குருடு

“பருவடிவங்களால் நாம் உணரும் இப்பிரபஞ்சம் அணுகணமும் அழிந்து பிறக்கிறது.

அழிந்தழிந்து பிறத்தல் தான் பிரபஞ்சத்தின் இன்றியமையாத செயல்பாடு” என்றார் அந்த குருட்டுக் கிழவர்.

தன் குருவின் மேலாடையை அனாதிகாலா நதிக்கரைப் பாறையில் அறைந்து துவைத்துக்கொண்டே “இதை என்னால் ஏற்க இயலாது குருவே. அறிதல் என்பது புலன்களின் வழியே நிகழ்வது தானே. இப்படி சொல்லமுடிந்தால் நம் புலன்களையே சந்தேகிக்க நேரிடும்.” என்றான் அவன்.

“சந்தேகி. சந்தேகித்தலே அறிதலெனும் தேரின் வடம். தேர் நகர்வது சக்கரத்தினால். நகர்த்தப்படுவது அதன் வடத்தினால் தான்,” என்றார் கிழவர்.

அவன் உச்சிவானில் எழுந்த கதிரவனின் அலைகள் ஆற்று நீரில் நெளிவதை சற்று நேரம் பார்த்தான். பின்னர் கேட்டான். “நான் இப்போது உங்களைக் காண்கிறேன். நீங்கள் என்முன் அழிந்தழிந்து தோன்றுகிறீர்களா என்ன?’

“ஆம்” என்றார் குரு. “ ‘உனக்கு தெரியும் நான்’ என்பது உன் புலன்களின் வழியே உன் அறிதலாகி நீ உருவகிப்பது. ‘உனக்கு தெரியும் நானும்’, ‘உலகிற்குத் தெரியும் நானும்’ வேறுவேறானவை. உன் அறிதலை வைத்து இவ்வுலகிற்கும் அதுவே ‘நான்’ என என்னைப் பொதுமைப்படுத்துவது உன் வறட்டு ஆணவம் மட்டுமே” என்றார் குரு.

சற்று முன் துவைத்த மேலாடையை அலசி பிழிந்து அவரது மேலுடலில் போர்த்திவிட்டான்.

“வீணான விசாரங்கள் எதற்கு? பருவடிவங்களின் நிலையாமையை உங்களால் விளக்க முடியுமா?” என்றான்.

பின்னர், கடைமுழுக்குக்காக அவன் நதியில் இறங்கினான்.

“உன் கண்முன் நான் உன் காட்சியாகவும் செவிகளில் ஒலியாகவும் தெரிகிறேன் அல்லவா?” என்றார் குரு.

“ஆம்” என்று மூக்கைப் பிடித்துக்கொண்டு அனாதிகாலாவில் முங்கினான்.

அவன் நீரலைகளில் இருந்து எழும் சத்தத்தைக் காதில் வாங்கிக் கொண்டு,

‘என் பிம்பம் உன் கண்ணில் விழுவதற்கும் அதை நீ என் பிம்பம் என்று அறிவதற்கும் இடைவெளி இருந்தே ஆகவேண்டும். அதே போல் என் சொல் உன் காதில் விழுவதற்கும் அதை என் சொல்லென நீ அறிவதற்கும் இடைவெளி உண்டு. அந்த இடைவெளியில் நான் உன்முன் அழிந்து தோன்றுகிறேன். நான் மட்டும் அல்ல நீ உணரும் அனைத்தும். ஒலியால், சுவையால், மணத்தால், மெய்யால் அனைத்தும் அழிந்து பிறக்கின்றன, அவ்விடைவெளிகளில்” என்றார். மேலும், “நான் நிலையானவனாக உனக்கு தோன்றுதல் அந்த இடைவெளியை நீ அறியாதவனாய் இருப்பதினால் தான். பிரபஞ்சம் அந்த இடைவெளியில் இடையறாததான ஒரு மாயத் தோற்றம் பூண்டுகொள்கிறது.“ என்றார் குரு.

“இல்லை. நீங்கள் சொல்வது சுத்த பிதற்றல். புலன்கள் மூலம் நம் நேரடி அறிதல்கள் பிறக்கின்றன. அவற்றை சந்தேகிக்க என் மனம் கூடவில்லை. அவற்றைக் கொண்டு அறிதலே பின்னர் பண்பட்டு அறிவாகிறது“ என்று விட்டு மிஞ்சியிருந்த இரண்டு முழுக்குகளையும் முடித்தான்.

‘சரி போ. எனக்கு நீ ஆனவன் உன் குரல் மட்டும் தான். இந்த குருட்டுக் கிழவன் சொன்னதை நீ இதுவரை கேட்டவனாக இருந்தாயே அது போதும். ஏற்றுக்கொள்ள வேண்டாம். உய்த்தறியும் ஒன்றே அறிவென்றாவது. உய்த்தறியும் வரை காத்திருத்தலே சாலது.’ என்றார் குரு.

உடலொழுகும் ஈரத்துடன் குருவின் அருகில் விரைந்து படியேறியவனாக வந்து,

‘என்ன சொல்கிறீர்கள்? நான் உங்களை ஏற்றுக்கொண்டவன். நான் உங்களுக்கு வெறும் குரல் தானா? உங்கள் சொற்களை ஏந்தி எதிர்காலம் நோக்கிப் பயணப்படவுள்ள மானுட கலம் அல்லவா நான்? உங்களின் இச்சொல்லால் என் அகவலு குலைகிறது. என்னை செழுமைபடுத்துங்களேன்’ என்றான்.

கரையோர காற்றலைகளால் மேலாடை சடசடக்க நின்றிருந்த குரு ’அப்படியென்றால் உய்த்தறி’ என்றார்.

‘எதில் தொடங்குவது?’ என்றான்.

‘உன் பார்வையில் தொடங்கு’

‘ஏன் பார்வை?’

‘நான் உனக்கு அறியப்படுவது பார்வையாலும் குரலாலும். நீ எனக்கு அறியப்படுவது உன் குரலால் மட்டுமே. எனவே நாம் வேறுபடும் இடத்தில் இருந்து தொடங்கு. அதாவது உன் பார்வையில் இருந்து. அந்த வேறுபாட்டை நீ உணர்ந்த பிறகு நீ நானாகியிருப்பாய். என் பார்வையில் நித்தியமும் இருக்கும் குருடை நீ உன் பார்வையில் தேடு. உன் குருடு இன்னும் உன் கண்களில் ஒளிந்து கொண்டு தான் இருக்கிறது. மேலும் நம் புலன்களில் தலையாயது கண். அதற்கு மற்ற புலன்களுக்கு இல்லாத சிறப்பொன்று உள்ளது.’

‘என்ன சிறப்பு அது?’

‘உன்னில் தொடங்கி உன்னில் முடியக்கூடிய புலனறிதல்கள் நான்கு மட்டுமே. அதாவது ஐவகை அறிதலில் நான்கிற்கு மட்டுமே நீ தொடக்கமாகவும் முடிவாகவும் இருக்க முடியும். உன் வாய் சொல்லை உன் செவி கேட்டறியும். உன் விரல் தொடுகையை உன் உடம்பு கூச்சறியும். உன் வாடையை உன் நாசி நுகர்ந்தறியும். உன் உடல் கரிப்பை உன் நா சுவைத்தறியும். ஒலி, சுவை, வாசம், ஊறு இவை உன்னிடத்தில் தொடங்கப் பெறலாம். ஆனால் உன் பார்வைக்கான ஒளி உன்னிடத்தில் தொடங்கப் பெற சாத்தியமில்லை. அந்த ஒளி பிரபஞ்சத்திலிருந்து நீ பெறுவது. பிரபஞ்சத்தோடு தொடர்பு படுத்தி புரிந்துகொள்ள அதுவே வழிவகுக்கும். ஆகவே, பார்வையில் இருந்து தொடங்குவதே சிறந்தது’ என்றார்.

‘சரி. என் பார்வையை அறிதல் எப்படி என் சந்தேகத்தை தீர்க்கும்?’

‘நீ காணும் பருப்பொருட்கள் அழிந்து தோன்றுவதை உணர முடியாது செய்வது எது?’

“என் கண். அதில் உறையும் பார்வை”

“ஆகவே நீ உன் கண்ணை முழுதுமாக நம்புகிறாய் அல்லவா? நீ இப்பிரபஞ்சத்தின் நிலையின்மையை உணர உன் பார்வையின் நிலையின்மையை உணர வேண்டும். ஒரு நிலையின்மையை கொண்டு மற்றொரு நிலையின்மையை அளக்க முற்படும் போது, அது நிலையானதாக தோன்றுவது அதன் ஒரு வகை விளையாட்டல்லவா. அதை இன்னதென்று அறுதியிடுவது சரியாகாதல்லவா?” என்றார் குரு.

“சரி. நான் சற்று நகர்கிறேன்.” என்று நகர்ந்தார் குரு.

“ ’இப்போது நான் நகர்ந்தேன்’ என்று உன்னால் சொல்ல முடியுமா?”

“ஆம். கண்டிப்பாக. இங்கிருந்து இங்கே. இவ்வாறு நகர்ந்தீர்கள்”

“முந்தைய கணத்தின் என் இருப்பை நீ அறிய மறுத்துவிட்டால் ஒரு வேளை அப்படிச் சொல்ல முடியுமா? இங்கிருந்து இங்கென்று காட்ட இயலுமா?”

“முடியாது தான்”

“அப்போது முந்தைய கணத்தின் குருடு உன்னை அதை அறியச் செய்யாமல் செய்துவிடுகிறது அல்லவா?”

“ஆம்”

“அந்த குருடு என் நகர்வை மறுத்து இந்த கணத்தில் என்னை புதியவனாக காண்பிக்கிறதல்லவா? ஆகவே குருட்டினை கருத்தில் கொள்ளாமல் பார்வையை அளவிட முடியாது. பார்வையின் நிலையின்மையை குருடே உணர்த்தும். அதற்காகத்தான் சொன்னேன். ஓசைக்குள் மெளனம் போல. பார்வைக்குள் குருடும் இழையோடுகிறது.

போ, போய் உன் பார்வையில் ஒளிந்திருக்கும் குருடை அறி? உண்மையான குருடு என்று நான் சொல்லவருவதை நீ தெளிவாக விளங்கி கொள்ளவேண்டும்?”

“என்ன அது? அதையும் சேர்த்தே விளக்கிவிடுங்கள்”

“பார்வையில் குருடு என்பது இருளில் ஏற்படும் பார்வையின்மையோ, இமைக்கொட்டும் போது ஏற்படும் பார்வையின்மையோ அல்ல.

அவை புறவயமானவை. இதை நினைவில் கொள்”

இருவரும் சென்றுவிட்டிருந்தார்கள். படித்துறையின் இருமருங்கிலும் அடர்ந்த கரையோர நாணல்கள் அனாதிகாலாவின் அலைகளுக்கு ஏற்ப அசைந்துகொடுத்து காற்றின் மெளனத்தை குலைத்துக் கொண்டிருந்தன.

***

வானத்தின் மேகங்கள் மழைகால ஈரத்தில் ஊறிய மென்பஞ்சுகளைப் போல அசைவற்று நிலைகொண்டு ஒட்டியிருந்தன.

என் படுக்கைக்கு கீழ் ஆயிரம் மேகங்கள். நான் படுத்திருக்கும் கம்பளம் ஒரு கண்ணாடியாய் மாறிவிட்டிருந்ததை அம்மேகங்களை கண்டுகொண்ட பின்பு தான் உணர்ந்தேன். கம்பளத்தன்மையுடன் கண்ணாடித்தன்மை இணைந்து கொண்டது போல.

எந்த ஒரு புவி ஈர்ப்பு விசைக்கும் ஆட்படாமல் கம்பளத்தில் தலை கீழாக பறந்து கொண்டிருந்த ப்ரக்ஞை தெளிவாக இருந்தது. பிறர்க்கு இது தெரிந்துவிடக்கூடாது என்ற அந்தரங்கமான எண்ணமும் கூடவே இருந்தது. மண்ணிலிருந்து ஒரு கல் எழுந்து என் கண்ணாடி கம்பளத்தை விரிசலிடச் செய்ய முடியுமே என்கிற பதற்றம். என் கண்ணாடி கம்பளம் என் உடலுடன் ஒட்டிக்கொண்ட சிறகைப் போல சடசடக்க என்னை செலுத்திக்கொண்டிருந்தது. முதல் நாள் இரவில் கம்பளத்தின் முனைகளைப் பற்றி முகம் புதைத்து குப்புறப்படுத்திருந்தது நினைவிலெழுந்தது.

ஒரு கணத்தில் கம்பளத்தின் ஒளி உட்புகும் தன்மை குன்றி, அதன் மறுபக்கம் வெள்ளி நிற பூச்சுகளால் மொழுகி நிறைக்கப்பட்டு, பிரதிபலிக்கும் ஆடியாக மாறத் தொடங்கியது. அதை தொடர்ந்து எப்போதோ அதனின் அலைவும் நெகிழ்வும்

மறைந்து காத்திரமான திடவடிவம் பெற்றது. இந்த தொடர் மாற்றங்களை பிரித்தறிந்து என்னால் சரிவர நினைவு கூற முடியவில்லை.

ஆடியின் பிரதிபலிப்பு மேலும் மேலும் கூடிற்று. வானின் நீலம் குன்றி வெண்ணிற மேகச் சூழ்கையால் நிறைக்கப்பட்டு, பஞ்சால் அடைக்கப்பட்ட பந்தின் உட்பக்கம் போல வான் விரிந்து குவைந்து இருந்தது. அதன் வெண்மையில் இருந்தும் பளபளப்பில் இருந்தும் தான் என் ஆடிக்கம்பளம் அதன் பிரதிபலிப்பைத் திரட்டியிருக்க வேண்டும். நான் ஊர்ந்து வந்த அது விரிந்து அகன்று வானமென்றே மாறிவிட்டதா? பிரித்தறிய இயலவில்லை.

என் வீட்டறையில் உள்ள நிலைக்கண்ணாடியின் பளிங்கு தளத்தை கடக்க துணியும் வாலிழந்த பல்லியைப் போல ஒட்டிக்கிடக்கிறேன். ஒட்டலுக்கும் நழுவலுக்குமான இடைவெளியில் இயங்கிகொண்டிருக்கிறேன் எனலாம். என்னை அதோடு ஒட்டி பிணைத்து வைத்திருப்பது என் பிம்பம் தான். கைகள் கைகளைப் பற்றி கால்கள் கால்களில் பட என்னை மறுபக்கத்தில் இருந்து ஆட்டுவித்தது என்னவோ என் ஆடிப்பிம்பம் தான். ஆடியென்ற ஒன்று முழுவதுமாக மறைந்து ஆடிபிம்பத்துடன் மட்டுமே எஞ்சியிருக்கிறேனா இப்போது? உண்மையில் நான் எந்தப்பக்கம் இருக்கிறேன்? ஆடியின் இந்த பக்கம் இருக்கிறேனா? இல்லை அந்தப் பக்கமா?

எதிலும் அசைவற்ற நிலை. என் அசைவுகள் எங்கே? நான் இயங்குகிறேனா? என் எண்ணங்கள் மட்டும் தான் அசைந்து அலைபாகிறதா? என் அசைவுகளைத் தொலைத்துவிட்டேனா? என்னைச் சுற்றி வியாபித்த அசைவற்றவையிலிருந்து எழுந்தது போல இருந்தது அந்த முதல் அசைவு. விழிமணிகள் உள்ளிருந்து கொண்டு இமைகளை திற என்பதைப் போல தள்ளின. ஆடியில் முகம் பதித்து கிடந்த என்னால் என் ஆடிபிம்பத்தின் விழிமணிகளைப் பார்க்க முடிந்தது. என் இருப்பை உணர, அவ்விரண்டையும் பொருத்தி இரு எல்லைகளாக்கி என் இருவிழிகளையும் அவற்றுக்கு மத்தியில் இடவலமாகவும் வலமி_டமாகவும் விழியோட்டிக் முழித்துப் பார்த்துகொண்டிருந்தேன்.

விழிகள் இடம் மாறுகின்றன. ஆனால் அவற்றின் அசைவை என் ஆடிபிம்பத்தின் வழியாக என்னால் உணரமுடியவேவில்லை. அவை அப்புள்ளிகளுக்கு நடுவில் ஓடுகிறது ஆனால் அந்த ஓட்டத்தை பார்க்க முடியவில்லை. அந்த அசைவு எங்கே போயிற்று? என்ன விசித்திரம் இது? விழிமாற்றம் நிகழ்ந்தது அறிவில் பதிந்திருக்கிறது. ஆகவே நினைவில் படிந்திருக்கிறது. ஆனால் அதற்கு சாட்சியம்? கண்களால் அதனை உணராத போது எப்படி? திகைப்பில் நிலைகெட்டு என் கைகளைக் கொண்டு அந்த கண்ணாடித் தளத்தை பிராண்டினேன். ஏன் இப்படி செய்கிறேன்? விரல் நகம் கிரீச்சிடும் ஒலியெழுந்து என் காதுகளைக் கூச கண்ணாடித்தளம் வழுக்கி என் ஆடிப்பிம்பத்தின் பிடியும் என்னை விட்டு அகல வீட்டின் உட்கூரையில் இருந்து விழும் பல்லியைப் போல சத்தென்று தரையில் விழுந்தேன் எந்த ஒரு சலனமும் இல்லாமல்.

மீண்டும் ஒரு விழி திறப்பு. ஒரு கனவில் இருந்து மீள எத்தனை விழித்திறப்புகளை கடக்க வேண்டியிருக்கிறது. கனவுகள் எதுவரை? அடுத்த கண் திறப்பு அது வரை தானே. இன்னும் ஒரு கண் திறப்பு எஞ்சியிருக்கிறதென்றால் நாம் இன்னும் கனவில் தான் அடைப்பட்டுக்கொண்டிருக்கிறோம் இல்லையா? இன்னும் எத்தனை விழிப்புகளுக்கு பிறகு நனவு இருக்கிறது? நனவின் தூரம் தான் எத்தனை? நான் உண்மையில் கனவில் இருந்து அகன்றுவிட்டேனா என்று சந்தேகம் ஒரு கணம் எழ சுற்றி முற்றிப் பார்த்தேன். என் அறையின் ஜன்னல் வழியாக சற்றுமுன் என் கனவில் திரண்ட முகில் குவைகள் ஒருங்கி அதன் அடி கரியாகி கனம் மிகுந்து மழையாகி கோரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. இது நனவிற்கான மீட்சி தான் என்று எண்ணிக்கொண்டேன். ஜன்னலைக் கடந்து வந்த அந்த மழைச் சாரலை முகத்தில் வாங்கிகொண்டேன். கனவில் நான் கண்ட அக்கண்ணாடித் தளம் திரவ வடிவில் ஒழுகி என் மேல் பொழிந்து கொண்டிருந்தது. என் மேல் விழுந்த துளிகள் அனைத்தும் அத்தனை பளபளப்பு கொண்டிருந்ததை என்னால் காண முடிந்தது.

***

அப்போது ஒரு குறுகிய ஒலி கேட்டது. எதன் மேலோ எதுவோ விழும் சப்தம். நான் தங்கியிருந்த அறையின் நிலைக்கண்ணாடியைத் தாங்கும் மரத்தளத்தில் இருந்து எழுந்த சப்தம். பின்னர் அது பல்லி விழுந்த சப்தம் தான் என்று ஊர்ஜிதபடுத்திக்கொண்டு அதனருகே சென்றேன். நிலைக் கண்ணாடியைப் பார்த்தேன். அந்த பல்லி நான் வருவதை உணர்ந்து நிலைக்கண்ணாடிக்கு பின்புறம் பதுங்கி மறைந்துவிட்டது. நான் என் பிம்பத்தைக் காட்டிக் கொண்டிருந்த அந்த ஆடியைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.

கனவுகள் உண்மையில் எவற்றால் ஆனவை? அறிதற்கு அப்பால் இருப்பனவற்றால்? எது எதுவோ என் கனவுகளில் வந்திருக்கின்றன. நான் விண்ணதிர வானத்தரையில் ஓடிக்கொண்டிருப்பேன். ஆயிராமாயிரம் அரவுகள் பூமியைப் பொத்துக்கொண்டு எழும். அந்த அரவுகள் என் தலைக்கே குறிவைக்கும். அவற்றிடமிருந்து தப்பிப்பதே என் வேலையாக இருக்கும். மனிதனின் கனவுகளில் என்றுமே அவன் பாம்புகள் இடம்பெற்றிருக்கும். இக்கனவின் உண்மை என்ன? தொல் காலம் முதலே பாம்பைப் பற்றி மனத அகத்தில் உறைகின்ற அச்சம் தானே? ஆகவே கனவுகள் தன் பொய்யாடைகளை சூடுவது எதற்கு? ஏதேனும் ஒரு உண்மையை அது அவற்றைக் கொண்டு மூடுகிறது. கனவுகள் வெறும் பொய்களின் தொகுப்பு மட்டுமே அல்ல. பல பொய்களுடன் குறைந்த பட்சம் ஒரு உண்மையாவது அது கொண்டிருக்கும். பொய்களின் வாயில்களை கடந்து அக எல்லையில் வீற்றிருக்கும் தெய்வம் போல உறைவது உண்மை. அத்தகைய ஆலயத்தை கட்டியெழுப்புவது கனவு. நினைவுகூறப்பட முடியாத போது அவ்வாலயம் தடம் தெரியாமல் அழிந்து போய்விடுகிறது.

அப்படியென்றால் போன கனவின் உண்மை என்ன? அந்த அசைவு ? அந்த அசைவு எங்கே போயிருந்தது ?அந்த அசைவு உண்மையில் இருக்கிறதா? அந்த நிலைமாற்றம் நிகழவே இல்லையா?

ஆடிப்பிம்பத்தின் என் கருமணிகளை மீண்டும் கூர்ந்து அவற்றுக்கு நடுவில் விழியோட்டிப் பார்த்தேன். அந்த அசைவை என்னால் உணரமுடியவில்லை. தூரத்தில் நின்றிருந்ததனால் அந்த விழியசைப்பின் தூரம் குறைவாக இருக்குமே என்று உணர்ந்து அந்த விழியசைப்பின் தூரத்தை அதாவது என் கருமணிகளுக்கு இடையேயான தூரத்தை அதிகரிக்க நிலைக்கண்ணாடியை நெருங்கினேன். அதன்மேல் முகம் புதைத்து மீண்டும் விழியோட்டிப்பார்த்தேன். அந்த அசைவு எனக்கு புலப்படவேயில்லை. என்ன இது? என் புலனை என்னால் நம்ப முடியவில்லையே. எங்கே தொலைந்து போனது இந்த அசைவு. நம் கண்களின் விழியசைவை நாமே நோக்கி அறியமுடியாதா?

எதோ ஒன்றை எண்ணியவனாக அறையின் மூளையில் சாத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முக்காலியை எடுத்தேன். நிலைக்கண்ணாடிக்கு அருகில் அவற்றின் கால்களை விரித்து வைத்து நிறுத்தி என் ஒளிப்படக்கருவியை அதன் மேல் பொருத்தி அந்த சோதனையை படம்பிடித்தேன். மீண்டும் நிலைக்கண்ணாடியோடு ஒண்டி விழியோட்டிப் பார்த்தேன்.

அந்த செயல்பாட்டினை பதித்திருந்த அக்கருவியில் ஓட்டிப்பார்த்த போது அந்த விழியசைவு அதன் திரையில் புலப்பட்டது. இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் என் விழிமணிகள் ஊசலாடியது தெளிவாக பதிவாகியிருந்தது.

இந்த உலகத்தைக் காண்பிக்கும் விழி, அதன் அசைவை காண்பிக்க மறுக்கிறதே?

இது போன்றவற்றை உயிரற்ற ஜடப்பொருளான மற்றெதைக்கொண்டோ தான் அறிய வேண்டுமா? நேரடி அறிதலின் மூலம் சாத்தியம் இல்லையா? இத்தகைய நேரடி அறிதல்களில் தானே மனிதனின் ஆதி அறிவு தொகுக்கப்பட்டிருக்கும். குனிந்து பார்த்தால் வயிறு தான் தெரியும் என்பதற்காக முதுகு இல்லாமல் ஆகிவிடாது அல்லவா? அது போன்று தான் இதுவா? புலனுக்குள் சிக்காத பிற அறிதல்கள் இன்னும் இருக்கின்றனவா? கண்ணின் இந்த நாடகம் எதற்கு? அப்படியென்றால் பார்வை என்பது பொய்யா? நம் கண் நாம் எதை எதையெல்லாம் அறிய வேண்டும் என்று நமக்கு அதை மட்டும் காட்டி ஒரு வடிகட்டியாக செயல்படுகிறதா? அப்படியென்றால் உண்மையான பார்வை என்பது எது? எப்படி உணர்வது? நம் பார்வைக்கு இடையில் நம் குருடும் ஒளிந்திருக்கிறதா? கனவுகளில் பொய் கலந்து மெய் உறைந்திருப்பதைப்போல.

***

அன்றைய மழையில் மேகங்கள் எதுவும் மிஞ்சாமல் சிந்தி பூமியை நிறைத்துவிட்டதோ என்னவோ? அல்லது அந்த பஞ்சுப் பொதிகளைக் கொண்டு வானை ஒட்ட வழித்தெடுத்தெடுத்தவர் எவர்? வானின் தெளிவும் கூர்மையும் ஒரே லயமாகி நீலமென ஒளிர்ந்து கொண்டிருந்தது. சற்றுமுன் இருந்த அடிக்கருமைகள் எங்கே? வான் தான் இழந்துவிட்ட ஒட்டுமொத்த எடையையும் மீண்டும் பெற வேண்டி, நீரைப் பருக சூரியக்கதிர்களை பூமிக்கு அனுப்பியது. வானத்திற்கு இத்தனை ஆங்காரமா என்கிற அளவிற்கு பூமியை தகித்தெடுத்தது. மாமழைக்குப் பின்னர் இத்தனை தகிப்பு சாத்தியமா என்ன?

அத்தகைய தெளிவான வானிற்கு தான் நான் காத்திருந்தேன். ஆனால் காலையில் நிகழ்ந்த கனவும் மாமழையும் என்னைக் கொஞ்சம் மருளச்செய்தன. அத்தகைய வானின் ஒரு இரவுக்காகத் தான் நான் வந்திருந்தேன். அன்றைய இரவுணவை அருந்திவிட்டு நான் தங்கிய அறையில் இருந்து என் ஒளிப்படக்கருவி, முக்காலி, கால அளவைக் கருவி, கைவிளக்கு மற்றும் கூடாரம் சகிதமாக அந்த உச்சியைத் தேடிச் சென்றேன். இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைவழி பயணமாக அந்த உச்சியை அடைந்துவிடலாம்.

மழை நீரில் குழைந்த சேறு என் காலணிகள் கணக்கச் செய்தது.

வழி நெடுகிலும் தவளைகளின் கூச்சல் நிறைந்திருந்தது. தெளிவான வானின் பரப்பில் கருமையென நின்றிருந்தது அந்த மலை. அந்த கருமையை ஊடுருவி அந்த கருமைக்கு அந்த பக்கம் தான் உச்சியோ என்னவோ?

கால்கள் தளராமல் நடையை ஒத்திப்போட மறுத்தன. காட்டு மரங்களின் இலைதளங்களில் மற்ற இலைகள் உரசும் ஒலி அடர்ந்து கொண்டிருந்தது. காட்டின் ஒலி என்பது இலைகளில் இந்த ஓலம் தானா? இருட்டில் காடு இவ்விலைகள் மூலம் மூச்சிரைக்கிறதா என்ன? மலையான பெருஞ்சுமையை தாங்கும் நிலம் தன் மரத்து இலைகளால் மூச்சிரைக்கட்டுமே என்னகெட்டுவிடப்போகிறது.

உச்சியை நெருங்க நெருங்க வானத்தின் அத்தெளிவு வெளிச்சமாகி என்னை வழி நடத்தியது. உச்சியை அடைந்துவிட்டேன். நான் என் கூடாரத்தை அமைக்க நல்ல ஒரு தட்டையான பரப்பைத் தேடிக்கொண்டிருந்தேன். துழாவியதில் ஒரு சின்ன கல்மண்டபம் இருந்தது. அதை பார்த்தவுடனேயே அனுமானித்து விட்டேன். இது கேளடி நாயக்கர்களால் கட்டப்பட்டது. உச்சியில் ஷிகரேஸ்வரன் எனும் ஈசன் குடிகொண்டிருக்கிறான் என்று கையேட்டில் படித்திருந்தேன். அந்த மண்டபம் மிகவும் குறுகியது. உள்ளே தங்கமுடியாது.

அதனுள் ஈசன் லிங்க வடிவினனாக கிழக்கு திசையை நோக்கியவாறு இருந்தார். கர்நாடகத்தின் இந்த மேற்கு மலைப் பகுதி கேளடி நாயக்கர்களால் ஆளப்பட்டது. அவர்கள் கட்டிய கோட்டை சிதிலத்தில் எஞ்சிய கல்மண்டபம் தான் இது. தெய்வங்கள் மனிதர்களால் கைவிடப்படுதலை இத்தகைய சிதிலங்கள் மூலம் நம்மால் உணர முடிகிறது அல்லவா?

என்றைக்குமே தெய்வத்திற்குத் தான் மனிதன் தேவையாகிறானா என்ன?

வரும் வழியில் இந்த பாறையை அடைவதற்கு முன்னர் சற்று தொலைவில் இருட்டில் ஒரு நந்தி சிலையில் முட்டி இடறி விழப்போனேன். அது இந்த ஈசனைப் பார்த்துதான் நின்றிருக்கிறதோ என்னவோ? அந்த பாறையே லிங்க வடிவினதாக அதற்கு தோன்றியதோ என்னவோ? அது அங்கேயே நின்றுவிட்டது. நான் அதைத் தாண்டி வந்துவிட்டேன். அது காணும் லிங்க வடிவில் காற்றில் வந்து ஒட்டிய சிறு துரும்பாக இருந்துவிட்டுப் போகிறேன். தன் மேல் எதோ மொய்ப்பது போன்ற பிரமையில் நாக்கை நீட்டி மடித்திருந்தது அந்நந்தி. இருட்டில் அந்த நா அசைவது போன்றிருந்தது. அந்த கல் மண்டபத்தின் அருகிலேயே கொட்டகையை விரித்துக்கொண்டேன்.

இரவு வானத்தை ஒளிப்படக் கருவியால் பதிவாக்க வேண்டும். முக்காலியை சற்று தீர்க்கமான தளத்தில் நிலைநிறுத்தி என் ஒளிப்படக்கருவியை அதன் மேல் அமைத்து, கால அளவைக் கருவியோடு அதனைப் பொருத்தி, வானை நோக்கியுயர்த்தி வைத்துவிட்டு அதை பதிவாகச் செய்து, நான் என் கூடாரத்திற்குள் வந்துவிட்டேன். கூடாரத்தின் வாயில் இடுக்கு வழியாக தலையை வெளி நீட்டி ஆமை ஓடு போன்றதொரு ஏற்பாட்டில் படுத்துக்கொண்டேன். காற்றின் சலனம் அவ்வளவாக இல்லை. ஆனால் வியர்க்கவில்லை.

வானத்தை பார்த்திருந்தவனாய் கிழக்கு பார்த்த அந்த ஈசன் போல அடுத்த விடியலை எதிர்நோக்கி காத்திருந்தேன். என் தலைக்கு மேல் மின்னிய நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்கின்றன. சில சமயம் உச்சு கொட்டுகின்றன. சில சமயம் மெளனம் சாதிக்கின்றன. அவை நகர்கின்றன. அதன் நகர்வு தெளிவாக தெரிகிறது எனக்கு. அவை வளைவான பாதையில் மின்மினியாக நகர்கின்றன. அவற்றின் பாதை ஒழுக்கு சீராக இருக்கின்றன. எதுவும் எதனுடனும் குறுக்கிடவில்லை. மேகங்கள் ஒழிந்து போனது நான் அவற்றை தெளிவுற காணத்தானா? இதோ விடியல் வந்துவிட்டது. இதோ கிழக்கில் செவ்வொளி படர்கிறது. பாரினை நிறைக்கும் செவ்வொளி அது. கண்ணிமைகளை முட்டித் திறக்க வேண்டும். முட்டிபார்க்கிறேன் முடியவில்லை. மலரினுள் மாட்டிக்கொண்ட வண்டினைப் போல உணர்கிறேன். அல்லியின் அலர்கள் விரிவது போல ஆயிரம் தடவை விழி திறக்கிறேன். ஆனால் இன்னும் முழிப்பில்லை. இதில் எந்த விழிதிறப்பு விடிவைக் கொடுக்கும்? முழிப்பைக் கொடுக்கும்? அது ஏனோ தெரிவதே இல்லை எனக்கு.

***

காலை கடந்து கொண்டிருந்தது. பாறை இளகி அதன் வெப்பத்தை என் உடம்பில் உந்தி தள்ளியதில் தான் எழுந்து கொண்டேன். பார்த்தேன். கதிரவன் கண்ணிறைத்தது. எழுந்து என் ஒளிப்படக்கருவியின் அமைப்பிடம் சென்றேன். அது அணைந்திருந்தது. பதிவானவுடன் அதுவே அணைந்திருக்ககூடும். அதை மூடி கைப்பை உறைக்குள் வைத்துவிட்டு கூடாரத்தை மடித்துக்கொண்டு கீழிறங்கத் தயாரானேன்.

நான் எடுத்த ஒளிப்படங்களை ஒன்றாக்கி தொகுத்துப் பார்த்தேன். நான் எண்ணியது போலவே வந்திருந்தது. இது அதிவெளிப்பாடு ஒளிப்படமாக்கல் முறை. இதில் காலத்தை ஒளிக்கருவியால் சுருக்கி ஒற்றைப் படமாக மாற்றிட முடியும். அதாவது கருவியின் இமை வெளியில் கிடக்கும் காட்சியை ஒற்றைக்காட்சியாக பதியாமல், காலத்தை கணக்கில் கொண்டு, காட்சி மாற்றங்களை திரட்டி ஒற்றை காட்சியாக வெளிப்படுத்துவது. அதாவது அணுகணமும் மாறிக்கொண்டிருக்கும் காட்சிகளை தேக்கிவைத்து அடுக்கி அதன் கூட்டு மாற்றத்தை ஒற்றைப் படையில் ஒரே படமாக காண்பிக்கும் திறன்.

அதாவது நட்சத்திரம் புள்ளியென வானின் ஒருபகுதியில் தெரியும். இவ்வாறு நட்சத்திரத் தொகை அங்கு அங்கு காணப்படும். அவற்றை அதி வெளிப்பாடு ஒளிப்படமாக்கல் முறையில் படம் பிடித்தால் பூமியின் சுழற்சியில் அதன் நகர்வை நாம் படம்பிடிக்க இயலும். முன்னிருந்த இடத்திற்கும் இப்போது உள்ள இடத்திற்கும் அவற்றின் நகர்வு ஒளித்தீற்றலாக படிந்திருக்கும்.

இத்தகைய படமாக்கல் முறையில் எனக்கு முதல் அனுபவம். இதனை இத்தகைய ஏகாந்தத்தில் தனிமையில் தான் இயற்ற வேண்டும். அதிலிருக்கும் பரவசத்தை தான் அந்த ஒளிப்படத்தில் நம் அகத்தின் தீற்றல்களாக மனதின் அலைகளாக நாம் படரவிடுவது. கனவு திரண்டு நிஜமாகி நம் கைவந்தமைவது போல.

அக்கருவி காட்சியை மற்றும் கருத்தில் கொள்ளாமல் காலத்தையும் பதிவு செய்கிறது. சரிதான், இதை ஏன் நாம் காணும் கண்கள் செய்யவில்லை. நம் கண்களுக்கு காட்சிகளைத் தேக்கி அடுக்கும் திறன் இல்லாமல் இருப்பது ஏன்? நமக்கு அத்தகைய பார்வை கிடைத்தால் அந்த கனவிலேயே உறைந்துவிடலாம் தானே. உயிரினங்களுக்கு இத்தகைய பார்வை வழங்கப்படவேயில்லையா?

***

புகைப்படக் கண்காட்சிக்காக என் ஆசிரியரின் பள்ளி சார்பில் என் இந்த படம் தேர்வாகி அளவான சட்டகத்தில் உயர்ரக ஆர்கிவல் தாளில் பதிக்கப்பட்டு அனுப்பபட்டிருந்தது. அவர் என்னிடம் இதைப் பற்றி சொல்லவேயில்லை. பல நாள் கழிந்து லாரிகாரன் இந்த படத்தை எங்கள் பள்ளியின் வாசலில் இறக்கி என் கையில் தந்தபோது தான் மேல் அட்டையைக் கிழித்துப் பார்த்து தெரிந்துகொண்டேன். அப்படி கிழித்தபோது உள்ளே கரப்பான் பூச்சி ஒன்று நான் கிழித்த இடத்தில் இருந்து தலைகாட்டியது. உடம்பில் ஏறிவிடுமோ என எண்ணி அதை தட்டிவிட்டேன். கரப்பான் குஞ்சுகள் பொரிக்கும் வரை எங்கோ இதை இருட்டில் கடாசியிருக்கிறார்கள் மடையர்கள்.

அதைக் கொண்டு என் ஆசிரியர் முன்பு நின்றேன். ‘நீங்கள் ஒரு வார்த்தை இதைப்பற்றி சொல்லவே இல்லையே” என்று. அவர் என் கையில் இருந்ததை வாங்கி தன் வகுப்பறை சுவரில் மாட்டினார். அவரிடம் கூடிய தன் புதிய மாணவர்களிடம் நான் இதை எடுத்ததாக சொல்லி என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். பின்பு அந்த ஒளிப்படம் எடுக்கப்பட்ட முறையை அவர்களுக்கு விளக்கினார்.

மேலும்,

‘நம் கண்களால் இத்தகைய காட்சிமுறை சாத்தியமில்லை ஆனால் மனிதனுக்கு இத்தகைய காலத்தை காட்சியாய் வடிக்கும் தன்மை அவன் சிந்தனையில் இருந்துகொண்டே இருக்கிறது. தான் காணாதவற்றை அவன் மூலை அவனுக்கு ‘இப்படி ஒன்று சாத்தியம். இதனை நீ நிகழ்த்து’ என்று கூறியிருக்கிறது. அதை அவன் உணர்ந்தான். இதோ உங்கள் கைகளில் கருவியாய் இருக்கிறது அந்த மெய்யுணர்வின் வெற்றி’ என்று கூறினார்.

நான் வாய்விட்டு, ‘வேறு எந்த உயிரினங்களுக்கு இத்தகைய பார்வை இருக்குமா? ‘ என்று கேட்டேன்.

‘இத்தகைய பார்வை கரப்பான்களுக்கு உண்டு. அவை இருட்டின் குறைந்த வெளிச்சத்தில் எப்படி தன் பாதைகளை அறிகின்றன என்று நாம் சிந்தித்தால் போதும். இருட்டில் உலவி உணவு அடைவது அவற்றிற்கு இருத்தலின் நிமித்தம். ஆகவே அவற்றிற்கு அதி வெளிப்பாடு ஒளிப்பார்வை உண்டு . நாமோ பகலில் அலைபவர்கள். நம் பார்வை குருட்டில் அவை பயணம் செய்கின்றன. காலத்தை அறிகின்றன பார்வையால்.’ என்றார்.

நம் கண் ஏன் அப்படியில்லை என்று கேள்வி என்னில் தொக்கி நின்றது. குருடென்பது உண்மையில் என்ன? நாம் நம் பார்வையால் உணரமுடியாத அனைத்தும் தானே. அப்படியென்றால் இருள் உலகின் கரப்பான்களுக்கு நாம் அனைவரும் குருடர்கள் தானே. நம்மால் ஏன் நம் பார்வைகொண்டு காலத்தை அவைப்போல அளக்க முடிவதில்லை?

நமது இயலாமையை ஒரு செயற்கை கருவியை வைத்துக்கொண்டு தீர்த்துக்கொள்கிறோமே. நம் இயலாமையை நாம் அறியமுடியாமல் அதற்கு பரிகாரங்களாக இத்தகைய கருவிகளை உருவாக்குகிறோமா? நம் பார்வையின் குருட்டிற்கான அத்தாட்சிகள், சாட்சியங்கள் தானே இக்கருவிகள்.

நான் இதனை அவரிடமே கேட்டேன். “குருடென்பது உண்மையில் என்ன?”

அவர் அந்த அறையின் குழல் விளக்கை காட்டினார். நன்கு எரிந்துகொண்டிருந்தது அது.

‘அது எரிகிறதா? அணைகிறதா? என்று பார்த்துச் சொல்’ என்றார்.

நான் ‘எரிகிறது’ என்றேன்.

‘உண்மையாகவா?’ என்றார். நாம் ‘ஆம்’ என்றேன்.

‘மின்னியலில் மாறுதிசை மின்னோட்டம் என்ற ஒன்று உண்டல்லவா? அதனால் அந்த விளக்கு விநாடிக்கு 50 தடவை திசை மாறி அணைந்தணைந்து எரிகிறது. அதை நம்மால உணரமுடியாமல் போவது எதனால் ? நம் பார்வை அது இயங்கும் காலத்திற்கு ஏற்றவாறு இல்லை. நம் கண் அது அணைவதை அந்த நுண்ணிய கணத்தில் ஏற்படும் மாறுபாட்டினை மறைத்து எப்படி ஈடு செய்கிறது? தொடர்ந்து எரிவது போன்ற ஒரு மாயையை உருவாக்குகிறதல்லவா? உண்மையில் அந்த மாறுபாட்டினை உணரவேயில்லையா இல்லை மறைத்து ஈடு செய்கிறதா என்ற ஐயம் எழுகிறதல்லவா? இது நம் கண் காலத்தை மறுப்பதால் விளைவது. அதைப் போல நம் கண்கள் காலத்தை ஏற்கும் தருணம் உண்டு. அப்படி ஏற்கும் தருணத்தில் தான் ‘நாமறியும் காலம்’ பிறக்கிறது. நம் கண் காட்சியை மட்டும் உணர்த்தவில்லை. காலத்தையும் தான். நமது காலம் நம் கண்ணிலிருந்து ஆரம்பிக்கின்றது. நம் கால அளவைகள் நம் கண்ணில் இருந்து தான் தொடங்குகின்றன. ’கண்’ இலிருந்து பிறந்தது ‘கணம்’. இமை நொடிப்பில் பிறக்கிறது ‘நொடி’. அந்த அந்த உயிரினங்கள் அதனதன் கண்கள் காட்டும் காலத்தில் அதற்கான கால அளவைகளில் வாழ்கின்றன. ஆகவே காலம் சார்புடையது. குருட்டிலிருந்து உறுகிறது பார்வை. குருடானது நம் பார்வை நெடுகிலும் ஊடாடி இருக்கிறது. நம் பார்வையானது குருடும் பார்வையும் கலந்த ஒரு அம்சமே. ஒன்றை தவிர்த்து மற்றொன்று இல்லை. ஒன்றை உணர்வதால் மற்றொன்று இல்லாமல் ஆவதில்லை.’

‘நீ உன் குருடை உணர்ந்திருக்கிறாயா? ‘ என்னிடம் என் குரு நாதர் இதை கேட்டார். தன் குருட்டை உணரும் எவனும் இந்த கேள்விக்குள் வந்து விழுந்து விடுவான். ‘குருடென்பது இருளில் ஏற்படும் பார்வையின்மையோ. இமைகொட்டில் ஏற்படும் பார்வையின்மையோ இல்லை. அவை புறவயமானவை’ என்றார் அவர். பின்னர் நான் தெரிந்துகொண்டேன் அது ‘வெளிச்சத்தில் இமைக்காதபோது நம்மால் அறியப்படும் குருடு ஒன்று இருக்கக்கூடும்’ என.

அதற்கான பதிலை காலத்தினைக் கொண்டு அறிய வேண்டும். காலத்தின் போக்கை பார்வையில் எவ்வாறு உணர முடியும்? அசைவினால் தானே. அசைவென்று ஒன்று இருந்தால், அங்கே இரு கால இடைவெளிகள் உண்டல்லவா, ‘இதற்கு முன், இப்போது’ என்று? ‘

‘ஆம். அப்படியொரு குருடை நான் உணர்ந்திருக்கிறேன். நான் என் விழிகளின் அசைவை என் விழிகள் கொண்டு அறிய முற்பட்டேன். ஆனால் உணரமுடியவில்லை. அதன் நகர்வை காணமுடியவில்லை. நிலையாடியின் முன் இதை அறிந்தேன்.’

என்று அவரிடம் கூறினேன்.

அதற்கு அவர் ‘ஆம். அது முடிந்திருக்காது. அதற்கு அறிவியலில் “சாக்காடிக் மாஸ்கிங்” அல்லது “சாக்காடிக் சப்ரஷன்” என்று பெயருண்டு. அதாவது இருபுள்ளிகளுக்கும் இடையேயான விழியசைவை பதிவு செய்யாமல் நம் கண் நிறுத்திவிடும். அது நம் பார்வையினூடு கலந்திருக்கும் குருடு தான். நம் கண் அப்படி செய்வதற்கான காரணம். உனக்கு நன்றாகவே தெரிந்திருக்கக்கூடும்.

‘மோஷன் ப்ளர்’ எனப்படும் ‘நகர்வினால் ஏற்படும் பார்வை மழுங்கல்’. நம் கண் அந்த இரண்டு கணத்திற்கும் நடுவே நம்மை குருடாக்குகிறது. அப்படி ஆக்கவில்லை என்றால் இந்த பிரபஞ்சம் முழுவதுமே நம் விழிகளுக்கு நீர்த்து தான் தெரியும்.

வெறும் அலைகளாக. இந்த மோஷன் ப்ளர் தானே அதிவெளிப்பாடு ஒளிப்படத்தின் முக்கிய அம்சம். உன் ஒளிப்படத்தின் தீற்றல்கள் என்பது இந்த மோஷன் ப்ளர்ரினால் விளைந்தது தானே. மின்னுகின்ற நட்சத்திரங்கள் வெறும் கோடுகளாக அங்கு எஞ்சும் காரணமும் அது தான் அல்லவா? இருட்டில் கரப்பான்களுக்கு ஏது செய்வது இந்த மோஷன் ப்ளர் தானே. நம் கண்களுக்கு அதை மறைத்துக் காட்டும் திறன் இருப்பதினால் தான் நாம் காணும் அனைத்தும் நிலையானதாக உணர்கிறோம். அப்படி நிலையாக காண்பிக்க உதவுவது அந்த குருடுதான். இந்த உலகத்தில் எல்லாமும் இப்படி நிலையாக காண்பிக்கப்படுகிறது அல்லவா?’ என்றார்.

அறிவியல் கலைச் சொற்கள்:

ஒளி உட்புகும் தன்மை – transparency

சாக்காடிக் மாஸ்கிங்/சப்ரஷன் – saccadic masking/ suppression

அதிவெளிப்பாடு ஒளிப்படமாக்கல் முறை – Long exposure/time lapse photography technique

மாறுதிசை மின்னோட்டம் – Alternating current

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.