ஜேரெட் டயமண்டின் கசப்பு மருந்து
டேவிட் வாலஸ்-வெல்ஸ்[1]
தமிழில் சுருக்கியவர்: திலகம்
நம் பதட்டங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்; இத்தனை வேகத்தில் இயங்க வேண்டாம். வாழ்வின் சிறு விஷயங்கள் கொண்டு வரும் பெரும் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். ஜேரெட் டைமாண்டின் கூற்றின் படி இப்போது இயங்குவதைப் போலவே உலகம் தொடர்ந்து நடைபெறுமானால் 2050-ல் 49% உலகம் அழியும் சாத்தியக்கூறுகள் உள்ளன.
ஸ்டீவன் பிங்கர், பில் கேட்ஸ் போன்ற உலகறிந்த மனிதர்கள் கொண்டாடும் பெரும் சிந்தனையாளர் இவர். உலகம் தற்சமயம் எதிர்கொள்ளும் அபாயகரமான நிலைகளையும், நாம் நம் சரித்திரத்திலிருந்து பாடம் கற்காவிடில் எத்தகைய அழிவுகளுக்கு ஆட்படுவோம் என்பதையும் தனது ‘upheaval’ நாவலில் சொல்கிறார். மே10, 2019-ல் நியுயார்க் மாகஸீனின், ‘Intelligencer’ பகுதியில் அவரது நேர்காணல் வெளியாகியுள்ளது. அதை இக்கட்டுரையில் மொழியாக்கம் செய்திருக்கிறோம்.
ஒரு அறிவுஜீவியாக, 1991-ல், அவர் தனது ‘The Third Chimpanzee’ எனும் புத்தகத்தின் மூலம் வாசகர்களுக்கு அறிமுகமானார். வளர்ந்து கொண்டே வரும் மனச் சார்பியல் விஷயங்களைப் பேசியது அது. அதன் பிறகு, மேற்குலகம் எவ்வாறு ‘வெள்ளைத் தோல் மேலாண்மையை’ மையப்படுத்தி இன்றைய நவீன உலகை கட்டுப்படுத்தியது, தங்களது பூகோள மேன்மையை நிலை நிறுத்தியது என்பதை, ‘Guns, Germs, Steel’ (1997) என்ற மூன்று வார்த்தைகளுக்குள் விரித்ததொரு பார்வையாகப் படைத்து உலகப் புகழ் பெற்றார்.
சூழியல் சிதைவுகளால், எவ்வாறு முற்காலத்திய நாகரீகங்கள் சிதைவுற்றன என்பதை 2005-ல் வெளியான அவரது ‘Collapse’ என்ற நாவல் தரச் சான்றுகளுடன் சுட்டிக்காட்டியது. நம் வாழ்க்கைத் தேர்வுகளால் இயற்கைச் சூழல்கள் எவ்வளவு பாதிப்படைந்துள்ளன என்பதை உணர்வதற்கான நுழைவாயிலாக அது இருந்தது. 2012ல் (‘The World Until Yesterday’) வெளிவந்த அவரது படைப்பு நாமே நம் அழிவிற்க்குக் காரணம் என்பதைச் சொன்னது. தொன்மைச் சமுதாயங்களிலிருந்து நாம் பெற்றுக்கொள்ளக் கூடியவற்றையும் பற்றிப் பேசியது. ‘எழும்பி’ நிலை பெறும் இன்றையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாமென அவரது சமீபத்து நூலான ‘Upheaval’ (2019) சொல்வதைப் பற்றிக் கேட்போம்.
இனி அவருடைய நேர்காணல் :
உங்கள் வாழ்க்கைப் பணிகளின் சாளரம் வாயிலாக உங்களுடைய புதிய படைப்பினை நீங்கள் அணுகும் முறையைக் கேட்க விழைகிறேன்
ஜே. ட: உங்களுக்கு ஏமாற்றம் தான். என் படைப்புகளில் தொடர்ச்சி அல்லது உறவு என நான் எதையும் பார்ப்பதில்லை. உண்மையில், எனது பிந்தைய படைப்பு என்பது அதற்கு முந்தையதை முடித்ததும் எனக்கு ஏற்பட்டிருந்த ஆர்வமே!
ஒரு குறிப்பிட்ட கலாச்சார, அறிவார்த்தமான சூழலை மையப்படுத்தியதில் உங்களது புத்தகங்களான ‘‘Guns, Germs Steel’ , ‘collapse’, ‘upheaval’ ஆகியவற்றில் ஒரு ஒற்றுமையைக் காண முடிகிறது. குறிப்பாக ‘Guns, Germs, Steel’ ஒரு வரலாற்று ஆய்வு போல் தோற்றமளித்தாலும், படிக்கையில் உலகில் மேற்கு செலுத்தும் ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.
எனக்கு அதிக மதிப்பளிக்கிறீர்கள். நான் மூன்றில் ஒரு பங்கினை ஏற்பேன்- அதிலும் ‘collapse’ க்கிற்காக மட்டுமே! நான் பெருமிதம் கொள்ள ஒன்றுமில்லை.
நானும் அந்த நோக்கில் சொல்லவில்லை. ஆனால், மேற்கின் வெற்றியென நம் பண்பாட்டில் ஒரு தாக்கத்தை உணரும்படியான ஒன்று அதில் இருந்தது.
நாம் ஆங்கிலம் பேசுவதால் அது வெற்றி என்று ஆகாது. வரலாற்றின் போக்கில் ஏற்படுவது அது. அதில் பெருமிதம் தேவையில்லை. ‘Guns, Germs Steel’ சொல்வது அதையே.
ஒரு விநாடி நாம் ‘collapse’ பற்றிப் பேசலாமா?இத்தனை வருடங்களில் அந்தப் பிரச்சனைகளைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் மாறியுள்ளனவா?சமூகங்கள், சூழல் சீர்கேடுகளை உணர்ந்ததில், அதைச் சீரமைக்கும் முயற்சியில், அதனுடன் ஒத்துக்கொண்டு இதுதான் நிலை என்று உணரும் வகைமைகளில் உங்களுடைய பதினைந்து ஆண்டுக் காலப் பார்வை மாறியுள்ளதா?அல்லது அவ்வண்ணமே தொடர்கிறதா?
2005-ல் நான் பார்த்ததுதான் இன்னமும் தொடர்கிறது. சுற்றுச்சூழலைக் கெடுத்து தானும் அழிந்த பழைய சமூகம் தொடர்கிறது. நான் அந்தப் புத்தகத்தை எழுதிய பிறகு இன்னமும் இத்தகைய சீர்கேடுகள் நடப்பதைக் கேள்வியுறுகிறேன்; பார்க்கிறேன். புனித லூயியின் வெளிபுறத்திலிருக்கும் ’கஹோக்கோகியா’ (cahokia)வின் சுற்றுச் சூழல் அழிவுகள்; வட அமெரிக்காவின் புராதனமான, அதிக மக்கள் நிறைந்த இடம் அது. நான் ‘collapse’ எழுதுகையில் அதன் அழிவைப் பற்றி ஒன்றும் தெரியாது; ஆனால், மிஸிஸிப்பியின் வெள்ளப்பெருக்கு, சூழல், பருவக்காலங்களின் அழிக்கும் மாறுபாடுகள், ‘கஹோக்கோகியா’ வை அழித்ததைப் பற்றி வெளிவந்துள்ள ஆய்வு மிகக் குறிப்பிடத்தக்கது. எது நடந்து கொண்டிருந்ததோ அதைப் பேசிய புத்தகம்; ஆனால், எதுவும் மாறவில்லை என்பதே எதார்த்தம். 14 ஆண்டுகளில் பேரழிவைச் சந்தித்த சமூகங்கள், பேரழிவைச் சந்தித்துக்கொண்டேயிருந்தன. இன்று நாம் பார்ப்பது ஒவ்வொரு சமுதாயமாக அழிந்து கொண்டிருப்பதையல்ல; உலகமயமாக்கலின் விளைவாக ஒட்டு மொத்த உலகம் எதிர் கொள்ளும் மாசுச் சூழலை, அது கொணரும் அழிவைப் பார்க்கிறோம்.
மனித இனம் மொத்தமுமாக அழிவதற்கான சாத்தியக்கூறுகளின் சதவீதம் என்ன என்று கருதுகிறீர்கள்?
இன்று நாம் காணும் உலகம், 2050க்குள் அழிவதற்கான பாதையை 49% தேர்ந்தெடுத்துள்ளது; நான் உயிரோடு இருப்பது துர்லபம், ஆனால் என் குழந்தைகள்?இது நடைமுறை சார்ந்த என் ஈடுபாடு. சிக்கலான, கலவையான சமூகத்திற்க்குத் தேவையான உறு பொருட்களை, அதன் தக்க வைக்கும் விதங்களைக் கருதாமல் நாம் இன்று நுகர்ந்து கொண்டிருக்கிறோம். கடல் சார் உயிரினங்களை நாம் அதிகமாக நுகர்ந்தும், அழித்தும், அவ்வளங்களைத் தக்க வைத்துக்கொள்ளும் படிப்பினையற்றும் இருக்கிறோம். வளங்கள் குறைகின்றன, பண்ணைகளும், காடுகளும் குறைகின்றன. மண் வளம், நீர்வளம், விளை நிலம் ஆகியவற்றைத் திறமையாகப் பயன்படுத்தி பாதுகாக்கத் தவறிவிட்டோம். 2050க்குள் ஒரு நல்ல வழியினை நாம் கண்டறியாமல் இப்படியே தொடர்ந்தால் அழிவினை நோக்கி சிலப் பத்தாண்டுகளில் சென்றுவிடுவோம்.

தக்க வைத்து மேம்படுத்தும் எந்தெந்த வழிகளை உங்கள் புத்தகம் முன்னெடுக்கிறது?
நாம் மிகப் பெரிய இடர்ப்பாட்டில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து ஒப்புக்கொள்வது முதல் படி. அதைப்பற்றியே, அதாவது, சிக்கலில் இருப்பதைப் பற்றியே உணராவிடில் என்ன பயன்?இன்றைய அமெரிக்காவில் பெரும்பாலோர் இதையே ஒத்துக்கொள்ளாதவர்கள்.
இரண்டாவது படி இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண வழி இருக்கும் என உணர்வது. நம்மால் அதற்கான செயலாற்ற முடியுமென நினைப்பது, அது பொறுப்பான செயல்பாட்டைக் கோருவது என உணர்வது. பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் மனநிலையைக் கொள்வது. இந்த இடர்களுக்கெல்லாம் வேறொருவர் காரணம் என நினைக்கத் தொடங்கினால் தீர்வு பிறக்காது. . எடுத்துக்காட்டாக, நம் தலைவர்களை, அரசியல் தலைவர்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் , அமெரிக்காவின் பிரச்சனைகளுக்கு அமெரிக்கா காரணமில்லை; அவை கனடாவால், மெக்ஸிகோவால், சீனாவால் ஏற்படுத்தப்பட்டது என்கிறார்கள். நம் நாட்டின் இடர்கள் பிறரால் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று சொல்கையிலேயே அதன் தீர்வு நம்மைச் சார்ந்ததில்லை என்ற எண்ணம் ஓங்கிவிடுகிறது.
சுற்றுச் சூழல் பற்றிப் பேசுகையில் அதிலும் எதிர் நிலைகளை நாம் இங்கே பார்க்கிறோம். தனி மனிதர்கள் தத்தம் வழிகளில் சூழலைக் கெடுக்கக் கூடாதென்பதிலிருந்து, பெருங்குழுமங்கள் தங்கள் ஆதாயத்தின் பொருட்டு செய்யும் சீர்கேடுகளிலிருந்து, ‘ரிபெப்ளிகன் கட்சியின்’ ஒதுக்கத் தக்க கருத்து நிலைப்பாடுகளிலிருந்து, . . . . இத்தகைய எண்ணங்களில் பொறுப்பு என்பதை எவ்வாறு கட்டமைப்பது?
ஐந்து வருடங்களில் அமெரிக்காவின் குடிமக்களின், வாக்குதாரர்களின் எண்ணம் சுற்றுச் சூழலியலை நாம் கவனப்படுத்த வேண்டும் என்று மேம்பட்டுள்ளது. நாம் பொறுப்பாளிகள், சீர் செய்ய வேண்டியவர்கள் என்ற எண்ணம் வந்திருக்கிறது. தனிப்பட்ட முறையிலும், குழுமங்களும், அரசும் மூன்று நிலைகளாக இதில் பங்கெடுக்க வேண்டும். தனித்த முறையில் நாம் சூழலுக்கு இசைந்த சிற்றுந்துகளை வாங்கலாம். பொது வாகனங்களைப் பயனீட்டிற்குக் கொண்டு வரலாம். தனி மனித முயற்சிகளின் ஊடாக வாகனங்கள் காற்றினை மாசு படுத்துவதைக் குறைக்கலாம். குழுமங்களின் தனிப்பட்ட குறிக்கோள்களையும், அவர்களது பொதுவான சுற்றுச் சூழல் கடமையையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். நான் ‘உலக வல்லுயிர் நிதியம், ‘ ‘உலகப் பொது பாதுகாப்பு இயக்கம்’ இவற்றில் இருந்தேன். வால்மார்ட், கோக் குழுமங்களின் தலைவர்கள், பெரும் நிர்வாகிகள் உட்பட இத்தகையக் குழுக்களில் இடம் பெற்றிருந்தனர். சிலப் பெருங் குழுமங்கள் தாங்கவொண்ணா செயல்களைச் செய்தாலும், சில மிக நல்லனவற்றைச் செய்கின்றன. அவை கண்களில் படாமல் சென்றுவிடுகிறது. Exxon Valdex- அருவருக்கத்தக்க, சூழல் கேடாக, கடலில் பரந்தோடிய, அந்த எண்ணை விபத்தின் மூலம் கடலின் பல்லுயிரிகளைக் கொன்றதை முதல் பக்கச் செய்தியாக அறிவித்த நாளேடுகள், நியூ கினியாவில் தங்களது எண்ணை வயல்களை அதிகக் கட்டுப்பாட்டுடன் கையாண்டதை முதல் பக்கச் செய்தியாகச் சொல்லவில்லை. அவர்கள் விரும்பும்’ ஆர்வம் தூண்டுதல்’ அதில் இல்லாமல் போய் விட்டது போலும்!
ஆம், ரிபப்ளிகன் அரசு. . . அரசிற்கும் கடப்பாடு உண்டு. தனி மனிதர், குழுமங்கள், அரசு மூவரும் இழுக்க வேண்டிய தேர் இது.
இன்றைய நிலையை உங்கள் புத்தகம் சொல்கிறது. பருவக் காலச் சூழல்கள், உறு பொருட்கள் ஆகியவை பேசு பொருட்களாகின்றன. அதே சமயம், அணு ஆயுதங்கள், அணுக்கதிர் வீச்சு அபாயங்கள் ஆகியவைப் பற்றியும் சொல்கிறீர்கள் சற்றுக் கேலிக்குரிய கேள்விதான். . இவை அனைத்தின் அபாயங்களை எவ்வாறு வரிசைப் படுத்துவீர்கள்?
நான் உள்ளூரச் சிரித்துக்கொள்கிறேன், நண்பரே!’ நம் முயற்சிகளை எந்த விதத்தில் நாம் முதன்மைப்படுத்துவது என்றால்’ , நாம் முதன்மைப்படுத்தப் பார்ப்பதே முறையற்றதாகிவிடும். ‘ஜெடி, நான் திருமணம் செய்யப் போகிறேன். வெற்றிகரமான இல் வாழ்விற்கு மிக முக்கியத் தேவையென எதைச் சொல்வீர்கள்?’ என்று கேட்டால்’ மிகக் குறுகிய வருடங்களுக்குள்ளாக மணமுறிவினை எதிர் கொள்ளும் சாத்தியங்கள் உள்ளதை உங்கள் கேள்வி சுட்டுகிறது ‘ என்பேன். 37 விஷயங்கள்- உடலுறவு, பணம், மண உறவு கொண்டு வரும் பெற்றோர்- போன்ற பல்வேறு விஷயங்கள்- இதில் ஒன்று தவறாகப் போனாலும் மகிழ்ச்சியான மண உறவு சாத்தியப்படாது.
அப்படியிருக்க, இன்றைய உலகின் சீர் கேடான நிலையினைச் சரி செய்ய எதை முக்கியமாக முதன்மைப்படுத்துவது?சூழியல் கேடுகளைச் சரி செய்துவிட்டு, அணுக்கதிர் அபாயங்களை நாம் கண்டு கொள்ளாவிடில் என்ன பயன்?சூழியல் சிதைவுகளை அலட்சியப் படுத்திவிட்டு அணுக்கதிர் அபாயங்களை முன்னிறுத்தி போராடுவோம் என்றாலும் பயனில்லையே? நாம் சூழல் சீர் கேடுகளை சரி செய்துவிட்டோம், அணுக்கதிர் அபாயங்களைத் தவிர்த்துவிட்டோம் என்றாலும் கூட, வாழ்வதற்கான உறு பொருட்களைத் தக்க வைத்துக் கொள்ள தவறினோம் என்றாலுமே அழிவை நோக்கிப் போய்விடுவோம். முற்றாக அழித்திடும் அணுக்கருவிகளை உபயோகிக்காமல், சூழல் சிதைவுகளைச் சீர் படுத்தி, வளங்களை நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றலில் மேம்பட்டாலும், உலகின் ஏற்றத் தாழ்வுகளைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் அழிவை நோக்கித்தான் செல்ல நேரிடும். எனவே, முதன்மைப் படுத்துதல் இயலாத ஒன்று. ஒரு திருமணத்தில், பணம், இன்-லாஸ், செக்ஸ், குழந்தை, மதம் போன்ற அனைத்தும் அதன் மகிழ்ச்சிக்குக் காரணமாக அமைவதைப் போல, மேற் சொன்ன நான்கும் சம அளவு முக்கியத்துவம் வாய்ந்தவையே!
நாம் செய்ய வேண்டுவது என்ன? வரலாற்றில் இதற்கான வழி முறைகள் உள்ளனவா?
மகிழ்வான திருமணம் கோரும் நுண்ணிய புரிதல் மற்றும் தெளிவு இதிலும் தேவை. என் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பட்டியல் பல்வேறு காரணிகளின் உள்ளீடு. மூன்றை முக்கியமெனக் கருதலாம்- அது குறைந்த கூற்றென ஆகும்; 72 காரணிகளைச் சொல்லலாம்- யாரும் புத்தகத்தைப் படிக்க மாட்டார்கள். இன்றைய அமெரிக்கா மற்ற சமூகங்களை, நாடுகளை முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு செயலாற்றத் தயங்குகிறது. ஒரு திருமணம் முறிந்தது, அல்லது முறியக்கூடிய நிலையில் உள்ளது எனில், செறிவான மண வாழ்க்கையை வாழ்வோரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். ஆனால், பரிதாபம், இன்றைய அமெரிக்கா ‘தனிப்பாடுடைய பெருமிதர்கள்’ என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறது. நாம் பிறரிடமிருந்து கற்றுக் கொள்ள ஒன்றுமில்லை என நினைக்கிறது. நம் கண்டத்திலிருக்கும் அண்டை நாடான கனடாவாகட்டும், ஐரோப்பிய கண்டங்களிலுள்ள மற்றக் குடியரசுகளாகட்டும், அவரவர்களுக்கென்று பிரச்சனைகள் உண்டு. நாம் சரிவரக் கையாளாதப் பிரச்சனைகள் அங்குமுண்டு. வட ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பொது சுகாதார நலம் குறித்த விசனங்கள் உண்டு, கல்வித் துறை பிரச்சனைகள் உண்டு, சிறைகளைப் பற்றியும், தனி மனித விருப்பங்களுக்கும், பொது சமூகக் கூட்டு விருப்பங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளி குறித்தான கவலைகள் உண்டு. நாம் நம் நாட்டில் சிறை, கல்வி, பொது நலம் போன்றவற்றைப் பற்றி மிகுந்த அதிருப்தியுடன் இருக்கிறோம்.
மற்ற நாடுகளில் இப்பிரச்சனைகளை நம்மை விடத் திறமையாக அவர்கள் கையாளுகிறார்கள். எனவே ‘தனிப்பாடுடைய பெருமிதர்கள்’ என்ற உண்மையற்ற எண்ணத்தை விட்டுவிட்டு நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.
இந்தப் புத்தகம் அமெரிக்கா தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டிய பார்வையைச் சொல்கிறதா?அல்லது பரந்து பட்ட விரிவான உலக மக்களுக்கானதா?
யு எஸ் ஏ மற்றும் 215 நாடுகளுக்கானது. நம்முடைய பிரச்சனைகளுடன் போராடுகிறோம். இத்தாலியிலிருந்தும், பிரித்தனிலிருந்தும் இப்போது திரும்பிவந்தேன். பிரித்தன் ‘ப்ரெக்சிட்’ டில் இருக்கிறது; இன்னமும் தொடரும்
அதை அவர்கள் விடுவதாக இல்லை.
எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் அவர்கள் ‘ப்ரெக்சிட்’ டில் இடர்படுகிறார்கள். இத்தாலியில் அவர்களுக்கே உரித்தான பிரச்சனைகள். எந்த நாடு இடர்ப்பாடு இல்லாமல் இருக்கிறது எனச் சொல்லவே முடியவில்லை
ஆம், உண்மை
நார்வே சற்று நலத்துடன் இருக்கிறது வேறு என்ன?
போர்ச்சுகலையும் சொல்லலாம்.
போர்ச்சுகலை ஒருக்கால் சேர்க்கலாம். எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் கோஸ்டா ரீக்காவைச் சொல்லலாம். கோஸ்டா ரீக்காவின் நான்கு ஜனாதிபதிகளும் சிறையினுள்ளே இருக்கிறார்கள். இது முக்கியமான பிரச்சினை.
செறிவான, செழிப்பான, நிறைவளிக்கக்கூடிய எதிர்காலத்திற்கு எடுத்துக்காட்டும் விதமாக ஒரு நாடும் இல்லையெனில் செய்யக்கூடுவதுதான் என்ன?
நல்ல கேள்வி. அந்தப் புத்தகத்தின் ‘உலகை’ ப் பற்றிய கடைசி ஆறு பக்கங்களை எழுதியிராவிடில் விடிவு இல்லாத நிலை எனச் சொல்லும் நம்பிக்கையற்றவனாகவே என்னை உணர்ந்திருப்பேன். யு. என் பற்றி, அதன் சக்தி குறைவென்றாலும், நம்பிக்கையுடன் நினைக்கிறேன். ஆனாலும், பெரும் பிரச்சனைகளை அதால் தீர்க்க முடியாது என்று கருதுவதால் நான் இருட்டில் ஆழ்ந்தவனாக இருக்கிறேன்.
ஆனால், ஒரு அதிர்ஷ்டகரமான செய்தி . நண்பர்கள் சொன்னார்கள்-கடந்த 40 வருடங்களில் சிக்கலான, முட்கள் மிகுந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்ட வெற்றிகரமான பாதைகள் உள்ளன என்று. உதாரணத்திற்கு, கடலோரப் பொருளாதார நாடுகளை எடுத்துக் கொள்வோம்; பெரும்பான்மையான கடலோரப் பொருளாதார நாடுகளின் எல்லையை வரைந்து வரைமுறைப் படுத்துவது எவ்வளவு சிரமம்? அதை வெற்றிகரமாகச் செய்திருக்கிறார்கள். சின்னம்மை நோயை எடுத்துக் கொள்வோம்-உலக நாடுகளிலிருந்து- சோமாலியா, எதியோப்பியா உட்பட, அதை நீக்குவதில் நல்ல ஒரு செயல்பாடு தெரிகிறதல்லவா?
கலிபோர்னியாவைப் பற்றிக் கேட்க நினைக்கிறேன். ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும் சிறப்புகள் மிக்க இடமாக, அதாவது சுற்றுச்சூழலியல் அறிவு, உறு பொருட்களின் தக்க வைக்கும் தேவை இவற்றை எல்லாம் உணர்ந்து கடைப்பிடிக்கும் ஒரு நகராக, மற்ற மாநிலங்களை விடச் சிறப்பான இத்தகு சட்டங்களும், கோட்பாடுகளும் உள்ள இடமாக இதைப் பார்க்கிறேன். ஆனால், மன்னிக்கவும், பூகோள அமைப்பினால், அதி தீவிர நீர் பிரச்சனைகள் தொடங்கி, காட்டுத்தீ வரையிலான எண்ணிலடங்கா இடர்கள் அங்கே மிகுந்துமிருக்கின்றன. ஒரு கலிபோர்னியராக, இந்த நிலைகளை நன்கு உணர்ந்தவராக, நிகழ் காலச் சூழல்களையும், எதிர்காலத்தின் பயமுறுத்தும் சிக்கல்களையும் அறிந்தவராக நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?அதன் எதிர்காலம் எப்படியிருக்குமென்று நினைக்கிறீர்கள்?
பிரச்சனை அனைத்து இடங்களிலும் உள்ளது. கலிபோர்னியாவைப் பொறுத்தவரை நான் நம்பிக்கையாளனே!சுற்றுச்சூழல் இடர்கள் இருந்தாலும், அரசின் செயல்பாடுகள் இவ்விஷயத்தில் சரியான போக்கைக் கையாளுகின்றன. மிகச் சிறந்த மாநிலமென இதை நான் சொல்லவிட்டாலும், மிகச் சிறந்த மாநிலங்களில் ஒன்றெனச் சொல்லலாம். ஒப்பிடுகையில் படித்த குடிமக்கள் இருக்கிறார்கள். யு. எஸ் ஸின் சிறந்த பொதுக் கல்வியும், சிறந்த மேல் நிலைக் கல்வியும் இங்கே இருக்கிறது. கலிபோர்னியா பல்கலையிலிருந்து அரசை நோக்கி மேலும் மேலும் நிதி தேவை என பல்கலையைச் சேர்ந்த நானும் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறேன். நாங்கள் இடரினில் இருந்தாலும், அதைப் போக்கும் தகைமையுள்ளவர்களாக இருக்கிறோம் என்பது எனக்கு உவப்பாக இருக்கிறது; நம்பிக்கை அளிக்கிறது.
நான் ந்யூயார்க்கைச் சேர்ந்தவன். கிழக்குக் கடற்கரையின் தட்ப வெப்பத்தில் வசிப்பவன். காட்டுத்தீயினைப் பார்க்கையில் அதால் பாதிப்படைந்த மனிதர்களைச் சந்திக்கையில் அல்லது அவர்களது கதைகளைப் படிக்கையில், அது கலிபோர்னியாவின் தெற்கோ, நடுவோ, வடக்கோ, எப்போதும் இடம் பெயரும் நிலையிலும், திட்டத்துடனும் நீங்களெல்லாரும் கலிபோர்னியாவில் வசிப்பதாகத் தோன்றும். அது எப்படி இயல்கிறது என்ற வியப்பும் உண்டு. மன வேதனைகள், அல்லது, திட்டங்கள், அல்லது எதிர் நோக்குகள் அதற்கான விலையாக இருக்கும் என அஞ்சுகிறேன்.
நான் பாஸ்டனில் பிறந்து வளர்ந்ததால், மன விலைகளைப் பற்றி நன்கு அறிவேன். பாஸ்டனில் அன்டெல் மற்றும் அய்டன் குழுவில் நான் கோரஸ் பாடும் நபராக இருந்தேன். மே மாதத்தின் கடைசி வாரத்தில் பாஸ்டனின் சிம்பொனி அரங்கில் பாடும் நிகழ்ச்சி பனிப்புயலால் இரத்து செய்யப்பட்டது. எனக்குத் தாள முடியவில்லை. மேயின் கடைசி வாரத்தில் பனிப்புலால் பாஸ்டன் சிம்பொனி அரங்கில் நிகழ இருந்த இசை நிகழ்ச்சி தடைப் பட்டதென்றால், அப்பேர்ப்பட்ட நகரில் நான் வசிக்க மாட்டேன்.
அது ஒரு நிகழ்வு தான். ஆனால், குளிர் கால ஐந்து மாதங்களிலும் அங்கே நிலவுவது கடுங்குளிர்; இளவேனிலின் இரு வாரங்கள் இனிமையாக இருக்கும்; கோடையில் நான்கு மாதங்களில் வெய்யிலின் உக்கிரம்; பின்னர் இலையுதிர் காலத்தின் சில வாரங்கள் நன்றாக இருக்கும். ந்யூயார்க்கிலும் இதே கதைதான். எனவே இங்கே வருகையில் ‘ஆம், காட்டுத்தீ உள்ளது, வெள்ளம் பெருகுகிறது. நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன, மண்சரிகிறது. ஆனால், வட கிழக்கில் வாழ்வதற்குக் கொடுக்க வேண்டிய மனவிலைகளை நான் கொடுக்க நேரிடாமல் என்னை இங்கே வாழ வைத்த கடவுளுக்கு நன்றி.
——————————–
பின்குறிப்பு:
நன்றி: நியுயார்க் மாகஸீன், டேவிட் வாலெஸ்- வெல்ஸ்.
இந்தக் கட்டுரையின் இங்கிலிஷ் மூலம் இங்கே கிட்டும்: http://nymag.com/intelligencer/2019/05/jared-diamond-on-his-new-book-upheaval.html