யார் பாதிக்கப்பட்டவர்கள்?

இன்றைய சமூக வலை தளங்களின் மூலம் எளிதில் எவரும் எவர் மேலும் குற்றம் சாட்டிவிட முடியும். ஆதாரங்கள் உண்டா, அதற்கான நம்பகத்தன்மை உண்டா போன்ற நிரூபிக்க வேண்டிய கட்டாயங்களை எல்லாரும் கேட்பதில்லை; தேவைப்படுவதும் இல்லை.தேர்தல், ஜாதி, மதம், பாலியியல் என்று எந்த விஷயத்திலும் சமூகத்தில் எந்த உயர்நிலையில் இருப்பவரையும் பாமரனும் தொட்டுவிட முடியும்.


க்ரேய்க் மயர்ஸ், சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர் அல்ல. ஓர், சாதாரண பேருந்து ஓட்டுனர். ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பர்க் நகரத்தில், தின வாழ்க்கைக்கு பேருந்து ஓட்டி, மாலை வீடு திரும்பி தன் மனைவியுடனும் சிறு பெண் குழந்தையுடனும் நேரத்தை சந்தோஷமாக செலவழிக்கும் ஓர் சாதாரணன்.


அப்படி ஓர் நாள், ஸ்காட்லாந்திற்கே உரித்தான ஒரு இருள் மேக மாலையில், பணி முடிந்து பேருந்தை பணி மனையில் விட்டுவிட்டு, மது பான கடையில் ஒரு கோப்பை பீர் அருந்த அழைக்கும் சக பணியாளர் அழைப்பை மறுத்துவிட்டு (“குழந்தையை ஹாலோவீன் இரவிற்கு வெளியே அழைத்துப் போகவேண்டும்”)  வீட்டை நோக்கி போகிறான். ஹாலோவின் இரவு பற்றி வாசகர்கள் பெரும்பாலனர்களுக்குத் தெரிந்திருக்கும். Trick or treat என்ற விளையாட்டு. குழந்தைகள் ட்ராகுலா போன்ற பயமுறுத்தும் வேஷங்கள் போட்டுக்கொண்டு ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டுவார்கள். பல சமயங்களில் பெரியவர்களும் இவ்வேஷங்கள் போட்டுக்கொண்டு துணைக்குப் போவார்கள் வீட்டில் உள்ளவர்கள் கதவைத் திறந்து பயந்தது போல் பாவ்லா காட்டி, சிரித்து    குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பார்கள்.


இதற்காகவே முந்தின நாளில் ஏராளமான மிட்டாய்கள் வாங்கி வைத்துக்கொள்வார்கள்.க்ரெய்க்கும் குழந்தையை வெளியே கூட்டிப் போய் மிட்டாய்களை வாங்கி வருகிறான். அவர்கள் வீட்டிலும் குழந்தைகள் மணியடித்து மிட்டாய்களை வாங்கிச் செல்கிறார்கள். ஒரு தடவை அப்படி கதவு தட்டப்படும் போது க்ரெய்க் கதவைத் திறக்கிறான். வெளியே முகமூடி அணிந்த உருவம் நிற்கிறது. க்ரெய்க் புன்னகைத்து “இரு, மிட்டாயை எடுத்து வருகிறேன்” என்று திரும்ப முற்படும் போது முகமூடி அணிந்த அவ்வுருவம் க்ரேயெக்கை கடுமையான தாக்கி விட்டு ஓடிவிடுகிறது. மருத்துவமனையில் கடும் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கும் க்ரெய்க்கிடம் போலிஸ் அதிகாரி ஸ்டீபன் கேட்கிறார் “ எடி ஜே டர்னர்…இந்த பெயர் எதையாவது உனக்கு நினைவுபடுத்துகிறதா?”…


விஷயம் இதுதான்: பதினைந்து ஆண்டுகளுக்கு முன் லியாம் என்ற ஒன்பது வயது சிறுவன் ஒதுக்குபுற பாலமொன்றின் அடியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். செய்தவன், எடி ஜே டர்னர் என்ற பதினான்கு வயது சிறுவன். வழக்கு நடந்து எடி சிறைக்கு அனுப்பப்பட்டு தண்டனை காலம் முடிந்தபின், அவனுக்கு வேறு அடையாளங்கள் கொடுக்கப்பட்டு (மைனர் என்பதால்) சமூகத்தில் மீண்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.
ஸ்காட்லாந்த் சட்டப்படி, இன்றைய மேஜரான எடியின் புது பெயர், அடையாளங்கள் என்பவை ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன.


ஆனால், அந்த ஹாலோவீன் நாளன்று, பேஸ்புக்கில் அந்த எடி ஜே டர்னர்தான் இன்றைய க்ரெய்க் என்ற பெயரில் இருக்கிறான் என்று பேஸ்புக்கில் வெளியிடப்பட்டு இரு மணி நேரங்களுக்குள்ளாக க்ரெய்க் தாக்கப்படுகிறான்.
பேஸ்புக்கில் இப்படி குற்றச்சாட்டை வெளியிட்டவர், வேறு யாருமல்ல, கொலை செய்ப்பட்ட லியாமின் அம்மா, அன்னா டீன்.அவளுக்கு ஓர் நம்பகமான இடத்திலிருந்து இந்த தகவல் கிட்டுகிறது.  காவல் துறை அவளை கைது செய்து வழக்கு நடக்கிறது. 
இதுதான் ஆரம்பம்.


வழக்கு, க்ரெய்க், எடி ஜே டர்னரா இல்லையா என்பது அல்ல; க்ரெய்க்கின் மீது இந்த குற்றசாட்டை சமூக வலைத் தளத்தின் வழியாக வைத்து அவனின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததற்காக.


அன்னா, க்ரேய்க்தான், தன் குழந்தையின் கொலைகாரன் என்பதில் உறுதியாக இருக்கிறாள்.  அன்னா குற்றத்தை ஒத்துக்கொண்டால் அவள் மீதான தண்டனை “மிதமாக இருக்கும்” என்று அரசு தரப்பிலிருந்து தகவல் வந்தாலும் அவள் ஒப்புக்கொள்ள மறுக்கிறாள். அவளின் வழக்குறைஞர், வீட்டில் டீன் ஏஜ் மகள், இரண்டாவது கணவன் என்று யாருக்கும் இதை தொடர்வதில் விருப்பம் இல்லை, ஆனால் அன்னா உறுதியாக இருக்கிறாள்.ஏனெனில் அவனிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்கிறாள். 


இப்படியாக தற்கால, சமூக வலைத்தள பிரச்சனையில் தொடங்கும் கதை போக்கு ஸ்காட்லாந்தின் சட்ட நுணுக்கங்கள், மனித உறவுகளின் சிக்கல்கள் என ஆழமாக பயணிக்கிறது. 


க்ரெய்க் தான் எடி அல்ல என மறுத்தாலும் அவனையும் அவன் குடும்பத்தையும் இந்த விஷயம் பாதிக்கிறது. அனைவரும் அவனைச் சந்தேகிக்கின்றனர்.   அவனது பணி மேலாளர் “எல்லாம்” சற்று அடங்கியபின் வேலைக்குத் திரும்பலாமே என்று தயக்கமாகச் சொல்கிறார். குழந்தையின் தோழிகளின் பெற்றோர்கள் இவர்களிடமிருந்து விலகி இருக்கின்றனர்.மனைவிக்கும் சந்தேகம் வலுக்கிறது. ஒரு கட்டத்தில் அவனிடமிருந்து குழந்தையுடன் விலகிவிடுகிறாள்.


ஒரு பேஸ்புக் போஸ்ட்டினால் க்ரெய்க் என்ற சாதாரணனின் எளிய வாழ்க்கை சிதைகிறது.


கதை சொல்லிய விதம், இசை, எடின்பர்க்கின் குறுகிய, செங்குத்து படிகள் கொண்ட சந்துகள் (கடும் மழையின் போது கடைசிப்படியில் இருப்பவருக்கு அருவியின் கீழ் நின்று கொண்டிருப்பது போலிருக்கும் என்று நினைக்கிறேன்), ஹாலோவின்- இலையுதிர் கால, “எப்போதும் மழை மேக வான” சலிப்பூட்டும் காலநிலை, ஸ்காட்டிஷ் உச்சரிப்பு என்று பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து தக்க வைத்துக்கொள்ளும் விஷயங்கள் நிறைய இருக்கின்றன.


அன்னாவிற்கு அவ்வப்போது தன் முடிவில் சந்தேகம் இல்லாமல் இல்லை. ஓர் அப்பாவியின் வாழ்க்கையை வீணடிக்கிறோமோ என்ற  குறுகுறுப்பான குற்றவுணர்ச்சி  இருந்து கொண்டே இருக்கிறது.இருந்தும் எடியிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்பதில் பின் வாங்கவில்லை. முன்னர் எடுக்கப்பட்ட ஓர் ஹோம் வீடியோ துணுக்கில் லியாம் பேசிக்கொண்டிருப்பதை அவ்வப்போது பார்த்துக்கொண்டே இருக்கிறாள்.
கடைக்கு ஏதோ பொருள் வாங்கச்சென்ற என் குழந்தையை எப்படி பாலத்தின் அடியில் கொண்டு சென்றாய், ஏன் இத்தனை கொடூரமாக அவன் உடலை சிதைத்தாய்? ஏன் அவன் உடலின் மேல் கற்களையும் இன்ன பிற விஷயங்களை போட்டு மூடினாய்… நீ அவனைக் குத்தியவுடன் அவன் என்ன சொன்னான்…அன்னாவின் கேள்விகள், எதிர்பார்ப்பு அவளை மேலும் உறுதியாக நிறுத்துகிறது.


எடி ஜே டர்னர் யார், க்ரெய்க்தானா? அல்லது அவனது தோழனா, ஏன் அன்னாவின் பெண்ணின் நண்பன் அமைதியிழந்து பின்னர் தலைமறைவு ஆகிறான் என்ற பல, த்ரில்லருக்கே உரித்தான கேள்விகள் தொடர் நெடுக வந்துகொண்டிருக்கின்றன.
டெல்லி நிர்பயா வழக்கு வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அதில் குற்றவாளிகளில் ஒருவன் 17 வயதிற்கு சற்றே குறைவாக இருந்ததால், இளம் குற்றவாளிகளுக்கான சட்டப்படி தண்டிக்கப்பட்டான். விடுதலையும் செய்யப்பட்டான். அவனைப்பற்றிய விவரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன.இதைப் பற்றி சர்ச்சை எழுந்ததும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். 


கிட்டதட்ட அதே போன்ற கேள்விகளை இந்த தொடரும் எழுப்புகிறது. சிறையிலிருந்து/சீர்திருத்தப் பள்ளியிலிருந்து வெளி வந்தவனை சமூகத்தில் அனுமதிக்கலாமா? அவன் திருந்திவிட்டான் என்பது என்ன நிச்சயம் என்ற ஆரம்பக்கேள்விகளிலிருந்து அவனது இந்த நிலைக்கு, இளம் வயதில், கொடூரனாக, கொலைகாரனாக மாறியதற்கு யார் முதற் காரணம் என்ற அடிப்படை கேள்விகளுக்கான முகாந்திரங்களும் இருக்கின்றன.
கடைசி அத்தியாயத்தின் ஆரம்பத்தில், க்ரேய்க், எடி ஜே டர்னர் அல்ல என்று அன்னாவின் நம்பகமான நபர் தெரிவித்தவுடன் அவள் அதிர்ந்து போகிறாள். ஓர் அப்பாவியின் வாழ்க்கையை சிதைத்துவிட்டோமே என்று அவள் மிகுந்த குற்ற உணர்ச்சி கொள்கிறாள். க்ரேய்க்கிடம் மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக்கொண்டு, எடி ஜே டர்னரிடம் தான் ஏன் இப்படியான கேள்விகளை கேட்கவேண்டும் என்பதற்காக காரணங்களை அடுக்கிக்கொண்டே போகிறாள்…ஆனால் கடைசி அத்தியாயத்தில் (எபிசோட்டில்) ஒரு வழியாக எடி ஜே டர்னரைக் கண்டும்பிடித்துவிடுகிறாள்…
லியாம் கொல்லப்பட்ட அதே பாலத்தின் அடியில் எடி ஜே டர்னரை சந்தித்து பேசுகிறாள்!கடைக்கு சென்ற தன் புதல்வன் எப்படி அந்த பாலத்திற்கு அடியில் வந்தான், கொல்லப்பட்ட தருணத்திற்கு எப்படி மெல்ல மெல்ல உருவாகி வந்தது என்று எடி ஜே டர்னரின் பார்வையில் சொல்லப்படுகிறது.


இள வயதில் அதிக பட்ச குற்றமான கொலையை செய்ய நேரிட்டவனுக்கும், மானுட வாழ்வின் அதீத துயரமான புத்திர சோகத்தை ஏற்க நேரிட்டவளுக்கும் இடையிலான உரையாடல் கண்ணீர்களுக்கும் கடும் உணர்ச்சிகளையும் தாண்டி மேலும் செல்கிறது.
மானிடர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தாழ்வார்கள், ஆனால் அதே சமயம் உயர்ந்தும் நிற்பார்கள் என்பதை தொடரின் கடைசி நிமிடத்தில், மழை முடிந்து சொட்டு சொட்டாக சொட்டுவது போல் காட்டி முடிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.