
தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது பெறும் இந்தத் தருணம் என்னைப் பொறுத்தவரை ஓர் அபூர்வமான தருணம். காரணம் இதுவரை தமிழ் இலக்கியத்துக்காக இந்தியாவில் நிறுவப்பட்ட விருதுகள் எதுவும் நான் வாங்கியதில்லை. சமீபத்தில் வெளியிடப்பட்ட என் கதைத் தொகுப்பின் முன்னுரையில் கூட நான் எழுதியிருந்தேன்: எங்கள் குடியிருப்பில் உள்ள ஆல மரத்தில் வந்தமரும் நீள்வால் கிளிகள் என் கதைகளைக் கேட்டால் கூடப் போதும்; கதை சொல்ல நான் தயார் ஏனென்றால் கதைசொல்லிகள் வெட்கங்கெட்டவர்கள் என்று. இப்படிப்பட்ட எனக்கு வாழ்நாள் இலக்கிய விருது என்றால் வாழ்க்கை பற்றியும் இலக்கியம் பற்றியும் சற்று யோசிக்க வேண்டியிருக்கிறது. அதுவும் நடமாடிக்கொண்டு, விரைந்து இயங்கிக் கொண்டிருக்கும்போதே கிடைக்கும் விருது என்பதால் அதிகமாகவே சிந்திக்க வேண்டியிருக்கிறது என்னைப் பற்றியும் இலக்கியம் பற்றியும்.
சமீபத்தில் வெளிநாடு சென்றிருந்தபோது ஓர் இந்திய எழுத்தாளர்—ஆண் எழுத்தாளர்—அங்கு வந்திருந்ததாகவும் அவர் கதைகள் உருவாவது பற்றி மிகவும் கவித்துவமாகப் பேசினார் என்றும் கூறினார்கள். காலையில் எழுந்து சன்னலைத் திறந்ததும், காலைப் பறவைகளாய் கதைகள் அவரிடம் வருகின்றன என்று அவர் கூறியிருந்தார். இது பற்றி என் கருத்தைக் கேட்டார்கள். காலைப் பறவைகளாய் கதைகள் அவரிடம் வருவது பற்றி எனக்கு எந்தவித ஆட்சேபணயும் இல்லை. நல்ல உருவகபூர்வமான விளக்கம்தான். ஆனால் திறக்க ஒரு சன்னல் வேண்டும்; காலையில் அதைத் திறக்க நேரம் கிடைக்க வேண்டும்; சன்னல் பக்கம் நின்றுகொண்டு கதைப் பறவைகளை எதிர்பார்த்து நேரம் போக்குவதை வீடு ஒப்புக்கொள்ள வேண்டும். மேலும் சன்னல் தோட்டத்தைப் பார்த்தபடி இருக்க வேண்டும். சன்னலைத் திறந்தவுடன் குப்பையும் கூளமும், சாக்கடை மணமும் கமழும் நகர்ச்சூழலில் வாழ்பவர்களைக் கதைகள் எப்படி வந்து அடையும் போன்ற கேள்விகள் எழுகின்றன. இன்னொரு எழுத்தாளர் வானில் மேகங்கள் திரண்டெழுந்து “எழுது, எழுது” என்று அவரிடம் கூறியதாகச் சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட அற்புதங்கள் ஏதும் நிகழாத வாழ்க்கையில் கற்றுக்குட்டி வித்தை காட்ட வருவதுபோல்தான் நான் எழுத வந்தேன் என்று நினைக்கிறேன்.

பதினாறு வயதில் முதல் நாவலை எழுதியபோது அது சாகசங்கள் நிறைந்த, சிறுமிகள் மற்றும் சிறுவர்களுக்கான ஒரு தொடராகத்தான் இருந்தது. இரண்டொரு ஆண்டுகளுக்குப் பின் எழுதி கலைமகள் பத்திரிகையின் பரிசு பெற்ற நாவலில் பெரியவர்களுக்கான உலகில் தாவும் வித்தை இருந்தது. ஆனால் எழுதிய நபரின் வாழ்க்கையில் பெரியதாக எதுவும் நடக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது கதையில். ஏனென்றால் கதை உடல் சம்பந்தப்படாத ஆத்மாவின் காதல் பற்றியது. ஆத்மா பற்றி எழுத ஒன்று உடலைத் தாண்டி வந்திருக்க வேண்டும் அல்லது உடல் பற்றிய அறிவு ஞானம் இல்லாமல் இருக்க வேண்டும். இரண்டாவது நிலைதான் என்னுடையது. ஐம்பதுகளில் வளர்ந்த என்னைப் போன்றவர்கள் மனத்தில் சமூகசேவை என்ற சொல் மிகவும் புனிதமாகப் படிந்திருந்தது. தியாகம் என்ற சொல் எங்களை வெகுவாக ஈர்த்தது. சுதந்திரம் கிடைத்த பின் வந்த தசாப்தத்தில் நாங்கள் வளர்ந்தோம் என்பதை மறக்கக் கூடாது. தொண்டு, சேவை, தியாகம், நாடு போன்ற சொற்கள் எங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணந்திருந்தன. வாழ்க்கை பற்றிய எண்ணங்கள், கற்பனைகள் இதை ஒட்டியதாகவே இருந்தன. எங்கள் கனவுநாயகன் அப்போது தாகூர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர் இவர்களின் கலவை. நியாயமான கோபம், கனிவு, மென்மை, கலை இவற்றின் மொத்த உரு. அவன் பெங்காலி. கலைஞன். கவிஞன். நாட்டுக்காக உழைப்பவன். இந்தக் கற்பனைகளில் உடல் இருக்கவில்லை. உடலே இல்லாத ஒரு வெளியில் மிதந்து கொண்டிருந்தோம். கலைமகளில் வெளி வந்த நாவலும் அப்படி உடலே இல்லாத நாவல்தான். மேலும், உடல் மனம் என்றெல்லாம் தனித்தனியாகப் பிரித்து செய்த விளயாட்டுக்கள் அதில் இருந்தன. பல ஆண்டுகளுக்குப் பின் என்னை வந்து சந்தித்த ஓர் ஆண் எழுத்தாளர் இந்த நாவலை எழுதிய அம்பைதான் நிஜமான அம்பை என்றும் இப்போது எழுதும் அம்பை ஒரு போலி என்றும் என்னிடம் கூறினார். அவர் வெளியிடும் ஓர் பத்திரிகையில் என்னை எழுதுமாறு கூற அவர் வந்திருந்தார். தஸ்தாயெவ்ஸ்கி பற்றிய விசேஷ இதழுக்கு எழுதுமாறு கூறினார். எனக்குக் குழப்பமாக இருந்தது. தஸ்தாயெவ்ஸ்கி பற்றி அவர் கூறும் “நிஜ” அம்பைக்குத் தெரியாது. “போலி” அம்பைக்குத் தெரியும். எந்த அம்பை எழுத வேண்டும் என்று சொன்னால் உதவியாக இருக்கும் என்று கூறினேன். அவருக்கும் குழப்பமாகப் போயிற்று போலும். அவர் பதில் போடவில்லை.
எழுத்தில் எது உண்மை எது போலி என்று பாகுபடுத்துவது எளிதான காரியம் இல்லை. மேலும், உண்மை என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. எதற்கு உண்மையாக இருப்பது எழுத்து? எண்ணங்களுக்கா, வாழ்க்கைக்கா, சுற்றியுள்ள யதார்த்தத்துக்கா, எதற்கு? எழுத்து என்பது இதற்கு எல்லாம் உண்மையாக இருப்பதுதானா? என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் உள்ள ”உண்மைகளை”ப் பற்றியது அல்ல இலக்கியம். உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே உள்ள உறவு பற்றியது இலக்கியம். இந்த “உண்மை”யின் தன்மை மாறியபடி இருக்கிறது நம் வாழ்வில் என்பதுதான் உண்மை. வாழ்க்கையின் போக்குக்கு ஏற்ப இதை நாம் பல்வேறு கட்டங்களில் பல வகைகளில் உணருகிறோம். அதை நாம் எப்படி மொழியாக்குகிறோம் என்பதுதான் இலக்கியம். நம் உணர்வுகளின் வெளிப்படை சில சமயங்களிலும், அவற்றின் மறைப்பு சில சமயங்களிலும், உணர்வுகளை இலக்கியமாக்குகிறது. இந்த வெளிப்படை-மறைப்பு இவற்றின் கண்ணாமூச்சிதான் இலக்கியம்.

தான் நினைப்பதை, உணர்வதை அப்படியே வெளிப்பாடாக்கலாம். ஆக்கியிருக்கிறார்கள் சிலர். அதைப் படிக்க முடியவில்லையே! அனுபவத்துக்கும் வெளிப்பாடுக்கும் இடையே, அனுபவத்திலிருந்து பிறந்த, அதன் பொழிவாக, ஆனால் முற்றிலும் வேறு தோற்றத்தில் மாறும் ஓர் உரு மாற்றம் நேர்கிறது—நவீன ஓவியம் மூலத்தைச் சுட்டிக்காட்டி ஆனால் மூலத்தினின்றும் முற்றிலும் மாறுபட்டு இருப்பதைப் போல. அதை அவரவர் புரிதலுக்கு ஏற்ப அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். அத்தகைய அனுபவத்தை ‘உண்மையான” இலக்கியம் என்று நாம் அடையாளம் காட்டும் இலக்கியம் செய்யும். நவீன ஓவியத்தில் நுழையப் பல கதவுகள் இருப்பது போல இதற்கும் உண்டு. வண்ணம், கீற்று, கோடு எதையாவது ஒன்றைப் பற்றிக்கொண்டு ஓவியத்தினுள் நுழைந்துவிடலாம். இசையிலும் அப்படித்தான். ஆதார ராகம் பற்றி எதுவும் தெரியாமலே கூட அதனுள் முங்கலாம். சுருதியின் சுத்தம், ஸ்வரங்களின் விஸ்தரிப்பு என்று பல உண்மைகளை அது உருவாக்கிக் கொண்டே போகிறது. இலக்கியமும் அதைச் செய்கிறது. இபடித்தான் நான் அதைப் புரிந்துகொள்கிறேன்.
இதனால்தான் இலக்கியத்தில் பெண் எழுத்து ஆண் எழுத்து என்று சிலர் குறிப்பிடும்போது அவர்கள் மனத்தில் இருப்பது பால் நிலை பற்றிய விளக்கம் இல்லை என்பது புரிந்துவிடுகிறது. அவர்கள் பெண் என்று கூறும்போது அது இலக்கியத்தரம் பற்றியது. அது ஓர் அளவுகோல். பெண் என்ற அடிப்படை ஒன்றை உருவாக்கி அதில் ஏற்றப்பட்ட தர அளவுகோல். அடிப்படை என்பது நேராக உடலைப் போய் முட்டும் ஒன்று. ஒரு வகை உடல் இருப்பதால் ஒரு வகை மொழி பிறக்கிறது என்று வலியுறுத்துவது. இவைதான் வித்தியாசங்கள் என்று நாம் பட்டியலிட்டால் அந்தச் செயல் இரு வகை வெளிப்பாட்டை மட்டுமல்ல, இரு வகை உடல்களையும் குறுக்குகிறது என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில், ஒவ்வொரு காலத்தில் வேறுவேறு வகையில் உணரும் உடல் என்ற ஒன்றை, ஓர் இலக்கணத்திற்கு, ஒரு விளக்கத்திற்கு உட்பட்டுத்துவது எனக்கு உடன்பாடில்லை. ஆனால் பெண்ணாக வாழ்வதால், பெண் என்ற நிலையிலிருந்து உலகை எதிர்கொள்ள நேர்வதால் ஒரு வித மொழி, ஒரு வித வெளிப்பாடு உருவாகலாம். அது உடல் சார்ந்த்து அல்ல. உடல் பற்றிய பட்டுணர்வைச் சார்ந்தது. உடல் சமுதாயத்தில் ஆக்கிரமிக்கும் இடத்தைச் சார்ந்தது. காலம், சரித்திரம் இவற்றால் தொடப்படாத உடல் இல்லை. ஒற்றை விளக்கம் உள்ள உடல் இல்லை பெண் உடல். பெண் உடலை மறுவாசிப்பு செய்வதும் அவரவர் பட்டுணர்வை ஒட்டியே இருக்கும். பல்லாயிர யோனிகளிலிருந்து வந்தவள் நான் என்று அக்கமகாதேவி கூறும் போது, பல்லாயிரப் பிறவிகளை மட்டுமல்ல பல்லாயிர உடல்களுக்கு அவர் அர்த்தமூட்டுகிறார். யோனி என்பது ஒரு ஜனனத் துளை மட்டுமல்ல பல்வேறு சரித்திர கால கட்டங்களில் பல அர்த்தங்களைப் பெறும் ஓர் அங்கம். உடலை அதன் விளக்கங்கள், குறுகல்கள், இலக்கணங்கள் இவற்றிலிருந்து வெளியே எடுத்து ஒரு வெளியாக்கி, அதன் மேல் நின்று எழுதும்போது வரும் இலக்கியம் எல்லாவித அடிப்படையையும் மீறியதாக இருக்கும். உடலை ஓர் இயற்கைக் காட்சியாகத் தீட்டி அதை விஸ்தரிப்பதுதான் அதன் லட்சக்கணக்கான அர்த்தங்களையும் அழகுகளையும் மட்டுமல்ல அவலங்களையும் வெளிக் கொண்டுவரும்.
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுக்காலம் எழுதியிருக்கும் போது எழுத்து பல வெளிகளைக் கடக்கிறது. பல மலைகளைத் தாண்டி, பல கடல்களில் முங்கி, பல அரக்கர்களைக் கடந்து, பல போர்க்களங்களில் வென்றும் தோற்றும் அது உருப்பெறுகிறது. ஒரு ஜென் முனிவர் பல ஆண்டுகள் குகை ஒன்றில் இருந்துவிட்டு வந்தார். அந்த ஊர் அரசன் அவர் பெற்ற ஞானம் பற்றி அறிய விரும்பினான். அவரை சபைக்கு அழைத்து அவர் உணர்ந்த உண்மை பற்றிக் கூறுமாறு வேண்டினான். அதற்கு அவர் தன் இடுப்பில் இருந்த புல்லாங்குழலை எடுத்து ஒரு சின்னஞ்சிறு ஸ்வரக்கோர்வையை வாசித்துவிட்டுப் போனார். இலக்கிய வாழ்க்கை பற்றிய உண்மையும் அவ்வளவு எளிதானது; அவ்வளவு சிக்கலானது. என்னிடம் ஒரு புல்லாங்குழல் இருந்து, வாசிக்கவும் தெரிந்திருந்தால் நானும் ஒரு சில ஒலிகளை எழுப்பி விட்டுப் போயிருப்பேன். ஆனால் அப்படிச் செய்பவர்களுக்கு விருதுகள் கிட்டுமா என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் சொற்களில் கட்ட வேண்டியிருக்கிறது. காலத்தால் அழிக்க முடியாத இலக்கிய உண்மைகள் இருக்கலாம். அது பற்றி எனக்குத் தெரியாது. அது எனக்குப் பரிச்சயம் இல்லாத பிரதேசம். அதற்கான கடவுச் சீட்டும் என்னிடம் இல்லை. இந்தக் காலகட்டத்தில் கட்டப்பட்டச் சொற்கள் இவை. இன்றைக்கு, இப்போதைக்கு, இவைதான் நான் உணர்ந்த உண்மை.
[காலம்: மே, 2009 இதழில் பிரசுரமானது.]