
1970 என் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத வருடம். அந்த வருடத்தில் எந்தக் கிரகம் எந்தக் கட்டத்திலிருந்து எந்தக் கிரகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது தெரியவில்லை. ஆனால் நான் மிகத் தீவிரமாக என் பள்ளிப் பருவத்து சினேகிதியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளுடைய சிறிய மறுப்பு கூட என்னை சில தூக்க மாத்திரைகளை விழுங்கி ‘உறங்குவது போலுஞ் சாக்காடு’ என்று செத்துப் பிழைக்க வைத்திருந்தது. இப்போது அது விஷயமில்லை. சாவைத் தொட்டுப் பார்த்து, புதுப்பிறவி எடுத்துத் திரும்பியிருந்த அந்த ஆண்டு நான் ஒரு தீவிர இலக்கிய வாசகனாகவும் மாறி இருந்தேன். என்னுடைய முதல் கவிதை ’கசடதபற’ இதழில் வந்திருந்தது. கணையாழி, தீபம் எனத் தொடந்து கவிதைகள் வந்தன. இதெல்லாம் என் நல்லூழா, தமிழ் வாசகர்களுடைய வல்லூழா என்று தெரியவில்லை.
இந்தச் சமயத்தில்தான் அம்பையின் ‘தனிமையெனும் இருட்டு’ என்கிற கதை கணையாழியில் வெளிவந்தது. கஸ்தூரிரங்கன் அதற்கு ஒரு குறிப்பு எழுதியிருந்தார். அது இந்த வடிவில் வந்திருந்த நினைவு. “ இந்தக் கதையை வேறு ஏதோ ஒரு இதழுக்கு (கலைமகள் ?) கதாசிரியர் அனுப்பி அது திரும்பி வந்து விட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார், இது அழகான ‘கணையாழிக் கதை’யாயிற்றே, இதை வேறு யாருக்கோ அனுப்புவானேன், நாங்களே பிரசுரிக்கிறோம்” என்று ”தனிமையெனும் இருட்டு” என்கிற கதைக்கு குறிப்பு எழுதியிருந்தார். அப்படித் தரமான கட்டியங்கூறலுடன் தீவிர இலக்கியவாதிகளுக்கு (!) அறிமுகமானவர் ‘அம்பை’. அதற்கு முன்பே அவர் கதைகள் எழுதி இருக்கிறார். நான் அவற்றைப் படித்ததில்லை. ’தனிமையெனும் இருட்டு’ என்ற அந்தக் கதையைப் படித்த உடன் ஆகா என்ன அருமையான கதை என்று தோன்றியது. அந்தக் கதை எனக்கு அவ்வளவு பிடித்துப் போக மேலே நான் சொல்லியிருக்கிற என் சுயபுராணமும் ஒரு காரணம். ஆனாலும் அந்த நடையும், கதையின் புதிய வடிவமும் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. வழக்கமான எடுப்பு தொடுப்பு முடிப்போ, காதல் மோதல் போல எதுவுமில்லாமல் இப்படியும் சிறுகதை எழுதலாமோ என்று தோன்ற வைத்தது.
கணையாழியைத் தொடர்ந்து கசடதபற இதழில் ஒரு கதை வந்தது. அவரது கதைகள் எல்லோரையும் ஈர்க்க ஆரம்பித்தது. அவரது தனித்துவமான பெயர், அவரது கதைகளுக்கு ஒரு தனி கௌரவத்தை வழங்கியது. வாசகர்கள் மத்தியில் அவரது கதைக்களன், கரு ஆகியவற்றின் தீவிரத்தோடு அவரது பெயர் பதிய ஆரம்பித்தது. (நான் ஏற்கெனவே மகாபாரதம் – ‘வியாசர் விருந்து’- படித்திருந்ததால் அந்தப் பெயரின் காத்திரத்தை நன்கு உணர முடிந்தது. பாரதத்தில் அம்பையின் பாத்திரப் படைப்பு பற்றி வண்ண தாசனிடம் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த நினைவு.) தீபம் இதழில் வெளிவந்த ”சூரியன்”, அவரது கதைக் களன்களில் இருந்தே வித்தியாசப்பட்ட, அதிர்ச்சி தரும் கதை. இன்றைக்கும் ஈழத்தமிழர்கள், குறிப்பாகப் பங்கருக்குள் வாழ நேர்ந்த பெண்களின் நிஜக்கதைகளைக் கேள்விப்படுகிறபோது தவறாமல் சூரியன் நினைவுக்கு வரும். அம்பையின் கதை வெளிவந்த சமயத்தில் வியட்நாம் யுத்தத்தின் பேரழிவு நிகழ்ந்து கொண்டிருந்த நேரம். 1972 தீபாவளி மலர் என்று நினைவு. அதில் என்னுடைய கவிதையும் வந்திருந்தது. அதே தீபாவளிக்கு சுதேச மித்திரன் தீபாவளி மலரில் அவரது ஆட்காட்டி விரல் என்ற கதையும் வந்திருந்தது. ஏனோ அது எனக்குப் பிடிக்கவில்லை. சூரியனின் தாக்கம் காரணமாக இருந்திருக்க்கும்.
அதுவரை அநுத்தமா, (திரிபுரசுந்தரி)லக்ஷ்மி, ராஜம் கிருஷ்ணன், சூடாமணி, போன்றவர்கள் எழுதும் கதைகளே வாசகப்பரப்பில் நடமாடி வந்தன. இந்துமதி, சிவசங்கரி வாசந்தி என்று ஒரு புது வரிசை. இதில் இந்துமதி எங்களுக்கு அறிமுகமானவர். அவர் நாவலாசிரியாகவே அறியப்பட்டிருந்தவர். மற்ற இருவரின் இயங்கு தளமும் வேறு. அவர்கள் எல்லோரும் வெகுஜன வாசிப்புக்காகத் தங்களைத் தகவமைத்துக் கொண்டார்களோ என்று எனக்குத் தோன்றுவதுண்டு. அப்புறம் அம்பையின் பிரபலமான “அம்மா ஒரு கொலை செய்தாள்” கதை கசடதபறவில் வந்தது. பெண் எழுத்தின் உச்சமாக இருந்தது அது. சிறுகதையின் உச்சம் தொட்ட கதை அது என்பேன். ’சிறகுகள் முறியும்’ என்கிற கதையைக் குறித்து நான் தஞ்சை பிரகாஷ், வண்ணநிலவன் மூவரும் திருநெல்வேலியில் வைத்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.அதன் தொடர்ச்சியாகவோ என்னவோ பிரகாஷ், அம்பையின் சிறுகதைத் தொகுப்பை, சிறகுகள் முறியும் என்ற தலைப்போடு முதன் முறையாக்க் கொண்டு வந்தார்.

அம்பை கதைகள் எழுதுவதோடு நிற்கவில்லை, தன்னை சமூகத்துடன் பிணைத்துக் கொண்ட சமூகப் போராளி, அல்லது சமூக விஞ்ஞானி எனலாம். அவர் வண்ண நிலவன், வண்ணதாசன் ஆகியோரது சிறுகதைகளின் ரசிகை. அத்தோடு அவருக்கு விமர்சனமும் உண்டு. அவர்கள் மூலமாக எனக்கும் நேரடிப் பழக்கம் உண்டு. ஆனால் அவர்கள் அளவுக்கு நெருக்கம் கிடையாது. ஒரு சந்திப்பின் போது அம்பை, ”அது எதற்கு கவிதைகளில் ‘சசி’யை விட மாட்டேன் என்கிறீர்கள்,” என்று கேட்டார். ”நான் அதை ஒரு குறியீடாகவே உபயோகிக்கிறேன்,” என்று பதில் சொல்லி இருந்தேன். அதனால் என்னை அவர் ஒரு adolescent எழுத்தாளராகப் பார்க்கிறாரோ என்று நினைப்பதுண்டு. ஏனெனில் சிலர் எனது சில காதல் கவிதைகள் காரணமாக அப்படிச் சொன்னதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது பேசுகையில் அவருக்கு என் படைப்புகள் மீது பிடிப்பு இருந்ததைத் தெரிய முடிகிறது.
ஒரு வேடிக்கையான சம்பவம். 1974-75 வாக்கில் இருக்கலாம். ’பிரக்ஞை’ பத்திரிகையின் ஒரு இதழுக்கு மட்டும் அம்பை கௌரவ ஆசிரியராக இருந்தார். நான் ஏற்கெனவே பிரக்ஞை இதழுக்கு ஒரு கவிதை எழுதி அனுப்பியிருந்தேன். வெளி வரவில்லை. அம்பை, சுந்தரராமசாமி நாகர்கோயிலில் ஏற்பாடு செய்திருந்த முதலாவது காகங்கள் கூட்டத்திற்கு வந்திருந்தார். தெறிகள் உமாபதிதான் கூட்ட ஏற்பாடு. நகுலன், நீல பத்மனாபன், கிருஷ்ணன் நம்பி, வண்ணதாசன், ‘இன்று’ சாமினாதன் என்று நிறையப் பேர் போயிருந்தோம்.
அந்தக் கூட்டத்தில் என்னை ஒரு கவிதை வாசிக்கும்படி உமாபதி கேட்டுக் கொண்டார். நான் பிரக்ஞைக்கு அனுப்பிய கவிதையை நினைவிலிருந்து எழுதி வாசித்தேன். அதனால் இரண்டு பிரதிகளுக்கும் கொஞ்சம் மாறுபாடு இருந்தது. கவிதையைக் குறித்து பலமான சர்ச்சைகள் கிளம்பின. ’இன்று’ சாமினாதன், ”நீங்கள், கவிதையில் வரிகளை மடக்கிப் போடும் போது பிரக்ஞை பூர்வமாகச் செய்கிறீர்களா,” என்று ஒரே கேள்வியைக் கேட்டுக் கொண்டிருந்தார். யார் யாரோ என்ன சமாதானம் சொல்லியும் ஏற்கவில்லை. நான் அதை ஒரு இடை வேளைக்காகச் (PAUSE) செய்கிறேன், சில சமயம் ஒரு உத்தியாகச் செய்வேன் என்றதையும் ஏற்கவில்லை. கூட்டமே இரண்டு கட்சியாகி விவாதித்துக் கொண்டிருந்தது. சுந்தரராமசாமி கூட மெதுவாக, என்னிடம், ”ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு விட்டு பூனை மாதிரி அமைதியா உக்காண்ட்ருக்கிங்களே கலாப்ரியா” என்று கிண்டலாகச் சொன்னார். அப்போது என்னிடம் அம்பையும் சொன்னார்,” இதை ஏற்கெனவே பிரக்ஞைக்கு அனுப்பி இருந்தீர்கள் அல்லவா, அது வேறு மாதிரி இருந்தது, இது நல்லா இருக்கு, அது ரொம்ப தன்னிரக்கமான தொனியில் இருந்தது, நான் தான் வேண்டாம் என்று தேர்ந்தெடுக்கவில்லை,” என்றார். என் ஒரு படைப்பு கூட வராத ஒரே இலக்கியப் பத்திரிகை ‘பிரக்ஞை’தான் என்பேன். அந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டது அம்பைதான்.
அதற்குப் பிறகு எனக்குத் திருமணமான புதிதில் வண்ணதாசன் வீட்டிற்கு வந்திருந்த அம்பை பக்கத்திலிருந்த எங்கள் வீட்டிற்கும் வந்து என் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார். “ஒங்க மனைவியை நிறையப் படிக்க வையுங்கோ, எழுத வையுங்கோ,” என்று சொல்லிக் கொண்டிருந்தார். நிறையப் படிக்கிறாள், இப்போதைக்கு எழுதுவதில்லை. எங்கள் இல்லறத்தில் அம்பையை நாங்கள் அடிக்கடி நினைத்துக் கொள்வோம். நீண்ட காலத்திற்குப் பின் அம்பையை நானும் என் மனைவியும் டில்லியில் வைத்து 2010 இல் மறுபடி சந்தித்தோம். அது ஒரு அருமையான சந்திப்பு. அம்பையுடன் சிற்பி, நாஞ்சில்நாடன், ரவிசுப்ரமணியன், இமையம், லிவிங்ஸ்மைல் வித்யா, கவிஞர் முத்துலிங்கம் பிரேம் என்று எல்லோரும் கூடி ஒரு இரவை மகிழ்ச்சி பொங்கக் கழித்தோம்.
அம்பை தமிழின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவர் தீவிரமான பெண்ணியவாதியானாலும் அழகியலோடு விளங்குபவை அவர் கதைகள். என்னைப் பொருத்து பெண்ணிய எழுத்தோ அல்லது வேறு விதக் கோட்பாட்டு எழுத்தோ வீரியமாக இருக்க அழகியலைத் துறந்தாலும் தவறில்லை. அம்பையிடம் இரண்டும் இயைந்து வந்தன. இப்போதைய கடைசிக் கதையான லாசரஸ் பறவை ஒன்றின் மரணம் வரை கூட அவர் தன் சிறப்பான எழுத்தை தொடர்ந்து வெளிப்படுத்துகிறார். அதாவது ஐம்பதாண்டுகள் ஆகி இருக்கின்றன, எங்கள் அறிமுகங்களுக்கும் எழுத்துக்கும். என்னைப் பொறுத்து சமகால இலக்கியவாதிகள் யாருடனும் எனக்கு அவர்கள் எழுத்தைத் தாண்டி அன்பும் நேசமும் உண்டு. அம்பையும் அதற்கு விதி விலக்கல்ல. அதனால் யார் படைப்பைப் பற்றி எழுதுவதானாலும் அவர்களைக் குறித்த நினைவுகள் தானே கிளர்ந்து விடுகின்றன. வாழ்க்கை மரமென்றால் அதன் இலைகள் நினைவுகள் எனலாம். ஞாபகக் காற்று மீட்டும்போதெல்லாம் இலைகள் ஆடத்தான் செய்யும். மரம் சும்மா இருந்தாலும் காற்று சும்மா இருக்க விடாதே.