குக்கூவின் மாய யதார்த்த வாழ்க்கை

1996இல் டில்லியின் கதா நிறுவனம் அதன் வருடாந்திர இலக்கிய விருதுகள் தரும் நிகழ்வை ஒட்டி ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. அதில் ஓர் அமர்வில் மிருணாள் பாண்டே, மகாஸ்வேதாதேவி மற்றும் நான் பங்கேற்றோம். மகாஸ்வேதாதேவியை நான் படித்திருந்தேன். காயத்ரி ஸ்பிவாக் மொழியாக்கம் செய்திருந்த ”ஸ்தனதாயினி” கதையைப் படித்திருந்தேன். அவரைப் பற்றியும் அவர் செயல்பாடுகள் பற்றியும்  நிறையப் படித்திருந்தேன். அந்த அமர்வு மூத்த பெண் எழுத்தாளர்களின் எழுத்துலகு பற்றியது. முதலில் மிருணால் பாண்டே பேசினார். பலரும் அறிந்த ஹிந்தி எழுத்தாளரான அவர் தாய் சிவாணியைப் பற்றிப் பேசாமல் எந்த நிகழ்வையும் மிருணால் பாண்டே தொடங்க மாட்டார். அன்றும் தன்  தாயாரைக் குறிப்பிட்டுவிட்டு, தான் சிறு பெண்ணாக இருக்கும்போதே மாகாஸ்வேதாதேவியின் ஹிந்தி மொழிபெயர்ப்புகள் அவர் தாயாரிடம் வந்ததாகவும் அப்போதே அவரைத் தெரியும் என்றும் அவர் தனக்கு மகாஸ்வேதாதேவி மௌஸி (சித்தி) என்றும் கூறிய பிறகு ஹிந்தியின் மூத்த பெண் எழுத்தாளர்கள் பற்றிச் சுவையாகப் பேசினார். அடுத்து நான் பேசும்போது மூத்த எழுத்தாளர்கள் பத்திரிகைகள் நடத்தியது குறித்துப் பேசும்போது, வீட்டு வேலை, சமையல் இவைகள் எல்லாவற்றையும் செய்து இலக்கியத்துக்கும் வாழ்க்கையில் இடம் அளிக்க முயன்றார்கள் என்று பேசினேன். ஒரு மூத்த எழுத்தாளர் என்னிடம் “ஒழிந்த வேளையில்தான் இலக்கியம்” என்ற ரீதியில் சொல்லியிருந்தார். அதையும் கூறினேன். வீடு, இலக்கியம் என்ற இரு வேறு குதிரைகள் மேல் இரு கால்களைப் பதித்துத் தொடர்ந்து அவற்றின் ஓட்டத்தையும் வேகத்தையும்  சமநிலைப்படுத்த முயற்சிக்கும் வாழ்க்கை அவர்களுடையது என்ற பொருள்படும்படிப் பேசினேன். கடைசியாக மகாஸ்வேதாதேவி பேசினார். முதலில் மிருணால் பாண்டேக்கு ஓங்கி ஒரு குட்டு! சிவாணி அவர் அன்னை என்பதெல்லாம்  சரிதான்; ஆனால் யாரும் யாருக்கும் மௌஸி இல்லை என்றார். சிவாணியின் மகளான மிருணாள் பாண்டேக்கே குட்டு என்றால் அம்பையை விடுவாரா?! அவர் என்னைப் படிப்பது இருக்கட்டும், என் பெயரைக் கூடக் கேள்விப்பட்டதில்லை. நான் பேசியதின் ஒரே ஒரு சொல்லை மட்டும் பிடித்துக்கொண்டு உலுக்கி எடுத்துவிட்டார்! ”இந்தப் பெண் சொல்கிறாள் சமையல் எல்லாம் செய்துகொண்டு பெண்கள் எழுதினார்கள் என்று. ஏன், சமைப்பதில் என்ன தவறு? எனக்குக் கூடச் சமைக்கப் பிடிக்கும். என் குடும்பத்தில் எழுத்தாளர்களான பெண்கள் நன்றாகச் சமைக்கவும் செய்வார்கள். பெண்கள் சமைக்கக் கூடாதா என்ன?” என்று வாங்குவாங்கென்று வாங்கிவிட்டார்! அது ஒருவருடனொருவர் உரையாடிக் கருத்துப் பரிமாற்றம் செய்யும் அமர்வும் அல்ல. அவரவர் பேச வேண்டியதைப் பேசிவிட்டுக் கலையும் அமர்வு. எங்கள் எல்லோரையும் வேறு வேறு இடங்களில் தங்க வைத்திருந்தார்கள். எங்கள் எல்லோரையும் ஒரு கல்வி அமைப்பின் விடுதியிலும் அருகேயே இருந்த இந்திய அனைத்துலக மையத்தில் மகாஸ்வேதாதேவியையும் தங்க வைத்திருந்தார்கள். நான் மகாஸ்வேதாதேவியிடம் போய், “நாம் எல்லோரும் சேர்ந்து இருந்திருந்தால் நிறையப் பேசியிருக்கலாம்” என்றேன். “எனக்கு உன்னிடம் பேச என்ன இருக்க முடியும்?” என்றார்! பெரிய ராணிகள் முன்னால் பின்னடி வைத்து நடப்பதுபோல் நடந்துவந்துவிட்டேன்!

அந்த முதல் சந்திப்பு அப்படிப் போயிற்று. அவரைத் தொடர்ந்து படித்துவந்தேன். 2003இல் குழந்தைகளுக்காக அவர் எழுதிய ஒரே ஒரு கதையை மொழிபெயர்த்து வெளியிட துலிகா பதிப்பகம் விரும்பியது. சபர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சிறுமியான மொயினாவைப் பற்றிய கதை அது. The Why-Why Girl எனும் தலைப்பில் மகாஸ்வேதாதேவி ஆங்கிலத்தில் எழுதிய ஒரே கதை. எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்கும் மொயினாவும் அவள் கீரிப்பிள்ளையும் பற்றிய கதை. கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பாள் மொயினா. அரிசி தந்த பண்ணையாருக்கு நன்றி கூறும்படி அவள் அம்மா சொன்னால், “அவர் எனக்கு நன்றி சொல்லறாரா என்ன? நான் மட்டும் ஏன் சொல்லணுமாம்?” என்பாள். “நான் ஏன் அவ்வளவு தூரம் ஆற்றுக்குப் போய் தண்ணி கொண்டாரணும்?”, “நாங்க ஏன் இந்த ஓலைக் குடிசையில இருக்கணும்?” “நாங்க ஏன் ரெண்டு வேளையும் அரிசிச் சோறு திங்கக் கூடாது?” இப்படிக் கேள்வி மேல் கேள்விதான். மகாஸ்வேதாதேவி அங்கு போய் ஒரு மாதம் தங்கியதும் அவருடன் தங்கப் போவதாக அறிவிக்கிறாள் மொயினா. மொயினாவின் அம்மா அதெல்லாம் கூடாது என்றதும், “ஏன் கூடாது? பெரிய குடிசை அது. ஒரு கிழவிக்கு எவ்வளவுதான் இடம் வேணுமாம்?” என்கிறாள். கிழவி என்றது மகாஸ்வேதாதேவியைத்தான்! ஆடு மேய்த்துவிட்டு வந்த பின் படிக்கும்படி சமிதியின் பள்ளி நேரம் இருக்க வேண்டும் என்று வாதிடுகிறாள். மொயினா வளர்ந்து அதே பள்ளியில் ஆசிரியையாகும் வரை போகிறது கதை. மொயினாவையும் அவள் கேள்விகளையும் சபர் பழங்குடியினரின் வாழ்க்கையையும் கண் முன் நிறுத்தும் கதை. மலையாளத்தில் பால் ஸக்கரையாவும் கன்னடத்தில் கிரிஷ் கர்னாடும் தமிழில் நானும் அதை மொழிபெயர்த்தோம். மொயினாவைப்போல நானும் அவரை மிகவும் நெருங்கிவிட்டதாக உணர வைத்த அனுபவம் அது.

2004இல் ஸ்பாரோ (SPARROW — Sound & Picture Archives for Research on Women) மிசிகன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செய்த ஒரு செயல்திட்டத்தில் இந்தியப் பெண்களின் கல்வி மற்றும் செயல்பாடுகளைக் காட்ட பத்து ஆவணப்படங்கள் எடுப்பது என்று முடிவாயிற்று. நான்கு நாடுகள் இணைந்து செயல்படும் இந்தத் திட்டத்தில் சீனா, போலந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா தேர்வு செய்யப்பட்டு இந்தியாவில் ஸ்பாரோ இந்தப் பத்துப் படங்களை எடுக்க முடிவானபோது ஸ்பாரோ தேர்வு செய்த பத்துப் பெண்மணிகளில் மகாஸ்வேதாதேவியும் ஒருவர். கொல்கத்தாவில் உள்ள ஸீகல் நிறுவனத்தின் நவீன் கிஷோர் மற்றும் அஞ்சும் கட்யால் என்னுடைய  நண்பர்கள். அவர்கள் இருவரும் மகாஸ்வேதாதேவிக்கு மிகவும் நெருங்கியவர்கள். அவர் மொத்தக்  கதைகளையும் பதிப்பிப்பதில் தீவிரமாகச் செயல்பட்டு வந்ததோடல்லாமல் அவர் வாழ்க்கையையும் பதிவு செய்வதில் முனைப்புடன் வேலை செய்துவந்தனர். அவர்களை அணுகியதும் ஆவணப்படம் எடுக்க எல்லா உதவிகளையும் செய்வதாகக் கூறினர். ஆவணப்படம் எடுக்கும் முன் செய்ய வேண்டிய ஆராய்ச்சி வேலைகளுக்காகக் கொல்கத்தா போனேன் அவரைச் சந்திக்க. நவீன் என்னைபற்றிச் சொல்லியிருந்தார். அதனால் பல வேலைகளுக்கு நடுவிலும் என்னை வரவேற்றார். சில மணி நேரங்களுக்குப் பிறகு டில்லியில் சந்தித்தது பற்றிக் கூறி, “எனக்கு உன்னிடம் பேச என்ன இருக்க முடியும்?” என்று அவர் கூறியதையும் சொல்லிவிட்டுச் சிரித்தேன். “அப்படியா சொன்னேன்?” என்று கூறிவிட்டு அவரும் சிரித்தார். என் புத்தகங்களைக் கேட்டார். அனுப்பிவைத்தேன்.  ஆவணப்படம் எடுக்கப் பிறகு விஷ்ணுவுடனும் மற்றவர்களுடனும் சென்றேன். அஞ்சும் கட்யால் அவருடன் உரையாடுவதுபோல் அந்த ஆவணப்படத்தை அமைத்திருந்தோம். அப்போதுதான் அவர் வாழ்க்கையின் வீச்சு வெளிப்பட்டது. ஆவணப்படத்தின் ஒரு கட்டத்தில் “உங்கள் வாழ்க்கையை மட்டும் கதையாக எழுதினால் அது மாய யதார்த்தக் கதையாகிவிடும்” என்பார் அஞ்சும் கட்யால். கற்பனை செய்யவே முடியாத அத்தனை விஷயங்கள் அவர் வாழ்க்கையில். சில தகவல்கள் இப்போது நினைத்தால் சிரிப்பூட்டினாலும் அவற்றை அவர் எதிர்கொண்டபோது வேறு மாதிரி இருந்திருக்கும் என்பதும் புரிந்தது. சில தகவல்கள் மகாஸ்வேதாதேவியின் குடும்பத்தையும் அதன் சூழலையும் அவர் எழுத்தின் வேர்களையும் காட்டின. சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்ட, இயல்பில் பிடிவாதமும் துணிச்சலும் கூடிய பெண்ணாய் அவரைப் பார்க்கமுடிந்தது.

மகாஸ்வேதாதேவியின் தந்தை பிரபல வக்கீல் மனிஷ் சந்திர கடக். எழுத்தாளர். பொர்திகா பத்திரிகையை நடத்தியவர். 1979இல் அவர் இறந்த பிறகு பத்திரிகையை மகாஸ்வேதாதேவி முற்றிலும் வேறுவிதமாகக் கொண்டுவந்தார். மகாஸ்வேதாதேவியின் அம்மாவழிப் பாட்டி, அவர் குடும்பப் பெண்கள், அப்பாவின் குடும்பப் பெண்கள் அனைவரும் படித்தவர்கள். தாக்காவில் பாட்டி வீட்டில் ஒரு பெரிய வாசகசாலையே இருந்தது. கலைப்படங்களின் பிதாமகர் என்று கருதப்படும் ரித்விக் கடக் மகஸ்வேதாதாவியின் சித்தப்பா.   மகாஸ்வேதாதேவியின் அம்மா தாரித்திரி தேவியும் படித்தவர். Economic and Political Weekly என்ற கல்வியாளர்களுக்கான பத்திரிகையை நிறுவிய சச்சின் சௌதரி மகாஸ்வேதாதேவியின் மாமா.

கணவர் கதைகள் தருவதாகக் கூறி முடியாமல் போனபோது தாரித்திரி தேவி கதைகள் எழுத ஆரம்பித்தார். ஒன்பது குழந்தைகளில் மூத்தவர் மகாஸ்வேதாதேவி. பெண் குழந்தைகளை அடக்கி ஒடுக்கி வளர்த்த காலத்தில் மகாஸ்வேதாதேவிக்குப் பூரண சுதந்திரம் இருந்தது. தம்பிக்கு சைக்கிள் வாங்கினால் மகாஸ்வேதாதேவிக்கும் ஒன்று வாங்குவார்கள். ஒரு முறை சைக்கிள் ஓட்டியபடி ஒரு குளத்தில் விழுந்துவிட்டார் அவர். ஊரைச் சேர்ந்தவர்கள் அம்மாவிடம் கூறியதும், “அதனால் என்ன? அவளுக்கு நீச்சல் தெரியும்.” என்று கூறி அவர்கள் வாயை அடைத்துவிட்டார். மெதினிபூரில் அவர்கள் வசித்த இடத்துக்கு வெகு அருகிலேயே காடுகளில் வசித்தார்கள் சீர்மரபினரான ஸந்தால் பழங்குடியனர். அவர்களில் சிலர் வீட்டு வேலைக்கு வரும்போது தினமும் போலீஸ் ஸ்டேஷன்போய் தங்கள் வேலை பற்றிச் சொல்ல வேண்டும் என்ற நியதி இருந்தது. இவர்கள் வீட்டிலும் இரு சந்தாலிகள் வேலை செய்தனர். மகாஸ்வேதாதேவியின் அப்பா போலீஸ் ஸ்டேஷன் போய், “இவர்கள் என் வீட்டில் வேலை செய்பவர்கள். போலீஸ் ஸ்டேஷன் வர மாட்டார்கள். உங்களுக்கு ஏதாவது தெரிய வேண்டுமென்றால் என்னிடம் சொல்லுங்கள். நான் ரிப்போர்ட் தருகிறேன்” என்றுவிட்டு வந்துவிட்டார்.    அங்குள்ள குழந்தைகளுடன் பழக முடிந்தது. மகாஸ்வேதாதேவியின் அம்மா மகா பிடிவாதக்காரி; கண்டிப்பானவரும் கூட. குள்ளமாக இருப்பார். வங்காள முறையில் அணிந்த புடவையின் தலைப்பை, விழாமல் இருக்க அக்குளில் வைத்தபடி விடுவிடுவென்று நடப்பார். அவர்கள் பெர்ஹாம்பூரில் இருந்தபோது வீட்டின் நீரில்லாக் கழிவறைகளைச் சுத்தம் செய்ய வரும் பெண்மணி தன் நான்கு குழந்தைகளுடன் வருவார் வேலை செய்ய. தினமும் அவர் வேலையை முடித்ததும் சோப்பு தந்து, களைப்பு தீரக் குளித்து, உடுத்தியிருக்கும் துணிகளைத் துவைத்ததும், சுத்தமான மாற்றுடை தந்து அவருக்குச் சுடச்சுடச் சாப்பாடு பரிமாறுவார் தாரித்திரி தேவி. ”நான் எப்படி இதற்கு கைம்மாறு செய்வது?” என்று அவர் கேட்டதும், ”எனக்கு நீ ஒரு உதவி செய்யலாம். உன் பிள்ளைகளை நான் பள்ளியில் சேர்க்க ஒப்புக்கொள்ளவேண்டும்” என்றுவிட்டு வழக்கம்போல் புடவைத் தலைப்பை அக்குளில் வைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். நகராட்சிப் பள்ளிக்குச் சென்று சிறுவர்களையும் சிறுமிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றதும் அவர்கள் அசந்துபோனார்கள். “அரசாங்கப் பள்ளி இது. இவர்களுக்குமானது. சேர்த்துக்கொள்ளாவிட்டால்  ஏழு நாட்கள் பார்ப்பேன். பிறகு செய்ய வேண்டியதைச் செய்வேன். என் கணவர் வருமானத் துறை அதிகாரி, வக்கீல். மாஜிஸ்ட்ரேட்டிடம் போக வேண்டிவரும்” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார். குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துக்கொண்டனர். அந்தக் குழந்தைகளில் ஒருவனான ஜுகல், மெட்ரிக் படிப்பை முடித்ததும் சுகாதாரத் தொழிலாளிகளின் சங்கத்தின் காரியதரிசியானான். தாரித்திரி தேவியிடம் வந்து, “பாட்டி, போடோ மாஷி (பெரியம்மா) எங்கள் சங்கத்தின் தலைவராக வேண்டும்” என்றான். போடோ மாஷி என்று குறிப்பிட்டது மகாஸ்வேதாதேவியை. ”நான் கல்கத்தாவில் இருக்கிறேன். எப்படி அங்கிருந்து இங்கே வர முடியும்?” என்று மகாஸ்வேதாதேவி மறுத்தபோது அவருடைய அம்மா “எல்லாம் முடியும்” என்று கூற, சுகாதாரத் தொழிலாளர்களின் சங்கத்தின் தலைவரானார் மகாஸ்வேதாதேவி. அவர்களுக்காகப் போராட்டம் செய்ததும் ஊர்வலம் போனதும் எல்லாம் அதன்பின்தான்.        

மகாஸ்வேதாதேவியின் செல்லப்பெயர் குக்கூ. வங்காளத்தில் எல்லோருக்கும் ஒரு சம்பிரதாயப் பெயரும் ஒரு செல்லப் பெயரும் உண்டு. சாந்தினிகேதனில் பத்து வயதில் சேர்த்தபோது மகாஸ்வேதாதேவி மிக நீண்ட பெயர் என்று கூறி அவர் செல்லப்பெயரான குக்கூவே அங்கு எல்லோரும் அறிந்த பெயராயிற்று. தாகூருடனும் அவர் குடும்பத்தாருடனும் பழகிய நாட்கள் அவை. பெங்காலியில் எழுதிய குக்கூ பட்டம் வாங்கியது ஆங்கிலத்தில்தான். ஆங்கிலத்தில் பி.ஏ. ஆனர்ஸ் செய்து விட்டு பிறகு சில ஆண்டுகளுக்குப் பிறகு முதுகலைப் படிப்பையும் ஆங்கிலத்தைப் பாடமாக எடுத்துத்தான் செய்தார். அவர் எழுதுவதற்கு வீட்டில் இருந்த அப்பா, அம்மா மற்றும் பலர் காரணமாக இருந்தாலும் மகாஸ்வேதாதேவி அடிக்கடிக் குறிப்பிடுவது பதினாறு பதினேழாம் நூற்றாண்டில் எழுதிய முகுந்தன் சக்ரபொர்தியைத்தான். மங்கள காவியம் என்ற மரபில் சண்டிமங்கள் காவியம் என்ற கவிதை நூலை எழுதியவர். அந்தக் காலத்துச் சமூகச் சூழலை நகைச்சுவையுடனும் துல்லியமாகவும் விவரித்த நூல் அது. சாதாரண மக்கள் வாழ்க்கையையும் அதிலுள்ள தொல்லைகளையும் விவரமாகக் கூறியதோடல்லாமல் மக்கள் மொழியிலிருந்து உபமான உபமேயங்களைக் கையாண்டது இந்தக் காவியம். கடவுள்களான சிவனையும் துர்க்கையையும் சாதாரணர்களாக்கியது இந்த நூலின் மேன்மை. தான் எழுதுவதற்கான தூண்டுதலைத் தந்தவராக மகாஸ்வேதாதேவி இவரைத்தான் குறிப்பிடுகிறார்.

மகாஸ்வேதாதேவியின் முதல் கணவர் பிஜோன் பட்டாச்சார்யாவை அவர் திருமணம் செய்துகொண்டபோது வீட்டில் அதிகம் வரவேற்பு இருக்கவில்லை. காரணம் பிஜோனுக்கு வேலை என்று எதுவும் இருக்கவில்லை. அவர் பொதுவுடமைக் கட்சியின் முழுநேர உறுப்பினர். நாடகாசிரியர், நடிகர், இயக்குனர். மக்கள் நாடக இயக்கத்தை உருவாக்கியவர்களில் முதன்மையானவர். நாடகங்களில் யதார்த்தத்தைக் கொண்டுவந்தவர். அவருக்கு நிலையான வரும்படி இல்லாததால் மகாஸ்வேதாதேவி தபால் தந்தித் துறையில் குமாஸ்தாவாகச் சேர்ந்தார். ஆனால் பொதுவுடமைக் கட்சியை ஆதரிப்பவர் என்று வேலை போய்விட்டது. சாயத்தூள் விற்பது போன்ற ஏகப்பட்ட வேலைகளைச் செய்தாலும் வீட்டுச் செலவுகளைச் சமாளிப்பது சிரமமாகவே இருந்தது. அப்போதுதான் பிஜோனின் தோழர்களில் ஒருவர் வந்து அமெரிக்காவுக்குக் குரங்குகளை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்ய விருப்பமா என்று கேட்டபோது மகாஸ்வேதாதேவி உடனே ஒப்புக்கொண்டார்!

குரங்குகள் ஏன் ஏற்றுமதி செய்யப்படுகின்றன, அவை மருத்துவ பரிசோதனைக்காக என்றால் அது நெறிமுறை சார்ந்ததுதானா என்பதெல்லாம் அவருக்குத் தோன்றவில்லை. ஒரு குரங்குக்கு இவ்வளவு பணம் என்பதே அவர் மனத்திலிருந்தது. இன்னொருவரிடம் போய் விசாரித்து மத்யப் பிரதேசத்திலிருந்து குரங்குகளை வரவழைத்து அவற்றைக் கப்பலிலேற்றும் பெரும் கூண்டுப் பெட்டிகளில் அடைத்துப் பெட்டிகள் மும்பாய்த் துறைமுகத்தை வந்து அடைந்து அமெரிக்கக் கப்பலிலேற்றப்படும்போது மும்பாய்த் துறைமுகத்தில் பெருத்த எதிர்ப்புக் கிளம்பியது. குரங்குகள் பட்டினியாக இருந்தன. இரண்டொரு குரங்குகள் இறந்துவிட்டன. ஜைனர்கள் போராட்டம் செய்யத் துவங்கினார்கள். குரங்குகள் பெட்டிகளிலிருந்து விடுவிக்கப்பட்டு மேற்கு மலைத் தொடரில் விடப்பட்டன. மும்பாயில் இருந்த சச்சின் சௌதரி இது குறித்து கேள்விப்பட்டு, மகாஸ்வேதாதேவியிடம், “இந்தப் பெங்காலிகள் ஆனாலும் மகா மோசமானவர்கள்” என்றாராம். “என்ன ஆயிற்று மாமா?” என்று இவர் விசாரிக்க நடந்த கதையைக் கூறி ”இதன் பின்னால் ஒரு பெண் வேறு இருக்கிறாளாம்” என்றாராம். இவர் வாயைத் திறந்தால்தானே?! பிற்காலத்தில் மகாஸ்வேதாதேவி மகாராஷ்டிரம் வரும்போது ஏதாவது குரங்கு எதிர்ப்பட்டால் லக்ஷ்மண் கயிக்வாடும் கணேஷ் தேவியும் அவரிடம், “மா, நீங்கள் அனுப்பிய குரங்குகளின் வாரிசுகள் இவை” என்று கேலி செய்வார்களாம்.

குடும்பத்தின் செலவை ஈடுகட்ட சிறு கட்டுரைகள் எழுதினார். பிறகு கள ஆராய்சி செய்து ஜான்சி ராணி பற்றிய நாவலை எழுதினார்.  கட்டுரைகளுக்கு வந்த சிறு தொகைகள் வீட்டுச் செலவுக்கு உதவின. இரண்டாம் நாவலுக்கு (நொட்டி) நானூறு ரூபாய் வந்தபோது கையில் பணத்துடன் தரையில் அமர்ந்து அழுதேன் என்றார். மகனுக்கு 13, 14 வயதாகும்போது பிஷோனை விட்டுப்  பிரிந்தார். மன அழுத்தத்தில் தற்கொலை முயற்சி செய்தார். பிறகு அஸித் குப்தாவை மணந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அதுவும் விவாகரத்தில் முடிந்தது. பிறகு ஒரு நல்ல நண்பருடன் வாழ்க்கை. இந்தச் சமயத்தில் ஆரம்பத்தில், “இவள் புறக்கடை வழியாகத் தன் தகப்பனார் மூலம் இலக்கியத்துக்கு வந்தவள். இவள் எழுத்தாளர் ஆவதைப் பார்த்துவிடுகிறோம்” என்று ஜான்சிராணி புத்தகம் வந்ததும் பேசி ஏசினவர்களுக்குச் சவால் விடுத்துத் தொடர்ந்து எழுதினார். பிர்ஸா முண்டா பற்றிய ஆரண்யேர் அதிகார் (காடுகளை ஆக்கிரமித்தல்), தோபதி போன்ற கதைகள் எழுதப்பட்டது அதன்பின்தான். இடையே பள்ளியில் வேலை, கல்லூரியில் வேலை, ஜுகாந்தர் பத்திரிகையில் நிருபர் வேலை, பழங்குடிகளுக்கான வேலை அவர்களுக்கான சமிதி என்று பல வேலைகள். காதல், வேலை, எழுத்து, பயணங்கள் என்று துரித கதியில் ஓடிய வாழ்க்கை.

2008இல் குட்டென்பர்கில் நடந்த புத்தகச் சந்தையில் மகாஸ்வேதாதேவி, அனிதா நாயர் மற்றும் நான் மூவரும் அழைக்கப்பட்டிருந்தோம். வைக்கம் முகமது பஷீர், மகாஸ்வேதாதேவி மற்றும் என்னுடைய கதைகள் ஸ்வீடிஷ் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மூன்று புத்தகங்களாக வெளியிடப்பட்டன அந்தப் புத்தகச் சந்தையில். மகாஸ்வேதாதேவி உற்சாகத்துடன் இருந்தாலும் தளர்ந்திருந்தார். சக்கர நாற்காலியில்தான் வளைய வந்தார். தங்கை உடனிருந்தார். சாப்பிடுவதற்கு முன் வழக்கம்போல் இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டார். நாங்கள் எல்லோரும் ஒரே இடத்தில் இருந்தோம். நிறையப் பேசினோம் வாழ்க்கை பற்றி, கதைகள் பற்றி, பழங்குடிகள் வாழ்க்கை பற்றி. சொந்தமாக ஒரு வீடு வாங்க முயற்சிப்பதாகவும் தன் புத்தகங்கள் ஆவணங்கள் எல்லாவற்றையும் அங்கு வைக்க விரும்புவதாகவும் சொன்னார். புத்தகச்சந்தையில் தன் கதைகள் குறித்துப் பேசினார். விடைபெறும்போது, “உன் கதைகளை அனுப்பு” என்றார். “எப்போதோ அனுப்பியாயிற்று. ஆவணப்படம் எடுக்கும்போதும் கேட்டீர்கள். இப்போதும் கேட்கிறீர்கள். படிக்கவேயில்லையா?” என்றேன். ”நிறையப் பார்சல்கள் வந்தன. பார்க்கவில்லை” என்றார். “கடைசியில் என்னைப் படிக்கவே போவதில்லை நீங்கள்” என்று அலுத்துக்கொண்டேன். ”இல்லையில்லை, படிப்பேன். அம்பைதானே?” என்றார். அணைத்துக்கொண்டு முத்தமிட்டேன்.

கடைசியாக 2013இல் ஜெய்பூர் இலக்கிய விழாவில் அவரைச் சந்தித்தேன். சிறப்புரை ஆற்ற வந்திருந்தார் நவீன் கிஷோர் உடனிருந்தார். சக்கர நாற்காலியில்தான் இருந்தார். சிறப்புரையில், இந்த வயதில் தனிமை சூழ்ந்துகொள்வதாய்க் கூறினார். ”பல எழுத்தாளர்கள், என் கதைகளின் கதாபாத்திரங்கள், நான் அவர்களாகி வாழ்ந்த மனிதர்கள், அன்பு செலுத்தி இழந்தவர்கள் இவர்களின் ஆவிகள் என்னைத் துரத்துகின்றன. தன்னுள் வாழ்ந்தவர்களின் உரையாடல்களைக் கேட்ட ஒரு புராதன வீடுபோல் என்னை உணர்கிறேன். அது அப்படிப்பட்டச் சிறப்புச் சலுகை ஏதும் இல்லை. ஆனால் ஒரு நபர் அவள் சக்தியின் முடிவை எட்டும்போது என்ன ஆகிறது?  சக்தியின் முடிவு ஒரு முற்றுப்புள்ளி இல்லை. அது  ரயிலிலிருந்து இறங்கும் கடைசி நடைமேடையும் இல்லை. அது வெறும் வேகம் மட்டுப்படும் நேரம்தான். உயிர் வாழும் உள்ளுரம் மெல்ல வடிதல். மீண்டும்  ஆரம்பத்தில் கூறிய  எண்ணம், ‘தனிமையில் இருக்கிறோம்’.” பதினாறு வயதில் காதலித்ததிலிருந்து இன்று வரையான வாழ்க்கையை இருபது நிமிடங்களில் கூறியவர் கடைசியில், மிகவும் மூத்த, தொன்மையான நம் பண்பாடு இத்தனை காலமாகவும் காலத்திலும் வாழ முடிந்திருப்பதற்கு ஒரே ஒரு பொதுவான, ஏற்றுக்கொள்ளக்கூடிய மைய எண்ணமாக இருந்திருப்பது மனிதநேயம்தான் என்ற நம்பிக்கையைத் தான் உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்பதாகக் கூறினார். கௌரவத்துடன் மனிதராக வாழ அடுத்தவருக்குள்ள  உரிமையை ஏற்றுக்கொள்ளும் மனிதநேயமிது என்றார். பலரின் கனவுகள் முடக்கப்பட்டன என்றார். ”எல்லாக் கனவுகளையும் அவர்கள் பூட்டிவைக்க விரும்பினார்கள் என்று எனக்குப் பட்டது. ஆனால் சில கனவுகள் தப்பித்தன. சிறையிலிருந்து தப்பி வருவதுபோல். பாதேர் பாஞ்சலியில் ரயிலைப் பார்க்க ஓடிவரும் துர்காவின் கனவைப்போல… காடுகளிலிருந்து துரத்தப்படுபவர்கள் எங்கே போகமுடியும்? சாதாரண மக்கள்; அவர்களின் சாதாரணக் கனவுகள்… அவர்கள் ஏன் கனவுகள் காணக்கூடாது? பல்லாண்டுகளாக நான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன், கனவு காணும் உரிமைதான் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும். கனவு காணும் உரிமை. இதுதான் என் போராட்டம். என் கனவு. என் வாழ்க்கையிலும் என் இலக்கியத்திலும்.”

பேசி முடித்ததும் சக்கர நாற்காலியில் அமரவைத்து அவரைத் தள்ளிகொண்டு வந்தார் நவீன் கிஷோர். ஓர் அறையில் கொஞ்ச நேரம் அமர்ந்து ஓய்வெடுப்பார் என்றார். அறைக்குப்போய் அணைத்துக்கொண்டேன். என்னை ஞாபகம் இருந்ததா என்று தெரியவில்லை. என் தலையைத் தடவித் தந்தார். ”விஷ்ணு தன் அன்பைத் தெரிவித்தான்” என்றேன். “யார் விஷ்ணு?” என்றார். ”உங்களைப் படமெடுத்தானே?” என்று நினைவூட்டினேன். ”ஓ, நீரிழிவு வியாதியில் மறதி அதிகமாகிவிட்டது” என்றார். ஆவணப்படம் எடுக்கும்போது இடையிடையே புகையிலை போட்டுக்கொள்வார். ஒரு நாள் அவரிடம் போய், “எனக்கும் கொஞ்சம் கொடுங்களேன். எப்படி இருக்கென்று பார்க்கிறேன்” என்றேன். ’உனக்கெதற்கு இந்தக் கெட்ட பழக்கமெல்லாம்? உனக்கு இருக்கும் ஒரே ஒரு கெட்ட பழக்கத்துடன் நீ இரு” என்றார். “எது என் கெட்ட பழக்கம்?” என்றேன். ”விஷ்ணுதான்” என்றார்! அதை நினைவூட்டினேன். சிரித்தார். என் கதைகளைப் படித்தீர்களா என்று நான் கேட்கவில்லை. அந்த அறையில் இன்னும் பலர் வந்து சூழ்ந்துகொண்டனர். நான் சற்றுத் தள்ளிப் போய் நின்றுகொண்டேன். அவர் சிறப்புரை காதில் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்ததால் அந்த அறை ஒரு நிமிடம் ரயில்மேடைபோல் தோன்றியது. ஆனால் மகாஸ்வேதாதேவி இறங்க வேண்டிய கடைசி ரயில்மேடை அல்ல. அந்தக் கடைசி ரயில்மேடையில் அவர் இப்போதுதான் இறங்கியிருக்கிறார். ஜெய்பூரில் நான் உணர்ந்தது இதற்குச் சூசகம்போல இருந்த ஒரு கண நேரத் தோற்ற மயக்கமாக இருக்கலாம்.

[காலச்சுவடு:201/செப்டம்பர் 2016 இல் பிரசுரமாகியது.]

3 Replies to “குக்கூவின் மாய யதார்த்த வாழ்க்கை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.