காலம் தோறும் முரலும் குரல்கள்

–பூர்ணிமா [1]

ஒரு படைப்பு என்பது மனிதனின் ஆதி குணங்களின் தொடர்ச்சியைச் சொல்லும் போதோ உணர்த்தும் போதோ சாகா வரம் பெற்றுவிடுகிறது. அவனது நேற்று என்பது அனுபவம், இன்று என்பது நிகழ்வுகளின் இருப்பு, அப்படியெனில் நாளை என்பது என்ன? நாளை என்பது கற்பனையில் மட்டுமே நிகழக்கூடியது, அது நேற்றின், இன்றின் உருவாக அன்றி, நாளையாகவே இருப்பதில்லை. நாளை என்று ஏற்படுகையில் அது இன்றும் நேற்றாகவும் தான் உணரப்படுகிறது.

உலகப் புகழ் பெற்ற ஆக்கங்கள் நேற்றைச் சொல்லி, இன்றை வாழ்விப்பது எப்போது என்றால், அவை மீள் வாசிப்பு செய்யப்படும் போதோ, மீள் உருவாக்கத்திலோ எனச் சொல்லலாம். இம் முயற்சிகளில் வழுக்குத் தளத்தை நாம் உணராவிட்டால் அந்தக் காப்பியங்களில் சில பலச் சிதைவுகளை நாமாகவே ஏற்படுத்தித், தற்கால விழுமியங்களை அதில் ஏற்றி பரிதாபமாகத் தோற்றுவிடுவோம்.

எலனோர் ஜான்சன் எழுதியுள்ள ஒரு கட்டுரை, ஹோமரின் படைப்புகள் சுட்டும் ஒடுக்கப்பட்ட பெண் குரல்களைப் பற்றி எமிலி வில்சன், பாட் பார்க்கர், மதெலினா மில்லர் எழுதியுள்ளவற்றைப் பரிசீலிக்க முனைகிறது.[2] ஆணாதிக்க சமுதாயத்தில் பண்டைய கிரேக்கப் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை எமிலி வில்சன் ‘ஒடிஸி’யின் மீள் ஆக்கத்தில் சொல்கிறார், பாட் பார்க்கர்  ‘Silence of the Girls’’ இலியட் நாவல் மூலமும், மதெலினா மில்லர், ‘Circe’ (ஒடிஸியஸ்ஸின்  காதலியும் கறுப்பு மந்திர வாதியுமான ‘சிர்சி’) மூலமும்  சொல்கிறார். அவர்கள் விவரித்ததை  எலனோர் ஜான்சன் தன் பார்வையினூடாகச் சொல்கிறார். அந்த மூவரின் பெண்ணீயப் பார்வைகளில் தவறும் வியப்பும் இருக்க வேண்டிய அவசியமில்லை.

எலனோரின் பார்வை, ஹோமர் தன் பாத்திரங்களை எந்த ஒரு முன் தீர்மானமும் இல்லாமல், சரி, தவறு என்ற வரையறைக்குள் அடக்காமல், மனிதர்களின் பல விதக் குண வேறுபாடுகளையும், ஒரே மனிதனின் மாறுபட்டு வரும் குண இயல்புகளையும் அப்படியே எடுத்துக்கொள்ளச் சொல்கிறார் என்பதாக இருக்கிறது. இவரது கட்டுரையின் படி இந்த மூவரும் தங்களின் சமகாலப் பார்வையைப் புகுத்தி ஹோமர் சுட்டாத ஒன்றைக் காட்ட முயல்வதாகக் கூறுகிறார். ஒரு நல்ல ஆக்கம் என்பது நேர் மொழி பெயர்ப்பல்ல. அதன் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு வால்மீகி  இராமாயணத்தை கம்பன் தன் வழியில் இராம காதையாக்கியது. செவ்வியிலும், அழகியலும் கெடாமல் இலக்கியத் தரத்தோடு செய்யப்படும் மீள் ஆக்கங்கள் வெளிப்படையாகத் தெரியும் குணங்களின் ஊடாக மறைந்து கிடக்கும் உள் மன குணங்களையும் கொண்டு வந்தால் சிறப்புதான். இதில் குணங்கள் என்பது நல்லதையும் தீயதையும் குறிக்கும்;   அது மட்டுமல்ல-இரண்டிற்கும் இடை நிலையையும் குறிக்குமல்லவா?

பல யுகங்களாக ஆண்களின் கட்டளைகளுக்கு உட்பட்டு உலகின் அத்தனைச் செயல்களையும் செய்யும் பெயரில்லாத பெண்குலம் ஒரு சிறு நன்றிக்குக்கூட உரித்தாகாமல் போவது பெரும் துயர்.‘மறந்து விடு’ என்பது அவளுக்குச் சொல்லப்பட்டாலும், ‘நினைவில் இருத்து‘ என அவள் அதைப் புரிந்து கொள்கிறாள். கூடடையப் பறவைகள் சிறகெழுப்பி பறந்து உல்லாசமாக வருகையில் அவை வலையில் அகப்பட்டு காற்றில் ஊசலாடும் கால்களில், கழுத்தில் இறுகும் முடிச்சில் பெயரற்று, புகழற்று, இருந்த நினப்பற்றும் போவதைப் போல் உலகில் பெண்களின் நிலையிருக்கிறது என்பது அந்த மூவரின் பார்வையின் மையச் சரடு.

இந்த விவரிப்பு கொண்டு வரும் அனுதாபச் சிந்தனைகள், ஒரு தலைப் பட்சமாக பார்த்து நிகழ்வின் அபத்தத் தர்க்கங்களை கண்ணீரால் மெழுகுவதாக நினைக்கிறார் எலனோர்; அதிலும் இதுவல்ல ஹோமர் சொல்வது-விழுமியச் சரிகள் என ஒன்றை எத்தருணத்திலும் நிலை நிறுத்துவது அல்ல அவர்  நோக்கம் என்கிறார். இக்கருத்து தவறாகவும், சரியாகவும் புரிந்து கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் உடையது என எலனோர் நினைக்கவில்லை போலும்.

வில்சன், ஹோமரின் ‘ஒடிஸி’யை தன் ‘ஒடிஸி’யாகத் திறமையாக, அற்புதமாக, இலக்கண சுத்தமாக தன் வழியில் எழுதிவிட்டார் என்கிறார் எலனோர்.’ஒடீஸீயஸை’ அகழ்ந்து பார்க்க வேண்டிய நாம் ‘ஒடீஸீயஸை’ விரும்பும் ஒரு தேவையின்மையை தன் படைப்பின் மூலம் எமிலி வில்சன் உருவாக்கிவிட்டார் என்கிறார் எலனோர். தன்னை மையமாகக் கொண்டு, தன்னை முன்னிலைப்படுத்தும் கதாநாயகர்களை நாம் விரும்புவதும், துணிவு மிக்க எதிர் நாயகர்களை நாம் புறம் தள்ளுவதும் இவருக்கு வியப்பாக இருக்கிறது. ஆனால், உலகம் இரண்டில் ஒன்று என்று பைனரியில் தான் வாழ்கிறது-இரவு, பகல், நன்மை தீமை, சொர்க்கம், நரகம், இன்பம், துயரம். பின்னும் ஹோமர் வெற்றி பெறுவது ‘ஒடீஸீயஸை அவனாகவே இருக்க விட்டதால்தான். திறமைகளும், கயமைகளும் கலந்த கலவை;  பண்பாட்டுக் கரைகளை மீறும் சுயநலன். தன்னைச் சார்ந்தோரையும் பலி கொடுத்து தன்னை நிறுவிக்கொள்ளும் ஆணவன். கதை சொல்லும், பெண்களை மகிழ்விக்கும், கடற் பயணம் மேற்கொள்ளும் துணிச்சலாளன். அவனின் அத்தனை வண்ணங்களையும் மழுப்பலாக்கி தான் விரும்பிய வண்ணம் எமிலி அவனை வார்த்தெடுத்திருக்கிறார் என எலனோர் சொல்வது உண்மையே! அவன் சாதுர்யமானவன், சிரமங்கள் பட்டவன், இழி நிலைக்கும் தள்ளப்பட்டவன், காவு கொடுத்து மீள்பவன் அவனின் பன்முகங்களுக்கு ஒரு சிறுதுளை வழிப் பார்வை போதாது. எமிலியின் ‘ஒடீஸீயஸ்’ பெரும் பொய்யன்;  ஆனால் அவன் முரண்பாடுகளின், சந்தேகங்களின் அச்சு. அவனை அப்படிப் படைத்த ஹோமரின் பார்வையை ‘பொய்’ என்ற வட்டத்துள் அடக்க முயல்வது இந்நாளின் கருத்தியல்களைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்டுள்ளது. அவனே வெட்டிக்கொள்ளும் குழிக்கு நாம் பார்வையாளர்களே, அனுதாபிகளல்ல.

ஹோமரின் அறுசீர் விருத்தத்தை எமிலி ‘இயாம்பிக் பென்டாமீட்டரில்’ சொல்வதும் கட்டுரையாளருக்கு ஏற்புடையதாக இல்லை அதில் ஒரு நிறைவின்மையை இவர் உணர்கிறார். இவரது கருத்தை அதிக பட்சத் தலையீடு என்றே கொள்ளலாம். ஒரு கவிஞர் எந்தவடிவத்தையும் கையாளலாம். காலப் பிதுக்கல்களில் கூட நாம் முற்றிலுமாக எங்கும் போய்விடுவதில்லை. இது ஆரோக்கியமான குறை சொல்லல்அல்ல, அத்து மீறலே!கவிதை வார்த்தைகளால் மட்டுமே வார்த்தெடுக்கப்படுவதில்லை அல்லவா?மேலும் ‘ஒடீஸி’ யை பென்டாமீட்டரில் அடக்குவதற்கு மொழி ஆளுமையும், கவித்துவமும், கற்பனையும் மிகவும் தேவை.

பாட் பார்க்கர் தன் நிகழ் காலக் கண்ணாடியில் ‘அசிலெஸ்ஸை’ப் பார்க்கிறார்.’பெட்ராகிளஸ்’அசிலெஸ் உறவை நியாயப்படுத்த வேண்டியிருக்கிறது அவருக்கு.’டீடிஸின்’, தன் குழந்தையான ‘அசிலெஸ்ஸை’ சிறு குழந்தையாக இருக்கையிலேயே பிரிந்து சென்றுவிடுவதால் அவனுக்குக் கடலில் காதல் பெருகுகிறது. அவன் ஆங்காரங்களுக்கு அவனை ஒதுக்கிய அன்னை காரணம். உப்புக் கடலில்  இரவில் குளித்து வரும் ‘ப்ரிஸெஸ்சு’டன் அவன் அதி வன்மையான காதல் கொள்கிறான். அவனது அடங்காச் சினம் அவனது காதலியை அகெமெனான் திருடியதில் தொடங்குவதாகப் பார்க்கர் சொல்வது ஏற்புடையதே! ஹோமர் இதை விரிவாகச் சொல்லவில்லை என்றாலும் வாசக ஊகத்திற்கு இடமளிக்கும் சம்பவங்கள் தான் இவை.’ஒருவன் இவ்வண்ணம் நடந்து கொள்கிறான்’ என்று ஹோமர் சொன்னால், அவன் ஏன் அப்படி நடந்து கொள்கிறான் எனச் சொல்வதற்க்கு ஹோமரே இடம் கொடுத்திருப்பதால் அதைப் பார்க்கர் விரித்துச் சொல்கிறார் என எனக்குத் தோன்றுகிறது. கொடூரமும், காமமும், சினமும் அவ்வப்போது காதலும் கொள்ளும் பாத்திரம் நிறைய விரிவாக்கங்களுக்கு இடம் கொடுக்கும்.

அன்பு செலுத்தாத பெற்றோரின் பெண் குழந்தை கருணையும், வஞ்சமுமாகத் தான் இருக்க முடியும் என்பது உளவியலாளர்களின் கருத்து. எதற்குமே காரணங்களைக் கண்டுபிடித்துத் தர்க்கித்து நிறுவிக்கொள்ளும் அந்த அனிச்சை இயல்பை மிகப் பெரிய கண்டுபிடிப்பாக மனிதன் நினைக்கிறான். ஆனால், அபத்தங்களால் தான் ஆனது வாழ்க்கை. திருடுவது, பொய் சொல்வது, கொலை செய்வது, ஒழுக்கம் கெடுவது  போன்ற அனைத்தையுமே இந்தக் காரண காரிய நியாயப்படுத்துதலில் ஒப்படைத்து விடுகிறோம். அது அளிக்கும் ஆறுதல் நம்மை நீதிமான்கள் என உணர வைக்கிறதோ என்னவோ?

மில்லரின் ‘சிர்சி’ பொதுவாக நல்லவள், கருணை மிக்கவள், அடிபடுவோரை அரவணைப்பவள், நெகிழ்வானவள், அவளே ‘சிலா’ என்ற கடல் மிருகத்தை பழி வாங்கியதை நினத்தும் வருந்துவாள், தன் உயிரை ஈடுகட்டி அதைக் காப்பாற்றவும் முயல்வாள். மூக்கறுப்பு செய்யும் விதமாக தன்னைக் கூட்டாகக் கற்பழித்த கடற்பயணியர்களை பன்றிகளாகவும் மாற்றுவாள். ஹோமர் காட்டுபவள், கறுப்பு மந்திரக்காரி, மனிதர்களைப் பன்றிகளாக மாற்றுபவள், வியப்பானவள் சிறைப்பிடித்த ‘ஒடீஸியஸ்ஸை’ விடுவிப்பவள், அவன் நாடு திரும்ப உதவுபவள், பன்றிகளை மீண்டும் மனிதர்களாக்கி உணவிடுபவள் அவ்வளவே. ஆனால், மில்லர் காட்டுபவள் வஞ்சிக்கப்பட்டவள், நீதி கேட்பவள், தவறுகளுக்கு வருந்துபவள், கருணையானவள். அகழ்கையில் நீரும் வரலாம், வராமலும் போகலாம். நியாயப்படுத்துதல் என்பது தர்க்க அறிவால் நிகழக்கூடியது;  அனுபவிப்பது என்பது ஒன்றுதல் தானே?

‘பிந்தைய மன உளைச்சல் நோயுடன்’ திரும்பும் ஒடீஸியஸ்ஸை காட்டுகிறார் மில்லர். அவன் சண்டை முடிந்ததை நம்ப மறுக்கிறான்;   எப்போதும் பதட்டத்தில் இருக்கிறான். சம்சயப்படுகிறான்.

கட்டுரையாளர் இந்த மூன்று பெண் எழுத்தாளர்களை, அவர்களின் அணுகுமுறையை, இன்றைய மனவியல் தேற்றங்களின் ஊடாக அவர்கள் கொணரும் பார்வையை, கைவிடப்படுபவர்கள் வஞ்சனையாளர்களாகவும், வன்முறையாளர்களாகவும் மாற நேரிடுவதை , வஞ்சிக்கப்பட்டோர்கள் நல் இயல்புகளுக்குத் திரும்ப முடியும் என்ற நம்பிக்கையை, அதை இந்த மூவரும் சொன்ன விதத்தைப் பாராட்டிவிட்டு இக்கட்டுரை எவ்வகையிலும் தன் பார்வையே என்கிறார். அது உண்மைதான். ஒன்று அசல். அதைப் பார்க்க நாம் அணிந்து கொள்வது வண்ணக்கண்ணாடிகளே!

எந்தவிதக் குணாதியசயங்களையும் பண்பாடு என்ற பூச்சுக்குள் அடக்காமல், நியாயம் சொல்லாமல் தன் படைப்புக்களை உலவ விடுகிறார் ஹோமர். வலிமையும் கொடுமையும், சுயநலமுமாக ஆண்கள் இருக்க, வஞ்சமும், கருணையும், கழிவிரக்கமுமாக பெண்கள் இருக்க அதைப் பெண்களின் ஆற்றாமையிலிருந்து வில்சன், பார்க்கர், மதெலினா அனுதாபத்துடன் பார்க்கிறார்கள். ஹோமரை அப்படியே சொல்வதற்கு மறு ஆக்கங்கள் எதற்கு? குளிர் வர்ணம் அடிக்கப்பட்ட பார்வைகளைத் தவிர்த்திருக்கலாம்.

பின் குறிப்பு: [1] எலனோர் ஜான்சனின் கட்டுரையின் நேர் மொழிபெயர்ப்பு அல்ல இது. கட்டுரையின் எதிர் அல்லது மாற்று வினை எனக் கொள்ளலாம்.

[2] மூலக் கட்டுரை: Eleanor Johnson: The Return of the Homer’s Women. இது Public Books எனும் சஞ்சிகையின் 16-5-2019 தேதியிட்ட பதிவில் பிரசுரமாகியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.