு இல்லாத ஆன்மாவுடன் இதர ஜீவராசிகள் மீது ஆட்சி புரியும் உரிமையோடு படைக்கப்பட்டவர்கள் என்றும் நம்பிக்கையைத் தொடர்ந்து வைத்துக் கொள்ள வாய்ப்பு கொடுத்த புத்தகமாக அது இருந்தது. இந்த சமநிலையைச் சாதிக்கவென்று டார்வின் தன் சொற்களின் பயன்பாட்டோடு நிறையப் போராட வேண்டி இருந்தது, என்பதை வரலாற்றாளர் ஜேனட் ப்ரௌன் சுட்டி இருக்கிறார். அவர் ‘பரிணாமம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை, ஏனெனில் 1859 இல் அந்தச் சொல்லுக்கு, ‘கருவுக்குள் மறைந்துள்ள கட்டமைப்புகளின் விரிவு’ என்ற பொருளே இருந்தது. மாறாக அவர் ‘மாறுதல்களுடன் உருவான சந்ததி’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். இந்த சொற்களின் அர்த்தத்தில் இருந்த இரு நிலைப்பாடு வாசகர்களைப் பல திக்குகளில் அனுப்பியது, அவற்றில் பலதையும் டார்வின் முன் கூட்டி எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்கள் எவ்வளவுக்குத் தம் காலத்துடைய தாக்கத்தால் உருவானவர்களோ அந்த அளவு தாக்கத்துக்கு உள்ளானவர் இல்லை டார்வின். அந்த நூலின் மூலப்பிரதிகளில் எஞ்சியவற்றிலிருந்து, ப்ரௌன் வந்து சேரும் முடிவு இது, ‘ என்ன வகைப் பிரச்சினைகள் எழும் என்பது குறித்து அவருக்கு எத்தனை தெரிந்திருந்தது என்பது….நிச்சயமாகத் தெரியவில்லை.’

1850களிலும் 1860களிலும் மனோபாவம் சக்தி நிறைந்திருந்தது. கலை, விஞ்ஞானம் மற்றும் வாழ்க்கையில், தசைத் திறன், ‘எதார்த்தம்’ மற்றும் முன்னெடுப்பு ஆகியன போற்றப்பட்ட குணங்களாக இருந்தன. பிரச்சினைகள் இருப்பதே அவற்றைத் தீர்ப்பதற்காக என்று எண்ணமிருந்தது. ரயில் பாதை நிறுவனங்கள் நிலப்பரப்பூடே வெட்டித் துளைத்தும்,  அசாதாரணமாக இருந்த பாறைத் தொடர்களை உடைத்துத் திறந்தும் பாதைகளிட்டன. நிலவியலிலும், தொல் படிவுகளைக் கண்டு பிடிப்பதிலும் பெரும் மோகம் எழுந்திருந்தது. கடற்கரையில் விடுமுறைக்குப் போகிறவர்கள் கூட சிப்பிகளைச் சேகரித்தனர், கல் குட்டைகளில் துழாவித் தேடினர்.  உலகமே புது வகை அறிவு முறைகள் உள்ளுறைந்து ததும்பி நிற்கும் காலம் அது, பரிணாமம் என்ற சொல்லின் அர்த்தம் மாற்றம் பெற்று, டார்வினியம் என்று அறியப்படுவதை நோக்கி நகரத் தொடங்கியது, ஆனால் அதன் பழைய அர்த்தம் அச்சொல்லை இன்னமும் பிடித்தாட்டிக் கொண்டிருந்தது. பிட்டல்ஃப் க்ரேஞ்சில் இருக்கும் தன் வீட்டிலிருந்து ஜேம்ஸ் பேட்மான், டார்வினுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். அப்போது, பேட்மான் ஒரு நிலவியல் அரங்கைக் கட்டும் பணியிலிருந்தார். அந்த அரங்கு 1862 இல் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. அதில் விவிலிய நூலின்படியான படைப்பு நிகழ்வின் கட்டங்கள், ’முதல் நாள்’, ‘இரண்டாம் நாள்’ என்று தலைப்பிடப்பட்டு, புவியியல் மற்றும் தொல்படிவு மாதிரிப்பொருட்களால் சித்திரிக்கப்பட்டிருந்தன. பேட்மானோ அவருடைய சமகாலத்தவரில் பலரோ, ஜெனெஸிஸ் பற்றிய கருத்துகளை அப்படியே நம்பவில்லை என்ற போதும், பரமபிதாவின் படைப்பு படிப்படியாக விரிந்த விதத்தை, ‘வளர்ச்சி’ என்ற பெயரில் இப்படி உருவகமாகச் சித்திரிப்பது அறிவியலையும், மதத்தையும் ஒருவாறாகச் சேர்த்துக் கட்டி வைக்க உதவியது. விக்டோரிய வருடங்களின் உச்ச கட்டத்தில் இருந்த சர்ச்சுகள், உட்புறங்களில் பதித்த பளிங்காலும், தீட்டப்பட்ட கனிமப் பொருட்களாலும் மின்னின. 1868 இல் விலியம் பட்டர்ஃபீல்ட் என்பவர், ஆக்ஸ்ஃபோர்ட் நகரில், கீபில் கல்லூரியைக் கட்ட நியமிக்கப்பட்டார், அது ஜான் கீபில் என்பவரின் பெயரால் நிறுவப்பட இருந்தது. அவர் ட்ராக்டேரியம் [9] என்கிற கிருஸ்தவ இயக்கத்தைத் தூண்டி நடத்தியவர். அந்தக் கல்லூரி இந்த இயக்கத்தின் நோக்கங்களுக்கு ஓர் உச்சக் கட்ட சான்றாக இருப்பதாகத் திட்டம். படிப்படியாக வளரும் படைப்புக்குக் கல்லாலும், செங்கல்லாலும் ஆன ஒரு உருவாக அது இருக்கும் என்று கருதப்பட்டது. வேறு சிலர் இதைப் ‘பன்றி மாமிச சாண்ட்விச் பாணி’ என்று கருதினார்கள். எதிர்ப் புறத்தில், ஆங்க்லிக (சர்ச்சைச் சேர்ந்த) பிரிவினரில், எவாஞ்சலியக் கிருஸ்தவ சோசலியரான சார்ல்ஸ் கிங்க்ஸ்லியோ, ஆன் தி ஓரிஜின் ஆஃப் ஸ்பீஷீஸ் புத்தகத்தில், தன் தனிப்பட்ட விசித்திரக் கோட்பாடான, ‘ஒழுக்கமும், உடல் கூறும் ஒத்திசைந்த பரிணாமம்’ என்பதன் இணை கோட்டு இயக்கத்தைக் கண்டார்.

The Descent of Man/ Charles Darwin

ஆனால், நாளாவட்டத்தில் அந்நூலின் உள்ளுறைந்த பாதைகள் தெளிவாகத் தொடங்கின, சிலரால் இவை எளிதில் தாங்க முடியாதனவாக இருந்தன. அவர்களில் ஒருவரின் நிலை வருந்தத் தக்கதாயிற்று. ஓர் இயற்கையியலாளரான ஃபிலிப் காஸ்- இவர் எட்மண்ட் காஸின் தகப்பனார், 1850 களில் சிறப்பாக விற்பனை ஆன ‘தி அக்வேரியம்’ என்ற நூலின் ஆசிரியர், மீன்களைத் கண்ணாடித் தொட்டியில் வளர்க்கும் பழக்கத்தைப் பிரபலமாக்கினவர்.  சர்ச்சுகளின் கொள்கைகளோடு உடன்பட மறுத்த ப்ளிமத் சகோதரத்துவத்தின் ஆழ்ந்த நம்பிக்கையாளராக இருந்தவர்- ஆன் தி ஓரிஜின் ஆஃப் ஸ்பீஷீஸ் வெளியிடப்படுவதற்குச் சற்றே முன்பு, ஆம்ஃபலோஸ் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார், அதில் பூமிக்கு நெடிய வரலாறு இருப்பதாகக் காட்டுவதற்காக, பரமபிதாதான் கற்களில் தொல்படிவுகளை உள்ளிட்டார், கருவாக ஒரு போதும் இல்லாத ஆதாமுக்கும் அதே காரணத்தால் தொப்புளைக் கொடுத்திருந்தார் என்று வாதிட்டிருந்தார். அந்தப் புத்தகம் அவரை நகைப்புக்குரியவராக ஆக்கி இருந்தது. அது அவரது தொழில் வாழ்வை நாசமாக்கியது, அதை அவர் மேலும் மோசமாக்கும்படியாக 1866 இல் தொடரான இன்னொரு புத்தகத்தை வெளியிட்டார், ‘ஜியாலஜி ஆர் காட்: எது?’  என்ற நூல் அது. பரிதாபத்துக்குரிய காஸ் தொடர்ந்து பிரசுரித்துக் கொண்டிருந்தார். 1865 ஆம் ஆண்டில் வெளியிட்ட, ‘அ இயர் அட் த ஷோர்’  என்ற நூலில் கடற்பிராணிகளையும், கிளிஞ்சல்களையும் நுண்மையாக அவரே வரைந்த சித்திரங்களாகக் காட்டியிருந்தார். அவற்றின் வரிகளோடிய, புள்ளிகளாலான பரப்புகளை பட்டர்ஃபீல்ட் சர்ச்சுகளைப்[10] போன்ற வண்ணங்களில் சித்திரித்து, அவை கடவுளின் சிருஷ்டியின் எழிலுக்கு அழுத்தமான சாட்சியங்கள் என்று தான் நம்புவதை எழுதி இருந்தார். இருந்த போதும் 1871இல், டார்வினின் ‘த டிஸெண்ட் ஆஃப் மான்’ பிரசுரமானபின், இந்த விளையாட்டெல்லாம் முடிந்து போயிற்று: டார்வினியத்தின் உள்ளர்த்தங்கள் இனிமேலும் தவிர்க்க முடியாதவை ஆகி இருந்தன, டார்வினும் அவற்றைத் தவிர்க்கவில்லை. மானுட குலம் இயற்கை உலகின் ஒரு பகுதி ஆகியது, இயற்கையின் நோக்கமாக இருக்கவில்லை, ஆனால் விளைபொருளாகியது. ‘பரிணாமம்’ அதன் முந்தைய அர்த்தங்களிலிருந்து நகர்ந்து விலகி விட்டிருந்தது. அதன் உள்ளர்த்தங்களான வளர்ச்சியும், முன்னேற்றமும் வெளிப்பட்டு விட்டிருந்தன.

தி ஓரிஜின் ஆஃப் ஸ்பீஷீஸ் புத்தகத்தின் தலைப்புப் பக்கம்

1864 இல் ஹெர்பர்ட் ஸ்பென்ஸர், ‘தி ஓரிஜின் ஆஃப் ஸ்பீஷீஸ்’ நூலின் உப தலைப்பாக இருந்த ‘த ப்ரெஸெர்வேஷன் ஆஃப் ஃபேவர்ட் ரேஸஸ் இன் த ஸ்ட்ரகிள் ஃபொர் லைஃப்’ [11] என்பதை நீக்கி, சுருக்கமான வேறோர் தலைப்பாக ‘ஸர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட்’ என்பதைப் பொருத்தி, அந்த நூலின் பொருளில் இருந்த சில தெளிவின்மைகளை அகற்றி இருந்தார். அறிவியலின் அறிவிப்பு அன்று – பரிணாமம் என்றால் முன்னேற்றம் இல்லை, இணக்கமாதல்தான், பொருந்தி அமைதல்தான், அதில் ஏதும் முன் திட்டம் இல்லை என்பது அது. வாழ்க்கை என்பது இருப்புக்கான போராட்டம். பட்டர்ஃபீல்ட் எழுதினார், ‘நம் தந்தைகளை வலுவான மனிதர்களாக ஆக்கிய மதநம்பிக்கையும், மரபும் மறைந்து வருகின்றன…. சீக்கிரமே.. இங்கு  நமக்கு நம்புவதற்கு ஏதும் இராது, நம்மையே நாம் நம்புவதைத் தவிர, அந்த நம்பிக்கையோ… சிறிதும் சுகம் தராதது.’ இப்படி அவர் பேசியது அவருடைய சமகாலத்தவர்கள் பலருக்குமானது.  ‘விவிலியப் பாடல்களின் ஒவ்வொரு ஏற்ற இறக்க ஒலிப்பின் முடிவிலும்,’ புவியியலாளர்களுடைய சுத்தியல்களின் கிண்கிண் ஒலிகளை ரஸ்கின் பல ஆண்டுகளுக்கு முன்பே கேட்டிருந்தார். மேலும் ஹென்ரி ஜேம்ஸ், ரஸ்கினை 1869 இல் இவர் சந்தித்தபோது, ரஸ்கின் மிகவும் அச்சப்பட்டிருந்தார். ‘எதார்த்தத்தின் இறுகலான முகத்தால் பயந்து போயிருந்தார்.’ என்று எழுதினார். ரஸ்கினும் டார்வினும் ஒருவரை ஒருவர் அறிந்திருந்ததோடு, பரஸ்பரம் பிடித்திருந்தவர்களானார்கள். 1837 இல் முதல் முறை சந்தித்திருந்தனர், பீகிள் கப்பல் பயணத்திலிருந்து டார்வின் திரும்பிச் சிறிது நாட்களே ஆகி இருந்தன. ’நாங்கள் சந்தித்து, ஒரு மாலை நேரம் பூராவும் பேசிக் கொண்டிருந்தோம்.’ என்று நினைவு கூர்ந்தார். 1868 இல் அவர்கள் மறுபடி சந்திக்கையில், ரஸ்கின் டார்வினியத்தை எதிர்ப்பவர்களில் முக்கியமானவராக ஆகி இருந்தார். ‘வேண்டுமென்றே தெய்வ நிந்தனை செய்யும் அறிவியல்’, என்று அதை அழைத்திருந்தார். ஆனால் (சந்திப்பில்) மறுபடி இருவரும் நட்புடன் பழகி, ‘உயிர்த் துடிப்புள்ள உரையாடலும்’ செய்திருந்தனர்.

1864 இல் ஹெர்பர்ட் ஸ்பென்ஸர், ‘தி ஓரிஜின் ஆஃப் ஸ்பீஷீஸ்’ நூலின் உப தலைப்பாக இருந்த ‘த ப்ரெஸெர்வேஷன் ஆஃப் ஃபேவர்ட் ரேஸஸ் இன் த ஸ்ட்ரகிள் ஃபொர் லைஃப்’ [11] என்பதை நீக்கி, சுருக்கமான வேறோர் தலைப்பாக ‘ஸர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட்’ என்பதைப் பொருத்தி, அந்த நூலின் பொருளில் இருந்த சில தெளிவின்மைகளை அகற்றி இருந்தார். அறிவியலின் அறிவிப்பு அன்று – பரிணாமம் என்றால் முன்னேற்றம் இல்லை, இணக்கமாதல்தான், பொருந்தி அமைதல்தான், அதில் ஏதும் முன் திட்டம் இல்லை என்பது அது. வாழ்க்கை என்பது இருப்புக்கான போராட்டம். பட்டர்ஃபீல்ட் எழுதினார், ‘நம் தந்தைகளை வலுவான மனிதர்களாக ஆக்கிய மதநம்பிக்கையும், மரபும் மறைந்து வருகின்றன…. சீக்கிரமே.. இங்கு  நமக்கு நம்புவதற்கு ஏதும் இராது, நம்மையே நாம் நம்புவதைத் தவிர, அந்த நம்பிக்கையோ… சிறிதும் சுகம் தராதது.’ இப்படி அவர் பேசியது அவருடைய சமகாலத்தவர்கள் பலருக்குமானது.  ‘விவிலியப் பாடல்களின் ஒவ்வொரு ஏற்ற இறக்க ஒலிப்பின் முடிவிலும்,’ புவியியலாளர்களுடைய சுத்தியல்களின் கிண்கிண் ஒலிகளை ரஸ்கின் பல ஆண்டுகளுக்கு முன்பே கேட்டிருந்தார். மேலும் ஹென்ரி ஜேம்ஸ், ரஸ்கினை 1869 இல் இவர் சந்தித்தபோது, ரஸ்கின் மிகவும் அச்சப்பட்டிருந்தார். ‘எதார்த்தத்தின் இறுகலான முகத்தால் பயந்து போயிருந்தார்.’ என்று எழுதினார். ரஸ்கினும் டார்வினும் ஒருவரை ஒருவர் அறிந்திருந்ததோடு, பரஸ்பரம் பிடித்திருந்தவர்களானார்கள். 1837 இல் முதல் முறை சந்தித்திருந்தனர், பீகிள் கப்பல் பயணத்திலிருந்து டார்வின் திரும்பிச் சிறிது நாட்களே ஆகி இருந்தன. ’நாங்கள் சந்தித்து, ஒரு மாலை நேரம் பூராவும் பேசிக் கொண்டிருந்தோம்.’ என்று நினைவு கூர்ந்தார். 1868 இல் அவர்கள் மறுபடி சந்திக்கையில், ரஸ்கின் டார்வினியத்தை எதிர்ப்பவர்களில் முக்கியமானவராக ஆகி இருந்தார். ‘வேண்டுமென்றே தெய்வ நிந்தனை செய்யும் அறிவியல்’, என்று அதை அழைத்திருந்தார். ஆனால் (சந்திப்பில்) மறுபடி இருவரும் நட்புடன் பழகி, ‘உயிர்த் துடிப்புள்ள உரையாடலும்’ செய்திருந்தனர்.

டார்வினின் மண வாழ்விலும், ரஸ்கினுடன் அவர் கொண்டிருந்த நட்பிலும், ஒரு தலைமுறையின் தர்ம சங்கடங்கள் மனமுருகும் வகையில் தெளிவாகத் தெரிந்தன. 1871 இலிருந்து, ஒரு ‘ப்ளேக் நோயின் காற்று’ உலகில் எங்கும் மேலும் மனித குலத்தின் மனங்களிலும் வீசத் தொடங்கி விட்டதாக ரஸ்கின் நம்பத் தொடங்கி இருந்தார். 1878 இல் அவருடைய உலகப் பார்வையில் விரிசல்கள் தாங்க முடியாதனவாக ஆகி விட்டன, ஃபிப்ரவரி 28 ஆம் தேதி அன்று அவர் முழுதும் நொறுங்கி மனமுடைந்து போனார். ‘வெறும் வேலைப்பளுவோ, அல்லது கவலையோ என்னைச் சீக்கிரமே தீர்த்துக் கட்டி இருக்கும்,’ என்று பின்னாளில் அவர் எழுதினார், ‘ஆனால் என்னைப் புத்தி பேதலித்தவனாக ஆக்கி இராது. நான் புனித உர்சுலாவையும் மற்ற புனிதர்களையும்- குறிப்பாக இளம் பெண் புனிதர்களையும் பற்றிப் பித்துப் பிடித்தவனானேன்.’ அது ஒரு பகுதிதான். விஸ்லர் வரைந்த (ஓர் ஓவியமான) ‘நாக்டர்ன் இன் ப்ளாக் அண்ட் கோல்ட்’ [12] என்பதை அது பொதுமக்களின் முகத்தில்… ஒரு சட்டி வண்ணத்தை வீசியது’ என்று விமர்சனம் செய்ததால், அநியாயமாகப் பழி சுமத்தினாரென்று தொடரப்பட்ட நீதிமன்ற வழக்கொன்றை ரஸ்கின் அப்போது எதிர்கொள்ள வேண்டி இருந்தது. டார்வின் தன் குணாதிசயங்களாலும், உடல்நலப் பிரச்சினைகளாலும் வீட்டை விட்டு வெளியே போவதை விரும்பாதவர் என்றாலும், ரஸ்கினை 1879 இலும், 1881 இலும் (ரஸ்கின் வசித்த பகுதியான) கம்ப்ரியாவுக்குப் போய் ரஸ்கினைச் சந்தித்தார்.

1878 வாக்கில் டார்வினியமும் அதன் உள்ளுறைந்த விளைவுகளும் தவிர்க்க முடியாதபடி அறிவியல் ஏற்பு நிலைக்குச் சென்று கொண்டிருந்தன. ‘உயிரியலாளர்களிடையே  அனேகமாக ஒருமித்த கருத்து இருக்கிறது,’ என்று ரிட்லிக்கு டார்வின் எழுதினார், ‘அதற்கான வழிமுறை குறித்து நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்றாலும்.’ பொதுமக்கள் பரப்பில் இன்னமும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தன. டார்வினின் சொந்தக் குடும்பத்திலேயே ஆன்மீகத்துக்கும், அறிவியல் கருத்துகளுக்கும் இடையே இப்படிப் பாதைகள் பிரிந்தது தெளிவாகத் தெரிந்தது. ஒரு புறம், டார்வினின் ஒன்றுவிட்ட சகோதரர், ஃப்ரான்ஸிஸ் கால்டன், பிற்காலத்தில் தேர்வு மூலம் இன மேம்படுத்தல் செய்யக் கோரும் இயக்கம் (யூஜீனிக்ஸ்) ஒன்றை நிறுவினவர், தகுதி உள்ளனவே பிழைக்கும் என்ற கருத்தை மனிதர்பால் பொருத்தினால் என்ன நேரும் என்று யோசிக்கத் துவங்கி இருந்தார். அப்படித் தகுதி இல்லாது போனவர்களுக்கு என்ன ஆகும்? மே மாதம், வன்முறைக்காகத் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் ஒளிப்படங்களைப் பலவிதமாக இணைத்துத் தயாரித்த படங்கள் மூலம் எடுத்துக் காட்டாக முன்வைக்கக் கூடிய குணங்களைச் சித்திரிப்பதற்காக கால்டன் அவற்றை டார்வினுக்கு அனுப்பி வைத்தார். அவற்றின் அடிப்படையில் கால்டன் எழுதிய ஒரு கட்டுரை அதே மாதம் ‘நேச்சர்’ சஞ்சிகையில் பிரசுரமாகியது. தனி நபர்களின் ஆதர்சக் கடவுள் என்ற நம்பிக்கை வீழ்ந்ததால் ஏற்பட்ட விளைவுகளில் கால்டனின் எதிர்வினைக்கு முற்றிலும் மாறுபட்டு இன்னொரு கோட்பாடு எழுந்தது, அது ‘அப்பால்’ உள்ளனவற்றைப் பற்றிய பொதுக் கோட்பாடு. அந்த நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகள் தியொஸாஃபி மேலும் எக்டோப்ளாஸம் ஆகிய கருத்துகளால் பனி மூட்டமாக்கப்பட்டிருந்தன.  ஆவிகளோடு பேசும் முயற்சிகளில் ஆர்வம் கொண்டிருந்தவரும், தங்கள் மருமாளுமான எஃப்ஃபீ என்ற பெண், ஆவிகள் எழுதுவது என்பதைப் பற்றிய தன் அறிக்கையில் ‘ஆவிகள் எழுதின என்பதை விடத் தானே ஒரு கனவு நிலையில் எழுதியதாகத்தான் டார்வின் மாமா கருதுவார் என்று எனக்குத் தெரியும்’ என்று முடிவில் தெரிவித்திருந்ததாக டார்வினின் சகோதரர் எராஸ்மஸ் தெரிவித்தார்.

அந்த வருடம் முடியும் கட்டத்தில், பரிணாம உயிரியலாளரான ஜ்யார்ஜ் ரோமேன்ஸுக்கு டார்வின் கடிதம் எழுதினார். ரோமேன்ஸ் கிருஸ்தவத்தையும், அறிவியலையும் ஒன்றாகப் பிடித்துக் கொண்டிருக்கப் போராடிய, வளர்ந்து வரும் தலைமுறையினரில் ஒருவர். அவர் டார்வினுக்குத் தான் எழுதிய ’எ காண்டிட் எக்ஸாமினேஷன் ஆஃப் தீயஸம்’ என்ற நூலை அனுப்பி இருந்தார். அந்த நூலை அவர் ஃபிஸிகஸ் என்ற புனைபெயரில் பிரசுரித்திருந்தார். டார்வின் அந்தப் புத்தகத்தை மிக்க ஈடுபாட்டோடு தான் படித்ததாகச் சொல்லி இருந்தார், ஆனால் அதன் அறிவியல் பக்கத்து வாதங்கள் வலுவானவையாக இல்லை என்று கண்டிருந்தார். எதிர்க் கட்சி ஆதரவாளராக வாதிட்டு, ஒரு கிருஸ்தவ தத்துவாளர் முன்வைக்கும் கட்சி இப்படி இருக்கலாம் என்று சுட்டுகிறார்: ‘எல்லா இயற்கை விதிகளும் புவி ஈர்ப்பு விசையிலிருந்து பிறப்பதாக நீங்கள் நிறுவி விட்டதாகச் சொல்ல உங்களுக்கு ஒரு உரிமையும் இல்லை… உருத் தெளிவில்லாத தூலப்பொருள் நித்தியத்திலிருந்தும், பழங்குடியினர் காலத்திலிருந்தும் இருந்தது என்று நீங்கள் சொல்வது… விளக்கமே தராமல் கேள்வியையே விடை என்று சொல்வதாகும்.’ டார்வினின் கருத்து நேர்மையும், நிலை மாறாத நம்பகத்தன்மையும் அவருடைய கடிதங்களில் ஒளிர்கின்றன. 1878 இல் அவரை வழி நடத்திய கொள்கையேதான், பீகிளிலிருந்து (அவருடைய கப்பல்) தன் சகோதரிகளுக்கு அவர் எழுதிய கடிதங்களிலும் இருந்தது: ‘பொது அறிவுச் சேமிப்பை அதிகரிக்க நம்மால் முடிகிறதை, அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி, நாம் செய்வது என்பது,  நம் வாழ்வின் இலக்கு என்று கருதக் கூடிய வேறெந்த விஷயத்தையும் போலவே மதிப்பு மிக்கதுதான்.’

***

குறிப்பு: இக்கட்டுரையின் இங்கிலிஷ் மூலம் லண்டன் ரிவ்யு ஆஃப் புக்ஸ் சஞ்சிகையில், 23 மே 2019 அன்று பிரசுரமாகியது. அதை எழுதியவர் ரோஸ்மேரி ஹில் என்பவர்.

தமிழாக்கம்: மைத்ரேயன் (ஜூன்/ஜூலை 2019)

மொழி பெயர்ப்பாளர் குறிப்புகள்:
  1. http://darwin-online.org.uk/content/frameset?itemID=F1357&viewtype=text&pageseq=1

இந்தப் புத்தகம் மேற்கண்ட முகவரியில் இலவசமாக இப்போது கிடைக்கிறது. இன்று படித்தாலும் நமக்கு உற்சாகம் தரக்கூடியதாகவும், எளிதில் யாரும் படிக்கக் கூடியதாகவும் உள்ளது. நவீன அறிவியல் தோற்றுவாய் காலங்களில் எத்தனை எளியதாகத் துவங்கி இருக்கிறது என்பதை நாம் அறிந்தால் ஒரு புறம் அதிசயமாகவும், இன்னொரு புறம் இப்படித்தான் அறிவியல் என்றுமே இருக்க வேண்டும், எளிதில் அணுகக் கூடியதாக என்றும் தோன்றுகிறது.

2. https://www.smithsonianmag.com/travel/the-house-where-darwin-lived-4277158/

3. de minimis non curat lex என்பது அந்த லத்தீன் வாக்கியம்.

4. ‘der erleuchtete Eremit von Down’ என்று அவருடைய ஜெர்மன் விசிறி Karl Kraus டார்வினை அழைத்தார்.

5. ‘ihrer stillen Verehrer’ என்பது கார்ல் கௌஸ் பயன்படுத்திய வர்ணனை. இதைத் தமிழில் எழுதுவது கடினம்- கூடிய மட்டில் உச்சரிப்பைக் கொடுத்திருக்கிறேன்.

6. Armand de Quatrefages என்பது அந்த ஃப்ரெஞ்சு அகாதமியாளரின் பெயர். இவர் ஓர் உயிரியலாளர். இவர் டார்வினின் பரிணாமக் கொள்கையை எதிர்க்கவில்லை, டார்வினியத்தைத்தான் விமர்சித்தார் என்று விக்கிபீடியா சொல்கிறது. இயற்கைத் தேர்வில் நலிவானவை ஒழியும், புது ஜீவராசிகள் தோன்றாது என்பது இவரது கருத்து. டார்வினும் இவரும் நல்ல நட்பஉறவு கொண்டிருந்தனர். 1870 இல் இவர் டார்வினை அகாதமியில் சேர்க்கச் சொல்லி யோசனையை முன்வைத்தார். ஃப்ரெஞ்சு அகாதமிக்காரர்கள்தான் எதிர்த்தனர்.

7. அந்தக் கேள்வியின் ஃப்ரெஞ்ச் வடிவம் இது: ‘Comment voulez-vous que nous choisissons un homme qui dit que nous sommes descendus des singes?’

8. Theodor von Heldreich என்பவர் ஓர் ஜெர்மன் தாவரவியலாளர்.

9. ட்ராக்டேரியம் என்பது ஓர் கிருஸ்தவ இயக்கம்.  ஆங்க்லிகன் சர்ச்சை ரோமன் கதோலிக்கச் சர்ச்சுடன் இணைக்கச் செய்ய எடுக்கப்பட்ட முயற்சி, இது ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலையோடு சம்பந்தப்பட்ட இயக்கம். ஆனால் இங்கிலாந்தில் இந்தப் பல்கலையின் பின்னணி வலுவான கிருஸ்தவ இயக்கப் பின்னணிதான். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலையின் ஒரு பகுதியினர் எவாஞ்சலியர் என்றாலும் இன்னொரு பகுதியினர் மரபுவாதிகள். இது பற்றி மேலும் அறிய எளிய குறிப்பு ஒன்று விக்கிபீடியாவில் கிட்டுகிறது. https://en.wikipedia.org/wiki/Oxford_Movement இந்தப் பல்கலை இந்தியாவில் காட்டும் முகம் ‘முற்போக்கு’ முகம், இந்திய முற்போக்கு முகாம்களில் பெரும்பாலானவை கிருஸ்தவத்தைப் பின்னே வைத்துக் கொண்டு மதச்சார்பின்மை என்ற முகமூடியை அணிந்து இயங்குபவைதான். இந்து மதத்தை ஒழிப்பதுதான் இவற்றின் முதல் நோக்கம், மதச் சார்பின்மை அல்ல என்பதை இந்தியர்கள் எப்போது அறிவர்?

10. விலியம் பட்டர்ஃபீல்ட் என்பவர் காதிக் கட்டடக் கலைக்கு (Gothic architecture) உயிரூட்டியவர். ஆக்ஸ்ஃபோர்ட் இயக்கத்தோடு (ட்ராக்டேரியன் இயக்கம்) சம்பந்தப்பட்டவர். இவர் பல வண்ணங்களைச் சர்ச்சுகளில் பயன்படுத்தியதைப் போல இங்கு ஃபிலிப் காஸ் தன் சித்திரங்களில் பல வண்ணங்களைப் பயன்படுத்தி இருக்க வேண்டும்.  ஒரு படம் இங்கே கிட்டும்: https://archive.org/details/yearatshore00gossiala/page/22

11. முதலில் இருந்த உபதலைப்பு இது. The Preservation of Favoured Races in the Struggle for Life’ – வாழ்வுப் போராட்டத்தில் விரும்பப்பட்ட இனங்களின் ரட்சிப்பு’  இதில் உள்ள Races என்ற சொல்லை வைத்துக் கொண்டு டார்வினின் புத்தகம் இனவெறிப் பார்வை கொண்ட நூல் என்று வாதிட்டவர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள். பலர் இந்தச் சொல்லுக்கு டார்வினின் காலத்தில் இருந்த அர்த்தம் வேறு, தவிர டார்வின் இந்தச் சொல்லைப் பயன்படுத்தி விளக்கிய விஷயங்கள் அந்த இனம் என்ற சொல்லுக்கு பற்பல வகை ஜீவராசிகள் என்றுதான் அர்த்தத்தைக் கொடுக்கின்றன என்று பலர் (அறிவியலாளர்கள்) விளக்கி இருக்கின்றனர். இந்த உபதலைப்பில் இருந்த மேற்படி சந்தேகக் கிளவியையும் அதன் ஐயமான பொருளையும் அகற்றித் தெளிவாக, ‘Survival of the Fittest’ என்று ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் மாற்றினார். இந்தத் தலைப்பும் பிற்காலத்தில் ஐயம் தரும் பொருளுள்ளது என்று வாதிடப்பட்டது! ஒரு சமீபத்திய கட்டுரையைப் பாருங்கள். https://www.tandfonline.com/doi/pdf/10.1080/00313220500106170

Darwin’S Racism: The Definitive Case, Along with a Close Look at Some of the Forgotten, Genuine Humanitarians of That Time By Leon Zitzer, 2016

மேற்கண்ட புத்தகம் கிருஸ்தவ/ ஜூடாயிசக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது. அந்த விமர்சனங்கள் இன்னும் தொடர்கின்றன என்று சுட்டவே இவை கொடுக்கப்பட்டிருக்கின்றன.

12. https://en.wikipedia.org/wiki/Nocturne_in_Black_and_Gold_%E2%80%93_The_Falling_Rocket மேற்படி குறிப்பில் விஸ்லரின் ஓவியத்தை நாம் காண முடியும். நவீன ஓவியங்களைப் பார்த்துப் பழகிய நமக்கு இந்த ஓவியம் புரியக் கூடியதாகவும், எழில் மிக்கதும், தொழில் திறமை நிறையவும் கொண்ட ஓவியமாகத்தான் தெரிகிறது. ரஸ்கினுக்கு இந்த ஓவியம் மட்டுமல்ல, அந்த ஓவியரையே பிடிக்காததுதான் இதைப் பற்றிக் கடுமையாக அவர் விமர்சனம் எழுதியதற்குக் காரணம் என்று விக்கிபீடியா குறிப்பு சொல்கிறது. சமகால கலை விமர்சனங்களைப் பற்றிப் படித்தால்தான் அது குறித்த விபரத் தெளிவு நமக்குக் கிட்டும். ஆனால் நவீன ஓவியங்களின் துவக்க காலம் நவீனப் படைப்புத் துறைகளில் பற்பலவும் இதே போன்ற எதிர்ப்புகளைச் சந்தித்துப் பிறகுதான் மரபுக் கலைகளிலிருந்து நகர்ந்து மேலெழுந்திருக்கின்றன என்பது விவர ஞானத்துடன் புரியும். ***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.