‘மலயம்.. என்பது பொதிய மாமலை!’

இமயம் குறித்த என் கட்டுரை வாசித்த ‘சொல்வனம்’ வாசகர் மீனாட்சி பால கணேஷ், ஐயம் ஒன்று எழுப்பினார். மலயம் என்று எழுதுவது தானே சரி! ஏன் சிலர் மலையம் என்று எழுதுகிறார்கள் என்பது ஐயத்தின் மையம். மய்யம் என்றும் எழுதுவதைத் தமிழ் இலக்கணம் அனுமதிக்கிறது.

மலை எனும் தமிழ்ச்சொல், மலை+அம் ஆகும்போது மலையம் என்ற சொல் பிறக்கிறது. அதில் ஒன்றும் பிழை இல்லை. ஆனால் மலயம் என்ற சொல் வேறு, மலையம் என்ற சொல் வேறு. இரண்டும் ஒன்றல்ல. மலயம் எனும் சொல், மலயா என்ற சமற்கிருதச் சொல்லின் பிறப்பு என்றும் பொருள் 1) பொதிய மலை , 2) சந்தனம் என்றும் பேரகராதியும், அயற்சொல் அகராதியும் அறிவிக்கின்றன.

இமயம் எவ்விதம் இமய மலையைக் குறித்த சொல்லோ, அவ்விதமே மலயம் என்பது பொதிய மலையைக் குறித்த சொல்லாகும். பொதிய மலையை, அதாவது மலயத்தை, அதுவும் ஒரு மலை என்பதால் மலையம் என்று குறித்தால் தவறில்லை என்றாலும், மலயம் எனும் சொல் பொதிய மலையை மட்டுமே குறிக்கிறது, அல்லது செழுஞ் சீதச் சந்தனத்தை.

மலயம் எனும் சொல்லின் இரண்டாவது பொருள் சாந்து, சாந்தம் அல்லது சந்தனம். மலையில் பிறந்த சந்தனம் என்பதால் மலைச் சந்தனம். ஆனால் மலயம் என்றாலே சந்தனம்.

மலயசம் என்னும் சொல்லுக்குப் பேரகராதி சாந்து, சாந்தம், சந்தனம், தென்றல் எனும் பொருள்களைத் தருகிறது. மேலும் மலயசம் எனும் சொல், மலயஜா எனும் சம்ஸ்கிருதச் சொல்லின் பிறப்பு என்கிறது.

மாருதம் என்றால் காற்று என்பதறிவோம்! கம்பன், யுத்த காண்டத்தில் பதினான்காவது படலமான, ‘முதற்போர் புரி படலத்தில், இராவணனைப் பார்த்து இராமன், போருக்கு,  ‘இன்று போய் நாளை வா!’ என்று சொல்லும் காட்சியில், “உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை!” என்பான். பொருள், உனது நால் வகைப் படைகளும் கொடுங்காற்றால் மோதப்பட்ட பூளைப் பூ ஆனதைக் கண்டாய் என்பதாகும். எனவே மாருதம் என்றால் காற்று.

அனுமன், இராமனிடம் தன்னறிமுகம் செய்யும் முகத்தான, ‘காற்றின் வேந்தற்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன், நாமமும் அனுமன் என்பேன்,’ என்பான். காற்று என்றால் மாருதம், எனவே காற்றின் மைந்தனின் பெயர் மாருதி ஆயிற்று.

மந்த மாருதம், சண்ட மாருதம் போன்ற சொற்களும் அறிவோம். அவற்றுள் ஒன்று மலய மாருதம். இச்சொல், வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். மலய மாருதம் என்றால் பொதிய மலைக் காற்று, பொதியைத் தென்றல் என்று பொருள். மலைய மாருதம் என்றால் எந்த மலையிலிருந்தும் வீசும் காற்று. இதுவே வேறுபாடு. மலய மாருதம்  என்ற பெயரில் கர்நாடக இசையில் இராகம் ஒன்றுண்டு. ‘மனஸா எடுதுலோர் துனே’ எனத் தொடங்கும் தியாகராஜரின் தெலுங்குக் கீர்த்தனையும் உண்டு.

மலயம் எனும் சொல்லின் முதற்பொருளே பொதிய மலை. இரண்டாம் பொருள் சந்தனம். மலயத்தின் இரண்டு பொருள்களையும் இனைத்து, தென் பொதிகைச் சந்தனமே என்கிறோம்.

சமற்கிருதத்தில் மலயத்ருமா என்றொரு சொல்லுண்டு. மலயத்துருமம் என்று தமிழ்ப் படுத்தினோம். பொருள் சாந்து, சாந்தம், சந்தனம். மலயானில எனும் வடசொல்லின் தமிழாக்கமே மலயானிலம் என்பது. அதன் பொருள் தென்றல்.

மலயத்தில் பிறந்த சந்தனத்தை, பொதியச் சாந்தத்தை, சமற்கிருதம் மல்யோத்பவா என்னும். பொதிய மலைச் சந்தனம் என்னும் பொருளில். உற்பவம் எனில் பிறப்பு. நாம் மலயோற்பவம் என்றோம். அமலோற்பவம் என்றொரு பெண்பால் பெயரைக் கேட்டிருக்கலாம். அமலம் எனில் நிர்மலம், மாசற்றது. உற்பவம் எனில் பிறப்பு. அமலோற்பவ மாதா என்பார்கள் புனித மரியாளைக் குறிக்க.

மலயம் எனும் சொல்லின் மகிமை உணரப் பெறவில்லை போலும், எனவே மலையம் என்கிறார்கள். மலயக்கோ என்றால் தென் பாண்டி மன்னன். பொதிய மலைக்கு மன்னன். மலய முனி என்றால் அகத்திய முனி, குட முனி, கும்ப முனி, பொதிய முனி. அதையே மலைய முனி என்றால் எந்த மலையிலும் தவமியற்றும் எந்த முனிவனும் ஆவான். விடயம் அவ்வளவுதான்.

மலயத்துவசன் என்றொரு சொல்லை அறிந்திருக்கிறோம். தடாதகைப் பிராட்டியாரின் தந்தையாகிய பாண்டிய மன்னன், தென்னன் மலயத் துவசன், என்கிறது பேரகராதி. பதினேழாம் நூற்றாண்டுக் குமர குருபரர், ‘மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்,’ பாடும்போது, ஆறாவது பருவமான வருகைப் பருவத்தில், ‘மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே! வருக வருகவே!’ என்று பாடுகிறார்.

கமாஸ் இராகத்தில் ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் பாடல் ஒன்றுண்டு. ‘மாதே மலயத்துவஜ பாண்டிய தனயே’ என்று நீளும். மாதே, மலயத்துவச பாண்டியன் மகளே என்று பொருள். ஆகவே, தெள்ளத் தெளிவான செய்தி, மலயம் எனில் பொதிய மலை. மலையம் எனில் அது எந்த மலையும் ஆகும். மையம் எனும் சொல்லை மய்யம் என்று எழுதலாம். கை எனும் சொல்லைக் கம்பன் கய் என்பான். ஔவை எனும் தமிழ்ப் பேரழகியை அவ்வை என்று எழுதலாம். யாவற்றுக்குமே இலக்கண அனுமதி உண்டு. ஆனால் அந்த விதிகளின் படி, இமயமலை என்பது இமையமலை ஆகாது. மலயம் என்பது மலையமும் ஆகாது. ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்று சொல்ல முடியாது என்று.

மலயத்துவசன் எனும் சொல்லின் துவசன் எனும் சொல், ‘த்வஜா’ எனும் வடசொற்பிறப்பு. த்வஜா எனில் கொடி, அடையாளம், ஆண்குறி என்று பொருள்கள் உண்டு. தமிழின் துவசன் என்றாலும் அதுவே. துவசர் எனும் சொல் சமற்கிருதம்+தமிழ். கள் விற்போர் என்று பொருள். துவச மங்கையர் எனும் சொல்லும் சமற்கிருதம்+தமிழ். கள் விற்கும் பெண்டிர், கள் விலையாட்டியர் என்பது பொருள்.

துவஜ+ஆரோகணம் என்பது துவஜாரோகணம். அதாவது துவசாரோகணம் என்றோம். கொடியேற்றம் என்று பொருள். அதே ரீதியில், துவசாவரோகணம் என்றால், கொடியிறக்கம். ‘த்வஜஸ்தம்பா’ எனும் வடசொல்லை நாம் துவசத்தம்பம் என்றோம். கொடிக்கம்பம் என்று பொருள்.

சங்க இலக்கியப் பரப்பில், மலைய, மலையன், மலையனது, மலையின், மலையும், மலையோடு எனும் மலை சார்ந்த சொற்கள் பல. ஆனால் மலயம் எனும் சொல் வழங்கப் பெறவில்லை. கம்பன், ‘தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச்சங்கம் சேர்கிற்பீரேல்’ என்பான். பொதியில் திரு முனிவன் என்றால் அகத்திய முனிவன்.  யுத்த காண்டத்தில், படைக்காட்சிப் படலத்தில், ‘மலயம் என்பது பொதிய மாமலை’ என்று தெளிவாகச் சொல்கிறான்.

கம்பனைக் கடந்து எந்தச் சான்றும் தேட எனக்கு உத்தேசமில்லை.

23 ஏப்ரல் 2019

2 Replies to “‘மலயம்.. என்பது பொதிய மாமலை!’”

  1. திரு. நாஞ்சில்நாடன் அவர்களுக்கு, ‘மலயம்’ பற்றிய ஐயத்தைத் தீர்த்து வைத்துச் சுவையான பொருள் பொதிந்த கட்டுரையையே வழங்கியமைக்குச் சிரம் தாழ்த்தி உளங்கனிந்து வணங்குகிறேன். என் மனமார்ந்த நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.