நீளாவுடன் நீளும் பயணம்

அந்தேரியிருந்து தஹிஸரில் இருக்கும் ஸ்பாரோ அலுவலகத்துக்கு விரைவு மின்வண்டியில் பயணம் செய்ய இருபது நிமிடங்கள் ஆகும். சன்னல் பக்கம் அமர்ந்துகொண்டு படிக்க ஏற்ற சமயம் அதுதான். ஒரு கதை அல்லது நாவலின் ஓர் அத்தியாயத்தைப் படித்து முடித்துவிடலாம் போகும்போது. வரும்போது அதை அசைபோடலாம். சிலரின் கவிதைப் புத்தகம் முழுவதையுமே படித்துவிடலாம் போகும்போதும் வரும்போதும். ஆனால் சில கவிஞர்களைப் படிக்கும்போது ஒரு கவிதையே பயணம் முழுவதும் உடன் வரும். அதன் சொற்களும், தொனியும், லயமும், அதன் மௌனமும் அது சுட்டிக்காட்டும் இன்னொரு வெளியும், அது மறைக்கும் உணர்வுகளும், அது லகானிட்டு வைக்கும் உணர்ச்சிகளும், பீறிட வைக்கும் எண்ணங்களும் மனத்தில் ஓடியவண்ணம் இருக்கும். பா. வெங்கடேசனின் கவிதைகள் அப்படிப்பட்டவை. கடந்த ஒரு மாதம் அவற்றுடன்தான் பயணிக்கிறேன். ஒரு முறை கவை. பழனிசாமிக்கு எழுதியபோது கவிதை பற்றி அதிகம் தெரியாததால் வெறும் தாள கதி, பிம்பங்கள், சொல்லாமல் உறைந்திருப்பவை  இவற்றைக் கொண்டுதான் நான் கவிதையை அர்த்தப்படுத்திக்கொள்கிறேன் என்று எழுதியிருந்தேன். அப்படித்தான் கவிதைகளை அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அதன் பிறகுதான்  கவிதைகளைப் படிக்கும் தைரியம் வந்தது!

வெங்கடேசனின் ஒரே கவிதை பல பிரதேசங்களைக் கடக்கிறது; சில இடங்களில் செல்லப் பிராணி போல பாய்ச்சல் காட்டுகிறது; விலகிப்போய் பின் நெருங்குகிறது. புரியவில்லை என்று நினைக்கும்போதே புரிந்துவிடுகிறது. முற்றிலும் சம்பந்தமே இல்லாத பிம்பங்களை எதுவோ ஒன்று கண்ணுக்குத் தெரியாத நூலிழைபோல பிணைக்கிறதே, அது எப்படி சாத்தியம் என்று நினைத்துக்கொண்டு பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென்று தினமும் காலையில் நான் ஒரு முறை கேட்கும், மேக் மல்ஹாரில் அஸ்வினி பீடே பாடும்  ஜமக ஜுகி ஆயீ, பதரியா காலீ (ஒளிர்ந்தபடி தாழ்ந்து வந்தன கரிய மேகங்கள்) பாடல் ஞாபகம் வந்தது. முதலில் ஜமக ஜுகி ஆயீ என்று பாடிவிட்டு ஆயீ என்ற சொல்லை விஸ்தரித்துவிட்டு ஹோ என்று அதிசயத்தைச் சொல்வதுபோல் ஓசையை எழுப்புவார். பிறகு பதரியா காலீ என்று மேகங்களை இசையால் வரைந்து கொண்டே போவார். ஒளிரும்  கரிய மேகங்களை நாம் உள்வாங்கிக்கொண்டிருக்கும்போதே ஜூலா (ஊஞ்சல்) என்று இடைவெட்டுவார். ஊஞ்சலா? எங்கிருந்து வந்தது ஊஞ்சல் என்று நினைக்கும்போதே ஜூலா ஜூலே நந்தகிஷோர் என்று கிருஷ்ணன் ஊஞ்சலாடுவதைக் கூறும் பாடல். ஒளிரும் கரிய மேகங்களிலிருந்து புராண வெளிக்குப் போய்விடும் பாடல். ஆனால் அவை இணைந்து வரும் பிம்பங்களாகவே படும் மனத்துக்கு. இந்த மாயத்தைச் செய்வது மேக்மல்ஹார் மட்டுமல்ல அதைப் பாடும் அஸ்வினி பீடேயும்தான் என்று நினைத்துக்கொள்வேன் அடிக்கடி. முற்றிலும் வேறான பிம்பங்களையும் பிம்ப வெளிகளையும் ஒரு பாடல் இணைக்கமுடியும் என்றால் ஒரு கவிதை அதைச் செய்யக் கூடாதா என்ன என்று நினைத்துக்கொண்ட கணம் வெங்கடேசனின் கவிதைகளைப் படித்து அவற்றை நான் நெருங்க முடியும் என்று நான் உணர்ந்துகொண்ட கணம்.

வாசிப்பவருடன் தொடர்ந்து ஓர் உரையாடலை நிகழ்த்தியவண்ணம் இருக்கும் (என்னுடன் நடக்கும் உரையாடல் அது என்று நான் நினைக்கும் அளவுக்கு நெருங்கி வந்து செவியில் ஒலிப்பவை; ஒலிக்காமல் மௌன மூச்சாய் செவியினுள் நுழைபவை) வெங்கடேசனின் கவிதைகளில் என்னை ஈர்த்தவை ஒரு லோபியைப்போல் அவர் மொழியை உபயோகிப்பது, பற்றிக்கொள்ளும் முன்பே நகரும் பிம்பங்கள், அந்த பிம்பங்கள் உருவாக்கும் அகன்ற பரிச்சயமற்ற வெளிகள், பரிச்சயமானவையும் வேறு உருக்கொள்ளும் உருமாற்றம், அழியும் கால எல்லைகள், உருவத்துடனும் உருவிலியாகவும், கனிந்தும் இறுகியும் ஒழுகியும் உறைந்தும் மௌனமாயும் ஒலியாகவும் அடிநீரோட்டமாய் இருக்கும் பெண்ணின் பால்தன்மை இவை என்று சொல்லலாம்.

என் நெருங்கிய நண்பர் ஏ.கே ராமானுஜத்திடம் படைப்பாளியான என் தோழி ஒரு முறை “ஒரு கவிதை முடிந்துவிட்டது என்று எப்படி நீங்கள் தெரிந்துகொள்கிறீர்கள்?” என்று கேட்டபோது “கவிதை முடிவதில்லை எப்போதும். ஒரு கட்டத்தில் நான் அதை விட்டுவிடுகிறேன்.” என்றாராம். எப்போது ஒரு கவிதையை அல்லது ஒரு படைப்பை விட்டுவிட வேண்டும் என்று சில படைப்பாளிகளுக்குத்தான் தெரியும் என்று நான் நினைப்பதுண்டு. வெங்கடேசனுக்கு அது கைவந்த கலையாக இருக்கிறது. ஒரு சொல், ஓர் அசைவு, ஒரு துளி மூச்சு கூட அதிகமாக இல்லாமல் அவர் சொற்களைப் பயன்படுத்துகிறார். பதினோரு வரிகளில் ஒன்றைச் சொல்லி முடித்த உணர்வு வந்ததும் அவர் கவிதையை விட்டு விலகிவிடுகிறார் அதைப் பேச விட்டுவிட்டு.

”வலியின் கடல்” கவிதை இதைக் கச்சிதமாகச் செய்கிறது. ஒவ்வொரு முறை படிக்கும்போது வேறு வேறு உணர்வுகளை உண்டாக்கும் கவிதை அது:

நிழற்பறவையின் சிறகுகளின் கீழ்

உன் கருவி நோக்கி அவள்

நடந்துவரும் பழுப்பு நிறப்

புகைப்படமொன்றைக் கண்டடைவாய்.

வலியின் அஸ்தியைக்

கரைத்துவிட்டுக் கரையேறும்

மந்தகாசம் முகத்தில்.

பறவையின் பிம்பத்தைத்

தக்கவைக்கப் போராடும்

கடலின் பதற்றம்

தண்டுவடத்தில்.

நிழற்பறவையிலிருந்து தண்டுவடம் வரை வந்து அதில் கடலின் பதற்றத்தை இறக்கிவிட்டுப் போகும் கவிதை. பழுப்பு நிறப் புகைப்படம், நடந்துவரும் அவள், வலி, கடல் எனப் பல கதைகளை இணைக்கும் கவிதை. இன்னும் அதில் சில கதைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

”புத்தொளி” கவிதையும் கோட்டுச் சித்திரம் வரைவதுபோல சில வரிகளில் ஒன்றை வரைந்துவிட்டுப் போகிறது:

பின்னலிலிருந்து சீப்பைக்

கழற்றியெறியும் உன் வழக்கமான

செய்கையில் சிறப்பாய்ச்

சொல்வதற்கு என்னயிருக்கிறது

மேலிருந்து வீழுமிந்த

மாலைக் கிரணம் சீப்பின்மேல்

அன்றாடம் பிரதிபலித்துச்

சோபையுறுகிறது என்பதைத் தவிர.

சீப்பின் மேல் பிரதிபலித்துச் சோபையுறும் கிரணம் என்ற வரி அன்றாட வாழ்வின் ஒரு நிகழ்வை ஓர் ஒளிச்சிதறலாய் கொட்டிவிட்டுப் போகிறது. சீப்பைக் கழற்றும் உடலசைவும், அதனால் ஆடியிருக்கக்கூடிய பின்னலும் பின்பு மாலைக் கிரணம் சீப்பின் மேல் படிவதும் ஒரு நடன நாடகம்போல நடக்கிறது கவிதையில். மாலையில் ஏழு மணிக்கு எழுதப்பட்ட கவிதை. அன்றோ என்றோ ஒரு மாலையில் நடந்து முடிந்த ஒன்றை நினைவுகூரும் கவிதை.

பிறகு அந்த ”சொல்லப்படும் நிலவு”. காட்சி ஒன்று நினைப்பாகும்போது அதன் மாறும் தன்மைகள் பற்றிய கவிதை. அது தனக்குரிய இடம், இயல்பு இவற்றிலிருந்து விலகி வேறு ஒன்றாகிவிடுவதைக் கூறும் கவிதை. வெகு சாதாரண வரிகளில், ‘பார்க்கப்படும் நிலவைப் போன்றதல்ல/சொல்லப்படும் நிலவு’ என்று தொடங்கி நதியின் அலைகளுடன் கரை ஒதுங்கும் அமிலக் கசிவுகள், திருவிழாக்கள், தனிமை, நிலவின் உதயம் இவற்றைக் காட்சியாக்கிவிட்டு பின்பு வேறு பல நிகழ்வுகள் அதே நிலவின் கீழ் நிகழ்ந்திருந்தாலும் நினைவுத் தடத்தில் இருப்பது அதே நிலவல்ல. அது நிலவாக விவரிக்கப்படும் ஆனால் நிலவல்லாத ஒரு நிலவு. அது “தீராத துயரம், காமம் மற்றும் வாதைகளின் உருவகம்” மட்டுமல்ல, அது இரவுகளிலிருந்து பிரிக்கப்பட்ட நிலவு. இந்தச் சொல்லப்படும் நிலவு நடனத்தில் விரகத்தைக் கூறும் பல பாடல் வரிகளையும் அவற்றை ஒட்டிய பிம்பங்களையும்  எனக்கு நினைவூட்டியது. அதே சமயம் சிறு வயதுப் பாடல்களையும், நிலவின் கீழ் நிகழ்ந்த பல நிகழ்வுகளையும் அசுத்தமான வர்ஸோவா கடலின் மேலெழும் நிலவையும், மொட்டைமாடியிலிருந்து பார்க்கும்போது எதிலும் ஒட்டாமல் வெண்பாலாய் ஒழுகும் நிலவையும் என்னால் நினைக்க முடிந்தது. அப்படி நினைக்கும்போது நிலவு இரவுகளிலிருந்தும் பிரிந்து என் நினைவுகளில் இணைந்துகொண்டது. இந்த அனைத்து அனுபவங்களையும் ஒரு கவிதையில் கொண்டுவந்திருக்கிறார் வெங்கடேசன். இது கட்டாயம் சொல்லப்படும் நிலவுதான். காரணம் காலை10-35க்கு எழுதப்பட்ட கவிதை இது!

மிகவும் அகன்ற ஒரு கித்தானில் வரையப்படும் கவிதைகள் இவை. புராதன வெளி, சரித்திர வெளி, பிற மொழி இலக்கிய வெளி, ஐரோப்பிய ஓவிய வெளி இவை எல்லாவற்றையும் தற்கால மொழியால் குதிரை போல் தடதடத்துக் கடந்து அவற்றினுள் பொதிந்துள்ள உறவுகளின் ரகசியங்களையும் அவை விட்டுச் சென்ற ஸ்தூலப் பொருட்கள் புது உரு, புது அர்த்தம் கொள்வதையும் ஒரு நிழல்போல் தொடரும் சாட்சியாய் நின்று விளக்கும் கவிதைகள். இது தவிர இக்காலத் தொடர்பு சாதனங்கள் உருவாக்கும் வெளிகளின் சிதறப்பட்ட ஒலிகள், வண்ணங்கள், உறவுகளின் துளிகள், துண்டிக்கப்படும் முழுமையாகாத உரையாடல்கள், சொற்களை எட்டாமலே உறைந்துவிடும் கனத்த மௌனங்கள் என வாழ்க்கைச் சித்திரங்களை உருவாக்கும் கவிதைகள். வாழ்க்கையுடன் மிகவும் நெருங்கிப் பிணைந்திருக்கின்றன எனக் கணிக்கும் வேளையிலேயே எல்லையில்லாப் பிரதேசங்களுக்கு இழுத்துச் செல்லும் கவிதைகள். இவ்வாறு எங்கெங்கோ இழுபடுகிறோம் என்று நாம் உணரும்போதே ஒரு கட்டத்தில் கவிதையின் இழுப்புக்கு நம்மை நாமே ஒப்படைத்து விடுகிறோம் ஒரு ராகத்தின் சுழல் இழுப்புக்குக் கட்டுப்படுவதுபோல. மொழி, இலக்கணம், வாழ்க்கை குறித்த பிம்ப மற்றும் கோட்பாட்டுக் கட்டுப்பாடுகள் தளர்ந்ததும் கவிதைகள் பல தடங்களை ஏற்படுத்தித் தருகின்றன அவற்றினுள் நுழைய; பல ரகசிய வாசல்கள் திறக்கின்றன கட்டுப்பாடின்றி உலவ.

கவிதைகளில் பெண்கள் ஸ்தூலமாகவும் நிழலாகவும் தம்பூராவின் சுருதியாக இருக்கிறார்கள். அபசுவரம் ஒலிக்காமல் கவிதைகளைக் காப்பாற்றுகிறார்கள். சுருதி குலையாத சாதகமாய் கவிதைகள் உருவாகியிருப்பதற்குக் காரணம் பெண் உடலும் பால்தன்மையும் அதன் இயல்பில், வக்கிரப்படுத்தப்படாமல், கொச்சையாக்கப் படாமல், வழக்கமான விவரணைகளுக்கு உட்படுத்தப் படாமல் அதன் போக்கில் விடப்பட்டு ஆழ்ந்த அன்புடனும், சற்றே அதிசயம் கலந்த வழிபாடு செய்யும் உணர்வுடனும் நோக்கப்படுவதால்தான். எத்தனை  பெண்கள் கவிதைகளில்! தேவதை என்று கூறிவிட்டதால் குழந்தையின் பீத்துணி தோய்த்தாலும் தனக்கான சிறகுகளைத் தேடும் பெண், இன்னும் ரோஜாப்பூவையும் கண்ணாடி வளையல்களையும் யாசிக்கும் பெண், அழிந்த சித்திரங்களாக உள்ள பெண்கள், பெருத்த முலைகள் உள்ள இயக்கியாய் அரவணைத்துக்கொள்ளும் பெண்கள், மகவுக்குப் பாலூட்டும் பெண்கள், கலவி கற்றுத் தரும் பெண்கள் எனப் பல பெண்கள்.

பெண்கள் உடலை வெளியாக்கும் கவிதைகளை பல பெண்கள் எழுதியிருக்கிறார்கள். வெங்கடேசனும் இதைச் செய்கிறார் முற்றிலும் புதிய அணுகுமுறையுடன். தொகுப்பின் முதல் கவிதை “கரிக்கும் பெண்” கவிதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். கடல்போல் திறக்கும் உடல் அவளுடையது; முங்குபவனின் வலையை நிரப்பி அனுப்புவது. காதல் அவளுக்குப் பிரசவ காலத்தில் போட்ட போதையூசி அனுபவம்தான் எனக் கூறி திடுக்கிட வைப்பவள் அவள். அகம்பாவி. இருந்தும் ”கருணையின் ஈரப்பதம் கசியும் தன் மையத்தின் அடங்காத புயற்சுழியை அவசரப்பட்டு” ஓர் ஆணின் “சாகசத்தின் ஆடுகளமாக” அனுமதிப்பவள். யோனியை உயிர்களை வெளியேற்றும் துளையாகவும், அனுமதியுடனும் அனுமதியின்றியும் மூர்க்கத்துடனும் கோபத்துடனும் பழிவாங்கவும் காதலுடனும் நுழைவதற்கான  பெண் உடலின் திறந்த வாயிலாகவும் கருதும் சூழலில் “கருணையின் ஈரப்பதம் கசியும் புயற்சுழியாய்” அது நோக்கப்படுவது மனத்தை இதமாக வருடியது.

“நீளா” கவிதை இதை வேறு விதமாகச் செய்கிறது. உருவிலியாக இருந்து விரல்களிலிருந்து தடை செய்யப்பட்டச் சொற்களை வழியவிடுபவள் இந்தக் கவிதைப் பெண். யாரும் எப்படியும் கற்பனை செய்துகொள்ளக் கூடிய பெண். தனிமையில் இருப்பவள். தன் சொற்களின் நிழலில் உருவாகுபவள். சொற்களின் நிழலில் உடலாகி, உருவிலியாக உடலைத் துறக்கும் இந்தக் கவிதைப் பெண் ஸ்தூல எல்லைகளைக் கடந்து இருப்பவள். எல்லையற்றவள். அப்படி இருப்பதாலேயே பல விளக்கங்களுக்கு உட்படுத்தப்படுபவள்; ஒரு விளக்கத்துக்கும் உட்படாதவள். புராணப் பெண் ஒருத்தியுடன் கவிஞரால் பிணைக்கப்பட்டத் தற்காலப் பெண். (நீளா விஷ்ணுவின் மனைவிகளில் ஒருத்தியாகக் கருதப்படுபவள். நிழல் வடிவத்தினள்; உருவிலி.)

இந்தப் பெண்கள் தரும் முத்தங்கள்தான் எத்தகையவை! சாதாரண முத்தங்கள் இல்லை. பெருமூச்சுடன் தரப்படும் “இயல்களால் கடக்கவியலாத” முத்தங்கள். முத்தத்தைத் தரும் பெண்ணும் யாசிக்கும் ஆணும் அதை வேறு வேறு விதத்தில் பார்க்கும் முத்தங்கள்:

முத்தம் எனக்கொரு வளர்ந்த ஆண்.

உனக்கு விரல்கள் தேவைப்படும்

நடக்கத் தெரியாத குழந்தை.

முத்தம் எனக்கொரு தீவு.

உனக்குக் கடற்கரை.

இப்பெண்களின் உரையாடல்களும் தனிச்சிறப்பு மிக்கவை. பேச்சாக அல்ல, பரிசாகத் தரப்படுபவை. “எப்போதும் ஒரு துளிக் கண்ணீர் பழுத்துத் தொங்கும் பளிங்குப் பாங்கான” உரையாடல்கள். கொடுஞ்சொற்களை அலைபேசி மூலம் வீசும் உரையாடல்கள். ஒலியாக வியாபிக்கும் உரையாடல்கள். முடிவிலியான பிரபஞ்சத்தில் “பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டைப்போல் அல்லது ஒரு பொன்மீனைப்போல் தனக்கான ஒரு புதிய இடத்தை” சிருஷ்டிக்க முயலும் சொற்களுடைய உரையாடல்கள்.    

கவிதைத் தொகுப்பை படித்து முடித்த பின்பும் என் ரயில் பயணங்களினூடே வாயில் அடக்கி வைத்திருக்கும் மிட்டாய் ஒன்றைச் சுவைப்பதுபோல மீண்டும் மீண்டும் நான் நினைவுபடுத்திக்கொண்டது மனத்தில் நிலைத்துவிட்ட சில சொற்கள். உருவகங்கள், நிகழ்வுகள் இவை எல்லாவற்றையும்தான். இறுக மூடப்பட்ட கதவின் வெளியே கதவினுள் உள்ள ரகசியத்தை உடைத்து பள்ளிச் சீருடையில் வரும் சிறுமி. வான்காவின் மஞ்சள் மலர்கள். சிலிர்த்துக்கொண்டேயிருக்கும் குளத்து நீரில் தத்தும் கல் தவளை. புகைவண்டியின் சன்னலூடே தெரியும் மயில் பின் வழி முழுவதும் உடன் வரும் மயில். சுடர்விடும் மார்புகளின் வகிடு. உத்திரங்கள் உள்ள அறையில் உலவும் கவிதை. “சற்றுப் பிசகினாலும் தத்துவங்களில் சரிந்துவிடும் பள்ளத்தாக்கின் விளிம்பில் துடித்துக்கொண்டிருக்கும்” கவிதை. அடங்கா அன்பும் முலைகளும் உள்ள இயக்கி.

சுந்தர ராமசாமியுடன் பலவித கருத்து மோதல்கள் இருந்தாலும் ஒரு படைப்பு ஏதோ வகையில் நம்மைத் தொட வேண்டும் என்பதில் எங்களுக்குக் கருத்தொற்றுமை இருந்தது. (என் எழுத்து அதைச் செய்வதில்லை என்பது குறித்து நாங்கள் பேசிக்கொண்டது வேறு விஷயம்!) அந்தத் தொடுகையை வெங்கடேசனின் கவிதைகள் செய்கின்றன. ”பிரதிகள் அபகரிக்கப்படுவதை புதிய தர்மசாஸ்திரங்கள் அனுமதிப்பதால்” இந்தக் கவிதைப் பிரதியை அபகரித்து அதை எனக்குரிய விதத்தில் என்னைத் தொட அனுமதித்து, அதன் ஒலியை அணில்போல் “கொறித்துக்கொண்டுவந்து, குறுந்துகள்களாகப் பரணில் சேர்த்து” என்னைப் புதைத்துக்கொள்வதுதான் நான் செய்யக்கூடியது. கவிதை பற்றி ஏதும் தெரியாத ஒருத்தி வேறு என்னதான் செய்ய இயலும்?

[கல்குதிரை பத்திரிகையில் பிரசுரமாகியது. தேதி?]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.