பனைமரமே, பனைமரமே

சிறுவயதில் கற்ற பனைமரப் பாட்டில் பனைமரமே தன் உபயோகங்களை நாட்டாருக்கு எடுத்துச் சொல்லும். வாழ்க்கையின் ஆதாரமாய் இருக்கும் பல விஷயங்களின் உபயோகத்தை எடுத்துச் சொன்னால்தான் தெரியவருகிறது. இல்லாவிட்டால் அசட்டையாக இருந்துவிடுகிறோம். இந்தப் பனைமரப் பாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எனக்கு நினைவுக்கு வருகிறது. மூத்த பெண் எழுத்தாளர்கள் மறையும்போதோ அல்லது அவர்கள் எழுத்தை மீண்டும் படிக்கும்போதோ, அந்த எழுத்தின் தன்மையை, அதன் தாக்கத்தை, இலக்கிய சரித்திரத்தில் அதன் இடத்தை ஏன் யாரும் எடுத்துச் சொல்லாமல் விட்டுவிட்டார்கள், ஏன் ஒரு வகைப்பட்ட  எழுத்தின் சரித்திரம் புதைக்கப்பட்டோ, விளிம்புகளிலிருந்து தொங்கிக்கொண்டோ இருக்கிறது என்ற கேள்வி எழும். அப்போது இப்படி எழுத்து மூலம் எந்தவித ஆரவாரமும் இல்லாமல் பெரிய பங்களிப்பைச் செய்துவிட்டு அமைதியாக, ஒரு யோகியின் சாந்தத்துடன் இருந்துவிடும் எழுத்தாளர்களுக்கான பனைமரப் பாட்டை பாடும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று தோன்றும். சில சமயம் அவர்கள் எழுத்தின் மறுபதிப்புகள் மிகச் சாதாரண வடிவில், இரண்டாந்தரப் பதிப்புகளாய், பின் அட்டையில் ஒரு மூலையில் எந்தவித விவரமும் இல்லாமல் ஒரு சிறு புகைப்படம் மட்டும் அச்சிடப்பட்டு வரும்போது, அடிவயிற்றிலிருந்து ஓர் ஆங்கார அலை எழும்பும். ”அடேய் பதிப்பகப் பாவிகளா! இளம் எழுத்தாளர்களின் புகைப்படங்களை அழகாக பெரிதுபடுத்திப் போட்டு, அட்டகாசமாய் புத்தகம் அச்சிட்டு விற்கும் உங்களுக்கு மூத்த எழுத்தாளர்களை மதிக்கத் தெரியவில்லையே!” என்று அலறத் தோன்றும். அந்த அலறலின் முத்தாய்ப்புத்தான் நான் பாடத்தொடங்கியிருக்கும் அவர்களுக்கான பனைமரப் பாட்டு. இந்தப் பாட்டு என் திருப்திக்காக; எனக்காக. இதனாலெல்லாம் பாதிக்கப்படாத உயரத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.

பனைமரங்களின் சலசலப்பு, அதனுடன் ஒட்டிய வாழ்க்கை முறை, அதில் ஊடுருவியிருக்கும் சாதி மற்றும் உயர் மட்டக் குடும்பங்களின் திமிர் இவற்றைக் களமாக்கி எழுதியிருக்கும் நாவல் புத்தம் வீடு. 1964இல் புத்தம் வீடு வெளிவந்தபோது நான் அப்போதுதான் ராஜம் கிருஷ்ணன், ஆர்.சூடாமணி, ஆர்.வி, குமுதினி, குகப்ரியை, சாவித்திரி அம்மாள், சரஸ்வதி அம்மாள், “லக்ஷ்மி”, கல்கி, தேவன், நா.பா, ஜெயகாந்தன் இவர்களுடன் தி.ஜானகிராமன், லா.ச.ரா போன்றவர்களையும் படிக்க ஆரம்பித்திருந்தேன். காமமே இல்லாத காதலை மையமாக்கி ஒரு நாவல் எழுதி கலைமகளில் இரண்டாம் பரிசும் வாங்கியிருந்தேன். முதல்முதலாக சென்னையில் தங்கி தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் எம்.ஏ படிக்க வந்திருந்தேன். புத்தம் வீடு என் கவனத்திற்கு அப்போது வரவில்லை. 1967இல் பி.எச்.டி செய்ய டெல்லி வந்தபோது பல ஆண்டுகளாக அங்கே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த நண்பர் கே. என். ராமச்சந்திரன் ஒரு முறை என்னையும் இன்னொரு நண்பரையும்  கரோல்பாகிலிருந்த தன் அறைக்கு வருமாறு அழைத்தார். அங்கு போனபோது, “எழுதறேன்னு சொல்றயே? இதைப் படிச்சிருக்கியா?” என்றவாறு புத்தம் வீடு நாவலைத் தந்தார். ஹாஸ்டல் அறைக்கு வந்தவுடன் படிக்க ஆரம்பித்து முடித்துவிட்டேன். மூன்று ஆண்டுகள் தாமதமாக இதைப் படிக்கிறோமே என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது.

இலக்கிய எழுத்தாளர்கள், விமர்சகர்கள், கே. என். ராமச்சந்திரன் போன்ற தரமான இலக்கிய வாசகர்கள் இவர்களுடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு நான் படிக்காமல் விட்ட எழுத்தாளர்கள் பற்றிப் பேச்சு வரும்போது ஹெப்ஸிபா ஜேசுதாசன் பற்றியும் பேசியிருக்கிறோம். நான் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆராய்ச்சியை 1974 இல் தொடங்கியபோது “ஹெப்ஸிபா ஜேசுதாசனை மறந்துவிடாதே” என்று நினைவு படுத்தினார் வெங்கட் சாமினாதன். புத்தம் வீடு நாவலை மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். இடையில் அது பற்றி சி.சு.செல்லப்பா கூறியதையும் எங்கேயோ படித்திருந்தேன். நன்றாக ஆரம்பித்த ஒரு நாவல் சாதாரணக் காதல் கதையாக மாறிவிட்டது முடிவில் என்று அவர் கூறியிருந்தார். என் மனத்தின் மூலையில் அந்த விமர்சனம் பதிந்து போயிருந்தது. மேலும் 1974இல் என் நோக்கு பல வகையில் மாறியிருந்தது. காதல் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று தோன்றியது.

ஹெப்ஸிபா ஜேசுதாசனை நான் நேரில் சந்தித்தபோது பல விஷயங்களைப் பேசினோம். மிகவும் எளிமையான மனுஷி அவர். பழக இனிமையானவர். கிறிஸ்துவ மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். தமிழ் இலக்கியம் பற்றியும் அவர் வாழ்க்கை பற்றியும் அவரிடமும் பேராசிரியர் ஜேசுதாசனிடமும் நிறையப் பேசினேன். திரும்பி வந்தபின் புத்தம் வீடு நாவலை மீண்டும் படித்தபோது அதன் நயமும், அதன் எளிமையும், சுருங்கச் சொல்லும் தன்மையும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. இருந்தாலும் அதில் காதல் இருந்ததே! சி.சு.செல்லப்பாவின் விமர்சனம் வேறு மனத்தில் கொக்கிபோல் மாட்டிக்கொண்டிருந்தது. என் ஆராய்ச்சி புத்தகத்தில் (Face Behind the Mask) இந்தக் காதல் பற்றி ஒரு குறையாய்க் கூறியிருந்தேன். பிறகு வந்த ஆண்டுகளில் பல முறைகள் நான் புத்தம் வீட்டுக்குப் பயணம் போனேன். அப்போது அது வேறு பல விதங்களில் என் மனத்தில் உருப்பெற்றது. எதையும்  உரத்துக் கூறாமல் நயமாகத் தொட்டுவிட்டுச் சென்றுவிடும் அதன் தன்மை மீண்டும்மீண்டும் என்னை ஈர்த்தது. சுதந்திரத்திற்கு முன்னால் உள்ள ஆண்டுகளில் குடும்பத்தின் கட்டுப்பாடுகளால் பிணைக்கப்படும் லிஸியின் சிறுவயதுப் பருவத்தை “சிறை வாசம்” என்ற அத்தியாயத்தில் கூறினாலும், அதில் அந்த வாழ்க்கை முறையின் விவரப் பட்டியல் இல்லை. அவள் வீட்டிலேயே முடக்கப்பட்டு இருப்பதை பழந்தமிழ் பழக்கமான “இற்செறிப்பு” பழக்கத்துடன் ஒப்பிடுகிறார். பெண்கள் இவ்வாறு வீட்டினுள் முடங்கிப்போவதை கோபத்துடனும் ஆவேசத்துடனும் கூறாமல் ஓர் எள்ளல் தொனியில் இவ்வாறு கூறுகிறார்:

“…பனவிளைப் புத்தம்வீட்டார்க்குச் சங்ககாலப் பழக்கங்கள் ஒன்றும் தெரியாது. அதற்குள்ள தமிழ் ஞானமும் அவர்களுக்குக் கிடையாது. ஆனால் தலைமுறை தலைமுறையாக வரும் வழக்கம் மட்டும் நன்றாகத் தெரியும். லிஸிக்கு வயது பதினான்கு ஆகிறது. ”பெரிய பிள்ளை” ஆகிவிட்டாள். ஒற்றைத் தாவணி அணிந்து விட்டாள். ஆகையால் இற்செறிப்பு மிகவும் அவசியமாகிவிட்டது. நீங்கள் லிஸியின் முகத்தைப் பார்த்தால் அவள் கண்கள் மட்டும் உங்களிடம் “ஏன்? ஏன்?” என்று கேட்பது போலிருக்கும். ஆனால் இதற்கெல்லாம் போய்த் துயரப்படாதேயுங்கள். துயரப்பட்டால் தமிழ்நாட்டின் மற்றப் பெண்மணிகளின் துயரங்களுக்கெல்லாம் எப்படி கணக்கெடுக்கப் போகிறீர்கள்?…”

இப்படி எல்லா விவரங்களும் ஒரு சூசகமாகவே வெளிப்படுகிறது நாவலில். நொடித்துப்போன குடும்பத்தின் நிலை, அதிலுள்ள குடித்துக்கொண்டும், மிரட்டிக்கொண்டும் இருக்கும் உபயோகமில்லாத இரு மகன்கள், குலப்பெருமையை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு இன்னமும் அதன் பெருமிதத்தில் இருக்கும் உடல் நலிவுற்ற ஒரு வயோதிகர், இந்தக் காலி பெருங்காய டப்பா குடும்பத்தின் அத்தனை வீட்டு வேலைகளையும் செய்யும் பெண்கள் என்று அனைத்து விவரங்களும் ஒரு பெரிய கித்தானில் அடர்த்தியான வண்ணங்களோ, செதுக்கப்பட்ட உருவ அமைப்போ இல்லாத கீற்றோவியங்களாக உருப்பெறுகின்றன. தலையணைப் பையில் பஞ்சைத் திணிப்பது போல் விவரங்களைத் திணிப்பது எளிது. ஆனால்

கீற்றுகள், கோடுகள், புள்ளிகள் இவற்றைக் கொண்டு ஒரு பிரும்மாண்டமான உலகின் தன்மையை வெறும் சூசகங்களாக உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. ஹெப்ஸிபா சொல்வதை வைத்து அல்ல, சொல்லாமல் விடுப்பதை வைத்து நாவலின் வீச்சு அமைகிறது. இதில் வரும் காதலும் அந்த மாதிரி ஒரு சூசகம்தான். காதல் என்ற சொல்லே பேசப்படாத காதல். ”நல்ல கீரை விதை இருக்கிறது. வேணுமா?” என்று கேட்டு ஒரு பெண்ணின் மனத்தை அறிய முயலுவது, அவள் கீரை விதையை வாங்கிக் கொண்டு தன் மனத்தை வெளிப்படுத்துவது எல்லாம் அந்திமாலையில் தெரியும் நிழலுருவங்களாய், தீர்க்கமாக, அசைவுகளுடன்  ஆனால் பளீரென்று முகத்தில் அறையாமல் உருவாகின்றன. அந்தக் காதல், பனையேறிகள், முதலாளிகள், ஒடுக்கப்படும் பெண்கள், வர்க்கத் திமிர் எல்லாவற்றையும் திருப்பிப் போடப்போகும் காதல். அழுகையுடனும்,  தவிர்க்க முடியாத ஒன்றை ஏற்றுத்தானாக   வேண்டும் என்ற தோல்வி உணர்வுடனும், லிஸிக்கு வேறு கதியில்லை என்பது போலவும் குடும்பமும் அக்கம் பக்கத்தவர்களும் இந்தக் காதலை ஏற்றாலும், ஓர் இளம் உபதேசி, பனையேறிகள் குடும்பத்தினரின் தலைமுறைத் தொழிலை மாற்ற வந்த ஒரு டாக்டர் இவர்கள் இருவரும் அதிகம் பேசாமலேயே லிஸி-தங்கராஜ் காதல், இனி வரப்போகும் காலத்தின் ஒரு பெரிய மாற்றத்தின் சூசகம் என்று     சொல்லிவிடுகிறார்கள்.   லிஸி சிறு வயதில் தங்கராஜின் புத்தகத்தில் மறைத்து வைத்துக் கொடுத்த மயிற்பீலியைப் போல் பல சரித்திர மாற்றங்களைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் காதல் இந்தக் காதல்.

புத்தம் வீட்டின் அருகே ஒரு பனையேறி ஓர் ஏக்கர் நிலம் வாங்கியாகி விட்டது. அவர் மகன் புத்தம் வீட்டின் மகளை மணக்கப் போகும் காலமும் வந்துவிட்டது. ஒர் இளம் உபதேசி பனையேறிகளின் சார்பாக பேச வந்தாயிற்று. அந்தக் காலத்து எண்ணங்களின் ஆணிவேராகத் தன்னைப் பாவித்துக்கொண்ட ஒரு முதியவர் விலகி வழிவிட்டாயிற்று. லிஸி புன்னகை பூக்க ஆரம்பித்தாயிற்று. அது வெறும் புன்னகை இல்லை. அவள் மனத்தின் அழகையே அவள் முகம் மூலம் காட்டும் புன்னகை. சமையலறை இருட்டிலும், வீட்டின் இருண்ட பகுதிகளிலும் இருந்துகொண்டு, இதுவரை புன்னகையே பூக்காத அவள் முகத்தில் புன்னகை மலர்ந்து அவளை ஓர் அழகியாக மாற்றுகிறது. வெறும் காதல் கதை இல்லை இது; ஒரு யுக மாற்றத்தின் குறியீடு என்றுதான் சொல்ல வேண்டும். அதை இவ்வளவு சுருக்கமாக, ஆதார சுருதி ஓங்காரமாய் ஒலிப்பது போல் படைத்திருக்கும் ஹெப்சிபாவின் கைகளுக்கு ஒரு முத்தம் கொடுக்கத் தோன்றுகிறது. இதை மறு பதிப்புச் செய்யும் காலச்சுவடு நிறுவத்தினர் என்னுடைய இந்த முத்தத்தின் பிரதிபலிப்பாக இதை மிகவும் சிறப்பாகக் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன். [மும்பாய், 29 செப்டெம்பர், 2009 ]

[ இந்தப் புத்தகத்துக்கு, காலச்சுவடு வெளியீட்டில் முன்னுரையாக 2014 ஆம் ஆண்டு பிரசுரமானது]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.