பொன். தனசேகரன் – கவிதைகள்

சுவடுகள் இல்லாத வாழ்க்கை

சுவடுகளே இல்லாமல்
தடம் அழித்து
தண்ணீரில்
நீந்திச் சென்று கொண்டிருந்தது மீன்.

வானில் சிறகு விரித்து
பறந்து சென்ற பறவையின்
கால் தடங்களை அழித்து
பின் தொடர்ந்தது காற்று.

நீந்தத் தெரியுமா
என்று கேட்டு
தண்ணீரில் கும்மாளமிட்டது மீன்.

காற்றில் நீந்திச் செல்வது
தெரியவில்லையா
என்று சிரித்துக் கொண்டே
சிறகடித்துப் பறந்தது மீனுடன்.

முள்ளும் மலரும்

காலில் குத்திய
முள்ளை எடுத்தபோது
இலைகளுடன்
நிழலைத் தொலைத்த மரம்
ஏங்கிக்கிடந்தது
காற்றின் தாலாட்டை நினைத்து.

முள் மரத்திலிருந்து
விழுந்த நிழல்
என்னை குத்தவில்லை.

மலர் என்று நெருங்கினேன்.
அங்கே முள்.

காலமும் தூரமும்
என் நேரத்தை
வருவோர் போவோர் எல்லாம்
சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அலுவலக வேலை
மூச்சுமுட்ட சாப்பிட்டது.
கைபேசியும்
தொலைக்காட்சியும்
தூக்கமும் கூட
நேரத்தைக் களவாடித் தின்றது.
நேற்று இருந்த நேரம்
நேற்றே செலவழிந்தது
இன்றும் அப்படித்தான்.
நாளும் பொழுதும்
கைச்செலவு போக
எதுவும் மிச்சமில்லை.
நேரத்துக்கும் அகோர பசி.
என் எதிரே
எனக்குக்
கொஞ்சம்கூட
மிச்சம் வைக்காமல்
சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
சாப்பிட்டு முடிந்ததும்
நேரம் இருந்தது.

நான் இல்லை

கமண்டலத்தில் பிடிபடாத நதி

கேட்ட கேள்விக்கு
சரியான பதில் சொல்லாவிட்டால்
தலை வெடித்து விடும்
என்ற பயத்தில்
வாய்க்கு வந்தபடி
நான் சொன்ன பதில்
சரியாக இருந்ததால்
தோளில் தொங்கிக்கொண்டிருந்த
வேதாளம்
மீண்டும் முருங்கை மரத்தில்.
மீண்டும் ஒரு விடுகதை
மீண்டும் முருங்கைமரத்தில் வேதாளம்.
எனது தலையும் வெடிக்காமல்
வேதாளமும் பிடிபடாமல்
காடாறுமாதம்
நாடாறுமாதம்
அலைந்து கொண்டிருந்து காலம்.