ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது

.

தொடர்புள்ள பதிவு: …என்றார் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி – சொல்வனம் | இதழ் 227

இந்த மனிதரைப்பற்றி எப்போது முதன்முதலாகக் கேள்விப்பட்டேன்? பதின்மவயதில், பாடப்புத்தகத்தில் கவனமில்லாமல் குமுதம், கல்கண்டு போன்ற வார இதழ்களைப் புரட்டிக்கொண்டு, வீட்டில் திட்டுவாங்கிய எழுபதுகளின் காலகட்டம். ஒரு நாள் கல்கண்டு இதழின் டிட்பிட்ஸ்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு பக்கத்தில் சிறிய  ஜே.கிருஷ்ணமூர்த்தி படம். யாரிது? பெயரைப் பார்த்தால் யாரோ ஒரு தமிழ்க்காரர்போல் தெரிகிறதே. ’ஜே.கிருஷ்ணமூர்த்தி இந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளராகக் கருதப்படுகிறார். ஒரு தத்துவஞானியான இவர்..’ என்பதுபோல் தமிழ்வாணன் நாலு வரி எழுதியிருந்ததாக நினைவு.  நம் சமகால தத்துவஞானியா, தலைசிறந்த சிந்தனையாளரா.. ஒரு இந்தியரா? அதெப்படி நான் கேள்விப்பட்டதுகூட இல்லை என்று ஏதோ எல்லாவற்றையும் படித்துக் கடந்தவனைப்போல் மனதில் சிந்தனை வந்தது. கொஞ்ச நேரத்துக்குப் பின் அவரை மறந்துவிட்டேன். அடுத்த சில வருடங்களில் அவர்பற்றி மேற்கொண்டு ஏதும் படிக்கவில்லை, கேள்விப்படவில்லை.

எனது முதல் டெல்லி விசிட் முடித்து 1975- மார்ச் இறுதியில் ஒருநாள் காலை ஜி.டி.எக்ஸ்ப்ரஸில் மதராஸ் சென்ட்ரல் ஸ்டேஷனில் வந்திறங்கினேன். இரவில்தான் புதுக்கோட்டை செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸ். நிறைய நேரம் இருக்கிறதே. டிஃபன் காப்பி என்று முடித்து ஸ்டேஷனுக்குள்ளேயே இருந்த கடைகளை நோட்டம்விட்டபோது, ஹிக்கின்பாதம்ஸ் கண்ணில்பட்டது. ஏதாவது பத்திரிக்கைகள் வாங்கலாம் என நினைத்து அதில் நோட்டம்விட்டேன். சற்று உள்ளே பக்கவாட்டு ஸ்டாண்டுகளில் கலந்துகட்டியாக ஆங்கிலப் புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன். கேள்விப்பட்டதும், படாததுமாய் புத்தகங்கள், எழுத்தாளர்கள்.  அங்கே.. அது என்ன? ஒரு பெங்குவின் புத்தகத்தில் அந்த முகம்.. எங்கோ பார்த்ததாய் இருக்கிறதே. எடுத்துக் காண்பிக்கச் சொன்னேன் கடைக்காரரிடம். இவனா இதை வாங்குவான் என்கிற சிந்தனையில்  தயக்கத்தோடு எடுத்துக்கொடுத்தார். ’தி செகண்ட் பெங்குவின் கிருஷ்ணமூர்த்தி ரீடர்’ என்றது கையடக்கமாக இருந்த அந்தப் புத்தகத்தின் தலைப்பு. ஆ.. ஜே.கிருஷ்ணமூர்த்தி!  மனது வேகமாக அந்தப் பழைய கல்கண்டுப் பக்கத்தைக் காட்டியது. அட! அவர்பற்றியதா இது? செகண்ட் ரீடர்? அப்படியென்றால் ’ஃபர்ஸ்ட் ரீடர்’ என்று ஒரு புத்தகம்வேறு வெளிவந்திருக்கிறதா இவரைப்பற்றி? பின்பக்க அட்டையில், முன்னுரையில் என வேகமாகக் கண்ணோட்டினேன்.  முதல் பக்கத்தில் படிக்க ஆரம்பிக்க, ஜே.கே.யின் மாலைநடை ஒன்றின்போது அவர் பார்க்க நேர்ந்த இயற்கைச்சூழல்பற்றி எளிய ஆங்கிலத்தில் இதமான வர்ணனை. மனம் திளைக்க ஆரம்பித்த அந்த நொடிகளில்..  ’வாங்கப்போறீங்களா?’’ என்று சற்றே எரிச்சல்காட்டும் குரலில் வெட்டினார் கடைக்காரர். இல்லாட்டி அதக் திருப்பிக்கொடுத்துடு..இதெல்லாம் ஒனக்கு ஒத்துவராது என்பதுபோல் அலட்சியப்பார்வையுடன் கையை நீட்டினார். ’வாங்கிக்கிறேன்’ என்று அவரை எதிர்ப்பதைப்போல் சொல்லிவிட்டுப் பணம் கொடுத்தேன். புத்தகம் எனக்குச் சொந்தமாகிவிட்டது. இனி இந்தக் கடைக்காரரின் அரிப்பில்லை. அதனைப் பெருமையோடு தடவிப் பார்த்துக்கொண்டு பையில் பத்திரமாக வைத்தேன். வீடு திரும்பி, நிதானமாக படிக்கவேண்டும்.

கிராமத்து வேப்பமரத்தின்கீழே அமர்ந்து அதனை மெல்ல, மெல்ல அசைபோட்டிருக்கிறேன். 1895-ல் தென்னிந்தியாவில் மதராஸுக்கருகே ஒரு கிராமத்தில் ஏழை அந்தணக் குடும்பத்தில் எட்டாவது பிள்ளையாகப் பிறந்த ஜே.கிருஷ்ணமூர்த்தி, தன் 14-ஆவது வயதில் அவர், மதராஸிலிருந்து இயங்கிய சர்வதேச தியஸாஃபிகல் சொசைட்டியின் டாக்டர் அன்னி பெஸண்ட் மற்றும் நண்பர்களினால் பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்டு வளர்க்கப்பட்டது, பின் இங்கிலாந்தில் படித்தது, வளர்ந்தது, அவரது வாழ்வின் சோகங்கள், ஏனைய அனுபவங்கள், தனது 34-ஆவது வயதில் தன் பெயரில் ஏற்கனவே  1911-ல் உருவாக்கப்பட்டிருந்த ஆன்மீக இயக்கத்தைக் (The Order of the Star in the East) கலைத்தது, கூடவே ’இறுதி உண்மை என்பது தன்னைத்தானே ஒருவன் எல்லாவித கட்டுகளிலிருந்தும் முழுதுமாக விடுவித்துக்கொண்டாலன்றி, எந்த ஒரு மதத்தின் மூலமாகவும், நம்பிக்கை சார்ந்த குழுக்களின் மூலமாகவும் கண்டுபிடிக்க முடியாதது என அறிவித்தது, ‘நான் யாருக்கும் குரு அல்ல. எனக்கு எந்த சிஷ்யரும் இல்லை’ என அறிவித்து தன்னைச் சார்ந்தவர்களையும், தொடர்ந்தவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, பின்னர் வருடம் முழுதும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் அவர் நடத்திய, மனித வாழ்வினூடே உண்மையை நோக்கிய பயணம் தொடர்பான பிரசங்கங்கள் என அறிய அறிய மனம் ஆச்சரியமானது. எத்தகைய அதிசயப் பிறவி  இந்த ஜே.கிருஷ்ணமூர்த்தி. இவருடைய காலகட்டத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே ஒரு பெருமைதான் என்று சொல்லிக்கொண்டது மனம்.

ஜே.கிருஷ்ணமூர்த்தி பற்றிய புதிய வாசகர்களுக்கான அந்த பெங்குவின் புத்தகத்தில் எந்தப் பக்கத்தில், எங்கே ஆரம்பித்தாலும் கைபிடித்து அழைத்துச் செல்லும் ஜேகே-யின் சிந்தனைகள், வார்த்தையாடல்கள் மனதை பெரிதும் வசப்படுத்திவிட்டிருந்தன. வாழ்க்கையில் உருப்படியாக ஒரு நல்ல புத்தகம் வாங்கியிருக்கிறோம் என நினைத்தேன். அவர் சுற்றுப்புற இயற்கையை சொன்னாலும், மனதின் சிந்தனைவெளி தாண்டிய அனுபவத்தைக் கோடிட்டுக் காட்ட முயன்றாலும், ஒரு அதிசயமான நெருக்கத்தை அதில் கண்டுகொண்டேன். மனம் அந்த இளம்வயதில் இப்படி சந்தோஷப்பட்டது ஒரு அபூர்வ அனுபவம். 

மேலும் சிலவருடங்களுக்குப்பின்,  டெல்லியில் வெளியுறவுத்துறையில் பணி கிடைக்க, அங்கேயே வந்து தங்கிவிட்டேன். அந்த கிருஷ்ணமூர்த்தி புத்தகம் பக்கத்திலேயே துணையாக இருந்தது. அவ்வப்போது நேரங்கிடைக்கையில் மீண்டும் படித்துப் பார்ப்பேன். சில பத்திகளுக்குப்பின் சிந்தனையில் ஆழ்வதும், புத்தகத்தை வைத்துவிட்டு நடந்துகொண்டிருப்பதுமாக ஒரு  அனுபவம் தொடர்ந்தது. ஒருமுறை, அபூர்வமாகவே கிட்டும், கிட்டத்தட்ட ஒத்த சிந்தனையுடைய ஒரு மலையாள நண்பனிடம் அதுபற்றி பிரஸ்தாபித்திருக்கிறேன்.

அன்று காலையில் இந்தியன் எக்ஸ்ப்ரெஸைப் புரட்டியபோது உள்பக்கமொன்றின் ஒரு கால்பக்க விளம்பரம், மௌலங்கர் ஆடிட்டோரியத்தில் மூன்று நாட்களுக்கு ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பிரசங்கம் என்றது. டெல்லிக்கா வருகிறார் ஜேகே? மாலையில்தானே? விடக்கூடாது. போய்ப் பார்த்துவிடவேண்டியதுதான். மனம் படபடத்தது. 

அக்டோபர் 27, 1984. அப்போதெல்லாம் அக்டோபர் கடைசியிலேயே டெல்லியில் குளிர் மெல்ல அடிவைத்திருக்கும். இதமாகக் குளிர்ந்திருந்த அந்த மாலையில் சுமார் 5 3/4-க்கு  நண்பனோடு பார்லிமெண்ட் வளாகம் அருகிலிருக்கும் மௌலங்கர் ஆடிட்டோரியம் சென்றடைந்தேன். கட்டிட முன்பக்க புல்வெளியில் ஷாமியானா (வண்ணத் துணிப்பந்தல்) போட்டிருக்க, சிறிய மேடையில், மைக் ஒன்று நடுவில் வைக்கப்பட்டிருந்தது. முன் பரப்பியிருந்த நாற்காலிகளில் ஆட்கள் கிட்டத்தட்ட நிரம்பியிருந்தனர். ஜேகே நேரம் தவறாமைக்குப் பேர்போனவர். அவரது பிரசங்கம் சரியாக மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்துவிடும் எனக் கேள்விப்பட்டிருந்தேன். வந்திருந்தவர்களும் அவ்வாறே அறிந்திருப்பார்கள் போலும்  சில வரிசைகள் தள்ளி எங்களுக்கு உட்கார இடம் கிடைத்தது. வந்திருந்த கூட்டமே கொஞ்சம் விசித்திரமாகத்தான் இருந்தது. ஒரு பெரும் சிந்தனையாளர், தத்துவஞானி என அறியப்படுவதால் அவரின் பிரசங்கத்துக்கு வருபவர்கள் வாழ்ந்து களைத்த பெரியவர்களாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இத்தனை வருடங்களில் உலகின் சிலபகுதிகளிலாவது, எல்லா வயதுக்குழுவினரிடேயேயும் ஜே.கே.யை அறிந்திருந்தோருண்டு. அன்று வந்திருந்தது ஒரு கலவையான 250-300 பேர் அடங்கிய சிறுகூட்டம். முன் வரிசையில் ஒரு பக்கத்தில், தலைநகரின் அறிவுஜீவிகளென அறியப்பட்டவர்களில் எனக்குத் தெரிந்த சிலர் கண்ணில் பட்டார்கள். இந்தியன் எக்ஸ்ப்ரெஸின் ஆசிரியராய் இருந்த அருண் ஷோரி, கார்ட்டூனிஸ்ட் ஓ.வி.விஜயன் போன்ற சிலர். புத்த பிட்சுகள் சிலர் ஒரு ஓரமாய் உட்கார்ந்திருந்தார்கள். இளைஞர்கள் பலரில் கல்லூரி மாணவ, மாணவியர்போன்று தெரிந்த சிலர் தங்களுக்குள் மெல்லிய குரலில் பேசியவாறு காத்திருந்தார்கள். மத்திம வயது மற்றும் முதிய மனிதர்களிடையே சர்தார்ஜிகள் சிலர். கூட்டம் நிறைய ஆரம்பிக்க, ஐரோப்பியர்களைப்போல் தெரிந்த வெளிநாட்டுக்காரர்கள் சிலர் ஒரு பகுதியில் அமர்ந்தும், சிலர் நின்றுகொண்டும் இருந்தனர். அவர்களில் அழகிய பெண்முகங்கள் சில, வித்தியாசமான ஒரு சூழலுக்கு மேலும் களையூட்டின.  டெல்லியில் சுற்றிக்கொண்டிருந்த டூரிஸ்ட்டுகளாக இருக்குமோ அல்லது கிருஷ்ணமூர்த்தி ஃபௌண்டேஷனிலிருந்து சிலர் முன்னரே வந்திருக்கலாமோ? சரியாக 5.55-க்கு ஒரு வெள்ளைநிற அம்பாஸடர் அன்னம்போல் வந்து நின்றது. ஜேகே இறங்கி மெல்ல நடக்க, அவரை சிலர் மேடைவரை வழிகாட்டி வந்து உட்காரவைத்து, உடன் பின்பக்கமாய் விலகிக்கொண்டார்கள். 

உலகில் எந்த இடத்திலும் அவரின் பிரசங்கத்தின்போது ஜேகே- யை யாரும் அறிமுகம் செய்துவைக்கும் வழக்கமில்லை என்று படித்திருக்கிறேன். அவ்வாறே இங்கும் ஒன்றும் நிகழவில்லை. புத்தக அட்டையில் மட்டுமே பார்த்திருந்த உலகம் வியக்கும் ஒரு மனிதரை நேரிடையாகப் பார்ப்பதில் ஒரு த்ரில் மனதுக்கு ஏற்பட்டிருந்தது. வயது எண்பதுக்கருகில் என்பதுபோல் காட்டிய மெலிந்த தேகம். இந்திய வகைமைப்படி மாநிறம் என்பதையும் தாண்டிய ஒரு ரசமான நிறம். சராசரி உயரம். அடர்த்தி குறைந்த முடி ஒழுங்காக வாரப்பட்டிருக்கிறது. ஒழுங்காகப் ப்ரெஸ் செய்யப்பட்ட வெளிர் பிங்க் குர்த்தாவுடன் வெள்ளை பைஜாமா. மைக்கின் முன், சற்றுத் தள்ளி அமர்ந்தவரின் முதுகுப்பகுதி நேராக, ஒரு யோகநிலைபோல் இருந்தது.  ஒரு பதின்மவயதுப் பையன் (மைக் கம்பெனிக்காரன்போலும்) மேடையில் வேகமாக ஏறி மைக்கின் உயரத்தையோ எதையோ சரிசெய்ய முயல, அதனால் பாதிக்கப்பட்டவராய், சற்று அழுத்தமான குரலில் ‘லீவ் இட்!’ என்கிறார் ஜேகே. பதற்றமான பையன் உடனே கீழிறங்கி மறைகிறான். அமைதி தவழும் முகத்துடன் வந்திருப்பவர்களை நேராகப் பார்த்த கிருஷ்ணமூர்த்தி, கைகூப்புகிறார். கடிகாரத்தில் கண் ஓட, சரியாக ஆறு மணி. வெகுகால நினைவுகளிலிருந்து, மீட்க முடிந்தவற்றைத் தருகிறேன்.

’நாமெல்லோரும் இந்த மாலையில் இங்கு கூடியிருக்கிறோம். வாழ்க்கை, இந்த உலகில் நம் எல்லோரின் வாழ்க்கை, அதன் ஓயாத பிரச்னைகள் என ஆராய்ந்து பார்க்கவென இங்கு வந்து அமர்ந்திருக்கிறோம். இங்கே வந்திருக்கும் சிலர், இதனை ஒரு மாலைப்பொழுதுபோக்காக எடுத்துக்கொள்ளவில்லை என நம்புகிறேன். இது ஒரு பொழுதுபோக்குக்கானதல்ல. மேலும், எல்லோரும் ஆளுக்கொருவராக ஒவ்வொரு கருத்தாகச் சொல்லி விவாதிக்க அல்ல இந்த ஏற்பாடு. ஒரு பொது வசதி கருதி,  பேசும் இந்த நபர் (the speaker) -தன்னைக் காட்டிக்கொள்கிறார்- இங்கே, நீங்கள் எல்லோரும் எதிரே என உட்கார்ந்திருக்க, ஒருவர்  பேச,  நீங்கள் எல்லோரும் கேட்டுக்கொண்டிருப்பதுபோல் ஒரு ஏற்பாடு. நான் ஏதோ சொல்ல, நீங்கள் அதை ஏற்றோ, மறுத்தோ உங்களுக்குள் விவாதம் செய்வதல்ல இதன் நோக்கம்.   உண்மையில், நாம் நமது வாழ்வின் தீராத பிரச்னைகளை உள்ளது உள்ளபடி எதிர்கொண்டு, ஏன் இப்படி, இது இன்னும் நன்றாக இருக்கமுடியாதா என்றெல்லாம் நமக்கு நாமே கேட்டுக்கொண்டு, ஒருசேர இதனை ஆராயவிருக்கிறோம். பேசும் இந்த நபரும், நீங்களும் ஒரே திசையில் பயணிக்கவிருக்கிறோம். இது புரிகிறது,  இல்லையா?  எனக் கேட்கிறார். ஒரு ஆழமான அக்கறை குரலில் தெரிகிறது.

’…எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நமது வாழ்க்கையில் ஏதோ சரியில்லை.  நிம்மதி, மகிழ்ச்சி இல்லை என்பது நமக்கெல்லாம் நிதர்சனமாகத் தெரிகிறது இல்லையா. மனம் கொள்ளாப் பிரச்னைகள், என்றும் ஓயாத மோதல்கள்(conflicts), அதற்கான காரணங்கள் (causes) என்ன என்று இப்போது நாம் ஆழமாகச் சென்று பார்க்கவிருக்கிறோம்…

…சதா சலசலத்துக்கொண்டிருக்கும் மனம், என் மனம், உங்கள் மனம் என்றில்லை, பொதுவாக மனிதமனம் – அதன் செயல்பாடுகள் என்ன, எப்படியெல்லாம் அது நடந்துகொள்கிறது என்று ஆராய்ந்திருக்கிறீர்களா?’ கொஞ்சம் நிறுத்துகிறார். தனக்குள்ளேயே ஓடும் அந்தக் கேள்விகளை ஆராய்பவர்போல.  பிறகு, தொடர்கிறார்: நாம் அனைவரும் இதில் ஒன்றாக இருக்கிறோம், சேர்ந்து பயணிக்கிறோம் இல்லையா..?’  ஒருவேளை, இவர்களால் தொடரமுடியவில்லையோ.. மேலும் புரியுமாறு சொல்லவேண்டுமோ என்று அவர் கவலைப்படுவதுபோல் தெரிகிறது. எதிர் அமர்ந்திருப்போரைக் கனிவோடு பார்க்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி.

அவர் இவ்வாறு தன் வாக்கியங்களுக்கிடையே சிறு சிறு இடைவெளி கொடுக்கையில், அந்தக் கணநேர நிசப்தமும் பெரிதும் நம்மை ஆட்கொள்கிறது. மீண்டும் திடீரென உயரும் அவரது அபூர்வமான, சற்றே வினோதமான குரல், மனதிற்குள்ளே சென்று எதனையோ  அசைப்பதுபோன்று தோன்றுவதை அவ்வப்போது உணர்கிறேன். இங்கே வந்து விழுந்துகொண்டிருப்பது வெறும் ஆங்கில வார்த்தைகளல்ல என்பதான எண்ணமும் கூடவே.  இன்னொன்றும் திடீரெனக் கண்ணில்பட்டு, பின் மனதில் பதிகிறது. இப்போது அங்கே நன்கு இருண்டுவிட்டிருக்க, பந்தலில் போட்டிருந்த ஃபிலமெண்ட் பல்புகளின் பொன்னிற ஒளியில் அவரது உருவம் ஒரு அசாத்திய அழகில் தெரிகிறது. லேசாக மினுமினுக்கும் ஒருமாதிரியான பிங்க் நிறமாய் முகம். அவரது உருவைச்சுற்றி தெரிவது மிருதுவான ஒரு ஒளிக்கூட்டல். அந்தக் காட்சியை விளக்குவதற்கு வார்த்தைகள் போதுமானதாகத் தெரியவில்லை. ஒருவேளை, எனக்குமட்டும்தான் இப்படித்தோன்றியதா?

ஜேகே தொடர்கிறார்: ’இந்த மனம், எதற்காவது, எப்போதும் அலைந்துகொண்டுதானிருக்கிறது. கவனித்திருக்கிறீர்களா?  ஏதாவது ஒன்றை, அது உடல்ரீதியான, அல்லது அதைத்தாண்டிய ஒரு இன்பமாகவோ, ஒரு அனுபவமாகவோ இருக்கக்கூடும் – எதையாவது இது தேடிக்கொண்டே இருக்கிறது. அல்லது எதையாவது இடைவிடாது சொல்லிக்கொண்டிருக்கிறது? இத்தகைய குறுகிய, சஞ்சலமான மனம், சலனமின்றி அமைதியாக இருக்குமா, இருக்கமுடியுமா அதனால் என்பது கேள்வி. இந்த மனதினால் அமைதியாக இருக்கமுடியுமா?  முடியும் அல்லது முடியாது என உடனே பதிலுடன் பாயாதீர்கள். உள்ளூர ஆராயுங்கள்.  எப்போதும் தடதடத்துக்கொண்டிருக்கும் இந்த மனம் அமைதி நிலைக்கு வரவேண்டுமெனில், அதற்காக என்ன நிகழவேண்டும்? அந்த மனதில், எண்ணம் (thought) என்ற ஒன்று வராதிருக்கவேண்டும். அப்படி ஒரு நிலைக்கு அது வரநேர்ந்தால், அது அமைதியாக, சலனமற்று இருக்கக்கூடும். அப்படி ஒரு நிலை நிகழலாம்..’

இப்படியெல்லாம் அவர் சொல்லிக்கொண்டே போக, பேசப்படும் விஷயத்தின் ஆழத்தில் தோய்ந்து, அசையாது அமர்ந்திருக்கிறது சபை. பத்தொன்பது, இருபது இருக்கலாம் வயது அவளுக்கு. தென்னிந்தியப் பெண்ணாக இருக்கும் என்பதாக ஒரு தோற்றம். எழுந்திருக்கிறாள்.  கேட்கிறாள்:  ’மனதில், எண்ணமில்லாமல் இருப்பது எப்படி?’

’என்ன ஒரு சிந்தனையிலாக் கேள்வி! (What a thoughtless question!)’ என்கிறார் அவளைப் பார்த்து ஜேகே சட்டென்று. அந்தப் பெண் கூச்சத்துடன் தலைகுனிந்து உட்காருகிறாள். சபையில் ஆங்காங்கே லேசான சலசலப்பு…சிரிப்பு. ’தயவுசெய்து சிரிக்கவேண்டாம்.. இது சிரிப்பதற்கான விஷயமில்லை’ என்கிறார் குரலில் ஒரு அழுத்தம் தெரிய.

மேலும் மேலும் அவரிடமிருந்து வார்த்தைகள் கோர்வையாக, சரளமாக வந்து விழுகின்றன. மிகவும் ஜாக்ரதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை. அதே சமயத்தில், புரியாது பயமுறுத்தும் கடினமான வார்த்தைகளல்ல. சாதாரணமானவை. அழகானவை. அவரிடமிருந்து வருவதால் நீரோடை போன்ற தெளிவுகொண்டவை. அவரது நளினமான ஆங்கில உச்சரிப்பு. குரலில் காணப்பட்ட ஒரு கனிவும் மென்மையும். ஒருமணிநேரம் எப்படிப் போனது?

மாலை 6.50, 6.55.. என்று நிமிடங்கள் நகர, வார்த்தையோட்டம் வேகம் குறைந்து, அன்றைய பிரசங்கத்தின் நிறைவு நோக்கி சுகமாக நகர்கிறது. ’நமது அடுத்த சந்திப்பில் ’பிறந்ததிலிருந்து இறுதிவரை நம் எல்லோரையும் விடாது தொடரும் ஒன்றைப்பற்றி.. பயம் என்கிற ஒன்றைப்பற்றி ஆராய்வோம்’ என்று சொல்லி முடிக்கிறார். வந்திருந்தவர்களை நோக்கிக் கைகூப்பிவிட்டு, மெல்ல எழுந்து மேடையைவிட்டு வெளியேறுகிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. 

மயங்கிக்கிடந்ததுபோலிருந்த ஒரு மனநிலையிலிருந்து திடீரென விடுபட்டதுபோல், வந்திருந்தவர்களில் சிலர் அவசரமாக எழுந்து அவர் போகும் திசையில் நடந்தோம். இங்கேயும் ஒன்றைக் கவனிக்கிறேன். ஜேகே காரை நோக்கி நடந்து செல்கையில் அவரிடமிருந்து இடைவெளிவிட்டு, தள்ளியே அவரை அழைத்துவந்தவர்களும் நடக்கிறார்கள். யாரும் நெருங்கிப் பேசுவதோ, கைகுலுக்க முயலுவதோ இல்லை. அவர்,  தொடுவதை, தொடப்படுவதைப் பெரும்பாலும் தவிர்ப்பவர் என எங்கோ படித்த நினைவு

காரை ஜேகே நெருங்கியதும், அவரைத் தொடர்ந்து அதுவரை வந்துவிட்ட ஒரு தென்னிந்திய தம்பதி, அவரிடமிருந்து பத்தடி தள்ளி நின்று கைகூப்பிவிட்டு, கீழே சாஷ்டாங்கமாக விழுந்து அவரை நமஸ்கரிக்கிறார்கள். எங்களில் சிலர் ஆச்சரியமாய் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஜே.கிருஷ்ணமூர்த்தி அந்த தம்பதியை வாஞ்சையோடு பார்க்கிறார். திருப்பி வணங்குவதாக, அவர்களைப் பார்த்து சில நொடிகள் கைகூப்பிவிட்டு காரில் ஏறிக்கொள்கிறார். அம்பாஸடர் மெல்ல நகர்ந்து டெல்லியின் பெருவீதியில் கலந்து மறைகிறது.

நானும் நண்பனும் அங்கிருந்து வெளியேறி சாலையில் திரும்பி நடந்துகொண்டிருந்தோம். அவரது தரிசனமா, அவரது வார்த்தைகளா – எதன் தாக்கமிது என்று நினைத்து நான் நடந்துகொண்டிருக்கையில், நண்பன் கேட்டான், ’ஏன் பேசாது வருகிறாய்..?’   ’கொஞ்ச நேரம் அமைதியாய் இருக்கவிரும்புகிறேன்’ என்றேன். புரிந்துகொண்டவன் போல் அவனும் நடந்தான். 

ஜேகே-யின் அடுத்த பிரசங்கம்  நான்கு நாள் கழித்து அக்டோபர் 31-ல், அதே மௌலங்கர் ஆடிட்டோரியத்தில் நிகழ்வதாக இருந்தது. அவசியம் வரவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், அது நிகழவே இல்லை. அந்த நாளின் காலையில்தான் டெல்லியில், இந்தியப் பிரதமர் சுட்டுக்கொல்லப்பட்டார், கொன்றவர்கள் சீக்கியர்கள் என்பதால்,  சீக்கியர்களுக்கெதிராக அன்று  வெடித்த வன்முறை, டெல்லி முழுதும்  கோரத்தாண்டவம் ஆடி, ஏகப்பட்ட அப்பாவி உயிர்களை பலிவாங்கியது. அடுத்த நான்கு நாட்களுக்கு தலைநகரில் மனிதர் வெளியே நடமாடுவதே அரிதாகிவிட்டிருந்தது.

ஜேகே-யின் பிரசங்கங்கள் சிலவற்றிற்கு சென்றிருந்த ஒரு வெளிநாட்டுப் பெண், ஓரிடத்தில் கூறியிருந்தது நினைவுக்கு வருகிறது: ’ஜேகே-யின் பேச்சுகள் அடங்கிய ஆடியோ காஸட்டுகள் எத்தனையோ கேட்டிருக்கிறேன். அவர் பேசுவது, சொல்லவருவது புரிகிறது. ஆனால்.. அவர்முன் உட்கார்ந்து கேட்கும் அனுபவம் என்று ஒன்று இருக்கிறதே.. அது முற்றிலும் வேறானது அதை விவரிப்பதற்கில்லை’. 

அதற்காகத்தான் என் மனம் ஏங்கியது. ஆனால், அதற்கப்புறம், அந்த அனுபவம் கிட்டவே இல்லை.  

**

2 Replies to “ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.