என் ஆன்மாவின் தொப்பி

வருடங்களைக் கணக்கிட்டேன் நான்
வாழ்ந்த காலங்களை விட
வாழ இன்னும் சில நேரங்களே உள்ளது.
ஒரு குழந்தை பெற்ற இனிப்புப் பொட்டலம்
சந்தோஷமாக சாப்பிட ஆரம்பித்த குழந்தை
இன்னம் சிறிதே உள்ளது என்று உணர்ந்ததும்
மிக ருசித்து சாப்பிடத் தொடங்குவது போல் உணர்கிறேன்.
சந்திப்புகளில் பேசப்படும் சட்டங்கள், கோட்பாடுகள்,
வழிமுறைகள், உள்வரைமுறைகள்,
இவ் வெவற்றிற்கும் என்னிடத்தில் நேரமில்லை
எதுவும் நடக்காது என்பதும் அறிவேன்
வயதாகியும் முதிராத மனிதர்களிடம் என்னால்
இனியும் பொறுமை காக்க முடியாது.
என் காலம் குறுகுகிறது
நான் சாரத்தை விரும்புகிறேன்
என் இருப்பு அவசரத்தில் இருக்கிறது
அதில் மீதமாக அதிக இனிப்பில்லை
மனிதர்களின் அருகே வசிக்க விரும்புகிறேன்
தன் தவறுகளுக்காகச் சிரிக்கத் தெரிந்த,
யதார்த்தமான, உண்மையான
தன் வெற்றிப் பெருமிதத்தில் மிதக்காதவரிடையே
தன் செயல்களுக்குப் பொறுப்பேற்வரிடையே
வாழ நினைக்கிறேன்
இவ்விதத்தில் மனிதம் மீட்கப்பட்டு
நேர்மையும் உண்மையும் வாழ்கின்றன
வாழ்வின் பயனென இவற்றை நினக்கிறேன்
கடும் துயரத்தில் வாழ்ந்தும் பிறரை
ஆன்மாவின் இனிய மீட்டலுடன்
அணுகத் தெரிந்த மனிதர்களுடன் வாழ வேண்டும்
ஆம், நான் அவசரத்தில் இருக்கிறேன்
முதிர்ச்சி மட்டுமே தரும் ஆழ்தலுடன் வாழ
நான் அவசரப் படுகிறேன்
மீதமிருக்கும் இனிப்புக்களை
வீணாக்க நான் விரும்பவில்லை
அவை இது வரை சுவைத்தவற்றைவிட
மிக அருமையானவை
இறுதியை நிறைவுற்றவனாகவும்
அமைதியோடும், என் அன்பிற்குரியோரோடும்
என் சுத்த உணர்வோடும்
அடைவது எனது குறிக்கோள்
நமக்கு இரு வாழ்க்கைகள்
இரண்டாவது தொடங்குவது
ஒன்றே ஒன்று தான் இருக்கிறது என அறியும்போதே.
***
மூலம்: மாரியோ டி ஆண்ட்ராஜ்
/ ப்ராஸியோ நாட்டுக் கவிஞர் (Brazilian) -[Mario de Andrade (San Paola 1893-1945)
இந்தப் போர்ச்சுகீசியக் கவிதையின் இங்கிலிஷ் மொழி பெயர்ப்பை இங்கே காணலாம்: https://www.poemhunter.com/poem/the-valuable-time-of-maturity/
ப்ராஸியோவின் (Brazil) முதல் நவீனக் கவிதைகளை எழுதியவர் என்பதோடு, நவீனத்துவத்தைத் தொடர்ந்து பல துறைகளில் அந்நாட்டில் கொணர்ந்து அதை முன்னெடுக்கச் செய்தவர் என்று புகழ் பெற்றவர். இசைக் கலைஞரும், அத்துறையில் பேராசிரியராகவும் பணியாற்றியவர். சுத்தப் போர்ச்சுகீஸிய மொழியை விடுத்து, முதன் முறையாக ப்ராஸியோவின் பேச்சு வழக்கு மொழியை ( ப்ராஸியோ நாட்டுப் போர்ச்சுகீசிய மொழி வகை) பயன்படுத்தியவர் என்று அறியப்படுகிறார்.
தமிழாக்கம்: திலகம்
***