ஆட்டத்தின் ஐந்து விதிகள் – மூன்றாம் விதி

இரண்டாம் விதி குறித்து கடிதங்கள் , தொலைபேசி மூலம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி. பெரும்பாலான நண்பர்கள் இவ்விதிகள் விற்பனைத் திறன் மட்டுமல்லாது ஆளுமைக்குரிய பண்பாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். உண்மையே. இவ்விதிகள் ஆளுமையின் ஒரு பகுதியாக இருப்பவரால்தான் சிறந்த விற்பனையாளராக முடியும். இந்த இயல்புகள் சிறந்த விற்பனையாளராக காணப்பட்ட பலரிடமும் அவர்களது ஆளுமையின் பகுதியாக இருப்பதை கவனித்திருக்கிறேன். நன்றி. இனி மூன்றாம் விதியைப் பார்க்கலாமா?

வாடிக்கையாளரின் முந்தைய முடிவுகள் குறித்து தாழ்த்திப் பேசவேண்டாம் –

Do not make adverse comments on client’s earlier decisions

மிக ஆர்வமூட்டும் அவதானிப்பின் அடிப்படையில் அமைந்த விதி இந்த மூன்றாம் விதி. சற்று கவனித்தால் நம்மாலும், நமக்கும் இவ்விதி செயல்படுவதை உணர முடியும்.

எனது பதினேழாம் வயதில் எனது பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரியில் சேர இருந்த காலத்தில் என் நண்பன் ஒருவன் வீட்டில் நடந்த சம்பவம் ஒன்று இவ்விதியைப் புரிந்து கொள்ள உதவும். கல்லூரியில் சேரப்போகும் என் நண்பனின் அப்பா அவனிடம் ஐநூறு ரூபாய் கொடுத்து அவனுக்கான உடைகளை அவனே வாங்கிகொள்ளலாம் என்றார். இரண்டு விஷயங்கள் நண்பர்களுக்குச் சொல்ல வேண்டும். ஒன்று, அதுவரையில் அவனுக்கு அவன் வீட்டில் உள்ள மூத்தோர் யாராவது வந்து அவர்கள் தேர்வு செய்து தருவதுதான் ஆடை. இன்றைக்கு இருப்பதுபோல் செலக்ஷன் என்ற வார்த்தையை அன்று பேசவே முடியாது. இரண்டு, அன்று தரமான ஒரு ஆயத்த சட்டையே முன்னூறுக்குள்தான். ஆகவே நண்பனின் உவகையை நீங்கள் இவ்விரண்டு அடிப்படையில்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

நண்பர்கள் புடைசூழ கடைக்குச் சென்றோம் . அனைவருமே அவ்வயதுதான் என்பதால் அன்றைய பாணியில் லேட்டஸ்ட் பேஷன் எனும் மரபிற்கேற்ப “ஸ்டோன்வாஷ் டெனிம்” ல் ஒரு சட்டையை வாங்கினோம். இதை வாசிக்கும் நண்பர்களுக்குத் தெரியும் ஸ்டோன்வாஷ் என்பது எப்படியிருக்கும் என. அந்த சட்டை மட்டுமே நானூற்றி எண்பது ரூபாய். நண்பனை திரைக்கதாநாயகனாக்கி விட்ட பெருமையோடு அவன் வீட்டிற்குள் நுழைந்தோம். சட்டையை வாங்கிப் பார்த்ததும் அவன் அப்பா ஆரம்பித்தார். நாங்கள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் பத்து நிமிடங்கள் கொட்டித் தீர்த்தார். நாங்கள் மெல்ல நழுவி தெருவில் இறங்கிய பின்னும் அவரது குரல் கேட்டுக்கொண்டிருந்தது. கண்ணீர் விளிம்பு கட்டிய முகத்துடன், தலை கவிழ்ந்து மேசையின் முனையைப் பற்றியபடி நின்றிருந்த நண்பனின் தோற்றம் இன்னும் அப்படியே மனதில் நிற்கிறது.

அந்த நிகழ்விலிருந்து அவனுக்கும், அவன் அப்பாவுக்குமான உறவு இறுதிவரை சிக்கல் நிறைந்ததாகவே இருந்தது. அவர் எந்த முடிவை எடுத்தாலும் அதை நிராகரிப்பவனாகவே என் நண்பன் இருந்தான். படிப்பு, வேலை, திருமணம் என அவன் தன்னதிகாரம் கூடிக்கொண்டே செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் அவன் அவரது யோசனைகள் எதையும் கேட்பவனாக இருக்கவில்லை.

இன்று யோசிக்கையில் சில விஷயங்கள் புலப்படுகின்றன. முதலாவது விஷயம் அவர் பேசியவற்றில் சில நியாயமற்றவை என புறக்கணிக்க முடியாதவை … “இதைப் பார்த்தால் புதிது போலவா இருக்கிறது ? இன்னும் ஒரு மாதத்தில் கல்லூரிக்கு செல்லும்போது கல்லூரி அனுமதிக்கும் ஆடை வரைமுறைக்குள் இது வராது , குடும்ப விழாக்களிலும் இதை அணிந்து வருவது பொருத்தமாக இருக்காது , இந்த விலையில் இரு சட்டைகளை வாங்கியிருக்கலாம் , எப்போதும் பழசு போலத் தோன்றும் ஆடை அணிபவனை பிறர் எப்படிப் பார்ப்பார்கள்? – இவ்வாறெல்லாம் அவர் சொன்னவை கருதத் தக்கவையே. ஆனால் எந்த இடத்தில் இது நண்பனை மோசமாகக் காயப்படுத்திய ஒன்றாக மாறியது ?

இரு நிமிடங்களில் மேலே சொன்னவற்றை சொல்ல கூடுதல் பத்து நிமிடங்களுக்கு நண்பனின் அப்பா பயன்படுத்திய கடுஞ்சொற்கள்தாம் விஷயத்தை விபரீதமாக்கின – “உன் முகத்தில் ஏமாளி என எழுதி ஒட்டியிருக்கிறது , உனக்கு பணத்தின் அருமை தெரியவில்லை, நீ சம்பாதித்திருந்தால் தெரியும் அதன் அருமை, ஒரு சட்டை வாங்கத் துப்பில்லாத நீ எப்படி வேலைக்குப்போய் குடும்பத்தைக் காப்பாற்றப் போகிறாய்? கல்லூரிக்குப் போகப்போகிறாயா , கூத்தாடப் போகிறாயா ? “ – இன்னும் எழுத முடியாத அளவுக்கு வார்த்தைகள்.

என் நண்பன் இன்றுவரை ஜீன்ஸ் சட்டைகள் அணியவே மாட்டான். தான் முதன்முதலில் வாங்கிய சட்டை எனும் இனிய நினைவினைக் கிளர்த்த வேண்டிய ஒரு பொருள், பார்க்கப்படும்போதேல்லாம் ஒரு கசப்பை, அவமானத்தை நினைவுப்படுத்தும் ஒன்றாக மாறிவிட்டது. அவரது கடும் பேச்சு காரணமாக அவரது பேச்சில் உள்ளுறைந்திருந்த துளி நியாயத்தையும் உணர முடியாமல் போனது. மட்டுமல்லாது ஒரு உறவுமுறையே சிக்கலாகிப்போனது. ஆனால் அவர் மட்டும் இறுதிவரை தான் தவறாக எதுவும் பேசிவிடவில்லை என்றும், அவன் தவறை சுட்டிக்காட்டியது அவன் நன்மைக்கே என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். ஆக இதில் விஷயம் என்ன ?

நண்பன் வாங்கிய சட்டை என்பது அவனது முடிவு. ஒரு வளர்ந்த, மனமுதிர்ச்சி அடைந்தவனாக அவன் தனது தேர்வாக அந்தச் சட்டையை வாங்கும் முடிவினை எடுக்கிறான். அவனது அப்பா அந்த முடிவினை விமர்சிக்கிறார். நண்பரின் அப்பாவைப் பொறுத்தவரை அது சட்டை குறித்த விமரிசனம் மட்டுமே. ஆனால் அவர் விமர்சித்த விதம் என் நண்பனின் முடிவெடுக்கும் திறன் மீதான தாழ்வுச் சொற்பெருக்கு. அவர் மனதில் அது சட்டை குறித்தது எனும் எண்ணமும், என் நண்பன் மனதில் அது தன் முடிவெடுக்கும் தனி ஆளுமையை நண்பர்கள் முன் அவமதித்ததாகவும் ஆகிப்போனது. அதன்பின்னர் சட்டையோ, படிப்போ, வேலையோ, திருமணமோ எதுவாயினும் தன் முடிவினை அவர் விமர்சிக்க அவன் அனுமதித்ததே இல்லை.

நண்பர்களே, நாமும் இப்படியான சூழல்களைக் கடந்து வந்திருப்போம். ஒன்று பெற்றுக்கொள்ளும் விதத்தில் அல்லது அள்ளி வழங்கிய விதத்தில். இதில் வியப்புக்குரிய ஒன்று உண்டு. இப்படிப் பேசும் ஆட்களில் நாமும் உண்டு. ஒரு முடிவினைக் குறித்த விமரிசனம் வைக்கையில் நாம் எப்போதுமே முடிவு எடுத்தவரை நோக்கித்தான் விமரிசனம் வைக்கிறோம். பொருள் குறித்தல்ல நமது விமரிசனம் , எப்போதும் அதைச் செய்த ஆள் குறித்தே தான்.

இந்த நிகழ்ச்சியிலேயே பாருங்கள், சட்டை வாங்கியது பொருந்தவில்லை என்பதை விளக்க, வாங்கிய நீ ஒரு ஏமாளி எனும் வாக்கியம்தான் சரளமாக நமக்கு வருகிறது. செலவுக்கேற்ற பயனை வாங்கும் பொருளில் கவனித்தே வாங்க வேண்டும் என்பதைச் சொல்ல நமக்கு வரும் வார்த்தைகள் – நீ ஒரு பொருளை சரியாக வாங்கும் துப்பில்லாதவன் ….. ஆக நமக்கு விஷயம் அந்த முடிவு அல்ல. அதைச் செய்தவன்தான். செய்தவனைத் தாழ்வு சொல்லாமல் நம்மால் ஒரு முடிவினை விமர்சிக்கவே இயலாது.

வியப்பான இடம் என்பது இதுதான் – இப்படிக் குற்றம் சாட்டும் எவருமே தாம் தவறு செய்கிறோம் என்று உணர்வதே இல்லை. ஆனால் தம்மீது செய்யப்படுகையில் புண்படத் தவறுவதுமில்லை. தான் செய்யும்போது சரியாகவும், பிறர் தனக்குச் செய்யும்போது தவறாகவும் இந்த விஷயம் இருக்கிறது. என் முடிவினைக் குறித்து விமர்சிக்கையில் பிறர் என்னைக் குறித்து செய்யும் தாழ்வை நான் துல்லியமாக உணர்வேன். ஆனால் பிறர் முடிவினைக் குறித்து விமர்சிக்கையில் நான் அவரைக் குறித்தே விமர்சிப்பேன் என்பதை எப்படி எடுத்துக் கொள்வது?

கடும்பயிற்சியும், சுயவிமர்சனமும் கொண்டு தாண்ட வேண்டிய இடம் இது. செயலை விமர்சிப்பதில் செயல்பட்டவர் தாக்கப்படக்கூடாது என்பதைப் பயில கத்தி முனையில் நடனம் பயின்றுவிடலாம். ஆகவே மூன்றாம் விதி நம்மை சரியாக மட்டுறுத்தும் விதியாக அமைகிறது.

வாடிக்கையாளரின் முந்தைய முடிவுகள் குறித்து தாழ்த்திப் பேசவேண்டாம்

முடிவினை விமர்சித்து முடிவெடுப்பவரை சிந்திக்கச் செய்யும் அளவிற்கு பேசும் விதம் கைவரப்பெறும் வரையில் நாம் முடிவினை விமர்சிக்காமல் இருப்பதே நலம் என்பதையே இவ்விதி வலியுறுத்துகிறது.

விற்பனைப் பேச்சுகளைப் பொறுத்தவரை இவ்விதியை நாம் வேறு விதமாக அணுக வேண்டியிருக்கிறது. விற்பனை சார்ந்த சந்திப்புகளில் வாடிக்கையாளர் நமது போட்டியாளரின் பொருட்களையோ, அல்லது இணையான பொருட்களையோ வாங்கிவிட்டதாகக் கூறுவது இயல்பே. அங்கு இவ்விதி இயங்கும் விதம் மிக முக்கியமானது.

நான் நேரடியாகப் பார்த்த ஒரு காப்பீட்டு விற்பனைச் சந்திப்பில் நடந்தது இது. இதில் என் பங்கு பார்வையாளனாக மட்டுமே இருந்தது. வாடிக்கையாளருக்கு நான்கு வயதில் மகள் இருப்பதைத் தெரிவிக்கிறார். உடனே விற்பனையாளர் மகளது வருங்காலத் தேவையான திருமணம் குறித்து பேச்சைத் துவக்குகிறார். அந்த உரையாடலை சுருக்கித் தருகிறேன்.

“உங்களுக்கு மகள் இருப்பது குறித்து மகிழ்ச்சி சார் , அவளது எதிர்காலம் குறித்து நீங்கள் ஏதாவது யோசித்திருக்கிறீர்களா ?”

“எதிர்காலம் குறித்து என்ன யோசிக்க வேண்டும் ? எனக்குப் புரியவில்லையே”

“அதாவது சார், அவளது படிப்பு ,முக்கியமாக திருமணம், அதற்கான செலவுகள் குறித்து யோசித்திருக்கிறீர்களா ? இப்போதிருந்தே அதற்கான சேமிப்பைத் துவக்கினால் எளிதாக இருக்குமே”

“ஓ , நீங்கள் அவளது திருமணம் குறித்து சொல்கிறீர்களா ? நீங்கள் சொல்வது போல் அன்று திணறி விடக்கூடாது என்பதால் இப்போதே அதற்கான ஏற்பாட்டை செய்து விட்டேன்”

“அப்படியா? என்ன முதலீடு, எங்கு செய்திருக்கிறீர்கள்?”

“புறநகர் பகுதியில் வீட்டுமனை ஒன்று வாங்கி விட்டேன். இவள் திருமணத்திற்கு இன்னும் இருபது ஆண்டுகள் இருப்பதால் அப்போது விற்றால் அன்று நல்ல விலைக்கு போகும் என்பதால் அதை அப்படியே பாதுகாத்து வருகிறேன்”

“சார், சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இன்று நில விற்பனைத்துறை சுணங்கிப் போய் இருக்கிறது. இது மீள இன்னும் பத்து ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள். நீங்கள் இதை மட்டும் நம்பி இருப்பது சரியல்ல “

“ஏன் அப்படி சொல்கிறீர்கள்? பத்தாண்டுகளுக்குப் பின் இன்னொரு பத்து ஆண்டுகளில் மீண்டு வரும்போது சரியாகி விடுமல்லவா??”

“சரியாகிவிடும்தான். ஆனால் அப்போது நாம் எதிர்பார்க்கும் விலை உயர்வு நடக்கும் என்பதற்கு என்ன உறுதி ? மேலும் நாம் விற்கப் போனால் கிடைக்கும் விலைக்கும், நம்மைத் தேடி வந்து வாங்குவோர் தரும் விலைக்கும் வேறுபாடு உண்டே? நாம் விற்கையில் குறைவான விலைக்குத்தானே போகும்?”

“சரி, இந்த விஷயம் போதும். இப்போது நீங்கள் வந்த விஷயத்தில் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? “

“சார், எங்களிடம் ஒரு அருமையான பாலிசி …………………”

இதற்குப் பின்னர் விற்பனையாளர் தன் பாலிசியின் அருமை, பெருமைகளை விளக்க முயற்சிக்கிறார். ஆனால் ஒவ்வொரு இடத்தையும் வாடிக்கையாளர் மூன்று விஷயங்களின் மூலம் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறார். 1. என்ன உறுதி? 2. அப்படி நடக்காவிட்டால்? 3. இதற்கு தகுந்த மாற்று என நீங்கள் சொல்வதென்ன? – உதாரணமாக, விற்பனையாளர் இப்பாலிசியில் 6% வளர்ச்சி உண்டு என்றால் வாடிக்கையாளர் இப்படிக் கேட்பார் – “6% வளர்ச்சிக்கு என்ன உறுதி தருவீர்கள்? அப்படி நடக்கவில்லை எனில் எப்படி ஈடு செய்வீர்கள்?, அதற்கு யாரை அணுக வேண்டும்? ……இவ்வாறே ஒவ்வொரு இடத்திலும் கேள்விகள். சந்திப்பு சரியாகப் போகவில்லை என்பதால் மீண்டும் இன்னொரு நாள் சந்திக்க நேரம் கேட்டுக்கொண்டு கிளம்பி விட்டோம்.

வழக்கம்போல் தேநீர்க்கடையில் தஞ்சம் புகுந்தோம். விற்பனையாளர் சரிந்த முகத்துடன் சொன்னார் – “ நல்லாத்தான் பேசிட்டிருந்தார். என்னவோ தெரியலை, திடீர்னு சொதப்ப ஆரம்பிச்சிட்டார்.”

நான் என் அவதானிப்பை சொன்னேன் – “ நீங்கள் பேசும்போது அவரது நிலம் குறித்து அவ்வளவு நேரடியாக பேசியிருக்க வேண்டாம். அது அவரை ஒரு விலக்கம் கொள்ள வைத்துவிட்டது என நினைக்கிறேன் “

“நான் சொன்னதில் ஏதாவது தவறு இருக்கிறதா ? நான் சொன்னவை அனைத்தும் நில விற்பனைச் சந்தையைப் பொறுத்தவரை சரிதானே. இதில் அவர் விலக்கம் கொள்ள என்ன இருக்கிறது ?” – வாடிக்கையாளர்தான் தவறாகப் பேசிவிட்டார் என்ற அணுகுமுறையிலேயே விற்பனையாளரின் பதில் இருந்தது. வாடிக்கையாளர் மேல் மெல்லிய கோபம் வேறு.

இதில் இந்த விற்பனையாளருக்கு நான் சொன்ன பதிலே இங்கு மூன்றாம் விதியாக மாறியிருக்கிறது.

இங்கு விற்பனையாளர் உணரத் தவறியது என்ன ? மகள் திருமணம் குறித்து கேள்வி எழுகையில் அதற்காக நிலம் எனும் முதலீட்டைச் செய்திருப்பதாக வாடிக்கையாளர் சொல்கிறார். உடனே விற்பனையாளர் நிலம் என்னும் முதலீட்டின் பாதக அம்சங்களைப் பேச ஆரம்பிக்கிறார். வாடிக்கையாளர் அதை மறுக்க விற்பனையாளர் இன்னும் விவரிக்க விவாதம் தொடர்கிறது. சிறிது நேரத்தில் இப்பாத்திரப் படைப்பு ஒருவருக்கொருவர் இடம் மாறிக்கொள்கிறது. தன் பொருளைக் குறித்து விற்பனையாளர் சொல்ல ஆரம்பித்ததும் வாடிக்கையாளர் அதன் பாதக அம்சங்களை சந்தேகமாக்கி கேள்விகள் கேட்க, விற்பனையாளர் மறுக்க விவாதம் தொடர்கிறது. விவாதத்தில் இருதரப்புமே வெல்வதில்லை எனும் அடிப்படை விதி மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.

விற்பனையாளர் இங்கு உணர வேண்டியது இவ்வாறுதான் – வாடிக்கையாளர் முன்பே ஒரு முடிவினை எடுத்துள்ளார். தன் முடிவு தவறு என நிரூபிக்க முயலும் ஒருவரை அவர் எப்படி ஏற்றுக் கொள்வார்? நமது முடிவினை தவறு என நிரூபிக்க முயலும் ஒருவரின் ஆலோசனைகளை நாம் கேட்போமா ? அதுவும் அதே விஷயத்தில்.

குறிப்பாக தனது முந்தைய முடிவு புத்திசாலித்தனமாக எடுக்கப்படவில்லை என்று நிறுவ முயலும் ஒருவரின் ஆலோசனைகளை, இதற்குப் பிறகு அவர் கேட்பார் என எப்படி விற்பனையாளரால் நம்ப முடிகிறது ?

விற்பனையாளரைப் பொறுத்தவரை முதலீட்டின் ஒரு அலகு எனும் அளவில் பார்க்கப்படும் விஷயம் வாடிக்கையாளரைப் பொறுத்தவரை அவ்வாறிருக்க வேண்டிய அவசியமில்லை. விற்பனையாளர் நிலம் குறித்து சொன்ன தகவல்கள் உண்மைதான். மறுக்க முடியாதவைதான். எனினும் அது வாடிக்கையாளரைப் பொறுத்தவரை நிலமல்ல. அவரது மகளின் திருமண ஏற்பாடு. நிலம், வங்கி வைப்பு, தங்கம், வீடு ஆகியன விற்பனையாளரைப் பொறுத்தவரை முதலீட்டின் ஒரு அலகு. ஆனால் வாடிக்கையாளரைப் பொறுத்தவரை இவை அனைத்தும் அவரது குடும்பத்தினரின் வருங்காலத் தேவைகளை மனதில் கொண்டு அவரால் எடுக்கப்பட்ட முடிவுகள். வாடிக்கையாளர் முன்பு செய்த ஒரு முதலீட்டின் பாதக அம்சங்களை விவரிக்கும் விற்பனையாளர் , வாடிக்கையாளரைப் பொறுத்தவரை அவரது முடிவுகளைக் குறித்து பாதகமாகப் பேசுகிறார் என்றே பொருள்படுவார்.

இன்னும் உடைத்துச் சொல்வதானால் நிலம் மதிப்பிழக்கும் என்று சொல்லும் விற்பனையாளர் தன் மகள் திருமணம் பணச்சிக்கலை சந்திக்கும், தன் மகன் மேற்படிப்பு சிக்கலாகும், தன் ஓய்வுகால வாழ்க்கை சிக்கலாகும் என்றே சொல்வதாக வாடிக்கையாளருக்குப் பொருள்படும்.

இன்னொரு விதத்தில் இதனைப் பார்க்கலாம். ஏன் பெரும்பாலான விற்பனையாளர்கள் இந்த முறையைக் கையாளுகிறார்கள்? வாடிக்கையாளரின் முடிவினைக் குறை சொல்ல வேண்டிய அவசியம் என்ன ? இது ஒரு விற்பனை உத்தியாக புரியவைக்கப்பட்டிருப்பதே காரணம். முன்பே பார்த்தபடி நமக்கு இன்னொருவர் முடிவினை குறை கூறல் இயல்பிலேயே வழமை. மற்றொன்று எனது பொருளை உயர்த்திச் சொல்லும் நோக்கில் நான் அவரது பொருளை தாழ்த்திச் சொல்கிறேன். நீங்கள் எடுத்த முடிவை விட என்னிடம் இருக்கும் தீர்வு சிறப்பானது என்பதை உணர்த்தவே உங்கள் முடிவின் பாதகங்களைப் பேசுகிறேன். அதாவது வாடிக்கையாளரின் தேர்வு எவ்வளவு தவறானது என நிரூபித்து விட்டால் அதன் வழியே தனது பொருளின் உயர்வை நிரூபிக்க இயலும் என விற்பனையாளர் நம்புவதே இத்தவறின் அடிப்படைக் காரணம். இரு கோடுகள் தத்துவம் பயன்படுத்தப்பட வேண்டிய இடத்தில் விற்பனையாளர் வெற்று விவாத முறையைக் கையில் எடுக்கிறார்.

ஆகவே தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கவும், வாடிக்கையாளரின் உணர்வு நிலைகள் புரியாமல் அவற்றை நாம் அறியாமலேயே சீண்டி விடாமலும் இருக்கும்பொருட்டும் மூன்றாவது விதி உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விதியை மேலும் புரிந்து கொள்ள, உணர்ந்து கொள்ள நாம் சற்று சுயபரிசோதனையில் ஈடுபட்டாலே போதும். மூன்றாம் விதி சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டால் நமக்கு அறிமுகங்களை அடுத்த கட்ட நட்பினை நோக்கி நகர்த்தும் ஆற்றல் கொண்டது.

வாடிக்கையாளரின் முந்தைய முடிவுகள் குறித்து தாழ்த்திப் பேசவேண்டாம்

நண்பர்களே, இந்த விதி தொடர்பான சில மேலதிக சுவாரசியங்கள் நான்காவது விதியில் தெளிவாகும். ஆகவே இது குறித்து சிந்தியுங்கள். கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நான்காவது விதியுடன் மீண்டும் ஆட்டத்தைத் தொடர்வோம்.

Series Navigation<< ஆட்டத்தின் 5 விதிகள் – இரண்டாம் விதிஆட்டத்தின் ஐந்து விதிகள்- நான்காவது விதி >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.