தோற்காத கடவுள்


‘அம்பை’ எனக்கு அவருடைய ‘ அம்மா ஒரு கொலை செய்தாள்’ என்கிற சிறுகதை மூலம் முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானார். அந்தக் காலக்கட்டத்தில் அந்தக் கதை தமிழ் பிராமணச் சமூகத்தில் பல கலாசார அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டுப் பண்பாட்டு வரலாற்றின் சாபக்கேடு, ‘புனிதம்’ என்பது பற்றிய கொச்சையான கருத்தோட்டங்கள். குறிப்பாக, சமூகத்தின் ஒரு வகுப்பினரைத் ‘தீண்டத் தகாதார்’ என்று ஒதுக்கி வைத்தது போல், பெண்களையும் சமூகத்தின் கீழ்த் தட்டில் வைத்துதான் பார்த்தார்கள். அதனால், பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் மாத நிகழ்வுக்கு அந்தப் பெண்ணே குற்றவாளி என்பது போல் அவளை அந்த மூன்று நாட்கள் வீட்டின் கொல்லைப் புறத்தில் ஒதுக்கி வைத்து, அவளுக்கு அப்பொழுதிலிருந்தே ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியது போல் ’உளவியல் கொலை’ வேறொன்றும் இருக்க முடியாது. 

இந்தக் கதைதான் லட்சுமியை (‘அம்பை’) யின் இலக்கிய, சமூக ஆர்வலர் முகத்தையும் அடையாளம் காட்டியது. 

அவரை நான் சந்தித்துக் ‘கணையாழி’க்குத் தொடர்ந்து கதைகள் கொடுக்கும்படிக் கேட்டேன். இதுவே எங்கள் நட்புக்கு அடிக்கல். 

‘அறைக்குள் இருந்தவன்’ என்று எழுதப் பட்ட அந்த அற்புதமான கதை தாலி காட்டியவன் என்ற ஒரு ‘புனித ஸ்தாபனத்தை’ ஒரு மனைவி தகர்த்தெறிந்த நிகஃழ்வைக் கூறுகின்றது! அதுதான் ‘இரக்கக் கொலை’ பற்றி எழுதப்பட்ட முதல் தமிழ்க் கதை என்று நினைக்கின்றேன். 

லட்சுமியின் சமீபக் காலத்துக் கதைகள் கோட்பாட்டு உறுதியடைய எந்த சிந்தனாவாதிக்கும் பிற்காலத்தில் ஏற்படும் ஏமாற்றந்தான். ஒரு காலத்தில் ‘முற்போக்கு வாதிகள்’ என்று அறியப்பட்டவர்கள் செய்து கொள்ளும் சமரசங்கள்தாம். ‘தோற்று விட்ட கடவுள்கள்’. எதுவும் நிறுவனமாக இறுகி விடும்போது நீர்த்துப் போய்விடுகிறது! இந்த ஏமாற்றமும், விரக்தியும் அவர் கதைகளில் நிழலிடுகின்றன 

லட்சுமி நினைத்திருந்தால் அவர் ஒரு ‘Ivy League’ பல்கலைகழகத்தில் பிரசித்தி பெற்ற பேராசிரியாக வந்திருக்கக் கூடும். ஆனால் அவர் -இந்தியச் சமூகத்தின் கடைநிலைப் பெண்களுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். அதுவே அவர் மன நிலை பலம். என்னை பொறுத்த வரையில் ‘தோற்காத கடவுள்’.