மண்ணாசை

எழுபதுகளின் ஆரம்பத்தில் என்று நினைக்கிறேன். டெல்லியில் க.நா.சுவைச் சந்தித்தபோது  எப்போதும் போல் இலக்கியம் பற்றிப் பேசினார். ஷண்முகசுந்தரத்தின் படைப்புகளை நான் படித்ததுண்டா என்று கேட்டார். நான் இல்லை என்றதும் நான் கட்டாயம் படிக்க வேண்டிய நாவல் நாகம்மாள் என்று கூறினார்.  யாராவது எழுத்தாளரைப் படிக்க வேண்டும் என்றால் நான் அப்போது அணுகுவது வெங்கட் சாமிநாதனைத்தான். வழக்கம்போல், அவரைக் கேட்டதும் அவர் தன்னிடமிருந்த பிரதி ஒன்றைத் தந்தார். நாகம்மாள் நாவலை நான் ஒரு முறை அல்ல பல முறைகள் படித்தேன். பலவகைகளில் அது என்னைத் தொட்டது. என்னைப் பாதித்தது.

நகர்வாசி நான். மண்ணில்லாதவள். எங்கள் வீட்டுத் தோட்டத்தைத் தவிர  வேறு மண் எனக்குக் கிடையாது. எந்த மண்ணிலும் விதை ஊன்றியது இல்லை. பயிர் வளர்த்தது இல்லை. இந்த மண் எனக்குச் சொந்தமாக வேண்டும் என்று நினைத்தது இல்லை. ஆனால் உணர்வு பூர்வமாகச் சில மண்ணின் மணம் எனக்குள் இருந்தது. வளரும் பருவத்தின் பல வருடங்கள் கோயமுத்தூரில் என் அம்மாவழிப் பாட்டி-தாத்தா வீட்டில் கழிந்திருந்தது. அம்மாவின் குழந்தைப் பருவம் கோவில்பட்டியில். அதனால் கோவில்பட்டி அவர் நினைவுகளில் ஒரு பெரும் பகுதியை ஆக்கிரமித்திருந்தது. இந்த இரு மண்ணும் ஏதோ ஒருவகையில் எனக்குரியவை என்றோர் உணர்வுப் பிணைப்பு என்னுள் இருந்தது. இருக்கிறது. அதனால்தான் கொங்கு நாட்டைச் சேர்ந்த மண்ணின் நாயகி  நாகம்மாள் என்னைப் பாதிக்கிறாளா என்று யோசித்தேன். ஆழ்ந்து யோசித்தபோது அது மட்டுமல்ல காரணம் என்பது தெளிவாகியது. நாகம்மாள் கொங்கு மண்ணைச் சேர்ந்தவள்தான். ஆனால் அவள் கதாபாத்திரத்தின் வீச்சு அந்த மண்ணிலிருந்து எழும்பி  உலகத்தையே வியாபிக்கும் சக்தி பெற்றது. ஒரு காவிய நாயகியின் அத்தனை அம்சங்களும் அவளிடம் உள்ளன.

அவளை இயக்குவது அவளுக்கென்று மண் வேண்டும் என்ற அலைக்கழிப்பு. அவள் உரிமைகள் பற்றி யோசித்தவள் இல்லை. விதவை. தன் கணவனின் தம்பியைச் சார்ந்து  வாழ வேண்டியவள். அவனும் அவளை மரியாதையாகவே நடத்துகிறான். இருந்தாலும் தன் பங்கு வேண்டும் என்று நினைக்கிறாள். அவளுக்கென்று மண் வேண்டும் என்று வெறி கொள்கிறாள். தன் கையில் ரத்தம் தோய்த்துக் கொள்கிறாள். தன் கையின் ரத்தக் கறையை போக்க பித்து கொண்டு அலைந்த லேடி மாக்பெத்தின் சோகம் நாகம்மாளிடம் இருக்கிறது. தனக்குரிய மண்ணைப் பெற தன் வாழ்க்கையையே தவறான வழியில் செல்லவிட்ட கான் வித் விண்ட்டின்  கதாநாயகியின் தத்தளிப்பு நாகம்மாளிடம் உள்ளது. இத்தனை நுட்பமான கதாபாத்திரத்தை ஆசிரியர் ஒரு கோட்டோவியம் போல் சில கோடுகளில் வரைகிறார். அதன் கனத்தை அவசியமில்லாமல் கூட்டி அதைக் கட்டிப் போடாமல் அதைப் பறக்கவிடுகிறார். எல்லாத் திசைகளிலும் செல்லக்கூடிய தன்மையை அதற்குத் தருகிறார்.

பலமுறைகள் பல மொழிபெயர்ப்பாளர்களிடம் நான் நாகம்மாள்  நாவல் பற்றிக் குறிப்பிட்டு அது மொழிபெயர்க்க வேண்டிய ஒரு நாவல் என்று கூறியபோது அது மொழிபெயர்க்கத் தகுதி அற்றது என்றே என்னிடம் கூறினார்கள். அதன் காரணம் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. இது கொங்கு மண்ணிலிருந்து வந்தாலும் உலகளவில் ஆங்கில வாசகர்கள்  எதிர்பார்க்கும் மண்பற்றிய தகவல்கள் தரும் பெரும் முனைப்பு இதில் இல்லை. ஏனென்றால் இந்த நாவல் அப்படிப்பட்டத் தகவல்களைத் தரும் முனைப்புடன் எழுதப்பட்டது அல்ல. இது மண்ணின் மர்மங்களை, புதிர்களை விடுவிக்கப் புனைந்த கதை அல்ல. ஒரு பெண் மண்ணுக்கு ஆசைப்பட்டு, அவள் மூலம் பலனடைய நினைக்கும் சில ஆண்களின் திட்டத்தால் ஒரு கொலைக்கு காரணமாவது பற்றியது. பழமொழிகள், வசவுகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், சினிமாபாணி ஜமீந்தார்கள் இத்தகைய பிராந்தியத் தகவல்களைக் கூறி நம் நாட்டிலும் வெளி நாட்டிலும் உள்ள ஆங்கில வாசகர்களுக்கு  பிராந்திய உவகை அளிக்கக் கூடியது அல்ல. என்னைப் பொறுத்தவரை அதுதான் அதன் பலம். சிலவற்றைச் சொல்லாமல் விடுவதை அறிந்தவர்கள்தான் படைப்பிலக்கியவாதியாகத் தகுதி உள்ளவர்கள். அவ்வளவு எளிதான ஒன்றல்ல அது. ஒரு கலாசாரத்தை முற்றிலும் மொழிபெயர்க்க நினைப்பது போன்ற முட்டாள்தனம் வேறு கிடையாது. சில புதிர்கள் விடுபடாமல் இருக்கட்டும். மீண்டும் மீண்டும் ஒரு படைப்பை வெவ்வேறு கால கட்டங்களில் அணுக அவை நம்மைத் தூண்டும். அப்படிப்பட்டப் படைப்புத்தான் நாகம்மாள். ஒவ்வொரு தசாப்தத்திலும்  இதை நாம் மீண்டும் படிக்க வேண்டும். படைப்பு மட்டுமல்லாமல் வேறுவித தாக்கங்கள் நம்மை அழுத்தி நாம் வேண்டாத திக்குகளில் வீண் பயணம் மேற்கொள்ள முயலும்போது ஒரு நல்ல இலக்கிய திசைகாட்டியாக இருக்கும் நாகம்மாள்

[ காலச்சுவடு வெளியீடாக, 2012இல், நாவல் மீள்பதிப்புக்கு முன்னுரையாக வந்தது.]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.