வண்டல் படிய ஓடும் நதி

நாற்பதாண்டுகளுக்கும் மேலாகப் பழகிய ஒரு நண்பரைப் பற்றி எழுதுவது கடினம் என்பது என் நிலை. எழுதவே முடியாது என்றில்லை. யானையைப் பார்த்த குருடர் போலத் தொனிக்கும் ஒரு கட்டுரையை எழுத யாராலும் முடியும்.
என்னாலும் முடிய வேண்டும். எனவே இது.
அந்த நண்பர் அம்பை.


இதில் என்ன முயலவில்லை? இலக்கிய விமர்சனமில்லை இது.
அம்பை என்ற ‘ஆளுமையின்’ ஆகிருதி, அவருடைய பல பத்தாண்டு இயக்கத்தின் உள்ளீடு, தாக்கம், அதன் வரலாற்றுப் பங்கு போன்ற ‘கனமான’ எதையும் பற்றிப் பேச இங்கு நான் முயலவில்லை.
அவருடைய எழுத்து பற்றிப் பலர் இந்த இதழில் எழுதுகிறார்கள். அவருடைய இதர செயல்பாடுகள் பற்றி ஓரிரு கட்டுரைகள் இருக்கின்றன. அவரது மொத்தப் பணியால் தாம் பாதிக்கப்பட்ட விதம் பற்றிச் சிலர் எழுதியுள்ளார்கள்.

நண்பராக அவரை நான் அறிந்த, புரிந்து கொண்ட விதத்தைப் பற்றி மட்டும் எழுதி இருக்கிறேன். இது எல்லை சுருங்கிய பார்வைதான். இந்தக் குறுக்கலுக்குக் காரணம், நான் பல பத்தாண்டுகளில் அவரைச் சில நாட்களோ அல்லது சில தடவைகளோதான் சந்திக்க முடிந்திருக்கிறது, தொலைபேசி அல்லது மின்னஞ்சல் தொடர்புகள்தாம் நிறைய போன்றன. சமீபத்தாண்டுகளில்தான் வருடம் ஓரிரு முறை சந்திப்பதும், சில நாட்கள் தொடர்ந்து சந்திப்பதும் நடந்திருக்கின்றன.

இருப்பினும் பல ஆண்டுகள் கழித்துச் சந்தித்த போதும் அனேகமாகப் பெரும் இடைவெளி இல்லாது உடனே தொடரும் கம்பித் தொடராக நட்பு இருக்கிறது.
இது நம்பகத்தன்மை இரு புறமும் இருப்பதால்தான் முடியும்.

இன்னொரு காரணம் என, விஸ்தாரமான அவருடைய எழுத்துகளில் பகுதியைத்தான் நான் படிக்க முடிந்திருக்கிறது என்பதைச் சொல்லலாம்.
எனவே, இது ஒரு நகச் சித்திரம் மட்டுமே.


எழுபதுகளின் மத்தியில் அவரைச் சந்தித்தேன். ஒரு மாலை நேரம், நான் குடியிருந்த தி.நகர் வீட்டு வெளி வாயிலருகே நண்பர் ரவீந்திரனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தேன். அம்பை, பாலகுமாரனுடன் தெருவோடு நடந்து போய்க் கொண்டிருந்தார். அன்று நாங்கள் நடத்திய ’பிரக்ஞை’ என்ற சிறுபத்திரிகையில் துவக்கக் கட்டத்தில் பங்கெடுத்தவர் என்பதால் பாலகுமாரனைச் சிறிது எனக்குத் தெரிந்திருந்தது. ரவீந்திரனுக்குப் பாலகுமாரன் நன்கு பழக்கமானவர்.

பாலகுமாரன் அம்பையை எங்கள் இருவருக்கும் அறிமுகப்படுத்தினார். அப்போது அம்பையின் ஓரிரண்டு சிறுகதைகளை நாங்கள் இருவரும் படித்திருந்தோம், என்பதால் எங்களுக்கு அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

அன்று எங்களுக்கிருந்த சிறு அறிவுச் சேமிப்பின்படி நோக்கியதில் அக்கதைகள் தமிழுக்குப் புதிய வகை, தவிர தம் சூழலை விட்டு மேலான நிலைக்குச் செல்ல வாசகர்களை உந்தியவை என்று நாங்கள் கருதினோம். சராசரி தமிழ்க் கதைகளை விட்டு விலகி வேறு விதமான அணுகலை அவை கொண்டிருந்தன என்பதே எங்களுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது. ரவீந்திரன் தேய் வழக்குகளுக்கு எதிரி. அவருக்கு அம்பையின் அன்றைய சில கதைகளில் இருந்த சில சம்பவங்கள், வருணனைகள் தேய் வழக்காகத் தெரிந்தன. அவர் அவற்றைத் தாண்டி வந்து கருவின் கூர்மையை எடுத்துக் கொண்டு அவற்றைச் சிலாகித்திருந்தார்.


எனக்கோ, குடும்பங்கள், மரபுகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றோடு இருந்த தொடர்ந்த உரசலால், இந்தக் கதைகள் பெண்களிடமிருந்து கிளம்பும் விடுவிப்பிலிருந்து நீடித்த தாக்கமும், பண்பாட்டில் உறுதியான முன்னேற்றத்துக்கான வழியும், பரந்த திறப்புகளும் கிட்டும் என்பதைச் சுட்டின என்று தோன்றியிருந்தது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, என் உடன் பிறவாச் சகோதரிகள் பலர் அன்று பதின்ம வயதைத் தாண்டி வரும் நிலையில் இருந்தனர். அவர்களில் பலருக்கு நான் அன்று தப்பாமல் வாங்கிக் கொடுத்த ஒரு புத்தகம் ‘சிறகுகள் முறியும்.’


எங்களுடைய இந்த அறிமுகக் காட்சி பற்றி அவர் எங்கோ எழுதி இருக்கிறார் என்றும், அது எங்கள் இருவருக்கும் அத்தனை சாதகமான சித்திரிப்பாக இல்லை என்றும் என் நினைவு.
அந்த சந்திப்பு எப்படி இருந்திருந்தாலும், சில நாட்களில் மறுபடி அவருடன் பழக வாய்ப்பு கிட்டியது. பிரக்ஞையின் பெருவாரி வேலைகள் நடந்த, மேல் தளத்து ஓலைக் குடிசை ஒன்றிற்கு அவர் வந்திருந்தார். பிறகு அவர் எங்கள் மீது நம்பிக்கை கொண்டு, உரிமை எடுத்துக் கொண்டு, பிரக்ஞை பத்திரிகையில் பங்கெடுக்கத் துவங்கினார். தில்லியில் இருந்தார் என்பதால் கடிதம் மூலமாகத்தான் இந்தப் பங்கெடுப்பு பெரும்பாலும் நடந்தது. ஆனால் தன் ஆராய்ச்சிக்காக அவ்வப்போது சென்னை வரும்போதெல்லாம் எங்களில் சிலரோடு அவர் நிறைய நேரம் செலவழித்தார். மாலைகளில் சந்திப்போம். அப்போதெல்லாம், எங்களின் போதாமைகளைக் குறித்துத் தீவிரமான கருத்துகளைச் சொல்லி, எங்களை அயர்த்தத் தவறியதில்லை அவர். எங்களை விட மெத்தப் படித்தவராக இருந்த போதும், அவருடைய கல்வி மேன்மையைக் கொண்டு எந்த மேட்டிமைத்தனத்தையும் அவர் எங்களிடம் காட்டி இருக்கவில்லை.

எந்த விமர்சனமும் மனத் தளர்ச்சியைத் தர முடியாத ஒரு எளிய உறுதி எங்கள் குழுவினரிடம் அன்று இருந்தது. இது எங்களைப் பற்றி பிரமைகள் ஏதும் இல்லாததால் வந்த உறுதி என்று தோன்றுகிறது. பிறரின் இலக்கிய, சமூக சிந்தனைகளை வெளிக்கொணர உதவும் கருவிகளாகத்தான் எங்களை உருவகித்திருந்தோம், எங்களுக்கு ஒரு ஆகிருதியோ, தனிப் பார்வையோ, பாதையோ இருப்பதான கற்பனை கூட எங்களிடம் இருக்கவில்லை.

அந்தப் பத்திரிகை எங்கள் ஒவ்வொருவரின் அறிவு வளர்ச்சிக்கும் உதவியது. அம்பைக்கோ அது சில இளைஞர்கள் படிப்படியாக வளர்வதைப் பார்க்க உதவிய சோதனைச் சாலையாகத் தெரிந்திருக்கலாம். அவர் அந்தப் பத்திரிகை நன்கு வளர்ந்து ஒரு நீண்ட கால முயற்சியாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்க வேண்டும். அன்றைய சூழலில் எங்களுக்கிருந்த மிகச் சிறிய வசதிகளைக் கொண்டு அதை எங்களால் சாதித்திருக்க வழியில்லை என்பது அன்றே, ஒரு சில ஆண்டுகளில் எங்களுக்குத் தெரிந்து விட்டது.

அன்று சிறு பத்திரிகைகளுடைய மிகச் சிறு தொகை சந்தாவைக் கட்ட ஓராயிரம் தமிழர்கள் கூடத் தயாராக இல்லை. இன்று திரும்பிப் பார்க்கையில், நாங்கள் என்ன செய்யவென்று அதைத் துவங்கி நடத்தினோம் என்ற வியப்புதான் எஞ்சுகிறது.

அதை நடத்தியதில் எங்களுக்குக் கிட்டிய நன்மைகளில் தமிழ் நாட்டின் பல இலக்கியகர்த்தாக்களை எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் தெரிய வந்ததைச் சொல்லலாம். நாங்கள் ஒவ்வொருவரும் எங்களின் தன்மைகளை இந்தப் பத்திரிகையின் மூலம் தெரிந்து கொண்டோம் என்று சொல்ல எனக்கு ஆசைதான். ஆனால் அப்படி ஏதும் அற்புதமாக நடக்கவில்லை.


என்ன இயலாது என்று வேண்டுமானால் தெரிந்து கொண்டோம். என்ன கைவசம் இல்லை என்பதையும் தெரிந்து கொண்டோம். அவற்றை எப்படி அடைவது என்பதற்கு அப்பத்திரிகை அனுபவம் உதவவில்லை. ஒரு சிலருக்கு இங்கிருந்து தம் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு நகர அந்த அனுபவம் உதவி இருக்கலாம். அது பற்றி அவர்கள் சொல்வதுதான் முறையாக, நம்பகமானதாக இருக்கும்.
அப்படி ஒரு அடையாளமற்ற குழு நட த்திய பத்திரிகையில் பங்கெடுக்க முன் வந்ததோடு நில்லாமல், எங்களைச் சமநிலையில் வைத்தும் பழகிய அம்பை அன்று நிஜமாகவே வித்தியாசமான ஒரு நபராகத்தான் தெரிந்தார். உள்ளூரில் (சென்னையில்) இருந்த பல எழுத்தாளர்கள் நேரில் பார்க்கையில் பீடத்தில் இருந்து கொண்டுதான் பேசினார்கள்.

அன்றைய தமிழ் எழுத்தாளர்கள் நடுவில் அம்பை தானொருவர் மட்டுமே ஒரு தனிப்பிரிவாகத் தெரிந்தார். இத்தனைக்கும் அன்றைய அளவில் அவர் அதிகம் எழுதிக் குவித்து இருக்கவில்லை. வெகு சில கதைகளிலேயே தனித்துத் தெரிபவராக ஆவது எளிதல்லவே?

அன்று அவர் அணி திரட்டும் வேலைகளில் இறங்கவில்லை. தன் போன்ற சிந்தனையாளர்களில் பெரும்பாலானரை அவர் வெளி மாநிலங்களிலும், மும்பை நகரிலும்தான் கண்டெடுக்க முடிந்திருந்தது என்று நினைக்கிறேன்.

40 ஆண்டுகள் செயல்பட்டு, தளராத உழைப்பால், கற்பனைக்கு எட்டாத வகைகளில் எல்லாம் பெண் சமுதாயத்தின் நலன் பேணவென்று பாடுபட்டு, அதைப் பற்றி, கிட்டிய அரங்குகளில் எல்லாம் பேசியும், எழுதியும் வந்திருக்கிற அம்பைக்குத் தமிழ் இலக்கிய/ சிந்தனை உலகில் போதுமான, பொருத்தமான அங்கீகரிப்பு இன்னமுமே கிட்டவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. இத்தனையையும் அவர் தன்னை முன்வைக்காமல் செய்த ஒரு நபர் என்பதும் எனக்கு நன்கு பதிந்திருக்கிறது.

பெண்களின் நலனை அவர் முன்வைத்து இயங்கக் காரணம் மொத்த சமுதாயத்தின் ஆரோக்கியம், நல்வாழ்வு ஆகியன அதை நம்பித்தான் இருந்தன என்பதுதான். இதுதான் எனக்கு 70களிலேயே புரிந்திருந்தது.

சென்னையில் 90களில் அவரோடு போய் நான் சந்தித்த சில புது வரவு எழுத்தாளர்கள், தமக்குக் கிட்டிய புது ஸ்தானத்தில் இருந்து பல பத்தாண்டுகளாகத் தமிழிலும், இங்கிலிஷிலும் தொடர்ந்து எழுதும் அம்பையைச் சாதாரணமானவர் என்பது போல வைத்துப் பேசிய சில கணங்களில் நான் அந்த மனிதர்களின் அகம்பாவத்தைப் பார்த்து வெட்கி இருக்கிறேன். அதில் சங்கடமேதும் படாமல் உரையாடலை நகர்த்திச் சென்று தான் அவர்களைச் சந்திக்க வந்த காரணத்தைப் பேசி மேலெடுத்துச் சென்றவர் அம்பை.

கடந்த பத்துப் பதினைந்தாண்டுகளில் அவர் தமிழில் எழுதும் சக பெண் எழுத்தாளர்களைச் சந்திப்பதிலும், அவர்களின் படைப்புகள் பற்றி வெளியுலகுக்கு அறிவிப்பதிலும், சில நேரம் சீர் தூக்குவதிலும் நிறைய முயன்றிருக்கிறார். பெண் எழுத்தாளர்களை மட்டுமில்லை, தமிழ் எழுத்தாளர்கள் பலரையும் இப்படிச் சென்றடைய முயன்றிருக்கிறார். இந்த முயற்சிகள் எத்தனை தூரம் வென்றன, சுய தம்பட்டத்துக்கு முயலாமல் இவர் செய்த தொடர்பு முயற்சிகளால், எழுத்துலகில் பெண்களின் சமூக நிலைகள் பற்றியும், கலை/எழுத்து/ படைப்புலகில் அவர்களின் பங்களிப்பு வரலாறு பற்றியும் விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறதா என்பதும் என்னால் எடை போட முடியாதவை.

தமிழகத்திலேயே தொடர்ந்து வாழ்ந்து படைப்புலகில் அதிகம் சஞ்சரிப்பவர்கள், இத்தகைய சீர்தூக்கலை முயன்றால் நமக்கு இன்றைய நிலை பற்றிய ஒரு புரிதல் கிட்டலாம்.


74இல் நடந்த முதல் சந்திப்புக்குப் பிறகு ஒரு சில வருடங்களில் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளி வந்தது. அதைப் பற்றி அம்பை எழுதி இருக்கிற ஒரு சிறு கட்டுரை இந்தச் சிறப்பிதழில் வெளியாகி இருக்கிறது. புத்தகத்தைப் பார்த்த பிறகு, அதை வெளியிடாமல் இருக்க ஏதேனும் கட்டணம் கொடுத்தாவது நிறுத்தி விடலாம் என்று கூட அவர் யோசித்ததாக அக்கட்டுரை சொல்கிறது. அத்தனை சீர்கெட்ட தயாரிப்பு என்பது அவர் பார்வை. கதை எழுதிப் பிரசுரிக்கக் கொடுப்பதோடு தன் பொறுப்பு நிற்கவில்லை என்று அவர் கருதியிருந்தார்.

எந்த சீரிய முயற்சிக்கும் தடைகள் எழும், அவற்றை உடைத்துத்தான் முன்னேற்றம் காண முடியும் என்ற அடிப்படைப் பாடம் அம்பைக்கு ஏற்கனவே நன்கு படிந்திருந்தது. அந்தப் பாடத்தை அவர் கல்லூரியை விட்டு வெளி வந்த வருடங்களிலிருந்தே கண்டு கொண்டிருந்தார்.

கல்லூரியை விட்டு வெளி வந்த சில மாதங்களிலேயே ஒரு வேலையில் அமரும் வாய்ப்பு மிகத் தற்செயலாகக் கிட்டி இருந்த எங்களில் சிலருக்கு அந்த வகைப் பாடம் படிந்திருக்கவில்லை. ஆனால் கல்லூரிப் படிப்பு நாட்கள் பூராவும் இழுபறி நிலையிலேயே வாழ்வு இருந்ததை மட்டும் அறிந்திருந்தோம்.

எதைச் செய்தாலும் அதற்கான அடக்கவிலை என்ன என்று பார்க்கும் குணம் எங்கள் குழுவினரிடம் மாற்ற முடியாதபடி படிந்திருந்தது. கீழ் மத்திய தர வகுப்பிலிருந்து வந்தவர்களான எங்களுக்கு அப்படி யோசிப்பதுதான் இயல்பாக அமைந்தது. செலவு கூடினால் தரம் குறைந்ததுதான் எட்டும் என்ற சமரசத்தைக் காண்பது எங்களுக்கு எதார்த்தமாகத் தெரிந்தது.

சுருங்கச் செலவு செய்து அதிலேயே நிறைவைக் காணும் இளைஞர்களாக இருந்த எங்களுக்கு, செலவைப் பற்றி எப்போதும் யோசிக்காமல், செய்யப்பட வேண்டிய செயலை அதற்கான தரத்தோடு முடிப்பதைப் பற்றி மட்டுமே யோசிக்கும் துணிவாளரான அவர் புதிர் மனுஷியாகத்தான் தெரிந்திருந்தார். செய்யும் எதையும் நேர்த்தியாகச் செய்யும் தீவிரம் அவரிடம் இருந்ததை நாங்கள் உடனே கண்டு கொண்டோம்.

அவரிடம் நான் கற்ற ஒரு பாடம் சிறு விஷயம் பற்றியது, ஆனால் என் மனதில் ஆழப்பதிந்திருக்கிற ஒன்று.

தில்லியில் சுற்றுலா போயிருந்த நாங்கள் அவரோடு ஒரு சில நாட்கள் தங்கியபோது, சமையலில் அதிகம் திறனில்லாத இளைஞர்களாக இருந்த எங்கள் இருவருக்கு வெங்காயத்தை அரிவதில் வேகமும், நேர்த்தியும் பெறுவது எப்படி என்று ஒரு சில வினாடிகளில் அவர் சொல்லிக் கொடுத்தார்.

உங்களுக்குச் சமைத்துப் போட என்னால் இயலாது, எனக்கு நிறைய வேலை இருக்கு, உங்க பாட்டை நீங்கதான் பார்த்துக்கணும், சும்மா உக்காந்திருக்காதீங்கடா என்று இரைச்சல் போட்டார். அது எங்களுக்குக் கடுமையாகத் தெரியவில்லை, எதார்த்தமான அணுகலாகவே பட்டது.

பிற்பாடு நான் வீட்டை விட்டு வெளியேறி, வேலை நிமித்தம் பல ஊர்களில் தங்கி இருந்து வாழ நேர்ந்த போது, இந்தத் தார்க்குச்சியின் நினைவு அடிக்கடி வரும். அந்தப் பாடத்தை நன்கு கற்றதன் விளைவாக, நான் வசித்த எந்த ஊரிலும், சாப்பாட்டுக்குத் திண்டாட நேரவில்லை, சமைப்பது எனக்குப் பிடித்த ஒரு விஷயமாக மாறி விட்டிருக்கிறது.

தரம் என்பதை வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் தேட வேண்டும் என்ற அவருடைய அணுகல் அவருடைய வீட்டு இருக்கைகளில் விரிக்கப்பட்டிருந்த மேல் துணிகளில் துவங்கி அவருடைய எழுத்துப் பிரதிகளில் அப்பழுக்கற்ற நிலை வர அவர் எடுத்துக் கொண்ட பாடு வரை எங்கும் எனக்குப் புலப்பட்டிருந்தது.
அது எனக்கு இயலாதது என்று நான் அன்று நினைத்தேன். இப்படி எந்நேரமும், எதிலும் கர்மமே கண்ணாக இருப்பது எப்படி அவருடைய பிறவி குணம் போல ஆயிற்று என்பது எனக்குப் புரிபடாத ஒன்று.

தரம் பற்றிய இந்த நாட்டம், தில்லிக்கும் சென்னைக்கும் உள்ள இடைவெளி என்று ஒரு விதமாக அதைச் சுருக்கிப் புரிந்து கொண்டிருந்தேன் எனலாம்.

அது மட்டுமல்ல, வேறு பல விதமான மேம்படுத்தல் முயற்சிகளும், அவருடைய அன்றாட இயக்கத்தில் இருந்தன. அதிகாலையில் எழுந்து தேகப்பயிற்சி செய்வதில் துவங்கி, மடமடவென்று சமையலறையில் சில வேலைகளைச் செய்து விட்டு, வாய்ப்பு கிட்டிய முதல் தருணத்தில் அமர்ந்து தட்டச்சு எந்திரத்தில் எழுதத் துவங்கி விடும் அவருடைய செயலூக்கம் 70களிலேயே வியப்பூட்டும் ஒன்றாக இருந்தது. 80களில் அது மட்டுப்படவே இல்லை என்பதை மும்பையில் கண்டேன்.

அவர் அன்றே ஒரு லட்சியத்தை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அவர் தனக்கான லட்சியத்தை அறிந்திருந்தார், என்றாலும் அதை மேன்மேலும் ஆழப்படுத்திப் புரிந்து கொள்ளவும், அதை அடைவதற்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து தேடுவதிலுமே அடுத்த சில பத்தாண்டுகளை அவர் செலவழித்திருக்கிறார்.
ஒப்பீட்டில், சற்றே இளம் வயதினரான நாங்கள் இன்னும் லட்சியத்தைக் கண்டு பிடிக்கப் பயணத்தில் இருந்தோம். எங்கள் குழுவில் இருந்த சிலர் லட்சியவாதிகளாகப் பிறகு தம் மொத்த வாழ்வைக் கழித்திருக்கிறார்கள். நான் உயர் கல்வியைத் தேர்ந்தெடுத்திருந்தேன்.

மற்றவர்கள் என்ன சாதித்தார்கள் என்று சொல்லுமளவு எனக்கு கள நிலைகள் தெரியவில்லை. நான் அதிகம் சாதிக்கவில்லை, கல்வி என்னைப் பதப்படுத்தியது என்று மட்டும் சொல்லலாம்.
அதே காலகட்டத்தில் அம்பை சாதித்தவை என்னளவில் பிரமிப்பூட்டும் வகைத்தானவை.


அன்று பிரக்ஞையின் தயாரிப்பில் நிறைய பிரச்சினைகள் இருந்தன. அச்சிட்டவருக்கு ஆரம்பப் பள்ளி அளவுதான் படிப்பு வாசனை. அந்த அச்சகத்தில் அச்சுக் கோர்ப்பவராக இருந்த ஒரு பெண்மணிதான் உயர்நிலைப் பள்ளி அளவு படித்திருந்தவர். அவருடைய தொழில் திறமை, அக்கறையை நம்பித்தான் அங்கு அச்சிட்டோம். குழந்தைப் பராமரிப்பு, சமையல் ஆகிய பொறுப்புகளின் நடுவே நாளின் நெடும்பகல் பூராவும் அங்கு பாடுபட்ட அந்தப் பெண்மணி உண்மையிலேயே மணியானவர்தான், என்றாலும் அச்சக முதலாளியும் அவருடைய கணவருமானவரின் போதாமைகளை அவர் ஒருவரால் ஈடு கட்டி விட முடிந்ததில்லை.

சத்தற்ற உணவை உண்டு தீராத வேலையில் இடைவிடாது பாடுபட்டுக் கொண்டிருந்த அந்த அச்சகப் பெண்மணியின் மெலிந்த தேகமும், சோர்வும் என்னைத் துணுக்குறச் செய்த விஷயங்கள். தன் சோர்வைக் கடந்து வந்து, இருவர் அமரக் கூட இடம் இல்லாத ஒற்றை அறையின் சிறு ஒதுக்கிடத்தில் அமர்ந்து மங்கலான விளக்கில் நியூஸ் ப்ரிண்ட் தாளில் அச்சிடப்பட்ட படிகளைத் திருத்த முயற்சி செய்யும் எங்களிடம் அவர் காட்டிய பரிவு எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி அவருடைய பூரணமான சிரிப்பு, அச்சகத்தில் இருந்த எவரையும் மதிப்போடு நடத்திய எங்களைப் பார்த்ததும் அவர் கொண்ட நிஜமான மலர்ச்சி ஆகியன எனக்கு இன்னும் நினைவுள்ள விஷயங்கள்.

பாரதம் இந்த மாதிரி மனிதர்களால்தான் இன்னும் ஜீவித்துக் கொண்டிருக்கிறது.

பிரக்ஞையில் உயிரைக் கொடுத்து வேலை செய்து அதை நிமிரச் செய்தவர், வீராச்சாமி என்ற புனைபெயர் கொண்ட ரங்கராஜன். கடும் உழைப்பாளி. ஒப்பீட்டில், நான் அத்தனை உயிரை விட்டுக் கொண்டு இயங்காத நபர் என்பதைப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் எனக்கும் அப்படிச் சில இதழ்களிலாவது செயல்பட வேண்டிய நிர்பந்தம் இருந்தது, நான் மட்டுமே இயங்கி வெளியிடும்படி, தனித்து விடப்பட்ட இதழ்கள் சிலவாவது இருந்தன.

ஒரு இதழ், அம்பை பொறுப்பெடுத்துத் தொகுத்த இதழ். அவரோ தில்லியில் இருந்தபடி அதைத் தொகுக்கும் நிலையில் இருந்ததால் நேரடியாக வந்து எங்களோடு உழைத்துத் தர மேம்படுத்தலைச் செய்ய முடியாது இருந்தார். அதில் எங்களுடைய மெலிந்த பணப்பையால் இட்டு நிரப்ப முடியாத பல போதாமைகள் வெளிப்படையாகத் தெரிந்தன. இதழ் முடிந்து கைக்குக் கிட்டும்போது எத்தனையோ உழைத்தும் அதில் பல குறைகளை எங்களால் களைந்திருக்க முடியவில்லை. அம்பைக்கு அந்த இதழ் பற்றி நிறைய வருத்தம்தான் அன்று இருந்தது.

இப்படிக் குறைகள் நிலவினாலும், நாங்களோ அவரோ அப்பத்திரிகையை மூடுவது பற்றி யோசித்திருக்கவில்லை. அந்த யோசனை எழுவதற்கு மேலும் சில ஆண்டுகள் ஆயின. அதற்குள் அவர் பம்பாய் வாசியாகி இருந்தார். வாழ்வு அவரை வேறெங்கெல்லாமோ இழுத்துப் போயிருந்தது.

என்ன தடைகள் எழுந்த போதும் அவற்றிலிருந்து மீண்டு, புதுப் பாதைகளைக் கண்டடைந்து, மறுபடி துவக்க நிலையிலிருந்து உழைக்க நேர்வதைப் பற்றிச் சலிப்பில்லாமல் இயங்கும் ஒரு அபூர்வப் பிறவி அம்பை.

நிராசை நிலையில் ஊறிக் கிடந்து பழகி இருந்த நான், 80களில் துவங்கிப் பற்பல ஊர்களில் வேலை நிமித்தம் வசிக்க நேர்ந்தபோது, அம்பையுடன் மறுபடி ஒரு முறை சேர்ந்து இயங்கும் வாய்ப்பு கிட்டியது.

அவரும், அவருடைய கணவர் விஷ்ணுவும் மாற்று சினிமாவில் சேர்க்கப்பட வேண்டிய ஒரு திரைப்படத்தைத் தயாரித்தனர். அம்பையின் ஒரு சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட அந்தக் கதைக்கு அவர்கள் இருவரும் திரைக்கதை எழுதி இருந்தனர் என்று என் நினைவு. அவர்களின் அழைப்பின் பேரில், நான் அந்தத் தயாரிப்பில் ஒரு மாதம் போலப் பங்கெடுத்து, பின்னணி ஊழியனாகச் செயல்பட்டு, சினிமா என்ற ஒரு கனவு எத்தனை அரும்பாடுபடுதலை நம்பி உருவாகிறது என்று அறிந்து கொண்டேன். அப்போது, விடிகாலையிலிருந்து இரவு வரை கூட வேலை செய்தாலும் சோர்வற்ற மனிதராக விளங்கியவர் அம்பை. இதில் என்ன சோகம் என்றால் பஹலா அத்யாய் என்ற பெயர் கொண்ட அந்தப் படம் முறையாக தியேட்டர்களில் வெளியிடப்படவில்லை.

இன்று கூட அந்தப் படத்தின் அபூர்வத் தன்மையைச் சிலாகிக்கும் தீவிர சினிமா விமர்சகர்கள் சிலரை எனக்குத் தெரிய வந்திருக்கிறது. எனக்கு இதில் இரட்டிப்பு சோகம், நான் இன்று வரை பூர்த்தி பெற்ற வடிவில் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை.


அன்றிலிருந்து இன்று வரை- அதாவது அவருடைய முப்பதுகளிலிருந்து இன்றைய எழுபதுகள் வரையிலும் இதொன்று அவருடைய மாறாத லட்சணமாக, குணமாக இருக்கிறது. எந்த வேலையையும் செய்ய உடனே கிளம்பித் தயாராக நிற்கக் கூடியவர் அவர். எந்நேரமும் உழைப்புக்கு அஞ்சாதவர். சோம்பலே இல்லாத அரிய பிறவி. மிகக் குறைந்த வசதிகள் இருக்கும் அறைகளிலும் உறங்கக் கூடியவர், ராத்திரி பகல் என்றில்லாது எந்த நேரமும் பயணம் துவங்கத் தயாராக இருப்பார். அவருடைய மொத்த வாழ்வில் கால் பங்குக்கு மேலாக அவர் பயணங்களில்தான் செலவழித்திருப்பார் என்று ஊகிக்கிறேன்.

அதே நேரம் ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் அதன் ஆடம்பரங்களை லட்சியம் செய்யாது தன் போக்கில் உலவக் கூடியவர். இன்றைய முற்போக்கு முகாமில் இருக்கும் நட்சத்திரங்கள் இந்தியாவில் வறியோரின் நிலை குறித்து இலக்கிய விசாரங்களை மேற்கொள்ளுகையில், அத்தகைய மாநகர விடுதிகளில் தங்கித்தான் மாநாடுகளை நடத்துகிறார்கள் என்பதை அவர் சிலேடையாகச் சொல்லித் தெரிந்து கொண்டேன்.

அவருடன் சில பயணங்கள் போயிருக்கிறேன். நண்பர்கள் சிலருமாகப் போயிருக்கிறோம். நான் பார்த்த மனிதர்களில், மிகக் குறைவான பொருட்கள் கொண்ட பெட்டியோடு எத்தனை நூறு மைல் பிரயாணத்தையும் மேற்கொள்ளும் சாமர்த்தியம் அவருக்கு இருந்தது.

சலியா உழைப்பாளியான இவரைப் பற்றித் தமிழ் எழுத்தாளர்கள் சிலர் மேற்கொண்ட விஷமப் பிரச்சாரத்தைப் பற்றி நண்பர்கள் மூலம் கேட்டபோது எனக்கு ஏற்கனவே தமிழ் இலக்கியச் சூழல் மீதிருந்த விலகல், கசப்பாகத்தான் மாறியது. ஜாதி பற்றிப் பல தமிழ் எழுத்தாளர்களுக்கு இருக்கிற மன விகாரங்கள் சொல்லித் தீர்க்க முடியாதவை.

80களின் மத்தியில் நாடு விட்டு வெளிநாட்டுக்குப் படிப்பு நிமித்தம் போய்விட்டுப் பிறகு ஒரு பத்தாண்டுகள் போலத் திரும்பாத எனக்கு அம்பையுடன் தொடர்பு விட்டுப் போயிருந்தது. 90களின் மத்தியில் சில வருடங்களுக்கெனத் திரும்பிய என்னை, சென்னைக்கு எதற்கோ வந்திருந்த அம்பை, மெனக்கெட்டு இரண்டு திரைப்படங்களுக்கு இழுத்துப் போனார். ஒன்று பாரதிராஜாவின், ‘கருத்தம்மா’ என்ற படம். அதற்குச் சில வருடங்களுக்குப் பிறகு வெளிவந்திருந்த ’இருவர்’ என்ற பாடாவதிப் படம் இன்னொன்று.
இவை தமிழ் சினிமாவின் ‘முன்னேறிய’ நிலைக்கான அடையாளங்கள் என்றால் தமிழ் சினிமா என்ற ஊடகத்தையே நாடாமல் இருப்பது மேல் என்று யோசிக்கத் தள்ளிய படங்கள் இந்த இரண்டுமே. அதே போல ’83 வாக்கில் மண்வாசனை என்று இன்னொரு பாடாவதிப் படத்தைப் பார்க்க வைத்ததும் அவரேதான்.

ஆனால் இவற்றை எல்லாம் பார்த்த பின்னும் கலை மீதோ, திரைப்படங்கள் மீதோ, தமிழ்ச் சமுதாயத்தின் மீதோ நம்பிக்கையை இழக்காமல் அவற்றில் கவனம் கொண்டும், பண்பாட்டு ஆய்வுகளில் செயல்பட்டுக் கொண்டும் இருந்த அம்பையைப் பார்த்து அன்று நான் ஆச்சரியப்பட்டிருந்தேன். இன்றும் அப்படித்தான் இருக்கிறது.

சமுதாய அக்கறை என்பதெல்லாம் சரிதான், அவசியம்தான், ஆனால் அதை ஆழப்படுத்த எதை எல்லாம் படிக்க வேண்டும், பார்க்க வேண்டும் என்பதில் எங்கோ ஒரு எல்லைக் கோடு இருக்கிறது என்பது என் கருத்து.

அவருக்கும் எனக்கும் அன்றிருந்த இடைவெளியில் இது ஒரு முக்கியமான அம்சம். தமிழ் சமுதாயத்தின் அனைத்துப் பண்பாட்டு வெளிப்பாடுகளையும் அவர் கவனித்ததோடு, அவற்றை நுகர்வதையும் செய்தார். அவை அவருக்கு ஒரு மகிழ்வையும் தராத நுகர் பொருட்கள். கசப்பையும், மனத் துன்பத்தையும்தான் கொடுத்திருக்க முடியும். இருந்தும், அவருடைய ஈடுபாடு ஒரு ஃபாரன்ஸிக் துப்பறிவாளரின் ஆய்வு நோக்கத்தால் உந்தப்பட்டது. அவை எல்லாமே சமூக அலசலுக்குத் தடயங்கள், எனவே அறியப்பட வேண்டியவை.

எனக்கு அத்தனை மனப் பக்குவம் அப்போதும், இப்போதும் இல்லை. சமூக ஆய்வாளர்கள் என்று கிளம்புபவர்களுக்கு ‘ரசனை’ என்பதை முன்வைத்து அணுகும் முறை ஒத்து வராது என்பது எனக்குப் புரிந்தாலும், அந்தப் பழக்கத்தை மீறி வர எனக்கு இயலவில்லை. இத்தனைக்கும் எனக்கு மேட்டிமை வாதத்தின் மீது ஒரு பிடிப்பும் இல்லை. மக்களை அறிவுத் துலக்கம் பெற விடாது தடுக்கவென்றே தயாரிக்கப்படும் பொருட்களை என்னால் தாங்க முடிவதில்லை.

2019 இல் புத்தகக் கண்காட்சியில் அவர் தொடர்ந்து பங்கெடுத்து, பல நாட்கள் அங்கு சில பிரசுரகர்களின் கடைகளில் அமர்ந்து கையெழுத்து போட்டு, புத்தகங்களை வாசகர்களுக்குக் கொடுத்ததையும், அவ்வப்போது வாசகர்களும், பிற எழுத்தாளர்களும் அவரை நிறுத்திப் பேசி அவரோடு படமெடுத்துக் கொண்டதையும் எல்லாம் பார்த்த போது எனக்கு ஏதோ நிலை மாறி விட்டது, ஒரு வாறாக அம்பை என்ற எழுத்தாளரைத் தமிழ் வாசகர்கள் அறிந்து அங்கீகரிக்கும் சூழல் வந்திருக்கிறது என்ற நினைப்பு வந்தது. அது ஒரு பிரமை, அப்படி ஏதும் நிலைமை மாறி விடவில்லை என்று என்னிடம் சொல்லி அதை உடைக்க முயன்றார் அம்பை.

முதல் முறையாக இத்தனை வருடங்களில் நான் நம்பிக்கையாளனாகவும், அவர் அவநம்பிக்கையாளராகவும் தெரிய வந்தோம் என்பதை நான் உணர்ந்தேன். இந்த மாறுதலும் எனக்குப் புதிராக இருந்தது.

ஆனால் தமிழ்ச் சூழல் பற்றிய அவருடைய அவதானிப்பு என்னுடையதை விடப் பன்மடங்கு கருக்கானதாகவே இருக்கும் என்றுதான் நான் நினைத்து வந்திருக்கிறேன். இன்னமும் அது மாறவில்லை.

தமிழ் நாட்டிலேயே நிறையகாலம் வாழ்ந்த நான் அங்கு அன்னியனாகவே இருந்திருக்கிறேன். தமிழ் நாட்டை விட்டு வெளியே பல ஆண்டுகளைக் கழித்திருக்கிற அம்பை இங்கு ஒட்டிய உணர்வோடுதான் புறவெளியில் உலவுகிறார் என்பதும் ஒரு முரண்புதிர்தான்.

வெளி நிலத்துக்குப் போன பிறகுதான் சொந்த மண்ணைப் பற்றிய என் பார்வையும், அதைப் பற்றி நிறையவும், தெளிவாகவும் தெரிந்து கொள்ள எனக்கிருந்த ஆர்வமும் தீவிரப்பட்டன. அப்படி வெளியே பல பத்தாண்டுகளாக வாழ்ந்திருந்ததால் அவருக்கு அவை சீக்கிரமே தீவிரப்பட்டிருந்தனவா என்றும் ஒரு கேள்வி எனக்கு உண்டு. அதற்கு அவர் வெறும் புனைவெழுத்தாளர் மட்டுமல்ல, ஒரு ஆய்வாளர் மற்றும் லட்சியங்கள் கொண்டவர் என்பனதான் நிஜமான விடைகளாக இருக்க முடியும்.

இத்தனைக்கும் நான் ஒரு சமூக ஆய்வாளனாகத்தான் தமிழ்நாட்டுக்குத் திரும்பி இருந்தேன். நிதி, நிறுவனம், தொடர்பு வலைகள் ஏதும் இல்லாது களப்பணி செய்ய வருவதன் சுமையை நன்கு உணர்ந்திருந்த நான், கள ஆய்வு செய்த இரண்டு வருடங்களில், அம்பை 70களில் செய்த ஆராய்ச்சியின் பெறுமதியைப் பல முறை உணர்ந்திருந்தேன்.

ஸ்பாரோ என்ற ஆவணக் காப்பகத்தை அவர் துவக்கியபோது அதற்கு நிதி உதவி கொடுக்கும் அளவில் என்னிடம் வருமானமோ சேமிப்போ இல்லை என்றாலும், என் நம்பிக்கை, நல்வாழ்த்து ஆகியன அந்த அமைப்புக்குத் துவக்கத்திலிருந்தே முழுதும் கொடுக்கப்பட்டிருந்தன. அது அம்பை என்ற ஒரு தனிநபரின் மேலும் அவரது சில தோழர்களின் ஆய்வு ஈடுபாடுகள், அமைப்பு முயற்சிகளை எல்லாம் தாண்டி வளர்ந்து, இந்திய அளவில் தாக்கமுள்ள ஓர் அமைப்பாக, அருமையான ஆவணக் காப்பகமாக மாற வேண்டும் என்று நான் பெரிதும் விரும்பினேன்.


அவர் எந்தக் கருத்துகளை முன்வைக்கப் பெரிதும் முயன்றாரோ அவற்றால், அன்றைய பெரும்பாலும் ஆண்மைய, எழுத்துலகால் அதிகம் பொருட்படுத்தப்படாமல் இருந்தார். அடுத்த சில பத்தாண்டுகளில் சூனாமியாக வரவிருக்கும் பெண்களின் இலக்கிய வெளிப்பாட்டை, அவர்கள் அன்று அலட்சியம் செய்வதால் அது காணாமல் போகும் என நினைத்தார்களோ என்னவோ. அம்பை வெளிப்படையாகப் பேசத் துவங்கிய அந்தக் கருத்துகளைச் சகஜமாக, எதார்த்தமாக வெளியிடாத பெண் எழுத்தாளர்களை இன்று காண்பது தமிழகத்திலுமே கடினமாக இருக்கும்.
இன்னமும் ஊடகங்களிலும், அதிகார மையங்களிலும், ஏன் பண்பாட்டுத் தளங்களிலும் கூட இடங்களை, வசதிகளை, பதவிகளை, வாய்ப்புகளை ஆக்கிரமித்திருக்கும் பெரும் ஆண்களின் கூட்டம், பெண்களின் மிகச் சாதாரண கோரிக்கையான சம உரிமைகளை அளிக்க மனதளவிலோ, செயலளவிலோ தயாராக இல்லை. பேச்சளவில் தயாராக இருப்பார்கள், ஜனநாயகம், சம உரிமை என்று கதைப்பதால் மக்களைப் பல பத்தாண்டுகளாக ஏமாற்றும் கலையில் தேர்ச்சி பெற்ற அரசியல்வாதிகளை நம்பித்தான் இவர்களில் பெரும்பாலருக்குப் பிழைப்பு நடக்கிறது, அந்தப் பாடத்தை நன்கு கற்றவர்கள் இவர்கள். இவர்களை அடுத்த கட்டத்துக்கு, நியாயமான அமைப்புகளை நடத்தும் நிலைக்கு நகர்த்த, ஒன்றுபட்ட பெண்களின் பேரியக்கத்தால்தான் முடியும்.


வலது சாரி, இந்துத்துவா என்று இந்த ஒட்டுண்ணிகளால் இழித்துரைக்கப்படும் பெண்கள் நடுவே கூட சம உரிமை கோரும் கருத்துகள் பலமாக வேரூன்றி இருக்கின்றன என்று நாம் சொல்ல முடியும். பெண்களுக்குச் சம இடம், சம உரிமை, சம அதிகாரம் போன்றன கொடுக்காத சமுதாயம் மோசமானது என்ற ஒரு கருத்தை ஏற்காத பெண்கள் இந்தியாவில் இருப்பாரா என்பது ஐயமே.

ஆனால் அக்கருத்தை ஏற்காத ஆண்கள் இன்னமும் கணிசமான அளவில் இருப்பார்கள். இருப்பினும் பொதுவில், எது அப்படி ஒரு சம நிலை என்பதைப் பற்றித்தான் இன்றைய வாதப் பிரதி வாதங்கள் இருக்கின்றன. அது தேவையா, சாத்தியமா, இல்லாவிட்டால் என்ன பெரிதாக கெட்டு விடப் போகிறது போன்ற எதிர் வாதங்களை முன்வைப்பவர்கள் இன்று எருமைத் தோல், அல்லது காண்டாமிருகத் தோலுடையவர்களாகப் பார்க்கப் படுவார்கள். [அந்த இரு மிருகங்களின் தோல் உண்மையில் அத்தனை கடினமானதா என்பது குறித்து எனக்குத் தகவல் இல்லை.]

இந்த மாற்றத்துக்கு ஒரு அடிப்படைக் காரணம், பெண்கல்வி.
பரந்த அளவில் நாடெங்கிலும் விரிவாகி விட்ட பெண் கல்வி ஒரு அளவு இந்த மன மாற்றத்துக்கு அடி கோலி இருக்கிறது. இன்னமும் பெண்கள் நூறு சதவீதம் பேரும் கல்வி பெறவில்லை, பெற்ற கல்வியும் அப்படி ஒன்றும் சிலாகிக்கப்படும் அளவில் இல்லை, உயர்கல்வியில் கூடப் பெண்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள் என்ற விமர்சனங்கள் எல்லாம் இருப்பதை நான் அறிவேன். ஆனால் இன்று, பெண்களுக்குக் கல்வி இல்லாத நிலை இழிவானது என்பதை மொத்த சமுதாயமும் சகஜமாக ஏற்ற நிலை உண்டு. மறுபடி, எத்தனை கல்வி, என்ன தரம், என்ன விகிதத்தில் பெண்களுக்கு இடம் கொடுக்க என்பன கேள்விகளுக்கு உட்பட்டவையாக இருப்பதை நான் மறுக்கவில்லை. பல பத்தாண்டுகளில் இந்திய சமுதாயம் நிறைய நகர்ந்திருக்கிறது, மேம்படத் துவங்கி இருக்கிறது.

ஆனால் இன்னும் போதுமான மேநிலையை அடையவில்லை என்பதை யார் மறுக்கவியலும்?


மேற்படி ‘சித்திரிப்பில்’ நான் கொடுத்தவற்றில், அம்பை என்ற சமூக ஆய்வாளர், செயல் திறனுள்ள சமூக ஆர்வலர், புனைவெழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர், திரைக்கதை அமைப்பாளர் என்று பல வகை அவதாரங்களை மேற்கொண்ட ஒருவரைப் பற்றி அதிகம் சொல்லவில்லை. அவற்றை மேற்கொள்ள அவருக்கு முடிகிறது எதனால், அவருடைய தனிப்பட்ட வாழ்வில் அவர் வைத்திருக்கிற சில பழக்கவழக்கங்கள் எத்தனை வலுவான அடித்தளத்தை அவருக்குக் கொடுத்திருக்கின்றன என்பதைத்தான் முன் வைத்திருக்கிறேன்.

சாதனையாளர்கள் என்று நாம் கவனிக்கத் தொடங்கினால் அவர்கள் பலரிடமும் இந்த குணங்கள் இருப்பதை நாம் அறிய முடியும். ஆனால் அம்பையின் தனிச் சிறப்பு, எத்தனை எதிர்மறை விமர்சனங்களோ, பின்னடைவுகளோ நேரிட்ட போதும் மனம் சலியாமல் மறுபடி மறுபடி முயன்று முன்னேறுவதை அவர் சாதிப்பதுதான்.

கடந்த சில மாதங்களில் அவரோடு பேசவும், நேரம் கழிக்கவும் எனக்கு வாய்ப்பு கிட்டி இருந்த போதும், 40 ஆண்டுகள் முன்பு அவர் இருந்த அதே உத்வேகத்தோடு இன்னமும் அவர் செயல்படுவதைப் பார்த்தேன்.

சொல்வனத்தின் 200 ஆவது இதழை அவருக்குச் சிறப்பிதழாக அமைத்தது மிக உசிதமான செயல் என்பதும் தெளிவாகத் தெரிந்தது.


அவருடைய முப்பதுகளில் நான் அவரைச் சந்தித்தேன். அப்போது கட்டற்று ஓடும், ஓட விரும்பும் வெள்ளமாக அவர் இருந்தார். அத்தனை உற்சாகம், சக்தி, நம்பிக்கை எல்லாம் அவரிடம் இருந்தன. அந்த வெள்ள ஓட்டத்துக்கு ஈடு கொடுக்குமளவு வேகமோ, நம்பிக்கையோ, இலக்குகள் பற்றிய பிடிப்போ எனக்கு இருந்ததில்லை என்பதால் பின்னே தங்கி இருந்து அவரது வேகமான ஓட்டத்தைப் பார்ப்பதோடு நின்றிருந்தேன்.

கடந்த பத்தாண்டுகளில் அவர் இயங்கிய விதம் பற்றி ஓரளவு தகவல் தெரிந்திருக்கிற இன்று, அவர் தன்னளவில் இன்னும் முன்பிருந்த நம்பிக்கை, முயற்சி ஆகியன மங்காமல் செயல்படுகிறார் என்று எனக்குத் தெரிகிறது. இப்போது நாற்பதாண்டுகளின் இயக்கத்தால் அவருக்குக் கிட்டி இருக்கிற பரந்த நட்பு வட்டமும், பற்பல வகை மனிதர்களோடு அவர் கொண்டிருக்கிற பல வித உறவுகளுமாக அவரைச் சிறிதாவது மெதுவாக்கி இருக்கின்றன. சமவெளியில் ஓடத் துவங்கும்போது நதி மெதுவாகி, தான் கொணர்ந்த வண்டலைக் கொடையாகக் கொடுத்தே செல்லும்.

அதன் பெருமதிப்பை உணர்வோராக நாம் இருக்கிறோமா என்பதுதான் கேள்வி.

One Reply to “வண்டல் படிய ஓடும் நதி”

  1. வாய்ச் சொல் வீரர்கள் எனப் பாரதி சொல்வார். செயல் வீரராய், தணியாத ஆர்வத்துடன்,தன் கருத்துக்களில் திண்மையுடன்,சமுதாயத்தைப் புரிந்து கொள்ளும் பக்குவத்துடன்,பேனா என்ற ஆயுதத்தால் பெண்களின் நிலையை அணுகி ஆராய்ந்து,அதிகமாக வெளிச்சம் படராத சாதனைப் பெண்களைப் பற்றி ஆவணப்படுத்தி வரும் அம்பையைப் பற்றி கட்டுரையாளர் சிறப்பாக எழுதியுள்ளார்.எனக்கென்னவோ,ஆண்களையும் ஆற்றுப்படுத்தி அவர்களுக்கு உந்து சக்தியாக இருந்த, தன் ஒளிவட்டத்தை மறுத்து எளிமையாய் இயங்கிய, ஒரு சக்தியை அறிந்து கொள்வது போலிருக்கிறது.பொதுவாக வாழும் போது மறந்துவிட்டு, பிறகு சிலை வைத்து வழிபடும் தமிழ் எழுத்துலக மரபில் சொல்வனம் செய்திருப்பது மகத்தானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.