சுல்தானாவின் கனவும் மாணிக்கக் கல்லும்

2003இல் ”அடையாளங்களை ஒன்றிணைத்தல், வேற்றுமைகளைக் கோத்தல்” என்ற தலைப்பில் அருமையான ஒரு கட்டுரை எழுதிய பர்நீதா பாக்சி பிறகு அதை டில்லியில் 2004இல் நடந்த மொழிபெயர்ப்பு குறித்த ஒரு கருத்தரங்கில் மீண்டும் படித்தார். மறைக்கப்பட்ட பெண்கள் சரித்திரத்தை மீளுருவாக்கம் செய்வதைப் பற்றியும் கல்வித் துறையில் அதன் முக்கியத்துவம் பற்றியும் கூறும்போது பெண்கள் ஆவணக்காப்பகமான ஸ்பாரோவின் செயல்பாடுகளின் அடித்தளமாய் இருக்கும் சில கருத்துக்களைக் கூறினார். பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சரித்திரத்தில் உள்ள பெண்கள் இப்போது நாம் மீட்டெடுத்துக்கொண்டிருக்கும் புத்துருவாக்கும்  மிகவும் சிக்கலான, சிந்தனையைத் தூண்டும்  பாரம்பரியத்தின் ஒரு பகுதியானவர்கள். இவர்கள் வாழ்க்கை, அதை ஒட்டிய தரவுகள் இவை பெண்களை மையமாக வைத்துச் சமுதாயத்தின் வளத்துக்காகச் செய்யப்படும்  மேம்பாடு மற்றும் கல்வித் திட்டங்களுக்கான, ஐயுறவுவாதம், கேள்விக்குட்படுத்துதல், நெறிமுறை மற்றும் படைப்பாற்றல் இவற்றை உள்ளடக்கிய முன்மாதிரிகளாக அமையும். ஆனால் இதில் விடுபட்டவைகளையும் அறுந்துபோனவைகளையும் குறித்த தொடர்ந்த போராட்டம் இருக்காவிட்டால் நாம் சமூகத்தின் பல பகுதிகளை நம் கல்விச் செயல்பாடுகளிலும் மேம்பாட்டு முயற்சிகளிலும் பின்னால் விட்டுவிடும் ஆபத்து இருக்கிறது. நம் அடையாள உருவாக்கம் குறித்தும், நம் பெண்ணியங்கள் குறித்தும்  தொடர்ந்த தன்மறிவான நோக்கு இதற்கு இன்றியமையாதது. இதனுடன் எதிர்காலத்தைப் படைக்கும்போதே  கடந்த காலம் எனும் அருஞ்செல்வத்திலிருந்து பயிலத் தயாராயிருக்கும்  மனப்பான்மையும் தேவை. சரித்திரத்தை ஒரு காலகட்டத்திலிருந்து இன்னொரு காலகட்டத்துக்குச் சுமந்துகொண்டு வரும் நம் செயல்பாடுகளில் எப்போதும் பின்னால் விட்டுவிடுபவை இருக்கும். எங்கு கொண்டு சேர்க்கிறோம் எந்தத் தரவுகளைச் சேர்க்கிறோம் என்பதைப் பொறுத்து நாம் இணைப்பவையும் இருக்கும். ஆகையால் கணக்கில் எடுக்கப்படாதவற்றை நாம் நோக்கும்போது, பெருஞ் செல்வத்தைச் சுமந்து வரும் நம் செயல்பாட்டை எந்த வகையிலும் பலவீனப்படுத்தாத, குறைவுபடுத்தாத    வகையில் படைப்பாற்றல் செறிந்த தன்மறிவான நம் நோக்கில் கவனமும் செறிவும் இருக்க வேண்டும்.

இந்தத் தன்மறிவான நோக்கின் நீட்சியாகத்தான் பர்நீதா பாக்சி ரொக்கேயா ஷெகாவத் ஹொஸேன் (1880-1932) பற்றியும் அவருடைய ”சுல்தானாவின் கனவு” என்ற கதையைப் பற்றியும் பத்மராக் (மாணிக்கக்கல்) என்ற நாவல் பற்றியும் பேசினார். ரொக்கேயா பெண்கள் கல்வி உரிமைக்கான, வாழ்வுரிமைக்கான பல செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டவர். இப்போது, குறிப்பிட்டுச் சொன்னால், இந்த மாதம் ரொக்கேயாவை நினைக்க ஏதாவது காரணம் உண்டா? டிசம்பர் 9ம்தேதி 1880இல் பிறந்த ரொக்கேயாவின் பிறந்த நாள் ஆண்டுவிழா இந்த மாதம் 9ம்தேதி வந்தபோது பலருக்கு அது கொண்டாட வேண்டிய நாளாகத் தோன்றவில்லை. மக்களின் கூட்டு நினைவிலிருந்து அவர் பெயர் மறைந்திருந்தது. ஆனால் ரொக்கேயாவின் பிறந்த நாள் ஆண்டுவிழா குறித்து ஒரு மெமே நான் முற்றிலும் எதிர்பாராத ஒரு நிறுவனத்திலிருந்து வந்தது. ரொக்கேயாவின் “சுல்தானாவின் கனவு” கதையைக் குறிப்பிட்டும் அவர் எண்ணங்கள் மற்றும் செயல்பாடு குறித்தும் மெமே வெளியிட்டது அமர் சித்ர கதா. இன்னும் பலர் ரொக்கேயாவை நினைவூட்டாதது குறித்து இருந்த குறையை ஏதோ ஒரு வகையில்  ஈடுகட்டத்தான் ரொக்கேயா பற்றிய இந்தக் கட்டுரையும் அவர் கதை ஒன்றின் மொழிபெயர்ப்பும்.

தேசிய  மைய நீரோட்டச் சரித்திரத்தில் முக்கியமாக ஆண்கள் இருக்கிறார்கள் என்று கூற பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. இதில் இணைக்கப்படாத பல பெண்களைப் பற்றிய ஆராய்ச்சியும், அவர்கள் எழுத்து, வாழ்க்கை பற்றிய தகவல்களைக் கண்டறியும் முயற்சிகளும் பெண்ணியவாதிகளால் செய்யப்பட்டபோது பல ஆராய்ச்சிகள் இந்துப் பெண்களின் சரித்திரங்களையே, அவர்கள் எழுத்துக்களையே முன்னிறுத்தின என்ற குற்றச்சாட்டு உண்டு. 1986இல் வெளியிடப்பட்ட பெண்ணிய சரித்திரத்தை ஆராய்ச்சி செய்வதற்கான, வழிபாட்டு மரபுக்குரிய புத்தகமாக எல்லோராலும் கருதப்பட்ட, குமாரி ஜெயவர்தனேயின் Feminism and Nationalism in the Third World (மூன்றாம் உலகில் பெண்ணியம் மற்றும் தேசியம்) புத்தகத்தில் பல பெண்ணிய எழுத்தாளர்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும் அவர்கள் அனைவரும் இந்துக்களாகவே, (அப்படிப்பட்ட அடையாளத்தை எந்த வகையிலும் வலிந்து பூட்டிகொள்ளாதவர்களாக இருந்தாலும்)  இருந்தனர்.  ரொக்கேயா என்ற முஸ்லிம் பெண் பற்றிய ஒரு குறிப்புக் கூட இல்லை அந்தப் புத்தகத்தில். ரஸியா சுல்தானா முதல் பல பெண்கள் முகலாய ஆட்சியில் பண்பாட்டுச் செயல்பாடுகளிலும் அரசியல் செயல்பாடுகளிலும் முக்கிய பங்கு வகித்திருந்தாலும் முகலாய ஆட்சிக்குப் பின் வந்த கலோனிய ஆட்சியில் அவர்கள் மங்கி மறைந்துவிடுகிறார்கள்.

பழங்காலத்திலிருந்து  இன்று வரை உள்ள பெண்கள் எழுத்தை இரு பகுதிகளாக 1991இல் வெளியிட்டு ஒரு புதுச் சரித்திரத்தை உருவாக்கிய ஸூஸி தாருவும் கே. லலிதாவும் இது குறித்துப் பேசும் போது கலோனிய காலத்து தேசிய சரித்திரத்தின் மைய நீரோட்டத்தில் உருவக ரீதியாக, பெண்கள் என்ற முறையிலும் கலோனிய ஆட்சிக்கு உட்பட்ட நபர் என்ற வகையிலும் இரு முறை தள்ளி வைக்கப்பட்டப் ”பிறர்கள்” ஆகிறார்கள் பெண்கள் என்று கூறி ரொக்கேயா போன்ற முஸ்லிம் பெண்கள் இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்ட ”பிறர்” என்பதுடன் முஸ்லிம் என்ற முறையில் மூன்றாவது முறையும் அந்தத் தள்ளலை எதிர்கொள்பவர்கள் என்று கூறுகிறார்கள் தங்கள் முன்னுரையில். ரொக்கேயாவின் “சுல்தானாவின் கனவு” கதையைத் தாங்கி வந்த இந்தப் புத்தகம் வந்தபின் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் பெண்ணிய நோக்கில் 1905இலேயே எழுதப்பட்ட அந்த  விஞ்ஞானக் கதை மொழிபெயர்க்கப்பட்டதா என்றால், இல்லை. செப்டெம்பர் 17, 2014 இல் டெவொன் மெலொனி என்பவர் வலைப்பதிவு ஒன்றில் விஞ்ஞானக் கதைச் சரித்திரத்தில் முக்கியமான பெண்ணிய கணங்கள் என்ற குறிப்பை எழுதும்போது ரொக்கேயாவின் ”சுல்தானாவின் கனவு” கதையைக் குறிப்பிட்டுவிட்டு இவ்வாறு கூறுகிறார்: விஞ்ஞானக் கதைகள் எழுதிய அமெரிக்கப் பெண்ணியவாதிகளைக் குறிப்பிடும்போது அவர்களின் சமகாலத்தவராகிய ரொக்கேயாவைக் குறிப்பிடாமல் இருப்பது பெருந் தவறு. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெண்கள் உரிமைக்காகப் போராடும் விதத்தில் முஸ்லிம் பெண்களுக்கான முதல் பள்ளியை எழுப்பியவர். பெண் மையக் கதைகள் பலவற்றை  எழுதியவர். “சுல்தானாவின் கனவு” என்ற கதையை எழுதியவர். இந்தக் கதை மூலம் ரொக்கேயா முஸ்லிம் பெண்ணிய எழுத்தாளர்களில் ஒருவரானார். அது மட்டுமல்ல. உலகளவில் விஞ்ஞானக் கதை எழுதிய முதல் பெண்ணியவாதிகளில் ஒருவராகிறார். அமெரிக்கர்களே பெண்ணிய சரித்திரத்தில் ரொக்கேயாவை இணைக்கும்போது நம் நாட்டைச் சேர்ந்த அவர்  நம் நாட்டுப் பெண்கள் வாழ்க்கைக்கும் அவர்கள் சரித்திரத்துக்கும் அளித்த பங்களிப்பை நாம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

ரொக்கேயா ரங்பூரில் (தற்போது பங்ளாதேஷில் இருக்கும்) உள்ள பைராபோந்த் என்ற கிராமத்தில் 1880ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி பிறந்தார். பங்ளாதேஷில் பேகம் ரொக்கேயா என்று எல்லோரும் அறியப்பட்டவராய் இருந்தாலும் இலக்கிய உலகில் ரொக்கேயா ஷகாவத் ஹொஸேன் என்றே குறிக்கப்படுகிறார். அவர் திருமதி ஆர்.எஸ்.ஹொஸேன், ரொக்கையா காதுன் அல்லது காதுன் என்றே தன் பெயரை எழுதினார். தன் குடும்பத்தினருக்குக் கடிதம் பெங்காலியில் எழுதும்போது ரொகேயா என்றோ ருகு என்றோ கையெழுத்திட்டார்.    

ரொக்கேயாவின் தந்தை சாஹிருத்தின் மொஹம்மத் அபு அலி ஹைதர் ஸபேர் ஒரு ஜமீந்தார். ஏழு மொழிகள் கற்றவர். ரொக்கேயாவின் அன்னை ராஹதூன்னிஸா ஸபேரா சௌதுரானி பற்றி அதிகம் தகவல்கள் இல்லை அவர் பர்தா முறையை மிகவும் கண்டிப்பான விதத்தில் மேற்கொண்டவர் என்பதைத் தவிர. ரொக்கேயாவுக்கு மூன்று சகோதரர்கள். முகம்மத் இப்ராஹிமபுல் அஸத் ஸபேர், கலிலூர் ரெஹ்மான் அபு ஸைகம் ஸபேர் மற்றும் இஸ்ரேல் அபு ஹஃப்ஸ் ஸபேர். மூன்றாம் சகோதரர் சிறு வயதிலேயே இறந்துவிட்டார். முதல் இரண்டு சகோதரர்களும் நன்றாகக் கல்வி கற்று அரசு பதவிகளில் இருந்தனர். ரொக்கேயாவிற்கு இரு சகோதரிகள். கரிமுனீஸா (வங்காளத்தின் முதல் முஸ்லிம் பெண் கவிஞர் எனலாம்) மற்றும் ஹுமைரா. ரொக்கேயாவின் முன்னோர்கள் இரானிலுள்ள டப்ரிஸிலிருந்து 16வது நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தவர்கள்.

கல்விமானான ரொக்கேயாவின் தந்தை மகன்களைப் படிக்க வைத்தாலும் பெண்களைப் படிக்கவைக்கவில்லை சமுதாயத்துக்குப் பயந்து. பொதுவாகப் பெண் கல்விக்கு எதிராக பல கருத்துகள் நிலவிய காலம் அது. முஸ்லிம் பெண்களுக்கென்று பள்ளிகள் இருக்கவில்லை. 1849இல் பெண்களுக்கென்று நிறுவப்பட்ட பெதுனே ஸ்கூல் இந்து பெண்கள் பள்ளி என்றே அறியப்பட்டது. 1885 வரை அங்கு முஸ்லிம் பெண்கள் படிக்க அனுமதி இருக்கவில்லை. 1939இல் காலனி ஆட்சி கிட்டத்தட்ட முடியும் தறுவாயில்தான் லேடி ப்ராபோர்ன் காலேஜ் நிறுவப்பட்டது. முஸ்லிம் பெண்களுக்காக மட்டுமே அல்ல. அதிக அளவு அவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யும் கல்வி நிறுவனமாக அது அமைந்தது. ரொக்கேயாவின் தந்தை அராபிய மொழியில் இருந்த குரானைப் படிக்க மட்டும்தான் பெண்களை அனுமதித்தார். வீட்டிலேயே படித்துத் தன் சொந்த முயற்சியில் கல்வி கற்றாலும் ரொக்கேயாவுக்கு பாங்லா, ஆங்கிலம், உருது, பெர்சிய, அராபிய  மொழிகள் தெரிந்திருந்தன. கரிமுனீஸாவிடமிருந்துதான் பாங்லா பயின்றார். அண்ணா இப்ராஹிம் ஸபேர் ஆங்கிலம் பயிற்றுவித்தார். இப்ராஹிம் ஒரு முறை படங்கள் போட்ட ஆங்கிலப் புத்தகத்தை ரொகேயாவுக்குத் திறந்து காட்டி, “குட்டித் தங்கையே, இந்த மொழியை மட்டும் நீ கற்றால் உலகின் அனைத்துச் செல்வங்களுக்குமான கதவுகள் உனக்குத் திறக்கும்,” என்றாராம். இரவில் ரகசியமாகவே வகுப்புகள் நடந்தன. பத்மராக் நாவலைத் தன் இந்த அண்ணாவுக்குத்தான் ரொக்கேயா சமர்ப்பித்திருக்கிறார். கரிமுனீஸாவின் தானே படிக்கும் முயற்சிகள் எளிதாக இருக்கவில்லை. அவள் ரகசியமாகப் படிக்க முயற்சிப்பதை அறிந்ததும் கல்வி ”அவளைக் கெடுத்து ஒரு நல்ல குடும்பப் பெண்ணாய் இருப்பதைத் தடுக்கும்” என்று  அவருக்குப் பதினைந்து வயதிலேயே திருமணம் செய்துவிட்டார்கள் பெற்றோர்கள். தன் படிப்பைத் திருமணம் ஆனபின்னும் தன் கணவனின் பள்ளி செல்லும் இளைய தம்பிகளின் பாட புத்தகங்களைப் படித்துத் தொடர்ந்தாள் கரிமுனீஸா. ரொக்கேயாவின் பதினாறாவது வயதில் முதல் மனைவியை இழந்த ஷெகாவத் ஹொஸேனை அவர் மணந்தார். இங்கிலாந்து சென்று படித்தவர் அவர். தன் கணவர் மூலம் பல விஷயங்களை ரொக்கேயா அறிந்துகொள்ள முடிந்தது. ரொக்கேயா ஒரு பெண்கள் பள்ளி நிறுவ பத்தாயிரம் ரூபாயை ஒதுக்கிவைத்தார் அவர் கணவர். 1909இல் அவர் இறந்ததும் ரொக்கேயாவுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் சொத்து கிடைத்ததும் முதலில் 1909இல் பாகல்பூரிலும் பிறகு 1911இல் கல்கத்தாவிலும் பெண்களுக்காக ஒரு பள்ளியை ஆரம்பித்தார். தன் கணவர் பெயரில் தொடங்கிய ஷெகாவத் மெமோரியல் அரசு பெண்கள் பள்ளி என்ற அந்தப் பள்ளி இன்னும் இயங்கிவருகிறது.

1902இல்தான் முதலில் எழுத ஆரம்பித்தார் ரொக்கேயா. அவர் கணவர் மிகவும் அன்பான ஊக்கம் தரும் கணவராக இருந்தாலும் ரொக்கேயாவின் வாழ்க்கையில் பல துன்பங்கள் வந்தன. பிறந்த சில மாதங்களிலேயே குழந்தைகள் மரித்தன. உடல் நலமில்லா கணவரைத் தொடர்ந்து பேண வேண்டியிருந்தது. அப்படியும் சில இடைவெளி இருந்தாலும் அவர் தொடர்ந்து பெண்கள் கல்விப் பிரச்சினைகள் குறித்தும் வேறு பல விஷயங்கள் குறித்தும் எழுதினார். பெண்கள் உரிமைகள் குறித்த அவர் கட்டுரை ஒன்று முடிக்கப்படாமல் அவர் மேசை மேல் இருந்தது அவர் மார்படைப்பினால் ஓரிரவு இறந்தபோது. அனைத்திந்திய முஸ்லிம் லீக், மத்திய முகமதியர் சங்கம், அனைந்திந்திய கல்வி சம்மேளனம் போன்ற அமைப்புகள் இருந்தாலும் இவை அனைத்தும் ஆண்கள் இயங்கிய அமைப்புகளாகவே இருந்தன. முஸ்லிம் பெண்களுக்காக அவர்கள் செயல்பட எந்த அமைப்பும் இருக்கவில்லை. அஞ்சுமன்-இ-கவாதீன்-இ-இஸ்லாம் அலிகரில் இருந்தது. ரொக்கேயாவின் முயற்சியால் இதன் கிளை ஒன்று கல்கத்தாவில் தொடங்கப்பட்டது. பர்தாவில் இருந்த பெண்களை வெளியே கொண்டுவந்து இதில் செயல்பட வைப்பது சுலபமாக இருக்கவில்லை.

முஸ்லிம் பெண்களுக்காக ரொக்கேயா செய்த பல வேலைகள் அவர்களை வெளியே ஓரளவுக்காகவது கொண்டுவந்தது. அவர் அஞ்சுமன் பள்ளியைப் பற்றிக் கண்ட கனவுதான் பத்மராக் நாவலில் வருகிறது. பத்மராக் நாவலில் ஒடுக்கப்பட்டப் பெண்களுக்குப் புகலிடம் அளிக்கும் தாரிணி பவன் உள்ளது. அதில் பெண்கள் துன்பங்களைத் தடுக்கும் சமிதி இயங்குகிறது. எல்லாவிதப் பெண்களுக்குமான இந்த இல்லம் ஓர் அற்புதமான நிறுவனமாக இயங்குகிறது. அது ஒரு கல்வி நிலையமாகவும் தொண்டு நிறுவனமாகவும் பெண்களால் நடத்தப்பட்டுவரும் அதீத கற்பனைவுலகமாக இருக்கிறது. இங்கு பல மதங்கள், பல பிரதேசங்கள், பல இனக்குழுக்கள் இவற்றிலிருந்து ஆணாதிக்க மற்றும் குடும்ப ஒடுக்குமுறைக்கு உள்ளான பெண்கள் இருக்கிறார்கள். கல்வி, கைவேலை, நோயாளிகளையும் கைவிடப்பட்டவர்களையும் பேணல் போன்ற வேலைகளுடன் அது இயங்குகிறது. தாரிணி பவனத்தை நிறுவியவர் தீனதாரிணி என்ற பெயர் கொண்ட ஓர் இளம் விதவை. தீனதாரிணி என்றால் ஏழைகளைக் காப்பவர். தாரிணி என்பது படகோட்டியைக் குறிக்கும். துன்பத்திலிருந்து கரையேற்றும் படகோட்டி. இதைக் குறித்துச் சொல்லும்போது பர்நீதா பாக்சி இதை வெகு அழகாக விளக்குகிறார். தாரிணி, படகோட்டி, என்ற சொல் வங்காளக் கலாசாரத்தில் ஊறிய சொல். ஆன்மிகமும் பக்தியும் கலந்த சொல். கடவுளை தீனதாரிணி என்று அழைக்கும் பாடல்கள் உண்டு. முக்கியமாக இந்தப் பாடல்கள் வயதான பெண்கள் பெரும்பாலும் விதவைகள் பாடும் பாடல்களில் வாழ்க்கை எனும் கடலிலிருந்து அக்கரை சேர்க்கப் பாடும் பாடல்கள். தாரிணி பவனின் ஒரு விளக்கம் நம்மை இக்காலத்துக்குக்கொண்டு வருகிறது: தாரிணி பவனத்தில் இருக்கும் சிலர் சிஸ்டர் என்று அழைக்கப்படுகிறார்கள். Sisters of the Poor (ஏழைகளின் சகோதரிகள்) என்பதன் சுருக்கம். இவர்கள் காவி அல்லது நீல வண்ணத்தில் சீருடை அணிகிறார்கள். அவர்களுக்குத் தனியறை கிடையாது. துறவும் தொண்டும் இணைந்த வாழ்க்கை. அங்கு குஷ்டரோகிகள், வழுக்கி விழுந்த பெண்கள் என்று கருதப்படும் பெண்கள், விதவைகள், ஏழைகள் இவர்களுடன் இருக்கும் தீனதாரிணியும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவள்தான். 1924இல் இதைப் பிரசுரிக்கும்போது இது இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதியது என்கிறார் ரொக்கேயா. அன்னை தெரசாவின் ஆசிரமத்துடன் இந்த தாரிணி பவனத்தை மனத்தில் இணைக்காமல் இருக்க முடிவதில்லை. ஆனால் சேவை செய்த இன்னொரு அன்னையை     இப்படி மனத்தில் இணைக்கும்போதும் சரித்திரத்தை நாம் சிறிது மறக்கிறோம். ரொக்கேயா பல வெளிநாட்டுப் பெண்களை அறிந்திருந்தார். ரொக்கேயா பற்றிய கட்டுரைகளில் படித்த மேலை நாட்டுப் பெண்களிடம் அவருக்கிருந்த நட்பின் மூலம் அவர் மேலை நாட்டுப் பெண்களின் கருத்துகள் மற்றும் இயக்கங்கள் குறித்தும் அறிந்திருக்கலாம் ஆனால் ரொக்கேயாவின் பெண்ணியம் முற்றிலும் நம் மண்ணிலிருந்தே பிறந்தது என்ற கருத்து இருக்கிறது. அது முற்றிலும் உண்மையும் கூட. காரணம் அந்தக் காலகட்டத்தில் பெண்கள் கல்வி குறித்தும் அவர்கள் உயர்வு குறித்தும் சிந்தித்துச் செயல்பட்டவர் பாரதிக்குப் பெண்களைப் பற்றிக் கூறிய சிஸ்டர் நிவேதிதா. அவர் 1898 நவம்பர் பதிமூன்றாம் தேதி கல்கத்தாவில் பக்பஸாரில் பெண்களுக்கான ஒரு பள்ளியைத் துவக்குகிறார். இந்தப் பள்ளியில் பெண்களைச் சேர்க்க அவர் ஒவ்வொரு வீடாகப் போய் பெண்களைப் பள்ளியில் சேர்க்கும்படிச் சொல்கிறார். இந்தப் பள்ளியில் தையல் வேலை, சுகாதாரம், பேணுகை இவை பாடங்களாக இருந்தன. சிஸ்டர் நிவேதிதா குறித்து ரொக்கேயா அறிந்திருக்கக் கட்டாயம் வாய்ப்பு இருக்கிறது. இதை மேலும் உறுதிப்படுத்துவது அவர் “சுல்தானாவின் கனவு” கதையில் வரும் சிஸ்டர் ஸாரா பாத்திரம். சிஸ்டர் நிவேதிதாவுடன் பல முறை பயணித்த, அவருடன் வேலை செய்தவர் கொடையாளியும் எழுத்தாளருமான ஸாரா கேம்பெல் புல் என்ற அமெரிக்கப் பெண்மணி. அவர் புனிதர் ஸாரா என்றே அறியப்பட்டார்.

அப்போதிருந்த சூழலிலும் முஸ்லிம் பெண்களுக்குக் கல்விக்கான தேவையை ரொக்கேயா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். பல நிறுவனங்களையும் இயக்கங்களையும் அமைத்த முஸ்லிம்கள் மிகவும் முக்கியமான பெண் கல்வியைப் புறக்கணிப்பது தவறு என்று கூறியபடியே இருந்தார். பெண்கள் கல்வி பற்றிய ஒரு கட்டுரையில், “தன் சமூகத்தில் உள்ள மக்கள் தொகையில் பாதிப்பேரை அறியாமை எனும் சிறையிலும் தனிமையிலும் அடைத்து வைத்துள்ள ஒரு சமூகம், பெண்கள் கல்வியை ஆண்களுக்கு இணையாக உயர்த்தியுள்ள மற்ற சமூகங்களின் முன்னேற்றத்துடன் இணையாக நடைபோட முடியுமா?” என்று ரொக்கேயா கேட்கிறார்.

பெண்களுக்குக் குடும்பக் கல்வி போதுமென்று மிகப் பெரிய சமூக சீர்திருத்தவாதிகளான கேஷப் சந்திர சென் போன்றவர்கள் சொன்ன போது ரொக்கேயா பெண்களுக்கு  ஆங்கிலக் கல்வி, விஞ்ஞானம் கற்றுத் தர வேண்டும் என்று சொல்லி வந்தார். தாவரவியல், வேதியியல், தோட்டக்கலை, தனிப்பட்ட சுத்தம், சுகாதாரம், உணவு, உடற் பயிற்சி, ஓவியம் மற்றக் கலைகள் எல்லாமே பெண்கள் பயில வேண்டும் என்று கூறியபடி இருந்தார். அவர் கதைகளில் இதன் முழுச் சாயைகளும் உள்ளன. ஆனால் ஷெகாவத் பள்ளியில் அவர் நினைத்ததை எல்லாம் அவரால் செய்ய முடியவில்லை. பள்ளித் திட்டத்தில் உடற் பயிற்சி, கைவேலை, தையல், சமையல், பேணுகை, குடும்பப் பொருளாதாரம், தோட்டக்கலை இவற்றுடன் பாங்லா, ஆங்கிலம், உருது, பெர்சிய, அராபிய மொழிகள் பயிற்சி இவற்றைத்தான் சேர்க்க முடிந்தது.

அவருடைய பெண்ணியம் ஆண்வழி சமுதாயத்தின் பெண்கள் குறித்த கணிப்புகளை மாற்றுவதிலும் பெண்களுக்குக் குடிமை உரிமைகளையும் கல்வி உரிமைகளையும் தருவதிலேயே தீவிரமாக இருந்தது. ஆண்களை மட்டும் குற்றம் சாட்டாமல் பெண்களும் செய்ய வேண்டியவற்றைச் சுட்டிக்காட்டுகிறார் பலமுறை. பெண்கள் சமுதாயத்தின் ஒரு பாதி அவர்கள் பின்தங்கக் கூடாது, ஆண்களுக்கு இணையாகத் திறமைகளை வளர்த்துக்கொண்டு அவர்களுடன் ஆன்மிகத்திலும் நடைமுறை வாழ்விலும் உடன்செல்ல வேண்டும் என்கிறார். பெண்களை வளரவிடாத ஆண்களை, அவர்கள் சுதந்திரத்துக்குக் குறுக்காக நிற்கும் ஆண்களை விவேகமற்றவர்கள் என்றுதான் சொல்கிறார். வேறு வசை மொழிகளைப் பிரயோகிப்பதில்லை. ஆண்கள் தங்கள் பெண்களுக்கு தங்க நகைகளை அல்ல அறிவு என்னும் நகையைப் பூட்ட வேண்டும் என்கிறார்.

ஆணாதிக்க மனோபாவத்தில் இஸ்லாத்தை அர்த்தப்படுத்துபவர்களை ரொக்கேயா விமர்சிக்கிறார். இஸ்லாத்தைப் பால்நிலை நியாயம் என்ற நோக்கில் பார்க்கிறார். அவர் மதத்தை அல்ல கலாசார ரீதியில் அது இயங்கும் விதத்தை விமர்சிக்கிறார். இஸ்லாத்துக்குப் பொறுப்பானவர்களாகத் தங்களை நினைப்பவர்களையும் அவர்கள் பெண்கள் உரிமைகளைத் தவிர்த்து ஆணாதிக்க அதிகாரத்தை சிபாரிசு செய்வதையும் சுட்டிக்காட்டுகிறார். உண்மையான இஸ்லாத்தின் மதிப்பீடுகள் திரும்ப வர வேண்டும்  என்று போராடுகிறார். சிசுக்கொலையும் பெண்கள் ஒடுக்குமுறையும் இருந்த அராபிய நாட்டில் முகமது நபி அவர்கள் பெண்களுக்குக் கைகொடுக்க வந்தார். பெண்களை மதிக்க வேண்டும் என்றார். தன் மகள் பாத்திமாவிடம் அன்பு செலுத்தி மகள்களை நடத்தும் முறையைச் சொல்லித் தந்தார். அத்தகைய அன்பு அபூர்வமானது; நபிகள் போன்ற ஒருவர் இல்லாததால்தான் பெண்கள் இந்தக் கீழ் நிலையில் இருக்கிறார்கள் என்றெழுதுகிறார்.

ரொக்கேயாவுக்கு எதிர்ப்பு இருந்ததா என்று கேட்டால் கட்டாயம் இருந்தது. ஆண்களுடன் பேசும்போது அவர் பர்தா முறையை அனுசரித்தார். இருந்தாலும் எதிர்ப்பு இருந்தது. இந்தக் காலத்திலேயே ஃபட்வா தருபவர்களும் பெண்களை நடத்தை கெட்டவர்கள் என்று பழிபோட்டு அடித்துக் கொல்பவர்களும் பெண்ணியத்துக்குப் பதிலாக பெண்மாண்பியம் (Womanism)   இல்வாழ்வியம் (Familyism) இவற்றை உயர்த்துவோம் என்று சொல்பவர்களும் இருக்கும்போது அப்போது இல்லாமல் இருந்திருப்பார்களா? அவரை நடத்தை கெட்ட பெண்களுடன் இருப்பவர் என்றார்கள். மதத்தின் எதிரி என்றவர்களும் உண்டு. ஆனால் அவருக்கு அவர் கணவரின் முழு ஆதரவு இருந்தது. ”சுல்தானாவின் கனவு” கதையை எழுதி கணவருக்குக் காண்பித்ததும் அதை ஒரே மூச்சில் படித்த அவர் அது ஆண்வழி சமுதாயத்தின் மேல் தீர்த்துக்கொண்ட கடும் வஞ்சம் என்று விட்டு அதைப் பிரசுரிக்க உற்சாகம் காட்டினார். சென்னையிலிருந்து வந்த Indian Ladies’ Magazineஇல் அதைப் பிரசுரிக்க ஊக்குவித்தது அவர்தான்.

கணவரின் ஆதரவைத் தவிர தனியாகப் போராட ரொக்கேயாவிடம் முதிர்ந்த அறிவும், கனிந்த மனமும் நியாயமான கோபமும் இருந்தது.  மதம், வாழ்க்கை, பெண்கள் இவற்றைக் குறித்த அபூர்வத் தொலைநோக்கு இருந்தது ரொக்கேயாவின் வாழ்க்கையிலும் அவர் எழுத்துகளிலும். பத்மராக் நாவலின் முன்னுரையில் அவர் எழுதியிருப்பது எக்காலத்துக்கும் பொருந்தும் என்று தோன்றுகிறது. தன் அண்ணா தன்னிடம் கூறிய கதை ஒன்றை நினைவு கூறுகிறார்:

மதத்தைக் குறித்து அறிய தாகித்துப் போன ஒருவன் ஒரு தர்விஷிடம் (கடுநோன்புடைய  இஸ்லாமியத்  துறவி)  யோகம் பயிலப் போகிறான். அவர் அவனிடம் என் குருவிடம் போகலாம் என்கிறார். அவர் குரு ஒரு இந்து சந்நியாசி. நான் உனக்கு என்ன சொல்ல முடியும்? என் குருவிடம் போகலாம் என்கிறார் அவர். அவர் குரு ஒரு முஸ்லிம் தர்விஷ். அவரிடம் எப்படி இந்துக்களும் முஸ்லிம்களும் இப்படி உறவாட முடிகிறது என்றதும் அவர் சொல்கிறார்: மதம் என்பது ஒரு மூன்றடுக்கு மாளிகை. கீழ்த் தளத்தில் பல அறைகள் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கிறித்துவர்களுக்கும். பிராமணர்கள்,  சூத்திரர்கள், ஷியா, ஸுன்னி, ஹனாஃபி, ஸூஃபி, கத்தோலிக்கர், ப்ராடஸ்டெண்ட் என்று பல பிரிவுகள். இரண்டாம் தளத்தில் எல்லா முஸ்லிம்களும் எல்லா இந்துக்களும் இருப்பார்கள். மூன்றாம் மாடியில் பிரிவுகளே இல்லாத பெரிய அறைதான் இருக்கும். அங்குள்ளவர்கள் இந்துக்களோ முஸ்லிம்களோ இல்லை. வெறும் மனிதர்கள். அவர்கள் வழிபடுவது ஒரு கடவுளை. ஆழமாக யோசித்தால் எதுவும் இருப்பதில்லை. எல்லாமே இல்லாமல் போகிறது. கடவுள் மட்டும்தான் எஞ்சுகிறார்.

அதுதான் ரொக்கேயாவின் கனவாக இருந்திருக்கலாம். நம் காலத்தில் இருந்திருக்க வேண்டியவர்.

இனி அவருடைய “சுல்தானாவின் கனவு” கதையின் மொழிபெயர்ப்பு.

ஆதார நூல்களும் கட்டுரைகளும்:

1.  Md. Mahmudul Hasan, International Islamic University, Malaysia, “Commemorating Rokeya Sakhawat Hossain and Contextualising her Work in South Asian Muslim Feminism”

 ASIATIC, VOLUME 7, NUMBER 2, DECEMBER 2013

2. Barnita Bagchi, “Carrying Over: Analysing Female Utopias and Narratives of Female Education from 17th-century France to 18th-Century Britain and 20th century India” Invited paper at the seminar ‘Narratives: A Cross-Cultural Perspective’ (lead-up conference to the international Katha conference ‘Forging Identities, Linking Diversities’, New Delhi, January 2004), SIES College, Mumbai, 7 October, 2003. Submitted as IGIDR Working Paper.

3. Barnita Bagchi, ed., Rokeya Sakhawat Hossain. Sultana’s Dream and Padmarag : Two Feminist Utopias ( Penguin, 2005)

.

[ரொக்கேயா ஷெகாவத் ஹொஸேன் (1880-1932) எழுதிய ”சுல்தானாவின் கனவு” கதை சென்னையிலிருந்து வெளியிடப்பட்டThe Indian Ladies’ Magazine பத்திரிகையில் 1905 இல் வெளியிடப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கதை. இந்தப் பத்திரிகை 1901-1918 வரையிலும் பிறகு 1927-1938 வரையிலும்  கமலா சத்தியநாதனால் வெளியிடப்பட்ட பத்திரிகை. ஹானா ரத்னம் கிருஷ்ணம்மா சென்னை கிறித்துவக் கல்லூரியின் முதல் முதுகலைப் பட்டம் பெற்ற பெண். இவர் சத்தியநாதனைத் திருமணம் செய்துகொண்டபோது தன் முதல் மனைவி கிருபாபாய் எழுதி, 1893இல் வெளியிடப்பட்ட கமலா நாவலின் நினைவாக ஹானாவின் பெயரை கமலா என்று மாற்றினார். இந்த ஒரு கதையின் வெளியீட்டில் இவ்வளவு பெண்கள் சரித்திரம் ஒளிந்திருக்கிறது. மொழிபெயர்ப்பதற்காக நான் தேர்ந்தெடுத்திருக்கும் இந்தக் கதையின் வடிவம் ஸ்பாரோ ஆவணக்காப்பகத்தில் ஆணவப்படுத்தப்பட்டுள்ள பெங்வின் நிறுவனம் 2005இல் வெளியிட்ட பர்நீதா பாக்சி பதிப்பாசிரியராக இருந்து கொண்டு வந்த Sultana’s Dream and Padmarag: Two Feminist Utopias by Rokeya Sakhawat Hossain புத்தகத்திலிருந்து எடுத்தது.]

சுல்தானாவின் கனவு

ரொக்கேயா ஷெகாவத் ஹொஸேன்

ஒரு நாள் நான் படுக்கையறையில் சாய்வு நாற்காலியில் ஓய்வெடுத்தபடி இந்தியப் பெண்மையின் நிலை குறித்து  ஏதோ யோசித்துக்கொண்டிருந்தேன். நான் தூங்கிவிட்டேனா இல்லையா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. என் ஞாபகத்தில் நான் விழித்துக்கொண்டுதான் இருந்தேன். ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னும் நிலவு ஒளிர்ந்த வானத்தைப்  பார்த்தேன்.  

திடீரென்று என் முன்னால் ஒரு பெண்மணி நின்றாள். எப்படி உள்ளே வந்தாள் என்று தெரியவில்லை. என் தோழி சிஸ்டர் ஸாராவாக இருக்கும் என்று நினைத்தேன்.

 “குட் மார்னிங்” என்றாள் சிஸ்டர் ஸாரா. நட்சத்திரங்கள் மின்னிய இரவு அது காலை இல்லை. இதை நினைத்து உள்ளூரச் சிரித்துக்கொண்டேன். இருந்தாலும் பதில் சொன்னேன். “எப்படி இருக்கிறாய்?”

 “நன்றாகத்தான் இருக்கிறேன். தயவுசெய்து வெளியே வந்து நம் தோட்டத்தைப் பார்க்கிறாயா?”

நான் திறந்திருந்த சன்னல் வழியாக மீண்டும் நிலவைப் பார்த்தேன். அந்த வேளையில் வெளியே போவது தப்பொன்றுமில்லை என்று தோன்றியது. அந்தச் சமயத்தில் வேலைக்காரர்கள் உறங்கியிருப்பார்கள். சிஸ்டர் ஸாராவுடன் நான் மகிழ்வுடன் உலாத்தலாம்.

டார்ஜீலிங்கில் இருந்தபோது சிஸ்டர் ஸாராவுடன் உலாத்தப் போயிருக்கிறேன். அங்கிருந்த தாவரவியல் சார்ந்த பூங்காவில் கை கோர்த்துக்கொண்டு எதையாவது பேசிக்கொண்டு நடப்போம். இப்படி ஏதாவது பூங்காவுக்கு என்னை அழைத்துப்போக சிஸ்டர் ஸாரா வந்திருக்கிறாள் என்று நினைத்து உடனே ஒப்புக்கொண்டு அவளுடன் வெளியே வந்தேன்.

நடக்கும்போது வெளியே அருமையான பகல் வேளையாக இருக்கக் கண்டு ஆச்சரியப்பட்டேன். நகரம் முழுவதுமாக விழித்துக்கொண்டு தெருக்களில் ஜன நடமாட்டம் பெருகியிருந்தது. எனக்குச் சற்று நாணமாக இருந்தது இப்படி பளீரென்ற பகலில் தெருவில் உலாத்த. ஆனால் ஓர் ஆணைக்கூடக் காணவில்லை. 

கடந்துபோன சிலர் என்னைக் கேலி செய்தார்கள்.  அவர்கள் பேசியது புரியாவிட்டாலும் அவர்கள் கேலி செய்கிறார்கள் என்பது புரிந்தது. என் தோழியைக் கேட்டேன்: “என்ன சொல்கிறார்கள்?”

 “நீ மிகவும் ஆண்தன்மையுடன் இருப்பதாகக் கூறுகிறார்கள் இந்தப் பெண்கள்.”

 “ஆண்தன்மையா? அப்படியென்றால்?”

 “நீ ஆண்களைப்போல் பயமும் கூச்சமும் உள்ள சுபாவத்துடன் இருக்கிறாய் என்ற அர்த்தத்தில் சொல்கிறார்கள்.”

 “ஆண்களைப்போல் பயமும் கூச்சமுமா?” வேடிக்கையாகத்தான் இருந்தது இப்படிச் சொல்வது. என்னுடன் வருவது சிஸ்டர் ஸாரா இல்லை வேறு யாரோ அறிமுகமில்லாத நபர் என்று தெரிந்ததும் சற்றுப் பதட்டமாக உணர்ந்தேன். எவ்வளவு முட்டாள் நான் இவளை என் தோழி சிஸ்டர் ஸாரா என்று தவறாகப் புரிந்துகொள்ள!

கைகோர்த்துக்கொண்டு நடந்துகொண்டிருந்ததால் என் விரல்களின் நடுக்கத்தை அவள் உணர்ந்திருக்க வேண்டும்.

மிகவும் அன்புடன், ”என்னம்மா விஷயம்?” என்று கேட்டாள். “எனக்குக் கூச்சமாக இருக்கிறது. நான் பர்தா அணியும் பெண். இப்படிப் பர்தா இல்லாமல் போவது எனக்கு வழக்கமில்லை” என்றேன் மன்னிப்புக் கேட்கும் தொனியில்.  

 “இங்கே ஆண்கள் எதிரே வந்து விடுவார்கள் என்று பயப்படாதே. இது பெண்கள் நாடு. பாவமும் தீங்கும் இல்லாத நாடு. நற்குணப் பெண்மையே இங்கு ஆட்சி புரிகிறது.”

மெல்ல மெல்ல சுற்றுப்புறக் காட்சிகளை ரசிக்க ஆரம்பித்தேன். நிஜமாகவே மிகவும் அழகாக இருந்தது. புல் படுக்கை ஒன்றை வெல்வெட் மெத்தை என்று தவறாக எண்ணிவிட்டேன். ஒரு மிருதுவான கம்பளத்தின் மேல் நடப்பதுபோல் உணர்ந்ததும் கீழே பார்த்ததும் அது பாசியும் மலர்களும் படர்ந்த தரை என்று புரிந்தது.

”எவ்வளவு அழகாக இருக்கிறது!” என்றேன்.

 “பிடித்திருக்கிறதா?” என்று கேட்டாள் சிஸ்டர் ஸாரா.(நான் அவளை சிஸ்டர் ஸாரா என்றே அழைத்தேன். அவளும் என்னை என் பெயர் கூறியே பேசினாள்).

 “மிகவும் பிடித்தது. ஆனால் மொட்டுக்களின் மேலும் அழகான மலர்கள் மேலும் கால் வைத்து நடக்கப் பிடிக்கவில்லை” என்றேன்.

“அதனாலென்ன சுல்தானா? நீ அதன் மேல் நடப்பதால் எந்தத் தீங்கும் நேராது. அவை தெருப் பூக்கள்தான்.”

 “இந்த இடமே ஒரு தோட்டம் போல் இருக்கிறது. அவ்வளவு  நேர்த்தியுடன் ஒவ்வொரு செடியையும் வைத்திருக்கிறாய்” என்றேன் மெச்சும் தொனியில்.

 “உன் கல்கத்தாவையும் ஒரு நல்ல தோட்டமாக்க முடியும் உங்கள் நாட்டில் இருப்பவர்கள் மனம் வைத்தால்” என்று கூறினாள்.

 “எத்தனையோ செய்ய வேண்டிய விஷயங்கள் இருக்கும்போது தோட்டக் கலை மேல் இவ்வளவு கவனம் செலுத்துவது வீண் என்று அவர்கள் நினைக்கலாம்.”

 “இதை விட நல்ல சாக்கு அவர்களுக்குக் கிடைக்காது” என்றாள் புன்னகையுடன்.

ஆண்கள் எங்கே என்றறியும் ஆவல் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான பெண்களைப் பார்த்தேன். ஆண் ஒருவன் கூடக் கண்ணில் படவில்லை.

”ஆண்கள் எங்கே?” என்று கேட்டேன் அவளிடம்.

 “அவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள்” என்றாள்.

 “இருக்க வேண்டிய இடத்தில் என்றால்?”

 “ஓ, சொல்லாதது என் தவறுதான். இங்கே வந்ததே இல்லையே நீ? எங்கள் பழக்க வழக்கங்கள் உனக்கு எப்படித் தெரியும்? நாங்கள் ஆண்களை வீட்டுக்குள்தான் அடைத்து வைக்கிறோம்.”

 “எங்களை ஜெனானாவில் வைப்பது போலவா?”

 “அப்படியேதான்.”

 “நல்ல வேடிக்கை!” என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிஸ்டர் சாராவும் சிரித்தாள்.

 “அன்பு சுல்தானா, எந்தத் தீங்கும் செய்யாத பெண்களை அடைத்து வைத்து ஆண்களைச் சுதந்திரமாக அலைய விடுவது எந்த வகையிலும் நியாயமில்லை.”

 “ஏன்? ஜெனானை விட்டு வெளியே வருவது எங்களுக்கு ஆபத்தில்லையா? நாங்கள் இயற்கையிலேயே பலவீனமானவர்கள்.”

 “ஆமாம் ஆண்கள் தெருவில் இருக்கும் வரை வெளியே வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லைதான். ஒரு காட்டு மிருகம் சந்தையில் நுழைந்துவிட்டாலும் பாதுகாப்பு இல்லைதான்.”

”நிச்சயமாகப் பாதுகாப்பு இல்லைதான்.”

 “பைத்தியக்கார விடுதியிலிருந்து சில பைத்தியங்கள் தப்பி வந்து தெருவில் உள்ள குதிரைகள், ஆண்கள் மற்ற மிருகங்கள் இவர்களிடம் குறும்பு செய்ய ஆரம்பித்தால் உங்கள் நாட்டினர் என்ன செய்வார்கள்?”

 “அவர்களைப் பிடித்து மீண்டும் அடைப்பார்கள்.”

 “நன்றி இதைச் சொன்னதற்கு. பைத்தியம் அல்லாதவர்களை உள்ளே அடைத்து பைத்தியங்களை வெளியே விடுவது சரியில்லை என்று நினைக்கிறாயா?’

 “கட்டாயம் சரியில்லைதான்” என்றேன் சற்றுச் சிரித்தபடி.

 “பார்க்கப் போனால் உங்கள் நாட்டில் இதைத்தானே செய்கிறார்கள்? தொல்லை தரும் அல்லது தொல்லை தரக் கூடிய ஆண்கள் சுதந்திரமாக வெளியே இருக்க, அப்பாவியான பெண்கள் ஜெனானாவில் அடைத்து வைக்கப்படுகிறார்கள்! எந்த வகைப் பயிற்சியும் இல்லாமல் வெளியே இருக்கும் அந்த ஆண்களை எப்படி நம்ப முடியும்?”

 “எங்கள் சமூக விஷயங்களில் நாங்கள் எதையும் பேசவோ செய்யவோ முடியாது. இந்தியாவில் ஆண்தான் ஆண்டை, எஜமானன் எல்லாம். எல்லா அதிகாரத்தையும் உரிமைகளையும் தன்வசப்படுத்திக்கொண்டு ஆண் பெண்களை ஜனானாவில் அடைத்து வைத்திருக்கிறான்.”

 “இப்படி அடைத்து வைக்கப்படுவதை ஏன் அனுமதிக்கிறீர்கள்?”

 “ஏனென்றால் வேறு வழியில்லை. அவர்கள் பெண்களைவிட அதிகப் பலமுடையவர்கள்.”

 “ஒரு சிங்கம் மனிதனை விடப் பலமானதுதான். ஆனால் அது மனிதர்களை ஆள்வதில்லை, இல்லையா? உங்களுக்கு நீங்களே செய்ய வேண்டிய கடமையைக் கவனிக்காமல் உங்கள் இயற்கை உரிமைகளை இழந்து, உங்கள் நலன் பற்றி நினைக்காமல் கண்களை மூடிக்கொண்டிருக்கிறீர்கள்.”  

 “எனதருமை சிஸ்டர் ஸாரா, நாங்களே எல்லாம் செய்துகொண்டால் ஆண்கள் என்னதான் செய்வார்களாம்?”

 “அவர்கள் எதையும் செய்யக் கூடாது. மன்னித்துக்கொள். அவர்கள் எதற்கும் லாயக்கில்லாதவர்கள். அவர்களைப் பிடித்து ஜெனானாவில் அடைப்பதுதான் முறை.”

 “அவர்களைப் பிடித்து நான்கு சுவர்களுக்குள் அடைப்பது சுலபமா? அப்படிச் செய்தாலும் அவர்கள் அரசாங்க வியாபார வேலைகளும் ஜெனானாவுக்குள் போய்விடுமா?”

சிஸ்டர் ஸாரா பதில் கூறவில்லை. அழகாகப் புன்னகைத்தாள். இந்தக் கிணற்றுத் தவளையுடன் விவாதிப்பது வீண் என்று நினைத்திருக்கலாம்.

இதற்குள் சிஸ்டர் ஸாராவின் வீட்டை எட்டிவிட்டோம். இதய வடிவிலான ஒரு தோட்டத்தினுள் அவள் வீடு இருந்தது. இரும்புத் தகடு வேய்ந்த கூரையுடைய பங்களா அது. பணக்காரர் வாழும் எங்கள் கட்டடங்களை விட அது குளுமையாகவும் நன்றாகவும் இருந்தது. தட்டுமுட்டு சாமான்கள் எல்லாம் அதனதன் இடத்தில் இருக்க எவ்வளவு கச்சிதமாகவும், நேர்த்தியாகவும் அந்த வீடு இருந்தது என்பதைக் கூற எனக்குச் சொற்கள் இல்லை.

நாங்கள் அருகருகே அமர்ந்துகொண்டோம். உள்ளறையிலிருந்து பூத்தையல் வேலை செய்த துணி ஒன்றைக் கொண்டுவந்து அதில் புதிய பூவேலை செய்யலானாள்.

 “பின்னல் வேலையும் தையல் வேலையும் தெரியுமா உனக்கு?” என்று கேட்டாள்.

 “தெரியும். எங்கள் ஜெனானாவில் செய்வதற்கு வேறு எதுவும் இல்லை.”

 ‘நாங்கள் எங்கள் ஜெனானவில் இருப்பவர்களிடம் பூத்தையல் வேலை செய்யும் வேலையை நம்பி ஒப்படைக்க மாட்டோம்!” என்றாள் சிரித்தபடி. “ஏனென்றால் ஊசியில் நூல் கோர்க்கும் பொறுமை ஆணுக்குக் கிடையாது.”

சுற்றிலும் டீப்பாய்களின் மேல் இருந்த பூத்தையல் வேலைகளைக் காட்டி, “இதையெல்லாம் நீயா செய்தாய்?” என்று கேட்டேன்

 “ஆமாம்”

 “எப்படி உனக்கு நேரம் கிடைக்கிறது? அலுவலக வேலையும் நீ கவனிக்க வேண்டுமே? இல்லையா?”

 “நாள் முழுவதும் சோதனைக் கூடத்தில் இருக்க மாட்டேன். என் வேலையை இரண்டு மணி நேரத்தில் முடித்துவிடுவேன்.”

 “இரண்டு மணி நேரத்திலா? எப்படி முடியும்? எங்கள் நாட்டில் அதிகாரிகள்—நீதிபதிகளையே எடுத்துக்கொள்ளேன்—நாளுக்கு ஏழு மணி நேரம் வேலை செய்கிறார்கள்.”

 “அவர்களில் சிலர் வேலை செய்வதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் ஏழு மணி நேரம் வேலை செய்வதாகவா நினைக்கிறாய்?”

 “நிச்சயம் செய்கிறார்கள்.”

 “இல்லை அன்பு சுல்தானா, அவர்கள் செய்வதில்லை. புகை பிடிப்பதிலேயே அவர்கள் பொழுது கழிகிறது. அலுவலக நேரத்தில் சிலர் சுருட்டு இரண்டு மூன்று குடிப்பார்கள். வேலை பற்றி அதிகம் பேசுவார்கள். செய்வதென்னவோ குறைவுதான். ஒரு சுருட்டு பிடிக்க அரை மணி ஆகிறது என்று வைத்துக்கொள். ஆண் ஒருவன் பனிரெண்டு சுருட்டு பிடித்தால், பார்த்துக்கொள், அவன் புகை பிடிப்பதிலேயே ஆறுமணி நேரம் வீணடிக்கிறான்.”  

பலவற்றைப் பற்றிப் பேசியபோது அங்கு ஒரு வித தொற்று நோயும் இல்லை என்பது தெரிந்தது. நமக்கு இருப்பதைப் போல் கொசுத் தொல்லையும் இல்லை. பெண்கள் நாட்டில் எப்போதாவது நடக்கும் ஏதாவது விபத்தைத் தவிர யாரும் இளமையில் மரிப்பதில்லை என்று அறிந்ததும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.

 “எங்கள் சமையலறையைப் பார்க்க விருப்பமா?” என்று கேட்டாள்.

”விருப்பம்தான்” என்றதும் சமையலறையைப் பார்க்கப் போனோம். நான் போகும் முன் அங்கிருந்த ஆண்களை அங்கிருந்து அகலச் சொல்லியிருந்தார்கள் என்பதைச் சொல்ல வேண்டிய தேவையில்லை. அழகான ஒரு காய்கறித் தோட்டத்தில் அமைந்திருந்தது அந்தச் சமையலறை. ஒவ்வொரு காய்கறிக் கொடியும், தக்காளிச் செடியுமே ஓர் அணிமணியாக இருந்தது. சமையலறையில் புகையோ புகைபோக்கியோ இருக்கவில்லை. சுத்தமாக வெளிச்சத்துடன் இருந்தது. சன்னல்கள் சிறு பூந்தோட்டங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கரியோ நெருப்போ எங்கும் தெரியவில்லை.

 “எப்படிச் சமைக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

 “சூரிய வெப்பத்தினால்தான். சூரிய ஒளியையும் வெப்பத்தையும் சேகரித்து வைத்துச் செலுத்தும் குழாய்களையும் காட்டினாள். உடனே எதையோ சமைத்தும் காண்பித்தாள்.   

வியந்துபோய், “சூரிய வெப்பத்தை எப்படிச் சேகரித்துச் சேமித்து வைக்கமுடிந்தது?” என்றேன்.

 “எங்கள் கடந்த சரித்திரத்தை உனக்குக் கொஞ்சம் சொல்கிறேன். முப்பது ஆண்டுகளுக்கு முன் எங்கள் தற்போதைய அரசிக்கு பதிமூன்று வயதாகும்போது அவள் ராணியானாள். பெயருக்குத்தான் அவள் அரசி. பிரதம மந்திரிதான் அரசாட்சி செய்தார்.

 “எங்கள் ராணிக்கு விஞ்ஞானம் மிகவும் பிடிக்கும். நாட்டிலுள்ள எல்லாப் பெண்களும் கல்வி கற்க வேண்டும் என்றொரு அரசாணையைச் சுற்றறிக்கையாக அனுப்பினார். அதன்படி பல பெண்கள் பள்ளிகள் நிறுவப்பட்டு அரசு உதவியுடன் செயல்படத் தொடங்கின. கல்வி எல்லாப் பெண்களையும் எட்டியது. மிக இளம் வயதுத் திருமணமும் தடை செய்யப்பட்டது. இருபத்தொன்று வயதுக்கு முன்னால் திருமணம் செய்துகொள்ள எந்தப் பெண்ணுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த மாற்றம் வரும் முன் நாங்கள் எல்லோரும் கடுமையான பர்தாவில்தான் இருந்தோம் என்பதையும் நான் உனக்குச் சொல்ல வேண்டும்.”

 “எல்லாமே தலைகீழாகிவிட்டது” என்று சிரித்துக்கொண்டே இடைமறித்தேன்.

 “ஆனால் ஒதுக்கிவைப்பு என்னவோ அதே மாதிரிதான். சில ஆண்டுகளில் தனி பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அங்கு ஆண்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை” என்றாள்.

 “எங்கள் அரசி இருக்கும் தலைநகரத்தில் இரண்டு பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஒரு பல்கலைக்கழகம் அற்புதமான ஒரு பலூனைக் கண்டுபிடித்து அதில் பல குழாய்களை இணைத்தது. மேகங்களுக்கு மேல் இந்த பலூனைப் பறக்காமல் வைத்திருந்து, வளி மண்டலத்திலிருந்து தேவையான அளவு நீரைச் சேகரிக்க முடிந்தது. பல்கலைக்கழகத்தினர் தொடர்ந்து நீரைச் சேகரித்ததால் மேகங்கள் மூட்டம் போடவில்லை. அந்த அதிபுத்திசாலி கல்லூரி முதல்வர் மழையை நிறுத்தி அதனால் வரும் புயலையும் நிறுத்திவிட்டார்.”

 “நிஜமாகவா? இங்கே சகதி ஏன் இல்லை என்று இப்போதுதான் புரிகிறது. குழாயில் நீரை எவ்வாறு இப்படிச் சேமித்து வைக்கிறார்கள் என்பது எனக்குச் சரியாக விளங்கவில்லை. எப்படி அது சேகரிக்கப்பட்டுச் சேமிக்கப்படுகிறது என்று அவள் விளக்கினாள் என்றாலும் விஞ்ஞான அறிவு எனக்கு அதிகம் இல்லாததால் எனக்குப் புரியவில்லை. அவள் மேலும் கூறினாள். “இன்னொரு பல்கலைக் கழகத்துக்கு இந்தக் கண்டுபிடிப்பு பற்றித் தெரிந்ததும் அவர்களுக்குப் பொறாமை தாங்கவில்லை. உடனே இதை விட அபூர்வமாக ஒன்றைச் செய்ய முயற்சித்தார்கள். சூரிய வெப்பத்தை எத்தனை வேண்டுமோ அத்தனை சேகரிக்கும் கருவி ஒன்றை அவர்கள் கண்டுபிடித்தார்கள். சூரிய வெப்பத்தைச் சேகரித்து வைத்து அனைவரின் தேவைக்கேற்ப வினியோகித்தார்கள்.

பெண்கள் விஞ்ஞான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தபோது, இந்த நாட்டின் ஆண்கள் தங்கள் படைபலத்தைப் பெருக்கிக்கொண்டிருந்தார்கள். பெண்கள் பல்கலைக்கழகங்கள்  வளி மண்டலத்திலிருந்து நீரைச் சேகரிக்கிறது, சூரிய வெப்பத்தைச் சேகரிக்கிறது என்று கேள்விப்பட்டதும் அவர்கள் பல்கலைக்கழகத்தினரைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்கள். அத்தனையும் ”உணர்ச்சிப் பசப்புள்ள கொடுங்கனவு” என்றார்கள்.

 “உங்கள் வெற்றிகள் அற்புதமானவைதாம். ஆண்களை ஜனானாவில் எப்படி வைத்தீர்கள் என்பதைச் சொல்லேன். அவர்களை முதலில் பொறி வைத்துப் பிடித்தீர்களா?”

 “இல்லை.”

 “அவர்களே விருப்பப்பட்டு சுதந்திரமாகத் திரியும் வாழ்க்கையை ஒப்படைத்துவிட்டு ஜனனாவில் அடைபட்டிருக்கமாட்டார்கள்! அவர்களை அடக்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.”

 “ஆமாம். அவர்களை அடக்கினோம்!”

 “யார் செய்தார்கள்? பெண் வீரர்களாய் இருக்கும்.”

 “இல்லை, அதைச் செய்தது போர்க்கருவிகளால் இல்லை.”

 “ஆமாம். அப்படி இருந்திருக்க முடியாது ஏனென்றால் ஆண்களின் போர்க்கருவிகள் பெண்களுடையதை விடப் பலமானவை. பிறகு எப்படித்தான் செய்தீர்கள்?”

 “மூளையினால்தான்.”

 “அவர்கள் மூளை கூட பெண்களுடையதை விட பெரிது. அதிக எடையுள்ளது. இல்லையா?

 “ஆமாம். அதனால் என்ன? யானைக்குக் கூடத்தான் ஆணை விட பெரிய, அதிக எடையுள்ள மூளை இருக்கிறது. இருந்தாலும்  ஆண் யானையைச் சங்கிலியில் கட்டி வேலை வாங்கவில்லையா?”

 “மிகச் சரியாகச் சொன்னாய்! எப்படித்தான் இதெல்லாம் நடந்தது, சொல்லேன். என்னால் ஆவலை அடக்க முடியவில்லை!”

 “பெண்களின் மூளை ஆண்களுடையதை விட ஒரளவு வேகமாகச் செயல்படுகிறது. பத்தாண்டுகள் முன்பு படை அதிகாரிகள் எங்கள் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை ”உணர்ச்சிப் பசப்புள்ள கொடுங்கனவு” என்றபோது சில இளம் வயதுப் பெண்கள் அவர்களுக்குத் தகுந்த பதில் சொல்ல விரும்பினார்கள். ஆனால் இரு பல்கலைக் கழகங்களின்  முதல்வர்களும் இதைச் சொல்லால் அல்ல, சந்தர்ப்பம் வரும்போது செயலால் காட்டுவோம் என்று கூறி அவர்களைத் தடுத்தார்கள். அந்தச் சந்தர்ப்பம் வர வெகு நாள் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை.”

 “பிரமாதம்!” என்று கூறி கை தட்டினேன். “இப்பொது அந்தக் கர்வக்கார கனவான்கள் உணர்ச்சிப் பசப்புள்ள கனவுளைக் கண்டுகொண்டிருக்கிறார்கள்!”

 “சில நாட்களிலேயே, அண்டை நாட்டிலிருந்து சிலர் வந்து எங்கள் நாட்டில் அடைக்கலம் புகுந்தார்கள். ஏதோ அரசியல் குற்றம் செய்துவிட்டுத் தொல்லையில் அகப்பட்டுக்கொண்டிருந்தார்கள். நல்லாட்சியைவிட அதிகாரத்தில் அக்கறை கொண்டிருந்த அவர்கள் அரசன் கருணை மிகுந்த எங்கள் அரசியிடம் அவர்களை அவர்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கும்படிக் கேட்டார். அகதிகளை வெளியேற்றுவது அவள் லட்சியத்துக்குப் புறம்பானது என்று கூறி எங்கள் ராணி மறுத்தார். மறுப்பை எதிர்த்து அவர் எங்கள் நாட்டின் மீது போர் தொடுத்தார்.”

 “எங்கள் படையதிகாரிகள் பொங்கியெழுந்து எதிரியை எதிர்கொள்ளப் புறப்பட்டார்கள். ஆனால் எதிரியின் பலமோ வெகு அதிகமாக இருந்தது. எங்கள் படை வீரர்கள் வீரத்துடன்தான் சண்டை போட்டார்கள். அதையும் மீறி எதிரியின் படை எங்கள் நாட்டினுள் அடி மேல் அடி வைத்துப் பிரவேசிக்க ஆரம்பித்தது.”

“அநேகமாக எல்லா ஆண்களுமே போரில் சண்டையிடப் போயிருந்தார்கள். பதினாறு வயதுப் பையன் கூட வீட்டில் இருக்கவில்லை. எங்கள் வீரர்களில் பலர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் துரத்தப்பட்டு எதிரி எங்கள் நாட்டிலிருந்து இருபத்தைந்து மைல் மட்டுமே தூரத்துக்கு வந்தாகிவிட்டது.”

 “நாட்டைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூற பல அறிவில் சிறந்த பெண்கள் எங்கள் அரசியின் மாளிகையில் கூடினார்கள். சிலர் வீரர்களைபோல் சண்டையிடுவோம் என்றார்கள். கத்தி, துப்பாக்கி இவைகளுடன் சண்டையிடப் பெண்களுக்குப் பயிற்சி இல்லை, போர்கருவிகளை உபயோகித்தும் பழக்கமில்லை என்று அந்தக் கருத்தைச் சிலர் மறுத்தனர். இன்னும் சிலர் நம் உடம்பில் அத்தனை சக்தியில்லை என்று வருந்தினார்கள்.”

 “நாட்டைக் காப்பாற்ற உடலில் சக்தியில்லை மூளையின் சக்தியை உபயோகியுங்கள்” என்றார் ராணி.

 “சில நிமிடங்களுக்குப் பயங்கர அமைதி நிலவியது. ’என் நாடும் நானும் மானத்தை இழக்க நேரிட்டால் நான் தற்கொலைதான் செய்துகொள்ள வேண்டும்’ என்றார் ராணி.”

 “அப்போது இதுவரை அமைதியாக யோசித்துக்கொண்டிருந்த  இரண்டாம் பல்கலைக்கழகத்தின் முதல்வர் (சூரிய வெப்பத்தைச் சேமித்தவர்) தோற்பது நிச்சயம், நம்பிக்கை இழப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்றார். ஆனால் முதலும் கடைசியுமாக ஒரே ஒரு திட்டத்தை முயற்சி செய்து பார்க்க விரும்புவதாகவும் அதில் தோற்றால் பின்பு தற்கொலையைத் தவிர வேறு வழியில்லை என்றும் சொன்னார். அங்கிருந்த அனைவரும் என்னவானாலும் யாரும் தங்களை அடிமைப்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று சபதமெடுத்தனர்.”

 “அரசி அவர்களுக்கு மனப்பூர்வமாக நன்றி கூறினார். முதல்வரிடம் அவர் திட்டத்தைச் செயல்படுத்திப் பார்க்கச் சொன்னார். முதல்வர் மீண்டும் எழுந்து, ‘நாம் வெளியே போகும் முன் ஆண்கள் ஜனானாவுக்குள் வர வேண்டும். பர்தா முறைக்காக இந்த வேண்டுகோளை வைக்கிறேன்’ என்றார். ‘ஆமாம், அப்படித்தான் செய்ய வேண்டும்’ என்றார் அரசி.

 “அடுத்த நாள் எல்லா ஆண்களையும் சுதந்திரத்துக்காகவும் மானம் காக்கவும் ஜனானாவுக்குப் போய் ஓய்வெடுக்கும்படிக் கூறினார். அடிபட்டுச் சோர்ந்திருந்த அவர்களுக்கு அந்த உத்தரவு பெரும் வரமாய் வந்தது. இந்த நாட்டைக் குறித்த எல்லா நம்பிக்கையையும் அவர்கள் கைவிட்டிருந்தனர்.”

”முதல்வர் தன் இரண்டாயிரம் மாணவிகளுடன் போர்க்களத்துக்குப் போனார். அங்கு போனதும் சேமித்து வைத்திருந்த சூரிய ஒளியையும் வெப்பத்தையும் எதிரிப் படையை நோக்கிப் பாய்ச்சினார்.”

 “பாய்ச்சிய ஒளியையும் சூட்டையும் அவர்களால் தாங்க முடியவில்லை. எரித்த சூட்டை எப்படி எதிர்ப்பது என்று தெரியாமல் கதிகலங்கி ஓட ஆரம்பித்தனர். துப்பாக்கி மற்றும் மற்ற போர்க்கருவிகளையும் விட்டுவிட்டு அவர்கள் பாதி வழி ஓடும்போதே சூரிய வெப்பத்தால் எரிக்கப்பட்டனர். அதிலிருந்து எங்கள் நாட்டின் மேல் ஒருவரும் படையெடுத்து  ஒருவரும் வரவில்லை.”

 “அன்றிலிருந்து ஜனானாவிலிருந்து வெளியே வர முயற்சிக்கவே இல்லையா உங்கள் நாட்டு ஆண்கள்?”

 “விடுதலையாகத்தான் விரும்பினார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் மாவட்ட நீதிபதிகள் இவர்கள் அரசிக்குச் செய்தி அனுபினார்கள். படை அதிகாரிகளை அவர்கள் தோல்விக்குத் தண்டனையாகச் சிறையிடுவது சரிதான்.  ஆனால் அவர்கள் தங்கள் கடமைகளை எப்போதும் புறக்கணிக்கவில்லை. அதனால் அவர்களைத் தண்டிக்காமல், அவரவர் வேலைகளைச் செய்ய விடவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.” 

 “அவர்கள் வேலையை ஒட்டிய உதவி தேவைப்பட்டால் சொல்லி அனுப்புவதாகவும், அதுவரை அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கும்படியும் கூறி மகாராணி அவர்களுக்கு  ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார். இப்போது பர்தா அவர்களுக்குப் பழகிவிட்டதாலும் இப்படி ஒதுக்கிவைக்கப் பட்டிருப்பதைக் குறித்து முணுமுணுப்பதை நிறுத்திவிட்டதாலும் ஜனானாவுக்கு மர்தானா என்று பெயரிட்டிருக்கிறோம்.”

 “போலீசும் நீதிபதிகளும் இல்லாமல் திருட்டு, கொலை போன்றவற்றை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?” என்று கேட்டேன்

 “மர்தானா முறை வந்ததிலிருந்து குற்றங்களோ பாவங்களோ இல்லவே இல்லை. அதனால் குற்றவாளியைத் தேட போலீஸ் அவசியமே இல்லை. குற்ற வழக்குகளைக் கேட்டறிந்து தீர்ப்பு சொல்ல நீதிபதிகளும் தேவையில்லை.”

 “இது மிகவும் நல்லதுதான். யாராவது நேர்மையற்ற நபர் இருந்தால் அவளைக் கண்டித்தால் போதும். ஒரு துளி ரத்தம் கூடச் சிந்தாமல் பெரும் வெற்றியை அடைந்த நீங்கள் குற்றங்களையும் குற்றவாளிகளையும் கூட இல்லாமல் செய்துவிட்டீர்கள்.”

 “சரி, அருமை சுல்தானாவே, நீ இங்கே உட்காருகிறாயா இல்லை என் வீட்டுக்கு வருகிறாயா?”

 “அரசி ஒருத்தியின் வரவேற்பறையை விடக் குறைந்ததில்லை இந்தச் சமையலறை. இருந்தாலும் இப்போது போகலாம். உள்ளே இருக்கும் கனவான்கள் அவர்கள் சமையலறை வேலைகளைச் செய்ய விடாமல் இத்தனை நேரம் தடுத்திருக்கிறேன் என்று சபித்துக்கொண்டிருப்பார்கள் இத்தனை நேரம்” என்றேன் புன்னகைத்தபடி. இருவரும் மனம்விட்டுச் சிரித்தோம்.

 “நான் திரும்பிப் போய் என் நண்பர்களிடம் தூரத்தே இருக்கும் பெண்கள் உலகில் பெண்கள் நாட்டை ஆள்கிறார்கள் எல்லா சமூக விஷயங்களையும் தீர்மானிக்கிறார்கள், ஆண்கள் மர்தானாவில் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டும் சமைத்துக்கொண்டும் வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டும் இருக்கிறார்கள், சமைப்பது என்பது சிரமமே இல்லை அது ஆனந்தம் என்று சொன்னால் எவ்வளவு ஆச்சரியப்பட்டுப் போவார்கள், எவ்வளவு வேடிக்கையாக இருக்கும் அவர்களுக்கு!”

 “ஆமாம், இங்கு பார்த்ததை எல்லாம் அவர்களுக்குச் சொல்.”

 “விவசாயம் எப்படிச் செய்கிறீர்கள், நிலத்தை எப்படி உழுகிறீர்கள், கடினமான வேலைகளை எப்படிச் செய்கிறீர்கள் என்பதையும் சொல்லேன்.”

 “எங்கள் நிலங்களை மின்சாரம் மூலம் உழுகிறோம். அதன் மூலம்தான் மற்றக் கடின வேலைகளும் செய்ய முடிகிறது. நாங்கள் பறக்கும் வசதிகளுக்கும் அதைத்தான் உபயோகிக்கிறோம். ரயில் வசதியோ, சரியாகப்போட்ட தெருக்களோ இங்கு கிடையாது.”

 “அதனால்தான் தெரு விபத்தோ ரயில் விபத்தோ இங்கு நேர்வதில்லை. மழைத்தண்ணி இல்லாமல் கஷ்டமாக இல்லையா?” என்றேன்.

 “’நீர் பலூன்’ அமைத்த பிறகு அந்தக் கஷ்டமே இல்லை. அங்கே பார்த்தாயா, பெரிய பலூனையும் அதில் இணைத்துள்ள குழாய்களையும். எங்களுக்குத் தேவைப்பட்ட அளவு மழைநீரை அதன் மூலம் எடுத்துக்கொள்ளலாம். இதனால் வெள்ளம் புயல் என்ற கஷ்டமும் இல்லை. இயற்கையிலிருந்து எவ்வளவு நாங்கள் பயனடைய முடியுமோ அவ்வளவு தர இயற்கையைத் தூண்டும் வேலையைச் செய்வதில் நேரம் போகிறது. சோம்பேறியாக உடகாராமல் இருப்பதால் ஒருவருடன் ஒருவர் சண்டை போட நேரமில்லை எங்களுக்கு. எங்கள் மேதக்க ராணிக்கு தாவரவியல் குறித்து மிகவும் ஆர்வம். மொத்த நாட்டையும் ஒரு பெரிய பூங்காவாக்குவது அவருடைய பேராவல்.” 

 “பிரமாதமான எண்ணம்தான். நீங்கள் முக்கியமாகச் சாப்பிடும் உணவு எது?”

 “பழங்கள்.”

 “உங்கள் நாட்டை வெய்யில் காலத்தில் எப்படிக் குளுமையாக வைத்திருக்கிறீர்கள்? நாங்கள் வெய்யில் காலத்தில் வரும் மழையை சுவர்க்கத்திலிருந்து வரும் ஆசியாகக் கருதுகிறோம்.”

 “தாங்க முடியாத சூட்டில், செயற்கை ஊற்றுகளிருந்து வரும் நீரை பூமி முழுவதும் தெளித்துவிடுகிறோம். குளிர் காலங்களில் சூரிய வெப்பத்தால் அறைகளை இதமான சூட்டில் வைக்கிறோம்.”

அவள் குளியலறையை எனக்குக் காண்பித்தாள். அதன் கூரை எடுத்துப் போடும்படி இருந்தது. துவலைக்குழாய் குளியல் போட மனம் எப்போது விழைந்தாலும் கூரையை எடுத்துவிட்டு (அது ஒரு பெட்டியின் மூடிபோல் இருந்தது) துவலைக்குழாயுடன் இணைத்திருந்த குழாயைத் திறந்துவிட்டால் போதும்.

 “மிகவும் கொடுத்துவைத்தவர்கள் நீங்கள்” என்றேன். “உங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை. உங்கள் மதம் என்ன என்று நான் அறிந்துகொள்ளலாமா?”

 “எங்கள் மதம் அன்பு மற்றும் உண்மையை ஆதாரமாகக் கொண்டது. எங்கள் மதக் கடமை எல்லோரிடமும் அன்பு செலுத்துதல், முற்றிலும் உண்மையாக இருத்தல். யாராவது பொய் சொன்னால் உடனே அந்த நபருக்கு…”

 “மரண தண்டனையா?”

 “இல்லை, மரண தண்டனை கிடையாது. கடவுளின் படைப்புகளைக் கொல்வதில் எங்களுக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. முக்கியமாக, மனிதரைக் கொல்வதில். பொய்யர்களை இந்த நாட்டை விட்டுப் போகச் சொல்லிவிடுவோம்; எப்போதும் திரும்பி வரக் கூடாது என்றுவிடுவோம்.”

 “தவறு செய்பவருக்கு மன்னிப்பே கிடையாதா?”

 “உண்டு, அந்த நபர் மனமார்ந்து வருந்தினால்.”

 “உங்கள் உறவினரைத் தவிர வேறு ஆண்களைக் காண அனுமதி இல்லையா?”

 “தூய்மையான உறவுகளைத் தவிர வேறு யாரையும் காண முடியாது.”

 “எங்களுக்கு உள்ள தூய உறவு வட்டம் மிகக் குறுகியது. எங்கள் ஒன்று விட்ட சகோதர்கள் கூட அந்த வட்டத்தில் கிடையாது.”   

 “ஆனால் எங்களுடையது மிகப் பெரிய வட்டம். மிகவும் தூரத்துச் சகோதரன் கூட உடன்பிறந்தான் போல தூய்மையான உறவு முறைதான்.”

 “மிகவும் நல்லதுதான். தூய்மையே இங்கு ஆட்சி செய்வது எனக்குத் தெரிகிறது. அறிவுக் கூர்மையுள்ள, தூர திருஷ்டியுள்ள இந்த விதிகளை அமைத்த நல்ல அரசியைக் காண விரும்புகிறேன்.”

 “சரி” என்றாள் சிஸ்டர் ஸாரா.

பிறகு ஒரு பலகையில் இரண்டு இருக்கைகளை திருகாணி கொண்டு நிறுத்தினாள். இந்தப் பலகையில் இரண்டு வழவழப்பான நன்றாக மெருகேற்றப்பட்டப் பந்துகளை இணைத்தாள். அவை நீரகப் பந்துகள் என்றும் பூமியின் புவியீர்ப்புச் சக்தியை மீறிச் செயல்படவும் என்றாள். வேறு வேறு அளவைகளில் உள்ள அவை எதிர்கொள்ள வேண்டிய வேறு வேறு எடைகளைப் பொறுத்து உபயோகிக்கப்படும். பிறகு இந்தக் காற்று-வண்டியில் இரண்டு இறக்கைகள் போன்ற அலகுகளைப் பொருத்தினாள். அவை மின்சாரம் மூலம் வேலை செய்யும் என்றாள். நாங்கள் சௌகரியமாக அமர்ந்துகொண்டபின் ஒரு வட்டப் பிடியை அவள் அழுத்த, அலகுகள் வினாடிக்கு வினாடி வேக வேகமாகச் சுழலத் தொடங்கின. முதலில் ஆறேழடி உயரம் எழும்பிய நாங்கள் பின்பு பறக்கத் தொடங்கினோம்.

நாங்கள் பறக்கிறோம் என்பதை நான் உணரும் முன்பே அரசியின் தோட்டத்தை எட்டிவிட்டோம்.

என் தோழி காற்று-வண்டியை முன்பு செய்ததை எல்லாம் மறுதலை செய்து, கீழே இறக்கினாள். இயந்திரத்தை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கினோம்.

காற்று-வண்டியிலிருந்து கீழே தோட்டத்தில் அரசி தன் குட்டி மகளுடனும் (அவளுக்கு நான்கு வயது) சேடிகளுடனும் உலாத்துவதை நான் பார்த்திருந்தேன்.

.“ஹலோ, வாங்க” என்றார் அரசி சிஸ்டர் சாராவை நோக்கியபடி. அரசிக்கு நான் அறிமுகப்படுத்தப்பட்டேன். எந்தவிதச் சம்பிரதாயக் கெடுபிடிகளும் இல்லாமல் என்னை வரவேற்றார்.

அவரைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ந்தேன். அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய குடிமக்கள் மற்ற நாடுகளுடன் வாணிகத் தொடர்பு கொள்ள அனுமதிப்பதில் தனக்கு எந்த மறுப்பும் இல்லை என்றார். பிறகு மேலும் சொல்லலானார். ”ஆனால், பெண்கள் ஜனானாவில் வைக்கப்பட்டு இருந்த நாடுகளில் அவர்கள் வெளியே வந்து எங்களுடன் வியாபாரம் செய்ய முடியாததால் வாணிகம் சாத்தியப்படவில்லை. ஆண்களின் அற விதிகள் தாழ்ந்தவையாக நாங்கள் கருதுவதால் அவர்களுடன் வியாபாரப் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ள நாங்கள் விரும்புவதில்லை. மற்றவர்கள் நாடு  எங்களுடையதாக வேண்டும் என்று நாங்கள் நினைப்பதில்லை. கோஹினூரை விட ஆயிரம் மடங்கு அதிக ஒளி கூடியதாக இருந்தாலும் அதற்காகச் சண்டையிட நாங்கள் விரும்பவில்லை. எந்த அரசரின் மயில் சிம்மாசனத்தைக் குறித்தும் எங்களுக்குக் காழ்ப்பு இல்லை. அறிவுக் கடலில் ஆழ முழுகி அங்கே இயற்கை எங்களுக்காக வைத்துள்ள விலைமதிப்பற்ற இரத்தினக் கற்களை எடுக்க முயல்கிறோம். இயற்கை அளிக்கும் பரிசுகள் எங்களுக்கு உவப்பைத் தருகின்றன.”

அரசியிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு இரண்டு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுக்கும் போனேன். அவர்கள் உருவாக்கியிருக்கும் பொருட்கள், பரிசோதனைக் கூடங்கள், வானிலை ஆய்வுக்கூடங்கள் இவற்றை எனக்குக் காட்டினார்கள்.

இந்த சுவாரசியமான இடங்களுக்கெல்லாம் போன பின்பு மீண்டும் காற்று-வண்டியில் அமர்ந்தோம். ஆனால் அது நகர ஆரம்பித்ததும் நான் எப்படியோ கீழே விழுந்துவிட்டேன். விழுந்த அதிர்ச்சி என்னை என் கனவிலிருந்து விழிக்க வைத்தது. கண்ணைத் திறந்ததும் நான் என் படுக்கையறையில் என் சாய்வு நாற்காலியில் ஓய்வெடுத்தபடி இருந்தேன்!

[இந்தக் கட்டுரை முதலில் காலம் புதிது பத்திரிகையில் 18/12/2016 இல் பிரசுரமாகியது. ]

[பிறகு, நான்காவது கோணம் என்ற பத்திரிகையில், ஜனவரி, 2017 இதழில் பிரசுரமாகியது. ]

3 Replies to “சுல்தானாவின் கனவும் மாணிக்கக் கல்லும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.