ஈகை

வெளிர் நீல வண்ணத்தை உதிர்த்த சுவர்கள் என் மேல் அலையலையாகப் படிந்து மூச்சைத் திணற வைத்தன. அப்படி நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? உயிருடன் புதையுண்டு போவதுதான் நான் செய்யப்போகும் செயலுக்கு சரியான தண்டனையாக இருக்கும். இத்தனை சுய நலம் எல்லோரிடத்திலும் இருக்கக் கூடியதுதானா?கனவா, நனவா என்ற பேதமில்லாமல் எப்போதுமே என்னைக் குற்ற உணர்ச்சியில் தள்ளப் போகும் இந்தச் செயலைத் தவிர்க்க முடியாதா?.என் வாழ்வு என்ன அவ்வளவு முக்கியமா?

முகத்தில் முள் படர்ந்து என் விரல்களையே குத்துகிறது அதன் கூர்.  சற்றுக் கசங்கிய உடையை அணிந்தாலே உடனே மாற்றச் சொல்லும் சிந்து இன்று ஒன்றுமே சொல்லவில்லை. கன்ன எலும்புகள் துருத்திக் கொண்டு, கண்கள் ஒளி குறைந்து, வெடித்த உதடுகளின் கருமையில் வந்து நின்ற காலனை நான் விரட்டப் பார்க்கிறேன். ஆம், இரவல் வாழ்க்கையாவது நான் வாழ வேண்டும். ஆனால், அதில் நான் யாரை ஈடு வைக்கிறேன்? சரிதானா அது, சரியில்லை என்றால் ஏன் என் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை? கோழையா, வாழும் இச்சையா, என்னை விட்டால் குடும்பத்தை யார் கவனிப்பார்கள் என்ற பயமா, ஆண் என்ற தகுதியா, இது எல்லாமுமேமா?

அலைகள் கூட ஓயலாம். அலைகள் இல்லாத கடல்கள் உலகத்தில் உண்டு. எண்ணங்கள் சுழன்றாடும் மனதை என்ன செய்வது? அதன் அலைக்கொந்தளிப்பை, சுழலாழங்களை, உள்ளிருக்கும் அமைதியின் வெளிப்பாடான ஓசைகளை, அதன் மர்மங்களை, தந்திரங்களை, இரத்தம் வடிய தன்னையே கிழித்துக் கொள்ளும் குரூரங்களை, தன்னை மிகைப்படுத்திக் கொள்ளும் வாழ்விச்சையை, அதற்காகப் போடும் வேடங்களை,அது உண்மை என்றே தன்னை நம்ப வைக்கும் விசைகளை  எண்ணிக் கொண்டே அந்த மருத்துவமனையின் கட்டிலிலே நான் படுத்துக் கிடந்தேன். என்னை அவ்வப்போது நலம் விசாரிக்க மலர்கள் செறிந்த கிளைகள் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தன. இரு வருடங்களுக்கு முன்னர் நானும், சிந்துவும் வந்த அந்த நாள் எங்கள் வாழ்வை இப்படிப் புரட்டிப் போடும் என நினைக்கவேயில்லை.

அன்றைய தினம் இயல்பான ஒன்றாகத்தான் இருந்தது. வெப்பம், காற்று எல்லாம் மிதமாக, இதமாக, சிறு சாரலான மழைத்துளிகளோடு அமைதியான மன நிலைக்கு என்னை இட்டுச் சென்றது இன்றும் கூட நினைவில் எழுகிறது. வயிற்றில்தான்  சற்று அதிகவலியை உணர்ந்தேன். எப்போதும் இருப்பதுதான், அன்று மருத்துவரைச் சென்று பார்க்க வேண்டிய அவசியம் சிந்துவின் பிடிவாதத்தால் ஏற்பட்டுவிட்டது. அவளுக்குத்தான் என்னிடம் எத்தனை அன்பும், கரிசனமும்! அவளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் எழும் பரிவும், தவிப்பும், பெருமையும், பயமும், காரணமற்ற ஏக்கமும், துயரும் எனக்குப் பொருள்படவேயில்லை. சிறிது நாட்களுக்கு முன் அவள் அம்மாவிடம் இந்த உணர்ச்சிக் கலவையைப் பற்றிக் கேட்டேன். அவள் சிரித்தாள். ‘நம் பெண் அல்லவா?’ என்றாள். ‘உனக்கு அப்படியெல்லாம் தோன்றவில்லையா?’என்றேன்.

இன்றுவரை பதிலில்லை. இந்த எண்ணத்தினால் நான் அன்று அனிச்சையாகப் புன்னகைத்த போது சிந்துவும் ஏனோ சிரித்துக்கொண்டே என் கைகளைத் தன் கையிலெடுத்துக் கொண்டது எவ்வளவு பசுமையாக நினைவிலிருக்கிறது? அவள் மகளா, தாயா? ஒரே தொடுகையில் அத்தனை அன்பையும் தகப்பனிடத்தில் மடை திறந்து பொழிய பெண் குழந்தைகள் எங்கிருந்தோ கற்றுக் கொண்டுவிடுகிறார்கள்.

மருத்துவர் என்னைப் பார்க்க இன்னமும் ஒரு மணி நேரம் காத்திருக்கச் சொன்னார்கள். இந்த சிந்துவால்தான் இத்தனையும்; இருப்பது ஒரு நாள் விடுமுறை அதையும் உண்டு உறங்கி ஆனந்தமாக இருக்கவிடாமல் செய்துவிட்டாள். செலவு வேறு, இந்த மருத்துவரிடம் காட்டுவதற்கு இவள் அம்மாவின் மறைமுக ஆதரவு வேறு. வரவர நானும் அவர்கள் பேச்சைத்தான் கேட்கிறேன். ’வா,காஃபியாவது குடித்துவிட்டு வரலாம்’என்றேன். ’போலாம்ப்பா,ஆனா, மோர் தான் குடிக்கணும், ஒகேயா?’ இந்தப் பெண்ணை என்ன செய்வது?

நாங்கள் அந்த மருத்துவமனையின்  உணவு விடுதியில் இருக்கும் போதே காற்று அடைபட்டுப் போனது போல் இருந்தது. புழுக்கம் அதிகரித்து எரிச்சல் மன நிலை வந்தது. மீண்டும் மருத்துவமனையின் வாயிலை அடைந்தவுடன் நான் இரத்த வாந்தி எடுத்தேன். வளாகமே பரபரப்பானது. எனக்கு நினைவெல்லாம் சரியாகத்தான் இருந்தது. பீதியில் நிலைத்த விழிகளுடன் சிந்து என்னைப் பார்ப்பதைப் பார்த்தேன். ஸ்கேன், எம் ஆர் ஐ, ப்ளேட்லெட், லிவர் டெஸ்ட்,என்ற சொற்கள் சுழன்று வந்தன.கேஷா கார்டா என்று சிந்துவிடம் கேட்பது காதுகளில் விழுந்தது.

(Cirrhosis) “கல்லீரல் கரணை நோய்” என்ற மருத்துவர் “இத்தனை நாளா என்ன செஞ்சுண்டிருந்தீங்க ?” என்று கோபித்தார். ’மிக மோசமா டாக்டர், பொழைக்க மாட்டேனா?’ என்று கேட்கும் போதே தன்னிரகத்திலும், எதிர்காலத்தைப் பற்றிய பயத்திலும் மனம் பதறியது. ’பொழைக்க வைக்கத்தான் நாங்க பாடுபட்றோம்; வகைதொகையில்லாமக் குடிங்க, குடலை அழிங்க, அப்றம் அழுங்க” என்று நகர்ந்த மருத்துவர் சிந்துவிடம் ஏதோ கேட்டார், பேசினார், இரு நாட்கள் கழித்து என்னை வீட்டிற்கு அனுப்பினார். லிவரை தானமாகப் பெறுவதற்குக் காத்திருப்போர் பட்டியலில் என் பெயர் முன்னூற்றி எட்டாக இணைந்தது.

கமலா, கோபி, சிந்து, இந்து நானில்லாமல் இவர்கள் என்ன ஆவார்கள்? கோபிக்கு பதினெட்டு வயது; சிந்து ஒருவயது சிறியவள்;அவளைவிட ஆறு வயது குறைவு இந்துவிற்கு; எல்லோருக்கும் படிப்பு, கல்யாணம், கமலாவின் மீதி வாழ் நாளிற்கு சிறிது சேமிப்பு. என்ன செய்யப் போகிறேன்? என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன்? குடித்து இறந்துவிட்டால் என் வேதனை குறையலாம், ஆனால், இவர்கள்… இத்தனை அன்பு மிக்கவர்கள், எனக்கெனத் தனியான மரியாதை கொண்டவர்கள், என்னை எதிர்த்தே பேசாதவர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக என்னையே சார்ந்திருப்பவர்கள், நான் இவர்களைக் கைவிடலாமா?

நீண்ட பெருமூச்சுடன் என்வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நான் இழுபடுவதை அன்று அறிந்தேன். வலியும், வேதனையும், சிரிக்க மறந்து போன குடும்பமும், பார்க்கையில் பரிதாபத்தைக் கொட்டும்  நட்புமாக வாழ்க்கை தலை கீழாயிற்று. பதினெட்டு மாதங்கள் என் வேலை இழுத்துப் பறித்துக் கொண்டு ஓடியது. வரவின் பெரும்பகுதி மருந்துகளுக்கென்றானது. என் எண் முன்னூற்றிஎட்டிலிருந்து ஒன்றரை வருடங்களில் முன்னூறாக ஆனது. வலி பொறுக்கமுடியாமல் என்னைக் கொன்றுவிடுமாறு மருத்துவரிடம் சொல்கையில் அவர் ஒரு தீர்வு சொன்னார்.

“என்னப்பா, பேயடிச்ச மாரி இருக்க, டாக்டர் என்னதான் சொன்னாரு?” என் அம்மா இரகசியமாகக் கேட்டார்.

‘இப்போதைக்கு தானம் கடைக்காதாம். யாரும் உறவுக்காரங்க கொடுத்தா பொழைச்சுக்கலாமாம் ‘என்றேன்.

“நா வயசாளி, உம் பொண்டாட்டி சீக்காளி. கை அறுந்தாக் கூட சுண்ணாம்பு தராதப் பசங்க உம் உடம்பொறப்புங்க. என்ன செய்யப் போற? “என்றாள்

‘ரோசிக்கணும்’

“என்னா ரோசன, மூத்த பொண்ணக் கேளு “

‘ஆத்தா,என்ன பேச்சு சொல்லுறவ.அது பாவம் இளசு ‘

“கூறு கெட்டுப் பேசாத;சிந்து உம்மேல உசுர வச்சிருக்கு. உனக்கு ஏதாச்சும்னா சும்மா இருக்குமா அது? “

‘அதுக்காக?‘

“புரிஞ்சுக்கப்பா, நீ இருந்தாத்தான் உன் குடும்பம் நிக்கும். அவ உசுருக்கு ஆபத்தில்லைல,கேளு “

‘ஆத்தா,நாள பொழுதுக்கு அவளுக்கு நல்லது கெட்டது நடக்க வேணாமா? வவுத்ல கிழிப்பாங்க, வடு நிக்கும், என்னான்னு சொல்லி கண்ணாலம் பேசமுடியும்? இப்பைக்கு கேக்கறதுன்னா கோபிய வேணா கேக்கலாம் ‘

“நம்ம குடிலுக்கு ஒத்த கருவப்ல கன்னு, அதெல்லாம் நா ஒப்புக்கிடமாட்டன். ஒரு பேச்சுக்கு, அட ஒப்புக்குச் சொல்றதுதான்யா-உனக்கு எதுனாச்சும்னா அவந்தான தலயெடுக்கணும்,அவன் பெலத்தை குறி வப்பியா நீயி? “

‘இல்லாத்தா, நான் ஒப்பல; யமன் வாரயில போறன். சிந்துகிட்ட கேக்கமாட்டேன், அம்புட்டுத்தான்.’

இத்தனை சொன்ன நான் ஏன் என் அம்மாவை, மனைவியை சிந்துவிடம் கேட்க வேண்டாமென்று சொல்லவில்லை? சிந்துவைப் பொறுத்தவரை நான் நல்ல தகப்பன் எனக் காட்ட ஆசைப்பட்டேனா? என் உயிராசையை ஒளித்து வைத்துக் கொண்டு, மற்றவர்களை ஏவிவிட்டுவிட்டேனா? ஆம், முகத்தில் அறையும் உண்மை இதுதான். சிந்து காட்டிய மிதமிஞ்சிய அன்பிற்கு, நான் செய்யும் மரியாதை இதுதான் போலும். அவள் என் மூலம் உலகிற்கு  வந்திருக்கலாம்; அவளுக்கு உணவும், உடையும், வீடும் நான் கொடுத்திருக்கலாம். அதன் விலையாக நான் கேட்பது எந்த தகப்பனும் தன் மகளிடம் கேட்கக்கூடியதா?

அவள் உறுப்பின் ஒரு பகுதியை என் கல்லீரலாக எடுத்துக் கொள்வது முறையா? ஆனால், அவளுக்கு ஒரு கெடுதியும் நேராது என்றாரே மருத்துவர். அப்படியென்றால் ஏன் கோபியைக் கேட்கவில்லை, ஏன் அவனும் முன்வரவில்லை? உறவுகளின் சங்கிலித் தொடரில் பலமற்ற ஒன்றை வளைத்து, சிதைத்து வாழ்வது எத்தனை கீழ்த்தரமானது? இத்தனையும் தெரிந்தும் நான் ஏன் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டு மருத்துவ மனையில் இருக்கிறேன்?

பூக்குவியல் என அவளைக் கைகளில் ஏந்திய அந்த நாள்; உண்மையில் அவளை நான் தான் வளர்த்தேன்.’ப்பா’ என்பதுதான் அவள் முதல் வார்த்தை. தவழ்ந்து வந்து என் மேல் தத்தி ஏறி விளையாடுவாள். என் சாப்பாட்டை கைகளால் துளாவுவாள்; நான் ஊட்டினால் தான் அடம் பிடிக்காமல் சாப்பிடுவாள். கதை சொல்ல, குளிப்பாட்ட, பள்ளிக்கு அழைத்துச் செல்ல, அவளின் சாகசங்களைக் கேட்க, விளையாட்டில் பட்ட காயங்களைக் காட்டி பொய்யாக அழ, மதிப்பெண் குறைத்துப் போட்ட பள்ளி ஆசிரியரை நான் கோபிக்கவில்லை என்று என் மீது ஊட, முதலில் தாவணி அணிந்த அன்று வெட்கி என் முன்னால் திணற எதற்கும் நான்தான் அவளின் தாயுமானவன்.மூவரில் அவள் என் செல்லக் குழந்தை.அத்தனை அன்பையும் இச்செயலால் நான் விஷமாக்கப் பார்க்கிறேனா என மனம் தடுமாறியது.

அம்மாவும், கமலாவும் இரு பாதுகாவலர்கள் போல் சிந்துவை அழைத்து வந்ததும், கண்ணாடி அறையில் மருத்துவர் அவளிடம் மட்டும் தனித்துப் பேசியதும், அவள் கண்களில் திரண்டு கன்னங்களில் வழிந்த கண்ணீரும் என்னைக் காயப்படுத்தின.

ச்சே என்ன ஒரு தகப்பன் நான். இல்லை, அவள் என்னை ஒரு நாளும் வெறுக்க மாட்டாள், என்னிடம் இப்போது வந்து பேசுவாள் நான் சொல்வேன் ‘கண்ணம்மா, அப்பாக்கு ஒண்ணுமில்லடா, சின்ன ஆபரேஷன் தான். உனக்கும் பெரிசா வடு நிக்காதுடா, தங்கம்; ரண்டு பேரும், அப்றம் பாரேன், எப்படில்லாம் இருப்போம்னு. கண்ணம்மாக்கு ஒரு கண்ணப்பன் வருவானில்ல, இந்த அப்பன்தான அவனக் கொண்டாருவான். நீயி பொண்ணில்ல தாயி, அந்த மாரியாத்தா நீ. அழுக்கே ஒட்டாத தாமரப் பூவு, இந்தக் குடிகாரன் ரண்டு வருஷம் முன்னாலயே செத்துட்டான், இப்ப உம் புள்ளயா கால்ல விழுகேன் தாயி,உம் உசிர மனசுக்குள்ள வச்சா மட்டும் போதுமான்னுட்டு அந்த மாரியாத்தா என் உடம்புக்குள்ளயும் வச்சுக்கச் சொல்றா. என் கண்ணில்ல, அழுவாதே’

மனதிற்குள் முட்டி மோதி வார்த்தைகள் தவித்தன. அவள் என் கட்டிலருகே வந்தவுடன் இவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் சொல்வேன்,அவள் ஆறுதலாகக் கைகளைப் பிடிப்பாள் என நினைத்தேன்.

வெளியில் வந்து அவள் என்னைப் பாராதது போல் அடுத்த அறைக்குச் சென்று அங்கிருந்த கட்டிலில் படுத்தாள். என் சுயத்தின் குரூரத்தையும், பச்சாதாபத்தையும் மறைக்க நான் ஜன்னலின் வழியே தோட்டத்தைப் பார்த்தேன்.மேல் கிளைகளில் இருந்த மலர்களையும், மொட்டுக்களையும், வாடி காம்புகளுடன் ஒட்டியிருந்த மலர்களையும், இதழ்கள் சிதைந்த மலர்களையும் தவிர்த்து மற்ற அனைத்தும் பூக்கூடைகளுக்குள் இருந்தன. இனி சிந்து என் கைகளைத் தன் கையில் பிணைத்துக் கொள்ள மாட்டாள்.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.