“மிஸ்டர் சென்குப்தா?” என்று கேட்டுக்கொண்டே கேட்டைத் திறந்து அவர் உள்ளே வந்தார்.
“ஆமாம்! இது அவர் வீடுதான், ஆனா அவர் இல்லையே” என்று வராந்தாவில் அமர்ந்திருந்த அவள் பதிலளித்ததும், கேட்டிலிருந்து வீட்டை இணைக்கும் சிமெண்ட் பாதையில் பாதிதூரம் வந்தவர், அங்கேயே நின்றார்.
“ஓ! சாரி! அப்பிடியானால் நான்…..” என்பதற்குள்
“ நோ! நோ! வாருங்கள்! வாருங்கள்! அதனாலென்ன?” என்று மேல் படியில் நின்று வரவேற்றாள்.
அவர் படிகளில் ஏறி வந்ததும், வராந்தாவிலிருந்த அலங்கார நாற்காலியில் அமர கை காட்டி விட்டு அவளும் அமர்ந்தாள்.
“ என் பெயர் மாதவ்!”
“ஓ! ஒரு நிமிஷம் நீங்கள் சாய் குடிப்பீர்கள் அல்லவா?” என்று கேட்டுவிட்டு உள்ளே பார்த்து “ரேஷ்மி!ரேஷ்மி! தோ சாய் லானா, சாத் மே குச் நம்கீன் பீ” என்றாள்.
ரேஷ்மி எட்டிப் பார்த்து, இவரிடம் நமஸ்தே சொல்லிவிட்டு “ஜீ மேம் சாப்!” என்று உள்ளே போனாள்.
”என் பெயர் மாதவ்!” என்றார் மறுபடியும்.
“சரி!”
“எனக்கு அதற்கு மேல் எதுவும் நினைவில்லை!”
“என்ன?” சடக்கென்று எழுந்திருக்க முயற்சி செய்ததில் அவள் முழங்கால் டீபாயில் பட்டு “ஸ்! ஐய்யோ!” என்றபடி வலியில் முகம் சுளித்தபடிமறுபடி அமர்ந்தாள்.
அவர் வேகமாக எழுந்து டீபாயை தன் பக்கம் நோக்கி இழுத்து அவள் வசதியாக உட்கார இடம் செய்துவிட்டு“ ஐ ம் சாரி! எஃஸ்ட்ரீம்லி சாரி! அடி பலமாக பட்டுவிட்டதா? “ அவள் இல்லை என்பதாக தலை அசைத்தாள்.
“முன் பின் தெரியாத ஒருவரிடம் இப்படி திடீரென்று சொல்வது எனக்கே வினோதமாக இருக்கிறது! சாரி! எனக்கு வேறு வழியில்லை.என்பெயரைத் தவிர எனக்கு எதுவும் நினைவில்லை!”
அவர் நடை உடை பாவனைகளில், உடல் மொழியில் ஒரு நாசுக்கும் இங்கிதமும் கலந்த பெரிய மனித தோரணை இருந்தது. உடை நேர்த்தியாக, நாகரிகமாக இருந்தது.
தோட்டத்தில் ரோஜா பாத்தி அருகில் வேலை செய்து கொண்டிருந்த பகதூரையும் அவரையும் மாறி மாறி பார்த்தாள்.
“கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பாருங்கள். டீ குடித்துவிட்டு, உங்கள் எண்ணங்களை ஒழுங்கு படுத்திகொண்டால் , நினைவு வரும் என்று நினைக்கிறேன்!”
“இட் இஸ் வெரி கைன்ட் ஆஃப் யூ! நான் சொன்னவுடன் ரொம்பவும் அதிர்ச்சி அடையாமல் நிதானமாக கேட்கிறீர்களே!”
…………..
“நான் இங்கே அக்கம் பக்கத்தில் யார் வீட்டுக்காவது விருந்தாளியாக வந்து விட்டு, வெளியே மாலை நடைக்கு வரும் பொழுது வழி தவறி விட்டேனா? அப்படியென்றால் அவர்கள் என்னை தேடிக்கொண்டு வருவார்கள் இல்லையா? இது எந்த ஊர் என்று கூடத்தெரியவில்லையே? இது எந்த ஊர்?’
“ஊட்டி!”
“ஓ! ஏதொ மலைப் பிரதேச ஊர் எனத் தெரிந்தது, ஆனால் ஊட்டி என்று தெரியவில்லை. தமிழ் நாடு இல்லையா?” என்று விட்டு அது வரை ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தவர் தமிழ் தெரியுமா என்று தமிழில் கேட்டார்.
அவள் சிரித்துக் கொண்டே “தமிழ் புரியும் !ஆனால் சரியாக பேசவராது! மிஸ்டர் சென்குப்தா தமிழில் நன்றாக பேசுவார். தமிழில் நிறைய படிப்பார், அவரிடம் நல்ல தமிழ் புத்தகங்களின் பெரிய கலெக்ஷன் இருக்கிறது” என்றாள்.
“வாவ்! தட் சவுண்ட்ஸ் இன்டெரெஸ்டிங்க்! அவரை நான் நிச்சயம் பார்க்கவேண்டும்”என்றார். சிறிய இடைவெளிக்குப் பிறகு,
“நான்..” என்று அவர் ஏதோ ஆரம்பிப்பதற்குள் ரேஷ்மி அழகிய பீங்கான் கோப்பைகளில் டீயும் கூடவே சுட சுட சமோசாவும் கொண்டு வந்தாள்.
“சாப்பிடுங்கள்! “
அவர் வேகமாக சாப்பிட ஆரம்பித்தார். கொஞ்ச நேரம் அவர்களுக்குள் அமைதி நிலவியது. அவள் தன் தட்டிலிருந்த சமோசாவையும் அவர் தட்டில் வைத்தாள். அவர் நிமிர்ந்து பார்த்து தயங்கினாற்போல் சிரித்துவிட்டு “போதும்” என்றார்.
அவள் பதில் பேசாமல் தலையை அசைத்து சாப்பிடும் படி சொன்னாள்.
டீயை குடித்துவிட்டு “எனக்கு இன்னொன்றும் தோன்றுகிறது. இங்கே பக்கத்தில் வெளியூர் பஸ் நிற்குமிடம் இருக்கிறதா?”
“ஆமாம்! ஒரு அரை கிலோமீடர் தூரத்தில் வெளியூர் பஸ் வந்து நிற்கிற பஸ் ஸ்டாப் இருக்கிறது”
“நான் வெளி ஊரிலிருந்து வருகிற ஏதாவது ஒரு பஸ்ஸில் இங்கு வந்து இறங்கிவிட்டேனோ? ஒரே குழப்பமாக இருக்கிறது” தலையைப் பிடித்துக்கொண்டார்.
பகதூரின் டிரான்சிஸ்டரில் இருந்து ‘ஆப் கி நஃஸ்ரோனே சம்ஜா பியார் கி காபில் முஜே’ லதா மங்கேஷ்கர் குழைந்து கனிந்து உருகி உருகி பாடிக்கொண்டிருந்தார். குரல் தேன் கம்பியாய் இழைந்தது . பாடலை கேட்டபடி நிமிர்ந்து உட்கார்ந்தவர் அதோடு சேர்ந்து மெல்லிய குரலில் பாடினார்.
“ என்ன அருமையான பாட்டு! இந்த பாட்டு ரொம்ப நாள் முந்தி சித்ரஹாரில் வரும் பொழுது பார்த்திருக்கேன். மாலா சின்ஹா பளிங்கு பொம்மை மாதிரி அழகா இருப்பார், ஆனா நான் தர்மேந்தரைத்தான் பார்த்துக்கொண்டே இருப்பேன். இத்தனைக்கும் காமரா அவரை ஃபோகஸே பண்ணாது. அவர் மென்மையா சிரித்துக்கொண்டு அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருப்பார். அவ்வளவுதான். அது என்ன கதை, எந்த படம்னு கூட தெரியல. இளங்குருத்துப்போன்ற அவரின் முகமும் , சிரிப்பும்…..”
அவள் ”அன்பட்( படிக்காதவன்) “ என்றாள்.
அவர் “ஹாங்க்?” என்று புருவங்கள் முடிச்சிட அவளைப் பார்த்தார்.
அவள் “அதான் அந்த படத்தோட பேரு” என்றாள்.
அவர் கட கடவென்று சிரித்தார். “நான் கூட ஒரு நிமிஷம்….” பேச்சை முடிக்கும் முன் திருப்பி சிரிப்பு வந்தது. அவளும் சிரித்துக்கொண்டிருந்தாள்.
அவள் இன்னும் சிரிப்பு மாறாத முகத்துடன் சூரியன் மலைக்குப் பின்னால் மறைவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவரும் தன் நாற்காலியை வாசலை நோக்கித் திருப்பி மலை மேல் போர்த்திய பொன் நிற துகில் கொஞ்சம் கொஞ்சமாக மேலே இழுக்கப்பட்டு மலையின் அடர் நீலம் துலங்கி வருவதைப் பார்த்தபடி பேசாமல் இருந்தார்.
“அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள். மிஸ்டர் சென் குப்தா வந்ததும் அவரைக் கேட்டுக் கொண்டு என்னை இந்த இரவு மட்டும் இங்கே தங்க அனுமதிக்க முடியுமா? நான் நாளை காலை வரை என்னை யாரும் தேடி வரவில்லையென்றால் அருகிலிருக்கும் காவல் நிலையத்துக்குச் சென்று என் நிலையைக்கூறி அவர்கள் உதவியை நாடுகிறேன். கேட்க கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது….”
“மிஸ்டர் சென்குப்தா , வெளியூர் போயிருக்கிறார், வர இரண்டு நாட்களாகும்” என்று மெல்லிய குரலில் கூறினாள்.
சட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்து நின்று “ஓ! நான் உங்களுக்கு எப்படிப்பட்ட தர்மசங்கடத்தை உருவாக்கி விட்டேன் மிஸஸ் சென் குப்தா! மன்னிக்க வேண்டும்! மன்னிக்க வேண்டும்! இங்கு தங்குவதைப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை. நான் உங்கள் இடத்தில் இருந்தாலும் முன் பின் அறிமுகமில்லாத அன்னியரை என் வீட்டில் தங்க நிச்சயம் அனுமதிக்க மாட்டேன். மன்னித்துவிடுங்கள்!” கிளம்ப யத்தனித்தார்.
“இல்லை, இல்லை !ஒரு நிமிஷம் இருங்கள்! பகதூர் தங்குகிற அவுட் ஹௌஸில் ஒரு அதிகப்படி கட்டில் இருக்கிறது. மெத்தை , தலையணை, ரஜாய் கொடுக்கிறேன். நீங்கள் அங்கு தங்கிக் கொள்ளலாம், உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால்”
“ மை காட்! மை காட்! மிஸஸ் சென்குப்தா! இது மிகப் பெரிய உதவி! மிக மிகப் பெரிய உதவி! உங்களுக்கு நிச்சயம் இதனால் பிரச்னை ஏதும் இல்லையே? என் சுயநலம் என்னை உடனே இதை ஏற்றுக்கொள்ளச் சொல்வதை நினைத்தால் எனக்கு கொஞ்சம் அவமானமாகவும், சங்கடமாகவும் இருக்கிறது” குனிந்து தன் கைகளைப் பார்த்தவாறு தலையை இல்லை என்பது போலஅசைத்தபடியே பேசினார்.
அவள் ”பரவாயில்லை!” என்றபடி பகதூரை அழைத்து அதற்குண்டான ஏற்பாடுகளைச் செய்தாள்.
ரேஷ்மி உள்ளிருந்து வந்து இரவு உணவைப் பற்றிக்கேட்டாள்.
“சாஹேபும் இன்று நம்மோடுதான் சாப்பிடுகிறார். சப்பாத்தி, தால். வெஜிடபிள் ஜல்ஃப்ரேசி செய்துவிடு. அதற்கு முன்னால் பகதூரிடம் மெத்தை ரஜாய் எல்லாம் கொடுத்துவிடு”
அவள் உள்ளே போனதும் இவரைப் பார்த்து,
“நீங்கள் உங்கள் மனதில் தோன்றுகிற நினைவுகளையோ, கனவு மாதிரி தோன்றுபவைகளையோ கொஞ்சம் கொஞ்சமாக நினைவுப்படுத்திப் பாருங்கள்! அதிலிருந்து ஏதாவது தெரிகிறதா என்று பார்ப்போம்” என்று சொன்னாள். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு
“நான் இப்போது சொல்லப் போவது கனவுதான் என்று நினைக்கிறேன்” என்று ஆரம்பித்தார்.

“நீங்கள் ஒன்று கவனித்திருக்கிறீர்களா? சில சமயம் நாம் காணும் கனவில் நாம் இருக்க மாட்டோம். நம்முடைய இன்றைய அல்லது பல காலம் முந்திய உருவத்துடனோ, முகத்தோற்றத்துடனோ யாருமே அதில் இருக்க மாட்டார்கள். ஆனால் அந்த கனவில் வருகிற சற்றும் சம்பந்தமில்லாத யாரோ ஒருவரை நாம்தான் என்பதை எப்படியோ கனவு முழுவதும் நாம் உணர்வோம். அந்த மாதிரி எனக்கு நிறைய கனவுகள் வந்திருக்கின்றன.
தவிர எனக்கு வருகிற கனவெல்லாம் பொதுவா கதை மாதிரியே இருக்கும். கனவு காணும்பொழுதே இதை மறக்காம நாளைக் காலையிலே எழுதி வச்சுக்கணும்னு தோணும். கவனிச்சுருக்கீங்களா? காலையில பெரும்பாலும் மறந்து போயிருக்கும் . வெகு சில கனவுகள் ரொம்ப நாள் ஞாபகம் இருக்கும்.
அது மாதிரி ஒரு கனவு.
ஒரு ரயில் வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. பச்சை பசேல்னு இருக்கிற தொடு வானம் வரை நீண்ட வயல்களுக்கு நடுவில், மலைகளுக்கு இடையில், சில சமயம் பள்ளத்தில் ஓடுகிற ஆற்றுக்கு இணையாக போய்க்கொண்டிருக்கிறது. அதில் ஒரு பெட்டி. கால் வைக்க இடமில்லா கூட்டம். பொதுவாக அந்த மாதிரி கூட்டத்தினால் ஏற்படுகிற எரிச்சலோ,கோபமோ இல்லாமல் அதில் இருக்கிற அனைவரும் ஒரு கொண்டாட்ட மனநிலையில், உற்சாகமாக இருக்கிறார்கள்.
எல்லாருடைய கண்களும் அந்த குழந்தையின் மேல்தான். அழகும்ஆனந்தமும் வடிவெடுத்ததுபோல் இருக்கிறது அந்த குழந்தை. அந்த கொழு கொழு கன்னத்தை, கைகளை தொடையை முத்தமிட வேண்டும் போல் இருக்கிறது. பெரிய மூக்கும் , தலையில் காந்தி குல்லாவுமாக இருக்கிற மராட்டி கிழவர் மேல் உட்கார்ந்து கொண்டு அவர் பெரிய மூக்கை கிள்ளுகிறது, அதை தடுத்தால் குல்லாயை உருவுகிறது. பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற மராட்டி கட்டு புடவை கட்டிக்கொண்டு கத்திரிப்பூ நிறத்தில் பெரிய குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டிருக்கிற கிழவிக்கு ஒரே பெருமை. அது அவள் பார்வையிலேயே தெரிகிறது. கி ழவரிடம் இருந்து குழந்தை கிழவியிடம் தாவி அவள் குங்குமப் பொட்டை நோண்டுகிறது. கிழவி சிரித்துகொண்டே “விஷமக்காரன்! எப்படி படுத்துகிறான் பாருங்கள்” எல்லாரிடமும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டே சொல்லுகிறாள். அவள் மடியிலிருந்து பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருக்கிற ராஜஸ்தானத்துப் பெண்ணின் முகத்தை மூடியிருக்கிற புடவைத்தலைப்பை விலக்கி சிரிக்கிறது. அவள் தன்னிடம் ஒளிந்து விளையாடுகிறாள் என்று நினைத்துக்கொண்டு ஒவ்வொரு முறை விலக்கி விட்டு மூடும் பொழுதும் கையைக் கொட்டி சிரிக்கிறது. அந்த பெட்டியில் இருக்கும் அனைவரும் சிரிக்கிறார்கள். அங்கிருந்து எதிரில் உட்கர்ந்திருக்கிற குஜராத்தி மாமியிடம் தாவுகிறது.அவளின் மூன்று குழந்தைகளும் அம்மா என்னிடம் கொடு என்னிடம் கொடு என்று சண்டை இடுகின்றன. அவள் சிரித்துக்கொண்டே தன் பெரிய டிபன் காரியரில் ஒரு டப்பாவிலிருந்து ஏதொ தித்திப்புப் பண்டத்தைக் கொடுக்கிறாள். அது கையில் வைத்து தின்றுகொண்டு தலையை நனறாக இருக்கிறது என்பது போல ஆட்டுகிறது. ஒன்றரை வயது குழந்தையிடம் இருந்து அதை எதிபார்க்காத அனைவரும் சிரிக்கிறார்கள். அவள் மடியிலிருந்து சறுக்கு மரத்திலிருந்து சறுக்குவது போல கீழிறங்கி அங்கு இருக்கிற பெட்டி கள், பைகளை தத்தக்க பித்தக்க நடை நடந்து கடந்து உட்கார இடம் இல்லாமல் தன் பெட்டியின் மேல் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் கல்லூரிப் பையனின் காலுக்கு இடையில் தலையைக் கொடுத்து அவனைப் பார்த்து சிரிக்கிறது. அவன் சிரித்துக்கொண்டே மடியில் வைத்துக்கொள்கிறான். அவனிடம் ரொம்ப நேரம் விளையாடிவிட்டு கண்ணைக் கசக்கிக்கொண்டு சின்ன கொட்டாவி விட்டு “ம்.. ம்..” என்கிறது. குஜராத்தி மாமி “குழந்தைக்கு தூக்கம் வருகிறது. கொடு ! நான் தூங்க வைக்கிறேன்” என்று அவனிடமிருந்து வாங்கி தன் பெரிய தொடைகளில் வைத்து ஆட்டு கிறாள். அது திமிறி எழுந்து “மா …மா” என்கிறது. அவள் சிரித்துக்கொண்டே “ எல்லாரிடமும் விளையாடுகிறது. தூங்குவதற்கு மட்டும் நீங்கள்தான் வேண்டும் போலிருக்கிறது” என்று மராட்டி தம்பதியினரிடம் கொடுக்கிறாள். கிழவர் முகத்தோடு வைத்து முத்தி விட்டு தோளில் சாய்த்துக்கொண்டு மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தார். அது சிணுங்கிக்கொண்டே “மா! …மா!”என்று அவரிடமிருந்தும் இறங்க முயற்சி செய்கிறது. கிழவர் “ அம்மாதான் வேணும் போலிருக்கிறது. இந்த குழந்தையோட அம்மா யாரு?’ என்கிறார்.
அவ்வளவுதான். அங்கே ஒரே ரகளை ! “என்ன இந்த குழந்தை உங்க பேரன் இல்லையா?” நாலா பக்கத்திலிருந்தும் பல்வேறு பாஷைகளில் பல்வேறு குரல்களில் கேள்விகள். ” வேற பெட்டியிலிருந்து வந்து விட்டதோ” “ உங்க கிட்ட எப்படி வந்தது?” “ இப்ப அம்மாவைத் தேடணுமே!” ” நான் பாத்தபோதே இவரிடம் தானே இருந்தது?.”
அந்த பையனும், ராஜஸ்தானி புது மாப்பிளையும் , குழந்தையைத் தூக்கிகொண்டு ஒவ்வொரு பெட்டியாக தேடத் தொடங்கினர்.
அரை மணி நேரம் கழித்து தோளில் தூங்கும் குழந்தையுடன், “எல்லா பெட்டியிலயும் கேட்டாச்சு. எல்லாரும் இந்த குழந்தை தன்னுடையது இல்லை எனச் சொல்கிறார்கள்” என்றான் கல்லூரிப்பையன்.”
சொல்லி நிறுத்தினார்.
வெகு நேரம் கழித்து “இது கனவா?’ என்று அவள் கேட்டாள்.
மலை மேல கறுப்பு மசியைக் கொட்டினாற்போல் இரவு இருட்டும் ஈரமுமாய் பரவியது. எதிர் பள்ளத்தாக்கில் மந்திரக்கோலால் தடவியதுபோல விளக்குகள் ஒவ்வொன்றாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எரிய ஆரம்பித்தன. பகதூர் காம்பவுண்ட் லைட்டுகளைப் போட்டு விட்டு இவர்கள் அமர்ந்திருந்த வராந்தா விளைக்கையும் போட்டான். இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வந்ததும் கண்கள் கூசின.
“அப்புறம் இன்னொரு வினோதமான கனவு! “ மெல்லிய குரலில் ஆரம்பித்தார்
“ஏதோஒரு கிராமத்தின் வீதி, முன்னிரவு நேரம். ஓட்டு வீடுகளுக்குமேலே முக்கால் சந்திரன், கூறைகளுக்கு மேலே தெரிகிற தென்னை மரக்கீற்றுகளின் மேல் பளபளப்பைப் பூசிக்கொண்டிருக்கிறது. இருபுறமும் பெரிய திண்ணைகளில் வழ வழ வட்டத் தூண்கள் இருட்டிலும் மினுங்கிக் கொண்டிருக்கிற இரட்டை வீடுகள் சேர்ந்தாற்போல் ஒரு பெரிய வீடு. வீட்டின் ரேழியிலும், திண்ணையிலும் , வீட்டின் முற்றத்திலும் , சின்ன சின்ன குழுக்களாக தெருவாசிகள் நின்று கொண்டு இருக்கிறார்கள்.
மின்சாரம் இல்லாத காலம் போலிருக்கிறது. பல இடங்களிலும் ஏற்றி வைக்கப்பட்ட பெரிய, பெரிய லாந்தல் விளக்குகள் .விளக்குகளின் வெளிச்சம் எல்லாரையும் நிழலில் பூதம் காண்பித்துக்கொண்டிருந்தன. முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய பித்தளைக் கொப்பரையில் இருந்து தண்ணீரை எடுத்து கோரி கோரி ஒருவர் காலை அலம்பிக் கொண்டிருக்கிறார். எல்லார் கண்களும் அவர்மேல்.
நல்ல ஆஜானுபாகுவாக கோவில் சிலை போல் திருத்தமான கண்களும் தீர்க்கமான நாசியும் கட்டுக்குடுமியும், காதில் வைரக் கடுக்கன்களும் , கையில் கனத்த கங்கணமுமாக அவர் எங்கு நின்றாலும் தனித்து தெரிபவராக இருக்கிறார். அவர் யாரையும் குறிப்பிட்டு பார்க்காமல் மேல் பார்வையாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.
பெரிய கூடத்தின் இடது புறத்தில் ஒரு கட்டில். அதில் ஒரு 15, 16 வயது மதிக்கக்கூடிய இளம் பெண்படுத்துக்கொண்டிருக்கிறாள். ஜுர வேகத்தில் அவள் முகம் சிவந்து அனலாக ஒளிர்கிறது .தலையை இரு புறமும் அசைத்து உடலை முறுக்கி அம்மா அம்மா என்று மெல்லிய குரலில் அனத்துகிறாள். அவள் காலடியில் ஒரு நடுத்தர வயது பெண்மணி அவள்கால்களை எடுத்து தன் கண்களில் வைத்துக்கொண்டு ஏதோ புலம்புகிறாள். கூர்ந்து கவனித்தால் அவள்” என்னை மன்னிச்சுடுடி என் தங்கமே! என்னை மன்னிசுடுடி என் கண்ணே,” என்று முணுமுணுப்பது அந்த இருளில் ஏதோ மந்திரம் போல ஒலிக்கிறது. கூடத்தில் நின்று கொண்டிருந்தவர்களில், முற்றத்தில் கால் அலம்பிக் கொண்டிருந்தவரின் சின்ன அச்சு போல தோற்றமளித்த பதினெட்டு , இருபது மதிக்கத்தக்க பையன் முற்றத்தின் அருகே வந்து மெல்லிய குரலில்
“பக்கத்து டவுனில இங்க்லீஷ் டாக்டர் ஒத்தர் ……”
“என்ன?” கனத்த அவர் குரல் அந்த இருளில், அந்த நிசப்தத்தில் இடி மாதிரி கேட்கிறது.
“அவர்ட்ட காட்டலாம்ப்பா! ரொம்ப ஜுரமா இருக்கு” பயந்த குரலில் தயங்கினாற்போல் சொன்னான் பையன்.
“இரண்டு நாள் பட்டினி போட்டா சரியா போயிடும்! லங்கணம் பரம ஔஷதம்!”
“இல்லை ! பத்து நாளா..”
“யாரும் பேசவேண்டாம்!”
முற்றத்தில் நடு நாயகமாக போடப்பட்டிருந்த மர சாய்வு நாற்கலியில் உட்கார்ந்து வெற்றிலைப் பெட்டியை எடுக்கிறார்.
“நம்ம ஊரு நாட்டு வைத்யரையாவது…” கூடத்தில் யாரோ மெதுவாக ஆரம்பிக்க,
“ எந்த கம்னாட்டிடா அது? எந்த கம்னாட்டி? என் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசிண்டு? முன்னாடி வா இங்க! நான் பாக்கணும்! ரொம்ப துளிர் விட்டுப் போச்சோ எல்லாருக்கும்”
“நம்மாத்துக்கு வந்த பொண்ணைக் …..” அவர் மனைவி அழுது கம்மிய குரலில் ஆரம்பிக்க,
“ஓய்! அக்னீஸ்வர தீக்ஷிதரே! என்னங்காணும் நினைச்சுண்டிருக்கிறீர்?” ஒரு க்ஷணம் அந்த குரல் எங்கிருந்து வந்ததுன்னு யாருக்கும் புரியல. கணீர்னு பெரிய கோவில் வெங்கல மணியை அடிச்சா மாதிரி அந்த குரல் நாலா பக்கத்திலிருந்தும் கேட்டா மாதிரி இருந்தது. ஏத்தி வச்ச லாந்தல் விளக்கெல்லாம் பக்கென்று ஒரு கணம் அணைந்து பளீரென்று எரிந்தாற்போல் மனதுக்குப் பட்டது.
கூடத்தில், வாசலில் திண்ணையில் , ரேழியில் இருந்தவர்களுக்கெல்லாம் மயிர்கூச்செறிந்தது.
“காலைத் தேச்சு தேச்சுஅலம்புறீரே? அழுக்கு போச்சா? அழுக்கு போச்சாங்காணும்? உம்ம மனசில் இருக்கிற அழுக்கை எப்படி ஐயா அலம்பப் போறீர்?”
முகம் தீ சுவாலையாய் எரிய கட்டிலின் இரு புறமும் கைகளை இறுக்க பிடித்தபடி நீள நெடுக படுத்தபடி கண்கள் மேலும் கருமை கொள்ள மேலே உத்தரக் கட்டையைப் பார்த்து அவள் கத்திக்கொண்டிருந்தாள்.
அந்த அம்மாள் “வேண்டாம் என் தங்கமே! விட்டுடு!” என்று கைகளைக்கூப்பி இறைஞ்சினாள்.
“ “ஓய்! அக்னீஸ்வர தீக்ஷிதரே! இன்னிக்கு சொல்றேன்! கேட்டுக்கோ! நீ பண்ணின அக்ரமத்துக்கு நீ நன்னா இருக்க மாட்டே! நன்னாவே இருக்க மாட்டே! உன் வம்சமே புல் பூண்டு இல்லாம அழியப்போறது”
உடம்பின் விறைப்பு நீங்கி சட்டென்று ஒரு வாடிய பூமாலை போல் கிடந்தாள்.”
அவர் சொல்லி முடித்தார்.
அவள் உடலில் ஒரு நடுக்கம் வந்து ஓய்ந்தது.
“இதெல்லாம் கனவு மாதிரியே இல்லையே? ஏதோ கதை மாதிரி இருக்கு! என்னோட கனவுல எல்லாம் நான் ஒரு பெரிய மலை உச்சியிலிருந்து கீழே விழுந்து கொண்டே இருப்பேன்! எத்தனை விழுந்தாலும் தரையே வராது. கீழே தரையில விழுந்தா தேவலையே, இது என்ன பிராணாவஸ்தை தோணும். டப்னு கால் கட்டில்ல இடிக்கும்போது முழிப்பு வரும். அது இல்லாம சில சமயம் ஏதோதுண்டு துண்டா குழப்பமா வரும். ஒண்ணும் நினைவே இருக்காது. இப்படி கதை மாதிரி கனவெல்லாம் வந்ததே இல்லை! ஆமா இந்த கனவுல எல்லாம் நீங்க யாரு?”
“முதல் கனவுல குழந்தை, இரண்டாவது கனவுல அந்த பெண்”
“ஓ!”
“என்ன? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மிஸஸ் சென் குப்தா?”
“ நீங்க ஒரு எழுத்தாளரோன்னு தோன்றுகிறது! ரொம்ப அழகாக விவரிக்கிறீர்கள்! அப்புறம் எல்லா இடங்களிலும் நீங்களே மையக் கதாபாத்திரமாக இருக்க வேண்டும் நினைக்கிற ஆளோ என்றும் தோன்றுகிறது. தொலைந்து போவதைப்பற்றிய பயம் உங்களுக்கு இருக்கிறது, அத்துடன் சுய அடையாளம் தொலைந்து போவதைப்பற்றிய பயமும் கூட! அதே சமயம் அடையாளங்களை இழப்பதில் உள்ள சுதந்திரம் ஒரு புறம் உங்களுக்கு உல்லாசத்தைத் தருகிறது .இன்னொரு புறம் உங்களுக்கு யாரோ தவறு இழைத்துவிட்டதாக , வஞ்சனை செய்துவிட்டதாக நினைப்பதில் நீங்கள் ஒரு ஆறுதல் அடைவது தெரிகிறது.!”
“வாவ்! அப்படியா நினைக்கிறீர்கள்? நீங்கள் உளவியல் படித்திருக்கிறீர்களோ என்று எனக்குத் தோன்றுகிறது” சொல்லிவிட்டு சிரித்தார்.
இரவு சாப்பாடு தயாராகிவிட்டதாக ரேஷ்மி சொன்னாள்.
“ட்வீட்….. ட்வீட்டு! ட்வீட்….. ட்வீட்டு” தாளமும் சுருதியும் பிசகாது அவளுடைய பிடித்தமான பறவை குரல் கொடுக்கும்பொழுது அவளுக்கு விழிப்பு வந்தது.
அவள் வெளியில் வந்து பார்க்கும்பொழுது அவர் தோட்டத்தில் பகதூரிடம் உற்சாகமாக பேசிக்கொண்டு நின்றிருந்தார். இவளைப்பார்த்ததும் அந்த உற்சாகம் சிறிதும் குறையாமல் “ ஹாய்! மிஸஸ் சென்குப்தா! குட் மார்னிங்க்!”என்றார்.
இவள் “குட் மார்னிங்க்! காஃபி சாப்பிடுகிறீர்களா?” என்றாள்.
“இல்லை! பகதூர் ஒரு அருமையான சாய் போட்டுக்கொடுத்தான்! அது போதும்” என்று விட்டு பகதூரைப்பார்த்து “சாய் ரொம்ப நன்றாக இருந்தது” என்றார்.
“கிளம்புவதற்கு நேரமாகிவிட்டது என நினைக்கிறேன்” என்றார்.
“இல்லை! நீங்கள் காலை உணவு சாப்பிட்டுவிட்டுக் கிளம்பலாம்! என்ன அவசரம்?” என்றாள்.
காலை உணவிற்குப் பிறகு பகதூர் சைக்கிளை உருட்டிக்கொண்டே “ஜீ சாஹேப்!” என்றபடி வந்து நின்றான்.
அவர் ரேஷ்மியிடம் உணவு நன்றாக இருந்ததற்கு நன்றி தெரிவித்தார். இவளைப் பார்த்து “முன் பின் தெரியாத எனக்கு நீங்கள் செய்த உதவிக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் குறைவுதான்,” என்றார்.
வளைந்து போகிற சாலையில் அவர்கள் இருவரும் சாலை முடுக்கில் திரும்பி கண்ணில் இருந்து மறைகிற வரை பார்த்துக்கொண்டு நின்றாள்.
முடிவு 1
‘இவ்வளவு தூரம் பேசியவர், என்னை மிஸஸ் சென்குப்தா, மிஸஸ் சென் குப்தா.. என்றே அழைத்துக்கொண்டிருந்தாரே! என்பெயர் என்னவென்று கேட்க வேண்டும் என்று கூட அவருக்குத் தோன்றவில்லையே’ என நினைத்துக்கொண்டாள்.
முடிவு 2
பக்கத்திலிருந்த ரேஷ்மி “பகதூர் வந்து ஒரு மாதம் கூடஆகவில்லையே? அவனுக்கு காவல் நிலயத்திற்கு வழி தெரியுமா?’ எனக் கேட்டாள்.
“விசாரித்துக் கொண்டு போய் விடுவான் “ என்றாள்.
“ நம்ம சாஹேப் இப்ப போகிறாரே, திரும்ப எப்போது வருவார்?”
“ பதினைந்து நாட்கள், ஒரு மாதத்திற்குள் திரும்ப வருவார் என நினைக்கிறேன்.”
***
[வாசகர்கள் இரண்டில் ஒரு முடிவை கீழுள்ள கமெண்ட் பாக்ஸில் இட்டு உரையாடலாம் – நன்றி சொல்வனம் ஆசிரியர்க்குழு]