கோடை ஈசல்

முந்தைய பகுதிகள்:
பகுதி – ஒன்று
பகுதி – இரண்டு
பீட்டர் வாட்ஸ் + டெரில் மர்ஃபி

அந்த அறை காயங்கள் ஏற்படும் வாய்ப்பைக் குறைப்பதற்கென கட்டமைக்கப்பட்டிருந்தது. அங்கு படுப்பதற்கு ஒரு கட்டில் இருந்தது. அதன் ஒரு மூலை கிழக்குப் புறச் சுவருக்குள் பதிந்திருந்தது.

அது போதுமானதாக இருந்தது.

அவள் ஓடிய வேகம் அயர வைத்தது. கிம்மும் ஆண்ட்ரூவும், அப்படி நிகழப் போகிறதென்று சிறிதும் எதிர்பார்த்திருக்க முடியாது. அவர்களின் குழந்தை, கட்டிலின் காலடியில் புகுந்து வெளிச்சத்தைப் பார்த்ததும் ஓடிப் பதுங்கும் கரப்பானைப் போல, தரையில் விரைந்து ஊர்ந்து, தன் தலையிலிருந்த கம்பித் தொடர் படுக்கையின் காலோடு சுற்றிக் கொள்ளுமாறு செய்து வெளியே வந்தாள். இப்போது அந்தக் கம்பியில் சிறிதும் துவளல் இல்லை. அவளுடைய அம்மா, இப்போதுதான் நகர்ந்தாள், கைகளை நீட்டியபடி, குழம்பிப் போய் ஆனால் இன்னமும் ஏதும் சந்தேகப்படாதவளாய் –

“ஜீனி-”

-அதே சமயம் ஜீன் தன் கால்களைப் படுக்கையின் ஓரத்திற்கெதிராக உதைத்துக் கொண்டாள், ஒரு தள்ளு தள்ளினாள்.

மூன்று முறை அவள் அப்படித் தள்ளினாள். மூன்று முயற்சிகள், இணைப்புக் கம்பிக்கு எதிராக அவளுடைய தலை சொடுக்கி இழுத்தது, தலைத்தோல் கிழிந்தது, இணைப்பு அவளுடைய தலையிலிருந்து பிய்ந்தது, துண்டம் துண்டமாக முடியும், சதையும், எலும்புச் சில்லுகளுமாக சிதறின, ரத்தம் தரையில் பீறிப் பாய்ந்தது, முடியும், சதையும், எலும்புகளும், எந்திரப் பாகங்களுமாகப் பின்னே வீழ்ந்தன. அடுத்தடுத்த முறை எகிறும் வலி தெளிவாகத் தெரியும் விதத்தில் இருந்தபடியே, மூன்று முறைகள். ஒவ்வொரு முறையும் முன்னை விடத் தீவிரமான முயற்சி.

ஸ்டாவ்ரோஸால் வெறுமனே அமர்ந்திருந்து பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே முடிந்தது, ஒரே நேரம் அதிர்ந்து போய் இருந்தாரென்றாலும், அந்த கடும் உத்வேகம் அவருக்கு ஆச்சரியமூட்டவில்லை. ரத்தம் கசிந்தபடி இருக்கும் ஒரு சதைத் துண்டுக்கு இது சாதனை. இன்னும் ஒரு முழு மிருகமாகக் கூட ஆகாத நிலையில்….

எல்லாம் நடந்து முடிய இருபது வினாடிகள்தான் ஆகியிருக்கணும். இரண்டு பெற்றோர்களில் ஒருவரும் இதைத் தடுக்க முயலாதது வினோதமாகவே இருந்தது. ஒருக்கால் அப்படி ஒரு எதிர்பார்க்க முடியாத அதிர்ச்சியால் இருக்கலாம். ஒருவேளை கிம்மும், ஆண்ட்ரூ கோரவெக்கும் அத்தனை தூரம் அதிர்ச்சி அடைந்ததால், அவர்களுக்கு யோசிக்கக் கூட அவகாசம் இல்லை போல.

ஆனால் மறுபுறம், ஒருவேளை அவர்களுக்குத் தேவையான எல்லா அவகாசமும் இருக்கத்தான் இருந்ததோ என்னவோ.

இப்போது ஆண்ட்ரூ கோரவெக் அந்த அறையின் மையத்தில் நிலை குழம்பி நின்றார், ரத்தச் சொட்டுகளைத் தன் கண்களைக் கொட்டி அவற்றிலிருந்து அகற்றிய வண்ணம். அவருக்குப் பின்னால் சுவற்றில் ரத்தமாரியிலிருந்து தப்பித்த ஒரு வெற்றிடம், வெண்மையாக, துளிக் கறை கூட இல்லாது ஆபாசமாக நீடித்தது; இதர பரப்புகள் எல்லாம் சிவப்பில் தோய்ந்திருந்தன. கிம் அறைக் கூரையை நோக்கி அலறினாள், ரத்தத்தில் ஊறிய, பொம்மலாட்டத்துப் பொம்மை ஒன்று, சிதைந்த நிலையில் அவள் கைகளில் கிடந்தது. அதன் சரடுகள்- சரடு என்று ஒருமையில் சொல்வது தகும், ஏனெனில் ஒரு சரடு ஃபைபர் ஆப்பே தேவைக்கு மேற்பட்ட அலைக் கற்றை அகலம் கொண்டது – ஒரு கோடியில் சதையும் முடியும் துடித்துக் கொண்டிருக்கையில், ரத்தம் பூசிய பூம்ஸ்லாங் பாம்பு போல, தரையில் கிடந்தன.

ஜீன் தன் பிணைக்கயிறிலிருந்து விடுபட்டுத் திரும்பிப் போய் விட்டாள் என்று கட்டுப்பாட்டுத் தளம் சொன்னது. உருவகமாகவும், இப்போது நேர் விவரிப்பாகவும் (அப்படித்தான் ஆகியிருந்தது). இருந்தபோதும், அவள் ஸ்டாவ்ரோஸிடம் பேசவில்லை. ஒருவேளை அவள் கோபமாக இருந்தாளோ என்னவோ. அல்லது கட்டையாக விறைத்துக் கிடந்தாளோ. அவரால் அவளுக்கு என்ன ஆகி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூட முடியவில்லை.

இரண்டில் எதாக இருந்தாலும், ஜீன் இனிமேல் அங்கே உயிரோடு வாழவில்லை. அவள் பின்னே விட்டுச் சென்றவை எல்லாம், ஒரு ரத்தமயமான, குறைப்பட்ட சாவின் பின் விளைவுகளும், அதன் எதிரொலிகளும் மட்டுமே. உண்மையில் அது கறைப்படுத்தல்தான்; ஒரு குடும்பத்தினுள் நடந்த குற்றச் செயல் மட்டுமே. ஸ்டாவ்ரோஸ் அந்த அறையோடு தனக்கிருந்த தொடர்புகளைக் கத்தரித்தார், அதன் மூலம் கோரவெக்குகளையும், அவர்களின் கசாப்புக்கடை அறையையும் தன் வாழ்விலிருந்து முற்றிலும் வெட்டி விலக்கி விட்டார்.

அவர் ஒரு கவனக் குறிப்பை அனுப்புவார். டெர்ரகான் நிறுவனத்தின் யாரோ ஒரு குற்றேவலாளி அந்தச் சுத்திகரிப்பைக் கையாள்வார்.

அமைதி என்ற சொல் அவரது மனதூடாக மிதந்து சென்றது, ஆனால் அதைப் பொருத்தி வைக்க ஓரிடம் அவருக்குக் கிட்டவில்லை. அவர் ஜீனுடைய ஒரு உருவப் படத்தின் மீது மனதைக் குவித்தார், அவள் எட்டு மாதக் குழந்தையாக இருக்கையில் எடுத்த படம். அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்; பொக்கை வாய்க் குழந்தையின் மகிழ்ச்சியான சிரிப்பு அது, இன்னும் கரவேதுமில்லாதும், ஆச்சரியம் நிறைந்ததுமான சிரிப்பு.

அங்கே ஒரு வழி இருக்கிறது, அந்த குழந்தைப் பொம்மலாட்டப் பொம்மை சொல்வது போல இருந்தது. நாம் எதையும் செய்யலாம், யாருக்கும் எதுவும் தெரியத் தேவை இல்லை.

கோரவெக் தம்பதியர் தம் குழந்தையை அப்போதுதான் இழந்திருந்தனர். அந்த உடலைத் திருத்திச் சீர் செய்யவும், மூளையை மறுபடி இணைக்கவும் அவர்கள் விரும்பினாலும், அவர்கள் விரும்புவது நடக்காது. டெர்ரகான் சட்ட பூர்வமாகத் தன் கடமைகளைப் பூர்த்தி செய்து விட்டிருந்தது, மேலும் பாழாய்ப் போக, – சாதாரணக் குழந்தைகள் கூடத்தான் அவ்வப்போது தற்கொலை செய்து கொள்கின்றன.

இதுவும் நல்லதுக்குத்தான், நிஜமாகப் பார்த்தால். கோரவெக்குகள் ஒரு வெள்ளெலியைக் கூட வளர்க்கத் தக்கவர்கள் அல்ல, அப்புறம்தானே நான்கிலக்கத்து அறிவுத் திறனளவு எண்ணைக் கொண்ட ஒரு அழகிய பெண்ணை வளர்ப்பதைப் பற்றிப் பேச. ஆனால் ஜீன் – உண்மையான ஜீன், அந்த ரத்தம் தோய்ந்த சிதைந்த தசையும், எலும்புமாகக் கிடந்த பிண்டத்தைச் சொல்லவில்லை – அவளை உயிரோடு பராமரிப்பது எளிதுமல்ல, விலை மலிவான முறையுமல்ல. இந்த விஷயம் வெளியே தெரிந்தால், கணினி செயற்படுத்திகளில் இடத்தைக் காலி செய்து கொடுக்கச் சொல்லி உடனே அழுத்தம் ஏற்பட்டு விடும்.

ஜீனுக்கு நிஜ உலகின் இந்த அம்சம் மட்டும் ஒரு போதும் சரியாகப் புரியவில்லை. ஒப்பந்தச் சட்டங்கள், பொருளாதாரம். அதெல்லாம் ரொம்ப செடுக்கானவையாக, அபத்தமானதாக அவளுக்குப் பட்டன, இத்தனைக்கும் எது எதார்த்தம் என்பது பற்றி அவள் மிக இளகிய வரையறுப்பைத்தான் கொண்டிருந்தாள். ஆனால், அந்த புத்தி உடலுக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சியிலிருந்து மீண்டு பிழைத்திருக்கிறது என்றாலும், அவளை அவைதான் இப்போது கொல்லப் போகின்றன. அந்தப் பேருரு ஒரு செயல்திட்டத்தை ஓட்டித்தானாக வேண்டும் என்றில்லாவிடில் அதை மேலும் செயலில் வைத்திருக்காது.

இருந்த போதும், தன் தளையிலிருந்து விடுபட்டவுடன் ஜீன் வாழ்ந்த வேகம் நிஜ உலகின் வேகத்தை விடப் பன்மடங்கு துரிதமானது. அதிகாரிகளோ…. துருவப் பனிப்பாறைகளின் அசைவு என்று சில சமயம் அவர்களை வருணிப்பது உண்டே, அது கூட அவர்கள் அவசரப்பட்டுச் செயல்படுவதைத்தான் வருணிப்பது.

ஜீனுடைய புத்தி நிஜ உலகின் க்ரோமோஸோம்களின் நகலுருக்களைப் பிரதிபலித்தது என்றாலும், அதற்கான செயல் குறியீட்டமைப்பு நிஜமாகவே இருந்தது, தவிர அவை எல்லாம் கரியால் செய்யப்படாமல் எலெக்ட்ரான்களால் செய்யப்பட்டவை. அவளுக்கும் டெலோமியர்கள் இருந்தன, அவையும் நாளாவட்டத்தில் சீர் குலைந்தன, ஆனால் அவை அவளுக்கெனத் தயாரான வகை. அவளுக்கே உரித்தான நரம்பிணைப்புகள் (ஸினாப்ஸ்கள்) இருந்தன, அவையும் குலைவை அடைந்தன. ஜீன் ஒரு மனிதக் குழந்தையைப் பதிலி செய்யத்தான் கட்டப்பட்டிருந்தாள் இல்லையா? மனிதக் குழந்தைகளும் வயதில் முதிரத்தான் செய்கிறார்கள். அவர்கள் வளர்ந்தவர்களாகிறார்கள், ஒரு நாள் வருகிறது அப்போது அவர்கள் இறந்தும் போகிறார்கள்.

ஜீனும் இவற்றையே செய்வாள், ஆனால் வேறு யாரையும் விட வெகு வேகமாக.  

ஸ்டாவ்ரோஸ் சம்பவ அறிக்கை ஒன்றைத் தயார் செய்தார். அவர் ஒன்றை ஒன்று முரண் செய்யும் ஒரு ஜோடி நிஜ நிகழ்வுகளை அதில் சேர்க்கத் தவறவில்லை, அதோடு மூன்று அத்தியாவசியமான தகவல்களைச் சேர்க்காமல் விட்டார். அந்த அறிக்கை ஒரு அல்லது இரண்டு வாரங்களில் திருப்பி அனுப்பப்படும், மேலும் தெளிவுபடுத்தச் சொல்லிக் கேட்கும் கோரிக்கைகளோடு. அப்போது அவர் அதையே மறுபடிச் செய்வார்.

அவளுடைய உடலிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டதால், அவளுடைய கணினி-கடிகாரச் சுழற்சியில் முன்னிலை கொடுக்கப்படுவதில் நிறைய ஆரோக்கியமான அளவு அதிகரிப்பையும் பெற்ற ஜீன், அவளுடைய தன்னிலைப் பார்வையில் சுமார் நூற்றி ஐம்பது வருடங்கள் உயிரோடு இருப்பாள். அது நிஜ வாழ்வில் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களாக இருக்கும். ஒன்றரை நூற்றாண்டு வாழ்வில் அவள் மறுபடி எந்த பயங்கரக் கனவையும் சந்திக்கத் தேவை இராது.

ஸ்டாவ்ரோஸ் சிரித்துக் கொண்டார். இந்தக் குழந்தை அவளுடைய முழு வேகமும் கட்டவிழ்த்து விடப்பட்ட பின்னர் என்ன செய்வாள் என்பதைப் பார்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

அத்தனை வேகமாகச் செல்லும் அவளைத் தான் தொலை தூரத்திலிருந்தாவது பார்த்தபடி இருக்க முடியலாம் என்பதுதான் அவருடைய சிறு எதிர்பார்ப்பு.

oOo

இங்கிலிஷ் மூலக் கதையாசிரியர்கள்: பீடர் வாட்ஸும், டெரில் மர்ஃபியும்.

தமிழ் மொழி பெயர்ப்பு: மைத்ரேயன்

(முற்றும்)

குறிப்பு: இந்தக் கதை முதலில் ‘டெஸ்ஸராக்ட்ஸ் 9’ என்ற புத்தகத்தில் பிரசுரமானது. அதன் பதிப்பாசிரியர்கள். நாலோ ஹாப்கின்ஸனும், ஜெஃப் ரைமானும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.