பெரும் மௌனம்

பூமிக்கு அப்பால் அறிவுள்ள ஜீவராசிகளைத் தேட அரெசிபோவை (விண்வெளி ஆய்வுக் கூடம்) மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள். தொடர்பு கொள்வதற்கு அவர்களுக்கு உள்ள ஆசை அத்தனை தீவிரமாக இருப்பதால், பேரண்டத்தின் ஊடாக (சப்தங்களைக் ) கேட்டறிய ஒரு காதையும் உருவாக்கி இருக்கிறார்கள்.

ஆனால் நானும் என் சக கிளிகளும் இங்கேதான் இருக்கிறோம். அவர்கள் ஏன் எங்கள் குரல்களைக் கேட்பதில் நாட்டமின்றி இருக்கிறார்கள்?

நாங்கள் அவர்களோடு தொடர்பு கொள்ள முடிகிற மனிதரல்லாத உயிரினம். அதைத்தானே மனிதர்கள் தேடுகிறார்கள்?

பிரபஞ்சம் எத்தனையோ பிரும்மாண்டமானது, அதில் தீர்க்கமான அறிவுள்ள உயிரினங்கள் நிறைய முறைகள் உருவாகி இருக்க வேண்டும். பிரபஞ்சம் அத்தனை பழமையானது என்பதால் தொழில் நுட்பத் திறனுள்ள ஒரு உயிரினம் அதில் உருவாகி மொத்த விண்மீன் மண்டலத்திலும் பரவி அதை நிரப்பி இருக்க வேண்டும். இருந்தும் பூமியைத் தவிர வேறெங்கும் உயிரினமேதும் தென்படவில்லை.மனிதர்கள் இதை ஃபெர்மி முரண்புதிர் என்று அழைக்கிறார்கள்.

ஃபெர்மி முரண்புதிருக்கு விடையாக முன்வைக்கப்படுவதில், அப்படி புத்தி நிறைந்த உயிரினங்கள் தம்மை அழிக்கப் படையெடுப்போரிடம் இருந்து தம் இருப்பை மறைக்க மிக்க முயற்சி எடுப்பார்கள் என்பது ஒன்று உள்ளது.

மனிதர்களால் அனேகமாக அழித்தொழிக்கப்பட்ட நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள ஓர் உயிரினத்தின் ஒரு நபரான என்னால் அதை ஒரு மதியூக நடவடிக்கை என்று அங்கீகரிக்க முடிகிறது.

அமைதி காப்பதும், கவனம் தம்மீது திரும்பாமல் தவிர்ப்பதும் அறிவார்ந்த செயல்களாகத் தெரிகின்றன.

ஃபெர்மி முரண்புதிர் சில நேரம் பெரும் மௌனம் என்று அறியப்படுகிறது. பிரபஞ்சம் சகல விதக் குரல்களால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும், ஆனால் சங்கடப்படுத்தும் விதமாக அது அமைதியாக இருக்கிறது.

சில மனிதர்கள், அறிவுள்ள ஜீவராசிகள் விண்வெளிக்கு விரிவடைந்து பெருகுமுன்னர் அழிந்து போய் விடுகின்றன என்று கருதுகோள்களை முன்வைக்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மையானால், இரவு நேரத்து வானின் பெருமௌனம் புதைகாட்டின் மௌனமாகும்.

சில நூறு வருடங்களுக்கு முன்பு, என் போன்ற வகையினர் ஏராளமாக இருந்தனர், அதனால் ர்ரியோ அபாஹ்ஹோ காடு எங்கள் குரல்களால் அதிர்ந்தது. இன்று நாங்கள் அனேகமாக அழிந்து விட்டோம். இந்த மழைக் காடு சீக்கிரமே பிரபஞ்சத்தைப் போல மௌனமாக ஆகப் போகிறது.

அலெக்ஸ் என்ற ஆஃப்ரிக்க சாம்பல் நிறக் கிளி இருந்தது. அந்தக் கிளி அதன் அறிவுத் திறனால் புகழ் பெற்றதாக இருந்தது. அதாவது, மனிதர்களிடையே புகழ்.

ஐரீன் பெப்பர்பெர்க் என்ற மனித ஆய்வாளர் அலைக்ஸை முப்பதாண்டுகள் கவனித்து ஆராய்ந்தவர். அவர் அலெக்ஸுக்கு வடிவங்களுக்கும், நிறங்களுக்கும் உள்ள சொற்கள் தெரிந்திருந்தன என்பதோடு, அவனுக்கு வடிவுகள், நிறங்கள் ஆகியவற்றின் கருத்துருக்களும் புரிந்திருந்தன என்றும் கண்டறிந்திருந்தார்.

ஒரு பறவையால் அரூபமான கருதுகோள்களைப் புரிந்து கொள்ள முடியும் என்பது பற்றிப் பல அறிவியலாளர்கள் ஐயம் கொண்டிருந்தனர். மனிதர்களுக்குத் தாம் ஏதோ தனிச் சிறப்புள்ள உயிரினம் என்று நினைக்கப் பிடிக்கும். ஆனால் இறுதியில் பெப்பர்பர்க் அவர்களை அலெக்ஸ் வெறுமனே சொற்களைத் திருப்பிச் சொல்லவில்லை, அவனுக்குத் தான் என்ன சொல்கிறோம் என்பது புரிந்திருந்தது என்று ஏற்க வைத்தார்.

என் உறவினர்களில், அலெக்ஸ் ஒருவனே தொடர்பு கொள்ளத் தகுதி உள்ள நபராக மனிதரால் அனேகமாக ஏற்கப்பட்டவன்.

அலெக்ஸ் ஓரளவு இளம் வயதிலேயே திடீரென்று இறந்தான், இறப்பதற்கு முந்தைய மாலையில், அவன் பெப்பர்பெர்க்கிடம், ‘நீ நல்லவளாக இரு. நான் உன்னை நேசிக்கிறேன்.’ என்றானாம்.

மனிதர்கள் மனிதரல்லாத, அறிவுள்ள ஜீவன்களோடு உறவு ஏற்படுத்த வேண்டுமென முயல்கிறார்களானால், அதை விட மேலாக அவர்கள் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

ஒவ்வொரு கிளிக்கும் குறிப்பிட்டு அடையாளம் காட்டக் கூடிய ஒரு கூவல், அதற்கே உரித்த ஒன்றாக இருக்கிறது; உயிரியலாளர்கள் இதை கிளியின் ‘தொடர்புக்கான கூவல்’ என்று குறிக்கிறார்கள்.

1974 இல், விண்வெளி ஆய்வாளர்கள் ஆர்ஸிபோவைப் (ஆய்வுக் கூடத்தை) பயன்படுத்தி விண் வெளியில் ஒரு செய்தியை ஒலிபரப்பினார்கள், அது மனித அறிவுத் திறனை வெளிக்காட்டுவதற்கான செயல். அது மனிதர்களின் ‘தொடர்புக் கூவல்.’

வன வெளியில் கிளிகள் ஒன்றையொன்று பெயர் சொல்லி அழைக்கின்றன. ஒரு பறவை மற்றதின் அடையாளக் கூவலைத் தான் பதிலி செய்து மற்றதன் கவனத்தை ஈர்க்க முயல்கிறது.

மனிதர்கள் அரேசிபோவின் செய்தி பூமிக்கே திருப்பி அனுப்பப்படுவதாக என்றாவது கண்டு பிடிப்பார்களே ஆயின், அவர்களுக்குப் புரிந்து விடும், யாரோ தம் கவனத்தை ஈர்க்க முயல்கிறார்கள் என்று.

கிளிகள் குரல் வழியே கற்பவர்கள்: நாங்கள் ஒலிகளைக் கேட்ட பின் புது ஒலிகளை எழுப்பக் கற்க முடிகிறவர்கள். இந்தத் திறன் வெகு சில மிருகங்களிடமே உள்ளது. நாங்கள் வெறுமனே ஒலியைக் கூவுவதில்லை. உச்சரிக்கிறோம். தெளிவாக விளக்கிப் பேசுகிறோம்.

அதனால்தானோ என்னவோ மனிதர்கள் அரேசிபோவை அந்த மாதிரி நிர்மாணித்திருக்கிறார்கள். தொடர்பை வாங்குவது தொடர்பை ஒலிபரப்பக் கூடியதாக இருக்க அவசியம் இல்லை. ஆனால் அரேசிபோ இரண்டும் செய்யக் கூடியது. அது கேட்கும் காது, பேசும் வாய்.

கிளிகளின் அண்டைப் புறத்தில் மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள், சமீபத்தில்தான் நாங்கள் அறிவுள்ள ஜீவராசியாக இருக்கக் கூடும் என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது. கிளிகளாகிய நாங்கள் மனிதர்கள் கொஞ்சம் மந்த புத்திக்காரர்கள் என்று நினைத்திருந்தோம். நம் நடத்தை போல அல்லாததைப் புரிந்து கொள்வது கடினமானதுதான்.

ஆனால் வேறெந்த விண்வெ ளிஜீவராசியையும் விட கிளிகள் மனிதர்களைப் போன்றவர்களே. மேலும் மனிதர்கள் எங்களை மிக அருகில் அவதானிக்க முடியும், எங்களைக் கண்ணுக்கு நேரே நோக்க முடியும். நூறு ஒளி வருடங்களுக்கு அப்பாலிருந்து வெறும் ஒலிகளை மட்டுமே கேட்க முடிகிறது என்பதை வைத்துக் கொண்டு அறிவுள்ள வேற்று கிரகத்து ஜீவராசியை அவர்கள் புரிந்து கொள்ள முடியுமென்று அவர்கள் எப்படி நம்புகிறார்கள்?

அபிலாஷை என்பது முழு மூச்சுடன் முயற்சித்தால் கிடைக்கக்கூடிய பெருவிருப்பாக நாம் கொள்கிறோம். இதில் நம்பிக்கையும், சுவாசித்தலும் இணைந்திருப்பது தற்செயல் உடன்நிகழ்வுகள் இல்லை.

நாம் பேசும்போது நம் நுரையீரலில் உள்ள மூச்சைப் பயன்படுத்தி நம் சிந்தனைக்கு ஒரு தூல உரு கொடுக்கிறோம். நாம் எழுப்பும் ஒலிகள் ஒரே நேரம் நம் ஜீவ சக்தியாகவும், நம் உள்ளுந்ததல்களாகவும் இருக்கும்.

நான் பேசுகிறேன், அதனால் நானாக இருக்கிறேன். ஒருக்கால், குரல் வழியே கற்பவர்களில், கிளிகளும், மனிதர்களும் மட்டும்தான் இந்த வாக்கியத்தின் முழு நிஜத்தையும் அறிந்தவர்களோ என்னவோ.

நம் வாயால் ஒலிகளை உருவாக்குவதில் ஒரு தனி சந்தோஷம் இருக்கிறது. இது அத்தனை ஆழ்ந்த மூலாதாரமானதும், உள்ளுணர்வில் இருந்து எழுவதுமாக இருந்ததால்தான் மனிதர்கள் இதை தெய்வீகத்துக்குப் பாதையாக, வரலாறு பூராவும் கருதி வந்திருக்கிறார்கள்.

பிதாகோரிய ஆன்மீகர்கள் உயிரெழுத்துகள் அண்ட கிரகங்களின் ஒலிகளுக்குச் சுட்டிகள் என்று கருதினர், உச்சாடனங்கள் வழியே அவற்றிலிருந்து சக்தியைக் கிரகிக்க உச்சாடனங்களைப் பயன்படுத்தினர்.

பென்டகோஸ்டல் கிருஸ்தவர்கள் மொழி போன்றிருக்கும் புரியாத ஒலிகளில் பேசும்போது, சுவர்க்கத்தில் உள்ள தேவதைகள் பேசும் மொழியில் தாம் பேசுவதாகக் கருதுகிறார்கள்.

இந்துப் பிராம்மணர்கள் மந்திரங்களை உச்சாடனம் செய்வதன் மூலம், எதார்த்தத்தை நிர்மாணிக்கும் பொருட்களுக்கு வலு சேர்ப்பதாகக் கருதுகிறார்கள்.

வாய் ஒலி வழி கற்கும் ஜீவராசிகள்தான் தம் புராணங்களில் ஒலிகளுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்திருக்க முடியும். கிளிகளாகிய எங்களால் இதை ரசித்துப் பாராட்ட முடிகிறது.

இந்துப் புராணங்களின்படி, பிரபஞ்சமே ஒரு ஒலியிலிருந்துதான் பிறந்தது: “ஓம்”. அந்த அசை (கூட்டொலிப்பு) தன்னுள் இதுவரை இருந்த அனைத்தையும், இனி வரப்போகும் அனைத்தையும் கொண்டிருக்கிறது.

அராசிபோ தொலைநோக்கி நட்சத்திரங்களின் இடையில் உள்ள விண்வெளியை நோக்கித் திருப்பி வைக்கப்படும்போது, அது ஒரு மெலிதான ரீங்காரத்தைக் கேட்கிறது.

விண்வெளி ஆய்வாளர்கள் அதை ‘பேரண்ட நுண்ணலைப் பின்னணி’ [1] என்று அழைக்கிறார்கள். இது பதிநான்கு பிலியன் வருடங்கள் முன்பு ஏற்பட்டதும், பிரபஞ்சத்தை உருவாக்கக் காரணமாக இருந்ததுமான பெருவெடிப்பின் [2] எச்சமான கதிரலை என்றும் சொல்கிறார்கள்.

அதையே மிகச் சன்னமாகக் கேட்கும் துவக்கக் கட்டத்தின் ரீங்காரமான “ஓம்” என்றும் நீங்கள் எண்ணலாம். அந்த அசை (கூட்டொலிப்பு) அத்தனை ஒத்ததிர்வாக இருப்பதால், பிரபஞ்சம் இருக்கும் காலம் வரை இரவு நேரத்து வானம் இந்தக் கூட்டொலியால் ரீங்கரித்துக் கொண்டே இருக்கும்.

அரேசிபோ வேறெதையும் கேட்காமல் இருக்கும்போது, படைப்பின் இந்த ஒலியை அது கேட்கிறது.

போர்த்தொ ரீக்கோவின் கிளிகளிடம் தமக்கான புராணக் கதைகள் உண்டு. அவை மனிதர்களின் புராணங்களை விட எளிமையானவை, ஆனால் மனிதர்களுக்கு இவற்றில் மகிழ்ச்சி கிட்டுமென நான் நினைக்கிறேன்.

ஆனால் பரிதாபம்! எங்கள் உயிரினம் அழிந்து வருவதால் இந்தப் புராணங்கள் தொலைந்து போய்க் கொண்டிருக்கின்றன. நாங்கள் முற்றிலும் காணாமல் போகுமுன் மனிதர்கள் எங்கள் மொழியைப் புரிந்து கொண்டு விடுவார்களா என்பது பற்றி எனக்குச் சந்தேகம்தான் இருக்கிறது.

ஆக, எங்கள் உயிரினத்தின் அழிவு என்பது ஒரு பறவைக் கூட்டத்தின் அழிவு மட்டுமல்ல. அது எங்கள் மொழியின், எங்கள் சடங்குகளின், எங்கள் மரபுகளின் அழிவும் ஆகும். எங்கள் குரல்கள் மௌனத்தில் அடக்கப்படுவதும் ஆகும்.

மனிதர்களின் நடவடிக்கைகள் எங்கள் உயிரினத்தை முழு அழிவுக்கு அருகில் விளிம்பு நிலையில் கொண்டு நிறுத்தி இருக்கின்றன, ஆனால் நான் அவர்களைக் குற்றம் சொல்லவில்லை. அவர்கள் இதை வன்மத்தால் செய்யவில்லை. அவர்கள் கவனப் பிசகாக இருந்திருக்கிறார்கள்.

ஆனால் மனிதர்கள் உருவாக்கும் புராணங்கள் அத்தனை அழகானவை; என்னவொரு கற்பனை அவர்களுக்கு இருக்கிறது. அதனால்தானோ என்னவோ அவர்களின் அபிலாஷைகளும் அத்தனை பிரும்மாண்டமாக உள்ளன. அரேசிபோவைப் பாருங்கள். இப்படி ஒன்றை நிர்மாணிக்கும் எந்த உயிரினத்தினுள்ளும் உன்னதம் உறைந்திருக்கவே வேண்டும்.

எங்கள் உயிரினம் இன்னும் அதிக காலம் இங்கு நீடிக்காது; எங்கள் காலத்துக்கு முன்பாகவே நாங்கள் அழிந்து, பெரும் மௌனத்தோடு கலந்து விடுவோம். நாங்கள் போகு முன் மனித குலத்துக்கு ஒரு செய்தியை அனுப்புகிறோம். அரேசிபோவில் உள்ள தொலைநோக்கி அந்தச் செய்தியைக் கேட்க அவர்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்.

அந்தச் செய்தி இதுதான்:

நல்லவர்களாக இருங்கள். நான் உங்களை நேசிக்கிறேன்.

எக்ஸ்

————————-

பின்குறிப்புகள்:

[1] Cosmic Microwave Background

[2] பெருவெடிப்பு- The Big Bang பிரபஞ்சத்தின் துவக்கமாக இருந்தது இது என்று கருதப்படுகிறது.

இக்கதையின் இங்கிலிஷ் மூலம் சமீபத்தில் இங்கு பிரசுரமாகியது: https://electricliterature.com/the-great-silence-by-ted-chiang/ இந்தக் கதை டெட் சியாங்கின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான எக்ஸலேஷன் என்ற நூலில் உள்ளது.

தமிழாக்கம்: மைத்ரேயன்

One Reply to “பெரும் மௌனம்”

  1. அருகில் இருப்பதின் மதிப்பு மனிதனுக்கு என்றுமே ஒரு பொருட்டில்லை.அப்படியே உணரத் தொடங்கினார்கள் என்றால்’ சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை’ என்று அந்த ஜீவனை மட்டம் தட்டிவிடுவார்கள்.வேத வியாசரின் மகன் ‘சுகப் ப்ரும்மம்’ கிளி முகத்தான்.வியாசரை விடவும் போற்றப்படுபவர். நம் வேதங்களை ஸ்ருதி என்று கிளியின் வடிவமாகத்தான் சொல்கிறோம்.மற்ற ஜீவராசிகளின் மொழி அறியும் திறன் பெற்ற மன்னர்களை நம் இதிகாசங்களில் பார்க்கிறோம்.கேகய மன்னன் எறும்புகளின் மொழி அறிந்தவனாக இராமாயணத்தில் வருகிறான்.கிளியினைக் குறியீடு எனக் கொண்டாலும் மிகப் பொருத்தமாகவே இருக்கிறது. கிளி ஜோஸ்யம் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.