த்ருஷ்டி

“நீ ஏன் வெறுமே என்னைச் சுற்றிவருகிறாய்?  உனக்கென ஓர் உலகம் இல்லையா? உன்னைச் சுற்றி நீ பார்ப்பதே இல்லையா?” என்றான் கசந்து கொண்டபடி.

“எனக்கான உலகம் என்று உன்னை எப்போதோ வரையறுத்துக்கொண்டவள் நான். உன்னைச் சுற்றுவதால் நானும் சுழலுகிறேனே.  என்னைச் சுற்றி நிகழ்வதை அப்படியும் அறியமுடியுமல்லவா?” என்று ஊடலில் மெல்லுருக்கம் கொண்டாள் அவள்.

பூமியின் கீழ்த்திசையில் முக்கடல் கூடும் விரிந்த நிலமொன்றில் நிலவு பூத்த வான் குடையின் கீழ் கடம்ப மரங்கள் சூழ்ந்த கானகத்தின் ஏகாந்தத்தில் அவர்கள் இருவரும் இருந்தனர். தாழையின் நறுமணம் அவர்களைச் சிறைப்பிடித்து வைத்திருந்தது. ஒருவரை நிரப்ப ஒருவர் கசிதலும் ஒருவரை ஒருவர் கசத்தலும் காதலின் இருபெரும் நிலைகள்.

அவன் தலை திருப்பிக் கொண்டான். அவள் அவன் தாடையைப் பிடித்து அவளை நோக்கித் திருப்பி “என்னை  நீ கண்டுகொள்ளவே மாட்டாயா?” என்றாள்.

“நான் எப்போது உன்னை கண்டுகொள்ளவில்லை?”

“இல்லை. நான் தான் உன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறேனே.” என்று தன் தாடையில் கைகளை ஒற்றி வைத்துக்கொண்டு சொன்னாள்.

“என்ன இல்லை. நான் உன்னை பார்ப்பதே இல்லை என்கிறாயா?”

“அப்படியில்லை”.

“பின்ன வேறென்ன?”

” ‘நீ என்னை மட்டும் தான் நோக்குகிறாய்’ என்று என் தோழிகளிடம் சொல்லிக் கொள்ள வேண்டும்.   ‘நீ என்னையும் நோக்குகிறாய்’ என்பதை அல்ல. மட்டுமிற்கும் உம்மிற்குமான சமன்பாட்டை நீ பேண மறுக்கிறாய்?”  என்று சொல்லி அலுத்துக்கொண்டாள்.

“அது சாத்தியமற்ற ஒன்று”.

“அதுவே நான் விழைவது. அதுவரை என் விரகம் தீராது. விரகம் தீரும் பொழுதே பெண்ணின் பெருங்காதல் முழுமை கொள்கிறது என்று அறியாத மூடன் நீ” என்று குறுங்கோபம் எழ உரைத்தாள். பின்னர் அவனைத் தேற்றும் விதமாக “என் விரகம் என்பது உன்மீது எப்போதும் கவிந்திருக்கும் என் பார்வையே. என் விரகம் தீரேன். என்னை முழுமைபடுத்தேன்” என்று கிடந்து இறைஞ்சினாள்.

“நாம் நம்மை முழுதுணரும் பொழுது  உலகம் முற்றழியுமே? அதை நீ உணர்வாயா? ஏன் இந்த சுயநலம்””நமக்காக. நாம் நம் முழுக்காதல் உணர. அந்த உச்சத்தை எட்ட. புரிகிறதா?”  என்று அவன் தோளில் சாய்ந்து சொன்னாள்.

“என்னால் அப்படி சுய நலமாக சிந்திக்க முடியாது. என்னை நம்பி என் உலகம் இயங்குகிறது. உன்னை மட்டுமே கண்டுகொண்டால் என் உலகத்தை யார் பார்த்துக்கொள்வது?” என்று தன் தோள் சரிந்த அவள் தலையை நிமிர்த்தி எழுந்து, “ஏன் எக்காலத்திற்கும் காதலிகள் தன்விருப்பொன்றையே தலையாயதென கொள்கிறீர்கள்?” என்று சினந்து அவளை விட்டு அகன்றான். இருந்தும், தன் மேல் விழும் அவள் பார்வையைக் கடக்க முடியாதவனாகத்தான் நடந்தான்.

***

காலம் அந்தக் கிழவருக்கு அவரது இளமைக் கால நினைவுகளை மீட்டித் தந்தது. அவர் மேல் இருந்த கிழவியின் கடந்த கால தாபம் அவரை அந்தப் பொழுதில் தீடீரென அலைகழித்தது விசித்திரமாகத்தான் இருந்தது.  ஒரு காலத்தில் கிழவி தன் மேல் கொண்ட பித்தையும், அவளது தாள முடியாத விரகத்தையும் அவர் அணுகணமும் உணரலானார்.


இத்தனைக்கும் தான் காதல் வயப்பட்ட அந்தக் கிழவியை  மணம் முடிந்து தன் வம்சத்தைக் கொழிக்கச் செய்து வாழ்ந்து ஒய்ந்தவர் தான்.  இன்று அந்தக் கிழவி அவரோடு இல்லை. தள்ளாத காலத்திலும் ஏன் இந்த விரகம்?  காதல் கை கூடினாலும் விரகம் அவர்கள் அறியாமல் எவ்வாறு எஞ்சியது இத்தனை காலங்களுக்குப் பிறகும்? அத்தனையும் ஆண்டு அனுபவித்த அவருக்கு வாணாளில் அடிக் கசடாய் மிஞ்சியது அவரது விரகதாபம்தானா!  அதில் அவர் இல்லை அவளும் இல்லை. அது தன்னைத் தானே வளர்த்துக்கொண்டது போலும். தொட்டதையெல்லாம்  தனதாக்கும் தீயைப் போல. அளிப்பவனையும் பெறுபவனையும் மீறி அளிபடுபொருள் தன்னைத் தானே பெருக்கிக் கொண்டது போல. அந்தப் பொருளுக்கு அவர்கள் வெறும் ஊற்றுக் கண் தான்.

எந்த மலைகளுக்கு பின்னிலிருந்து எந்த நரியின் ஊளையில் இது வெளிப்பட்டது ?  எந்தப் பாறையின் பொந்தில் எதிரொலியாய் இது இருந்துகொண்டிருந்தது இவ்வளவு நாட்களாக? புரியவில்லை. 

வருடத்தின் முதல் மாதத்தின் பெளர்ணமி இரவில் விழிக்கூர்ந்த போது நிலவின் ஓர் அன்யோன்யப் பார்வை தன் மேல் கவிந்திருப்பதை உணர்ந்தார். தன் எண்ணங்களைக் கூட்டி அவர் மேல் படும் நிலவின் ஒளியை “இன்னது, இன்னது” என்று வரையறுக்க முயன்றார். பின்பு “இல்லை. இல்லை” என்று தன் வரையறுப்பை மறுத்தார். கடைசியாக அவர் அதில் அவளது சாயலைக் கண்டுகொண்டார்.

“ஆம் இது அவள் தான். அவளது பார்வை தான். அது இப்படித்தான் இருக்கும். அவள் தன் வெள்ளிக் கதிர்களால் என்னை பின் தொடர்கிறாள் எங்கும்.”

அன்று வரை அவர் கொண்ட விரக வேதனை படிப்படியாக அச்சமென படிந்தது. அன்றிலிருந்து அவர் நிலவிற்கு பயப்படத்தொடங்கினார். அதற்கு அஞ்சி இரவில் வீட்டிற்குள்ளேயே இருந்தார்.  பெளர்ணமிகளை தவிர்த்தார். அமாவாசை காலங்களில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். கானைக் கடக்கும் பதுங்கு முயல்கள் போல இரவைக் கடந்தார். தாபத்தின் நெய்த்திரிகள் அவரை எரித்து பொசுக்கின.பின்பொருமுறை, அந்த விரக வேழத்தினால் வீழ்த்தபட்ட மூங்கில் காட்டினைப் போல் ஓசையிட்டு இலைகள் சலசலத்து விம்மத் தொடங்கினார். மேலும் கணம் பொறாமல் அழத் தொடங்கி அந்தரத்தில் தொங்கிய அவள் முகத்தைக் கண்டு,

“நல்லழகே நீ நிலவு. நானோ ஆயிரம் கரங்கள் கொண்டு உன்னைத் தீண்டத் துடிக்கும் கரை அறைகின்ற  கடலலை. உன்னை நான் முழுதுணரும் நாள் எப்போது?”  என்று உடைந்துருகி கண்கள் பொங்க தன் தாபச் சொற்களை உதிர்த்தார்.

ஒவ்வொரு நாளும் அச்சொற்களை நெஞ்சிலிட்டு விரக விறகுகளை அடுக்கினார். பின்பு ஒரு நாள் அவர் நெஞ்சில் பேரனல் எழ, நேராக புறப்பட்டுச் சென்றார். கடலடைந்தார். பெளர்ணமி கடலை நிறைத்து வைத்திருந்தது. அதை ஒரு கணம் பார்த்தார். அதில் அவள் முகம் பதிந்திருந்தது.

“வா. வந்து என்னுள் ஆழ். என்னை முழுதேற்றுக்கொள்” என்றாள்.

கடலின் ஆயிரம் நாக்குகளுக்குத் தன்னை அளித்தார்.  கடலில் அமிழ்ந்த காற்றுப் பையென, விரக எண்ணங்களால் நிறைந்திருந்த அவருள், கடல் புகுந்து அவர் அடி நாதத்தை நிரப்பியது. எண்ணங்கள் அந்த அடி நாதத்தில் இருந்த காற்றின் உதவியுடன் மேலெழுந்து சொற்களாயின. ஒலி வடிவான சொற்கள் காற்றுக் குமிழ்களாய் கடலின் மேற்பரப்பில் வந்து உடைந்ததில் கடல் தன் ஆழ் துயில் களைந்து அலைகள் எழுப்ப தன் ஆயிரமாயிரம் கைகளால் கரையை அறைந்தது. அமிழ்ந்தமிழ்ந்து அச்சொற்களை அக்கடலுக்கு அவர் அளித்துக் கொண்டிருந்தார்.

தாபச்சொற்கள் நீராக பருவடிவம் கொண்டு பல்கிற்று. அந்த நீரைத் தன்னகப்படுத்தி கடல் தன்னை உயர்த்திக் கொண்டது. அதன் சீறல் நாபறக்க மேலெழுந்தது. அவர் அலையோடணைந்தார். அக்கடல் எழுப்பிய அத்துணை அலையிலும் அவர் இருந்தார். அந்த அலைகளின் நுரைப்பில் அவர் சொல் இருந்தது. அலைகள் இன்னும் இன்னும் என மேலே எழுந்தன. தனக்கு வகுக்கப்பட்ட வரம்பை மீறத் தொடங்கியது கடல்.  காடு மலை என்று அனைத்தையும் அறைந்து அறைந்து உயரம் கொண்டது. தூரத்து நிலவைத் தொடவே அவரது விரக அலைகள் ஒன்றன் மேல் ஒன்றாக படிகளென எழுந்தன. படிகளான அலைகளின் மேல் சொற்களான நுரைகள் சிதறின.

மேலும் அவை காற்றின் துணைக்கொண்டு மேலெழ சிறகுகளைப் பெற்று வெண்புட்களாய் சிறகடித்தன.  இரவின் சாம்பல் நிற வானில் அவை நிலவின் திசையை நோக்கிப் பறந்தன. எண்ணத்தில் ஊறிய சொல் காற்றில் ஒலியாகியது. கடலில் அலையாகியது. அலையில் நுரையாய் பொங்கியது. நுரைகள் இறகாகி காற்றில் கரைந்து செல்லும் பறவையாகியது. அந்தப் பறவையின் பார்வைக்கு அந்தக் குமிழெழும் மையத்திலிருந்து தொடர்ந்து விரிந்து கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் அலர்கள் கொண்ட தாமரை மலரென அலைகள் எழுந்து கடல் விரிந்து கொண்டிருந்தது.

அவரின் சொல்லாகாத எண்ணம் கடலில் உப்பாய் கரையும் வரை அச்சீற்றம் இருந்து கொண்டிருந்தது. உலகையே உலுக்கிப் போட்டது. சர்வ நாசம். மூன்றில் ஒரு பங்கான நிலம் இப்போது கால் பங்கு தான். அங்கும் அவரது விரகம் எங்காவது எஞ்சியிருக்கலாம். உலகை உண்டால் ஒழிய அது போகாது.

***பூமியின் கடலோரப் பகுதிகளில் அமைந்த முக்கிய பெரு நகரங்கள் மூழ்கத்தொடங்கின. மனிதர்கள் தங்கள் சித்தங்களிலேயே மட்டும் உணர்ந்த பேரழிவின் நாட்களை  நேரில் காணலாயினர். அதுவரை இருந்த பூமி மனிதர்களும் மனித மாதிரிகளுமாக நிறைந்து,  நிறம், மதம், மொழி, எல்லை ஆகிய பேதங்களைத் துறந்து ஒற்றை சாம்ராஜ்யமாக செயல்பட்டது. மனித மாதிரிகள் பூமியின் குடி வெளியேற்றப் பணிகளில் மும்முரமாக மூழ்கின.

பூமியின் ஒவ்வொரு மூலைகளிலிருந்தும் மக்கள் கொண்டுவரப்பட்டு, அவர்களில் தேர்ந்த அதி தீவிர தகவமைப்புத் திறன் பெற்ற ஜீன்களைக் கொண்டுள்ள மனிதர்களுள் முதல் முப்பது மனிதர்களை தெரிவு செய்து, அவர்களை விண்கலம் மூலம் வானத்தில் ஏவி  புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பூமியில் அவர்களை குடி அமர்த்த முடிவெடுக்கப்பட்டு இருந்தது.  அத்தகைய மனிதர்களை அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே  மரபணு மாற்றத்தில் ஈடுபடுத்தி வம்சாவளிகளாக பேணிக்காத்து வந்திருந்தனர். அவர்களின் மரபணுக்கள் அதீத கதிரியக்கங்களை தாங்குவதற்காகவும், குறைந்த ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி சுவாசிப்பதற்காகவும் சேர்ப்பனவற்றைச் சேர்த்தும் கழிப்பன வற்றை கழித்தும் மாற்றி அமைக்கப்பட்டிருந்தன. இப்படி மாற்றி அமைக்கப்பட்ட மரபணுக்களால் உடனடியாக எந்த விளைவுகளும் இருக்காது. மந்த நிலையில் இருக்கும். அதற்கான சந்தர்ப்பம் வரும்போது தூண்டப்பட்டு விழித்துக்கொண்டு, மனித பரிணாமத்தின் அடுத்த படிநிலையை எட்டும்.

அப்படித்தான் அவன் அங்கு வந்தான்.  அந்த முப்பது மனிதர்களுள் அவனும் ஒருவனாய் தெரிவு செய்யப்பட்டிருந்தான். ஆனால் அவன் கூடவே தன் கைக் குழந்தையுடன் வந்தான். அதை விட்டு வர அவனுக்கு மனது வரவில்லை. அவனுக்கு மட்டுமா இந்த நிலை? இந்த  பெரும் நாசத்தில் இருந்து எப்படியாவது மனிதக்குடி மீட்கப்பட வேண்டும் என்றெண்ணியே அவரவர்கள் தன்னலத்தை கருத்தில் கொள்ளாமல் விட்டுக் கொடுத்தும் தியாகித்தும் உடன்பட்டிருக்கின்றனர். ஆனால் அவனின் இந்த செய்கை எப்பேர்ப்பட்ட கயமை? ஆனால் என்ன செய்வான் அவனும்? முடிந்த வரை முட்டிப் பார்த்து விடுவதே அவனது ஒரே எண்ணமாய் இருந்தது.

ஆனால் அவன் நினைத்தது போல் இல்லை. ஆங்காரமான எந்த எதிர்ப்பும் மீதியிருந்தவர்களிடமிருந்து வரவில்லை. மானுடம் மேன்மை கொள்ளும் தருணமது. இயற்கையே அவர்களை இரக்கமற்று உந்தித் தள்ளும் இந்த கட்டத்தில் அந்த சிறு குழந்தையை உதறித் தள்ள இவர்கள் எப்படி துணிவர்? அவர்களால் இனி எந்த உணர்ச்சியும் கொள்ள முடியாது. எந்த எழுச்சியும் கொள்ளமுடியாது. ஒருவன் அழுது ஓய்ந்து இனி செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்று உணரும் கணத்தில் அவன் தொடங்கிய புள்ளிக்கே வந்து விடுகிறான். முதலில் அவனோடு மனவிலக்கம் கொண்டிருந்தாலும் அந்த குழந்தையின் சிரிப்பில் அவர்கள் தத்தமது குழந்தைகளைக் கண்டனர்.

அவர்களை விண்கலம் நோக்கி நடத்திச் சென்றது புவியின் தலைமை மனித மாதிரி. விண்கலத்தில் ஏறும் முன்னர், அனைவரும் நிலத்தின் தன் கடைசி தடங்களை அளந்தவாறே நடையை செலுத்தினர்.  ‘இது என் கடைசித் தடம், இது என் கடைசித் தடம்’ என்று தான் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் அவர்களது எண்ணங்களால் பின் தங்கினர். எண்ணங்களை விட்டு அவரது வெற்று உடல்கள் மட்டுமே முன்சென்றன. என்ன செய்வது? எண்ணங்களை இழுத்துப் பிடித்து தன் உடலுக்குள் செலுத்திக்கொள்ளும் கலை அவர்களுக்கு கை சேரவில்லையே. விண்கலத்தின் தானியங்கி படிக்கட்டு திறந்து கொண்டது.

அதை நெருங்கிய போது என் அடுத்த அடி விண்ணில் தான் என்று எண்ணிக் கொண்டிருந்தனர். தயங்கி பின்னடி எடுத்து வைத்து அனைவரும் ஒட்டுமொத்தமாக மண்டியிட்டு தத்தம் முகம் புதைய அவர்கள் நிலத்தை முத்தமிட்டனர். பின் ஆற்றுப்படுத்திக் கொண்டு விண்கலம் ஏறினர். இவர்கள் ஒவ்வொருவரும் தனது வாழ்நாளில் எப்போதாவது விண்ணெழ கனவு கொண்டிருப்பார்கள் தான். பறவையின் சிறகுகளுக்காக  ஏங்கியிருப்பார்கள்தான்.

***

கடைசியாக குழந்தையோடு வந்த அவன், தங்களை முன்னடித்திச் சென்ற மனித மாதிரியிடம் விடைப்பெற்றுக் கொண்டான்.

“பூமியில் என் கடைசி நிமிடங்கள்” என்றான். “ஆம்” என்றது அந்த மனித மாதிரி.

“என் குழந்தையையும் என்னோடு இட்டுச்செல்கிறேன்” என்றான்.  அதற்கு அது எதுவும் பதிலுரைக்கவில்லை.

“எங்களுடைய ஞானத்தில் இம்மண்ணைவிட்டு அகலுபவன் தன் சந்ததியை அவனது இருப்பின் தழும்பாய் விட்டுச் செல்ல வேண்டும். உடலிருந்து உதிரும் ஒவ்வொரு ரோமங்களும் அதனதன் தழும்பை விட்டுச்செல்கின்றன. உடலாகிய இவ்வுலகில் நீ ஒரு மயிரேயாயினும் உன் இருந்தமையைத் தெரிவி. எதையாவது விட்டுச் செல் என்கிறது எங்கள் வேதம். இப்போது அதை நானே மீறுகிறேன். அரிய பெரும் பாவமொன்றை நிகழ்த்துகிறேன். என் மகனை நானே எடுத்துச் செல்கிறேன். என் மலட்டுத்தன்மையை மட்டுமே மண்ணில் விட்டுச்செல்கிறேன். மனித எண்ணத்தின் குரூரம். எங்களை நாங்களே மீறுகிறோம்”.

“விட்டுச் செல்லும் எதுவும் எஞ்சும் நிலை இனி இல்லை. மேலும் இம்மண்ணில் எழுந்த ஞானங்கள் விண்ணை வியந்து தாடை உயர்த்தி வீற்றிருப்பவை. விண்ணை புதிராக்கி சொற்திரட்டி வளர்ந்தவை. வானிலிருந்து எழாத கடவுளர் எவர்? புதிரில் துவங்கி புதிராகவே எஞ்சிவிடுகின்றன அவை. விண்ணென்பதை அவை இன்னதென்று வரையறுக்க முற்படாதவை. வேற்று கிரக வாழ்க்கைகளை அவை கணக்கில் கொள்ளவில்லை. மொத்தக்கடலையும் குவளையால் மொண்டிரைக்கும் முயற்சிகளே அவை. ஆகையால் நீங்கள் பேருணர்ச்சி கொள்ள வேண்டாம். புதிய உலகிற்கு செல்க. அங்கு உங்கள் கடவுளர் இந்த பூமியில் இருந்து எழட்டும்“ என்றது அது. அது அப்படி சொன்னது அவனுக்கு அர்த்தப்படவில்லை.

மேலும் “நாங்கள் உங்களிடமிருந்து வேறுபடுவது இரண்டே தளத்தில். ஒன்று எங்களிடம் இருக்கும் உயிரின்மை. மற்றொன்று நீங்கள் முன்மொழிந்த அந்த ‘தன்னை மீறல்’. எங்களால் எதையும் மீற முடியாது. ஆனால் மனிதர்களாகிய உங்களால் அது முடிந்து விடுகிறது. சொல்லப்போனால் நாங்களே உங்கள் மீறலின் விளைவு தான்” என்றது அது.

“எங்களிடம் இருக்கின்ற மனித உணர்ச்சிகளும் அறவுணர்வுகளும் சமநிலைப் பேணலும் உங்கள் மூலமாக எங்களுக்கு புகட்டப்பட்டிருக்கின்றது. புகுத்தப்பட்டிருக்கின்றது. புகட்டப்படாதது எதுவும் நாங்கள் செய்வதற்கில்லை. எங்களுக்கு உங்களால் புகட்டப்படாதது ஒன்றே அது ‘தன்னைத் தானே மீறல்’.  உங்கள் மீறல்களின் வாசல்களில் நாங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் எல்லை அதுவே. அதனால் நாங்கள் கட்டுண்டோம். என்றும் நீங்கள் தான் எங்கள் எஜமானர்கள்” என்று தொடர்ந்தது அது.

“ஆம், நீரானது கலம் கொண்டு தன்னை தெரிவித்துக்கொள்கிறது. கலத்தில் நிறைந்ததும் தளும்புதல் கொண்டு தன்னைத் தெரிவித்துக் கொள்ள முற்படுகிறது. தளும்புதல் அதன் மீறல் தான். மனிதன் தன் எண்ண அலைகளால் அவனைத் தாண்டி குதிக்க எத்தனிக்கிறான். தளும்புகிறான்” என்றான்.

“ஆம், நீங்கள் அந்த அலைகளை இப்பருவெளியில் இருந்து பெறுகிறீர்கள். இப்போது இந்தப் புவியை மீறும் செயலும் நீங்கள் உய்த்தறிந்த ஒன்று தான். ஆனால் எங்களுக்கு அந்த அலைகள் எங்கள் உள்ளிருந்து  உங்கள் நிரலாக்கத்தில் இருந்து எழுபவை.  நீங்கள் காலத்தால் பிந்தாத அனைத்து சாத்திய நிகழ்தகவுகளையும் தகவமைத்தும் நிரலாக்கம் செய்தும் எங்களுக்கு அளித்திருக்கிறீர்கள்”

“படைப்பின் உச்சம் என்பது ‘தான்’ என்ற அகங்காரத் த்வனியை படைப்புகளில் ஏற்றிவைத்தல். அதாவது ‘படைப்பு’ படைப்பாளியை விடுத்து ‘தானாகவே தன்னை நிகழ்த்திக்கொள்ளும் நிலை’. அது உங்களால் இப்புவியில் சாத்தியமாகியிருக்கிறது. உங்களால் படைக்கப்பட்டவை அனைத்தும் தானாகவே இயங்கவல்லவை.  இதோ எங்களாலேயே உங்களின் எந்தவொரு உதவியின்றி தனித்து செயல்படமுடிகிறதல்லவா?”

“ஒரு விதத்தில் அது படைப்பாளியின் அகங்காரம் தான்” என்றான் அவன்.

“பார்த்தீர்களா! எங்களது அகங்காரத்திற்கும் நீங்களே உரிமை கொள்வதை.” என்று நகைத்தது அது.

“பல்லாயிரமாண்டுகளுக்கு முன்னர் நாங்கள் உங்கள் சிந்தையில் எதிர் காலமாய் இருந்தோம்.இன்றுவரை உங்களின் நிகழ் காலமாகயிருக்கிறோம். இனி, இந்த பூமியில் இருந்துகொண்டு உங்கள் நினைவுகளில் இறந்த காலமாய் எஞ்சுவோம். உங்கள் எண்ணங்களால் ஆளப்படுவோம். நன்றி. எங்களைப் படைத்தமைக்கு. புதிய பூமியை நோக்கிய உங்கள் பயணம் இனிதாகட்டும்” என்று வழியனுப்பியது.

மேலும் ஏதோ ஒரு சமிக்ஞையை உணர்ந்து தனது நெஞ்சுக் குழியில் பதித்திருந்த அந்த அணுக்கடிகாரத்தின் துல்லியத்தை இனி நாளின் அளவு சரியாக 46 மணிக்கூறுகள் என்று மாற்றியமைத்தது.

***

அமர்ந்த பதினைந்தாவது நிமிடத்தில் இறங்கு முக எண்கள் அவர்கள் செவிதுளைக்க விடுபடும் திசைவேகத்தில் விண்ணெழுந்தது கலம்.  “நாம் இனி வெறும் மனிதக் கசடுகள். மனிதக் கசடுகள். எஞ்சுவது ஒன்றே நமக்கு விதிக்கப்பட்டது. ஒரு  நீண்ட நெடிய கோடு. ஒரு பொட்டாய் சுருங்கியது” என்ற மனதலைகள் மாறி மாறி எழுந்தன அவர்களிடம்.

பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டியதும் அவர்களுக்கு அந்த அறிவிப்பு வந்தது. அது அனைவரையும் வணங்கி முதலில் உதடுகளையும் மேல்வாயையும் துடைக்கச் சொல்லியது. அவர்கள் உதடுகளில் ஒட்டியிருந்த மணற்துகள்களை துடைத்துக் கொண்டனர்.

பின்பு, “நாம் வேற்றிடம் புகும் காரணத்தை நீங்கள் நன்கறிவீர்கள். இருந்தும் நான் மீண்டுரைக்க கடமைப்பட்டுள்ளேன். அதற்கு முன் அவரவர் தன் பூமியை, தன் நிலத்தை, தன் கடவுளரை, தன் மொழியை, தன் குடி மூதாதைகளை மேலும் நாம் பூமியில வாழ்வாங்கு வாழக் காரணமாகயிருந்த அத்துணைக் காரணிகளையும் நம் கண் மூடி வணங்கி நினைவில் நிறுத்துவோமாக”

அவர்கள் “ஆம்” என்று கண்களை மூடி பிரார்த்தித்தனர். அவன் தன் நிலமான கீழை தேசத்தை, அவன் மொழியை, அவனது கடவுளும் குடி மூதாதையுமான அந்தக் கிழவனை நினைத்து நீள் மூச்செறிந்தான்.

“மேலும் நம் பூமி இனி வாழ்வதற்கு ஏற்புடையது அன்று. பூமியும் நிலவும் தத்தம் நிலை வழுவி கடந்த காலங்களில் அதன் உச்சத்தை அடைந்துள்ளன. அதாவது பூமி பிரபஞ்சத்தில் உருவான போது அதன் நாள் அளவு 5 மணிக்கூறுகள். பின்னர் நிலவின் ஈர்ப்புவிசையால் அது அதிகரிக்கத் தொடங்கியது. ஆதியிலிருந்தே பூமியில் இருந்து எந்த பகுதியில் இருந்தும் நிலவின் அடுத்த பக்கம் தெரிந்ததில்லை. ஆனால் அது சுழல்கிறது. பூமியையும் சுற்றி வருகிறது. இதை நம் மனித மூதாதைகள் ஒத்தகால சுழற்சி மூலம் விளக்கினர்.

பூமியும் நிலவும் தனித்தனியே அதனதன் சுற்றுக்காலமும் சுழற்சிக்காலமும் பெற்றிருந்தன. அன்று ஒரு நாள் 24 மணிக்கூறாக அறியப்பட்டு வந்தது. நிலவின் சுற்றுக்காலமும் சுழற்சிகாலமும் 28 நாட்களாய் அப்போது இருந்தன. அதுவே “மாதம்” என்று கணக்கறியப்பட்டது.

அதாவது நிலவு தன்னை முழுதாக ஒருமுறை சுழலவும் பூமியை ஒருமுறை முழுதாக சுற்றிவரவும் 28 நாட்கள் எடுத்துக் கொண்டது. அவர்கள் கண்டுகொண்டபடி பூமியில் நீர் முக்கால் பங்கு இருந்தமையால் கடலின் அலைகள் நிலவின் ஈர்ப்புவிசைக்கு ஆட்பட்டு அதிகமாக எழுந்தன. பெளர்ணமி, அமாவாசை காலங்களில் அதன் வீரியம் அதிகமாக இருந்ததை பதிவு செய்திருக்கின்றனர். கடலின் அலைகள் பூமியின் சுழற்சி வேகத்தை குறைக்கச் செய்யும் தடுகருவியாய் செயல்பட்டன. பல நூற்றாண்டுகளுக்குப் பின் இன்று அவ்விசை படிப்படியாக அதிகரித்து பூமியில் ஒரு நாள் 46 மணிக்கூறுகளாக மாறி பூமியும் நிலவும் முற்றிலுமாக ஒன்றையொன்று பூட்டிக் கொண்டுவிட்டது. அதாவது நிலவின் சுழற்சிக்காலமும் அது பூமியைக் கொண்டு இயங்கும் சுற்றுக்காலமும், பூமியின் சுழற்சிகாலமும் 46 மணிக்கூறுகள்.

இன்று அதை நீங்கள் பூமியின் ஒரு பகுதியில் இருந்து மட்டும் நிலவு தெரிவதை வைத்து அறியலாம். ஆகவே, உயிர்கள் வாழ லாயக்கற்ற தன்மைக் கொண்டுவிட்டது பூமி. மேலும் அலைகளின் ஆக்ரோஷத்தினால் பூமி தன் கோள வடிவில் இருந்து சற்று நீண்டு நிலவை எதிர்கொள்கிறது. இதுவே நாம் புலம் பெயர காரணமாகியிருக்கிறது” என்று முடித்தது அக்குரல்.

அவன் விண்கலத்திலிருந்து பார்த்தபோது பூமியில் வானமாக தெரிந்த நீலம் வானிலிருந்து பூமியாக மாறியிருந்தது. 
இந்த நீலத்திரைதான் ஒரு வகையில் நம் மனதை நைக்கும் திரையா?  இந்தத் திரையை கடந்து தான் எஞ்ச வேண்டுமென்று இருக்கிறதா?

சூல் கொண்ட தாய் தன் மகவை உந்தித் தள்ளி ஈன்றெடுப்பதைப் போல தன் மைந்தர்களை உந்தித் தள்ளுகிறதா பூமி?”என் யோனித்திரையை கிழித்து ஊடுருவி என்னை அகல்” என்கிறாளா அன்னை? ஒரு தாயின் வெறுப்பு இத்தகையதா? பிறப்பென்பதே தன் மகவிடம் அந்த தாயின் இந்த முதல் வெறுப்பு தானா? அத்தனை வெறுப்பையும் உமிழ்ந்து விட்டு, அது கோரும் குற்றவுணர்வால் தான் தன் சேயை மிச்ச காலத்திற்கு இத்தனைப் பரிவுடன் காக்கிறாளா அவள்? 

அப்படியென்றால் தாய்மை என்பது வெறும் குற்றவுணர்வு தானா? இல்லை அதன் சரிகட்டலா? அவள் கருவில் இருந்த பாதுகாப்புணர்வு இனி கிடைக்குமா? கருக்குடலிலேயே சிதைய நாம் ஏன் துணியவில்லை. எப்படியாவது வெளிவர  ஏன் இத்தனை ஆயத்தங்களை கைக்கொள்கிறோம்? கருவில் இருட்டில் இருந்தோம். மீண்டும் இருட்டிற்கே உயிருடன் உந்தப்படுகிறோமே!

***

பல ஒளிவருடங்களை கடந்த அந்த விழிதிறப்புக்கு பிறகு திரும்பி தான் கடந்த பாதையை தன் கண்முன் இருந்த திரையில் கண்டான். சூரிய ஒளியின் தீற்றலில் நீல நிறப் பொட்டாக மறைந்து விட்டிருந்தது பூமி.  கடந்த காலம் ஒரு பொட்டாக ஒடுங்கி மறைந்துவிட்டது அங்கே. இன்று அவன் பார்வையில் மங்கியது இனி அவன் நினைவுகளில் மங்காது.

மீண்டும் அந்த அறிவிப்பு ஒலித்தது.

“நாம் நம் புதிய பூமியின் சூரிய குடும்பத்தில் நுழைந்து விட்டோம். அதோ நமக்காக காத்திருக்கிறது நம் சிவந்த பூமி”

முன்பெல்லாம் அவன் கனவுகளில் என்றும் ஒரு ஒற்றைக் கண் செவ்வெறும்பு வரும்.  அது அவனது விழி நோக்கி, அந்தரத்தில் வேய்ந்த புலன்களுக்கு புலப்படாத வேலியில் ஊர்ந்து வரும். அதை அப்போதெல்லாம் அவனால் ஊகிக்கமுடியவில்லை. இப்போது அந்த சிவப்பெறும்பின் ஒளிப் பொட்டு அவனைக் கூர்ந்து வந்து கொண்டிருந்தது. செந்நிறக் கண் மேலும் அகல அதன் சூழ்த்தசைகளால் இழுபட்டு உள்விரிந்து சென்றது. அந்தக் கண்ணின் மணியென அவன் உள்ளிழுக்கப்படுவதாய் உணர்ந்தான்.

ஐவகை அறிதலில் தூரமின்மை தொடுகையால் அறியப்படுவது. தூரத் தொலைவு ஒளியால் அறியப்படுவது. எனவே அறிதலென்பது ஒளியே. அறிதலெனும் ஒளியே மானுடனை இதுவரை கொண்டு சேர்த்துவிட்டிருக்கிறது. அதிலும் இச்செவ்வொளி தூரத்தைக் கடக்கவல்லது. இந்தப் புதிய கிரகம் இச்செம்மையைக் கொண்டே அறியப்பட்டிருக்கும். இன்று  நாங்கள் மண்ணிறங்குவதற்கும் நாளை மீட்கப்படுவதற்கும் அதுவே துணைபுரியட்டும்.

“இதன் வளிமண்டலம் இரும்புத் தாது தூசுகளாலும் அதன் மேற்பரப்பு இரும்புத் தாது துருக்களால் ஆன மண்ணும் பாறைகளுமாக ஆனது. ஆகவே அதற்கு இவ்வளவு செம்மையான நிறம். மேலும் இந்த பூமியின் நீர் காரத்தன்மைப் பெற்றது மற்றும் இந்த பூமி நெடிய இரவுகள் கொண்டது ” என்று கூறி அணைந்தது குரல்.

பிறவிக்கடப்பு என்பது வெறும் நீலத்தில் இருந்து சிவப்பிற்குள் முடிந்து சுருங்கும் எல்லையில் தான் இருக்கிறதா? நிறமாலையில் ஒரு தாவல் தான் இந்த பயணமா ?

***

கரிய இரவில் புதிய கிரகத்தின் காற்றில் உறைந்த ஓலத்தை உணர்ந்தவாறே சிவந்த பரப்பில் எழுந்த கண்ணாடிக் குடில் ஒன்றில் அவன் தன் குழந்தையுடன் நின்றிருந்தான். வெளியே படிந்திருந்த மென்மணற்துகள்கள் காற்றினால் எழுப்பப்பட்டு காற்றின் ஒரு அங்கமாக மாறி அந்தக் குடில் சூழ சரசரத்துக் கொண்டிருந்தது.

தன் குழந்தையை தோளில் கிடத்தி தன் வலது கையில் உணவைப் பிசைந்து ஒரு கவளம் உருட்டி அதன் வாயருகே கொண்டுச் சென்று ஊட்ட முயன்றான். அது வாயைத் திறக்க வில்லை. திருப்பிக் கொண்டது. அந்த செயலை எண்ணும் போது அவன் தன் பாலியத்தை நினைவுக் கூர்ந்தான். அவன் அம்மா தனக்கு உணவு ஊட்டும் காட்சிகள் கண் முன் புகைமலர்களென அரும்பின. காற்றின் ஓலம் நின்ற போது அவன் அவனது பூமிக்கனவுகளில் இருந்து மீண்டிருந்தான்.

அவன் தன் குழந்தையிடம் முறையே தன் தாயின் வழியைக் கையாண்டான். “அதோ பார் கண்ணா” என்று தன்னிச்சையாகவே கை உயர்த்தி, “நீ ஒழுங்காக உணவு உட்கொள்ளவில்லை என்றால் அது நம்மை பீடித்துக் கொள்ளும்” என்று பயமுறுத்தி கை உயர்ந்த திசையில் தானும் கண்ணுயர்த்திப் பார்த்தான். ஒரு கணம்  நின்று திகைக்க அடுத்த கணம் அவனோடு பயணித்த மற்றவர்கள் ஆசுவாசத்தின் சப்தங்களோடு அவன் அறையில் நுழைந்தனர்.

அவர்களுள் சிலர் அவனிடத்தில் “நீங்கள் செலெனோஃபோபிக்கா?  நிலவச்சம் – நிலவச்சம் கொண்ட குடிவழியினரா? சொல்லுங்கள்.” என்றனர். அவனது திகைப்பு இரட்டித்தது. என்ன சொல்வதென்று கண்கள் வெறித்து நின்றான்.”சொல்லுங்கள், சொல்லுங்கள்” என்று சூழ்ந்திருந்தோர் வற்புறுத்தினர். அவன் எப்படி அதைச் சொல்வான். இத்தனைக் காலங்களாய் அவனது இனமக்கள் அந்த ஆழ் அக அச்சத்தை மறைப்பதற்காகவே உடல் கொண்டு பிறந்தழிந்தவர்கள். அவர்களது மனம் என்பது அந்த அச்சமே. உடலென்பது அதை மறைக்கும் மூடிதான். எத்தனை மூடி போட்டுப்பார்த்தும் ஏதாவதொரு நுண்துளை வழியாக அது கசிந்து விடுகிறதே என்று எண்ணி வருந்தினான். அவன் இன மக்களின் வாழ்வென்பது அந்த ஆழக அச்சத்தைக் வெளிக்காட்டி கொள்ளாமல் இருக்க செய்யும் பாவனைதான் என்பதை அவன் இவர்களுக்கு எப்படி தெரிவுபடுத்துவான்? இத்தனை வலுவிழந்தவனா நான்? என்று எண்ணிக் கொண்டான். இந்த விஷயத்தில் மட்டும் ஏன் இத்தனை இடர்ப்பாடு?

அவர்கள் அவனை உலுக்கினர். அவன் “ஆம்” என்று சொல்லெடுக்கும் தருவாயில், வேறொருவர் தன் கண் முன் தொடுதிரையை உண்டாக்கி, “இதோ பாருங்கள் இது நாம் நம் பழைய பூமியில் கலம் ஏறும் முன்பு மனித மாதிரிகளால் தொகுத்து சேகரிக்கப்பட்ட நம் மரபணுத் தரவுகள். நம் சூழலில் உள்ள ஒட்டுமொத்த பருவடிவுகளுக்கும் அதை ஒத்த நேரிணைப் புள்ளிகள் நம் பிறப்பணுக்களில் பதியப்பட்டிருக்கும். அதுவே நம் உணர்வு வடிவங்களாக நீட்சி கொள்கின்றன.  நாமேற்கும் அனைத்து உணர்வு நிலைகளுக்கும் வடிவங்கள் உண்டு. இதோ இது எங்களுடைய ஒட்டுமொத்த அணுத் தரவு. இதில் நிலவின் நேரிணைப் புள்ளி தெளிவாக தெரிகிறது.இது உங்களுடையது.  இதில் அந்த சந்திரப் புள்ளி சற்று சிதிலமடைந்து இருக்கிறது. இந்தப் பிளவே நீங்கள் நிலவச்சம் கொண்டவர் என்று உறுதிபடுத்தப் போதுமானது. இதைப் பாருங்கள். இது உங்கள் குழந்தையுடையது. உங்கள் குழந்தையை அந்தத் தலைமை மனித மாதிரி விண்கலம் மறுக்காமல் அனுமதித்த காரணம் புரிகிறதா? பாருங்கள், இதில் நிலவின் ப்ரக்ஞைக் கொண்ட அந்தப் புள்ளியே இல்லை” என்றார்.

“இதிலிருந்து புரிபடுவது என்ன?” என்றார். அவன் புரியாமல் நின்றிருக்க, “மனித பரிணாமத்தின் ஊமைவிழி திறந்துவிட்டது. பிறந்தது நிலவறியா மனித இனத்தின் முதல் குழந்தை”. அவனை எல்லாரும் சேர்ந்து கட்டித்தழுவி கைகுலுக்கி அவன் குழந்தையின் தலையை தடவிக் கொடுத்து முகம் மலர விடைப்பெற்றுக் கொண்டனர். விடைப்பெறும்போது ஒருவர் “இந்தப் புதிய பூமியில் நிலவுகள் இல்லை என்பதை  நீங்கள் தெரிந்திருக்கவில்லையா என்ன?” என்றார்.

அவன் தன் குழந்தையைப் பார்த்தான். அது அவன் முன்பு காட்டிய இடத்தில் விண்ணைத் துழாவிக் கொண்டிருந்தது.அவசரமாக தன் கைகளைத் துடைத்துக் கொண்டு தன் தனியறைக்குச் சென்றான். அலமாரியைத் திறந்து இழுவைப் பெட்டியில் இருந்த அந்தச் சிமிழை எடுத்தான். அந்தச் சிமிழைத் திறந்து அதில் இருந்த கருஞ்சாந்தை தன் வலக்கை ஆள்காட்டி விரலால் தொட்டு தன் குழந்தையின் இடக்கன்னத்தில் அழுத்திப்பதித்தான். அக்குழந்தையின் மென்சருமத்தில் அந்தக் கறை ஒரு கரிய நிலவு போல பதிந்திருந்தது.

***

அறிவியல் கலைச்சொற்களும் அதன் ஆங்கில இணையும்

 • சுற்றுக்காலம்                Revolution
 • சுழற்சிக்காலம்              Rotation
 • ஒத்தக்கால சுழற்சி        Synchronous Rotation / Tidal Locking
 • அணுக்கடிகாரம்            Atomic Clock
 • விடுபடும் திசைவேகம்     Escape Velocity
 • வளிமண்டலம்                Atmosphere
 • குடி வெளியேற்றம்          Evacuation
 • நிறமாலை                      Light Spectrum
 • நிரலாக்கம்                     Programming
 • நிகழ்தகவு                      Probability
 • நிலவச்சம்                      Selenophobia

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.