எண்கள் 100,121,144,169,196 ஆகியோர் உடனடியாக நிர்வாகத் தலைமையகத்திலிருக்கும் காணொலி அறைக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.தலைமை நிர்வாக இயக்குனர் உங்கள் அனைவரிடமும் பேச விழைகிறார் என்று எசோடிகா என்ற மனிதப் பெண் ரோபோ அறிவித்த போது எண்களால் குறிப்பிடப்பட்ட மனிதர்களாகிய அனைவரும் கட்டுப்படுத்தப்பட்ட உணர்வுகளையும் மீறி கண்களால் புன்னகைத்துக் கொண்டார்கள்.அவர்கள் இந்த நிறுவனத்தில் பணியில் இணைந்து ஆறு வருடங்களில் இன்றுதான் தலைமை நிர்வாக இயக்குனரை சந்திக்கப் போகிறார்கள். உடல்களில் பொருத்தப்பட்டுள்ள லேசர் கருவியை நீக்கிவிட்டு அவர்கள் எழுந்து கொள்ளும் போதே வாயிலில்அவர்களை அழைத்துச் செல்ல வாகனம் தயார் நிலையில் இருப்பதைப் பார்த்து மிக முக்கிய நிகழ்வினை எதிர் நோக்கும் மன நிலைக்கு வந்தார்கள்.

அவர் இவர்களைப் போலவே இளமையாக இருப்பது சற்று கலவரப்படுத்தியது.பதவியும்,செல்வச் செழிப்பும், தன்னம்பிக்கையும்,உறுதியான உடலும் உள்ள இவருக்கும் எண் உண்டா என இந்த ஐந்து எண்களும் நினைத்தார்கள்.
‘ஃப்ரெண்ட்ஸ்,இது ஃபார்மல் மீட் இல்லை; உங்களைப் பெயர் சொல்லி அழைத்துப் பேசப்போகிறேன்.மிக முக்கியமான தகவல் இது. நம் குழுமம் மாயத் தீவில் ஒரு வான்வெளி ஆய்வு மையம் அமைக்க இருக்கிறது. அதற்கான அடிப்படை வேலைகளுக்காக உங்களை நிர்வாகம் தேர்ந்தெடுத்துள்ளது. ராம், நீங்கள் ஏதோ கேட்க நினைக்கிறீர்கள், தயங்காமல் கேளுங்கள். ‘
“அந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு ஏதேனும் சிறப்பு இருக்கிறதா?“
‘மலையின் பின்புறக் கடலில் அந்தத் தீவு இருக்கிறது.மனிதர்கள் அற்ற சிறிய தீவு.‘
“அந்தத் தீவு நமக்குச் சொந்தமானதா?அங்கே எப்படிப் போவது? “
‘மித்ரன்,அகில உலகக் கடல் எல்லையின் படி அது நம் நாட்டிற்குச் சொந்தம். அதை நம் அண்டைய நாடு தன்னுடைய இராணுவத் தளமாக மாற்ற நினைக்கிறது; நமது அரசு அந்தத் தீவை இரு செயல்களுக்காகப் பயன்படுத்த நினைக்கிறது,பாதுகாப்பும்,வான்வெளி ஆய்வும்;நிறுவனம் அரசுடன் ஒத்துழைக்கும் என்று சொல்லியிருக்கிறோம்.முதலில் ஒரு டீமை அனுப்புங்கள் என்று ஆணை வந்துள்ளது.எனவே இந்த அவசரக் கூட்டம். மலைச் சரிவிலிருந்து தீவிற்குச் செல்ல ஒரு சிதிலமான பாலம் இருக்கிறது.அது இயற்கையே உருவாக்கிய பாதை.கடல் அரிப்பினால் அது மோசமாக உள்ளது.பொன்னகை, நீங்கள் அங்கே போனவுடன் வர்டிகல் ஷேப்ட் மூலம் இயங்கக்கூடிய தொங்கு பாலத்தின் ஃபீசிபிலிடி பற்றி தகவல் அனுப்ப வேண்டும்.அது ஏன் என்று உங்களுக்குப் புரியும், கடல் நீரால் ஏற்படும் அரிப்பினை முடிந்த வரை தவிர்க்கலாம் அல்லது, ராக் பில்லர்ஸ் மூலமாக இந்தப் பாலத்தையே சரிசெய்ய முடியுமா என்றும் பாருங்கள். சரத், நீங்கள் க்ளைமேட் மற்றும் வெதர், வெஜிட்டேஷன்,ஃப்ளோரா ..ஒரு ஜெனரல் ஸ்பெசிக் ரிபோர்ட் அனுப்புங்கள்.ஷைலா, நீங்கள் வான்வெளி ஆய்வுக்கூடத்திற்கான களப் பணிகள் செய்ய வேண்டும்.
‘மிஸ்டர்.எம்.டி’ என அவள்ஆரம்பித்த உடனேயே ‘மன்னிக்கவும்.டிபென்ஸ் இப்போது இவ்வளவுதான் சொல்லியிருக்கிறது.உங்கள் உயிருக்கு ஆபத்தில்லை.சாரி,டியர்ஸ்,இணையோடு போக முடியாது.உங்களுக்கு ஃபோர் லெவெல் பேக்கேஜ் ஏற்றம் உண்டு இந்த மிஷன் வெற்றி பெற்றவுடன். நாளை கிளம்புகிறீர்கள் .நீங்கள் லேசர் அணிந்து செல்ல வேண்டியதில்லை.’
மலைத்தொடரின் கடலை நோக்கிச் சிறுத்த ஒரு ஓரத்தில் அந்தப் பாதை தென்பட்டது. ‘பேரமைதில புத்தரோட புன்னகை போல இருக்கு’ என்றாள் பொன்னகை.
‘பாலத்ல இடறி விழுந்தாஅவர மொத்தமாவே பாக்கலாம்.’ என்ற ராமை அவள் செல்லமாக அடித்தாள்.
‘எனக்கென்னவோ இந்த மிஷனே புரியல.ஒரு தீவுக்கு நம்ம போகச் சொல்றாங்க; டிஃபென்ஸ் ப்ராஜெக்ட்ன்னா நாம ஏன்?அவங்ககிட்ட இல்லாத ஆளா? நாளைக்கு வர தொழில் நுட்பம் கூட அவங்களுக்குத் தெரியும். அப்படியிருக்க.. ’என்றான் மித்ரன்.
‘ட்யூட்,நீதான் டவுட்டிங் தாம்சனா? நமக்கென்ன வந்தது,சொன்னதைச் செய்வோம்,சக்ஸஸ் ஆனா, நம்ம லெவலே வேற’ என்றாள் ஷைலூ.
‘நம்மோட எதிரிக்குத் தெரியக்கூடாதுன்னு இப்படிச் செய்றாங்களோ?’ என்றான் சரத்.
‘மனுஷங்க இல்லன்னு சொன்னார்;வேற உயிர் ஏதாச்சும் இருக்குமோ என்னமோ? அதால கூட ஆபத்து வராம கவனிச்சிக்கணும் ‘ என்றான் ராம்.
‘ஆமா,ராம், அவங்களுக்கு நீதான் முதல் பிரியாணி ‘என்று பொன்னகை சிரித்தாள்.
‘அப்போ இடம் காலி, நான் அப்ளே பண்லாம் ‘ என்று மித்ரன் சொன்னது சரத்தைத்தவிர எல்லோருக்கும் புரிந்து சிரித்தார்கள் .
கடல் நீரும், உப்புக்காற்றும் அரித்திருந்த போதிலும் மலையின் நீட்சியென அந்த ஒற்றையடிப்பாலம் கோணி வளைந்து குறுகிச் சென்றது.தீவை நெருங்க நெருங்கக் கடல் தண்ணீர் நீல நிறத்திலிருந்து பச்சை கலந்த நீல நிறமாகத் தோன்றியது.காலையின் கண் விழிப்பில் மரகதத் தீவென மிளிர்ந்தது,பின் மாலையில் இவர்கள் சென்று சேர்ந்த போது அடர்ந்த இரகசியம் போல் தோற்றமளித்தது.
‘இந்த ஓடைலேந்து ஒருகிலோமீட்டர்ல டென்ட்போடுவோம்.எதுக்கும் ‘ட்ரோன் கேப்ஸூல’ தயாரா வச்சுப்போம்.’ என்றான் ராம்.
‘அப்போ ஆபத்து வரும்கிறயா? ‘
‘ரெடியா இருப்போமே, அது நல்லதில்லையா.?
டென்ட் அடித்து, பாட் சோல்ஜரைக் காவல் அமர்த்தி, தெர்மோ அலைக் கதிரடுப்பில் மீன்களை வாட்டித் தின்று அவர்கள் படுத்துக்கொண்டார்கள்.மெலிதாக பசும் ஒளி அவர்களைச் சூழ உறங்கத் தொடங்கினார்கள்.
பாட் சோல்ஜர் அவர்களை எழுப்பிவிட்டு தன்னை ஸ்லீப் மோடிற்கு மாற்றிக் கொண்டது.நடுங்கிக் கொண்டே ஏரியில் குளித்தார்கள்.
காலை ஒளியில் தீவு மரகத மாலை போல் காணப்பட்டது.
பசுமைதான் இயற்கையா அல்லது இயற்கையே பசுமையா? இங்கு ஏதோ இருக்கிறது-காற்றின் மொழியில் தளிர்களும், பூக்களும் சிந்தும் தேன்;அவர்களின் வாழ்விடத்தில் இதுவரை பார்க்காத வசந்தம்.பல் வகைப் பூச்சிகள்,அவைகளை அடையாளம் காண முடியவில்லை.வெளிர் பச்சை நிறத்திலிருந்து அடர் பச்சை நிறம் வரை பறவைகள். ஏன் பச்சையைத் தவிர வேறு வண்ணங்களில் அவை இல்லை? நாலு கால் உயிர்களைப் பார்க்கவே முடியவில்லை.பெரும் மரங்கள், அதில் படர்ந்து வகை வகையாய்ப் பூக்கும் மலர்களும் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருந்தன.
‘இந்தத் தீவு இப்போ நமக்கே நமக்கு.உரக்கக் கத்தணும் போல இருக்கு. மனிதக் கால்கள், இல்ல, வேறெந்தக் கால்களும் படாத கன்னித்தீவு;நான் இதுக்கு ‘எமரால்ட் வர்ஜீன்’ன்னு பேர் வச்சுட்டேன்’ என்று குதித்தாள் ஷைலூ.
‘மீனையே திரும்பவும் வாட்டி சாப்டலாம். நம்மட்ட இருக்கற உலர் சாப்பாட பின்னாடி உள்ளப் போகையில வச்சிக்கலாம். ஏதேதோ பழமாத் தொங்கறது. டெஸ்ட் பண்ணாம எடுத்துக்க வேணாம் ‘
‘எப்படி டெஸ்ட் செய்வ? ‘
‘உனக்குக் கொடுத்துத்தான். காட்ல பலி கொடுப்பாங்க, இந்த மிஷனுக்கு நீ பலி ‘
‘வெட்டிப் பேச்ச விடுங்கப்பா;உள்ள எப்ப போறது? ’
‘இப்ப கிளம்பிடலாம்,சரத் .’
‘நேனோ டெக் எப்படி யூஸ்ஃபுல்லா இருக்கு பாரேன்.எல்லாமே நம்ம பேக்குக்குள்ள,எந்தக் கஷ்டமும் இல்லாம.’
‘சரி சரி, நீ அலட்ட ஆரம்பிச்சா ஓய மாட்ட;ஏதாவது வேலை செய்யலேன்னா அப்ப இருக்கு உனக்கு ’
நீலமும் பச்சையும் கலந்த நிறத்தில் உடலும்,அடர் பச்சை நிறத்தில் வாலும் கொண்ட அணில்கள் மரத்தில் பழங்களைக் கவ்விக் கொரிப்பதைப் பார்த்தவுடன் அவர்கள் சந்தோஷத்தில் குதித்தார்கள்.
‘டென்ட் தூக்கம், ஏரிக் குளியல், அணில் கடித்த பழம்..ஒரேயடியாகச் சில நூற்றாண்டுகள் பின் சென்று விட்டோம்.’ என்றாள் பொன்னகை.
‘சரத்தும் நீயும் நாம இறங்கிய அந்த வளைவுக்குப் போய் வேலைய ஆரம்பிங்க. நானும், ஷைலூவும் களம் தேடும் தளபதிகள். மித்ரன், நீ கால் போன போக்ல போய் எல்லா சவுண்டையும் ரெகார்ட் செய்.கவனமா இருக்கணும்; கான்டேக்ட்ல இருக்கணும்’ என்றான் ராம்.
தீவினுள் சிறு அருவிகளும், ஆறும் தென்பட்டன.
‘இந்த மலயில டனல் கட்டி பேசாம ந்யுட்ரினோ லேப் வச்சுடலாம் கொஞ்ச ஏரியாதான் அஃபெக்ட் ஆகும்.வான்வெளி ஆய்வுன்னா நிறைய இடம் வேணும்;காடு அழிஞ்சுடும்.’என்றாள் ஷைலூ
‘ரிபோர்ட்ல அத ரெகமெண்ட் செய்;இப்ப வேலயப் பாரு’என்றான் ராம்
‘டன்.நான் ட்ரேக் மாறல.சும்மா தோணினதச் சொன்னேன்.’
மாலை கூடாரத்திற்குத் திரும்புகையில் அனைவருக்குமே அதிகமாகப் பசித்தது.
பெரிய பழத் துண்டை வாயில் அடைத்துக் கொண்டே சரத் பேச முற்பட்டான்;பொன்னகை சிரித்தாள்.கடலுக்குள் சென்று அவர்கள் பாறையின் தன்மையைப் பற்றி அறிந்து வந்திருந்தார்கள்.சிறு உளியால் வெட்டி எடுத்து வந்த பாறையை அவள் கூடாரத்தில் வைத்தாள்.அது கரும் பச்சையாக இருந்தது.சரத் ஒருவழியாக உணவை விழுங்கிவிட்டு அதைச் சுரண்டலானான். மெது மெதுவே கருமை அகன்று பளீர் பச்சை தெரிந்தது.
‘மை காட், இது பச்சக்கல்’
‘ஆமான்டா, பச்சையா இருந்தா பச்சக்கல், நீலமா இருந்தா நீலக்கல்’
‘முட்டாள்,இது மரகதம்டா’
‘அப்படின்னா இந்தத் தீவே மரகதமா?’
‘அத இப்ப எப்படிச் சொல்றது? ‘
‘இல்லடா, கடலக்குள்ள தான் இது கடைக்கும்னு நெனைக்கறேன். ‘
‘வைரம் கிடச்சிருந்தா நல்லா இருக்கும், மரகதம் வேஸ்ட்’
‘புரியாமப் பேசாதே. ஒரு கேரட் வைரத்த விட ஒரு கேரட் மரகதம் பெரிசு, ரேர்டா, தரமான பச்சையா இருந்தா வில எங்கியோ போயிடும்’
‘அப்ப,இதப் பத்தி தகவல் கொடுப்போமா?’
‘ஆமா,உடனே செய்யலாம்’ என அவர்கள் முனைகையில் எல்லாக் கருவிகளும் ஜேம் செய்யப்பட்டுள்ளதை உணர்ந்து திகைத்தார்கள்.
பொன்னகை உடனடியாக அந்தத் துருவப்பட்ட பச்சைப் பாறையையும்,கல்லையும் கையில் எடுத்துக்கொண்டு ஏரியை நோக்கி ஒடி அதை வீசினாள் அவை நிலவின் ஒளியில் பழுப் பச்சையெனப் பயணித்து பின் ஏரிக்குள் விழுந்தன.முதல் முறையாக அவர்களுக்குப் பயம் வந்தது.
பாட் சோல்ஜர் உறக்கத்திலிருந்து விழிக்கவில்லை.இந்த நிலையில் என்ன செய்தி அனுப்ப முடியும் என அவர்கள் திகைத்துப் போனார்கள்.

மறு நாள் காலையில் பாதி உறங்கி உறங்காத அவர்கள் விழித்துக்கொண்ட போதிலும் பாட் சோல்ஜர் ‘ஸ்லீப்’ மோடிலேயே இருந்தது.
‘திரும்பக் கடலுக்குப் போய் கல் எடுக்கலாமா? ‘என்றான் சரத்.
‘இன்னிக்கு வேணாம்; நாம ஒன்னாவே போலாம். டென்டையும் மாத்தி உள்ள கொண்டு போலாம்.ரிபோர்ட் அனுப்ப வழி செய்யணும்.’ என்றான் ராம்.
மலைக் காடுகளில் அவர்கள் மௌனமாக நடந்தனர்.ஒன்றும் மாறுதலாகத் தென்படவில்லை.
‘அந்தக் கல்லில் ஏதோ இருக்கு; மதிப்பு அதிகமாக இருக்குமோ?ஆனா, நம்மைத்தவிர யாருக்குத் தெரியும்? இல்ல,கல்லு ஒரு சாக்கா? ஒன்னும் புரியல்ல.’
‘ஏன் அதுவே ஜேமராக இருக்கலாமே?ஒன்னு கவனிச்சியா,அதச் சுரண்ட்ற வரைக்கும் தப்பா நடக்கலயே?’
‘ஆனா, அத எறிஞ்சப்றமும் எம் டியக் கான்டேக்ட் பண்ண முடியலயே ‘
‘ரேடியேஷன் எஃபெக்ட்டோ? இல்ல ..’
‘ஆனால், அந்த எதிரி, வேறெப்படிச் சொல்ல,ஜேம் செஞ்சிருக்கான், சோல்ஜர் பாட்டையும் கொன்னுட்டான்.’
மறு நாள் கொஞ்சம் ஊக்கம் பெற்று தனியாகச் சென்றார்கள் நால்வரும். ராம் மட்டும் தகவல் தொடர்புக்கு முயற்சிப்பதற்காகக் கூடாரத்தில் இருந்தான்.எந்த முன்னேற்றமுமில்லை.எல்லோரும் சோர்வாக உணர்ந்தார்கள். பின் மாலையில் பொன்னகையும், சரத்தும் வந்த பிறகு மித்ரன் வந்தான்.
‘மித்ரன், ஷைலூ எங்கடா? நீ மட்டும் வர. ‘
‘என்னடா, அவ இங்க இன்னும் வல்லியா? நாலு மணி போல டயர்டா இருக்கு நான் திரும்பிப் போறேன்னு கிளம்பினாடா ‘
‘நீயும் கூட வரதுதான, இப்ப எங்கடா தேட்றது?’
‘வந்துருவா,ராம். ‘என்று சொன்னாலும் பொன்னகைக்குக் கவலையாக இருந்தது.
‘நான் போய் பாத்துட்டு வரேன் ‘என்று கிளம்பிய மித்ரனுடன் சரத்தும் சேர்ந்து கொண்டான். நள்ளிரவில் சோர்ந்து இருப்பிடம் திரும்பினார்கள். ‘இனி வேணாம்;இருட்ல மாட்டிக்க வேணாம் விடிகார்த்தால போய் பாப்போம்; ஷைலூ வழி தவறினாளோ இல்ல மாட்டிண்டு இருக்காளோ… ‘
அனைவருக்கும் வேதனையாக இருந்தது.மித்ரனைக் குற்ற உணர்வு குடைந்தது.அவன் காலை 4 மணிக்கு ஒரு செய்தி எழுதிவைத்துவிட்டுக் கிளம்பினான்.
’இப்ப நாம ரண்டு பேரத் தேடணும்;ரோஷத்ல தானே கெளம்பிட்டான். சரி, நாமளாவது ஒன்னாப் போவோம் .’
மலையும், காடும் எப்போதும் போல் மௌனித்து இருக்க சிற்றுயிர்களும்,பறவைகளும் சலனத்தை ஏற்படுத்திக்கொண்டே இருந்தன.தேடித் தேடி அவர்கள் அலுத்துப் போனார்கள்.மூன்று நாட்கள்..இருவர் தொலைந்து மூன்று நாட்கள்.சரத்தை அந்தப் பாலம் வழியாகத் திருப்பி அனுப்ப முடிவு செய்தார்கள். வேறு வழியில்லை, தொடர்பிற்கு வழி தெரியவில்லை,மூவரும் திரும்புவதும் சரியெனப் படவில்லை.மறு நாள் சரத் காலையில் கிளம்பட்டும் எனத் தீர்மானித்தார்கள்.
அவர்கள் கூடாரத்திற்குத் திரும்புகையில் மெலிதாகத் தொடங்கி வலுவாக தந்தி வாத்தியங்கள் வாசிப்பது போல் ஓசை கேட்டது. ஆனால், அது பூமியின் உள்ளே இருந்து கேட்பது போல் இருந்தது.தம்மையறியாமலேயே இவர்கள் பெரும் மரங்களின் பின்னே ஒளிந்து கொண்டனர்.நிலவறையைத் திறந்து வருவது போல் பூமியின் உட்பகுதியிலிருந்து எழுவர் வந்தார்கள்.உடல்கள் கொடியாடை அணிந்திருந்தன. கழுத்திலிருந்து தொங்கிய கருவிகளைக் கைகளால் இயக்காமல் வாய் ஓசையிலேயே இசை எழுப்பினார்கள். அவர்களில் ஒரு இளம் பெண் இருந்தாள்.அவள் கழுத்தில் கெட்டியான வேரில் கோர்க்கப்பட்ட பெரிய மரகதம் மின்னியது.மற்ற எவரிடத்திலும் எந்த நகைகளும், அணிகளுமில்லை.மனிதர்களே இல்லாத இடம் என்றார்களே, அப்படியென்றால் இவர்கள் யார் என்று திகைத்து நின்றிருந்த இந்த மூவரும் தங்கள் இதயத் துடிப்பு எகிற மறைந்திருந்தார்கள். எழுவரும் அந்த ஏரியின் கரைக்குச் செல்வதைப் பார்த்தார்கள்.
வானில் முழு நிலவு, அதன் ஒளி பரவி இங்கிருந்து ஏரி பசும் வெள்ளித் தகடெனத் தெரிந்தது.நின்ற இசை மீண்டும் ஒலித்தது, பிறகு நின்றது, பிறகு மீண்டும் ஒலித்து இவர்கள் நின்று கொண்டிருக்கும் இடத்தை நெருங்கிச் சட்டென்று நின்றது.அந்தப் பெண் இவர்களின் இளவரசியோ என்னவோ அனைவரும் மரியாதைக்குரிய தொலைவில் நின்றார்கள்.
அவர்கள் இந்த மூவரைச் சுட்டிக்காட்டி அந்தப் பெண்ணிடம் ஏதோ சொன்னார்கள். அந்தப் பெண் கழுத்திலிருந்த மரகதக் கல்லை தன் கையால் தடவினாள்.அதற்குள் சரத் தன் ‘ஸ்டெல்த்தை’ இயக்கிவிட்டான். அவர்களால் இவர்களைப் பார்க்க முடியவில்லை.
‘வெகு நேரம் நாம் இப்படித் தப்ப முடியாது’ என்ற ராம், ‘அவர்கள் வெளிவந்த பிலம் இன்னமும் திறந்திருக்கிறது. ஒருக்கால் ஷைலூவும், மித்ரனும் அதற்குள் இருக்கலாம்;இல்லாமல் போனாலும் இவர்கள் அங்கே என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள் எனப் பார்த்துவிடலாம்.ஆபத்து எப்படியும் இருக்கிறது.எதற்கும் ட்ரோன் கேப்சூலை தயாராக வைத்துக்கொள்ளலாம்.’
பிலத்தை அடைந்து உள்ளே நுழைகையில் அவர்கள் மேலும் அதிர்ச்சியும்,வியப்பும் அடைந்தார்கள்.அங்கே ஒரு மனித ரோபோவை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.அது இவர்களை வரவேற்றது.’உள்ளிருக்கும் இருவரையும் சேர்த்து ஐந்து கைதிகள் என்றது.அதன் பெரும் கைகள் இவர்களைச் சுற்றி இன்னும் ஆழத்திற்க்குக் கொண்டு சென்றது. ‘அரசி வரட்டம்’ என்று கொச்சையில் சொல்லிவிட்டு தன் இடத்தில் போய் நின்று கொண்டது.அங்கே அனைத்து வசதிகளும் இருந்தன.அந்த இடத்தைப் பற்றியும் அங்கே இயங்கும் தொழிலைப் பற்றியும் ஷைலூவும், மித்ரனும் சொன்னார்கள். “நாம் நிற்கும் தீவு ஒரு செய்தி கடத்தும் செயற்கைக்கோள் மையம் .”
‘என்னது?’
“ஸ்வாதிஷ்டா என்ற பெயருடனியங்கும் இது நாலாவது ஆழ் உலகுடன் புதன் கொள்ளும் தொடர்பு. “
‘என்ன சொல்றே?’
“சீனா நிலவின் மறைக்கப்பட்ட பகுதியில் இறங்கி சில தகவல்கள் சேகரித்து அதை’ஸ்யாவ்’(quequiao-the relay satellite of China positioned at Earth-Moon L2 Lagrange point for handling communication between ground controller and lander-rover of Chang’e-4 Yutu 2) என்ற செயற்கைக் கோள் மூலம் ‘யெஸ்’ அலைவரிசைகளில் கடத்தி, ‘எக்ஸ்’ அலைவரிசைகளில் பெற்றதல்லவா மிகச் சமீபத்தில்? அதைப் போலவே புதன் கிரகம் முன்னரே செய்ததுதான் இந்தத் தீவாம்.கீழுலகுடன் அவர்களின் தொடர்பாம்” என்றாள் ஷைலூ.
மித்ரன் தொடர்ந்தான்: ‘கடல் படுகையில் குறைந்த வெப்பத்தில், அதிக அழுத்தத்தில் படிகக் கட்டிகள்(க்ரிஸ்டலைன் சாலிட்) உண்டு. அதைக் கிளாத்ரேட்ஹைட்ரேட்ஸ்என்று(Clathratehydrates) சொல்வோம். தண்ணீர் கூட்டுக்குள்ள வரையறுக்கப்பட்ட மூலக்கூறுகள்ல மீதேன், கார்பன் டை ஆக்ஸைட் மாட்றதால ஃபார்ம் ஆகும் கட்டி அது.ஒரு இயற்கை எரி பொருள். அடிக்கடலின் படுகையிலேந்து இத எடுக்க முடியும்.பூமி வெப்பமாகாது.கார்பன் டை ஆக்ஸைட பிரிச்சு சாலிட் ஹைட்ரேட் செய்யற நுட்பத்தால இந்த கோள் இயங்குது’
“இன்ட்ரஸ்டிங்க். ஆனா,நாம முதல்ல தப்பிக்கணும். என்ன வழி இருக்கு?” என்றாள் பொன்னகை.
‘அதை நான் சொல்லவா?’ அந்தப் பெண் குகை வாயிலை அடைத்து நின்று கொண்டிருந்தாள்.மற்றவர்கள் பின் நின்றனர். இவர்கள் ட்ரோன் நுயூரல் கேப்சூலில் கைகளை வைக்க அவள் சரத்தைப் பார்த்துக்கொண்டே மெதுவாகத் தன் பதக்கத்தைத் திருப்பினாள்.