மொழியும் மௌனமும் வாழ்க்கையும்

என் வளர்ப்பு மகன் ஸோனுவுடன் மொட்டை மாடியில் உலாத்திக்கொண்டிருந்தேன். அவனுக்கு அப்போது ஐந்தாறு வயது இருக்கும். பூமி எப்படி உருவானது, முதலில் வந்த உயிர் பெண்ணா ஆணா போன்ற வாழ்க்கை பற்றிய கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பான். ஒரு முறை கேட்டான்:

”மம்மா, நாய் ஏன் குரைக்கிறது?”

“அது நாயோட மொழி, ஸோனு” என்றேன்.

“இன்னொரு நாய்க்கு அது புரிவதால் அது மொழியாகிறதா?” என்றான்.

ஒரு நிமிடம் மௌனித்துவிட்டு பின் அவனை அணைத்துக்கொண்டு சொன்னேன்:”ஆமாம், இன்னொரு நாய்க்குப் புரிவதால்தான் அது மொழியாகிறது.”

குறிப்பான்கள், குறிக்கப்படுபவை என எத்தனையோ விரிவான தளங்களில் மொழி பற்றியும் மொழியியல் பற்றியும் ஆராய்ச்சிகளும், நூல்களும் உள்ளன. ஆனால் அன்று மனத்தில் தோன்றியது எல்லாவற்றையும் விட முக்கியமானது மொழி என்பது தொடர்பை ஏற்படுத்த வேண்டும். இன்னும் ஒரே ஒரு நபரையாவது அது எட்ட வேண்டும். அப்படியானால் நமக்கான மொழியை, நாம் தொடர்பு கொள்ள நினைக்கும் மொழியை எவ்வாறு, எப்படித் தேர்வு செய்ய வேண்டும்? மொழி என்றால் அது தாய்மொழியாகத்தான் இருக்க வேண்டுமா? மற்ற எந்த மொழியின் கலப்பும் அற்றத் தூய்மையான மொழியாகத்தான் அது இருக்க வேண்டுமா? அந்த மொழியை மட்டும்தான் பாவிக்க வேண்டுமா? மேலும், மொழி என்பது சொற்களால் மட்டுமே ஆனதா? அது சைகையாகவும், சொற்களற்ற இசையாகவும், ஓவியமாகவும், உடலசைவாகவும், காட்சியாகவும் இருக்கக் கூடாதா? இதுபோன்ற கேள்விகளுக்குக் கொண்டுபோய்விட்டது அந்த மொட்டைமாடி உலாத்தல்.

ஒரு மொழியின் மேல் உள்ள ஆர்வமும் ஈடுபாடும்  அதனால் பிறக்கும் அடையாளமும் பிற மொழிகளை ஒதுக்க வைக்க வேண்டுமா என்றும் எண்ணம் ஓடியது அப்போது என்னுள். வங்காளத்து அத்தனை இலக்கியங்களும், மராட்டி இலக்கியங்களும் தமிழில் மொழியாக்கம் ஆனபடி இருந்தன என் இளமைப் பருவத்தில். ரஷ்ய மொழிப் படைப்புகள் தமிழில் படிக்கக் கிடைத்தன. குழந்தைகளுக்கான சீன மொழிக் கதைகள் மலிவு விலையில் வந்து குவிந்தன. ஒரு மொழியைப் பாலமாக வைத்துப் பல மொழிகளை எட்ட முடிந்தது. ஓரு மொழி என்பது அடையாளக் குறுகல் அல்ல; அது பல மொழி நதிகள் கலக்கும் பெருங்கடலுக்குக் கூட்டிபோகும் ஒரு வற்றாத நதி எனும் உவகை அளிக்கும் உணர்வு தொடர்ந்து மனத்தில் ஓடிய காரணம் அந்த ஆரம்ப ஆண்டுகளில் ஏதோ ஒரு வகையில் ஒலித்த வண்ணம் இருந்த மொழி ஒலிகளும் அவற்றின் எதிரொலிகளும்தாம்.

மொழி என்பது வெறியாகவும், தீவிரப் பற்றாகவும், அடையாளமாகவும் இருக்கிறது பலருக்கு. எனக்கு அது நேராததற்குக் காரணம் நான் பல இடங்களில் வளர்ந்து பல மொழிகளின் ஈரம் என்னுள் படர்ந்திருப்பதால் இருக்கலாம். மலையாள நாட்டில் வளர்ந்ததால் தமிழை விட மலையாளம் நன்கு அறிந்த அப்பா. சமஸ்கிருதத்திலும் புலமை உள்ளவர். மராட்டி மொழி அபங்க்களைக் கேட்டு வளர்ந்து, பெங்களூர் வந்தவள் நான். பிறகு கன்னட தேவர்நாமாக்களையும், தெலுங்கு தியாகராஜர்  கிருதிகளையும், என் தாயார் இசைப்படுத்திய தேவாரங்களையும் கற்றவள். என் அடையாளம் மொழியா இசையா என்ற குழப்பம் ஒரு புறம் இருக்க என் மொழிக்குள் மட்டுமே நான் சுருங்கிப் போக முடியுமா, சுருங்க வேண்டுமா போன்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. மொழிப்போர்கள் மற்றும் அடையாளங்கள்  குறித்து நான் ஒரு குறிப்பு காலச்சுவடு பத்திரிகையில் எழுதியிருந்தேன். அதை இங்கே மீண்டும் நினைவு கூறுவது இது குறித்து நான் மேலும் கூற உதவும் என்று நினைக்கிறேன்.

ஐம்பதுகளில் பெங்களூரில் நான் பள்ளியில் படித்தபோது கான்வென்ட் அல்லாத பள்ளிகளில் ஆறாவது வகுப்பு வரை தாய்மொழி பயிற்று மொழியாகவும் மட்டுமின்றி இரண்டாம் மொழிப் பாடமாகவும்  இருந்தது. அத்துடன் மாநில மொழியும், ஹிந்தியும் கட்டாயப் பாடங்களாகவும் இருந்தன. ஏழாவது வகுப்பிலிருந்து ஆங்கில வழிக்கல்வி இருந்தது. பள்ளி இறுதிவரை தாய்மொழி இரண்டாம் மொழியாகவும் ஹிந்தி கட்டாயப் பாடமாகவும் இருந்தது. எங்கள் பள்ளியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, ஹிந்தி என்று இரண்டாம் மொழியாகத் தாய்மொழியைப் படிக்கும் வசதி இருந்தது பள்ளி இறுதிவரை. ஏழாம் வகுப்பிலிருந்து ஆங்கில வழிக் கல்வி கற்காமல் கன்னடவழிக் கல்வி கற்பதற்கும் வாய்ப்பு இருந்தது. இதனால் பல மொழிகள் பற்றி அறியும் வாய்ப்பு மட்டுமல்ல, மற்ற மொழிகளை மதிக்கும் குணமும் இருந்தது ஐம்பதுகளில்.   

கர்நாடகத்திலும் கன்னட மொழியை உயர்த்தும் இயக்கங்கள் வந்தன. 1980களில் வலுவடைந்த கோகக் செலுவலி (கோகக் இயக்கம்) இத்தகைய எண்ணங்கள் உருவாக்கிய பெரிய இயக்கம்தான். கன்னடம் பயிலாமலே பள்ளிப் படிப்பைக் கடக்க வைக்கும் பல பள்ளிகளை எதிர்த்த இயக்கம். பெங்களூரில் குடியேறிய பலர் கன்னடம் பேசாதவர்கள். 1950களிலும் 60களிலும் பல எழுத்தாளர்களும் கன்னடப் போராளிகளும் இணைந்தனர். 1920களில் ஹுயில்கோல் நாராயண ராவ் எழுதிய ”உதயவாகலி நம்ம செலுவ கன்னட நாடு” பாட்டு எல்லாப் பள்ளிகளிலும் பாடப்பட்டது. நானும் பாடியிருக்கிறேன். ”கன்னட கஸ்தூரி அரவ (தமிழ்) அத்வான” (கஸ்தூரியைப் போன்றது கன்னடம்; தமிழ் வெறும் படுதோல்வி) போன்ற ஏசல்களும் இருந்தன. நானறிந்து ராமநவமி உற்சவம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் உற்சவம் அப்போது. நாங்கள் இருந்த சேஷாத்ரிபுரத்தில் இருந்த உயர்நிலைப் பள்ளி ஒன்றில் கச்சேரிகள் நடக்கும். எம்.எஸ் வராத கச்சேரி கிடையாது.   ஒரு முறை ஆ. நா. க்ரு என்று அறியப்பட்ட எழுத்தாளர் ஏ. என். கிருஷ்ண ராவ் ராமநவமி உற்சவங்களுக்குத் தமிழ்நாட்டிலிருந்து வரும் பாடகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை எதிர்த்தார். ”இதூ ராமோத்ஸவா அல்லா, த்மிளோத்ஸவா” (இது ராமோத்ஸவம் இல்லை, தமிழோத்ஸவம்) என்று முழங்கினார். அதன் பிறகுதான் மாநிலக் கலைஞர்களுக்கும் சரியான இடம் அளிக்கப்பட்டது. ஆ. நா. க்ருவின் பெயர் எல்லோரும் அறியும் ஒரு பெயராகியது. ஒரு முறை மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் அவரைப் பற்றிச் சொல்லும்போது, “நான் ஒரு தமிழ் பேசும் கன்னடியன், மிர்சா இஸ்மாயில் (அப்போது மைசூரின் திவான்) ஒரு முஸ்லிம் கன்னடியர், ஆ. நா. க்ரு ஒரு சுத்தமான கன்னடியர்” என்று குறிப்பிட்டார்.

இவற்றைக் குறிப்பிடும் காரணம் கன்னட மொழியை முன்னிறுத்தும் முயற்சிகளும் ஹிந்தி, சமஸ்க்ருதம் போன்ற மொழிகளுக்கு எதிர்ப்பும்  இருந்தாலும் மற்ற மொழிகளைக் கற்கும் வாய்ப்புகள் இருந்தன.  இரண்டாம் மொழியாகத் தாய்மொழி கல்லூரி இறுதிவரை இருந்தது  அறுபதுகளின் இடையாண்டுகள் வரை. ஹிந்தி மொழித் திணிப்பு எதிர்க்கப்பட்டாலும் உருதுவும் கன்னடமும் பேசும் பல கன்னடியர்கள் இருந்ததால் ஹிந்தி மொழி வெறுப்பு ஏற்படவில்லை என்றே கூறவேண்டும்.  

ஹிந்தி மொழித் திணிப்பு, இந்தி எழுத்துரு திணிப்பு எதிர்க்கப்பட்டது சரியான நடவடிக்கையாக இருந்தாலும், அந்த மொழி குறித்த மொழி வெறுப்பு பல வகைகளில் மனக் குறுகல்களையும் செயல்பாட்டுக் குறுகல்களையும் ஏபடுத்தியது என்றே சொல்லவேண்டும். மொழியோடு சேர்த்து அந்த மொழியினத்தவர்களும் வெறுக்கப்பட்டது இனம் சார்ந்த பல சண்டைகளுக்கும் பாரபட்ச நோக்குகளுக்கும் வழிவகுத்தது. தொடர்பு மொழியாக ஆங்கிலம் அமைந்தது ஆங்கிலச் சார்பை ஏற்படுத்தியது. ஆனால் இதனால் மாநில மொழி வலுவடைந்தது, அதன் அந்தஸ்து கூடியது என்று சொல்லமுடியாது. ஆரம்பக் கல்வி அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தளத்தில் இல்லாமல் போகும்போது மாநில மொழி வளர்ச்சி அடைவது சாத்தியமில்லை.

மாநில மொழி அந்தந்த மாநிலத்தில் அரசு மொழியாக இருக்க வேண்டும் என்பது சரியான நோக்குதான். இப்போதும் மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு வேலையில் மிக உயர் பதவிகளில் உள்ள தமிழர்கள் மராட்டி மொழியைச் சரளமாகப் பேசவும் எழுதவும் செய்வார்கள். ஆனால் எனக்குத் தெரிந்தவரை கோப்புகளில் மராட்டி ஆங்கிலம் இரண்டிலும் எழுதினார்கள் என்றே நினைக்கிறேன். டெல்லியிலும் கூட அரசு அதிகாரிகள் ஹிந்தி தெரியாமலேயே வேலை செய்ய முடியும். அவர்கள் ஆங்கிலத்தில் எழுதுவதை மொழியாக்கம் செய்துவிடுவார்கள் கீழே இருப்பவர்கள். ஆனால் ஹிந்தி மொழி பற்றிப் பேசும்போது நம் மனத்தில் இருப்பது இது எல்லாம் இல்லை. வடக்கு தெற்கு என்ற இரு பெரும் இருமைகளை மனத்தில் இருத்தி நாம் ஹிந்தி மொழியை அணுகுகிறோம்.

வடக்கில் இருப்பவர்கள் எல்லோருமே ஹிந்தி பேசுபவர்கள் என்று நாம் நினைக்கிறோம். அதனால்தான் பொது இடங்களில் ஹிந்தியில் அறிக்கைகள் இருப்பதால் ஹிந்தி பேசுபவர்களுக்குப் பயணம் போகும்போது தொல்லையில்லை போன்ற எண்ணங்கள் ஏற்படுகின்றன. பார்க்கப்போனால், ஹிந்தியில் உள்ள அறிக்கைகளை  பிஹாரி, மைதிலி, போஜ்புரி பேசும் பீஹார் மாநிலத்தவரும், ப்ரஜ், அவதி, கடிபோலி பேசும் உத்திரப் பிரதேசத்தவரும், ராஜஸ்தானி, மார்வாடி பேசும் ராஜஸ்தானியரும், பஹாடி, கட்வாலி, குமாஊங் பேசும் ஹிமாசலப் பிரதேசத்தவரும், புந்தேல்கண்டி, சத்தீஸ்கடி பேசும் மத்தியப் பிரதேசத்தவரும், ஹரியாண்வி பேசும் ஹரியானா மாநிலத்தவரும், பஞ்சாபி பேசும் பஞ்சாபியர்களும், டோக்ரி மொழி பேசும் காஷ்மீரத்தவர்களும், ஸந்தாலி போன்ற ஆதிவாசி மொழிகளைப் பேசுபவர்களும் கூடப் புரிந்துகொள்ள முடியாது. ஒரியா, குஜராத்தி, பெங்காலி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், கொங்கணி, கொடகு மொழி, துளு, அஸ்ஸாமிய மொழி, மணிபுரி, காஸி, மிஸோ, போடோ, அருணாசலப் பிரதேசத்தின் பல  பழங்குடி மொழிகள் (வட கிழக்குப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 43 மொழிகள் உள்ளன)  பேசுபவர்களுக்கும் ஹிந்தி அறிக்கைகள் புரியாதுதான். இத்தகைய பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதுதான் நம் நாடு.

வந்தாரை வாழ்விக்கும் நாடு போன்ற நம்மைப் பற்றிய பிரமைகளை நீக்கிவிட்டு, ஹிந்தித் திணிப்பு, தேவநாகரி எழுத்துரு திணிப்பு போன்றவை பற்றிய ஆரோக்கியமான விமர்சனங்களையும், எதிர்ப்பையும் நாம் மேற்கொண்டால், இந்த விவாதம் இருமை நிலையைக் கடந்து வேறு தளங்களுக்குப் போக முடியும். தனிப்பட்ட முறையில் பார்க்கப்போனால், சூர்தாஸ், துளசிதாஸ், வித்யாபதி, கபீர் மற்றும் மீராவின் பாடல்கள் இவற்றைப் படிக்க முயலும்போதுதான் ஹிந்தி நம் நாட்டின் இணைப்பு மொழியாவது சாத்தியமில்லை என்றாலும் இத்தகைய பெரும் பாரம்பரியம் உள்ள் மொழிகளை எட்டும் சிறு பாலமாக ஹிந்தி இருப்பது சாத்தியம் என்று தோன்றியது.   23 இந்திய மொழிகளில் 87 பெண் எழுத்தாளர்களின் எழுத்தை ஐந்து தொகுப்புகளாகக் கொண்டு வரும் ஸ்பாரோவின் [SPARROW (Sound & Picture Archives for Research on Women)] பதிப்பு முயற்சியின் போதுதான் பல வகைகளில் வித்தியாசமான மொழிகளை ஹிந்தி மூலம் ஓரளவு எட்ட முடிந்தது எங்களுக்கு. இது மற்ற மொழிகளின் இலக்கிய ஆழங்களை அறிய மட்டுமல்ல, தாய்மொழி மட்டும் தெரிந்தால் போதும் என்ற எங்களுக்குள் இருந்த மமதையையும் போக்க உதவியது. அனைத்துத் தென்னிந்தியர்களையும் மதராஸி என்ற சிமிழுக்குள் வட இந்தியர்கள் அடைப்பது போல் வட இந்தியர்களை நாம் ஹிந்திக்காரர் என்ற வட்டத்தினுள் போட்டிருப்பது புரிந்தது.

கணக்கிலடங்கா மொழிகள் உள்ள நாட்டில் ஒரே ஒரு மொழியை, அது தாய்மொழியாக இருந்தால் கூட, அதை நம் அடையாளமாக ஏற்பது சாத்தியமா? அப்படி ஏற்றுக்கொள்வதன் மூலமும் அதை ஒரு மொழி சார்ந்த தீவிர வெறியாக்குவதன் மூலமும் ஒரு நபருக்குள் இருக்கும் பல்வேறு மொழிகளின் தடயங்கள் மறைக்கப்பட்டுவிடுமா? அதில் வேறு மொழிகளை உள்வாங்கும் மன ஒலிவாங்கிகள் அடைக்கப்பட்டு மௌனப்படுத்தப்பட்டுவிடுமா? சூர்தாஸ், துளசிதாஸ், வித்யாபதி, கபீர், மீரா, பஹினாபாய், துகாராம் இவர்களின் படைப்புகள் மற்றும் பாடல்களுக்கு சில செவிகள் திறக்காது போய்விடுமா? ஒரு மொழியை அடையாளமாகப் பூணுவதில் எத்தனை மொழிகளின் மௌனம் அடங்கியுள்ளது? ஒரு மொழி மூலம் தொடர்பு கொள்வது எத்தகைய வரையறைகளுக்குட்பட்டது?

ஒவ்வொருமுறை வேறு மொழியின் கதை ஒன்றையோ கவிதை ஒன்றையோ படிக்கும்போதும் தமிழ்க் கவிதை அல்லது கதை ஒன்றை காஸி மொழி நண்பருக்கோ பஞ்சாபி பேசும் தோழிக்கோ மராட்டிக் கவிஞருக்கோ  சிரமப்பட்டு மொழியாக்கம் செய்யும்போதும் மொழியால் தொடர்பு கொள்ளக் கூட எத்தனை மௌனப் பாலங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது என்று தோன்றும். இந்தக் காலகட்டத்தில் பெண்களைச் சந்திப்பதும், பெண்கள் வாழ்க்கையையும் சரித்திரத்தையும் ஆவணப்படுத்தும் முயற்சிகள் மொழி பற்றிய வேறு பல புரிதல்களுக்கும் தொடர்பு கொள்வதன் தன்மைகள் பற்றிய ஆழ்ந்த சிந்தனைக்கான அவசியத்தை அறிவதற்கும் என்னைச் சித்தப்படுத்தின.

கோலம் போடும் பெண்மணி ஒருவரை நான் கோயமுத்தூரில் சந்தித்தேன் ஒரு முறை. தெரு வாசல் கோலங்கள், சடங்குகளுக்கான கோலங்கள், பல்வேறு கடவுள்கள் தேவிகள் இவர்களைக் கோலத்தில் வரைவது இவருடைய சிறப்பு என்று சொல்லியிருந்தார்கள் அவரை அறிமுகப்படுத்தியவர்கள். பால் மேல் கோலம் வரைந்து நவராத்திரியின் போது அது விஜயதசமி வரை கலையாமல் இருக்க வைப்பது அவர் தனிச் சிறப்பு. அவர் வீட்டுக்குச் சென்றபோது நான் அவரைப்பேட்டி காண வருவதாக அறிவித்துவிட்டுத்தான் சென்றிருந்தேன். அவரும் காத்திருந்தார். இடுப்பில் பேரப்பிள்ளையுடன். சாய்வு நாற்காலியில் அமர்ந்து இதற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதுபோல் தினசரியைப் படித்துக்கொண்டிருந்தார் கணவர். இடுப்பில் குழந்தையுடனேயே என்னிடம் பேசினார். கோலம் போடுவதை எப்படித் தேர்வு செய்தார் என்று கேட்டேன். இசையில் மிகுந்த ஆர்வம் இருந்ததாகவும் திருமணத்துக்கு முன் இசை பயின்றதாகவும் கூறினார். ஆனால் புகுந்த வீட்டில் இசைக்கு அவ்வளவு வரவேற்பு இருக்கவில்லை. இசை ஒலியுடன் கூடியது. அதை அவர்கள் சத்தமாகவே பார்த்தார்கள். மற்றவர்களைத் தொந்தரவு செய்யும் சத்தம். ஓவியத்திலும் ஈடுபாடு இருந்ததால் யாருக்கும் தொந்தரவு தராத கோலங்களை வரைய ஆரம்பித்தாராம். இவ்வளவு அருமையாக வரையக் கூடியவர் கோலத்துக்காகக் கடவுள்களை அதிகமாக ஏன் வரைகிறார் என்று கேட்டேன். அவரிடம் பதில் இருந்தது. அஸ்தமனக் காட்சி அல்லது ஒரு பிச்சைக்காரரின் தத்ரூபமான உருவப்படம் இவற்றை அவரால் வரைய முடியும்தான். ஆனால் சாமிகளையும் தேவிகளையும் வரைவது வீட்டோரால் சுலபமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று. மதம் சம்பந்தப்பட்டப் பொருள்கள் குறித்து விமர்சனங்கள் எழாது. பொதுவான, மலைகள் மரங்கள் பட்சிகள் உருவப்படங்கள்  என்று வரைந்தால் அது வீணான பொழுதுபோக்காகவே கருதப்படும். நேரத்தை அதில் செலவிடுவது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இப்படி அவர் கூறிகொண்டே போனார். அவர் கூறியதில் பலவகை, பல தள மௌனங்கள் இருந்தன. முதலில் இசையின் மௌனம், பிறகு கோலம் வரைவதைத் தேர்வு செய்வதில் இருந்த மௌனம், கோலம் வரைவதற்கான பொருளைத் தேர்வு செய்யும்போது கடைப்பிடித்த மௌனம், என்னிடம் பேசும்வரை இது குறித்து யாரிடமும் பேசாத மௌனம்.  இவை எல்லாவற்றையும் விட அவர் வாழ்க்கையின் இத்தனை மௌனங்களை அவர் உணராத மௌனம் என்று பல மௌனங்களை உள்ளடக்கியதாக இருந்தது அவருடனான உரையாடல்.

இந்த நிகழ்வை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் எந்தத் தறுவாயினுள் பெண்கள் பேச்சு அமைகிறது என்பதைக் காட்டத்தான். பெண்களின் மொழி கூட சில வகைகளில்தான் பார்க்கப்படுகிறது. பாரம்பரிய ஓவியங்களைத் தீட்டும் ஓவியர் ஒருவர் என் தோழி. ஆற்றங்கரையில் மூன்று பெண்கள் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருக்கும் அருமையான ஓவியம் ஒன்றை அவர் வரைந்திருந்தார். (என் அறையில் இப்போது நான் மாட்டியிருப்பது). வழக்கமாக மிக நுணுக்கமாகவும் அற்புதமாகவும் மைசூர் பாணியில் கடவுள்களை வரைபவர் வேறு ஓவியங்கள் உண்டா என்று நான் கேட்டபோது இதைக் கொண்டு வந்து காட்டினார். ஓவியத்தின் தலைப்பு பின்னால் எழுதப்பட்டிருந்தது: பெண்களின் வம்பு. ஆற்றங்கரையில் மூன்று ஆண்கள் பேசிக்கொண்டிருந்திருந்தால் என்ன தலைப்பிட்டிருப்பாய் என்று நான் கேட்டபோது பட்டென்று பதில் வந்தது: ஆண்களின் உரையாடல், வேறு எப்படித் தலைப்பிட முடியும்? ஆகவே ஆண்கள் மேடையில் முழங்குகிறார்கள், நீண்ட விளக்கங்களுடன் நிதம் வீட்டில் கூட சொற்பொழிவாற்றுகிறார்கள். பெண்களோ வம்பு பேசுகிறார்கள், நச்சரிக்கிறார்கள், நேரம் காலம் தெரியாமல் பேசுகிறார்கள். கல்வித் துறையில் பெரிய பதவியில் இருந்த ஒருவரும் கிட்டத்தட்ட இதுபோல்தான் என்னிடம் கூறினார். அவரிடம் நான் ஸ்பாரோவின் வாய்வழி வரலாற்று ஆராய்ச்சி பற்றிக் கூறி நிதி உதவி கேட்டேன். அதற்கு அவர் கூறினார்: என்னது?! பெண்கள் அரட்டை அடிப்பது சரித்திரமா? ஆனால் பெண்கள் உபயோகித்துள்ள மொழி நம் பண்பாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் மொழிதான். அந்த மொழியின் சொற்கள் ஏற்றுக்கொள்ளப்படும் வடிவங்களில் உழைப்பாளிகளின் பாடல்களாக, மக்கள் பாடல்களாக, கதைப்பாடல்களாக, பக்திப் பாடல்களாக, செய்யுள்களாக, கதைகளாக நம்மை அடைந்திருக்கின்றன. பேசும் மொழி என்பது காலம்காலமாக சரித்திரத்தில் இடம் பெற்றிருப்பது இவ்வாறுதான். இந்த மொழியையும் அதில் உள்ளடங்கியிருக்கும் மௌனங்களையும் ஓலங்களையும் வெளிக்கொணர்வது ஒரு பக்கமிருக்க இதுகாறும் மௌனப்படுத்தப்பட்ட,  விளிம்புகளுக்குத் தள்ளப்பட்ட தற்கால வாழ்க்கை அனுபவங்களுக்குக் குரலையும் மொழியையும் தருவதும் வாய்வழி வரலாற்றை ஆவணப்படுத்தும் செயல்பாட்டில் இன்றியமையாததாகும்.

மௌனப்படுத்தப்பட்டது மொழியாகும்போதுதான் அர்த்தமுள்ள தொடர்பு சாத்தியப்படும். இத்தகைய மொழியாக்கும் செயல்பாடுகள் குடும்ப அரசியலை மட்டுமல்ல அன்றாட வாழ்க்கையின் அரசியலையும் நமக்குத் தெளிவு படுத்தும். இந்த மொழி, சொற்களால் கட்டப்பட்டது மட்டும்தானா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். அது சொற்களாக, மௌனங்களைச் சுட்டிக்காட்டுவதாக, சொற்களில்லாத சமிக்ஞைகளாக, சைகைகளாக, உடல்மொழியாக, இசையாக, ஓவியமாக, சினிமாவாக உருவாகும் மொழியாக இருக்கும்.          

உடன் தொடர்பு ஏற்படுத்தும், மற்றவரைத் தொடும், தொட்ட நபரிடம் எதிர்வினைகளை உருவாக்கும் மொழியாக அது இருக்குமா என்றால் பதிலளிப்பது கடினம்தான். மொழி புரிய இதயமும் தேவையாக இருக்கிறது. மகாக் கவிஞர் காலிப் இது குறித்து எழுதியிருக்கிறார். அவர் மொழி புரிந்துகொள்ளாமல் போவது அவருக்கும் நேர்ந்திருக்கிறது! ஒரு காதலிக்குக் கூறுவது இது என்று கருதப்பட்டாலும் இது எல்லோருக்குமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அவர் இவ்வாறு கூறுகிறார்:

இறைவா! நான் கூறுவதை அவர்கள் ஒரு போதும்

புரிந்துகொள்ளவில்லை புரிந்துகொள்ளப்போவதுமில்லை

அவர்களுக்கு இன்னொரு இதயத்தைக் கொடு

அல்லது எனக்காவது இன்னொரு மொழியைக் கொடு.

******

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.