எல்லைகள் அற்ற வெளி

This entry is part 25 of 48 in the series நூறு நூல்கள்

அந்தப் பெண்ணிற்கு வயது முப்பதுக்குள். ஆரோக்கியமான இருகுழந்தைகள். அவளை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அவள் கணவனும், மாமியாரும் கூட்டி வந்தார்கள். அவள் எடை இருபது கிலோ மட்டுமே. உடலெங்கும் வன்முறைக் காயங்கள். திருமணச் சன்மானமாக புகுந்த விடு கேட்ட ரூ. இரண்டு இலட்சம் அவள் கொடுக்காததால், பட்டினி போட்டும், சூடிழுத்தும், மற்ற முறைகளில் துன்புறுத்தியும் அவளைச் சிறுகச்சிறுகக் கொன்றிருக்கிறார்கள். அவள் மருத்துவமனையிலேயே இறந்து விட்டாள். இச்சம்பவம் முழுப் படிப்பறிவு உள்ள கேரளாவில் பதினைந்து நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. எடை குறைந்த உடல், அது சுமந்த காயங்கள், மருத்துவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி அவர்கள் காவல் துறைக்குத் தெரிவித்ததும் இக்கொடுமை வெளி வந்துள்ளது.

கிரிக்கெட்டில் உற்சாக நடனமாடப் பெண்கள், குடிக்கும் பார்களில் நடன  மாதுக்கள், கிராமத் திருவிழாக்களில் குட்டைப் பாவாடையோடு ஆடும் பெண்கள். . . இவை சொல்வது என்ன? பெண் என்பவள் உடல் மட்டுமே என்ற பெரும்பான்மையான மன நிலையை. இதை முறியடிக்க எத்தனைக் காலங்களாக பெண்கள் போராடுகிறார்கள், எத்தனை எள்ளல்களையும், இழிவுகளையும்  கடக்கிறார்கள், அதை பெண்ணும், மொழியும், வெளிப்பாடும் என்ற பரிமாணங்களில் அம்பை தனது ‘உடலெனும் வெளி’ என்ற நூலில் மிக அருமையாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்கிறார். குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் அவர்களின் மொழியால் அல்லாமல், உடலாலேயே முத்திரை குத்தப்பட்டு அவ்வை முதல் அரங்கமல்லிகா வரை கால, சரித்திர பேதமற்று ஒரே விதமாக நோக்கப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார்.

பெண்ணியம் மற்றும் தமிழ் மொழிப் பண்பாடுகளைப் பற்றி எழுத பெங்களூருவில் உள்ள குவேம்பு பாஷா பாரதி பிரதிகாரா என்ற அமைப்பு கேட்டுக் கொண்டதின் பேரில் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டு, அவையே நூலாக கிழக்கு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளன.

பெண்ணின் புராதனக்கால விழுமியங்களே பெண்களுக்கென தொடங்கப்பட்ட’பெண்மதி போதினி’யில் (1891) இடம் பெற்றது ஒரு நகைமுரண். ’கிருகலட்சுமி’, ’ஹிதகாரிணி (பண்டிதை விசாலாட்சி அம்மாள்)’, ’தமிழ்மாது’, ’புதுமைப்பெண்’, ’சக்கரவர்த்தினி’ போன்ற பத்திரிக்கைகள் பெண்ணை, உடலாகப் பார்த்து, அவளுக்குக் கற்பைப் பற்றி அறிவுறுத்தி, அவள் தாய்மையைக் கொண்டாடி பழைய கருத்துக்களுக்கு எழுத்து முலாம் பூசின. வாக்குரிமை கோரும் பெண்கள், அழகற்றவர்கள், திருமணமாகாதவர்கள் என்று 1906-ல் கேலி பேசிய பாரதி சிஸ்டர் நிவேதிதாவைச் சந்தித்த பின்னரே நிமிர்ந்த நன்னடையும், நிலத்தில் யாருக்கும் அஞ்சாத செருக்கும் உள்ள புதுமைப்பெண்ணைப் படைக்கிறார். பெண்ணை ஆணுக்கு உணர்த்த ஒரு பெண் வேண்டும், ஆனால், தானாகவே ஆணைப் பெண் உணர்ந்து கொள்கிறாள். இதை அறிந்து மைய நீரோட்டத்திற்கு எதிராக, மணிக்கொடி காலம் முதல் எழுபதுகளில் வந்த இதழ்கள் ’கசடதபற’, ‘கணையாழி’, ’அஃ’, ’பிரக்ஞை’, பின்னர் வந்த ‘அக நாழிகை, ‘மணற்கேணி’ போன்றவை பால் நிலை, பால் தன்மை குறித்த குறுகிய நோக்கு இல்லாமல் செயல்பட்டன/படுகின்றன என்பது ஆறுதல்.

மரகதவல்லி அம்மாள் கொணர்ந்த ‘மாதர் மறுமணம்’ ஒரு புரட்சி எனச் சொல்லலாம். ஆண்கள் பலதார மணம் புரிந்து கொண்ட காலம், ‘பெண்டாட்டி இறந்தால் புது மாப்பிள்ளை’ என்றெல்லாம் ஆர்ப்பரித்த காலத்தில் ’விதவையை மணப்பது புண்ணியம்’ என்று முகப்பில் அச்சடித்து இப் பத்திரிகை வந்தது; பெண்ணியக் கருத்துக்களை அனைவரும் அறியும் வழி செய்தது. நாற்பதுகளில் குகப்பிரியை வெளியிட்ட ’மங்கை’ தொழில் முறைப் பத்திரிக்கை போல வந்திருக்கிறது. இலக்கிய விவாதங்களை வெளியிட்ட கவிஞர் குட்டி ரேவதியின் ‘பனிக்குடம்’ இதழ் நின்று போனது இழப்பே.

பெண்ணியக் கருத்துக்களை எழுதினாலும், பெண்ணின் இடம் என்பது வீடு என்றும், பண்பாட்டு விழுமியங்கள் அவளைச் சார்ந்தே இயங்குகின்றன என்றும் கருத்து தடைச்சுவர் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுத வந்த பல பெண்களுக்கு இருந்திருக்கிறது. புதுமைப் பெண் என்பவள் படிக்கலாம் ஆனால் பணிவோடு இருக்க வேண்டும், எழுதலாம் ஆனால் குடும்பத்திற்குத்தான் முன்னுரிமை.

இந்த பிம்பங்களை குமுதினி தகர்க்கிறார் தனது ‘திவான் மகள்’ நாவலில். சாதி மாறிய காதல் பற்றிய நாவல் அது, மனிதனும், மனதும் முக்கியமே தவிர சாதி என்ற ஒன்றல்ல என்று பேசியதே ஒரு புரட்சி.

அம்பை அந்தந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்களைப் பற்றி மிக நுணுக்கமாகவும், ஆதார பூர்வமாகவும், இயல்பாகவும் சொல்லிச் செல்கிறார். சாவித்திரி அம்மாள், சரஸ்வதி அம்மாள், அனுத்தமா, கௌரி அம்மாள் (மனோதத்துவம் சார்ந்த கதைகள்), கு.ப.சேது அம்மாள், ஸித்தி ஜூனைதா பேகம் ஆகியோரைப் பற்றிப் படிப்பதே பரவசமாக இருக்கிறது. ஜுனைதா எழுதிய இசை இன்பம் என்ற கட்டுரை ஆயர்பாடிக் கண்ணனின் குழலிசையையும், ஆழ்வார்களின் கீதங்களையும், கீட்ஸ், ஷேக்ஸ்பியர் இசையைப் பற்றி எழுதியவற்றையும் சொல்வது அவரது மதம் சாரா வழி முறையைக் காட்டுகிறது.

‘சுதந்திரப் போர்’ என்ற தலைப்பில் விந்தியா எழுதிய நாவல், குடும்பம் பெண்ணின் மேல் செலுத்தும் அழுத்தத்தைப் பேசுகிறது. அன்பு, தியாகம், தாய்மை என்பவை தூயவை என்றும் அவற்றின் முழு பாரமும் பெண்ணைச் சார்ந்தது என்றும் அவளுக்கென்று ஆசைகள், குறிக்கோள்கள் தேவையல்லவென்றும், அப்படியே தனிப்பட்ட திறன் இருந்தாலும் அதை அன்பின் பெயரால், தாய்மையின் பெயரால்  தியாகம் என்ற பூச்சில் காவு வாங்கும் குடும்பம் என்ற தளை பற்றிச் சொன்ன நாவல் அது. மிகச் சிறந்த பெண்ணிய எழுத்தாளராக அறிமுகமாகிய ராஜம் கிருஷ்ணன் ஆற்றிய பங்கு மகத்தானது. கள ஆய்வுகள் செய்து சமுதாயத்தின் பல் வேறு மாந்தர்களைப் பற்றி, காதல், தவிப்பு, ஏக்கம், இயலாமை, வறுமை, சகித்துக்கொள்ளப்படும் கீழ்மை, இவற்றுடன் குடும்பத்தில் உள்ளவர்களையும் எதிர் கொள்ளும் நிர்ப்பந்தத்திலிருந்த பெண்களைத் தன் கதைகளிலும் கட்டுரைகளிலும் இடம் பெறச் செய்தவர் இவர். மணியம்மாளைப் பற்றி, அவர் காந்தியவாதியாக மேற்கொண்ட துணிச்சலான நடவடிக்கை பற்றி இவர் பதிவு செய்யவில்லை என்றால் ஒரு உன்னதம் காலத்தின் சுழிப்பில் அடங்கி விட்டிருக்கும். தன் 78-ம் வயதிலும் ’உத்தர காண்டம்’ எழுதியவர்.

மானிட வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை அதில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உயிர்ப்பதையும், சிக்குறுவதையும், போராடுவதையும் மென்மையான மொழியில் பதிவு செய்தவர் ஆர். சூடாமணி. மௌனங்களால் மறைக்கப்பட்ட உணர்வுகளை பூச்சுக்கள் இல்லாமல் வெளிப்படுத்தியவர். டாக்டர் லக்ஷ்மி என்ற திரிபுரசுந்தரி படித்த, வேலைக்குச் செல்லும், தீர்மானிக்கும் நடுத்தர வர்க்கப் பெண்களைப் பற்றி, கிராமமோ, நகரமோ அவள் தன் குரலை மற்றவர்கள் செவி மடுக்கக் கோருவதைப் பற்றி எழுதிய மிகப் பிரபலமானவர். கீற்றுகள், கோடுகள், புள்ளிகள் கொண்டு பெரும் உலகின் தன்மையைக் குறிப்பால் உணர்த்திய ஹெப்ஸிபா ஜேசுதாசன் தனக்கென தனி மொழி, தனிக்களன் என வலம் வந்தவர். மேட்டிமைத்தனத்தையும், உயர் சாதி என்ற திமிரையும் விமர்சித்தவர். பகடி, நகைச்சுவை, மனோதத்துவம் படர எழுதிய கிருத்திகா புராண பாத்திரங்களை முற்றிலும் மாறுபட்ட வகையில் அணுகி அவர்கள் வெற்றியின் பின்னே அசையா நிழலென உருப்பெறும் தோல்வியை, ஆண்களின் அகந்தையை வெளிக்காட்டியவர்.

அறுபது, எழுபது, எண்பதுகளில் எழுத வந்த ஜோதிர்திர்லதாகிரிஜா, சிவசங்கரி, வாஸந்தி, இந்துமதி, காவேரி, கிருஷாங்கினி ஆகியோரின் எழுத்துக்கள் எவ்வாறு அரசியலை, சமூக நிலையை, பல்மொழி இலக்கியங்கள் மூலம் இந்தியாவை இணைக்கச் செய்த முயற்சியை, தனிமனித ஆசைகள் காலத்தால், சமூகச் சூழ்நிலையால் மறுதலிக்கப்படுவதை, பொருளியல் சூறையாடும் கனவுகளைப் பற்றி எழுதியது என்பதை அம்பை ஆழமாகப் பரிசீலிக்கிறார்.

தலித் இயக்கம் ஏற்படுத்திய உணர்வாலும், சமூக அக்கறையினாலும், எழுத்தில் தடம் பதித்தவர்கள் சிவகாமி, பாமா, தமிழ்ச்செல்வி, பா. விசாலம். கடைப்பட்ட மனித வாழ்வின் அவசங்களையும், அதிலும் மேலும் கீழ்ப்படுத்தப்பட்ட பெண்களைப் பற்றியும், தாங்கள் கண்ட அவலங்களை வாசகர்கள் உணரும் வண்ணம் எழுதிய முன்னோடிப் பெண்கள். இவர்களில் விசாலம் என்பவர் வயதில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர். ஆனால், எழுதத் தொடங்கிய கால கட்டத்தின் குரலை மிகத் தெளிவாகப் பதிவு செய்கிறார். தன் மத நம்பிக்கைக்காக ஒருவர் இறக்கிறார்; ஆனால். ஏசுவைப் போல் உயிர்த்தெழுவதில்லை என்ற கோணம் சிந்திக்கத்தக்கது.

எளிமையாக எழுதியே கதி கலங்க வைக்க முடியும் எனக் காண்பிக்கிறார் மா.செண்பகம். தாய்மையும், பெண்மையும் ஒன்றேதான் என்ற ஒற்றைப் புரிதலை கேள்விக்குள்ளாக்குகிறார் இவர். இவரைப்பற்றி அம்பை எழுதியுள்ளது செண்பகத்தை மீளவும் அறிமுகம் செய்து கொள்ளும் ஆவலைத் தூண்டுகிறது.

2000-த்தில் அறிமுகமாகிறார்கள் லதா ராமகிருஷ்ணன், எம். ஏ. சுசீலா, ஜெயந்தி சங்கர், தேன்மொழி, தமயந்தி, சல்மா, வித்யா சுப்ரமண்யம், குட்டி ரேவதி, அ. வெண்ணிலா ஆகியோர். பொங்கி வரும் வாழ்க்கையின் எதிர்பாராத தருணங்கள் இவர்கள் எழுத்துக்களில் காணப்படுகின்றன. வாழ்க்கை அனுபவங்களை வரலாறாக எழுதி இலக்கியமாக்கியது அழகிய நாயகி அம்மாள். பின்னர், வத்ஸலா, எம். ஏ. சுசீலா. தன் பால் பற்றிய பயமும், புரிதலும், சமூக மறுதளிப்புகளும். சந்திக்க நேர்ந்த கொடுமைகளும் ரேவதி, ‘லிவிங் ஸ்மைல் வித்யா’வால் வெளி வந்த போது அதன் தாக்கம் அதிகமாக இருந்தது; திருநங்கைகளைப் பற்றிய ஒரு புரிதல் சமுதாயத்தில் உண்டாகியது.

பெண் எழுத்தாளர்களின் நாவல்கள், சிறுகதைகள், சுயசரிதங்கள் பற்றிய மிகச் சிறந்த அறிமுகமும், அந்தந்தப் படைப்புகளைப் பற்றிய முக்கிய குறிப்பும், அந்தந்தப் படைப்பாளிகளின் வாழ்க்கைச் சூழலுமென கட்டுரைகளை முழுமையாக உருவாக்கியுள்ள ஆசிரியர் அம்பை, கவிதாயினிகளைப் பற்றியும் ஆழமாகவும், புரிதலோடும் தன் நூலைத் தொடர்கிறார்.

“நான் எனும் என் உள்முக தரிசனத்தில், தணல் தகிக்காத நெருப்பினுள் இலையாகவும், அக்கினிக்குழம்பில் அலர்ந்தெழும் மலராகவும், சந்தன ஓடையின் இருகரை ஓரத்தில் செழிக்கும் வைரப் பொன் நாணலாகவும் வளர்ந்து வருகிறேன்” என்னும் இ. ரா. மீனாட்சி, தடைகளை மீறிப் பொங்கிப்பிரவாகிக்கும் தொண்ணூறுகளின் பெண் கவிஞர்களுக்கு அரசப்பாதை அமைத்துக்கொடுத்தவர் என்கிறார் அம்பை. ரோஹிணி, அரசு மணிமேகலை ஆகியோரின் கவிதைகளைப் பெண்களின் வாழ்வைச் சுற்றிக் கட்டப்பட்ட மௌனச் சுவர் மேல் வரைந்த சிறு கீறல்கள் என அவதானிக்கும் அம்பை, எண்பதுகளின் பிற்பகுதிகளில் அவை வெடித்து எழுந்த விதத்தை, சுபத்ராவின் ‘எந்தன் தோழா’, சுகந்தி சுப்ரமண்யத்தின் ‘புதையுண்ட வாழ்க்கை’ ஆகியவை உணர்த்துகின்றன என்கிறார். ”சொற்கள் தீர்ந்த வறட்டு வெளிகளில் வெப்பம் தாளாது வியர்த்து வழிந்து கொண்டிருக்கிறது காலம்” என்று சொல்லும் இளம்பிறை, “இளஞ்சூடாய் அன்பை” உருவகிக்கும் பிருந்தா, ’சதுரங்களூடே அலையும் எண்ணங்கள்’ கிருஷாங்கினி, ”இரண்டடித் தொட்டிலுக்குள் அடங்கினாலும் நான் ஆலமரம்” என்ற வத்ஸலா,’திருத்தப்படாத வாலுடன் அலையும் கிளி’யாகிய அ. வெண்ணிலா, ”சாராய நெடிக்குள் ததும்பும் மனிதத்தைப்” பாடும் அரங்க மல்லிகா, “மழைக்குப் பயந்து மண்ணுக்குள் வைத்தாய், நீரூற்றுள் நான் நனைந்ததை நீ அறிய மாட்டாய்” என்னும் திலக பாமா, “சாவிகள் இல்லாமல் பூட்டுகளை உடைக்கும் புதிய வித்தைகளைப்” பெண்ணிற்கும், மருமகளுக்கும் சொல்ல ஆசைப்படும் புதிய மாதவி,”வெளி வாசல் வழியே சலித்த மதியம்” என்னும் உமா மகேஸ்வரி, ”மலையுடன் இருப்பதில் அலுப்பே இல்லாத” பத்மஜா நாராயணன், ”ஆணினங்கள் பெண்ணினத்தை அனுபவிக்கும் பொருளாக எண்ணிச் செயல்படும் நாள் இருக்கு மட்டும் பெண்கள் நலன் ஏட்டளவில், பாட்டளவில், பேச்சளவில் தானிருக்கும்” என வாடிய பூரணி, ”அறிமுகம் கூட இல்லாத ஓர் உடலுக்குள் புகுத்தப்பட்டேன்” எனப் புலம்பும் கனிமொழி, ”வருடிப் பார்த்திருக்கிறாயா என் காமத்தை ஒரு புதிய காகிதத்தில் எழுத விரும்புவதைப் போல?” எனக் காமக் கணை தொடுக்கும் பெண்ணாக குட்டி ரேவதி, ”என் உடல் முழுவதும் உருள்கின்றன காமத்தின் முத்துகள், உன் சுடு மூச்சுகளின் நூல் கொண்டு ஒவ்வொன்றையும் கோர்க்கிறாய்” என்னும் சுகிர்த ராணி, ”குட்டிக்கு உணவூட்ட இயலாப் பூனையின் தேம்பியழும் குரல் கவ்விப் பிடிக்கிறது ஈரலை” என்ற சல்மா, ”பேயின் மொழி விடுதலை பூமிக்கு வெளியே நிற்கிறாள் நீலி” எனும் உக்கிரக மாலதி மைத்ரி, “முகத்தில் முழிக்க மாட்டேன் என எப்படிச் சொல்வது முழுவதும் நனைத்துவிட்ட மழையிடம்?” எனும் தமிழச்சி தங்க பாண்டியன்,”இரவல் ஒளியில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் நிலவு எப்படி நானாக முடியும்?” எனக் கேட்கும் சக்தி ஜோதி, ”சொற்பானைகளின் அர்த்தத்தை காலப்பூனை கவிழ்த்துக் கொட்டிவிட்டது” எனும் பெருந்தேவி, மொழியில் சிலம்பமாடும் முபீன் சாதிகா, ”எல்லா நாவுகளையும் விழுங்கிப் பிளிரும் ஆதிகுகை முன்னோளின் ஓசை காதுகள் கூடத் தேவையிரா” என்னும் கீதா சுகுமாரன் போன்ற கவிதாயினிகள், ”பல்லாயிர யோனிகளிலிருந்து வந்தவள் நான்” என்னும் அக்கமகாதேவியின் கூற்றின் பல்வேறு அர்த்தங்களைக் காட்டுகிறார்கள்.

பொதுவாக வெளிப்படும் மொழியில் பெண், “மஹாலட்சுமியைப்’ போல் இருப்பாள்; இல்லையெனில் சூர சிம்ம வாகினியாவாள். பெண் உடல் பெரும்பாலும் துய்த்து உண்பதற்கான பண்டமாக வர்ணிக்கப்படுகிறது. ஆணுக்கு உலகம் என்பது விரிந்து கொண்டே போகும் வட்டம், பெண்ணுக்குப் பெண் என்ற குறுகிய அடிப்படை விளக்க வட்டம்.”

அம்பை சொல்லும் இந்த கோட்பாடு மிகப் பெரிய புரிதலை அனைவருக்கும், குறிப்பாக ஆண்களுக்கு அளிக்கக் கூடியது. “வெளிப்பாடு என்பது உடல் சார்ந்தது அல்ல. உடல் பற்றிய பட்டுணர்வைச் சார்ந்தது. முட்படுக்கையில் கிடத்தி, முட்களால் போர்த்தப்பட்ட உடல், பண்பாட்டு முட்கள், மொழி முட்கள், இலக்கண முட்கள், சம்பிரதாய முட்கள், சடங்கு முட்கள், அரசியல் முட்கள், வேலி என்று நினைத்துத் துளைக்கவிட்ட முட்கள், அரண் என்று நினைத்து அரவணைக்க விட்ட முட்கள்; உடலை மீள் வாசிப்பு செய்ய உடலை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. உடலை அதன் விளக்கங்கள், குறுகல்கள், இலக்கணங்கள் இவற்றிலிருந்து வெளியே எடுத்து ஒரு வெளியாக்கி, அதன் மேல் நின்று எழுதும் போது வரும் இலக்கியம் எல்லாவித அடிப்படையையும் மீறியதாக இருக்கும். உடலை ஒரு இயற்கைக் காட்சியாகத் தீட்டி அதை விஸ்தரிப்பதுதான் அதன் லட்சக்கணக்கான அர்த்தங்களையும், அழகுகளையும் மட்டுமல்ல, அவலங்களையும் வெளிக்கொண்டு வரும். ”

சொல்வனத்தில் வந்த ஒரு நேர்காணலில் அம்பை நயம்படச் சொல்கிறார். ’பெண்ணியச் செய்திகளை உரத்துச் சொல்லிக் கொண்டிருப்பது ஒரு பெண்ணிய எழுத்தாளர் வேலையில்லை. வரையறைகளை அழித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றே கருதுகிறேன். பெண் வெறுப்பை மனதிலிருந்தும், இலக்கியச் சூழலிலிருந்தும் நீக்கினால் ஆரோக்கியமான விமர்சனங்களும் பகிர்தலும் சாத்தியமாகலாம். உண்மை என்று நாம் உணர்வதற்கும், நமக்கும் இடையே உள்ள உறவு பற்றியது இலக்கியம். இந்த ‘உண்மையின்’ தன்மை மாறியபடியே இருக்கிறது.’

சமுதாயச் சூழல்களில், குடும்பங்களில் மட்டுமல்ல, தொழில் நுட்பத்திலும், அதிலும் குறிப்பாகப் பெண்களின் நலன் பேணும் fem-tech (பெண்-தொழில் நுட்பம்) அமைப்புகளிலும் நிதிக்கொடையோ, பணமுதலீடோ பெறுவது என்பது அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே கடினமாக உள்ளது என்று மருத்துவர் சுப்ரா ஜெயின் சொல்கிறார். பெண்கள் நிர்வகிக்கும், அவர்கள் உருவாக்கிய எண்ணங்களின் தொழில் முயற்சிகளுக்கு 2% மட்டுமே முதலீடு கிடைக்கிறதாம். சொத்து, அதிகாரம், இவை உலகெங்கும் பெரும்பாலும் ஆண்கள் வசமிருப்பதும், அவர்கள் பெண்களைத் தொழில் முனைவர்களாக ஏற்கத் தயங்குவதும் இந்த 21-ம் நூற்றாண்டிலும் தொடர்கிறது.

அம்பையின் இந்த நூல் பெண்கள் எழுத வந்ததை, அவர்களுக்கு ஏற்பட்ட தடைகளை, பழமையின் விலங்குகளை உடைத்து அவர்கள் விண்ணை அளக்க நினைத்ததை, அதில் வென்றதை, அதனால் வாழ்வில் சிலவற்றை இழந்ததை, குறுகிய கண்ணோட்டத்தில் அவர்களது பெரும்பான்மையான படைப்புகள் விமர்சிக்கப்படுவதை, இன்னமும் சம நோக்குகள் ஏற்படாததை அருமையாகப் பேசுகிறது. இதற்கான அவரது உழைப்பு மகத்தானது.   

நான் நடந்து கொண்டிருந்தேன்
பார்வைகளின் மேலாக
அறிந்தேன் பின் பெண் என
சதைச் சதுப்பில் காணும் குமிழிகள், வளைவுகள்
போதும் போலும் உங்களுக்கு
யாதுமாகி நிற்கும் என்னை
என்றாவது அறிவீர்களா?’

பானுமதி. ந/ ஏப்ரல் ‘19


Series Navigation<< உயர்ந்த உள்ளம்மிருத்யுஞ்சய் >>

3 Replies to “எல்லைகள் அற்ற வெளி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.