அன்புடையீர் ஏப்ரல் 30, 2019
அம்பை சிறப்பிதழ் வாசித்தேன். புதிய மாதவியின் கட்டுரை, அம்பையின் எழுத்து மட்டுமில்லாமல் அவருடைய பிற பெண்ணியச் செயல்பாடுகளைக் குறித்தும் நல்ல தகவல்களைத தந்திருந்தது. வெங்கட் சாமிநாதன் அம்பையின் கதைகளை நன்றாக அலசியிருக்கிறார். குட்டி ரேவதியுடனான பேட்டியில் அம்பையின் கருத்துக்கள் பெண்ணியத்தை ஆழமாகப் பரிந்து கொள்ள உதவும். பெண்மையின் அழகு கெடாத பெண்ணியமென்று வெங்கட் சாமிநாதன் குறிப்பிட்டிருப்பது சரியான மதிப்பீடாகவே கருதலாம்.

அம்பையின் எல்லாக கதைகளையும் படிக்க வாய்ப்புக் கிட்டவில்லை. அவருடைய சிறகுகள் முறியும், காட்டிலொரு மான், அம்மா ஒரு கொலை செய்தாள் கதைகள் எனக்குப் பிடித்தவை.
கமலாதாசின் கவிதைகளில் பெண்ணுடல்பற்றிய கோபமும் இயலாமையும்
ஆணாதிக்க எதிர்ப்பும், உணர்ச்சிகளாக வெளிப்படும். தன்வயப்பட்டவை. அம்பை அதை புறவயப்படுத்தி அழுத்தமாகச் சுரீரென்று குத்துவது போலச்சொல்கிறார் என்று கருதுகிறேன்.
நீங்கள் முகப்பில் வெளியிட்டிருக்கும் அம்பையின் படம் சமீபத்தில் நான்
புத்தகக் கண்காட்சியில் சந்தித்த அம்பையின் தோற்றமாக இல்லையென்பதை
குறிப்பிடவேண்டும்தான்.
நல்ல முயற்சி. பாராட்டுகள்.
அன்புடன்
லாவண்யா
பிகு; முகப்பில் ஒவ்வொரு தலைப்புக்கும் கீழ்வருகிற பாக்சின் நிறத்தை மாற்றுங்கள். பார்வைக்கு நன்றாக இல்லை
2
வணக்கம்.
அம்பையின் சிறப்பிதழ் வாசித்துவிட்டேன். என் கட்டுரைக்கு இடம்
கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
அம்பை குறித்த பல்வேறு பார்வைகளை வைத்திருக்கும் இன்றைய எழுத்தாளர்களின் கட்டுரைகள் இச்சிறப்பிதழுக்கு மேலும் சிறப்பு சேர்த்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் கட்டுரை ஒரு எழுத்தாளனின் மனசாட்சியிலிருந்து வெளிவந்திருக்கிறது.
பொதுஜனப் புத்தியில் இருக்கும் சில பரப்புரைகள் எவ்வளவு அபத்தமானவை என்பதை தன் அனுபவமாக விரித்திருக்கிறது அவரின் கட்டுரை.
அம்பையைப் பற்றி பிறர் எழுதியதுடன் அம்பை எழுதியதையும் வெளியிட்டதால் இச்சிறப்பிதழ் முழுமையடைகிறது.
சொல்வனம் குழுவினருக்கு என் அன்பும் வாழ்த்துகளும்.
புதியமாதவி,
மும்பை.
(27 ஏப்ரல் 2019)
3
கச்சிதமாக, நேர்த்தியாக இதழ் வந்திருக்கிறது
அ.நீ எழுதிய கட்டுரை நன்றாக இருந்தது. …
மைத்ரேயன் எழுதிய கட்டுரையும் சுவாரஸ்யமாக இருந்தது. 1970, 80களின் இலக்கிய உலகம் சார்ந்த அனுபவங்களை அவர் ஏற்கனவே அவ்வப்போது … எழுதி வந்திருக்கிறார் என்றாலும் பொதுவில் இப்படி ஒரு கட்டுரையாக ஆவணப்படுத்தப் பட்டிருப்பது நன்று.
ஜடாயு
ஏப்ரல் 29, 2019
4
அன்புள்ள ஆசிரியர் குழுவினருக்கு,
சொல்வனத்தின் 200 வது இதழ் வெளியீட்டுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுதல்களும்.இந்த இதழ் எனக்கு மிக மிகப் பிடித்த எழுத்தாளரான அம்பை அவர்களின் சிறப்பிதழாக வெளி வந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. இதழ் வெகு நேர்த்தியாக, விஷய கனத்துடனும், ஆழத்துடனும் அமைந்திருக்கிறது.
நான் என் இருபதுகளின் ஆரம்பத்தில் முதன் முதலில் படித்த அம்பையின் கதை ‘சிறகுகள் முறியும்’. அதை படித்து முடித்த கணத்தில், உள்ளுக்குள் ஏதோ மளுக்கென்று முறிந்தது; சட்டென்று ஊற்றுக்கண் ஒன்று திறந்து ஈரமாய் கசிந்தது; மலையின் உச்சி பிளந்து எரிமலையாய் சிவந்து கொதித்து உருகியது; இன்னும் ஏதேதோ செய்தது .நானும் என்சினேகிதியும், என் தங்கையும், மணிக்கணக்கில், நாள்கணக்கில் அதைப் பற்றிப் பேசிப் பேசி மாய்ந்து போனோம். அந்த மாயகணத்திற்கு மீண்டும் போனேன், இந்த இதழின் புண்ணியத்தில்! அதன் பின்னர், அம்மா ஒரு கொலை செய்தாள், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, ஒவ்வொன்றாய் …… பெண்ணின் உள்ளுலகம் விரிந்தது.
பெண்மையென்றும், தாய்மையென்றும், மனைவியென்றும், இன்னும் பலவாகவும் அவள் மேல் சூட்டப்பட்டிருந்த அலங்கார அணிகலன்களை எடுத்துக் களைந்து வீசிவிட்டு நான், நானாக மட்டுமே என்று தனித்துவமாக நிற்கிற பெண்ணைப் புரிந்து கொள்வதை விடுங்கள், அவளை யாராவது பார்க்கவாவது பார்த்தார்களா? அவளின் அடையாள நெருக்கடிகளை, அவளின் வலிகளை, உணர்வுகளை, எண்ணங்களை, ஏமாற்றங்களை, துயரங்களை, அவளின் மகத்தான தனிமையை, அம்பையின் எழுத்துக்கள் உண்மைக்கு வெகு அருகில் நின்று பேசிய போது என் கால்கள் தரையில் பாவ மறுத்தன.
இன்னும் ஒன்றும் தோன்றியது. தான் இருப்பது கூண்டுக்குள்ளே என்று அறியாமல் கடந்த பெண்களின் தலை முறை ஒன்று; தான் இருப்பது கூண்டுதான், ஆனால் என்ன, அதுதானே நான் இருக்க வேண்டிய இடம் எனக் கழிந்த தலைமுறை அடுத்தது; கூண்டை பெரிசாக்கிக் கொடுத்தவுடன் அதற்கே நன்றியோடு காலம் கழித்த தலைமுறை மற்றொன்று; கூண்டு அல்ல, வானமே என் இடம் என்று உணர்ந்த தலைமுறை அடுத்தது. வானம் இடமானவுடன், மரக்கிளையில் அமர்வதோ, மலை உச்சியில் கூடு கட்டுவதோ, முற்றத்து நெல்லைக் கொத்தி தின்பதோ, காடுகளைத் தேடுவதோ, கண்மாய்க்கரையில் அமைவதோ அவரவர் தெரிவு. அந்த தெரிவு அவளின் உரிமை, கடமை.
ஏனெனில் பெண்ணின் விடுதலை உண்மையாகாமல், மானிடத்தின் முழுமையான விடுதலை ஏது? இது அம்பையின் எழுத்துக்களில் நான் அடைந்த தரிசனம்!
இதழ் முழுவதும் படித்து முடித்துவிட்டு மீண்டும் எழுதுகிறேன்.
நன்றி!
அன்புடனும், நட்புடனும்
மாலதி சிவராமகிருஷ்ணன்
5
ஆசிரியர் குழுவுக்கு,
சொல்வனம் இதழ் 200 ‘அம்பை’ சிறப்பிதழ் படித்தேன். அபார வாசிப்பனுவமாக அமைந்தது.
பதின்வயதுகளின் இறுதியில் அம்பையின் எழுத்து எனக்கு அறிமுகமானது. வாத்தியார் பாலுமகேந்திராவுடன் அம்பையின் சிறுகதைகள் குறித்துப் பேசிக் கொண்ட நாட்கள் நினைவுக்கு வருகின்றன. ‘என்ன? நீ அம்பை படிச்சிருக்கியா?’ கிட்டத்தட்டஅலறும் குரலில் வாத்தியார் என்னிடம் கேட்டார். திருநவேலி மாதிரியான ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பையன் அம்பையைப் படித்திருப்பதாவது என்று அவர் நினைத்திருக்கக் கூடும். ஆம். வாத்தியாருக்கு அதுவரைக்கும் திருநவேலி என்பது ஒரு குக்கிராமமாகத்தான் மனதில் பதிந்திருந்தது. ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்தபோதுதான் திருநவேலி பற்றிய உண்மையான சித்திரத்தை அவர் கண்டார். ‘பரவாயில்லப்பா. கொஞ்சம் ஊர்தான்’ என்றார்.
வண்ணநிலவன் சொன்னது போல அம்பை என்கிற பெயரைக் கேட்டவுடன் அந்தச் சிறு வயதில் எனக்கு அது அம்பாசமுத்திரமாகத்தான் தோன்றியது. அதுவும் ‘அம்மா ஒருகொலை செய்தாள்’ படித்த போது ‘என்ன இருந்தாலும் நம்ம ஊருல்லா! அதான் இவ்வளவு அளகா எளுதுதாங்க’ என்று தோன்றியிருக்கிறது. பின்னால் எழுத்தாளர் அம்பை என்கிற லட்சுமியைப் பற்றி அறிய நேர்ந்த போது “ச்சே! நம்ம ஊர் இல்லையாமே’ என்கிற வருத்தம் இல்லாமல் அவரது எழுத்து குறித்த மதிப்பை அந்த சமயத்தில் சற்றே வளர்ந்திருந்த எனது வாசக அனுபவம் தந்தது.
இந்த இதழில் வெளியாகியிருக்கிற அவரது ‘ஊர் வேண்டேன்’ மீண்டும் மீண்டும் என்னை வாசிக்கத் தூண்டியது. ஏற்கனவே ‘கபாடபுரம்’ இதழிலும் அதை வாசித்திருந்தேன். கோவையிலும், பெங்களூரிலும், மும்பையிலும், சென்னையிலும், தில்லியிலுமாக அவரது வாழ்வின் பெரும் பகுதிகளை வாழ்ந்திருக்கும் அம்பைக்கு தனக்கென்று சொல்லிக்கொள்ள ஓர் ஊர் இல்லையே என்பதாகச் சொல்லியிருக்கிறார். திருநவேலியில் சில தெருக்களும், சென்னையில் சாலிகிராமமும் மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் எனக்குஅம்பையை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. குறிப்பாக கோவையில் அவரது பால்யம் குறித்த நினைவுகள் அற்புதம். குறுக்கே கம்பி வைத்த ஆண்களுக்கானசைக்கிள், பெரிய சிவப்புக் குங்குமப் பொட்டுடன், கெம்புக்கற்கள் பதித்த தோடுகளுடன் வளைய வரும் பாட்டி, பெரிய பெரிய வாணலிகளில் அவர் வதக்கும் ருசியானகாய்கறி, பெரிய பாத்திரங்களில் செய்யும் சாம்பார், ரசம் மற்றும் இட்லி, தோசை, உப்புமா, இரவுணவுக்குப் பிறகு நடக்கும் பாட்டுக்கச்சேரி, ஆங்காங்கே அப்படியே தூங்கிப்போகும் குழந்தைகள் என அவர் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல காட்சிகள் கண் முன்னே விரிந்தன. இவை போக மும்பையிலும், பெங்களூரிலும், சென்னையிலும், தில்லியிலும் வேறு மாதிரியான வாழ்க்கை. அதுவும் இன்றைய மும்பையைப் பற்றி அவர் விவரித்திருப்பது அவரே சொல்லியிருப்பது போல எல்லா ஊர்களுக்கும்தானேபொருந்தும்?
அம்பையை ‘முனைந்து தன்னைக் குறித்த ஒரு பிம்பத்தை கட்டமைக்க முடியாதவர், தெரியாதவர். விருப்பமும் இல்லாதவர்’ என்கிறார் அரவிந்தன் நீலகண்டன். அப்புறம் எப்படி ஸார் அவங்களை ரைட்டர்னு ஒத்துக்க முடியும்?
சுகா
28 ஏப்ரல் 2019
6
அன்பின் பாலா
நன்றி. அம்பை சிறப்பிதழ் நன்றாக வந்திருக்கிறது.
புகைப்படத்தொகுப்பும் சேர்த்திருப்பது சிறப்பு.
இன்னும் சில பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பு இருந்திருக்கலாமோ. இப்போது நான், புதிய மாதவி, கலைச்செல்வி மூன்றே பேர்தான்.
அம்பையின் சொந்தப் படைப்புக்களே மிகுதி…
உங்கள் சிரமம் எனக்குப் புரிகிறது. இருந்தாலும் என் கருத்து இது.
அம்பையின் தாக்கத்தால் வந்த பெண்கள்தான் எத்தனை பேர்? இன்னும் சிலர் எழுதியிருக்கலாமோ என்று பட்டது. தவறாகக்கொள்ள வேண்டாம்.
நன்றி, மகிழ்ச்சி
சுசீலா
26 ஏப்ரல், 2019
**
7
அம்பை சிறப்பிதழ் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. Really, it’s a treat to the readers. We get to know more about the writer and her works in different perspectives. மகிழ்ச்சி.
Regards,
Subadra Ravichandran
28 ஏப்ரல் 2019
**
8
வாழ்த்துக்களும் நன்றிகளும் ஐயா, மிக்க மகிழ்வுடன் வாழ்த்துகிறேன். அம்பை
என்னால் மறக்கமுடியாத எழுத்தாளர். அவருடைய காட்டில் ஒருமான் எனக்குத்தமிழ் இளங்கலையில் பாடமாக இருந்தது. அற்புதமான எழுத்து. அதன் பிறகு சிறகுகள் முறியும் முதலான பல நூல்களை விரும்பிப்படித்தேன். மறக்கமுடியாத இடங்கள்- டெல்லி பல்கலை
நினைவுகள், ஒரு இளைஞன் ஆய்வாளன் அவன் ஒரு…பெண்ணை விரும்புவான், ஆனால் அந்தப்பெண்ணோ விலகிநிற்பாள், ஆனால் சுமாரான ஆய்வை முடிக்காத ஒரு முதிர்கன்னி ஒருத்தி நம்கதைநாயனை விரும்புவாள் இருவேறு திசைகள், முரண்கள்!
அப்புறம் ”உன் ஆய்வு வரலாற்றின் இருண்டபக்கங்களில் ஒளி பாய்ச்சுவதா?”என்று பேராசிரியர்கள் கதாநாயகனைக் கிண்டல் (இருபொருளில்) செய்வார்கள். எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள். அம்பையின் முழுப்படைப்புகளுமே வலி நிறைந்தவை, குடும்பம் தரும் வலி, சமூகம் தரும் வலி ஆகியவைதான் என்று நினைக்கிறேன்.டெல்லி, தமிழ் ஆகிய காடுகளில் ஒருமான் வேறுயாரும் இல்லை நம் அம்பைதான்!
ச.இரமேஷ், உதவிப்பேராசிரியர்,சங்கரா கலை அறிவியல் கல்லூரி, ஏனாத்தூர்,காஞ்சிபுரம்.
30 ஏப்ரல்2019
**
9
கட்டுரையைப் பிரசுரம் செய்தமைக்கு முதலில் நன்றி. ஆம், மிக நன்றாக வந்திருக்கிறது.
இதழும் மிக நேர்த்தியாக கொண்டுவந்துள்ளீர்கள். எல்லா கட்டுரைகளையும் இன்னும் படித்த பாடில்லை. ஆனால் எஸ்.ராவுடைய கட்டுரையை வாசித்தேன். அம்பையின் நேர்காணலை, அவர் கட்டுரைகளை படித்தேன். இதழ் மிக மிக நன்றாக வந்திருக்கிறது. எழுத்தாளரின் பழைய புகைப்படங்களை பார்ப்பது என்றுமே பிரியத்துக்குரிய விஷயம் தான். அதுவும் சிறப்பு.
சுசித்ரா
27 ஏப்ரல் 2019
**
10
அன்புள்ள மைத்ரேயன் அவர்களுக்கு,
சிறப்பிதழை பெரும்பாலும் வாசித்துவிட்டேன். வெவ்வேறு மாதிரியான கட்டுரைகள்.ஒன்றின் சாயல் இன்னொன்றில் இல்லை. அம்பை அவர்களின் கதைகளைத்தவிர வேறொன்றும் தெரியாது. சு.ராவின் அம்பையின் நட்பு பற்றி மட்டும் வாசித்த நினைவிருக்கிறது. உங்கள் நட்பு நீங்கள் சொல்லித் தெரியும். பிரக்ஞை பற்றிய உங்களின் நினைவுகள் அழகானவை. இளமையில் உங்களுக்கு இதழ் நடத்த வேண்டும் என்ற தோன்றியதைப் போல எழுத வேண்டுமென்று நீங்கள் நினைக்கவில்லையா? சு.ரா பற்றிய அம்பையின் கட்டுரை நல்ல பகிர்தல். ஏற்கனவே சு.ரா தனிப்பட்ட வாழ்வில் எத்தனைக்கு எதிர்நிற்பவரை நல்லவிதமாக நடத்தக்கூடியவர் என்று வாசித்திருக்கிறேன்.இப்படிதானே இருக்கனும் என்று நினைத்திருக்கிறேன். எழுதலாம்….இந்த இதழில் சுசித்ராவின் கட்டுரை மிக அருமையான கட்டுரை..
கமலதேவி
26 ஏப்ரல் 2019