நூறாண்டு! நூறாண்டு! பலகோடி நூறாண்டு!

சொல்வனம் 200வது இதழை வெளியிடும் தருணத்தில் மனிதர்கள் நூறு வயதிற்கு மேல் வாழ்வதும் சகஜமாகிவிட்டது. இந்து சம்பிரதாயத்தில் 60 வயது பூர்த்தியானதைக் கொண்டாடுவது ஒரு வழக்கம். இதன் காரணம், அன்று 60 வயதைத் தாண்டுவதே கடினமாக இருந்தது என்று பல பேர் நினைக்கலாம். ஆனால் இந்து சாஸ்திரம் சஷ்டி அப்த பூர்த்தி என்றழைக்கும் சடங்கு, நம்மை 60 வயது வரை கண்காணித்துக் காப்பாற்றிய 60 தேவதைகளை நினைவு கூறவும், அவர்களை மகிழ்விக்கவும், அடுத்த 60 வருடங்களுக்கு இப்புவியில் சுகமாக வசிக்க அத்தேவதைகள் உதவுவதற்கும் செய்யப்படும் சாந்தி சடங்கு என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இந்து சாஸ்திரம் மனிதர்களின் ஆயுட்காலத்தை 100-120 வருடங்களாக கணித்திருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. காஸ்ட்கோ நிறுவனத்தின் மாத சஞ்சிகை, 105 வயதான ஒருவர் 97 வயதான மனைவியுடன் மாதம் ஒரு முறை அவர்களுடைய அரிசோனா மாநிலக் கிளை உணவுக்கூடத்தில் புசிக்கிறார்கள் என்று சிரித்த முகத்துடன் உள்ள அவர்களுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. ஒரு குஜராத்தி அன்பரை ஐடகோ மாநிலத்தில் சந்தித்தபோது அவர் அவர் சமீபத்தில் கலிஃபோர்னியாவிலிருந்து அம்மாநிலத்திற்குக் குடியேறியுள்ளதாக கூறினார். ஏனென்று நான் வினவியதற்கு அவர் கூறிய பதில் என்னை வியப்படைய வைத்தது.  “எங்கள் சமூகத்தில் 60 வயதைத் தாண்டியவுடன் வேலை செய்தது போதும்! வயதாகி விட்டது! ஒரு மூலையில் உட்கார்ந்து கொள் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். அதற்கு பயந்து கொண்டே இம்மாநிலத்திற்கு குடி பெயர்ந்து விட்டேன்,” என்றார். இவரை நம்புவதா, அல்லது எண்பது வயதிற்கும் மேலான குஜராத்தி சமூக வயோதிக வாலிபர்கள் தாண்டியா ராஸ் நடனத்தில் மணிக்கணக்காக ஆடுவதை நம்புவதா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று புரிந்தது, 60 வயதானாலும் சரி 100 வயதானாலும் சரி, பெரும்பாலான மனிதர்கள் கஷ்டமோ, நஷ்டமோ தங்கள் வாழ்வு முடிவதை விரும்பவில்லை என்றே தோன்றுகிறது.

பலகோடி நூறாண்டு எனும் வாழ்த்தும் இந்துக்களின் மறுபிறப்பு நம்பிக்கையையும் பலகோடி ஜென்மங்களிலும் நூறை எட்ட வேண்டும் எனும் அவாவையுமே ஊர்ஜிதப்படுத்துகின்றன.

மூப்பியலும் (ஜெராண்டாலஜி), நீடித்த வாழ்நாளையுடையவர்களின் (எக்ஸெப்ஷனல் லாஞ்செவிட்டி) எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேபோவதால் இதன் காரணங்களை ஆராய்வதில் அக்கறை எடுத்துக்கொண்டுள்ளது.  நீடித்தவாழ்வு இன்னும் ஒரு வரையறுப்புக்குட்படுத்தப் படவில்லை. ஆனால் இவர்களிடம் பொதுவாக அமைந்துள்ள இயல்புகள் பற்றிச் சில கருத்தாக்கங்கள் கிட்டுகின்றன. (1) இவர்களது உடல்வயது காலவயதை ஒட்டியதாக இல்லை (2) செயற்பாடுகள் காலவயதிற்கேற்பக் குறைவதில்லை. குறைந்தாலும் அக்குறைபாடுகள் மிக மெதுவாகவே அவர்களை பாதிக்கின்றன இந்நீடிப்பில் பரம்பரை, சுற்றுப்புறம், சுற்றுச்சூழல், வளரும் இடம் ஆகிய அனைத்திற்குமே பங்குஉண்டு என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன

நூறு வயதினர்

1995ல் செய்யப்பட்ட ஒரு மதிப்பீடு, ஜப்பான், சுவீடன்போன்ற குறைவான இறப்பு உள்ள நாடுகளில், பெண்கள் நூறு வயதை எட்டுவது 200 மில்லியன் நபர்களில் ஒன்றிலிருந்து 50க்கு ஒன்றாகக் குறையலாம் என்று அறிவித்தது.   2009 வெளியீட்டில் இந்த எண்ணிக்கை இரண்டில் ஒன்றாக குறைவதற்கு வாய்ப்புள்ளது என்று சொல்லியது.[i]   

தற்சமயம், அமெரிக்காவில் நூறு வயது முதியோர்கள் 5000ல் ஒருவராகும்; இந்த விகிதம், அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் மிக வேகமாகக் குறைய வாய்ப்புள்ளது [அதாவது மேலும் நிறைய மக்கள் 100 வயதைத் தாண்டுவது நேரும்].  ஜீன் கால்மெண்ட் எனும் ஃபிரெஞ்சுப் பெண்மணி 122 வயதுவரை வாழ்ந்து உலக சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். (இதை ஒரு ரஷ்ய விஞ்ஞானி சமீபத்தில் மறுத்துள்ளார்.) ஜப்பானில் கிமூரா என்பவர் 1993ல் 116 வயதில் மரணமெய்தினார்

மனிதர்களின் வாழ்நாட்கால அளவும் சராசரி மனிதர்களின் ஆயுட்காலமும் அதிகரித்திருந்தாலும் கூட அதிகபட்ச ஆயுட்காலம் மாறவில்லை. கடந்த இருபது வருடங்களில் நீடித்த வாழ்நாளையுடைவர்களின் மரண காலம் தள்ளிப் போகவில்லை.

நூறு வயதினரில் சுமார் 43% நபர்கள், 80 வயதை கடக்கும் வரை ஞாபகமறதியைத் தவிர  மற்ற முதுமை சார்ந்த வியாதிகளால் பீணிக்கப்படுவதில்லை. 15% பேர்களை இவ்வியாதிகள் நூறு வயதிலும் அணுகுவதில்லை. 25% நூறு வயதினரின் ஞாபக சக்தி குறைவதேயில்லை. அவ்வாறு குறைந்தாலும் 92 வயதிற்குப் பிறகே அதன் அறிகுறிகள் தெரிகின்றன. புற்றுநோய், இரத்தக்குழாய் சம்பந்தப்பட்ட வியாதிகளும் நூறு  வயதினரிடம் கடைசிக் காலங்களில்தான் தோன்றுகின்றன.

நீண்டநாள்   வாழ்வோரின் இடத்திரள் (Geographic clustering)

ஓகினாவா என்னும் ஊரில் நீண்ட காலம் வாழும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களுடைய உணவு பழக்கங்களாவன:

“ஹரா ஹேசி பூ”- இதன் பொருள் “வயிறை 80 சதவீதத்திற்கு மேல் நிரப்பாதிருத்தல்.”

வானவில் உணவு: பல நிறங்கள் கொண்ட காய்கறிகளும் பழங்களும் சேர்ந்த உணவு வகைகள்.

சோயா பீன்சிலிருந்து கிடைக்கும் புரத சத்து.

இவர்கள் உட்கொள்ளும் கலோரி அளவு மிகக்குறைவாக இருப்பதும் அவர்களுடைய நீடித்த ஆயுளுக்கு காரணமாக இருக்கலாம்.  கலோரிக் கட்டுப்பாடே 1880ல் அமெரிக்காவில் பிறந்த நூறு வயதினரின் ஆயுளுக்கும் காரணமாகக் காட்டப்படுகிறது

அட்ரினல் சுரப்பி சுரக்கும் டி அன்ரோ ஏபிஆன்ட்ரோ ஸ்ட்டிரோன் (Dehydroepiandrosterone) எனும் இயக்குநீரின் அளவு மனிதர்களின் நீடித்த ஆயுளுக்கு ஒரு குறிப்பீடாகும் இந்த இயக்குநீரின் அளவு ஒகினாவா நூறு வயதினரிடம் மிக மெதுவாகவே குறைவது தெரிய வந்துள்ளது கலோரிக் கட்டுப்பாடு விலங்காராய்ச்சிகளும் இம்முடிவிற்கே வந்துள்ளன.

சார்டினியா நாட்டில் ஒவோடா எனும் ஊரில் உள்ள மக்கள் நீண்ட ஆயுளை உடையவர்களாக இருக்கிறார்கள். இவ்வூர் மக்கள் வேறு ஊருக்குக் குடிபெயர்ந்தாலும் இந்நீண்ட ஆயுள் இவர்களை தொடருகிறது. 125 வயது வாழ்ந்த கிமூராவிற்கும் 90 வயது உறவினர்கள் இருந்தனர் இதன் காரணம் மரபு வழியாகவும் இருக்கலாம், கலோரிக் கட்டுப்பாடாகவும் இருக்கலாம்.

மரபுவழிக் காரணங்கள் 

எல்லா இனவர்க்கங்களிலும் ஆயுட்கால அளவில்   மிக்க வேறுபாடு இல்லை. ஒரே கருவிலிருந்து பிறக்கும் இரட்டையர்களின் வாழ்நாள் ஒரே அளவாகவே உள்ளது. குடும்ப நபர்களிடையேயும் ஆயுட்கால அளவு ஒத்திருக்கிறது. சில மரபணுக் குறைபாடுகள் இளமையிலேயே முதுமையைத் தோற்றுவிக்கின்றன.

நூறு வயதினரின் வம்சத்தினருக்கும் நூறைத் தொடுவது இக்காரணத்தினால் சுலபமாக உள்ளது. ஜீன் கால்மென்டின் தந்தை வழியில் வந்த 5 தலைமுறை முன்னோர்களும் நீண்ட நாள் வாழ்ந்திருந்தது இக்காரணத்தை நிச்சயப்படுத்துகிறது. மரபணுக்கரு வித்தியாசங்களினால் உண்டாகும் புரத மாற்றங்களால் ஆயுட்கால நீடிப்பு ஏற்படுவதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆயுட்கால நீடிப்பிற்கு மரபணுக்களின் உதவி 25 சதவீதம் மட்டுமே. மனிதர்களின் நடத்தை, சூழ்நிலை, சுகாதாரம் ஆகியவை மட்டுமே மீதி 75 சதவீதத்தை நிர்ணயிக்கின்றன.

பாலின வேறுபாடுகள்

பொதுவாக பெண்களின் ஆயுட்காலம் ஆண்களை விட அதிகம். பெண்குழந்தைகள் உயிரைத் தக்க வைத்துக் கொள்வதில் ஆண்குழந்தைகளை விடச் சிறந்தவர்களாக இருக்கின்றார்கள். 55 வயதிற்கு பிறகு 75 ஐ அடையும் வாய்ப்பு பெண்களுக்கு இரு மடங்காக அதிகரிக்கிறது. 75லிருந்து 85க்கு மேல் வாழும் வாய்ப்பு மேலும் இருமடங்காக அதிகரிக்கின்றது. மகப்பேறு வயதை தாண்டிய பின் நீண்ட நாள் வாழும் பெண்களின் குழந்தைகளின் மகப்பேறு வெற்றிகரமாக இருப்பதோடல்லாமல் பேரக்குழந்தைகள் உடல் நலமும் நன்றாக உள்ளது. இது தாய் வழிப் பாட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும். இளம் வயதுத் தாய்களின் குழந்தைகள், வயது முதிர்ந்த தாய்களின் குழந்தைகளை விட நூறு வயதை அடையும் வாய்ப்பு அதிகம். பெண்கள் ஆண்களை விட உயரக்குறைவாக இருப்பதற்கும் ஆண்களை விட அதிக நாள் வாழ்வதற்கும் காரணம் மனித வளர்ச்சி இயக்குநீர் (குரோத் ஹார்மோன்) பெண்களிடம் குறைவாக இருப்பதேயாகும்.

தாங்கு தன்மை

மன அழுத்தம் உடற்நோய்கள் ஆகியவற்றை எதிர்க்கும் அல்லது தாங்கும் சக்திக்கே தாங்குதன்மை என்று பெயர். இச்சக்தி மிகுந்து இருந்தால் பிற்காலத்தில் இது ஆயுளை அதிகரிக்க உதவுகிறது. இச்சக்திக்குக் காரணங்கள் கண்டறியப் படவில்லையாயினும் விலங்காராய்ச்சிகள் கலோரி குறைப்பைவிட தேகப்பயிற்சிக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. மனக்காரணிகளும் சமூகக் காரணிகளும் எந்த அளவிற்கு தாங்குதன்மையைப் பாதிக்கின்றன என்பதைப் பற்றி செய்யும் ஆராய்ச்சியின் அளவு சமீபத்தில் அதிகரித்துள்ளது. ஆனால் உடல்வளத்தைப் பாதிக்கும் காரணிகளும் அதை எதிர்க்கும் அல்லது தடுக்கும் காரணிகளும்தான் வயோதிகத்தில் ஏற்படும் வியாதிகளை தடுக்கவோ தள்ளிபோடவோ உதவுகின்றன. இந்த எதிர்ப்பு சக்தி நிறைந்திருப்பதே பல 80 வயதுக்காரர்கள் வயோதிக வியாதிகளால் முன்னரே பீடிக்கப்பட்டிருந்தாலும் 100 வயது வரை வாழ்வதற்கு காரணம்.

நூறு வயது வாழ்வது எவ்வாறு?

மஹாபாரதத்தின் அனுஷாஸ பர்வத்தில் 100 வயது வாழ்வதெப்படி என்று தருமன் பீஷ்மரை வினவியபோது பீஷ்மர் 50 காரணங்களை முன்வைத்தார். அக்காரணங்களில் நன்னடத்தையும் மிதமான உணவையும் குறிப்பிடுகிறார். தற்போதைய ஆராய்ச்சி என்னசொல்கிறதென்று பார்ப்போம்:

1.சரியான எடையை அடைவதற்கும் தங்க வைத்து கொள்வதற்கும் வேண்டிய கலோரி குறைப்பு.

2. உடற்பயிற்சி

3. உடல் நலத்தை பேணும் நன்னடத்தை

4. புகைபிடிப்பதை தவிர்த்தல்.

5. அளவுக்கு மீறி மதுபானங்கள் அருந்துவதை தவிர்த்தல்

6. சமூக வளாகங்களில் ஈடுபடுத்தி கொள்ளுதல், பிணைந்திருத்தல், அவ்வளாகங்களின் ஆதரவு.

உடல் நலத்தைக் கெடுக்கும் சுயநடத்தைதான் வியாதிச் சுமையிலும் அகால மரணத்திலும் பெரும் பங்கு வகிக்கின்றது. 40% அகால மரணங்களுக்கும் தடுக்கக்கூடிய மரணங்களுக்கும் ஆரோக்கியமற்ற நடத்தையே காரணமாக சுட்டிக் காட்டப்படுகிறது.

எல்லா இனங்களிலும் (மனிதர்களைத் தவிர) கலோரி சத்தை 30-60% குறைப்பதின் மூலம் ஆயுளை நீடிக்க முடியும் என்பது ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.

உண்ணும் உணவில் 20-25 % கலோரி சத்தைக் குறைத்து தொடர்ந்து 2 வருடங்கள் நடத்திய ஆராய்ச்சியில், சர்க்கரை, இன்சுலின், இதய ரத்தக்குழாய் அடைப்பு வியாதி ஆகியவை கணிசமாகக் குறைந்தன. ஆயுளை நீடிப்பதற்கு கலோரி சத்தை மிகக் கணிசமாக குறைக்கக வேண்டியிருக்கும். ஒகினாவாவாசிகளின் உணவும், அதனால் மெலிந்துள்ள உடலும் அவர்களுடைய கலாச்சாரத்தோடு ஒன்றி விட்டது. அதை மற்றவர்கள் நடைமுறையில் கொண்டு வருவது கடினம். மேலும் உணவுச் சேர்க்கைகள் (டயட்டரி சப்ளிமெண்ட்ஸ்) ஆயுளை நீடிப்பதாகத் தெரியவில்லை. சரியான எடையுள்ளவர்கள் உணவைக் குறைப்பதினால் ஆயுளை நீடிக்கமுடியுமா என்பதும் ஒருகேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆனால் சரியான எடையைப் பராமரிப்பதின் மூலம் மரணத்தை தள்ளிப் போடலாம். உடல் கனம் அதிகமாகவும் மிகக் குறைவாகவும் இருப்பவர்களிடையேதான் மரணம் அதிகமாக நிகழ்கிறது.

உடற்பயிற்சி ஆயுளை அதிகரிக்கின்றது என்பதில் சந்தேகமேயில்லை. வாரத்தில் 450 நிமிடங்கள் வேகமாக (லேசாக மூச்சு வாங்குமளவு அல்லது வேர்த்து விடுமளவிற்கு) நடந்தால் ஆயுளை 4 ½ வருடங்கள் நீடிக்கலாம். வாரத்திற்கு 150 நிமிடங்கள் நடையுடன் உடல் எடையை (பிஎம்ஐ 18.5 லிருந்து24.5) க்குள் வைத்திருந்தால் ஆயுளை 7½ வருடங்களுக்கு அதிகரிக்கலாம்.  

முதுமை கணிப்பு

ஒரு மனிதரின் முதுமை நிலையை முதுமையின் அறிகுறிகளின் மூலம் அறியலாம். அவையாவன:

1.முதுமை சார்ந்த வியாதி அல்லது இயலாமை 6 மாத இடைவெளியில் கண்டுபிடிப்பு

2.மருத்துவமனையில் சேர்த்த பின் இருக்கும் நாட்களின் நீட்டம்

3.நடைவேகம், கைப்பிடி வலிமை, சதைப்பற்று, இயங்குதிறன் (மொபிலிட்டி)

4.தினசரி வேலைகளைச் செய்யும் திறன்

5.கண் புரை

6.காது கேட்கும் சக்தி.

7.உடல் ஆட்டம் (பேலன்ஸ்)

8.பல் எண்ணிக்கை

9. 1 அல்லது 2 பெற்றோர்களும், 90 வயதை அடைந்தவர்களாக இருத்தல்

10. கல்வி அளவு

நீடித்த ஆயுளின் தாக்கங்கள்

நீண்ட ஆயுளை அனுபவிப்பவர்கள் இயலாமையை அனுபவிப்பது குறைவான நாட்களே. சமீபத்தில் அவர்களுடைய மரணகாலமும் குறுகியுள்ளது என்கிறது ஒரு ஆராய்ச்சி.  நீடித்த வாழ்வையுடையவர்களின் உடல் நல மதிப்பீடு உடல் வயதைக் கருதாது, கால வயதை மட்டும் கணக்கிலெடுத்து கொண்டால் மருத்துவர்கள் மதிப்பீட்டைச் செய்யாமலே இருக்கும் வாய்ப்புண்டு. இதனால் அவர்களது உடல்நலம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் செய்ய வேண்டிய சிகிச்சைகள் கிடைக்காமலும்   போகலாம்.

ஒருவருடைய உடல் உபாதைகளை உள்ளெடுத்து அவருடைய ஆயுட்காலத்தை சரியாக கணிக்கும் கணிப்புக்கருவியை உபயோகிப்பதன் மூலம் மருத்துவர்கள் செய்ய வேண்டிய மதிப்பீடுகளை சரியான காலங்களில் செய்யமுடியும். ஒருவருக்கு எஞ்சி இருக்கும் ஆயுட்காலம், 5 வருடங்களுக்குக் குறைவானதாக இருந்தால், உடல்நல மதிப்பீடுகளால் பயனில்லை என்பது இக்கணிப்புக்கருவி மூலம் தெரிய வந்துள்ளது.

ஆதாரம்: Exceptional Human Longevity, By Robert J Pignolo, Md, PhD; Mayo Clinic proceedings;January 2019;94(1);110-124.  


[i] இதன் பொருள்- முன்பு 200 மிலியன் பேரில் ஒருவர்தான் 100 வயதை எட்டுவர் என்றிருந்த நிலை மாறி, இப்போது 50 பேர்களில் ஒருவர் 100 வயதை எட்டும் அளவுக்கு மக்களின் ஆரோக்கியம் முன்னேறி இருக்கிறது என்பது. அந்த நிலையிலும் மேலும் முன்னேற்றம் எட்டியதால் சமீபத்தில் இருவரில் ஒருவர் 100 வயதைத் தாண்டும் அளவுக்கு நிலைமை முன்னேறி விட்டிருக்கிறது என்றாகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.