சொல்வனத்தின் 200 ஆவது இதழை, ‘அம்பை சிறப்பிதழ்’ என்று அறிவித்து வெளியிட்டிருந்தோம். அந்த இதழுக்கு, வழக்கத்துக்கும் மேலாகப் பலரிடமிருந்து பாராட்டுக் கடிதங்கள் வந்திருந்தன. அவற்றில் சிலவற்றைத் தொகுத்து ஒரு பதிவாக இந்த இதழில் பிரசுரித்திருக்கிறோம்.
ஜூன் 2009 இல் துவங்கிய சொல்வனம் வருகிற ஜூன், 2019 இல் பத்தாண்டுகளைக் கடக்கிறது. அனேக வலைப் பிரசுரங்கள் துவங்குகையில் மிக்க நம்பிக்கையோடு துவங்கப்பட்டுப் பின் சில மாதங்கள் அல்லது ஓரிரு வருடங்களுக்குப் பிறகு மறைந்து விடுகின்றன. சொல்வனம் மிகு நம்பிக்கை இல்லாது துவங்கப்பட்டதாலோ என்னவோ, இத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறது. குறைந்த அளவு எதிர்பார்ப்புகளோடு செயல்பட்டால் பலன் கூடுதலாகக் கிட்டுமோ?
ஜுன் மாதத்தின் பிற்பகுதியில் வெளியாகவிருக்கும் இதழை மறைந்த ஜெர்மன் மொழி எழுத்தாளர் ஒருவரின் எழுத்துலகைப் பற்றிய இதழாக வெளியிடவிருக்கிறோம்.

அவ்வப்போது,அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்படும் உதிரிக் குறிப்புகளைத் தவிர டபிள்யூ. ஜீ. சேபால்ட் தமிழ் இலக்கிய உலகில் அதிகம் விவாதிக்கப் படாதவராகவே இருக்கிறார். 1996-இல் த எமிக்ரண்ட்ஸ் என்ற படைப்பின் மொழிபெயர்ப்பின் வழியே சேபால்ட ஆங்கில உலகிற்கு அறிமுகப்படுத்தப் பட்டார். அதைத் தொடர்ந்து, பிரமிக்க வைக்கும் வகையில், ஐந்து வருடத்திற்குள், வெர்டிகோ, த ரிங்ஸ் ஆப் ஸாடர்ன், ஆஸ்டர்லிட்ஸ் போன்ற அசாத்தியமான படைப்புகள் அடுத்தடுத்து வெளிவந்து இலக்கிய உலகை பரவசத்தில் ஆழ்த்தின.
புதிய நூற்றாண்டின் தொடக்கத்திற்குள் ப்ரூஸ்ட், காப்கா, கால்வினோ, நபொகோவ் போன்ற மாபெரும் ஆளுமைகளுடன் ஒப்பிடப்பட்டு,நோபல் பரிசைப் பெறுவதற்கான சாத்தியங்கள் விவாதிக்கப்படும் அளவிற்கும் அவரது இலக்கியப் புகழ் பரவியது. 2001-இல் கார் விபத்தில் அகால மரணம் எய்தாதிருந்தால் சேபால்ட் அப்பரிசைக் கண்டிப்பாக வென்றிருப்பார் என்பதும் உறுதி. ஜூன் இறுதியில் வரவிருக்கும் சொல்வனத்தின் 204-ஆம் இதழை, நினைவுத்திறனின் போதாமைகளையும் மானுட வரலாற்றில் இடையறாது தொடரும் அழிவைப் பற்றியும் அண்மைக் காலத்தில் வேறெந்த எழுத்தாளரையும் விட நுணுக்கமாக எழுதிய சேபால்டை மையப்படுத்தும் சிறப்பிதழாகக் கொண்டுவரலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம்.
புனைவு,சுயசரிதை, வரலாறு, பயணக்குறிப்பு, இலக்கியம், புகைப்படக்கலை, கட்டுரை என்று விரிந்து செல்லும் மகத்தான அவரது படைப்புகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். வாசகர்களோ, தமிழில் எழுதும் வேறு எவருமோ, சேபால்டைப் பற்றி ஏதும் எழுதக் கூடுமானால் எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோருகிறோம்.
பதிப்புக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், அவை அந்த இதழில் பிரசுரமாகும்.
அனுப்ப வேண்டிய முகவரி solvanam.editor@gmail.com
ஜூன் 20 தேதிக்குள் இந்த அளிப்புகள் எங்களுக்குக் கிட்ட வேண்டும்.
***