விண்வெளி மருத்துவம்

1961ல் யூரி ககாரின் வெற்றிகரமாக விண்வெளியில் சென்று திரும்பிய பின், இது வரை 560க்கும் மேலானவர்கள் அப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்..அவர்கள் எல்லோருமே இப்பயணத்திற்காக தங்களை சிறந்த முறையில் தயார் செயதுகொண்டவர்கள் மிகக் கடினமான தேர்வு போட்டிகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள. மிகச் சிறந்த உடல் நிலையை கொண்டவர்கள். தற்சமயம் சர்வதேச விண்வெளி நிலயத்திற்கு பிரயாணம் செல்லும் விண்வெளி வீரர்களும் மற்ற பயணிகளும் தேசிய வானூர்தி விண்வெளி நிர்வாகத்தினாலோ அல்லதுஅதைப் போன்ற மற்ற நாடுகளின் நிர்வாகத்தினுடைய மருத்துவ சான்றிற்குரிய தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்

சமீபத்தில் வெளிவந்துள்ள தனியாரின் விண்வெளிப்பயண வர்த்தகங்கள் பணவசதி மிகுந்த உடல் வசதி குறைந்த நபர்களையும் விண்வெளிப் பயணத்திற்கு ஈர்க்கும் வாய்ப்பு உள்ளது இந்நிறுவனங்கள் அவர்களுடைய மருத்துவ இலாக்காக்களின் உதவியையோ அல்லது பயணம் செய்ய விழைவோரின் சொந்த மருத்துவர்களின் சான்றிதழை பெற முயலுவதற்கோ வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான மருத்துவர்களுக்கு விண்பயணத்திற்கே உரிய நடவடிக்கைகளும் சவால்களும் அதனை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற விஷயங்களும் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை மேலும, அமெரிக்காவின் மத்திய வான்வெளிப் பயண நிர்வாகத்தை(Federal Aviation Administration-F.A.A.) சேர்ந்த வணிக விண்வெளிப் பயண அலுவலகம் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள விரும்புவோர் அப்பயணத்தல் ஏற்படக்கூடிய இடையூறுகளையும் அபாயங்களையும் நன்கு அறிந்திருக்கிறோம் என்று உறுதிமொழிப் பத்திரத்தில் கட்டாயமாக கையெழுத்திட வேண்டும் என்று அறிவித்துள்ளது இவ்வணிக நிறுவனங்களின் விண்வெளிக்கல ஓட்டிகள் F.A.A. இரண்டாந்தர சான்றிதழுக்குத் தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டிய நியதியிருந்தாலும் அக்கலங்களில் பயணம் செய்வோருக்கு இருக்க வேண்டிய மருத்துவ தகுதிகளை இவ்வலுவலகம் நிர்ணயம் செய்யவில்லை; மற்ற விண்வெளி நிர்வாகங்கள் வரையறுத்துள்ள தகுதிகளையே சுட்டிக் காட்டுகின்றது.

விண்வெளி மருத்துவம்:

விண்வெளி மருத்துவம் என்பது விண்வெளிப்பயணத்திலும் விண்வெளியிலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கண்டறிந்து அவற்றை சீர் செய்யும் பணியாகும். விண்வெளி சூழ்நிலையினால் உடலில் ஏற்படும் மாற்றங்களும் அதன் விளைவுகளும் பயணத்தின் கால அளவைப் பொறுத்தது. அவ்வாறே நீண்டநாள் விண்வெளிபயணத்தின் தனிமையும் தொலைவும் மன உறுதியை குலைப்பதாக உள்ளது. பயணத்திற்கு முன்னரே உள்ள உடற்கோளாறுகள் விண்வெளிப் பயணத்தினால் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை முன்னரே அறிந்து அதற்கு வேண்டிய அறிவுரைகளை செய்யவேண்டிய பொறுப்பு அப்பயணிகளின் சொந்த மருத்துவர்களையும் இம்மருத்துவத்தில் திறமைப் பெற்றவர்களையும் விண்வெளி சமூகத்தையும் சார்ந்தாதாகவே இருக்கும்.

விண்வெளி பயணத்தில் எதிர்பாராத அவசர சம்பவங்கள எச்சமயத்திலும் நேரலாம். உதாரணமாக, விண்வெளிக்கலத்தின் காற்றழுத்தக்குறைவினால் ரத்தத்தில் பிராணவாயு குறையலாம் அல்லது நைட்ரஜன் வாயு அதிகரிக்கலாம். இக்கட்டுரையில் இத்தகைய அசம்பாவிதமான விஷயங்கள் தவிர்க்கப்பட்டு சாதாரணமாக விண்வெளிப் பயணத்தில் ஏற்படக்கூடிய உடற்பாதிப்புக்கள் மட்டுமே விவரிக்கப்படும்.

விண்வெளியில் ஏற்படும் உடற் மாற்றங்கள், தொலைவையும் கால அளவையும் பொறுத்தது. விண்வெளிக்கலாம் செல்லும் தொலைவை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்

(1) பூமியின்சுற்றுப்பாதையின் கீழ்மட்டம் (suborbital)

(2) பூமியை வலம் வரும் பயணம் (Low earth Orbit)

(3) பூமியின் சுற்றுப்பாதையை தாண்டி செல்லும் பயணம் ( Beyond low earth orbit).

முதல் வகை பயணம் கடல் மட்டத்திலிருந்து குறைந்தது 100 கிலோமீட்டர் உயரத்திற்கு சில நிமிடங்களே சென்று புவிக்கு திரும்பும் பயணம். இரண்டாவது வகை இரண்டுநாட்களுக்கு குறைவாகவோ மேலாகவோ அமையலாம் மூன்றாவது வகைப் பயணம் ஒரு வாரத்திலிருந்து ஒருவருடம் வரை நீடிக்கலாம் பன்னாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி செல்லும் பயணங்கள் இரண்டாம் வகையை சார்ந்தவை சந்திரனையும் செவ்வாயையும் குறி வைத்துசெல்லும் விண்பயணம் மூன்றாம்வகையை சேர்ந்தது

பயண உபாதைகள்:

விண்வெளிக்கலம் கிளம்பும் சமயத்திலும் மேல்நோக்கி செல்லும் சமயத்திலும் ஏற்படும் சத்தமும், ஆட்டமும், விரைவும் பயணிகளை அச்சமூட்டலாம். பயணிகள் இருக்கையில் அமர்ந்த பின் மேல்நோக்கி செல்லும் விரைவு சக்தியை(acceleration force) பின்புறத்திலிருந்து மார்புறம் செலுத்தும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணம் இச்சக்தி காலிலிருந்து மேல் நோக்கி சென்றாலோ பக்கவாட்டில் சென்றாலோ அதை எதிர்கொள்வது மிகவும் கடினமானதென்பதால்தான்.

இவ்வுயரத்தில் புவியீர்ப்புசக்தி மிக நுண்ணிய அளவேயாகும் சிலநிமிடங்களே நீடிக்கும் பயணத்தில் இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாவிட்டாலும் இப்பயண காலம் நீண்டால் வாகனங்களில் வெளியூர் பயணங்கள் செல்லும் சமயம் சிலர் தலை சுற்றல், வாந்தி போன்ற உபாதைகளால் பாதிக்கப்படுவது போல் விண்வெளியிலும் பலர் இதற்கு ஆளாகின்றனர். ஓரிடத்தில் நம் இருப்பு நிலையை காது மையப்புழை (Vestibular apparatus)தான் மூளைக்கு அறிவிக்கிறது; ஆனால், விண்வெளியில் இக்கருவி இவ்வேலையை செய்வதில்லை. இதற்கு கண்களால் காணப்படும் அறிகுறிகளையே நம்ப வேண்டியுள்ளது. இந்த மாற்றம் முழுமையாக வேலை செய்வதற்கு 2 நாட்களாவது தேவைப்படும். இச்சமயத்தில்தான் மேற்சொன்ன உபாதைகள் அதிக அளவில் பயணிகளை தாக்குகின்றன. நீண்ட நாள் பயணத்தில், புவியீர்ப்பு சக்தியின்மையால், திரவங்கள் உடலின் வெளிப்பா கத்தில் தங்காமல் உடற்மையத்தையும் தலைநோக்கியும் செல்கிறது. இதனால் முக வீக்கமும் தலை வலியும் ஏற்படலாம். சில நாட்களில் இத்திரவம் சிறுநீராக வெளியேறுவதாலும் பசியின்மையாலும் உடல் எடையும் உடல் நீரளவும் குறைகிறது ஆனால் இம்மாற்றங்கள் இதயத்துடிப்பையோ இதய ஓட்டத்தையோ பாதிப்பதில்லை

நாம் படுத்திருந்தாலும், அமர்ந்திருந்தாலும், நின்றிருந்தாலும், ரத்த அழுத்த அளவு மாறாதிருக்குமாறு அமைந்துள்ளது.. விண்வெளியில் புவியீர்ப்பு துளியளவே உள்ளதால் இப்பாதுகாப்பு காரணிகள் நான்கே நாட்களில் வேலை செய்வதை நிறுத்தி விடுகின்றன. விண்வெளியில் இதனால் எப்பாதகமும் ஏற்படாவிட்டாலும் மண்ணிற்கு திரும்பிய பின் இவ்வேலை நிறுத்தம் தொடர்வதால் தலைக்கு செல்லும் ரத்த அழுத்தம் குறைந்து தலை சுற்றலோ மயக்கமோ ஏற்பட வாய்ப்புள்ளது.

விண்வெளியில் நுரையீரலின் செயல்களில் மாற்றம் ஒன்றுமில்லை பிராண வாயு-கரியமில வாயு பரிமாற்றமும் (Gas Exchange) தொடர்கின்றது. மூச்சுக் காற்றில் வெளியேறும் கரியமில வாயுவின் அளவு அதிகரிப்பதை சுத்தமான காற்றோட்டத்தின் மூலமாகவும் சேர்ந்துள்ள கரியமில வாயுவை நீக்குவதின் மூலமாகவும் தவிர்க்கப்படுகிறது. புவியீர்ப்பு இன்மையால் வயிற்றிலுள்ள உறுப்புகள் சிறிது மேலே செல்கின்றன. மார்பையும் வயிற்றையும் பி ரிக்கும்

உதரவிதானம்(Diaphragm) மேல் நோக்கி செல்வதால் நுரையீரலும் சுருங்குகிறது. இதனால் உட்ச்செல்லும் காற்றின் அளவும் குறைகிறது. ஆனால், புவியீர்ப்பின் தாக்கம் இல்லாததால் நுரையீரலுக்குள் நுழையும் ரத்தம் கீழ் பாகத்திற்கு அதிக அளவில் ஈர்க்கப்படாததால் வாயு பரிமாற்றத்தில் (Gas Exchange) வித்தியாசமில்லை.

விண்வெளியில் பல வாரங்களுக்கு மேல் இருந்தால் புவியீர்ப்பின்மையால் முதுகெலும்பு(Spine) சிறிதளவு நீண்டும் வலிமை குன்றியதாகவும் மாறுவதால் முதுகு வலியும், முதுகெலும்புகளுக்கிடையே உள்ள வட்டப்பகுதி(intervertebral disc) இடம் பெயர்ந்து நரம்புகளை இறுக்கி அவ்வலியை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது .ஏற்கனவே முதுகு வலியால் அவஸ்தைப்படுபவர்கள் பல நாட்களோ வாரங்களோ விண்வெளி பிரயாணத்தை மேற்கொண்டால் இவ்வுபாதைகள் மேலும் அதிகரிக்கலாம்.

நீண்டநாள் விண்வெளிப்பயணத்தில் புவியீர்ப்பின்மையால் எலும்பு தேய்வும் சதை தொய்வும் உடல் வலிமையை வெகுவாக குறைக்கலாம். உடற்பயிற்சி, சத்துணவு, எலும்புதேய்வை குறைப்பதற்கான மருந்துகள் மூலம் இதனை தவிர்க்கக் கூடும்.

நீண்ட கால விண்வெளி பயணத்தில் கண் பார்வைக் குறைவு ஏற்படலாம் என்பது 2011ல் தெரிய வந்துள்ளது. இதற்கு SANS (Space Flight-Associated Neuro Ocular Syndrome) என்று பெயரிட்டிருக்கிறார்கள். இது கண்ணிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பின் பாதிப்பினால் என்பது தெரிய வந்தாலும் இதன் காரணம்

இன்னும் சரியாக கண்டறியப்படவில்லை.

விமானப் பயணங்களிலேயே இணக்கமாக சேர்ந்துவேலை செய்பவர்களின் முக்கியத்துவம் நன்கு அறியப்பட்டுள்ளது நீண்டநாட்கள் தொடரும் விண்வெளிப் பயணங்களில் இந்த ஒற்றுமை பயணிகளுக்கும் விண்கலங்களில் வேலை புரிபவர்களின் மனோதிடத்திற்கும் இன்றியமையாததாகும். ஒருவரின் மனசஞ்சலம் எல்லா பக்கங்களிலும்அடைக்கப்பட்டுள்ள விண்கலத்தில் மற்ற எல்லோரையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை . விண்வெளிப் பயண பயிற்சியின்போதே பயிற்சியாளர்கள் இடையூறு செய்யும் நபர்களை கண்டறிவதன் மூலம் பயணத்தை இனிதாக்கலாம்

மருத்துவ வரம்புகளும் உறுதியின்மையும்:

விண்வெளி பயணத்திற்கே உரித்தான உபாதைகளை தெரிந்து கொள்வது ஒருபுறமிருக்க பயணிகளின் உடற்கோளாறுகளையும் அவை எந்த அளவிற்கு கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் பயணம் சுமூகமாக அமைவதற்கு இன்றியமையாத ஒன்று. நீண்ட கால பயணங்களில் தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் அனைத்தையுமே எடுத்து செல்வதோ பலவிதமான மருத்துவ நிபுணர்களை ஏற்றிச் செல்வதோ இயலாத காரியம். மேலும் விண்வெளி தூரம் அதிகமானால் நிலத்தொடர்புக்குரிய நேரமும் அதிகரிக்கும். உதாரணமாக, செவ்வாய் கிரகத்திலிருந்து இங்குள்ள விண்வெளி நிலையத்திற்கு செயதி வர நாற்பது நிமிடங்கள் ஆகுமென்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

FAA(Federal Aviation Administration) தனியார் செலுத்தும் விண்கலங்களில் செல்லும் பயணிகளின் உடல் நலத்தையும்,செயல்திறனையும் அறிந்துகொள்வதாற்காக மூன்று ஆய்வுகளைசெயதுள்ளது அவையெல்லாமே விண்வெளி தளத்தில் பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள விண்வெளிகலங்களையே பயன்படுத்திக் கொண்டுள்ளது. 19 முதல் 89 வயதுள்ளவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். பெரும்பாலானோர் சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, இதயநோய் ஆகியவைகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவை கட்டுப்பாட்டில் இருந்தால்மட்டுமே இவ்வாராய்ச்சிகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டனர் . அனைவருமே விண்கலத்தின் சுழல் வேகத்தை தாங்கிக் கொள்ழும் திறனிருந்தாலும் ஆறு சதவீதத்தினர் தலைசுற்றலை பொறுக்க முடியாமல் விண்கலம் சுற்றுவதை நிறுத்த சொல்லி விட்டனர். 14 சதவீதத்தினரின் செயல் திறனும் நடத்தையும் அபாயகரமாக உள்ளதும் இவ்வாய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளுவதில் ஆசையுள்ளவர்கள் மருத்துவ ஆராய்ச்சிகளில் தங்களை உட்படுத்திக்கொள்வதற்கும் அதனால் அறியப்படும் விவரங்களை வெளியுலகத்திற்கு அறிவிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பது வரவேற்கத்தக்கதாகும். தற்போது, விண்வெளி வீரர்களின் பயிற்சி காலத்தில் மருத்துவர்கள் அவர்களுடன் செலவழிக்கும் நேரம் குறைவாக இருந்தாலும் மருத்துவ உதவியாளர்கள் வீரர்களுடன் இணைந்து வேலை செயகிறார்கள். இவ்வித பயிற்சியை தனியார் நிறுவனங்கள் அரசாங்க விதிமுறை நிபந்தனைகளின்றி மேற்கொள்வனரா என்பது தற்சமயம் ஒரு கேள்விக்குறியே!. பயிற்சி காலமும் விண்வெளி செல்லும் தூரத்தையும் கால அளவையும் பொறுத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை பயணிகள் விண்வெளிக்கே உரித்தான மருத்துவ இடர்களை பற்றியும் அப்பாதிப்புகளை சீர்செய்வதற்கு மருத்துவர்களை அனுமதிக்கவும் அவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்க வேண்டியதும் மிக அவசியம்.

விண்வெளி மருத்துவமும் சட்டமும்:

FAAவை பொறுத்தவரை விண்வெளியில் செல்ல விரும்பும் நபர்களின் உரிமையை தனியார் நிறுவனங்கள் மதிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. அப்பயணிகளின் உடல்நலத்தை பாதிக்கக் கூடிய அனைத்து விவரங்களையும் அப்பயணிகள் அறிந்து கொள்ள வேண்டிய பொறுப்பை தனியார் நிறுவனங்களின் தலையிலேயே சுமத்தியுள்ளது. தற்சமயம் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் படும் அல்லல்களை விண்வெளியை நோக்கியிருக்கும் தனியார் நிறுவனங்களும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது கண்கூடு.

விண்வெளி மருத்துவம் விண்வெளிப் பயணங்களில் செல்ல விழையும் பொது மக்களின் மருத்துவ எதிர்பார்ப்புகளை சந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. விண்வெளிப் பயணங்கள் மூலம் சேகரிக்கப்படும் விவரங்களும்

பயணிகளின் மருத்துவர்களோடு விண்வெளி மருத்துவ நிபுணர்களும் ஒத்துழைத்தால், இம்மருத்துவம் முதல் தரத்தை எட்டிப் பிடிக்கும் நாள் விண்வெளியை போல் வெகு தூரத்தில் இல்லை.

Reference: Stepanek.J etal; N Engl J Med:2019: 380: 1053-1060

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.