சுரா நினைவுகள்
சுராவுடன் பல ஆண்டுகள் நல்ல நட்பு இருந்தாலும் அதுகுறித்து நான் பேசவில்லை; எழுதவும் இல்லை. ஏனென்றால் ஓர் ஆளுமை மறைந்தவுடனேயே அவருடன் பூண்ட நட்பு பற்றியும், அவர் அந்தக் குறிப்பிட்ட நபர் பற்றி எவ்வளவு உயர்வாக எண்ணினார் என்பது பற்றியும் பேச முன்வருபவர்கள் பற்றி எனக்குச் சில விமர்சனங்கள் இருந்தன. தி. ஜானகிராமன் மறைந்த சமயத்தில் நான் சென்னையில் இருந்தேன். அப்போது நடந்த இரங்கல் கூட்டத்துக்கு நான் போயிருந்தேன். அன்று பேசிய அத்தனை எழுத்தாளர்களையும் தி. ஜானகிராமன் சிலாகித்துப் பேசியிருந்தார். ‘உன் எழுத்து பிரமாதம்’ என்றிருந்தார். அப்படித்தான் அவர்கள் கூறினார்கள். தி. ஜாவின் அன்பும் பண்பும் குறித்து நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டாலும், பேசிய எழுத்தாளர்களையும் அவர்கள் எழுத்தையும் அறிந்திருந்ததால் அவரின் இலக்கிய மதிப்பீடு குறித்துச் சில ஐயங்கள் எழுந்தன. அதனால் எழுத்தாளர்களுடன் உள்ள நட்பு குறித்துப் பேச எனக்குச் சில தயக்கங்களிருந்தன. இன்று சுராவின் எண்பதாவது பிறந்த நாள் நினைவு இலக்கியக் கூட்டத்திலும் சற்றுத் தயக்கத்துடன்தான் பேசுகிறேன். இதில் எந்தவிதப் பொய்மையும் கலந்துவிடக்கூடாதே என்றுதான் ‘என் நோக்கில் சுரா’ என்ற தலைப்பில் பேச ஒப்புக்கொண்டேன். நான் அவரை எவ்வாறு நோக்கினேன் / நோக்குகிறேன் என்றும் அவர் என்னை எவ்வாறு நோக்கினார் என்று நான் கருதுகிறேன் என்றும் இரண்டுமே என் நோக்கில்தான் இருக்கும்.

சுராவை நான் சந்தித்த காலகட்டம் எழுபதுகளின் ஆரம்பம். இலக்கியத்தில் என் அப்போதைய பின்னணியில் டெல்லியில் இந்திரா பார்த்தசாரதி, கஸ்தூரி ரங்கன், வெங்கட் சாமிநாதன், ஆதவன், சம்பத் ஆகியோர் இருந்தார்கள். கலைமகள் பத்திரிகையில் எழுதிய ‘அந்திமாலை’ நாவல், ஆனந்தவிகடன் இதழில் எழுதிய சில கதைகள் இவற்றிலிருந்து வெகுவாக விலகி, பல ஆண்டுகளுக்குப் பிறகு ‘சிறகுகள் முறியும்’, ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’, கதைகள் மற்றும் இன்னும் சில கதைகளும் எழுதியிருந்தேன். சென்னையில் க்ரியா ராமகிருஷ்ணன், அதன் பிறகு பிரக்ஞை நண்பர்கள் இவர்களுடனும், திருநெல்வேலியில் வண்ணதாசன், வண்ணநிலவன் இவர்களுடனும் நல்ல நட்பு இருந்தது. கி.ராவை இடைசெவல் சென்று பார்த்திருந்தேன். பிரத்யேகமாக பிரக்ஞை நண்பர்களுடன் ஓர் ஆழ்ந்த, நெருங்கிய நட்பு இருந்தது. பிரக்ஞை அப்போது எங்களுக்குள் நாங்கள் ஏற்படுத்திக்கொண்டிருந்த அன்பு வட்டமாக இருந்தது. இலக்கியம், வாழ்க்கை இவை பற்றிப் பேசவும் விவாதிக்கவும் சிலசமயம் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளவும் பிறகு சமாதானம் செய்துகொள்ளவும் கூடிய நட்புப் பிரதேசமாக அது இருந்தது.
அப்போது எல்லோருடனும் அதிகாரப் படிநிலை இல்லாத நட்புதான் இருந்தது. என் வயதுக் குழுவினரின் மனநிலையும் வாழ்க்கை நிலையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தது எனலாம். சில விஷயங்கள் எங்களை இணைத்தன. வீட்டில் பெற்றோர்களிடமிருந்து விலகல்; வயதில் பெரியவர்கள் என்பதாலேயே சிலர் சொல்வதை ஏற்கவேண்டியதில்லை என்ற கருத்து – ஆமைக்குக் கூடத்தான் வயதாகிறது என்ற முணுமுணுப்பு; வழிகாட்டி, மார்க்க பந்து, குரு யாரும் தேவையில்லை, கால் போகும்/போகக்கூடும் இடமெல்லாம் வழி என்ற எண்ணம் இப்படி இருந்தோம் நாங்கள். பெண் ஆண் என்ற பேதங்கள் இல்லாமல், அதன் இறுக்கங்கள் இல்லாமல், தளர் நிலையில் இருந்த உறவு.

இப்படி இருந்த காலகட்டத்தில்தான் சுராவைச் சந்தித்தேன். வெங்கட் சாமிநாதன் மூலமாக அறிமுகமான எழுத்தாளர்களில் ஒருவர் சு.ரா. அவருடைய ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவலைப் படித்திருந்தேன் என்று நினைக்கிறேன். திருநெல்வேலிக்கு ஒரு வேலையாக வந்திருந்தேன். வண்ணநிலவன் உடனிருந்தார். வேலை முடிய நேரமாகிவிட்டது. ‘நாகர்கோவில் போய் சுந்தர ராமசாமியைப் பார்க்கலாமா?’ என்று அவரிடம் கேட்டதும் அவர் சம்மதித்தார். உடனே பஸ் ஏறினோம். நாகர்கோவில் வரும்போது இரவு பதினோரு மணி. கதவுகளை அடைக்கத் தொடங்கியிருந்த ஒரு ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு நடக்க ஆரம்பித்தோம். தெருவில் ஓர் ஆள் கிடையாது. ‘வண்ணநிலவன், யாருமே இல்லையே தெருவில, ஒன்னும் பயமில்லையே?’ என்று கேட்டதும், ‘எதுக்கு பயம்?’ என்று அவர் வழக்கமான பாணியில் சொன்னார் வண்ண நிலவன். சுராவின் வீட்டை எட்டியதும், அவரும் இன்னொரு நண்பரும் தெருவை ஒட்டிய வாயிற் கதவருகே நின்று கொண்டிருந்தார்கள். நண்பர் விடைபெற்றுக்
கொண்டிருந்தார். மணி பனிரெண்டு இருக்கலாம். எங்களைப் பார்த்ததும், ‘யாரு?’ என்றார். வண்ணநிலவனை அவருக்குத் தெரிந்திருந்தது. ‘இவங்க அம்பை’ என்று அறிமுகப்படுத்தினார் வண்ணநிலவன். நாம் படித்த எழுத்தாளர் என்பதால் அவரை இப்படி அகால நேரத்தில் போய்ப் பார்க்கலாமா, அது அவருக்கு இடைஞ்சலாக இருக்குமா போன்ற கேள்விகள் என்னிடம் எழவே இல்லை. சுராவும் இப்படி ஒரு பெண் பனிரெண்டுமணிக்கு வருவது சகஜமாக நடக்கும் என்பது போல உள்ளே அழைத்தார். உள்கூடத்தில் சாப்பாட்டு மேஜை அருகே அமர்ந்துகொண்டோம். கமலாவும் சுடச்சுட போர்ன்வீடா போட்டுக் கொண்டுவந்தார். சில நிமிடங்களில் “நான் கட்டைய சாய்க்கிறேன்’’ என்றுவிட்டுப் படுத்துவிட்டார் வண்ணநிலவன். சுராவும் நானும் வெளி வராந்தையில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம். என் ஆராய்ச்சி பற்றி, நான் சந்தித்த பெண் எழுத்தாளர்கள் பற்றி என்று பேச ஆரம்பித்து விடியவிடியப் பேசினோம். அதையெல்லாம் அவருடன் பகிர்ந்துகொள்வது அவர் சொல்வதைக் கேட்பது என்று பேசிக்கொண்டே இருந்தோம். இடையிடையே நான், ‘ராமசாமி’ என்று அழைத்தபோது அவர் எந்த மறுப்பும் கூறவில்லை. நான் சுராவைச் சந்தித்தபோது அவர் என்னைப் படித்திருந்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. அதைக் கேட்க வேண்டும் என்றுகூட எனக்குத் தோன்றவில்லை. அப்படிப் படித்திருந்தாலும் அதைப்பற்றி வெகு உயர்ந்த அபிப்பிராயம் எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன். காரணம் என் எழுத்துபற்றி அன்று அவர் எதுவும் கூறவில்லை. எனக்கு அது பெரிய சங்கடமாகவும் இருக்கவில்லை.
பிறகு வந்த இரண்டொரு ஆண்டுகளில் சுராவைப் பற்றிப் பேசிய பலர் அவர் இளம் எழுத்தாளர்களை மிகவும் ஊக்குவிப்பார் என்றார்கள். சம்பத் தன் ‘இடைவெளி’ கதையை அவர் தந்தி அடித்துப் பாராட்டினார் என்றார். எனக்குத் தந்தி எதுவும் வரவில்லை. அப்போது பல விமர்சகர்கள் கதைகளில் தேடல் இருக்க வேண்டும் என்று விமர்சிப்பார்கள். பிரக்ஞைக்குக் கதைகள் வரும்போது “தேடல் இருக்கா கதையில?’’ என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொள்வோம். என் கதைகள்பற்றி நேரிடையாகத் தன் கருத்தைக் கூறவில்லை என்றாலும் காலச்சுவடு ஆரம்பித்தபோது எனக்கு இடம் அளித்தார். எப்போது சந்தித்தாலும் என்ன எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றுதான் முதலில் விசாரிப்பார். ஒருமுறை கதைகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது கதைகள் மனத்தைத் தொட வேண்டும் என்று இருவரும் ஒப்புக்கொண்டோம். அப்போது என் கதைகள் அதைச் செய்யவில்லை என்றார். என் கதைகள் பட்டறிவுத் தளத்தில் அவர் வாழ்க்கையிலிருந்தும் மிகவும் மாறுபட்ட தளத்திலிருந்து வருவதால் அப்படி இருக்குமோ என்று நான் கேட்டபோது, “மற்ற நாடுகளிலிருந்து வரும் கதைகளில் ஒன்ற முடிகிறதே, அதுவல்ல காரணம்” என்றார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட முறையில் நான் தாக்கப்பட்டுக்கொண்டிருந்தேன். அதுகுறித்து சுரா என்னிடம் ஒருமுறைகூடக் கேட்கவில்லை. நானும் அவரிடம் கூறவில்லை. ஆனால் வதந்திகளும் வம்புகளும் அவரிடம் வந்தபோது கேட்க மறுத்தார் என்று கேள்விப்பட்டேன். ஆனால் அப்படி எழுதப்பட்டவை இலக்கியம் அல்ல என்று அவர் ஏன் கூற மறுத்தார் என்று நினைத்ததுண்டு. இதுகுறித்து நான் அதிகம் யோசிக்கவில்லை. காரணம், தொடர்ந்து நான் தமிழ் நாட்டில் இல்லாததால் வம்புகளும் இகழ்ச்சிகளும் பல சுழற்சிகளுக்குப் பின்பே என்னை எட்டின. என் நடைமுறை வாழ்க்கையையும் இலக்கியம் குறித்த என் நடவடிக்கைகளையும் அவை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் ‘நீ நினைக்கும்படி நீ எழுது; நீ நினைக்கும்படி நீ வாழ்ந்து கொள்’ என்றுஉடன் நின்றவள் சூடாமணிதான். ‘இதை எல்லாம் ஒதுக்கித் தள்ளு’ என்று உற்சாகம் தந்தது பிரக்ஞை நண்பர்கள்.
என்னுடைய இரண்டாவது தொகுப்பு வந்த பிறகுதான் என் கதைகள் பற்றிச் சில நல்ல அபிப்பிராயங்களைச் சுரா கூறினார். தொடர்ந்து நான் என்ன எழுதுகிறேன் என்று விசாரிக்கத் தொடங்கினார். கடைசிவரை இந்த அக்கறை நீடித்தது. ஆனால் அதுகுறித்து எனக்கு எந்தவிதக் குறையும் இருக்கவில்லை. காரணம், சுராவுடன் ஏற்பட்ட நட்பு இலக்கியத்துடனான என் உறவை ஆழமாக்கி அதன் பரப்பையும் பெருக்கியிருந்தது. அவர் மூலம் கிருஷ்ணன் நம்பி, நகுலன் இன்னும் பல எழுத்தாளர்களைச் சந்தித்தேன். அவர் எல்லோருடனும் பழகும் நயம் எனக்குப் பிடித்திருந்தது. அவர் குடும்பத்துடனும் ஒரு நல்ல உறவு ஏற்பட்டுப் போயிற்று.
தமிழ்ச் சூழலில் இலக்கியத்தில் ஆளுமை உள்ள ஒரு மூத்த ஆண் எழுத்தாளர் ஒரு பிதாமகர் ஸ்தானத்தை எட்டிவிடுகிறார். பெண் எழுத்தாளர்கள் வயது ஏறஏறக் கிழவிகள்தான் ஆகிறார்கள் என்பது வேறு விஷயம்! ஒரு முறை சுராவுக்குப் பலர் அவரை ஒரு குருவைப்போல நடத்துவதாக எழுதினேன். அவர் அதற்குப் பதில் எழுதவில்லை. ஆனால் நேரில் சந்தித்தபோது அப்படி எதுவும் இல்லை என்றார். அவர் எழுதிய கதைகளை, கவிதைகளை வெகுவாக விரும்பிய நான் ‘ஜே ஜே: சில குறிப்புகள்’ நாவல் வெளிவந்தபோது பெருத்த ஏமாற்றம் அடைந்தேன். அதைப் பற்றிய நீண்ட விமர்சனம் ஒன்றை பொது நிகழ்ச்சியொன்றில் படித்தேன். அதன் பின்பு நாகர்கோவில் சென்றபோது நான் நாவலை முற்றிலும் நிராகரிப்பதாகவும், அதனால் அவரும் அந்த விமர்சனத்தை முற்றிலும் நிராகரிப்பதாகவும் கூறினார். அது குறித்து சர்ச்சை செய்தோம். ஆனால் இருவரும் அவரவர் நிலையிலிருந்து மாறவில்லை.

‘தமிழ்இனி – 2000’ நிகழ்வில் நாவல்களைப் பற்றி நான் பேசியபோது ‘ஜே.ஜே.’ நாவலைப் பற்றிய என் பழைய கருத்தையே முன்வைத்தேன். என் பேச்சு முடிந்த பிறகு என்னைச் சந்தித்த சுரா, “நானும் இனிமேல் எல்லோரையும் கிழிகிழியென்று கிழிக்கப்போகிறேன்’’ என்றார். “உங்களை யாராவது தடுத்தார்களா என்ன?’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டேன். சுரா வழக்கமாக அப்படிப் பேசக்கூடிய நபர் அல்ல. விவாதித்தும் எழுதியும் தீர்த்துக்கொள்வாரே ஒழிய இப்படி வெடிப்பவர் அல்ல. நிகழ்ச்சி முடிந்த பிறகு கடைசிநாள் நான் என் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது, அங்கே சுரா நின்றுகொண்டிருந்தார். என் அருகில் வந்து என் முதுகில் தட்டிக் கொடுத்தார். அத்தனை ஆண்டு நட்பில் அவர் ஒரு முறைகூட என்னைத் தொட்டுப் பேசியதில்லை. அவர் வெகு வாஞ்சையுடன் முதுகில் தட்டித் தந்ததும் ஆச்சரியப்பட்டுப் போனேன். ‘எதையும் மனசுல வெச்சுக்க வேண்டாம். எதுவும் மாறல. வழக்கம்போல நாகர்கோவில் வரணும்’ என்றார். ஒருவேளை என் மனத்தைப் புண்படுத்தி விட்டோமோ என்று நினைக்கிறார் என்று புரிந்து கொண்டேன். நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தும் அந்தத்தொடுகை என்னை நெகிழ்த்தியது.
இன்று சுரா இல்லாவிட்டாலும் அன்புடனும் வாஞ்சையுடனும் என்னைத் தொட கமலாவை விட்டுவிட்டுப் போயிருக்கிறார். கடந்த முறை உறைந்துபோன தோள்பட்டை வலிமிகுந்து நான் வந்தபோது இரவு என் கையைத் தடவியபடி இருந்தார் கமலா. பிறகு சண்டை போடவும் சமாதானம் ஆகவும் கண்ணனும் இருக்கவே இருக்கிறான். தவிர எழுத உட்காரும் ஒவ்வொரு முறையும் தோள்பட்டையில் அந்த வாஞ்சையான, வெதுவெதுப்பான தொடுகையை உணர்கிறேன்.
கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திரத்தில் 2011 ஜூன் 3, 4, 5 ஆகிய நாட்களில் நடைபெற்ற ‘சுரா 80’ நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை.
காலச்சுவடு அக்டோபர், 2016