மாதர் மறுமணம் – ஓர் அச்சு இயக்கம்

சொற்களை அச்சாக்கும் முறை வந்தவுடனேயே பெண்களுக்கு அறிவுரை கூறும் புத்தகங்கள் வரத் தொடங்கின எனலாம். பெண்களுக்கு உபதேசம் செய்ய ஆண் என்பதைத் தவிர வேறு எந்தத் தகுதியும் தேவையில்லை என்று கூறக்கூடிய அளவுக்குப் பலதரப்பட்ட ஆண்கள் எழுதிய ஹிதோபதேசங்கள் அச்சில் ஏறின. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளிலேயே பெண்களே எழுதிய பல நூல்கள் வெளிவரத் தொடங்கின. மோட்டார் பாட்டு, புராணக் கதைப்பாட்டுகள், கதைப்பாட்டுகள், விடுகதைப் பாடல்கள் என்று சிறு புத்தகங்கள் பல்வேறு சிறு ஊர்களிலிருந்தும் வெளிவர ஆரம்பித்தன. பண்டிதை விசாலாட்சி அம்மாள் போன்றவர்கள் சமூக நாவல்கள், துப்பறியும் நாவல்கள் என்று தொடர்ந்து எழுதி வந்தனர். பெண்களுக்கான பத்திரிகைகள் பல இருந்தன. 1936இல் ஆரம்பிக்கப்பட்ட மாதர் மறுமணம் பெண்கள் பிரச்சினை சம்பந்தப்பட்ட பத்திரிகை என்றாலும், அது பெண்களுக்கான பத்திரிகை மட்டும் அல்ல. அது ஓர் இயக்கத்தின் குரலாக, விழிப்புணர்வூட்டும் கருவியாக உருவான பத்திரிகை.

பெண்களின் நிலை என்ற பொருள் பற்றி நினைக்கத் தலைப்பட்டவர்கள் முதலில் குறிப்பிட்டது விதவைகள் பற்றித்தான். குழந்தைத் திருமணத்தாலும், பொருந்தாத் திருமணத்தாலும், பல குழந்தைகளும் இளம் பெண்களும் விதவைகளாகி, வெள்ளைப் புடவை உடுத்திப் பிராமண விதவைகளாக இருந்தால் தலை மழிக்கப்பட்டு, வீட்டினுள் முடக்கப்பட்டனர். விதவைகளின் நிலை மாற இளைஞர்களும் மனைவியை இழந்தவர்களும் விதவைகளை மணக்க வேண்டும் என்று காந்தி உட்பட பல இயக்கத் தலைவர்கள் கருதினார்கள். சுயமரியாதை இயக்கத்தில் தீவிரப் பற்றுகொண்ட குமரன் பத்திரிகை ஆசிரியர் சொ.முருகப்பன் மாதர் மறுமண இயக்கம் என்று அமைப்பைக் காரைக்குடியில் 1934இல் உருவாக்கினார். மற்ற மாகாணங்களில் பிரம்ம சமாஜமும் பல தனிச்சங்கங்களும் விதவைகளுக்காகப் பல முயற்சிகளைச் செய்துகொண்டிருந்தன. மகாராஷ்டிரத்தில் பூலே, கர்வே போன்றவர்கள் விதவைகளின் நிலை மாறப் பல ஆண்டுகளாக உழைத்து வந்தனர். சென்னை மாகாணத்திலும் வீரேசலிங்கம் பந்துலு, சிஸ்டர் சுப்பலஷ்மி போன்றவர்கள் விதவைகள் மறுமணத்துக்காகவும், அவர்கள் கல்விக்காகவும் அரும்பாடு பட்டுவந்தனர். பல கட்டுப்பாடுகள் உடைய, தனவான்கள் மிகுந்த செட்டியார் நாட்டின் மையப்பகுதியில் மாதர் மறுமண இயக்கத்தை முருகப்பா ஆரம்பித்தது அச்சமூகத்தாரை உசுப்பிவிட்டு, அவர்கள் வீட்டுப்பெண்கள் நிலையை அவர்கள் கவனத்துக்குக் கொண்டு வரும் நல்ல நோக்கத்துடன்தான். ஆனால் இதைச் செய்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. மாதர் மறுமணம், விதவைகள் நிலை பற்றிய கருத்துகளைப் பரப்பிப் பல சொற்பொழிவுகளைப் பல ஊர்களில் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. கண்டவறாயன்பட்டியில் நடந்த முதல் கூட்டத்துக்கு இருபது பேர்தான் வந்திருந்தனர். முதலாவது ஆண்டில் நான்கு ஊர்களில், நான்கு கூட்டங்களைத்தான் ஏற்பாடு செய்ய முடிந்தது. இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில் ஏழு ஊர்களில் ஒன்பது கூட்டங்கள் நடைபெற்றன. நான்காம் ஆண்டில் கூட்டங்களின் எண்ணிக்கை இருபத்தியொன்பது ஆயிற்று. “எந்த ஊரிலும் கூட்டம் நடத்துவதென்பது பெரும் பிரயாசையாகவே இருந்தது. இடம் கிடைப்பதில்லை. அபிமானமுள்ளவர்களும் வீடு விட முற்படுவதில்லை.  எதிர்ப்பதற்கு யாருமில்லாவிட்டாலும் வீடு விடுவதற்கும் உபந்யாச ஏற்பாடு செய்வதற்கும் நடுங்குகின்றனர். உபந்யாசம் புரிபவர் கூட இவ்வியக்கத்தில் கலந்து பேசுவதில் கூடியவரைப் பின்னடைந்தனர். நிகழ்ந்த நான்காவதாண்டில் சிலர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அழைத்து, உபசரித்தது மகிழ்ச்சிக்குரிய அபிவிருத்தியாகும். உபந்யாசகர்களுக்கு இருந்த பஞ்சமும் இவ்வாண்டில் தீர்ந்துவிட்டது” என்று இயக்கத்தின் நான்காமாண்டில் அறிக்கையில் முருகப்பா கூறுகிறார்.

படக்காட்சிகள் (Magic Lantern Show) துண்டுப்பிரசுரங்கள், புத்தகங்கள் என்று எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. “விதவை மணமே விடுதலை அளிக்கும்” என்று அச்சிடப்பட்ட, அழகான மஞ்சள் வர்ணப்பென்சில்கள் சென்னை பென்சில் தொழிற்சாலையில் செய்யப்பட்டு விற்கப்பட்டு வந்தன. அப்படியும் இயக்கத்தின் மூலம் ஒரு திருமணம் கூட நடைபெறவில்லை. 1935இல் மற்ற மாகாணங்களில் நடந்த விதவைத் திருமணங்களுக்கும் சென்னை மாகாணத்தில் நடைபெற்ற திருமணங்களுக்கும், எண்ணிக்கையில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருந்தது.

  • பஞ்சாப்  1053
  • ஐக்கிய மாகாணம் 1009
  • பீகார் – ஒரிசா 242
  • வங்காளம் – அசாம்  64
  • ராஜபுதனா  109
  • பம்பாய் 166
  • மத்யமாகாணம்  253
  • சென்னை  38

அதிக அளவு விதவைகள் இருந்ததும் சென்னை மாகாணத்தில்தான். மாதர் மறுமண இயக்கம் மேற்கொண்ட மற்ற அச்சு முயற்சிகளைவிடக் கூடுதலான ஓர் அச்சு முயற்சி தேவைப்பட்டது என்று உணர்ந்து, அதனால் பிறந்த அச்சு முயற்சிதான் மாதர் மறுமணம் . 1936 ஆம் ஆண்டு ஆவணி மாதம் ஒன்றரை அணா விலையில் வெளிவந்த முதல் இதழின் அட்டையில் காந்தி இருந்தது. பத்திரிகைக்கு நல்ல கவனத்தைத் தந்திருக்க வேண்டும். காரணம் முதல் இரண்டு இதழ்களும் உடனடியாக விற்றுப்போயின. ஒரு விதவைப் பெண் மண்டியிட்டு வணங்குவது போலவும், காந்தி அவளை ஆசிர்வதிப்பது போலவும் சித்திரம் அட்டையில் இடம் பெற்றது. தொடர்ந்து வந்த இதழ்களிலும் இதே சித்திரம் வெளிவந்தது. இரண்டாம் இதழ் அட்டை கீழே தரப்பட்டுள்ளது.

மாதர் மறுமணம் பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்பேற்றவர் மு.மரகதவல்லி அம்மாள், சொ. முருகப்பனின் மனைவியார். முதல் இதழிலேயே அச்சு மூலம் செய்யக்கூடிய எல்லா முயற்சிகளையும் தக்க முறையில் கையாள்கிறார் ஆசிரியர். (விதவைகள் பற்றி காந்தியின் அபிப்ராயம் முதலில் வர, காதலித்துக் காதலுடன் உயிர்விட்ட விதவை ஒருத்தியின் கதையை நீண்ட பாடலாக பாரதிதாசன் எழுதுகிறார். விதவை மறுமணத்தை ஆதரித்து சுத்தானந்த பாரதியாரும், விதவை ஏன் வண்ணப் புடவைகளையும் நகைகளையும் அவள் வாழ்க்கையின் இடையில் வந்த கணவனுக்காகத் துறக்க வேண்டும் என்ற கேள்விகளை எழுப்பித் தோழர் நீலாவதியும் எழுதுகிறார்கள்.) “துணையிழந்தாரை மணப்பது புண்ணியம்”, “விதவை கண்ணீர் வீட்டை அழிக்கும்” போன்ற வசனங்கள் கொட்டை எழுத்துகளில் பக்கங்களின் முடிவில் காணப்படுகின்றன. “அரிவையர் ஆனந்தம்” என்ற தலைப்பில் சாமி சிதம்பரனார்.

“ஆடுவோமே வெற்றி பாடுவோமே  – நல்ல

ஆனந்த சுதந்திர வாழ்வையடைந்தே”

என்ற நீண்ட பாடலை எழுதுகிறார்.

அமிர்தவல்லி மாலை-விதவா விவாக வீரப்பெணின் சரித்திரம் என்ற மாதர் மறுமண இயக்கம் வெளியிட்ட புத்தகத்திலிருந்து ஒரு பகுதி தரப்பட்டுள்ளது. துரெளபதியைப் போல இப்பெண்ணும் சபதமெடுக்கிறாள்.

… வழக்கந்தொலைந்து மறுமணமும் தான் செய்து

சந்தோஷங் கொண்டாடி தாலியெடுத்துக் கட்டிப்

பட்டாடையுடுத்திப் பாரில் நகை போட்டு

முன் மாதிரி செய்து முடிக்கு நாள் ஆகுமட்டும்

தண்ணீர் தவிர சாப்பிடேன் ஒன்றுமென்றாள்

செத்தாலும் சாவதல்லால் தீண்டேன் ஒரு பருக்கை

சபதம் முடியுமட்டும் சாப்பிடேன் சாதமினி

என்று பெருஞ்சபதம் இட்டாளே மாதரசி…

என்று அவள் கதையைக் கூறுகிறது பாடல்.

முதல் இதழிலேயே கோட்டுச் சித்திரங்கள் மூலம் செய்திகளைக்கூறும் முறை கையாளப்படுகிறது. தொடர்ந்து வரும் இதழ்களிலும் இவை இடம் பெறுகின்றன. அச்சு முயற்சியில் படங்களுக்கும் சித்திரங்களுக்கும் உள்ள முக்கியத்துவத்தை மாதர் மறுமணம் நன்கு உணர்ந்திருந்தது என்று தெரிகிறது. அதில் கோட்டுச் சித்திரங்கள் சாதி பற்றியும் வரதட்சிணை முறை பற்றியும் விதவை நிலை பற்றியும் விவாகரத்து பற்றியும் விவரிக்க வெளியிடப்பட்டன.

இரண்டாம் இதழில் ‘பத்திரிகாதிபர் குறிப்புகள்’ பகுதியில் “மாதர் உரிமையே தேச உரிமை. அதுவே மக்கள் உரிமை. மாதர் சுதந்திரமே தேச சுதந்திரம். அதுவே மக்கள் சுதந்திரம்” என்று ஆணித்தரமாகக் கூறுகிறது.

மாதர் மறுமணம் இதழ்களில் விதவைகள் நிலை, விதவை மறுமணம் பற்றிய கட்டுரைகள், சீர்திருத்தவாதிகள் பற்றிய கட்டுரைகள், செய்திக்குறிப்புகள், தொடர்கதைகள், கதைகள் இவற்றுடன் பாடல்களுக்கும் புகைப்படங்களுக்கும் பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விதவை ஒருத்தியின் வெள்ளைப்புடவைக் கோலத்தை அட்டையில் வெளியிட்டு, உள்ளே அவளுக்குத் தலையில் எண்ணையிட்டு, நகை பூட்டி, வண்ணப்புடவை கட்டி அவளை முற்றிலுமாக மரகதவல்லி அம்மாள் மாற்றும் புகைப்படங்கள் 1937 இதழ் ஒன்றில் உள்ளன. நாடகப் பாடல்கள் பிரபலமான காலகட்டத்தின் பிரபலமான மெட்டுகளை ஒட்டி அமைந்த பாடல்களை மாதர் மறுமணம் தொடர்ந்து வெளியிட்டது மொத்தச் சமூகத்தின் நினைவாற்றலை எப்படி உபயோகித்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பத்திரிகை உணர்ந்திருந்தது என்பதையே காட்டுகிறது.

பொதுவாக நினைவில் பதிந்துள்ள குடுகுடுப்பாண்டி, நாடகக் கோமாளி போன்ற பிம்பங்களிலிருந்து, கோமாளியின் பிம்பத்தைத் தேர்ந்தெடுத்து, அவனுக்குச் செட்டிமார் நாட்டு விகடன் என்று பெயர் சூட்டி, அவன் வழியாக, பாடல்கள் மூலம் கூறும் சேதிகள் பல இதழ்களில் உள்ளன. 1937 ஆம் ஆண்டு இதழ் ஒன்றில் செட்டிமார் நாட்டு விகடன் ‘விதவைச் சோதரிகளுக்கு’ இவ்வாறு பாடுகிறான்

வாங்க வாங்க நற்பெண்டுகளா!

இந்த – வாயாடிச் சோதரன் சொல் கேட்டீங்களா!

ஓங்க ஓங்க பூச்செண்டுகளா!

ஓரூக்கமுடனோங்க கற் கண்டுகளா!

ஒங்க – செத்த பதி யாலே

         சேமமற்ற தாலே

         கத்திக்கத்தி மேலே

         கதறுவதேன் நாளே

வெள்ளாடை யேவிடுத்து

         நல்லாடை யேயுடுத்து

         எல்லா நலம் மடுத்து

                                      ஏமாறாமேயிருக்க

உங்களுக்கு – உரிமையிருக்குதென்று

                            சொல்லு சொல்லு சொல்லு

                            மறுமணமே கொள்ளு

                            திருவுருவாய் நில்லு

                           பெருஉரிமை வெல்லு

                           சிரித்துக்காட்டு பல்லு – உமைச்

சீறுவாரைத் தள்ளு தள்ளு தள்ளு

1937ன் இன்னொரு இதழில் செட்டிமார் நாட்டு விகடன் “மறுமணங்கள் செய்வோம்” என்று பாடுகிறான். சொ.முருகப்பன் மற்றும் மரகதவல்லி அம்மாள் பெயர்களை இணைத்து,

         …மாமுருகன் நீதியுடன் மரகதத்தின் சேதி!

                            நம் – மனதிற்பெற க்யாதி!

         அதை -மதித்து நடப் போருக்கெல்லாம் மறையும்

                            மூட வ்யாதி

என்று, ‘வீட்டுவேலை செய்யாமலே வெளியிலென்னடீ ஜோலி’ என்ற பாட்டின் மெட்டில் பாடுகிறான்.

மாதர் மறுமணம் பத்திரிக்கையில் பர்மா, பினாங்கு, மலாக்கா போன்ற இடங்களிலிருந்து கட்டுரைகள் வருகின்றன. முத்துலட்சுமி ரெட்டி, எஸ்.சத்தியமூர்த்தி மற்றும் பலரின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் வருகின்றன. ராஜாராம் மோகன்ராய், ஸர் கங்காராம் போன்றவர்கள் வாழ்க்கைத் தொண்டுகள் பற்றியும் கர்வேயின் தொண்டு பற்றியும் நீண்ட கட்டுரைகள் வருகின்றன. கதைகள், பாடல்கள், கட்டுரைகள் இவற்றின் அடிப்படை நோக்கு விதவை மறுமணமாகவே உள்ளது. இளைஞர்களும், மனைவி இழந்தவர்களும் விதவைகளை மணக்க முன்வர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. மறுமணம் புரிந்துகொள்ளாத விதவைகளை, மற்ற ஆடவர்கள், அவர்கள் துணை அற்ற நிலைமையைக் கண்டு, தங்கள் கைப்பாவையாக்கிக் கொள்வார்கள்; தங்கள் இயற்கையான உடல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள விதவைகள் சோரம் போய்விடுவார்கள் – இதற்கெல்லாம் ஒரே மாற்று விதவை மறுமணம் தான் என்று கூறப்படுகிறது. விதவை மறுமணத்தால் விபசாரம் குறையும் என்றும் கட்டுரைகளும் பேச்சுகளும் வலியுறுத்துகின்றன. வண்ணப் புடவைகளையும் நகைகளையும் இடையே வந்த கணவனுக்காக ஒருத்தி இழக்க வேண்டாமென்றால், அவற்றை மீண்டும் அவள் அடைய இன்னொரு கணவன்தான் வழி என்றிருக்க வேண்டிய அவசியமில்லை. திருமணம் என்பது ஒரு பெண்ணின் சமூக அந்தஸ்தை உயர்த்துகிறது என்ற அடிப்படை யதார்த்தத்தையொட்டி விதவை மறுமணம் என்ற சீர்திருத்தம் அமைவது தர்க்கரீதியான நியாயம் என்றாலும், இதைக் கடந்து சென்று, மறுமணம் என்ற ஒன்று அமையாவிட்டால் சுயமரியாதையுடனும் கெளரவத்துடனும் யாரையும் சார்ந்து நிற்காமல் ஒரு விதவை எப்படி இருப்பது போன்ற கேள்விகள் எழுப்பப்படுவதில்லை. சொத்துரிமை போன்ற பொருட்கள் பற்றி ஒரு சில கட்டுரைகள் இருந்தாலும், பொதுவாக மறுமணமே அருமருந்தாகக் கருதப்படுகிறது. நான்காம் இதழிலிருந்து திருமண விளம்பரங்கள் வர ஆரம்பிக்கின்றன. 1938இல் மகளிர் இல்லம் ஒன்று அமராவதிபுதூரில் தொடங்கப்படுகிறது.

விதவைகளுக்காகச் செய்யும் பணிகள் பற்றிய இவ்வளவு கட்டுரைகளில் சிஸ்டர் சுப்பலட்சுமி பற்றிய சிறுகுறிப்பு கூட இல்லை. இதற்குக் காரணம் அவர் ஆரம்ப ஆண்டுகளில் பிராமண விதவைகளுக்கான ஆசிரமம் அமைத்திருந்தார் என்பதல்ல, விதவைகளுக்கு மறுமணத்தை விடக் கல்விதான் முக்கியம் என்று அவர் திடமாக நம்பியதால்தான் என்று தோன்றுகிறது. அவர் ஐஸ்ஹவுசில் அமைத்த விதவைகள் இல்லத்தில் கல்விதான் விதவைகளை உய்விக்கும் என்ற கருத்தை வலியுறுத்தினார். மறுமணத்தை அவர் எதிர்க்கவில்லை; ஆனால் கல்விதான் பெண்ணின் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது. மாதர் மறுமணம் என்ற அச்சு இயக்கத்தின் நோக்கம் பெண்ணுக்கு ஆண் துணை, ஆண் பாதுகாப்பு என்ற அன்றாடத் தேவைகளின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், தொடர்ந்து நம்பிக்கையுடனும், உறுதியுடனும் செயலாற்றி, அச்சு மூலம் சேதிகளைத் தொடர்ந்து பரப்பி, அறை கூவல் விடுத்து, விடாப்படியாக இயங்கி, அது வெற்றி பெறுகிறது. 1937இல் நடந்த முதல் விதவை மறுமணம் அதன் வெற்றி எனலாம். அதைத் தொடர்ந்து பல திருமணச் செய்திகள் வருகின்றன. ஓர் இயக்கத்தின் நோக்கம் அச்சு ஊடகத்தின் எல்லாவித உபயோகங்களையும் பயன்படுத்தி வெளிப்பட்டு, இத்தகைய வெற்றிகளை ஈட்டித் தந்தது, மாதர் பத்திரிகையின் நோக்கத்தின் ஈடேறல் என்று உறுதியாகக் கூறலாம்.

காலச்சுவடு 45 : ஜன. – பிப். 2003

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.