வான்மதி செந்தில்வாணன் – கவிதைகள்

1.
சுவரோவியத்தில்
குதிரையின் பக்கவாட்டு முகம்
பளிச்செனத் தெரிந்தது.
பக்கங்களில்
முயல் காதும், பசுவின் பின்னுருவும்
மிகக் கச்சிதமாய்ப் பொருந்தியிருந்தன.
கழுகு றெக்கையும், யானைக் காலும்
மங்கலாய்த் தென்பட்ட
அவ்விசித்திரத்தின் மீதேறி
ஒய்யாரமாய் அமர்ந்திருந்தாள் பாப்பா.
சவாரி தொடங்குவதற்குள்
மேகமென கலைந்துவிட்டது அதிகாலைக் கனவு.
அதன்பிறகான ஒவ்வொரு உறக்கத்திலும்
சிரத்தையுடன் தேடிக்கொண்டிருக்கிறேன்
பெயர் தெரியா அம்மிருகப் பறவையை.


Installation view of M.F. Husain: Art and the Nation at Asia Society Museum, 2018 (image courtesy of the Asia Society)

2.
முன்பெல்லாம்
அப்பாதான் அடிக்கடி சொல்வார்
வாழ்நாளில் எதற்காகவும்
ஒரு துளிக் கண்ணீர் மட்டும் சிந்தக் கூடாதென
தொடர்ந்து ,
மெல்லிய நீரொழுக்குபோல்
அப்படியொரு சிரிப்பு சிரிப்பார்.
அழுகையை போதுமட்டும் அழுது தீர்ப்பதற்கான
ஒருவகை சுரீர்ச் சிரிப்பு அது.
அவரழுது கண்டதில்லை இதுவரை.
சமீபத்திய என் இறப்பிற்குக்கூட
துளியும் கலங்கவில்லை அவர்.
மாரிக்கால நாளொன்றில்
ஓட்டைக்கூரையில் சரிந்த மழைநீர்
சுவரில் மாட்டப்பட்டிருந்த என் புகைப்படத்தில்
வழிந்தபோதுகூட
விரல்களால் தொட்டுத் துடைத்தபடி
அதையேதான் சொன்னார் அப்பா.
அப்போதும் , சன்ன நீரொழுக்கின்
அதே சிரிப்பு அவரிடம்.


Caravaggio, Judith and Holofernes, Daniel Buren, Pyramidal, haut-relief – A5, travail situé at Kamel Mennour (2019) (installation view)

3.
உயரதிகாரியின் முகச்சாயலொத்த
அந்த சீரியஸ் நடிகரின்
சிரிப்பு போஸ்டர் பார்த்ததும்
குபீரெனச் சிரிப்பு வந்தது.
அதிகாரி்யின் உடனிருப்பால் ,
தொண்டைக்குழி கோலிசோடாபோல் அடைபட்டுக்கொண்டது.
வீட்டிற்குப் போனதும் முதல்வேளையாக
கதவடைத்துக்கொண்டு
சத்தமாகச் சிரிக்கவேண்டுமென எண்ணமிட்டவாறே
பேருந்து விட்டிறங்கினேன்.
எதையும் தாங்கவியலாத
இம் மூத்திர வாழ்வுபோல் ,
வீடடையும் முன்பே அடக்கமாட்டாமல்
அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு
பலமாகக் கனைத்தபடி சிரிக்க ஆரம்பித்துவிட்டேன்.
யார், எவரென்றே அறிந்திராத
அம் மாலைநேரத் தெருவாசிகளை
இப்படித்தான் ஜெட் வேகத்தில் கலகலப்பாக்கியது
அதிகாரி பரிசளித்த
அந் நைட்ரஸ் ஆக்சைடு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.