கவிஞர் பூராம்
உற்றுப் பாருங்கள்
இருளொளியழகில் நிழலாடும் மனம்
பகலெல்லாம் வெட்கப்படும் இரவுப்பொழுதில்
இருந்தாலும் இல்லாததுபோல
உற்றுநோக்கலில் புலன்களின் பேரின்பம்
பயத்தின் ஊற்றுகள் கற்பனையில் பவனி
இருள் படைப்பின் முதல்படி
நீக்கமற நிறைந்துள்ள அற்புத ஆற்றல்
மனம் அடையத் துடிக்கும் பேருலகம் அது
பகல் காட்டிய காட்சிகள் கேட்பாரற்று
கடந்து சென்றால் மனம் மறுக்கும் இருள்
படைப்பின் மூல சக்தியாய்
பகையின் தொடக்கப் புள்ளியாய்
எல்லாம் ஒளி இருளில்
ஓசைகளின் கூட்டொலியில்
சொல்ல மறந்த சோகங்கள்
அமைதியின் ஓசையில்
காற்றின் கண்ணீர்ப் பனித்துளியாய்!
ரகசியங்கள் பேசிய மரங்களெல்லாம்
தூங்கிக்கொண்டிருக்கும் பகலில்
உற்றுப் பாருங்கள் இரவின் கண்
பிரகாசமான ஒளியில் ஒவ்வொன்றையும் நோக்கி
இரவின் தரிசனம் .
***
அழகர்சாமி குருசாமி
பொற்குதிரை ஏறி வரும் கள்ளழகர்

மேனி
அரிக்க
சொறிசிரங்கு
அப்பி –
தலைமுடியை ஆற்றங்கரையில் நாவிதன்
மழித்த
மொட்டையின் மேல்
தகிக்கச்
சூரியன்-
திறந்து விடப்பட்ட தண்ணீர் தயங்கி ஓடும் கூடலாற்றில்
மூழ்கியெழ
நனைந்த டிரவுசரைக் கழற்றி
பொக்கு பிரியாத
சிரங்கின்
பொக்கு பிரிய
வலியில் அலறி
அரைத்த சந்தனத்தை மொட்டையில் தேய்த்துப் பின்
சர்க்கரைச் சொம்பில்
சூடம் கொளுத்தி
நிவேதிக்கும்
தந்தை தோள் மேல் அமர்ந்து
திசை நோக்கி-
பொற்குதிரையேறிப் பொலிந்து
தண்புனலில் இறங்கி வரும்
கள்ளழகர் கண்டளவில்
இமைக்காமல்
பரவசத்தில்
ஒன்றி
உள்ளம் கொள்ளை கொண்டு உலகளந்தோன் கடக்க என்னை-
இன்னொரு முறை காணேனோ என்றேக்கம் மீதுற
இன்றளவும் ஏக்கம் தீர்ந்திலேன்
பின் –
பல சித்திரைகள் அவனைக் கண்டும் போற்றியும்-
என்று இன்னொரு முறை பொற்குதிரை ஏறி வரும் கள்ளழகர்
தந்தையின் தோளேறிக் கண்டேன் நான் இன்றளவும்
தீராத அந்த ஏக்கம்
தீர?
****
நித்யா எஸ்.
வேம்பு எனும் இறைமை!
நீர்மையில்லாது
பசுமை தொலைத்து
பார்த்த வெளியெங்கும்
வெளிர்ந்துலர்ந்த சருகாகி…
சிறுகனல் சிதறுகையில்
பற்றி எரிந்து – கருஞ்
சாம்பலும் பூசிக்கொண்ட…
பொட்டல் காட்டில்
தகித்த கோடையில்
தளிர்த்து
வெண்பூக்கள் உதிர்த்து..
பல்லுயிரும் ஓம்பி
குளிர் நிழலும்
உயிர்காற்றும் அருளும்
வேம்பு எனும் இறைமை..!