பஞ்சுக்கூடை
திரைப்படத்தின் நூறாம் நாள்
திருநங்கைகளின் எழுச்சிநாள்
பேட்டை ரௌடிகளின பிறந்தநாள்
விழாக்களில் விளக்கேற்றி ஒருவன்
மாலைக்கு கழுத்தை நீட்டுகிறானென்று வை,
துணிக்கடை பிணிக்கடை கல்விக்கடை
கசாப்புக்கடை துவக்க விழாக்களில்
ரிப்பன் கத்தரித்து ஒருவன்
சால்வைக்கு குனிகிறானென்று வை
வரவேற்புரை கேட்டு
அவன் பிரபலத்தை நினைந்து
அவன் உயரத்தை வியந்து
நீ வாய் பிளக்கிறாய்.
கண்ணால் கண்டதும் பொய்யாகி
காதால் கேட்டதும் பொய்யாகி
பஞ்சுக்கூடையான என் தலை எனக்குச் சொல்லும்.
வரிக்கழுகின் வட்டத்திலோ
தண்டல் பேயின் வலையிலோ
இருவரும் சிக்கப் போகிறார்கள.
நான் வாய் பிளப்பதில்லை

கோடு
யார் கற்றுத் தந்தார்கள்?
எந்தக் கல்லூரியில் படித்த்து?
எலுமிச்சை மரத்தில்
எத்தனை எளிதாய்
அடுக்குமாடிக் கட்டிடம்
கட்டுகிறது தூக்கணாங்குருவி.
வட்டம் போட கவராயமில்லை
துளைக்க ஓர் தமரூசியில்லை
அளவு பார்க்க ஒரு நாடா இல்லை
தன் சுற்றளவுக்குச் சரியளவாய்
மூங்கிலில் ஓட்டை போடுகிறது குளவி.
இப்படிப்பட்ட உலகில் நானுமிருக்கிறேன்.
நினைத்தால் தலைகுனிவாயிருக்கிறது.
பள்ளிநாள் முதல் பல்லாடும் நாள்வரை
வளையாமல் கோணாமல்
நேராய் ஒரு கோடு போட எனக்கின்னும் வரவில்லை.