பெட்டகம்- வாசக மறுவினை

என்னிடம் பரிசாக ஒரு பெட்டகம் வந்து சேர்ந்தது.அத்தகைய பெட்டகங்களே பரிசுப் பொருளாக இருப்பதால் பெரும்பாலும் உள்ளே எதுவும் இருக்காது.ஆனால், சொல்வனம் தந்துள்ள அம்பையின் சிறப்பிதழ்  தனித்துவமான ஒன்று.

தன்னைப் பற்றிய ஒரு இதழ் என்பதை அம்பை தவிர்க்க நினைத்ததில் வியப்பொன்றுமில்லை; ஒளிர்விடும் பொருட்கள் தம் ஒளியை அறியக்கூடுமா என்ன?

அம்பையின் கதாநாயகிகள் கெட்டித்தட்டிப்போன சமுதாய சமநோக்கின்மையை சீறலோடு கேள்விகேட்பவர்கள் என்று கலைச்செல்வி சொல்கிறார். அம்பையின் சிறுகதைகளின் நாயகியரை மையமாக வைத்து அவர் எழுதியுள்ள கட்டுரை அம்பை கொள்ளும் அறச் சீற்றத்தைச் சொல்கிறது.

இசையால், கவிதையால், மூப்பின் தனிமையால்,மூத்த குடிமக்களைப் பேண இயலா இளமையின் மறுதளிப்பால்,நிறைந்துள்ள அம்பையின் ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைகளைப் பற்றி சமயவேல் நம் மனத்தோடு உரையாடுவதைப் போல் எழுதியுள்ளார்.

பெண்மையின் அழகையும், பெண்மையின் சீற்றத்தையும் சொல்லியிருக்கும் வெங்கட் சாமிநாதனின் கட்டுரை ஒரு பெண்ணிய இலக்கியவாதியை மிகச் சரியாக அடையாளம் காட்டுகிறது.

எழுத்துக்களை ஆண் எழுத்து, பெண் எழுத்து என்று அடையாளப்படுத்திப் பார்க்கும் பார்வையின் நிறைவின்மையை புதிய மாதவி சொல்வது அருமை. அம்பையின் ‘ஸ்பேரோ’வைப் பற்றி மிக நன்றாக இவர் பதிவு செய்கிறார்.

‘வீட்டிற்குள்ளிருந்து கேட்கும் பெண்குரல்கள்’ ஒலிக்கும் சமூகத்தின் அநீதியைப் பற்றி, அவர்களின் நிலையைப்பற்றி எஸ். ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். அம்பையின் நேர்மையை,அவரது ஆவணக் காப்பகத்தின் இன்றியமையாமையை, தான் முதலில் தவறாக அம்பையைப் புரிந்து கொண்ட விதத்தை, அது மாறி நீடிக்கும் ஒரு நல்ல நட்பை சொல்லும் அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை மனம் திறந்து பேசுகிறது

குட்டி ரேவதியின் ‘உடலே இல்லாத வெளியில் மிதந்து கொண்டிருந்த’ அருமையான நேர்காணலுக்கு மிகுந்த நன்றிகள். உடலையும், அதன் பட்டுணர்வையும் சொல்லும் அம்பையின் பார்வை மிகச் சரியாக வெளிப்பட்டிருக்கிறது. ஆண்வழி நோக்கில் உள்ள சமுதாயத்தில் பெண்ணின் உடல் கூட அவளுடையது என்ற எண்ணம் அற்றுப் போனதுதான் மிகப் பெரிய குரூரம் என அம்பை தெளிவாகச் சொல்கிறார்.

வாழ்க்கையில் நிகழ்பவை பெரும்பாலும் பிறப்பால் முன்கூட்டியே பொது புத்தியில் தீர்மானிக்கப்பட்டு அது வலியும், ரணமும்,நிணமுமாக வெளிப்படுவதை பாமாவின் ‘கருக்கிற்கு’ எழுதிய முன்னுரையில் அம்பை தெளிவாகச் சொல்கிறார். ஒதுக்கப்படுவதின் வடுக்கள் எளிதாக மறைவதில்லை. நட்பின் பெருமையைக் கோடிட்டு, கோட்பாடு வேறாயினும் தோழமை மாறாது என்கிறது மைத்ரேயனின் ‘வண்டல் படிய ஓடும் நதி.’

சு ராவைப் பற்றிய அம்பையின் மதிப்பீடும், அந்த உரையும் அவரின் அற்புதமான, நேர்மையான, சமரசமற்ற இயல்புகளைக் காட்டுகின்றது.’ஆலமரத்தின் கீழ் ஒரு குடியிருப்பு’ அம்பையின் மிகச் சிறந்த ஒரு முயற்சி.அனைத்து அவலங்களையும், அவமானங்களையும் மீறி வாழும் பவ்வரி தேவி சமூகத்தின் மனசாட்சியை நோக்கிக் கேட்கும் கேள்விகள் இன்னமும் கேட்கப்பட்டுக்கொண்டிருப்பதுதான் அவலம்.

உலகளவில் விஞ்ஞானக் கதை எழுதிய முதல் பெண்ணியவாதியான ரொக்கேயாவைப் பற்றி அம்பையின் இந்தக் கட்டுரை மூலமே நான் அறிந்தேன்.இசை பயிலவும்,படிக்கவும், சொத்துக்களில் உள்ள உரிமைகள் பற்றியும், பெண்ணின்  பிற உரிமைகள் பற்றியும் இஸ்லாத்தில் இருக்கும் கோட்பாடுகளைச் சொன்ன ஜுனைதா பேகம் என்ற மிகச் சிறந்த ஆளுமை பற்றிய கட்டுரை ஒரு அற்புதத் திறப்பு.

பெண் வெறுப்பு என்பது எதிலிருந்து தொடங்குகிறது?அனைத்தும் அவள் உடலின் மேல் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது எத்தனை அநீதி? பாரதி சொல்வது போல்     கஞ்சி கிடைக்கவில்லை என்பதன் காரணத்தை அறியாத மானுடர்கள்; இவர்களுக்கு மேன்மேலும் சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது, அவள் உடல் மட்டுமல்ல என்று. அம்பை இதில் சலிப்பதில்லை.

ஆர். சூடாமணியுடனான நீண்ட கால நட்பைப் பற்றி, அவர் எழுத்தில் கண்ட காட்சிகள் பற்றி,அவரின் அணுகுமுறை பற்றி,  நேர்மையாக ஏற்பட்ட விலக்கம் பற்றி அம்பை எழுதியுள்ளது உண்மையின் வெளிச்சம்.

மாதர் மறுமணம் இதழ் ஏற்படுத்திய சமூகத்தாக்கம் குறித்துப் பேசும் அம்பை, அவர்கள் சிஸ்டர் சுப்புலக்ஷிமி பற்றி அவ்வளவாகக் குறிப்பிடாததையும், விதவைப் பெண்கள் படிப்பினால் விடுதலை பெற்று யாரையும் சாராமல் வாழ முடியும் என்பதையும் துணிவாகப் பதிவு செய்கிறார்.

குடும்பச் சூழல்களில் பெண்கள் அன்னபூரணியாக தம்மை ஒப்புக் கொடுத்த ஒரு காலம்; அதைச் சுமையாக உணரும் இக்காலம்;பகிர்ந்து பல் உயிர் ஓம்பும் பண்புகளைப் பற்றிய அம்பையின் சிறுகதையில் தன் நினைவுகளைப் பதிக்கிறார் கமலதேவி.

‘The Face Behind the Mask’, ’உடலெனும் வெளி’ ஆகிய அம்பையின் நூல்களை எடுத்துக்கொண்டு முன்னும் பின்னுமாக பயணித்து பெண் எழுத்தாளர்களின் சில போதாமைகளை மறைமுகமாகப் பேச முற்பட்டு அம்பையின் இதழிற்கு சற்று வெளியே புலப்படுகிறது சுசித்ராவின் கட்டுரை. உடலெனும் வெளியைப் பற்றிய மற்றொரு கட்டுரை அம்பையின் பதிவுகளில் ஊடாடி அவரின் செயல்முனைப்பை பதிவு செய்கிறது. இன்றும் நடக்கும் சமவாய்ப்பற்ற நிலைகளை இரு சம்பவங்கள் மூலம் பதிவு செய்கிறது.

அடவியும், அந்தேரி மேம்பாலமும்- எம்.ஏ சுசீலாவின் கட்டுரை இரு நாயகியரை அடையாளம் காட்டுகிறது. பெண்ணின் விருப்பங்கள் இவைகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற பொது எதிர்பார்ப்பும், அப்படியில்லையெனில் அதைப் புரிந்து ஏற்றுக்கொள்ள இயலாத உறவுகளும், சமூகமும் இதில் காட்டப்படுகின்றன.

அம்பையை ’தோற்காத கடவுள்’ எனும் இந்திரா பார்த்தசாரதி, காந்தி இந்த சமுதாயத்திடம்  தோற்ற நிலையை மனக்கண் முன் கொண்டுவருகிறார். ஆனால், அம்பை காந்தியைப் போலவே ஒரு போராளி, அவர் கொண்டுள்ள அறம் அவரை செயல்படச் செய்கிறது.

உரக்க ஒலித்த பெண் குரலாக அம்பை ராஜம் கிருஷ்ணன் அவர்களைக் காண்கிறார். ’உத்தர காண்டம்’ நாவல், பொருளை மையமாக வைத்து அறத்தை புறம் தள்ளும் காலப் போக்கினை மிகச் சரியாக படம் பிடிக்கிறது.

தன்னுள் வாழ்ந்த குரல்களைக் கேட்ட ஒரு புராதன வீடு போல் என்று சொல்லும் குக்கூ என்ற செல்லப் பெயர் உடைய மஹாஸ்வேதாதேவியினைப் பற்றி அம்பையின் கட்டுரை ஒரு கதையினைப் போல் ஒழுகிச் செல்கிறது. அந்த படைப்பாளியிடம் இந்த படைப்பாளி கொண்டிருந்த வியப்பும், நேசமும், புரிதலும் நம்மையும் எளிதாக வந்தடைகின்றன.

ஒரு மொழி என்பது அடையாளக்குறுகல் அல்ல; அது பல மொழி நதிகள் கலக்கும் பெருங்கடலுக்குக் கூட்டிச் செல்லும் வற்றாத ஜீவ நதி எனத் தெளிவாகச் சொல்கிறார் அம்பை. வடகிழக்குப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 43 மொழிகளாம். பெரும் பாரம்பர்யம் உள்ள மொழிகளை, அவற்றின் உன்னத இலக்கியங்களை அறிய ஒரு சிறு இந்திய இணைப்பு மொழியாக ஹிந்தியை அவர் அருமையாக நிறுவுகிறார். காலிபின் கவிதை பொருத்தமாக இருக்கிறது.

கீற்றுகள், புள்ளிகள், கோடுகள் இவற்றை வைத்து மிகப் பெரிய சித்திரத்தை, எளிய சொற்களாலும், உரத்துச் சொல்லாமல் எள்ளலாகவும், சொன்னதை விட சொல்லாததை வாசகன் உணரும் விதமாகவும் எழுதிய ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு பற்றிய தன் கண்ணோட்டங்கள் மாற்றம் கொள்வதை எத்தனை உண்மையாகச் சொல்கிறார் அம்பை!

அம்பையின் தர்க்க பூர்வமான வாதங்களும், நுண்ணிய வரலாற்றறிவும் ’இரண்டு சூடான அவித்த முட்டைகளும் காஷ்மீரும்’ என்ற கட்டுரையில் கோலோச்சுகின்றன. லால் தேத் பற்றிய குறிப்பு சிந்திக்கத்தக்கது.

வெங்கடேசனின் கவிதைகளுக்கு ஒரு கவிதையைப் போல் நடை உணர்வெழும் விமர்சனம் செய்திருக்கிறார் அம்பை. அக்கவிதைகளில் அவர் உணர்ந்த மாறுபட்ட  தரிசனங்களை உணர்ச்சிச் சொற்களால் வார்த்தெடுக்கிறார். அம்பையின் ஒரு அசாதாரண அசை போடும் நினைவுகள் இதில் மேலெழுகின்றன.

ஊர் வேண்டாமாம் அவருக்கு. அவருக்கு யாதும் ஊரே, யாவரும் கேளீரே. மிகச் சுவையான    நினைவுகள் நம்மையும் சற்றே கடந்து வந்த ஊர்களைத் திரும்பிப் பார்க்கச் செய்கிறது.

இலக்கியம் என்பது வாழ்க்கையில் உள்ள உண்மைகளைப் பற்றியது அல்ல;உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே உள்ள  உறவு பற்றியது இலக்கியம். இவ்வளவு தீர்மானமாக, சுருக்கமாக இவரைத் தவிர யார் சொல்லக்கூடும்?

அம்பையின் சட்டையுரிப்பைச் சிலாகிக்கும் வண்ணநிலவன் சற்று ஆண்களின் உரிமையைப் பற்றியும் பேசுகிறார். முரண் எனும் இலக்கணத்தைப் பற்றி எழுதியுள்ள பெருமாள் முருகன் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ சிறுகதையை மூவகை முரண் என்றும், அதை எங்கே முடித்திருக்க வேண்டுமென்றும் சொல்கிறார்.

கலாப்ரியா அம்பையிடம் அழகியில் உணர்வும், பெண்ணிய சிந்தனைகளும் சங்கமித்துள்ளதைச் சொல்கிறார். அம்பை குறிப்புகள்- ஒரு இரசமான பறவைப் பார்வைகளின் தொகுப்பு. ’பாகீரதியின் மதியம்’ எனும் நாவலுக்கு சரியான துலாக்கோல் அளவீடு அம்பையின் விமர்சனம். தட்டிக் கொடுக்கையிலேயே குட்டி விடும் சாமர்த்தியம். ஆனால் அவற்றைத் தரவுகள் கொண்டே நிறுவுகிறார். அணில் கட்டிய பாலத்தில் புத்தகங்களைப் பார்த்த மகிழ்வும், நெகிழ்ச்சியும்,ரோஜா முத்தையா முதலில் தயங்கியதும், பின்னர் தானே முன் வந்து கேட்ட புத்தகத்தைக் கொடுத்ததுமான பதிவு புத்தக மற்றும் ஆய்வுக் காதலர்களின் மன நிலையைக் காட்டுகிறது. நாகம்மாளின் விமர்சனத்திலும் அம்பையின் சரியான நடுநிலை வெளிப்படுகிறது. மண்மணம் வீசும் நாவலை மண் மணத்தோடு நுகரச் சொல்கிறார் அவர்.

புத்தகங்களூடே நகைச்சுவையுடன் நடக்கும் அம்பை காலச்சுவடி இதழுக்கு சொல்வதென்னவோ ‘விதி வலியது’

அபூர்வமான புகைப்படங்கள், மிகப் பெரிய ஆளுமைகள் எழுதிய கட்டுரைகள், அம்பையிடம் பலர் நடத்திய பேட்டிகள், அம்பையின் விமர்சனக் கட்டுரைகள் என்று ஆக்கபூர்வமான படைப்பினை வழங்கியுள்ள சொல்வனத்திற்கு நன்றியைத் தவிர வேறென்ன சொல்ல?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.