லூர்து நாயனார்

லூர்து நாயனார்

எனக்கு அலுவலகம்,குடும்பம் டெல்லியில்.  ‘திட்டமிட்ட விடுமுறை’ பத்து நாட்கள் சேர்ந்தாற்போல் எடுத்துக்கொள்ள அனுமதி உண்டு.  அதில்தான் தனிமையிலே இனிமை கண்டு கொண்டிருக்கிறேன.  

இயற்கைச் சீற்றமே என் இன்பத்துக்குக் காரணம் என்றால் ஆச்சரியப்படுவீர்கள். காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் கண்ணுக்குத் தெரியாத கயிறு டெல்லியையும் ஆட்டியது –  லேசாகத்தான். ‘அங்க எல்லாம் ஆடறதுங்கறாளேடி கோந்தே இங்க வந்து கொஞ்ச நா இருந்துட்டுப் போப்டாதா’ என்று அநியாயத்துக்கு வருத்தப்பட்ட மாமியாரின் வருத்தத்தைப் போக்குமுகமாக ‘கோந்தை’யையும், கல்லூரிப் படிப்பு முடிந்து மேல்படிப்பு ஆரம்பிப்பதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் கோந்தையோட கோந்தையையும் நாகர்கோயிலில் மாமியாரிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிட்டேன்.  

ரெண்டு நாள் மதுரைக்கு மட்டும் ஒதுக்கியிருந்தேன். வரும்போது ‘பினிஷிங் டச்’சும் உண்டு.  முருகனுடைய ஆறாவது படைவீடான பழமுதிர்ச்சோலை(அழகர் கோயில்) நாளை கட்டாயம் போகவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.  மதுரைக்காரர்கள் அநேகம் பேர் பார்த்திராத கோயில் அது. அடுத்த ஆறு நாட்களுக்கு சுற்றுப்பட்டு பதினெட்டு கிராமங்களில் இருக்கும் உறவினர்கள்,நண்பர்கள் எல்லோரையும் அவர்கள் எதிர்பார்க்காத சமயத்தில் போய் இந்த ‘பிரெஞ்ச்’ தாடியையும், முன் வழுக்கைத் தலையையும் காட்டி ‘மகிழ்விப்பதாக’த் திட்டம்.  க்ளாவரை, பேரிஜம்(கொடைக்கானல்), தெங்குமரகடா(சத்தியமங்கலம்), சித்தன்னவாசல், நார்த்தாமலை என்று பார்க்கவேண்டிய ஊர்கள் வேறு.  கடைசி நாள் மட்டும் ‘நாறோயில்’.  பின் டெல்லி.   இந்தமாதிரி நாள்கணக்கில் ஒழிந்துபோவது இதுவரை நான் செயல்படுத்த முடிந்திராத, எனக்குப் பிடித்தமானவைகளுள் ஒன்று.   நாகமலைப் புதுக்கோட்டையில் இருக்கும் காமு அத்தானைத் தவிர யாருடைய ‘மொபைல் நம்பரும்’ தெரியாது.  எல்லாருடைய வீடும், அன்றைய இடவியல்பின்படி தெரியும்.  வீடு இருக்குமா? பலபேருடைய வீடு அன்று விளைநிலங்களின் நடுவில் இருந்தது.  அவர்கள் இருப்பார்களா? இருந்தாலும் ஞாபகம் இருக்குமா? அதுதான் ‘த்ரில்லே’.   ‘தனிமை கண்டதுண்டு, அதில் சாரம் இருக்குதம்மா. . . ‘ என்று சாரமில்லாமல் சொல்லியிருக்கமாட்டான் கவிஞன்.  எந்த ஊரையும் கால் போன போக்கில் நடந்து அனுபவிக்கிற சுகமே தனிதான்.  

கோயிலின் பிரம்மாண்ட சுவர்களுக்குளே ஆடி வீதி.  கோயிலுக்கு வெளியே சித்திரை வீதி,ஆவணி மூல வீதி, மாசி வீதி, வெளி வீதி என்று தாமரை மொட்டவிழ்ந்தாற்போல அடுக்கடுக்காய் விரியும் மதுரை. மாதந்தோறும் ஒரு வீதியில் விழா.  வீதி தோறும் கோயில்கள்.  கோயில்தோறும் விழாக்கள்.  வீதிகளை இணைப்பவை தெருக்கள். தெருக்களை இணைப்பவை சந்துகள்.  மதுரையில் சந்துகள் அதிகம்.  ‘அந்தப் பேரைக்கேட்டாலே எங்களுக்கெல்லாம் சிரிப்பு தாங்க முடியாது’ என்பார் அம்மா.  அம்மா ஊர் திருநெல்வேலி.  நாலு புறமும் இருப்பதனால் வீதிகளின் பெயர்கள் மேலமாசி வீதி, வடக்குச் சித்திரை வீதி என்று திசைப் பெயர்களின் முன்னொட்டுக்களோடு அமைந்திருக்கும்.  

மாசி வீதியில்தான் சித்திரைத் திருநாள் தேர்வலம்.  நானும் வடம் பிடித்திருக்கிறேன்.  சம்போசங்கர. . . மீனாட்சிசுந்தர. . . சோமசுந்தர. . . என்று தேர்தட்டிலிருந்து வருகிற ஒவ்வொரு கூவலும் ஒலிஅலைகளாக அனைவர் குரலாலும் முழங்கப்படும் போது, மயிர்கால்கள் சிலிர்த்து, ரத்தம் தலைக்கேறி, சித்தம் கலங்கிய ஒரு போர்க்களவீரனின் மனநிலையும், மனநெகிழ்வும் ஒருங்கே கூடியிருக்கும்.  பானகமும், – மாங்காய்த் துணுக்குகளும், கறிவேப்பிலையும் மிதக்கும்- நீர்மோரும் எங்கும் தாராளமாக வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும்.  மேல்மாடியிலிருந்து தேர் இழுப்பவர்கள் மேல் நீரை விசிறியடிப்பார்கள் இளைப்பாற.  அது தோலில் பட்டுத் தெரிக்கிற குளுமை இன்னும் நினைவில் இருக்கிறது.  என்னோடு சில வெள்ளைக்காரர்களும் தேரிழுத்தது ஞாபகம் இருக்கிறது.  

தேர் ஒரு மாசி வீதியிலிருந்து அடுத்த மாசி வீதிக்கு திரும்புவதற்காகவே ஏற்பட்டதுதான் வடம் போக்கித்தெரு.  நாலு மாசி வீதியின் முக்கிலும் இந்தத் தெரு உண்டு.  எண்பதுகளில் கூட ஊரின் எந்த மூலையிலிருந்து பார்த்தாலும் கோபுரம் தெரியும்.  கோவிலுக்கு வழியெல்லாம் கேட்க வேண்டிய அவசியமில்லை.  கோபுரத்தைப் பார்த்துக்கொண்டே நடந்து வந்து விடலாம்.  இப்போது பெரிய பெரிய கட்டிடங்களாகக் கட்டி விட்டதால் திசை பற்றிய ‘பிரக்ஞை’ இல்லாதவர்களுக்கு கொஞ்சம் திண்டாட்டம்தான்.  

கோயிலைப் பார்த்துவிட்டு ராஜகோபுரத்தின் வழியே வெளியே வந்தால், எதிர்த்தாற்போல் புது மண்டபம்.  இந்தப் ‘புது’ மண்டபமே சில நூறு வருஷத்துப் பழசு.  தையல் கடைகள், பாத்திரக் கடைகள், பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்கள் விற்கும் கடைகள் என்று மண்டபம் நிறைந்திருக்கும்.  நிறையத் தூண்கள்.  அவற்றில் அழகழகான சிற்பங்கள்.  அதற்கு நடுவே இப்படி ஒரு வியாபாரக் கேந்திரம்.  புதுமண்டபத்தையும் தாண்டி கிழக்கே போனால் ஒரு அறுங்கோண வடிவில் கல்லால் ஆன ஒரு ‘ரௌண்டானா’ – இந்த இடத்திலே ஒரு ‘சிமெண்ட்’ நந்தியைக் கட்டி அந்த இடத்தின் அழகையே ஒழித்துக்கட்டியிருந்தது ஒரு ‘நாசகாரக் கும்பல் ‘.  

கோயில் தெப்பக்குளத்தைச் சுற்றியிருந்த மங்கம்மாள் காலத்து ஓவியங்களுக்கு வெள்ளையும் அடித்து கலை ஆர்வலர்கள் கண்ணில் ரத்தம் வடிய வைத்த இவர்கள் ‘கலைப்பணி’ மறக்கக் கூடியதா? மொட்டைக் கோபுரம் என்றழைக்கப்படும் வடக்குக் கோபுரமும் இவர்கள் ‘கைங்கர்யமே’.  ஒரு ‘மாஸ்டர்பீஸ்’ சிலையோ அல்லது ஓவியமோ செய்தவரின் கட்டை விரலை வெட்டிய மன்னர்கள் உண்டு.  இவர்கள் செய்த வேலைக்கு எதை வெட்டுவார்களோ? – அதையும் தாண்டி ராயகோபுரம்.  இரண்டு பெரும் தூண்கள் மற்றும் அதை ஒட்டிய சுற்றுச் சுவர்கள் மட்டுமே இப்போது மிச்சம்.  கட்டிய பிறகு விழுந்ததோ அல்லது பாதியிலேயே கைவிடப்பட்டதோ.  இதுபோலவே கைவிடப்பட்ட ஒரு கோபுரம் அழகர்கோயிலிலும் பார்த்திருக்கிறேன்.  அங்கிருந்து ஆரம்பிக்கிறது ‘ எழுகடல் தெரு’.  மதுரைக்கும் கடலுக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை பழைய கடல்கொண்ட மதுரையை ஞாபகப்படுத்த வைக்கப்பட்ட பெயரோ என்னவோ? எனக்கென்னவோ ரோமில் இருப்பது போலிருக்கும்.  அதையும் விடப் புராதனமானது தானே.  

நான் எந்த ஊரையுமே காப்பியால் (ஆங்கிலத்தில் தான் ‘காஃபி’) சுவைப்பவன். காப்பியின் முதல் சொட்டு நாவில் பட்டதுமே சுவை நரம்புகள் சிலிர்த்து அந்தச் சுவையை மெதுவாக மூளை நரம்புகளுக்குக் கடத்தி, ஒவ்வொரு நியூரானையும் சிலிர்க்கச் செய்யும்.  நல்ல காப்பியாக இருந்தால் ஒரு அரை மணி நேரத்திற்கு அதன் சுவை நாக்கை விட்டுப் பிரியாது.   காப்பி ‘டபரா’ விலிருந்து கொதிக்கக் கொதிக்க, ‘டம்ளரு’க்கு மாறி குடிக்கக்குடிக்க அளவு குறைந்து கொண்டே வருவது சற்று மென்சோகத்தைக் கிளர்த்தும். 

இந்த நேரத்தில் எப்போதும் ரெண்டு காப்பி ‘ஆர்டர்’ செய்கிற கல்யாணிப் பெரியம்மாவின் தீர்க்கதரிசனத்தை (ஐ டி ‘பார்க்’குகளில் நேரவிரயம் கருதி ஊழியர்கள் ரெண்டு சிகரெட்டுகளை ஒரே நேரத்திலோ அல்லது ஒன்று முடிய மற்றொன்றை பற்றவைத்தோ புகைப்பார்கள் என்று நண்பன் சொன்னதுண்டு) நினைத்துக் கொள்கிறேன்.   அப்படியாப்பட்ட எத்தனை நூறு காப்பிகள் குடித்திருப்பேன் மதுரையில்.  

ஒரு காலத்தில் டவுன்ஹால் ரோட்டில் இருக்கும் ‘காலேஜ் ஹவுஸ்’ எனக்கு முந்தைய தலைமுறையை காபி அடிமைகளாக வைத்திருந்தது.  ‘பில்டர்ல அபின் தடவுவான்னு கேள்வி’ என்பார் அப்பா.  நானும் சிறுவயதில் குடித்திருக்கிறேன்.  ஹோட்டல் கை மாறியபின் அதன் புகழ் குறைந்தது.  வருடங்கள் பல கழிந்தபின் என் கல்லூரிப் பருவத்தில் மதுரை மையப்பகுதியில் உள்ள கடைகளிலோ, ஹோட்டல்களிலோ போடப்பட்ட எந்த நல்ல காபியும் என் நாவைத் தீண்டாமல் இருந்ததில்லை.  காபி குடிக்குமிடம் டவுன்ஹால் ரோட்டில் ஒரு சந்தில் இருந்த ‘ராஜேந்திராஸ்’ஸாகவோ (நேற்று விசாரித்தபோது கடையை மூடிவிட்டு ஐதராபாத் போய்விட்டதாகச் சொன்னார்கள்), மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் இருக்கும் ‘விசாலம் காப்பி பா’ராகவோ இருந்தால் அங்கேயே கிடைக்கிற போண்டா, பஜ்ஜி, ஊத்தப்பங்களோ அல்லது ஒரு மாறுதலுக்கு பிரேமா விலாஸ் அல்வாவும், மிக்சருமோ.

மேலாவணி மூலவீதியில் இருக்கும் ‘மீனாட்சி காபி பாரி’ல் காப்பி குடித்தால்  அதற்கு முன் நாகப்பட்டினம் நெய் மிட்டாய்க்கடையின் அல்வாவும், உருளைக்கிழங்கு மசியலுமோ அல்லது கோபு அய்யங்கார் கடைச் சிற்றுண்டி வகைகளோ என்று சேர்மானங்கள் வேறுபடும்  அவ்வளவுதான்.  மேல மாசி வீதி ஜோதி கிருஷ்ணா, கோபால கொத்தன் தெரு மாடர்ன் ரெஸ்டாரண்ட், மேலமாசி வீதி ஆரியபவன் என்று தனித்துவமான ருசி கொண்ட ‘ஹோட்டல்’கள் தனி. 

அப்படியொரு காப்பியைக் குடித்துவிட்டுத்தான் கோயிலுக்குள் நுழைந்தேன். என்ன ஓர் இருபதுவருடம் இருக்குமா மீனாட்சிஅம்மன் கோயிலுக்கு வந்து? கும்பாபிஷேகம் முடிந்து இரண்டு வருடம்தான் ஆகியிருக்கும்.  அதற்குள் கோபுரத்திலிருந்து ஆங்காங்கே அரச(மர)க் குழந்தைகள் தலையாட்டிக்கொண்டிருந்தன.  கோபுரத்தில் வேர் கொண்ட சந்தோஷமா? தரையில் வேர் படியாத வருத்தமா? ‘போஷாக்கு’ இல்லாததால் அவைகள் குழந்தைகளாகவே நீடிக்கும் அடுத்த கும்பாபிஷேகம் வரையில்.  ராஜகோபுரத்தின் வழியே நுழையும்போதே சந்தனம், பன்னீர், அத்தர், பூ, வௌவால் நாற்றம் கலந்த கோயில் மணம் கிறங்கடித்தது – இதற்கிணையாக தனித்தன்மை வாய்ந்த இன்னொரு மணம் கைக்குழந்தையிடமிருந்து வருவது.  கோயில் யானை காசு கொடுத்தவர்களை ஆசீர்வாதம் பண்ணிக்கொண்டிருந்தது.  செருப்பணியாத வெறுங்கால் கல் தரையில் பட்டவுடன் உச்சந்தலைவரை ஒரு சிலிர்ப்பு ஓடி  நிறைந்தது.  கடைசியாக எப்போது செருப்பணியாமல் வெளியில் நடந்தோம் என்று யோசித்தேன்.  ஞாபகம் வரவில்லை.  

யானைக்கொட்டாரத்திற்குள் எட்டிப் பார்த்தேன்.  ரெண்டு ஒட்டகங்கள் மட்டும் பெரிய உதடுகள் தொங்க அசை போட்டுக்கொண்டிருந்தன.  யானைகளை எங்கே என்று ‘வாட்ச்மேனி’டம் கேட்டேன்.  

“எல்லாம் முதுமலை போயிருக்காங்க. . ஓய்வெடுக்க. . . ” என்றார்.  

அப்ப அங்க ஆசீர்வாதம் பண்ணிக்கிட்டிருக்கறது . . . ? 

சீக்கு. .  இன்னும் கொஞ்ச நாள்தான்.  பெரிய டாக்டர்லாம் பாத்துட்டு முடியாதுன்னுட்டாங்க. . .  

ஆனால் பார்த்தால் அப்படித் தெரியவில்லை.  கருமமே கண்ணாயினாராக வாங்கிப் போட்டுக்கொண்டிருந்தது.   

ஒட்டகங்களுக்கு எங்கே புத்துணர்வு முகாம் நடத்துவார்களோ? சவுதி அரேபியாவிலா? நம் இதிகாச புராணங்களில் ஒட்டகம் எங்கே வருகிறது என்று யோசித்தேன்.  தெரியவில்லை. 

நாகஸ்வர ஓசையோடு சுவாமி கோயில்வலம் போய்க்கொண்டிருந்தார்.  பிரசித்திபெற்ற  கொடிமண்டபத்தின் சிற்பங்களை –   ரசித்தபின் வெண்ணைக்காளியைக் கண் தேடியது – யார் கண்டுபிடித்த வழிபாடோ. . வெண்ணை உருண்டையை சிற்பத்தின்மீது எறிந்து வழிபடுவது.  இரண்டு ஆள் உயரச் சிலைமுழுதும் தலை முதல் கால் வரை வெண்ணை உருண்டைகள். . சிறுவயதில் பார்க்கவே பயமாக இருக்கும்.  அட. . . இப்போது காளி மட்டும்தான் இருந்தாள்.  வெண்ணை இல்லை. . . காளிக்கு வலது பக்கம்தான் நவகிரக சந்நிதி.  எந்த கிரகத்தின் பார்வை பட்டதோ . . காளிக்கு விடிவு பிறக்க இத்தனைக்காலம். .  

அம்மனின் முகத்தில் நாணமிருந்ததா? ஞாபகமில்லை.  போய் விட்டு வந்த பிறகுதான் சொன்னார் பிச்சுமணி மாமா ‘இது திருவாலங்காட்டுல போட்டி நடந்ததே சுவாமிக்கும் அம்மனுக்கும், அதற்கப்புறமான  சாந்த சொரூபம்.  அந்த நாணம் மொகத்துலயே தெரியும்’ என்று.  அந்த நாணத்தை  கொடி மண்டபத்தில் கல்யாணக்கோலத்திலிருக்கும் மீனாட்சி அம்மையிடம் பார்த்திருக்கிறேன். 

ஏற்கனவே நூறுமுறைக்குமேல் வந்திருப்பேன்.  கண்ணைக்கட்டி இந்தக்கோயிலின் எங்கு கொண்டுபோய் அவிழ்த்து விட்டாலும் எந்த இடம் என்று சரியாகச் சொல்லமுடியும்.  முதலில் அம்மன்.  அப்புறம்தான் சுவாமி தரிசனம்.  இதுதான் முறை.  நான் ராஜகோபுரத்திலிருந்து நுழைந்ததனால் ஏதோ ஞாபகத்தில் சுவாமிசந்நிதிக்குள் நுழைந்து விட்டேன்.  பின்வாங்க முடியாதபடி வழக்கத்துக்கு மாறாக கூட்டமும் சேர்ந்துவிட்டது.  அதென்னவோ பொதுவாகவே சுவாமி சந்நிதியில் கூட்டம் குறைவாகத்தான் இருக்கும்.  ‘அய்யங்கார்கள்லாம் பொதுவா ‘அவாய்ட்’ பண்ணுவா’ என்பார் அப்பா.  அது ஒரு காரணமல்ல என்றாலும் கூட்டம் பொதுவாக குறைவாகத்தான் இருக்கும்.  சரி இன்றைக்கு இறைவன் விருப்பம் இதுதான் என்று நினைத்துக்கொண்டு தரிசனத்தை முடித்துக்கொண்டு வெளியேவந்தேன். 

சிறுவயதில் அந்தப் பக்கம் போவதற்கே அரண்டு செத்த அக்கினி, அகோர வீரபத்திரர் சிலைகளை ரொம்ப நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அப்போது முழித்த அதே முழிதான்.  “சாமி யாரைப் பாக்கறது தெரியறதா? உன்னைத்தான்,” என்ற அப்பாவின் குரல் இப்போது கூட காதில் கேட்டது.  அதேபோல் கிழக்குச்சித்திரை வீதியிலிருந்து அம்மன் சந்நிதி வரும் வழியில் உள்ள பிட்சாடனர் சிற்பமும் எனக்குப் பிடித்தமான ஒன்று. சிறுவயதில் பயமாகயிருக்கும்.  அம்மன் சந்நிதிக்குப் போகிற வழியே இடதுபுறம் ஒரு தூணில் அனுமன் சிலை குங்குமம் தடவி செக்கச் செவேர் என்று – இந்தச் சிலை நான் சிறுவயதாக இருந்தபோது வளருவதாக ஒரு வதந்தி இருந்தது.  வலது புறத்தில் ஒரு தூணில் ஒரு பெண் பிரசவிக்கிற சிற்பம் இருக்கும்.  இப்போது மஞ்சள் பாவாடை கட்டி மறைக்கப்பட்டிருந்தது.  தேன்குழல், முறுக்கு, லட்டு கலந்தவொரு மணம் பிரசாத ஸ்டாலிலிருந்து காற்றை நிறைத்தது.  முன்னெல்லாம் அப்பாவோடு வந்தால் வழிபாடு முடிந்ததும் குளக்கரையில் அமர்வதற்காகக் காத்துக் கொண்டிருப்போம்.  அப்போதுதான் பிரசாதக்கடையில்   வாங்கிய ‘ பாக்கெட்டு’கள் பிரிக்கப்படும். 

வண்டியூர் தெப்பக்குளம் தோண்டும்போது கிடைத்த முக்குறுணிப்பிள்ளையார் புதுவேட்டி கட்டி பளிச்சென்றிருந்தார்.  எதோ ஒரு குடும்பம் அசந்தர்ப்பமாக வடிவேலு ஜோக்கைச் சொல்லி சிரித்து குலுங்கிக் கொண்டு போனது.   “சரியான சினிமாப் பைத்தியம் பிடிச்ச ஊர்யா அது”  என்ற லூர்து சார் குரல் காதில் ஒலித்தது.  

‘ஷோலே’,’மை நே ப்யார் க்யா’ போன்ற ஹிந்திப் படங்களே ஒரு வருடம் ஓடும் அளவுக்கு பைத்தியங்கள். கொஞ்ச காலத்திற்காவது நானும் அதில் ஒருவன்தான்.  எப்போது கூப்பிட்டாலும் ‘கட் பண்ணிரு.  இன்டெர்வல்ல கூப்பிடுறேன்’ என்னும் எழுபத்திரெண்டு வயது ராமன் மாமாவை நினைத்துக் கொண்டேன்.   நாங்கள் இருந்த நிலக்கோட்டையிலிருந்து அப்பா எப்போதாவது அழைத்து வருவார். எழுபதுகளின் கடைசியில் நாங்கள் சென்ற ஒரு பேருந்தின் வலது பக்கத்தில் நாலு சீட்டு இருந்தது.  இடது பக்கம் பஸ்சின் முழு நீளத்திற்கும் ஒரு ‘பெஞ்சு’.  நடுவிலே நடைபாதை.  அந்த சைடு ‘சீட்’டில் உட்கார்ந்து கொண்டு கடைசி வரிசையிலிருந்து ஒவ்வொருவர் முகமாகப் பார்த்துக்கொண்டு வருவது அந்த வயதில் பிடித்தமானதாக இருந்தது. சிலர் வேண்டுமென்றே முகத்தை ‘கொனஷ்டை’ செய்தோ மாறுகண் போட்டோ நம்மை பயமுறுத்தவும் செய்வார்கள். எண்பதிற்குப் பிறகு இப்போது இருக்கிறது போல  மூன்று+இரண்டு சீட் வந்தது.  பேருந்து நிலையத்தில் கண்ணாத்தா போயிருச்சா? சுல்தான் போய்ட்டானா? என்கிற விசாரிப்புகளைச் சாதாரணமாகக் கேட்கலாம்.  எல்லாம் ‘பஸ்’ஸின் பெயர்கள்.  வந்து பெரியார் பஸ் ஸ்டாண்டில் இறங்கியவுடன் ‘ஐஸ்பால்’  – ஆவின் விற்கிற பிஸ்தா பால். ‘ஸ்ட்ரா’ விலிருந்து பால் நாவைச் சந்திக்கும் அந்தத் தருணம் இன்னும் மனதில் இனிக்கிறது – நிச்சயம் உண்டு.  

அத்தை வீடு, படம், கோயில் இதுதான் எப்போதும் ‘அஜெண்டா’.  அதென்னவோ ஒரு குறிப்பிட்ட வயதுவரை மிருகங்கள் சம்பத்தப்பட்ட படம்தான் கூட்டிச்செல்வார் – Drums of  destiny, Hatari, அன்னை ஓர் ஆலயம் அப்புறம் ரொம்ப நாள் கழித்துத்தான் ‘சங்கராபரணம்’.  இப்போது எண்பது வயதிலும்  கூட சாப்பிடும்போது, எதுவோ எதையோ சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ‘நேஷனல் ஜியோக்ராபிக்,டிஸ்கவரி, அனிமல் பிளானட்’ தான் பார்ப்பது.  அம்மா ஒரு கையால் கண்ணை மறைத்துக்கொண்டே பரிமாறிக் கொண்டிருப்பார்.  ‘ மனுஷாளைச் சகிச்சுக்கறதுதான் கஷ்டமா இருக்கு’ ன்னு ‘கமெண்ட்’ வேறு. 

நான் பார்த்த தியேட்டர்களெல்லாம் இருக்கின்றதா? இந்தியாவின் மாபெரும் தங்கம் (காமு அத்தானோடு ‘ரிட்டன் ஆப் தி டிராகன்’ ‘ஜாஸ்’,  அப்பாவோடு ‘மலையூர் மம்பட்டியான்’, ‘தூறல் நின்னு போச்சு’ – இப்போது சென்னை சில்க்ஸ்),  நியூ சினிமா, சிட்டி சினிமா, இம்பீரியல் எனக்குத்தெரிந்தே மூடப்பட்டிருந்தன.  “பேமிலி ஆடியன்ஸ்” க்கு ப்ரியா காம்ப்ளெக்ஸ் (கல்லூரி நண்பர்களோடு ‘மௌன ராகம்’ படத்துக்குப் போய் ‘சின்னச் சின்ன வண்ணக்குயில்’ பாட்டுக்கு ‘கோரஸ்’ கொடுத்தது ஞாபகம் இருக்கிறது), கிளுகிளுப்புக்கு தீபா, ரூபா, கிளாஸ் ஆடியன்ஸ்க்கு ரீகல் – நல்ல ஆங்கிலப்படங்கள்தான் போடுவார்கள்.  ஒரிஜினல் பெயர் ‘விக்டோரியா எட்வர்ட் ஹால்’.  அதற்கு எதிரே இருப்பது  தான் டவுன் ஹால் ரோடு.  

‘நாப்பது,ஐம்பதுகள்ல இது மத்யானம் லைப்ரரி.  சாய்ங்காலம் தியேட்டர்’ என்பார் பிச்சுமணி மாமா.  மற்ற தியேட்டரில் பார்க்கிற விசிலடி, ஆர்ப்பாட்டங்கள் இங்கே இருக்காது.  இங்கிலிஷ் படம் பார்க்கும்போது மட்டுமாவது இங்கிலீஷ்காரனைப்போல இருப்போமே என்ற எண்ணமோ எனும்படி “டீசென்ட்” ஆக இருப்பார்கள்.  இந்த தியேட்டரில் பெண்கள் வந்து நான் பார்த்ததில்லை.  அதன்பிறகு அது தங்கரீகலாக மாறி தமிழ்ப்படம் போட ஆரம்பித்ததை என்னை மாதிரி பழமைவாதிகளால் ஜீரணிக்கவே முடியவில்லை.  

பல தியேட்டர்கள் கல்யாணமண்டபங்களாய் மாற்றப்பட்டுவிட்டதாகக் கேள்வி.  அது சரி. . பெற்றோர்கள் பணம் போட்டு பிள்ளைகளை நடிக்க வைத்து எடுக்கும் கல்யாண சினிமாவுக்குத்தான் அழிவேது?  ‘ரெடிமேட்’ என்றால் என்னவென்று தெரியாத அந்தக் காலத்தில் இன்றைய சினிமா நடிகர்களின் புகழோடு உலா வந்த தையல் கலைஞர்கள் கோரிப்பாளையம் ‘ஜி டெக்ஸ்’, மேல அனுமந்தராயன் கோயில் தெரு ‘ஸ்டைல்கிங்’ (எம். எஸ். சுப்புலட்சுமி பிறந்த வீடு இந்தத் தெருவில்தான் உள்ளது) ஒண்ணாம் நம்பர் சந்து’ நைஸ் பிக்ஸ்’ (அந்தக் காலத்து சிவப்பு விளக்குப் பகுதி.  இந்தத் தெருவைப் பற்றிய சித்திரம் ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ யில் உள்ளது) இவர்களெல்லாம் இன்று இருக்கிறார்களா? 

மாலிக்காபூர் படைகள் சேதப்படுத்திய சிவலிங்கத்தை பிரகாரத்தில் வைத்திருந்தார்கள்.  நமது ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய சிதிலங்கள் அதற்குக் குறைவானவையல்ல என்று நினைத்துக் கொண்டேன். இடது பக்கம் திரும்பி, பாண்டிய மன்னனின் வெப்பு நோயைப் போக்கிய மடப்பள்ளிச் சாம்பலைப் பூசிக்கொண்டு அம்மன் சந்நிதியை நோக்கி நடந்தேன்.  திருப்பதி மாதிரி பெருங்கூட்டக் கோயில்களில் கண்ணை நன்றாகத் திறந்து வைத்துக்கொண்டே செல்லவேண்டும்.  கிடைக்கிற மூன்று நொடிகளில் கண்ணைக் கசக்காமல், சிமிட்டாமல் இறையுருவைக் கண்ணிலும் மனதிலும் ஏற்றிக்கொண்டு பிரகாரத்தில் வெளியே வந்து பிரார்த்திப்பதே சாலச் சிறந்தது.  ‘தோள் கண்டார் தோளே கண்டார்’ என்று அந்த நேரத்தில் அர்ச்சகர்கள் யாரும் மறைக்காமலிருக்கவும், முழங்கையால் யாரும் கண்ணில் இடிக்காமல் இருக்கவும் ஏழுமலையான் அருள் வேண்டும்.  

பிரம்மோற்ஸவம், கோடைவிடுமுறை நாட்கள், பிரபலங்கள் வரவு இவையெல்லாம் தவிர்த்துச் சென்றாலும் அந்த மூன்று நொடிதான்.  அதற்குக் காத்திருப்பு மணிக்கணக்கில், எப்போதாவது நாட்கணக்கிலும்.  அங்கு ஆஸ்திகனாகப் போய்  நாஸ்திகனாகத் திரும்பிய நண்பன் ஒருவனும் எனக்குண்டு.  இங்கு அவ்வளவு மோசமில்லை.  கூட்டம் அதிகம் இல்லாவிட்டாலும் பக்கத்தில் பார்ப்பதற்காக தரிசனச் சீட்டு வாங்கியிருந்தேன்.   எந்த நேரத்திலும் மீட்டெடுத்துக்கொண்டு மனத்தால் தியானிக்க கிளி தாங்கிய அம்மையைக் கண் நிறைய வாங்கிக்கொண்டேன்.  இனிமேல் எப்போது வருகிறேனோ? கண் மூடி தியானிக்கக் கூட நேரமிருந்தது.  அது ஒரு வியாழக்கிழமை சாயங்காலநேரம், வெளியே வரும்போது உட்பிரகாரத்தில் தரையில் போடப்பட்டிருந்த பிசிறில்லாத புள்ளிக்கோலங்களின் அழகும், அளவும் ஆச்சரியப்பட வைத்தது.  மிகப் பொறுமையாகச் செய்திருக்க வேண்டும்.  வெள்ளைக்காரர்கள் வளைத்து வளைத்து புகைப்படம் பிடித்துக்கொண்டிருந்தார்கள். 

அங்கே மூர்த்தி நாயனார் தன் கையையே சந்தனமாய் அரைத்துப் போட்ட பெரிய கல் கிடந்தது.  சுவற்றில் எழுதியிருந்த வரலாற்றைப் படித்த பின் குளத்தின் படியில் சற்று அமரலாம் என்று திரும்பும்போதுதான் கவனித்தேன். . . அங்கு தியானத்திலிருக்கும் பெரியவர். .  தலையில் அந்த காப்பிச் சிதறல். . 

***

லூர்து சார். . .  செபாஸ்டியன்தான் கத்திக்கொண்டே வந்தான்.  சின்னவர் கூப்புடறாரு. . ‘எஸ்போர்ட்’ பைலை எடுத்துக்கிட்டு வரச் சொன்னாரு. . என்றான்.  லூர்து சார் அன்றுதான் மனைவிக்கு சுகமில்லாமல் இருந்து பத்துநாள் லீவுக்குப்பின்  திரும்பியிருந்தார்.  அது ஒரு ஆட்டோமொபைல் எலக்ட்ரானிக் சாமான்கள் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம். வெளிநாட்டு ‘பையர்’ எல் சி(letter of credit) அனுப்புவான்.  நாங்கள் “ஷிப்மெண்ட்” செய்வோம்.  பைலை எடுத்துக்கொண்டு சின்னவர் அறைக்கு விரைந்தார் லூர்து சார்.  சேர்மன் உயிரோடு இருந்தபோது இவர் வெறும் ராஜேஷ்தான்.  அவர் இறந்த பிறகு முதல் பையன் கணேஷ், சேர்மனின் காபினுக்கு இடம் மாறி “பெரியவரான”தால் கணேஷ் காபினில் அமர்ந்த ராஜேஷ் “சின்னவ”ரானார். முகம் எப்போதுமே கடுகடுவென்றிருக்கும்.  வயதுக்கு மரியாதை தராமல், நாலு பேர் சுற்றி இருக்கிறார்களே என்ற நினைப்பில்லாமல் வாய்க்கு வந்தபடி பேசக்கூடியவர்.  தன்னுடைய வாய்சாமர்த்தியத்தினால் கம்பெனிக்கு எவ்வளவோ பணத்தை மிச்சப்படுத்திக் கொடுத்திருக்கும் லூர்து சாருக்கும் அதே மரியாதைதான்.  “ஹெரால்ட் ராபின்ஸ் நாவல்ல எழுதினதெல்லாம் அவன் நாக்குல விளையாடுறதைப் பாத்தியா. . .   . . ஏதோ இந்த மட்டுக்கு இங்கிலீஷ்ல திட்றானே. . . சந்தோஷம். . ”  என்று இரட்டுற மொழிவார் எக்ஸ்போர்ட்ஸ் வெங்கடாத்ரி.  ஊரிலிருக்கும் பல க்ளப்புகளிலும் உறுப்பினர்.  எல்லோரும் வேலை முடிந்து அலுத்துச் சலித்துக் கிளம்பும்போதுதான் ஆபீசுக்கு “பிரெஷ்ஷா”க வருவார்.  எட்டு, ஒன்பது மணி வரை உட்கார்ந்து இருப்பவன் உயிரையெல்லாம் வாங்கியபிறகு எதாவது க்ளப்பிற்கு கிளம்பிச் செல்வார்.  பின் ஒரு மணியோ ரெண்டு மணியோ “நிறைகுட” மாக வந்து இறங்குவார் என்று கேள்வி.  செபாஸ்டியனுக்கு நிறையத்தெரியும்.  பாதிதான் சொல்வான்.   நான் ‘பைக்’ கில் ஒரு மூன்று கிலோமீட்டர் பயணித்து பல்லாவரம் ஸ்டேஷனில் ‘ஸ்டாண்ட்’டில் போட்டுவிட்டு மின்சார ரயிலைப் பிடித்து ‘பீச்’சில் இறங்குவேன்.   ஐந்து நிமிட நடைதான் அலுவலகம்.  பல்லாவரத்தில்  ‘ஸ்டாண்ட்’ பத்துமணி வரை தான்.  சின்னவர் கொடுமையால் ‘லேட்’டாகப்போய் இரவு மூன்று கிலோமீட்டர் பசியோடு நடந்து போயிருக்கிறேன்.  இதில் கொடுமை என்னவென்றால் காலையிலும் அதே மூன்று கிலோமீட்டர் நடந்து வரவேண்டும்.  சாப்பிட்டபின் நடந்துவரக் கஷ்டமாக இருக்கும்.  வண்டி இரவில் ‘ஸ்டாண்ட்’டில் இருந்தால் ‘டபுள்’ வாடகை வேறு. இந்தக் கொடுமை வாரத்தில் இரண்டு நாட்கள் எப்படியும் இருக்கும்.  கொஞ்ச நாட்கள் பழகிய பிறகு லூர்து சாரிடம் சொன்னேன்.  அது முதல் என்னை ஏழரைக்கு மேல் இருக்க விட மாட்டார்.  அவர் சின்னவர் போன பிறகுதான் போவார்.  இப்போதெல்லாம் இருபத்திநாலு மணிநேர ‘பார்க்கிங் ஸ்டாண்ட்’ கள் வந்திருக்கிறதென்றால் ‘சின்னவர்’கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதும் காரணமாக இருக்கலாம்.  இதென்ன. . .   வேகமாகத் திரும்பி வருகிறார் லூர்து சார்.  அவர் டேபிளில் இருந்த பைல்களையெல்லாம்  புரட்டிப்  புரட்டித் தேடுகிறார்.   என் டேபிளுக்கு வந்தவர் “ஒரு எல். சி யைக் காணோம்.  ஜெர்மன் பையர்.  கேல்ஷர் னு பேரு.  டாயிஷ் பேங்க் எல் சி எங்க வெச்சேன்னு தெரியல.  கொஞ்சம் பாக்க முடியுமா?” என்றார்.  முகமெல்லாம் வியர்த்து பதட்டமாக இருந்தார்.    “சார்,என் டேபிளில்இருக்கிற  பைல்களைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நான் தினந்தோறும் உபயோகிப்பவை.  ஒங்க திருப்திக்கு வேணும்னா பாத்துருங்க . எல் சி பைலைக் குடுங்க. . பாத்துர்றேன்” என்றேன்.  ஒவ்வொரு பேப்பராகப் பார்த்தாயிற்று.  அதில் இல்லை.              

நான் சேர்ந்த புதிதில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், லூர்து சாருக்கு சிஷ்யப்பிள்ளையாகத்தான் சேர்ந்தேன்.  எங்களுடைய கம்பெனிக்கு லாப சதவீதம் குறைவுதான்.  செலவைக்குறைத்துதான் லாபத்தை அதிகரிக்க முடியும்.  கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர் காலமான பின் கம்பெனியின் லாபம் குறையத்தொடங்கியது.  அப்போது கொள்முதல் பிரிவின் தலைவராக இருந்தவர் செய்த பெரிய கொள்ளையை அம்பலப்படுத்தியவர் லூர்து சார்தான்.  அதிலிருந்து அவர்தான் கொள்முதல் பிரிவின் தலைவர்.  முக்கிய ஆவணங்கள் கையிருப்பும் அவர் பொறுப்பே.  அவருடைய பேச்சுத் திறன், விற்பனைப் பிரதிநிதிகளுடன் நைச்சியமாகப் பேசி படியவைக்கும் திறன், பிரச்சினைகளை, மனிதர்களை அணுகுகிறவிதம் என்று அவரிடம் இருந்து நான் கற்ற விஷயங்கள்தான் என் பின்பணிக்  காலங்களில் நான் பல சரியான வியாபாரசம்பந்தமான முடிவுகள் எடுக்கக் காரணமாக இருந்தன.  நன்றாக ஞாபகம் இருக்கிறது.  நான் பணியில் சேர்ந்த அன்று லூர்து சார் லீவு.  திருவண்ணாமலைக்கு கிரிவலம் போயிருக்கிறார் என்றார்கள்.  எனக்குக் குழப்பமாக இருந்தது.  ‘எக்ஸ்போர்ட்’ வெங்கடாத்ரிதான் சொன்னார்.  ‘உன்னையும் என்னையும் விட பெரிய ஹிண்டுயா அவன், மெட்ராஸில சுத்துப்பட்டு கிராமங்கள்ல என்னென்ன கோயில் இருக்கோ அத்தனையும் தெரியும் அவனுக்கு. நவகிரக பரிகாரத்தலம் என்னென்ன, சரியாச் சொல்வான்.  ஒண்ணு தெரியுமா? இந்தத் தொண்டை மண்டலத்தில் அவன் பார்க்காத சிவன் கோயிலே அநேகமா கிடையாது. . லீவா இருந்தா அவன் பைக்கை எடுத்துண்டு எதோ ஒரு சிவன் கோயிலுக்குக் கெளம்பிருவான். . ‘ என்று ‘இன்ட்ரோ’ குடுத்து என் ஆர்வத்தைக் கிளறிவிட்டிருந்தார்.    

வெங்கடாத்ரி மறைந்த எம். டி கம்பெனி ஆரம்பித்ததிலிருந்து இருப்பவர்.  காஞ்சீபுரத்தைச் சேர்ந்த வைணவர்.  நல்ல சிவப்பு.  நெற்றியில் ஸ்ரீசூர்ணம் மற்றும் மூக்குக்கு அடியில் கிடைமட்டமாகப் போடப்பட்ட இன்னொரு ஸ்ரீசூர்ணம் – அதாவது வெத்திலை போட்டுப்போட்டு வெத்திலைச்சாறு ஊறிஊறி லேசாக ஒரு பளபளப்பைக் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு மெல்லிய செம்பிளவு.  வெளிநாட்டுப் பண வர்த்தகத்திலோ, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சம்பந்தமான ஆவணங்கள் தயார் செய்வதிலோ ஒரு ‘மேதை’ என்பார் லூர்து சார்.  முதல் பார்வைக்கு சற்று கடுமையானவர் போலிருப்பார்.  அதீத நகைச்சுவை உணர்வு கொண்டவர்.  அவரிடம் நன்றாகப் பேச ஆரம்பித்த பிறகு சின்னவரைப் பற்றிக் கேட்டேன்.  ‘எப்பவுமே இப்பிடித்தானா சார்’ என்று.  ‘ஆமாமா. . . எப்பவும் ‘ஷூ’வுக்குள்ள ஒரு எறும்பு கடிச்சுண்டே இருக்கறமாதிரிதான் இருக்கும் அவன் மொகம், அவன் அப்பனை மாதிரி.  ஆனா எம். டி. புத்திசாலி.  இவன் அவ்வளவு போறாது. . . முசுடு வேற. . . பெரியவன் நேர்மாறு. . .  அநியாயத்துக்கு நல்லவன். . ‘ அப்போது பக்கத்திலிருந்த லூர்து சார் ‘ஒருவேளை அப்பாவ மாதிரியே மூலக்கடுப்போ என்னவோ. . .  ‘ என்றார்.  ‘ஆண் மூலம் அரசாளும் சார். . ‘ என்றேன்.  ‘பலே ஆளுயா. . ஒன் சிஷ்யன். .  ‘ என்று சத்தம் போட்டுச் சிரித்தார் வெங்கடாத்ரி.  “என்னய்யா, சின்னவர் வடபழனிப் பக்கம் அடிக்கடி போறாராமே” என்று யாரோ கேட்க,  நமுட்டுச் சிரிப்போடு ‘நம்ம என்னத்தைக் கண்டோம்’ என்பார்.  கேட்பவர்கள் காதில் ‘அம்மணத்தக் கண்டோம்’ என்றுதான் கேட்கும்.  அந்த நமுட்டுச் சிரிப்புக்குக் காரணம் அவர் அப்படித்தான் சொல்லியிருப்பார்.  தாம்பரம் லோக்கல்  ‘எலக்ட்ரிக் ட்ரைனி’ல் நான் பல்லாவரத்தில் ஏறுவேன்.  அவர் பழவந்தாங்கலில்.    

லூர்து சாருக்கு சுமார் அறுபது வயதிருக்கும்.  சற்றே ஒரு செவ்விந்தியச் சிவப்பு.  களையான சிரித்த முகம். . “உன் வயசு என் எக்ஸ்பீரியன்ஸ்” என்றெல்லாம் அலட்டிக்கொள்ளத் தெரியாதவர்.  காலையும், மாலையும் ஆபீசுக்குக் கீழே இருக்கிற நட்ராஜ் ஹோட்டலில் ஒரு காப்பி, வடை.   இருவரும்தான் போவோம்.  ஒருமுறை என்னோடு தனியாகப் பேசிக் கொண்டிருந்தபொழுது ஒரு ‘சப்ளயர்’ பெயரைச் சொல்லி ‘ராயபுரம் மார்க்கெட் ‘சி ஐ ஸ்க்ராப்’ ரேட் பத்தி என் கிட்டையே கதை விட்றான். . . ‘ என்று ஒரு கெட்டவார்த்தையைச் சொன்ன போதுதான் அவரும் மதுரை என்றே தெரியவந்தது.   முன் வழுக்கை.  தலையில் லேசாகக் காப்பி சிந்தியது போல ஒரு மச்சம் இருக்கும்.  “ரஷ்யன் ப்ரெசிடெண்ட் கோர்பச்சேவ் மாதிரியே இருக்கீங்க சார். . ” என்பேன்.  சிரித்துக்கொள்வார்.  இலக்கியத்திலும் ஈடுபாடு உண்டு.  எங்களின் பரஸ்பர ஈர்ப்புக்கு அது இன்னொரு காரணம்.  அவருக்குப் மிகவும் பிடித்த எழுத்தாளர் நா. பா.  அவருடைய இரண்டாவது பையனுக்கு அரவிந்தன் (‘குறிஞ்சி மலர்’ கதாநாயகன்) என்று பெயர் வைத்ததும் அதன் காரணமாகத்தான். ஆண்மைத்தனம் அதிகமான எஸ்டி(yezdi) ஜாவா பைக்கில் (நம்மவர் படத்துல கமல் ஓட்டுவாரே) தான் ஆபிஸுக்கு வருவார் லூர்து சார்.  ‘டட் டர்ரட் டர்ரட் டர்ரட்’ என்று அதன் எஞ்சின் ஒலியே தனித்துவமானது.  ஜெமினி ரசிகர்.  தி. மு. க அனுதாபி.  நானும் சரி, அவரும் சரி கல்யாணம், எழவு, சாமி கும்பிடு என்று ஏதோ ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு மதுரைக்கு எப்படியும் வருடத்துக்கு இருமுறையாவது போய்விடுவோம்.  போவதற்கு முன்பும், போய்வந்த பின்பும் அதைப் பற்றிய பேச்சாகத்தான் இருக்கும்.  

“பர்மா ஷெல்” கம்பெனியில் வெள்ளைக்காரனிடம் வேலை பார்த்ததைப் பெருமையாகச் சொல்வார்.  “அவன் அவன்தாம்பா. . . ”  பிள்ளைகளை அண்டியிருக்கப் பிடிக்காமல்தான் பணி ஒய்வு பெற்ற பிறகும் இங்கு வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.  அவர் பார்க்கிற வேலைக்கு சம்பளம் குறைவுதான்.  சொன்னால் “வேறென்ன பண்ணைச் சொல்ற. . ஏதோ இந்த மட்டுக்கு குடுக்குறானே. . .  ” என்பார்.  நான் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலிருந்தே கடந்த ஒரு வருடமாக உணவு இடைவேளையில் லூர்து சாருடன்தான் சாப்பிடுகிறேன்.  “என்னப்பா. . . இன்னும்கொஞ்சம் காய் போட்டுக்க. . உனக்காகத்தான் நிறையக்கொண்டுவரேன்.  என்ன சாப்புடுறீங்க யங்ஸ்டர்ஸ் . .  ” என்பார்.  அவர் மனைவி அவ்வளவு பிரமாதமாக சமைத்திருப்பார்.  சாப்பிட்ட பின் “தாழ வரூ” என்பார்.  நாலாவது மாடியில் அலுவலகம்.  கீழே இறங்கி முக்கு கடை வரை போய் வருவோம்.  வேலை இருந்தால் மறுத்துவிடுவேன்.  ஒரு “தம்” போடுவார்.  “இப்பல்லாம் யங்ஸ்டர்ஸ் எவ்வளவோ பரவால்லப்பா. . . .  . . எங்க காலத்திலெல்லாம் ரொம்ப மோசம்” என்று எப்படியெல்லாம் மோசம் என்று கதை கதையாகச் சொல்வார்.  பணத்தின் பரிணாம வளர்ச்சி – சல்லி, தம்பிடியிலிருந்து ரூபா, அணா, பைசா . . . திராவிடக்கட்சிகளின் வளர்ச்சி, காங்கிரசின் வீழ்ச்சி, அந்தக் கால பிரமுகர்களின் வரலாறு, கிசு கிசு – ஒரு பழைய சினிமா முதலாளியை “வாயர்” என்பார்.  அதில் சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரைக் கேட்டதும் ஆடிப்போய்விட்டேன்.  ‘என்ன பண்றது எனக்கும் பேவரிட் தான், முதலாளிக்கும் அவதான்’பேவரிட்” என்றார் சிரித்துக்கொண்டே சும்மா விடாதீங்க சார். . என்றால் அத்தனையும் உண்மை என்பார்.  ரொம்ப அந்தரங்கமான விஷயங்களையும் பகிர்ந்து கொள்வார்.  திடீரென்று நினைத்துக்கொண்டாற்போல எர்ரபாலு செட்டி தெரு, தம்பு செட்டி தெரு, லிங்கி செட்டி தெரு, கொத்தவால் சாவடி, அண்ணா பிள்ளை தெரு, நைனியப்ப நாயக்கன் தெரு என்று ஒரு ரவுண்டு வருவோம்.  ஒரு முறை பவளக்காரத் தெரு(யூதர்கள் வசித்த பகுதி) வழியாகச் சென்று முன்பு ‘ப்ளாக் டவுன்’ என்று சொல்லப்பட்ட பகுதியில் இருக்கும் ‘மாடி பூங்கா’ விற்கு போயிருக்கிறோம்.  ‘1911லதான் ஐந்தாம் ஜார்ஜ் முடிசூட்டுவிழாவின் போதுதான் ‘ப்ளாக் டவுன்’ பேர மாத்தி ‘ஜார்ஜ் டவுன்’ன்னு வெச்சான்’ என்பார் லூர்து சார்.   

லூர்து சாரின் அப்பா பெயர் பரமன்.  தென்னக ரயில்வேயில் ஒரு வெள்ளைக்கார ஆஃபீசருக்கு சமையல்காரராக இருந்தவர்.  ஒரு ஆங்கிலோ இந்திய விதவையைத் திருமணம் செய்தவர்.  லூர்து சாரின் சிறுவயதிலேயே அவருடைய தாயும் தந்தையும் இறந்து விட அத்தையிடம் வளர்ந்தார்.  அவரை ஒரு இந்துவாகவே வளர்த்த அத்தை தன்னுடைய பெண்ணையே திருமணமும் செய்து வைத்து விட்டார்.   ஆனால், தனது தந்தை மதம் மாறியது குறித்து அவருக்கு கடுமையான விமர்சனம் உண்டு.  ‘ரொட்டிக்கும் சாப்பாட்டுக்கும் விட்டுக்கொடுக்கக் கூடியவரா கடவுள்?’ என்றார்.  நான் ‘சார், அன்னைக்கு அந்த ரொட்டி இல்லேன்னா இன்னக்கி நீங்க இல்ல’ என்றேன்.  ‘அந்த விஸ்வாசத்துக்குத்தான் பேர மாத்திக்காம இருக்கேன்’ என்பார்.  உங்களுக்கு எப்படி சைவத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது என்று கேட்டபோது, மதுரை எஸ். எஸ். காலனியில் தன் அத்தையின் வீட்டருகே இருந்த சாமி ஓதுவார் தான் என்றார். .  ‘மாதர் பிறைக்கண்ணியானை. . . .  ‘ பாடுவார் பாருங்க.  கண்ணுல தண்ணி வந்துரும். . ‘ என்பார்.  ‘பாடுங்க சார். . ‘  என்றேன்.  பாட ஆரம்பித்து வரிகள் சரியாகத் தெரியாமல் தத்தகாரத்துக்கு மாறிக்கொண்டார்.  நான் தொடர்ந்து பாடவாரம்பித்தேன்.  நான் பாட ஆரம்பித்தவுடன் கையிலிருந்த சிகரெட்டை கீழே போட்டு மிதித்து விட்டார்.  பாட்டு முடியும்வரை என்னைப் பார்த்துக்கொண்டிருந்தவர் ‘அமேஸிங். . . .  அமேஸிங். . .  ‘அடடா. . . அப்பிடியே இருக்கே. .  நீ பாடுவியா? இத்தனை நாளா தெரியாம போச்சே. . .   நீ என்ன பண்ற? வர ஞாயித்துக்கிழமை வீட்டுக்கு வர்ற, ரெகார்ட் பண்ணி வெச்சுக்கணும். . . . அப்பிடியே இருக்கே. . .  ‘ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.   பாட்டு முறையாக் காத்துக்கிட்டதா?  என்றார்.  சும்மா என் அம்மா பாட்றதைக் கேட்டு கத்துக்கிட்டதுதான், இந்தத் தேவாரம் தெற்காடிவீதியில் தேவாரவகுப்பில் சுந்தர ஓதுவார் என்பவர் அம்மாவுக்கு சொல்லிக்கொடுத்தது என்றேன். ‘அதான். . . ‘ என்றார் இரண்டு முறை.  ஆபீசை வீட்டுக் கிளம்பும்போதும் ‘வர்ற ஞாயிற்றுக்கிழமை மறந்துராத. . . சாய்ங்காலம் நாலு மணி டிபன் காப்பி சாப்பிட்டுட்டு ரெகார்ட் பண்றோம் ‘ என்றார். 

அந்த ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் மயிலாப்பூரில் நடுத்தெருவில் உள்ள அவர் வீட்டிற்குச் சென்று பாடி ஒலிநாடாவில் பதிவுசெய்து கொடுத்தேன்.  என்னவோ அப்பரே பாட வந்ததுபோல் உபச்சாரம் செய்தார்கள் அவர் வீட்டில்.  ஒரு தனியறையில் தான் ஒலிப்பதிவு நடந்தது.  பாடி முடிந்ததும் சற்று நேரம் அமைதியாக இருந்தார்.  என்னைப்பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து ‘ஆத்மார்த்தமா பாடினப்பா…’ என்றார்.  திரும்பத் திரும்ப இரண்டு முறை ஒலிக்கச் செய்தார்.   ‘சார், இது இலவச இணைப்பு.  பாடும் போது, சாரி பேசும் போது சிரிக்கக் கூடாது’ என்ற கட்டளையோடு தி. மு. க.  தலைவரின் கர கர (மாவு மிஷின் குரல் என்பார் தி. ஜானகிராமன்) குரலிலும் அதே மாதர் பிறைக்கண்ணியானை  பதிவு செய்து கொடுத்தேன்.  விழுந்து விழுந்து சிரித்தார்.  அவர் அப்படிச் சிரித்துப் பார்த்ததேயில்லை.  அவர் சிரிப்பும் கூட ரெகார்ட் ஆகியிருந்தது.  தோசையும், காப்பியும் கொடுத்து உபசரித்தார் அவர் மனைவி. சற்று நேரத்தில் வங்கி அதிகாரியாக வேலை செய்யும் அவர் பையன் பரமேஸ்வரன் அன்று அப்பாவைப் பார்க்க குடும்பத்தோடு வந்தார்.  பேசிக் கொண்டிருந்ததோம்.  மதுரைக்கு மாற்றல் கேட்டு முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும், கிடைத்தால் அப்பாவையும், அம்மாவையும் அழைத்துச் செல்லப் போவதாகவும் சொன்னார்.  அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அவர் பார்க்காதவண்ணம் உதட்டைப் பிதுக்கித் தலையை ஆட்டினார் லூர்து சார் ‘அதெல்லாம் போகமாட்டோம்’ என்பது போல. 

அவர் வீட்டில் யார் யார் எப்படி என்று ஒன்று விடாமல் பகிர்ந்துகொள்வார் கேட்காமலேயே.   அவர் பழைய கம்பெனியில் பென்ஷன் கிடையாது.  எனவே இந்த வேலையும், சம்பளமும் அவருக்கு முக்கியம்.  அதை நன்றாகவே புரிந்துகொண்டு “வேலை வாங்கி” க் கொண்டிருந்தனர் இந்த நிறுவன முதலாளிகள்.  ஒரு நாள் திடீரென்று காலை பதினோரு மணிக்கு லூர்து சார் அவசரமாகக் கிளம்பி வீட்டுக்குச் சென்றார்.  அன்று மதியம் ராஜேஷ் என்னை அழைத்தார்.  “லூர்து சார் ஒய்ப்க்கு உடம்பு சரியில்ல.  வர ஒரு வாரம் ஆகலாம்.  வெங்கடாத்ரியை கைட் பண்ண சொல்றேன்.  அவர் வர வரைக்கும் ‘பர்சேச’ பாத்துக்க ” என்றார்.  பத்து நாள் கழித்து இன்று தான் வந்தார் லூர்து சார்.  ஆள் பாதியாக இருந்தார்.  உணவு இடைவேளையில்  கீழே போகும் போதுதான் கேட்க முடிந்தது.  “கேன்சர்” என்றார்.  இதைச் சொல்லும்போது அவர் கண்கள் கலங்கி குரல் உடைந்துவிட்டது.  “சாப்பாட்டுலயே வித்யாசம் தெரிஞ்சிருக்குமே  உனக்கு” என்றார் விசும்பலுக்கிடையே.  “அவ சமைச்சு ஒரு மாசம் ஆச்சு.  நான் தான் கூட்டிட்டுப்போறேன் கீமோவுக்கு” என்றார்.  நான் கையைப் பிடித்துக் கொண்டேன்.  

சமீப காலமாக அவர் வேலையில் தவறுகள் அதிகரித்திருந்ததை நினைத்துக்கொண்டேன்.  இப்போது இந்த எல் சி பிரச்சினை வேறு.  இந்த எல் சி நாளை வரைதான் செல்லுபடியாகும்.  நாளை இந்த எல் சி வங்கியில் பரிவர்த்தனை செய்யப்பட்டு கிடைக்கக் கூடிய பணத்தில்தான் பேக்டரி தொழிலாளர்களுக்கு மற்றும் எங்களுக்கு சம்பளம்.  எதாவது செய்ய வேண்டும்.  சீட்டுக்கு வந்தவுடன் “சார், வேறு எதாவது எல் சி பைல் இருக்கிறதா? இது ஒன்றுதானா?” என்று கேட்டேன்.  என்ன நினைத்தாரோ உடனே பைல் ‘கேபினட்’ ஐப் பார்த்து ஓடினார் லூர்து சார்.  பழைய எல் சி பைலை எடுத்துப் பார்த்தார்.  முதல் பேப்பர் எல் ஜி எக்ஸ்போர்ட்ஸ் பர்சேஸ் ஆர்டர்.  இதைப் பார்த்ததும் நான் சார் கொஞ்சம் பொறுங்க. . . என்று சொல்லி விட்டு  வேகமாக சின்னவர் கேபினை நோக்கி அனேகமாக ஓடினேன். நான் நினைப்பது மட்டும் சரியாக இருந்தால். . . .  “சார். . கொஞ்சம் பெரியவர் ரூம் கீ வேணும். . ஒரு டவுட்” என்றேன் தைரியமாக.  இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும்.  நான் இந்தக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்ததே என் மாமாவின் சிபாரிசில் தான்.  அவர் அந்த ஏரியா லேபர் இன்ஸ்பெக்டர்.  போன முறை ஆய்வின்போது பெரிய ஆபிசர் எக்கச்சக்கமாக பைன் போட்டுவிட இவர்தான் பார்த்து பேசி லட்சக் கணக்கில் இருந்த தண்டத்தை ஆயிரக்கணக்கில் கொண்டு வந்தார்.  அப்போது கூட “யோவ். . எல் சி மட்டும் கிடைக்கல. . . நான் மனுஷனா இருக்க மாட்டேன் பாத்துக்க. . .  ” என்று விரலை ஆட்டிக்கொண்டேதான் சாவியைத் தூக்கிப்போட்டார் சின்னவர்.  

“நீ என்னைக்கி இருந்த” என்று நினைத்துக் கொண்டு வேகமாகப் போய் பெரியவர் ரூமைத் திறந்து பார்த்தால் நான் எதிர் பார்த்தது போலவே டேபிளின் மேலேயே இருந்தது பர்சேஸ் ஆர்டர் பைல்.  இதயம் துடிக்கும் ஒலியைக் காதில் கேட்டுக்கொண்டே புரட்டினேன்.  முதல் பேப்பரே  கேல்ஷர் எல் சி தான்.  விஷயம் இதுதான்.  லூர்து சார் அவசரத்தில்  பர்சேஸ் ஆர்டரை பழைய எல் சி பைலிலும் எல் சி யை  பர்சேஸ் ஆர்டர் பைலிலும் மாற்றி பைல் செய்து விட்டார்.  அன்று மனைவிக்கு உடம்பு சரிஇல்லையென்று போன பிறகு நான்தான் லூர்து சார் டேபிலிருந்து பெரியவர் கேட்கிறார் என்று செபாஸ்டியனிடம் பர்சேஸ் ஆர்டர் பைலைக் கொடுத்தனுப்பினேன்.  அன்றுதான் அவர் ஜெர்மனி சென்றார்  கிளம்பும் வரை அவ்ருக்கு பைல் வேண்டியிருந்ததால் அவர் கேபினிலேயே பைல் தங்கி விட்டது.  திரும்பத் திரும்ப பார்த்து கால்ஷர் எல் சி தானே என்று உறுதி செய்து கொண்ட பிறகு நேரே சின்னவர் கேபினுக்குச் சென்று நான்தான் மாற்றி பைல் பண்ணிவிட்டேன் என்று “உண்மை” யை ஒத்துக் கொண்டேன்.  கரகாட்டக்காரன் கவுண்டமணி முன்னால் நிற்கும் செந்தில் போல பாவமாக நின்று கொண்டு காதைத் திறந்து காத்துக் கொண்டிருந்தேன். . என்ன நினைத்தாரோ  “சரி. . . வெங்கடாத்ரி கிட்ட கொடுத்து டாக்குமெண்டை ரெடி பண்ணு, நாளைக்கு முதல் வேலையா போகணும். . . ”  என்பதோடு பொசுக்கென்று  முடித்துக்கொண்டார்.  சந்தோஷமான ஏமாற்றம்.  லூர்து சாரைக் காப்பாற்றிய சந்தோஷம் கூடுதலாக எனக்கு.  எவ்வளவு மறுத்தும் கேட்காமல் டிபன்,காப்பி  வாங்கிக்கொடுத்தார் லூர்து சார். 

உடம்பில் ஏறிய படிச்சூடு மனதையும் இளக்கி ஒரு மோன நிலையைக் கிளர்த்தியிருந்தது.  பெரிய புறாக்கூட்டம் ஒன்று ராஜகோபுரம் தெற்குகோபுரம் என்று ஒரு பெரிய வட்டமாகப் படபடத்துக்கொண்டிருந்தது.  காதை நிறைத்த ஓதுவார் தேவாரம்.  இந்தத் தருணமே என்றுமாக உறைந்து போய் விடாதா என்றிருந்தது. காலம் சப்பிப்போட்ட மாங்கொட்டையாக உட்கார்ந்திருந்தார் லூர்து சார்.  தலையில் காப்பிச் சிதறல் டிகாக்ஷன் சிதறலாக மாறியிருந்தது.  தியானத்திலிருந்து மெதுவாக கண்ணைத் திறந்தவுடன் மெதுவாகக் கூப்பிட்டு நான் யார் தெரிகிறதா என்று கேட்டேன்.  அவருக்கு அடையாளம் தெரியவில்லை.  நான் நாங்கள் வேலை செய்த கம்பெனி பெயரைச் சொன்னேன்.  என் பெயரைச் சத்தம் போட்டுச் சொல்லி கையைப் பிடித்துக்கொண்டார்.  அன்றைக்கு பெரியவர் கேபினிலிருந்து எல் சி யை எடுத்துக்கொண்டுவந்து அவர் டேபிளில் போட்டேனே அப்போது பிடித்த அதே பிடி.  நான் நல்ல வேலையில் இருப்பது பற்றி அவருக்கு ரொம்ப சந்தோஷம்.  “சார், அஞ்சு நிமிஷம் முன்னாலதான் உங்களைப்பத்தி நினைச்சேன்னா நம்புவீங்களா?” என்றேன்.  “நிச்சயமா நம்புவேன்.  நான் உங்களைப்பத்தி நினைக்காத நாளே கிடையாது.  அதை நீங்க நம்புவீங்கன்னு நினைக்கிறேன். ” என்றார்.  சந்தோஷமாக இருந்தது.   என்ன சார், தனியா? என்றேன்.  வீடு அஞ்சு நிமிஷ நடைதான் என்றார்.  தினம் இந்த நேரத்திற்கு வந்துவிடுவேன் என்றார்.  என் நல்ல நேரத்தை வியந்து கொண்டேன்.  

நான் பழைய கம்பெனியில் வேலைசெய்தபோதே அவர் மனைவி இறந்துவிட்டார்.  அந்த சம்பவம் நடந்து ஆறேழு மாதங்களில் எனக்கு வேறு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்துப் போய் விட்டேன்.  அப்போதெல்லாம் செல் போன் (RPG யின் செங்கல் சைஸ் செல் போனும், பேஜரும் (குறுஞ்செய்தி மாத்திரம் அனுப்பும் கருவி) அப்போது தான் வந்திருந்தன) கிடையாதாகையால் இடையில் என்ன நடந்ததென்றே தெரியாது.  அதற்குப் பிறகு எட்டு வருடம் அங்கு வேலை பார்த்திருக்கிறார் லூர்து சார். “ஏன் சார், “மஸோக்கிஸ்ட்”டாவே ஆக்கிட்டாங்களா உங்களை?” என்றேன்.  “சின்னவரை நினைச்சுச் சொல்றீங்கன்னு நினைக்கிறேன்.  நீங்க போன கொஞ்ச நாள்ளலாம் அவர் குடிச்சுட்டு “ஆக்சிடென்ட்” பண்ணி ரெண்டு பேரை கொன்னுட்டாரு.  அரெஸ்ட் பண்ணி உள்ளே வெச்சுட்டாங்க  ரெண்டு  வருஷம்.  அதற்கப்புறம் அவர் ஆபிஸ் வர்ரதில்லை.  எனக்கு பெரியவரோட ப்ரோப்ளமே கிடையாதே.  என்னை விட்றதுக்கு அவருக்கும் இஷ்டமில்லை.  பையனுக்கு மதுரைக்கு மாற்றல் ஆனதுனால எதுவும் சொல்ல முடியல.  போறப்ப அவரோட ரோலக்ஸ் வாட்சை எனக்கு கொடுத்துட்டாரு. நான்  பையனுக்குக் கொடுத்துட்டேன்” என்றார்.  சும்மாவா. . . மூர்த்தி நாயனார் மாதிரி அரைச்சுப் பூசியிருக்கீங்களே. . . . என்றேன்.  

‘சின்னவர் விஷயத்தைக் கேட்டா இத்தனை வருஷத்துக்கப்புறமும் சந்தோஷமாத்தான் இருக்குன்னு நினைச்சுப்பாத்தா வருத்தமா இருக்கு சார்’ என்றேன்.  “நீங்க மாறவே இல்லை” என்று சிரித்துக்கொண்டவர் “புவர் பெல்லோ,விடுங்க” என்றார்.  வங்கியில் வேலைசெய்யும் பெரிய பையனின் வீட்டில்தான் இருக்கிறார். பேரப்பிள்ளைகளை டியூஷனுக்கு கொண்டுபோய் விடுவது,  கடைகளுக்குப் போய் வருவது என்று எப்போதும் நேரம் சரியாய் இருப்பதாய்க் கூறினார்.  “ஓடியாடி வேலை செய்கிற பெருசுங்களுக்கு என்னைக்கும் மதிப்புண்டு பாத்துக்கங்க. . . . என்ன, எவ்வளவோ புக்ஸ் சொல்வீங்கள்ல அதெல்லாம் படிக்க இப்பத்தான் நேரம் கெடைச்சிருக்கு” என்றார்.  பழைய கதைகளைக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.  கதைகளைப் படிக்க சில “வெப் சைட்”களை அறிமுகம் செய்துவைத்தேன்.  வாட்ஸ் அப்பில் சில சந்தேகங்களைக் கேட்டார்.  சொல்லிக்கொடுத்தேன். ‘வீபூதிப் பிள்ளையாருக்கு எதித்தாப்பல இங்க ஒரு கிளிக்கூண்டு இருந்ததே, எடுத்துட்டாங்களா?’ என்றேன்.  ‘அடேயப்பா, அதாச்சு கொள்ள வருஷம்.  அம்மன் கைல நின்னாலும் நின்னுச்சு, ஒரு பத்து பதினஞ்சு கிளியைப் பிடிச்சு கூண்டுல போட்டுட்டாய்ங்க, நல்ல வேளையா புது ‘தக்கார்’ எல்லாத்தையும் வெளில விட்டுட்டாரு. . . ‘ என்றார் படியேறிக்கொண்டே.  “சார், நீங்க மதுரைல கிளி பாத்துருக்கீங்களா, நான் ஒண்ணே ஒண்ணு கூட பாத்ததில்லை.  நான் படிச்சதெல்லாம் பக்கத்தில கிராமங்களிலேதான்.  அங்க கூட” என்றேன்.  ‘அட, ஆமாம். . . . நானும் ஒண்ணும் பாத்ததில்லை.  நான் சென்னை மாதிரி எங்கயும் கிளிகளைப் பார்த்ததில்லை.  எழும்பூர் மியூசியம், லயோலா, கிறிஸ்டின் காலேஜ் கேம்பஸ்ல்லலாம் நீங்க பேசறதே கேக்காது.  அவ்வளவு சத்தம் போடும், குறிப்பா சாயங்காலம். ‘ என்றவர் 

“இங்க எங்கயோ குரங்கு சிற்பம் ஒண்ணு இருக்குன்னு சொல்லிருந்தீங்கள்ல” என்றார்.  “‘கிளியைப் பிடிச்சு கொரங்கு கைல குடுத்தாப்பல’ ன்ற பழமொழி ஞாபகம் வந்துச்சா என்ன?” என்றேன்.  ‘ஆச்சரியமா இருக்கு.  இந்த நிமிஷம் அதை நெனைச்சுதான் கேட்டேன்’ என்றார்.  நான் கோயில்களில் இருக்கும் சில அசங்கியமான சிற்பங்களைப் பற்றி எப்போதோ பேசிக்கொண்டிருந்த பொழுது மதுரைக் கோயிலில் ஒரேயொரு சிற்பம் ‘அந்த’ மாதிரி உண்டு என்று சொன்னது அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது.  அவர் ஞாபக சக்தியை வியந்து கொண்டே ‘என்னசார், ரொம்ப நாளாத் தேடுனீங்களோ?’ என்றேன்.  ‘அடச்சே, திடீர்னு ஞாபகம் வந்தது.  உங்க கிட்ட கேக்கறதுக்கென்ன. .  ‘ என்றார்.  ‘சார், முன்ன மாதிரி நீ வா போ ன்னே பேசுங்க சார். . ‘என்றேன்.  ‘எனக்கு இப்பிடி கூப்படறதுதான் வசதியா இருக்கு’ என்று விட்டார்.  அவர் கையைப் பிடித்து மெதுவாக அழைத்துக்கொண்டு சென்று காண்பித்தேன்.  ‘நாயக்கர்கள் வேலையாத்தான் இருக்கும்’ என்றார்.  

‘சரி, வீட்டுக்கு வரீங்க, டிபன் சாப்பிடுறீங்க, உங்களுக்கொரு ‘சர்ப்ரைஸ்’ இருக்கு’ என்றார்.  அவரிடம் ‘சார், வரேன் ஆனா நோ பார்மாலிட்டீஸ், காப்பி மட்டும் போதும்.  இங்க ஒரு ‘ரிசப்ஷன்’ (உண்மைதான்) இருக்கு.  கட்டாயம் போயாகணும் ஒரு வாரம் கழிச்சு ‘பாமிலியை’க் கூட்டிட்டு போறப்போ கட்டாயம் டிஃபனுக்கு வந்துர்றேன்’ என்றபடி மேலக்கோபுரம் வழியாக வெளியேறி, சித்திரை வீதியா இது? முன்னெல்லாம் கோயிலைச் சுற்றி உள்ள சித்திரை வீதிகள்  முழுவதும் ‘டூரிஸ்ட்’ (டெர்ரரிஸ்ட்?)களின் வாகனங்களாலும், அதன் மறைவில் அவர்கள் வெளியேற்றுகிற கழிவுகளின் கெடுமணத்தாலும் நிரம்பியிருக்கும்.  ‘அறுபதுகள்ல நாங்க கால்ல சாக்கக் கட்டிண்டு கோயில் சுவர் மேல ஏறி வேலைபாத்துருக்கோம்.  அப்பல்லாம் கூட இவ்வளவு மோசமில்லை’  என்பார் மின்சார வாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற பிச்சுமணி மாமா.  எனக்குத்தெரிந்து தொண்ணூறுகளிலும் அப்படித்தான் இருந்தது.  அங்கு வாகனங்கள் நிறுத்துவதை அடியோடு ஒழித்து, சித்திரை வீதி முழுவதும் வண்ணக் கற்கள் பதித்து, அதற்கடுத்தடுத்த தெருக்களையும் ஒரு வழிப் பாதையாக்கி,அல்லங்காடி, நாளங்காடி காய்கறி மொத்த வியாபாரத்தை பழங்காநத்தத்திற்கு மாற்றி, அந்த இடத்தை கோயிலுக்கு வரும் வாகனங்கள் நிறுத்துமிடமாகச் செய்து  . . . . இத்தனை காலமானாலும் இந்த மாற்றங்களைச் செய்தவரை நினைத்து எனக்கு ஆனந்தக்கண்ணீரே (கொஞ்சம்போல) வந்துவிட்டது. லூர்து சாரிடம் சொன்னேன்.  சிரித்துக் கொண்டே ‘நாங்களும் சுத்தமா இருப்போம்ல’ என்றார். கோபாலகொத்தன்தெரு திரும்பி தட்டாரச் சந்தில் நுழைந்தோம்.  முன்னெல்லாம் ஒரே மாடுகளாக, தெரு முழுதும் சாணியாக இருக்கும்.  அவைகளுக்கு நடுவே வாலால் கண்ணில் அடி வாங்கியும் வளைந்து வளைந்து ‘அசால்ட்டாக’ சைக்கிளோட்டிய லலிதாப் பெரியம்மா பையன் ராஜாவுடன்  ‘டபுள்ஸ்’ போனதை நினைத்துக்கொண்டேன்.  இப்போது சுத்தமாக இருந்தது. 

 ‘இதான் வீடு  உள்ள வாங்க’ என்றார்.  மூன்றாவது மாடியில் மூன்று அறைகள் கொண்ட பெரிய வீடு.  ‘லிப்ட்’ வசதியோடு.  ‘கோபுரம் தெரியணும்ங்கிறதுக்காகவே மேல வாங்கச் சொன்னேன்’ அவர் பையன் பொத்து பொத்தென்று சோபாவில் உட்கார்ந்திருந்தார்.  ‘பரமா, யார்னு சொல்லு பார்ப்போம்’ என்றார்.  சற்று நேரம் உற்றுப் பார்த்தவர் சிரித்துக்கொண்டே ‘மாதர்பிறைக்கண்ணியானை’ என்று ஆள்காட்டி விரலை என்னைநோக்கி நீட்டினார் சரியா? என்பது போல.  ‘வாங்க. . . உக்காருங்க’.  புஷ்பா குடிக்க தண்ணி குடும்மா. . . என்றார்.   ‘அந்தத் தேவாரம் நானும் தேடிப்பாத்தேன். . . அந்தப் பாணில எங்கயுமே கிடைக்கல. . . அது ‘யுனிக்’. ‘ என்றார் பரமேஸ்வரன்.  மேலும் ‘என் தம்பி பையன். . .  ‘ என்று ஏதோ சொல்ல வாயெடுத்தார்.  அதற்குள் லூர்து சார் ‘நாகஸ்வர வித்துவான்கள் சேதுராமன் பொன்னுசாமிபிள்ளையோட அம்மாதான உங்க அம்மாவோட குருன்னு சொன்னிங்க இல்ல’ என்றார்.  ‘இல்ல சார், பாட்டி’ என்றேன்.  பேசிக்கொண்டே அடுத்த அறைக்கு வந்தோம்.  

‘சேதுராமன் பொன்னுசாமி சகோதரர்களோட தாத்தா வித்துவான் பொன்னுசாமி பிள்ளை எவ்வளவு பெரிய  நாயனக்காரர் தெரியுமா? இவங்க ரெண்டு பேரும் இங்கதான் தெக்காடி வீதில தெனம் சாயங்காலம் வந்து அவங்க சங்கம்னு நினைக்கிறேன், அங்க வந்து ஒக்கார்ந்திருப்பாங்க.  ரொம்ப நாளா ‘லூகோடெர்மா’ வோட இருப்பாரே அவர்மட்டும்தான் வந்தாரு.  இப்ப அவரும் வர்ரதில்லை.  காலம் ஆகுதில்ல’  ‘வித்துவான் பொன்னுசாமி பிள்ளை சந்து எங்க இருக்குன்னு சொல்லுங்க?’ என்றார்.  ‘வடக்குமாசி வீதி கிருஷ்ணன் கோயில் பக்கத்தில’ என்றேன். ‘என்னை மாதிரியே தெருத்தெருவா சுத்தியிருக்கிருக்கிறீங்க’ என்றவர் திடீரென்று ஞாபகம் வந்தாற்போல் ‘அதே மாதிரி பொன்னுத்தாய்னு ஒரு நாகஸ்வரக் கலைஞர் இருந்தார்.  அவரையெல்லாம் சரியான முறையில் கௌரவிக்கல’ என்றார்.    பெரிய பையனிடம்’ குரு வீட்ல இருக்கானான்னு கூப்பிட்டுக் கேளு, இருந்தா skype ல வரச் சொல்லு’ என்றார்.  பேசிக்கொண்டே இன்னொரு அறைக்குள் நுழைந்தோம். 

சற்று நேரம் என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவர் மெதுவாக ‘என் ரெண்டாவது பையன் அரவிந்தன் அயர்லாந்தில டப்ளின்ல வேலைபாக்கப் போன எடத்தில ஒரு ‘ஐரிஷ்’காரிய கல்யாணம்  பண்ணிக்கிட்டான்’ என்றார்.  நான் தேங்காய்சீனிவாசன் பாணியில் ( நான் அவரோடு வேலை பார்த்த நாட்களில் குறிப்பாக ‘தாழ வரூ’ வில் அவரோடு தனியாகப் பேசும்போது பழைய நடிகர்களைப் போல ‘மிமிக்ரி’ செய்வதுண்டு) ‘சிவ சிவா’ என்று ரெண்டு கைகளாலும் காதைப் பொத்திக்கொண்டு ‘சட்டசட்டாங்கு. . . வரலாறு திரும்புகிறதா. . . ?’ என்றேன்.  லூர்து சார் சிரித்த சத்தத்தில் அவர் பையனே உள்ளே வந்து விட்டார்.  சிரிப்பை அடக்கிக்கொண்டு இருக்கானா? என்றார்.  ‘பைவ்’ மினிட்ஸ்ல வரேன்னான்’ என்றார்.  மடிக்கணிணியை  ‘ஆன்’ செய்தார்.  ‘அவ உங்களையும் என்னையும் விட பெரிய ‘சைவைட்’.  தன்னோட பேரையே ‘ஷிவாணி’ னு மாத்திக்கிட்டா.  ஒரு பையன்.  ஒரு பொண்ணு.  பையன் குருபரனைத்தான் இப்ப பாக்கப்போறோம்.  சற்று நேரத்தில் திரையில் ‘ஹலோ தாத்தா’ என்றபடி வந்தான் குரு.  என்னை அறிமுகப் படுத்தினார்.  பாட்டி இறந்தபோது தன்னுடைய துக்கத்தைக் கடக்க என்னுடைய நட்பு எவ்வளவு உதவியாக இருந்தது என்று ஆங்கிலமும் தமிழும் கலந்து சொன்னார்.  மதுரை,ஆங்கிலேந்திய, ஐரிஷ் கலந்த குரு கருகருவென்று தலைமுடியோடு மிக அழகாக இருந்தான்.  பத்து அல்லது பன்னிரெண்டு வயது இருக்கும்.  அந்நிய ஒலித்தாக்கம் இருந்தாலும் நன்றாகவே தமிழ் பேசினான்.  

‘சரி, ‘அங்கிள்’ உன்னோட ‘மாதர்பிறைக்கண்ணியானை’ கேக்கணுமாம்.  பாடுவியா?’ என்றவுடன் ‘ஷ்யூர்’ என்று தோளைக்குலுக்கியவன் லேசாகச் செருமிக்கொண்டு பாட ஆரம்பித்தான்.  அடுத்த மூன்று நிமிடங்கள் நான் இந்த உலகிலேயே இல்லை.  என்னால் நம்பவே முடியவில்லை.  சிறிய பாடல்தான்.  ஆனால் பாடல் முழுவதுமே கடினமான சங்கதிகள், சுருள் பிருகாக்கள், ஒரே ஒரு எழுத்தையே மடக்கி ஒலிக்கும் நுணுக்கங்கள் நிரம்பிய பாடல்.  அச்சு பிசகாமல் அனாயாசமாகப் பாடினான். .  பாடி முடித்தபின் அப்புறம்? என்பது போல் ஒரு சிரிப்பு சிரித்தான்.  பாட்டியை ஞாபகப்படுத்தும் சிரிப்பு.  எனக்கு. . .   நான் வேறு உலகத்தில் இருந்தேன்.   ‘I am so flabbergasted to say anything,Guru’ என்றும், பின் அவனுக்குத் தமிழ் தெரியும் என்று ஞாபகம் வந்தவுடன் ‘இந்த நாளை நான் என்றைக்கும் மறக்கமாட்டேன்’ என்றும் கூறினேன்.  ‘கண்ணைத் தொடைங்க’ என்று லூர்து சார் சொன்னபிறகுதான் நான் அழுத்திருந்ததே தெரியவந்தது.  ‘எப்படி சார் அது. .     பேசறப்ப இருக்கற ‘அக்ஸெண்ட்’ பாடும்போது இல்ல.  இவன் சுந்தர ஓதுவாரோட மறுபிறவிதான் சார். . . எனக்கு சந்தேகமே இல்லை. . . ‘ என்றேன்.  நீங்க ஒரு முறை மயிலாப்பூர் வீட்ல பாடி ரெகார்ட் பண்ணினோம், ஞாபகம் இருக்கா.  அதை ஆடியோ பைலா ‘கன்வெர்ட்’ பண்ணி அனுப்பிச்சேன்’ என்றார் லூர்து சார்.  ஷிவாணி அம்மையாரோடும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.  என்னை இந்த மாதிரி நிறையப்பாடி வலையேற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  மதுரை தெற்காடிவீதி சுந்தர ஓதுவார். . அம்மா. . . நான் . . National  panasonic டேப். . audiofile. . அயர்லாந்து சுந்தர ஓதுவார் குருபரன்….என்ற சைவத்தின் அயர்லாந்துப் பயணத்தில் நானும் ஒரு கண்ணி என்று நினைக்கும்போது இந்தப்பிறவிக்கிது போதும் என்றே தோன்றியது.  என்றைக்குமில்லாத திருநாளாக அம்மைக்கு முன்னால் ஈசனை தரிசித்ததையும், அதன் காரணமாகவே லூர்து சாரைப் பார்க்க முடிந்ததையும் நினைத்துக்கொண்டேன் ‘அங்க ஒரு மாமிட்ட ‘கர்னாடிக்’ கத்துக்கிட்டிருக்கான் ‘யூ டியூப்’ லயும் ‘அப்லோட்’ பண்ணிருக்குறான். இருந்தாலும் நீங்க அவன் பாடிக் கேக்கணுன்னு எனக்கு ஆசை’ என்றார்.  ‘தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! சரியாத்தான் சொல்லிருக்காங்க’ என்றேன்.  சிரித்துக்கொண்டார் லூர்து சார்.  சற்று நேரத்தில் சூடான காப்பி வந்தது.  அப்புறம் சார், ‘தலைவரோ’ட பாட்டு இருக்குதா? என்றேன்.  ‘இந்தோ’ எனக்கு பெரிய ‘ஸ்ட்ரெஸ் பஸ்டர்’ அது, என்று சிரித்துக் கொண்டே ஒலிக்கச் செய்தார்.  வசன கவிதையாகத்தான் பாடியிருப்பார்.  அந்தக் குரலிலும் “மாதர்பிறைக்கண்ணியானை” அழகாகவே ஒலித்தது.  ரெண்டு பாட்டுக்களையும் ‘வாட்ஸப்’ல் மறக்காமல் வாங்கிக்கொண்டேன்.  ஏன்னா. . . லூர்து சார் சிரிப்பு அதில இருக்கு. 

2 Replies to “லூர்து நாயனார்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.