ஊசிமுனை
ஊசிமுனையென ஒரு தருணம்
உடைத்து எழுப்புகிறது
தளும்பிக் கொண்டு நிற்கும்
தலைக்குள்ளே ஒரு சூறைக்காற்றை
அடி வண்டலாய் புதைந்திருந்த
கசப்புகள் பீறிட்டெழுந்து
கைகோர்த்து நின்று பார்க்கின்றன
வாள் கொண்டு அறுக்கும் போதும்
எரி கொண்டு தசையை தீய்க்கும்போதும்
வலி காட்டாது தாங்கியதால்
சற்றே சலுகையுடன்
புன்னகை கூட காட்டுகின்றன.
கண் திருப்பிக் கொள்வதும்
கைகளை கோத்து உதறுவதும்
உதடு மடித்து விலகுவதும்
எச்சில் விழுங்கி
கால்கள் சிக்கித் தடுமாற பின்னடைந்து
குற்றவுணர்ச்சியின் தடம் தொடர
புகுந்து கொள்கின்றன வேறொரு
நினைவு அறைக்குள்.
கண்ணாடி மனிதன்
எனக்கும் கண்ணாடி மனிதர்களுக்குமான
உரையாடல்கள் ஓய்வதேயில்லை
முகச்சவரத்தின் போது
குளியலறை நிலைக்கண்ணாடி,
காலை நடையில் கடந்து போகும்
சாலையோர கார்க் கண்ணாடி
கனத்த ஆர்மினிய பார்பரின்
முடிவெட்டும் கடையின் அகலக் கண்ணாடி
பியர் நுரை பொங்கும்
பட்டை கோப்பையின் மடிப்பு கண்ணாடி
ஆங்கார சச்சரவுகளின் போது
மனைவியின் விழி ஆடி,
கோணல் சிரிப்போடு என்னை
படமெடுக்கக் காத்திருக்கும்
கைப்பேசியின் கண்ணாடி
என புதிது புதிதாக
பல கண்ணாடிகளில் இருந்து
இறங்கி வருகிறார்கள்
வெளுத்த தாடியும், வெறுமை கண்களும்
சினத்தில் கறுத்த முகமும், அமைதியின்மையுமாக
விதவிதமான குரலில் வந்து
வாதிடுகிறார்கள்.
நான்தான் அவர்கள் என.
இறைஞ்சலும் கோபமுமாக
அவர்கள் ஒவ்வொருவரையும்
நான் மறுதளிக்க மறுதளிக்க
பெருகி வருகிறார்கள்
விதவிதமான வடிவங்களில்
என் நுதல் விழி திறந்து
எரித்து விட்டேன்
அத்தனை கண்ணாடிகளையும்
அனல் அணைந்து
சாம்பல் புகை ஓய்ந்ததும்,
நிச்சலனமான புதுவெளி
ஒன்று உருவாகியிருந்தது
எதையும் பிரதிபலிக்காத
ஒற்றைப் பெருங்கண்ணாடியும்
அதை முகமென கொண்ட நானும்
மட்டும் எஞ்சியிருந்தோம்.
ஸ்ரீதர் நாராயணன்
***
வேட்டல்
சிறு புள் விழையும்
வானத்தையும்
மெல்மீன் வேட்டும்
கடலையும்
கருந்தேனீ வேண்டும்
தேறலையும்
இளங்குழவி ஏங்கும்
நிறைமடுவையும்…அவற்றிற்கு
அளிக்கும் தேவன்தான் ,
அருள்கிறான் …
ஈனப்புழு விரும்பும்
கசடுக் குவியலையும்
தன்புண் சுவைத்து
மகிழ்ந்து மேவும் விலங்குக்கு
வற்றாத நிணத்தையும்.
கா. சிவா
Painting : Dreja Novak